UVVU epi

UVVU epi

உயிர் விடும்வரை உன்னோடுதான்
Epilogue
நகர் மத்தியில் இருந்த அந்த ஆடம்பர திருமண மண்டபம் நிறைந்து வழிந்தது. பிரகாஷ் தன் முதல் மகளாய் நினைக்கும் நிலாவின் திருமணத்தை அமர்க்களப் படுத்தி இருந்தான்.
பாலன் இவ்வளவு கிராண்டாக வேண்டாமே என ஆரம்பித்ததை அவனின் பேச்சுத் திறமையால் முறியடித்து விட்டான்.
“இந்த விஷயத்தைக் கூட ஒழுங்கா பேசி முடிக்க துப்பில்ல. சரியான மாங்கய் ம..” வார்த்தையை பாதியில் விழுங்கினார் பத்மா.
“ஏன், நீ போய் பேசி பார்க்கிறது? நான் வாய திறந்தாலே, மாமா உங்கம்மா இருந்திருந்தா உங்க மகன் மாதிரி வளர்த்த புள்ள கல்யாணத்தை இப்படி சிம்பிளா செய்றீங்களேன்னு கேட்க மாட்டாங்களான்னு மடக்கிறாரு. எனக்கு அங்கயும் இடி, இங்கயும் இடி.”முனக மட்டும்தான் முடிந்தது அவரால்.  
நிலா கூடசொல்லிப் பார்த்தாள், அவன் அதை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. தங்கைக்காக பேச வந்த சித்ரா,
“நம்ம மகளுக்கு நான் செய்யறேன் சிமி. நம்ம கல்யாணம்தான் சூழ்நிலையால சிம்பிளா செய்ய வேண்டியதா போச்சு. நிலாவுக்கு செஞ்சு நம்ம ஆசைய நிறைவேத்திக்கலாம். அதோட உன்னைப் பெத்தவங்க இருந்திருந்தா எப்படி செய்யனும்னு நினைப்பாங்களோ அதை தான் நான் செய்யறேன்” என வாயை அடைத்துவிட்டான்.
எல்லோரையும் சமாளித்தவன், சிவா பாதி தொகையைக் கொடுத்தே ஆவேன் என பிடித்த பிடிவாதத்துக்கு மட்டும் அசைந்து கொடுத்தான். ஆண் மனம் ஆணுக்குத்தானே தெரியும்! தன் திருமணத்துக்கு தான் செலவு செய்வது தானே தன்மானம் உள்ள எந்த ஆண்மகனுக்கும் சிறப்பு.
மேடையில் மணமகனை அமர வைத்து சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. பட்டு சேலை சரசரக்க, மகள்கள் பின் தொடர சித்ரா அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் தன் அருகில் நிழலாடுவதை கவனித்து திரும்பினாள் சித்ரா. மலர்ந்த புன்னகையை முகம் முழுக்க அப்பியப்படி நின்றிருந்தான் ராஜேஷ்.
“பாப்..சித்து! எப்படி இருக்க?”
அவன் கேட்டு முடிப்பதற்குள், வந்திருந்த அவன் பிஸ்னஸ் நட்புக்களுடன் பேசிக் கொண்டிருந்த பிரகாஷ் மின்னலென அவள் அருகில் ஆஜராகி இருந்தான்.  
‘இந்த ப்ரௌனி வேற வேலையா இருந்தாலும், கண்ணு முழுக்க என் மேல தான் வச்சிருக்கான். இந்த ராஜேஷ் நெருங்கனதும் பட்டுனு வந்து நிக்கறானே.’ மனதில் சிரித்துக் கொண்டாள்.
“வாங்க ராஜேஷ், வாங்க மாமா!” என கணவன் மனைவி இருவரும் அவனை வரவேற்றார்கள்.
“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” கேட்டாள் சித்ரா.
சித்ராவின் முகத்தை பாசத்தோடு தழுவின ராஜேஷின் கண்கள். அதை கண்ட பிரகாஷ் செம கடுப்பில், ஏற்கனவே சித்ராவின் இரு கைகளையும் இரு மகள்கள் பற்றி இருந்ததால், அவள் தோள் மேல் தன் கையைப் போட்டுக் கொண்டான்.
‘அடேய்! உன் உரிமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையாடா? வாண்டு ரெண்டும் என் அம்மா, என் அம்மான்னு கையைப் பிச்சிருற மாதிரி பிடிச்சு வச்சிருக்குங்க. அதுல நீ வேற இப்படி தோளு மேல கையைப் போட்டு கோழி குஞ்ச அமுக்கற மாதிரி அமுக்கிப் பிடிக்கறயே! முடியலடா சாமி, அப்பன் மகளுக அழிச்சாட்டியம்’  
“நான் நல்லா இருக்கேன் சித்து. எனக்கும் வெட்டிங் இன்விடேஷன் அனுப்பனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.”
“இப்ப பெங்களூருல இல்லையாமே? இவருதான் உங்க அட்ரஸ் குடுத்தாரு. உங்கள அழைக்காம எப்படி மாமா? எங்க அக்கா கணவராச்சே நீங்க. அந்த மரியாதைய உங்களுக்கு கண்டிப்பா நாங்க தருவோம்”
முகம் லேசாக வாடினாலும், அதை மறைத்துக் கொண்டவன்,
“நீ சந்தோஷமா இருக்கியா சித்து?” என கேட்டான்.
“இல்லை மாமா. நான் சந்தோஷமா இல்ல”
அவளின் பதிலில் ராஜேஷ், அதிர்ச்சி அடைந்தான் என்றால், பிரகாஷ் கோபத்தில் சிவக்க ஆரம்பித்திருந்தான். அவன் கை மேலும் சித்ராவின் தோளை அழுத்திப் பிடித்தது.
“என்ன சித்து சொல்லுற?” பதட்டமாக கேட்டான் ராஜேஷ்.
“எப்ப நீங்க கல்யாணம் செஞ்சு எனக்கு ஒரு அக்காவ கொண்டு வரீங்களோ, அப்போத்தான் நான் முழு சந்தோஷமா இருப்பேன் மாமா” பிரகாஷின் கை அழுத்தம் மெல்ல குறைந்தது.
“ஆமா, ராஜேஷ். சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்குங்க. நாங்க படற கஷ்டம், நீங்களும் படனும்ல.” கிண்டலில் இறங்கினான் பிரகாஷ்.
வாய் விட்டு சிரித்த ராஜேஷ்,
“கண்டிப்பா பிரகாஷ் சார்.” என்றான்.
“உட்காருங்க மாமா. கல்யாணம் முடிஞ்சதும் பேசலாம். “ மணியை அழைத்து ராஜேஷை அமர வைக்கும்படி பணித்தாள் சித்ரா. அவர்கள் அந்தப் பக்கம் நகர்ந்ததும்,
“உன்னோட அட்டூழியத்துக்கு ஒரு அளவே இல்லையா ப்ரௌனி? யாரு கிட்ட பொறாமை படறதுன்னு ஒரு விவஸ்தை இல்ல? இனி இப்படி ஏதாவது பண்ணு, பிழிஞ்சு ஜீஸ் போட்டுருறேன்” பிள்ளைகளுக்கு கேட்காமல் முனுமுனுத்தவள், முதுகிலே இரண்டு போட்டாள்.
சிரித்தபடியே அடிகளை வாங்கிக் கொண்டான் பிரகாஷ்.
“இப்படி போட்டு அடிக்கத்தான் என் மகனை கட்டிகிட்டியா?” சித்ராவின் கை அப்படியே அந்தரத்தில் நிற்க, பிரகாஷோ அதிர்ச்சியில் திரும்பி பார்த்தான். அங்கே நின்றிருந்தது சாட்சாத் ஆராவேதான். அவருடன் ஜெய், ஜெபீ மற்றும் ஊன்றுகோலுடன் தேஜல் நின்றிருந்தனர்.
“மம்மி!” அழைத்தவன், அவரை நெருங்கி அணைத்துக் கொண்டான்.
மகனை அணைத்து உச்சி முகர்ந்தவர் பார்வை முழுக்க சித்ராவின் மேலேயே இருந்தது.
“வாங்க” என வரவேற்றாள் சித்ரா. என்ன முறை சொல்லி அழைப்பது என அவளுக்கு குழப்பமாக இருந்தது. அதோடு ஆராவின் கூர்விழி பார்வை அவளுக்கு கொஞ்சம் பயத்தையும் கொடுத்தது.
மனைவியின் பயத்தை நொடியில் கண்டு கொண்ட பிரகாஷ் அவள் அருகில் வந்து, கரத்தைப் பற்றிக் கொண்டான்.
“மம்மி, மீட் மை வைப் சித்ரா. என்னோட குழந்தைங்க தீபா, தீபீ.” முறையாக அறிமுகம் செய்துவைத்தான்.
“தெரியும்” தீபீயைப் பார்க்கும் போது அவரின் கண்கள் லேசாக கலங்கியது. கட்டுப்படுத்திக் கொண்டவர், பிள்ளைகள் உயரத்திற்கு அமர்ந்து இருவரையும் அணைத்துக் கொண்டார். திடீரென அணைத்த புதிய மனிதரைக் கண்டு இருவரும் மிரண்டனர். தீபீ சித்ராவின் காலைப் பிடிக்க, தீபா பிரகாஷின் கையைப் பற்றிக் கொண்டாள்.
இருவரும் பிள்ளைகளைத் தூக்கிக் கொள்ள, ஆராவுக்கு இன்னும் கண்கள் கலங்கியது.
“என் கிட்ட எதுவும் சொல்ல தோணலைல பிரகாஷ்? ராணி கிட்ட இருந்து நான் எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய நிலமையில வச்சிட்டல்ல என்னை! இவ்வளவு நாள் உன் நிம்மதிக்காக ஒதுங்கி இருந்தேன். இன்னும் என்னை ஒதுக்காதடா! என்னால முடியலடா பிரகாஷ். உன் நன்மைய கருதி தான் எல்லாம் செஞ்சேன். ஆனா அது எனக்கே எதிரா திரும்பும்னு நினைக்கல. இந்தப் புள்ளைய பார்க்கறப்ப, நான் செஞ்ச காரியம் என் மனச வாள் கொண்டு அறுக்குதுடா பிரகாஷ்”
“மம்மி, கண்ட்ரோல் யுவர்செல்ப். கல்யாண மண்டபம் இது. எல்லோரும் நம்மள பார்க்கறாங்க. அழாதீங்க!” தீபாவோடு தன் அம்மாவையும் அணைத்துக் கொண்டான் பிரகாஷ்.
தீபாவையும், ஆராவையும் அருகருகே பார்த்த சித்ரா திகைத்து நின்றாள்.
‘அட கடவுளே! இத்தனை நாளு இவ என்னை மாதிரியும் இல்லாம, ப்ரௌனி மாதிரியும் இல்லாம இருக்காளே! யார் ஜாடைன்னு மண்டைய உடைச்சிட்டு இருந்தேனே. அவங்க பாட்டி மாதிரில இருக்கா. பிடிவாதமும் அங்க இருந்துதான் வந்துருக்குமோ!’
“ஓகே! ரொம்ப நாள் கழிச்சிப் பார்க்கவும் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன். ஐ அம் ஓகே நவ்”
“வாங்க மம்மி வந்து உட்காருங்க. ஜெய் டாடி நீங்களும் வாங்க!”
“எங்களை மறுபடியும் அவாய்ட் பண்ணுவியா இல்ல கீப் இன் டச் வச்சுக்குவியா? அத முதல்ல சொல்லு! நாங்க உள்ள வந்து உட்காரறதா இல்ல இப்படியே வெளிய நடைய கட்டுறதான்னு முடிவு பண்ணுறோம்” கைகளை கட்டிக் கொண்டு அதிகாரமாக கேட்டார் ஆரா.
பிரகாஷ் பேசுவதற்குள்,
“மம்மி, நீங்க எப்ப வேணும்னாலும் இங்க வரலாம். நாங்களும் முடிஞ்சப்ப அங்க வரோம். இப்ப வந்து உட்காருங்க” என உபசரித்தாள் சித்ரா. தன் குடும்பத்தை தனதாக்கிக் கொண்ட பிரகாஷிற்காக இவர்களையும் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்திருந்தாள் சித்ரா.
அவளின் மம்மி என்ற அழைப்பில் ஆராவின் முகம் மலர்ந்தாலும், மகனின் முகத்தைத் தான் ஆராய்ந்தவாறு நின்றிருந்தார் அவர்.
“உங்க மருமக தான் சொல்லிட்டாளே! இனி அதுக்கு மறு பேச்சு இருக்குமா?” கேலியாக தன் சம்மதத்தைத் தெரிவித்தான் அவன். பெரியவர்கள் உள்ளே போனதும், ஜெபீ தன் அண்ணனின் முகத்தைப் பாவமாகப் பார்த்தான்.
“உனக்கு தனியா சொல்லனுமா? வாடா, வா தேஜல்!” என அவர்களையும் அரவணைத்துக் கொண்டான்.
தேஜலின் பார்வை தீபீயிடமே இருந்தது. அதை உணர்ந்த சித்ரா, தீபீயை அழுத்தமாக அணைத்துக் கொண்டாள். வேண்டும் என்றே அப்படி செய்யவில்லை அவள். அவளையும் அறியாமல் ஒர் உரிமை உணர்வு. தன்னை சமாளித்தவள், சிநேகத்துடன் தேஜலைப் பார்த்துப் புன்னகைத்தாள். தீபீயின் அருகில் வந்த தேஜல், அவளின் தலையை வருடிக் கொடுத்து விட்டு, மெல்ல ஊன்றுகோலின் உதவியுடன் உள்ளே நடந்து விட்டாள்.
உள்ளே செல்லாமல் அங்கேயெ நின்றிருந்த ஜெபீ,
“பாபி! என்னை மன்னிச்சிருங்க. என்னால தானே இவ்வளவு பிரச்சனை.” கைக்கூப்பினான்.
 “கைய கீழே போடுங்க ப்ளிஸ். நீங்க அப்படி செய்யவும் தான் எனக்கு உங்க அண்ணன் 
கிடைச்சிருக்காரு. அவர் கிடைக்கறதா இருந்தா நான் இன்னும் எவ்வளவு துன்பத்தை வேணும்னாலும் தாங்குவேன்” கரகரத்த குரலில் சொன்னாள்.
பிரகாஷ் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டான்.
“விடுறா! இனிமே பழச பத்தி பேச வேணாம்.”
“நீங்க, அடோப்ஷன் இப்படி எதாவது முயற்சி செய்யறீங்களா?” சித்ராதான் கேட்டாள், தேஜலின் கலங்கிய முகம் அவளை அப்படி கேட்க வைத்தது.
“இல்ல பாபி! தேஜல் இனி பிள்ளைங்க வேணாம்னு சொல்லிட்டா. நாம் இருவர், நாமே இருவர்னு இருந்துக்கலாம்னு சொல்லிட்டா. அவ எனக்கு குழந்தை, அவளுக்கு நான் குழந்தை. போதும் பாபி, இப்படியே வாழ்ந்து முடிச்சிருவோம்” சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
சித்ராவுக்குத்தான் மனம் கணத்துப் போனது.
“சிமி,சிமி!”
“என்ன ப்ரௌனி?”
“ஏன் சோகமா ஆயிட்ட? ஜெபீ சொன்னத நினைச்சா? விடு சிமி! அவங்க அவங்க கஸ்டத்தை அவங்க அவங்க தான் தாங்கனும். நாம தோள் கொடுக்க முடியும், ஆனா அதை எடுத்து நம்ம தோளுல போட்டு சுமக்க முடியாது. அது அம்மாவா இருந்தாலும் சரி, நாம பெத்த பிள்ளைங்களா இருந்தாலும் சரி. பாரு, நிலா மேடைக்கு வர போறா. போய் சிரிச்ச முகமா மேடையில நில்லு. பிள்ளைங்களுக்கு குடிக்க ஏதாவது குடுத்துட்டு நானும் அவங்களோட வரேன்” அனுப்பி வைத்தான்.
“தாஜி, கேரி மீ” என் சித்ராவிடம் இருந்து தாவினாள் தீபீ. அவளையும் ஏந்திக் கொண்டவன், இரு பக்க இடுப்பிலும் இருவரையும் வைத்துக் கொண்டு அநாயசமாக நடந்து சென்றான். அமர்ந்த இடத்திலிருந்தே பெரிய மகனை கண் இமைக்காமல் பார்த்திருந்தார் ஆரா.
‘ரோவன்! நம்ம மகன், நீங்க நினைச்ச மாதிரியே பிள்ளை குட்டின்னு செட்டல் ஆகிட்டான். ஐ ஹோப் யூ வில் ரெஸ்ட் இன் பீஸ் நவ்’ மனதில் ரோவனிடம் பேசினாள் ஆரா.
சித்ராவும் பிரகாஷும் நிலாவைத் தாரை வார்த்துக் கொடுக்க, தன் மனங்கவர்ந்த வைசியின் கழுத்தில் மூன்று முடிச்சுக்களைப் போட்டு தன்னவளாக்கிக் கொண்டான் சிவா. கண்களில் நீர் நிறைய, பாதம் பணிந்த தன் தம்பியையும் அவன் மனைவியையும் ஆசிர்வதித்தார் பத்மா. தடபுடல் விருந்துடன், குடும்பங்கள் இணைய சந்தோஷமாக நடந்து முடிந்தது அவர்களின் திருமணம்.
முதலிரவு சம்பிரதாயத்தை ஹோட்டலில் வைத்துக் கொள்வதாக சொல்லிவிட்டான் சிவா. அவனே ஹனிமூன் சூட் புக் செய்து விட்டதால், மறுவீடு முடித்து அவர்களை ஹோட்டலில் விட்டு விட்டு வீடு திரும்பினர் அனைவரும்.
அதற்குள் தனியாக நிலாவை பிடித்த பத்மா,
“அடியே ராங்கி! உங்க அக்காவுக்கு சொன்னத தான் உனக்கும் சொல்லுறேன். புருஷன் மனம் கோணாம நடந்துக்க” அறிவுரையை ஆரம்பித்தார்.
“தோ பத்து! அத உங்க தம்பி கிட்ட சொல்லிட்டுப் போங்க. காலம் காலமா நாங்க தான் மனம் கோணாம நடக்கனுமா? ஒரு சேஞ்சுக்கு அவங்க நடக்கக் கூடாதா?”
“சுத்தம்! டேய் சிவா, உனக்கு தேவையாடா இந்த வைப்பு, இந்த லைப்பு? உன் விதி” முனகிக் கொண்டார்.
“பயப்படாம போங்க பத்து. உங்க தம்பிய சேதாரம் இல்லாம நாளைக்கு திருப்பி அனுப்புறேன்” இன்னும் வம்பிழுத்தாள்.
“ஹ்க்கும்! குரைக்கற டாக்(dog) வேட்டைக்கு உதவாதாம்” நக்கலடித்து விட்டு கிளம்பினார் பத்மா.
‘என்னடா, எனக்கு வந்த சோதனை! இந்த பத்து நம்மள இம்புட்டு கேவலமா பேசிட்டுப் போயிட்டாங்க. நான் ஆடற வேட்டையில உங்க தொம்பி சிவுடு இன்னைக்கு குத்துயிரும் குலையுயிருமா ஆகனும்’ சிலிர்த்துக் கொண்டாள் நிலா.
எல்லோரும் ரூமில் இருந்து கிளம்பி இருக்க, ஏதோ யோசனையில் நின்றிருந்த நிலாவின் தோளை சுரண்டினான் சிவா. பூவுலகிற்கு வந்தவள்,
“எங்க எல்லாரும்?” என கேட்டாள்.
“அவங்க கிளம்பி பத்து நிமிஷம் ஆச்சு. என்ன யோசனை வைசி? வா வா! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” கைப்பிடித்து அவளை அழைத்து சென்று கட்டிலில் அமர்த்தியவன், அவள் கண்களை தனது கைக்குட்டையால் கட்டினான்.
“என்னடா சிவுடு! சர்ப்ரைஸ்லாம் பலமா இருக்கு”
“இரு இரு வரேன்” கொஞ்ச நேரம் சத்தத்தைக் காணோம். பின் அருகில் வந்தவன்,
“வாயைத் திற வைசி” என்றான்.
வாயில் எதையோ அவன் வைக்க, சில்லென ஒரு சுவை. ரசித்து விழுங்கியவள்,
“என்னதிது?” கைகுட்டையை அகற்ற முற்பட்டவளை தடுத்தவன்,
“இரு அதுக்குள்ள கண்ண திறக்க வேணாம். நல்லா இருக்கா?” என்றான்.
“செம்மையா இருக்குடா சிவா.”அவன் ஊட்ட ஊட்ட ரசித்து விழுங்கினாள்.
“இது க்ரேன்பேரி பவ்லோவா(cranberry pavlova). உனக்காக நானே செஞ்சேன்.” என்றவன்,
“நானும் கொஞ்சம் சாப்பிட்டுக்கவா?” என அனுமதி கேட்டான்.
“இதெல்லாமா கேட்பாங்க? சாப்பிட்டுக்கடா” என சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் அவள் வாயை கவ்வி இருந்தான் சிவா. கண் கட்டி இருக்கவும், அவன் செய்கையை எதிர்பாராதவள், அப்படியே அவனுடன் கட்டிலில் சரிந்தாள்.
“அடேய் என்னடா பண்ணுற?”
“சாப்பிடறேன்”
“நான் அந்த பவ்லோவாவ சொன்னேண்டா”
“எனக்கு அந்த டிசர்ட் வேண்டாம். நான் வயசுக்கு வந்த நாளுல இருந்து ஏக்கமா பார்த்துட்டு இருக்கற இந்த டிசர்ட் தான் வேணும்” கைக்குட்டையை அவள் கண்ணில் இருந்து அகற்றியவன், தன் ஏக்கங்களை எல்லாம் பிரதிபலிக்கும் முகத்துடன் அவளைப் பார்த்தான்.
“என் சிவுடு!” என அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் நிலா. சிவாவின் நிலவு பூஜை அந்த வான் நிலா மறையும் வரை தொடர்ந்தது. சிவ(வா) பூஜையில் கரடியாய் நில்லாமல், வாருங்கள் விலகலாம்.
திருமண விழா முடிந்து ஒரு வாரத்திலே சிவா அமெரிக்கா கிளம்பி விட்டான். அவனைத் தொடர்ந்து பேப்பர் வோர்க் எல்லாம் முடிந்து நிலாவும் ஒரு மாதத்தில் கிளம்பினாள். எல்லோரும் கவலை அப்பிய முகத்தோடு இருந்தாலும், மணி ரொம்பவே தளர்ந்துவிட்டான்.
“பாசி! நான் இல்லன்னு ஓவரா ஆடக்கூடாது. சைட்டடிக்கற வேலை எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படிக்கற வேலைய பார்க்கனும். அப்படி சைட் அடிச்சாலும், இந்த தடவையாச்சும் அந்த பல் செட் கவி மாதிரி இல்லாம நல்ல பல்லு பொண்ணா சைட்டடி”
கவியைப் பற்றி பேசவும் கோபம் வந்துவிட்டது அவனுக்கு.
“சொறி பிடிச்ச பலா மாதிரி இருந்துட்டு இப்படிலாம் மத்த பொண்ண பத்தி பேசக்கூடாது நிலா. நீ கிளம்பறீயேன்னு கொஞ்சமா பீல் பண்ணேன் பாரு, என் புத்திய!” கடுப்பானான்.
“மாம்ஸ், உங்க மச்சான் பீல் ஆயிட்டான், மோர் குடுத்தா கூல் ஆயிருவான். பார்த்துக்குங்க” பிரகாஷிடம் சொன்னாள் நிலா.
“அவர் மோர் என்ன நான் கேட்டா பாதாம் கீரே குடுப்பாரு. நாங்க உனக்குப் பாயாசத்தைப் போடறதுகுள்ள கிளம்பற வழிய பாரு” சொல்லியவாறே கண் கலங்க நிலாவை அணைத்துக் கொண்டான் மணி.
நிலாவுக்கும் கண்கள் கலங்கியது. அவர்களைப் பார்த்த சித்ராவும் கலங்கினாள். மூவரையும் அணைத்துக் கொண்ட பிரகாஷ், இன்னும் சில வருடங்கள் தானே என சமாதானப்படுத்தி அவளை அனுப்பி வைத்தான்.
நிலா அருகில் இல்லாததைத் தவிர வாழ்க்கை சந்தோஷமாக சென்றது அவர்களுக்கு.
ஒரு வருடம் கழித்து
பள்ளியில் இருந்து வந்த போன் காலில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தான் பிரகாஷ். தன் இரு மகள்களையும் ஒரே பள்ளியில் தான் சேர்த்திருந்தான். தீபீ பேச கஸ்டப்பட்டாலும், அவள் மூளை வளர்ச்சி நார்மல் குழந்தைகளை ஒத்திருந்தது. முதலில் அவளை ஸ்பெசல் பள்ளியில் சேர்த்துக் கொள்ள சொல்லி பள்ளி நிர்வாகம் சொல்லிவிட்டார்கள். இவன் தான் மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் கொடுத்து தீபீ நார்மலான கல்வி முறையில் படிக்க மெடிக்கலி ஃபிட் என நிரூபித்திருந்தான். அதோடு பல லட்சம் நன்கொடையாகவும் கொடுக்க வேண்டியதாகி விட்டது. ஒருத்தியை மட்டும் நார்மல் பள்ளியிலும், மற்றொருத்தியை ஸ்பெஷல் ஸ்கூலிலும் சேர்க்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அன்று சிமி மகளை நினைத்து அழுததும் அதற்கொரு காரணம். போராடி இருவரையும் ஒரே பள்ளியில் சேர்த்திருந்தான்.
உடன் படிக்கும் பிள்ளைகள் தீபீயின் பேச்சைப் பார்த்து கிண்டல் அடித்தாலும், அதை எல்லாம் அவள் தாண்டி தான் வர வேண்டும் என மனதை கல்லாக்கிக் கொண்டான். அவனுக்கு முன்னே சித்ரா வந்து காத்திருந்தாள். அவள் அருகில் வந்தவன்,
“நான் செட்டல் பண்ணிருக்க மாட்டேனா? நீ ஏண்டா இப்படி வேர்க்க விறுவிறுக்க வந்துருக்க?” என கேட்டான். அவள் முகத்தை கைக்குட்டையால் துடைத்தவன், குனிந்து வயிற்றில் இருக்கும் ஜீனியருக்கு ஒரு ஹாய் சொன்னான். சித்ரா இப்பொழுது எட்டாவது மாதத்தில் இருந்தாள்.
“பேங்க்ல வேலைய விட்டுட்டு ஓடி வந்தேன் பிரகாஷ். ஜனகு என்னன்னு கேட்டது காதுல விழாத மாதிரி வந்துட்டேன். அடிதடின்னு சொன்னாங்களா, ஒரே டென்ஷன்”
“சரி மெல்ல நடந்து வா!” என கைப்பிடித்து அவளை பிரின்சிபல் ரூமுக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே தீபீ கண்களில் நீருடனும், தீபா கைகளை அடமாக நெஞ்சில் கட்டிக் கொண்டும் நின்றிந்தார்கள். அவர்கள் எதிரே நெற்றியில் கட்டுடன் இவர்களை விட இன்னும் கொஞ்ச பெரிய பையன் நின்றிருந்தான். அவன் முகத்திலும் கோபம். அவன் அருகில் அவனின் பெற்றவர்கள் நின்றிருந்தார்கள்.
பிரகாஷும் சித்ராவும் ஒரு மரியாதைக்காக அவர்களைப் பார்த்து சிரிக்க, பையனின் அப்பா மட்டும்தான் புன்னகைத்தார். அவனின் அம்மா, வெளிநாட்டுக்காரி போல, இவர்களை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
தொண்டையைக் கணைத்த பிரின்சிபல்,
“மிஸ்டர் அண்ட் மிசஸ் பிரகாஷ், மீட் மிஸ்டர் அண்ட் மிசஸ் மலர்வேந்தன்” என அறிமுகப் படுத்தினார்.
“உங்க மக தீபா அவங்க பையன் இந்திரக்குமார் தலைய கீழ கிடந்த கம்பால அடிச்சு காயப்படுத்தி இருக்காங்க. அதை விசாரிக்கத் தான் இந்த மீட்டிங்”
பிரகாஷ் தீபாவை நோக்கினான். அவன் கண்களை நேராக நோக்கியவள், கொஞ்சம் கூட பயப்படவில்லை. மகள் மேல் தப்பிருக்காது என அவனுக்கு நன்றாக புரிந்தது. அவள் அடித்திருந்தாலும் ஏதாவது காரணம் இருக்கும் என தெரிந்தது. குரலை சாதாரணமாக வைத்து,
“தீபா பேட்டி! என்ன நடந்துச்சும்மா?” என கேட்டான்.
“இவங்க அக்காவ கீழ தள்ளி விட்டுட்டாங்க. நீங்க தானே பிதாஜி அக்காவ பத்திரமா பார்த்துக்க சொன்னீங்க? அதான் எனக்கு கோபம் வந்துருச்சு. அக்கா கால பாருங்க, காயம். ரத்தம் வந்துச்சு” என்றாள் தீபா.
அப்பொழுதுதான் கணவன் மனைவி இருவரும் அவள் காலைப் பார்த்தனர். சித்ரா கீழே குனிவதற்குள், அவளைத் தடுத்தவன் தானே மகளின் காலை ஆராய்ந்தான். ஏற்கனவே முதலுதவி செய்திருந்தார்கள். சின்ன பிலாஸ்டர் ஒட்டப் பட்டிருந்தது. தந்தை காயத்தைப் பார்க்கவும் அவள் இன்னும் அழுதாள். சமாதானப் படுத்தித் தூக்கிக் கொண்டான் பிரகாஷ்.
“குமார், அந்தப் பாப்பாவ கீழ தள்ளி விட்டியா?” கோபமாக கேட்டாள் ரோசாலியா தேவி.
“நோ அம்மா. யூ க்னோ மீ! ஐ டோண்ட் டூ மீன் திங்ஸ்” தெளிவாக மறுத்தான்.
அதற்குள் அவன் அருகில் வந்து நின்ற தீபா,
“யூ லையர்” என கோபமாக கத்தினாள்.
“யூ ஆர் தெ லையர்” அவனும் கோபமாக கத்தினான்.
“நோ ஐ அம் நோட்” அவனை வயிற்றிலேயே குத்தினாள் தீபா.
கோபத்தில் அவள் முடியைப் பிடித்து இழுத்தான் குமார். பிரின்சிபல், பெற்றவர்கள் முன்னேயே இருவரும் கட்டிப் பிடித்து, உருண்டு புரண்டு சண்டை போட்டனர். வேந்தனும், பிரகாஷிம் இருவரையும் பிரித்தெடுப்பதற்குள் பெரும் பாடு பட்டு விட்டார்கள்.
“குமார் விடுடா”
“தீபா கால்ம் டவுன்”
பிரின்சிபல் ரூம் ரணகளமானது. இருவரையும் தத்தம் பெற்றவர்கள் பிடித்துக் கொண்டாலும், முறைத்தவாறே நின்றிருந்தனர் இருவரும்.
“அம்மா, அந்த பாப்பா நான் ஓடி வரும் போது நடுவுல வந்துட்டா. அதான் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாம இடிச்சு தள்ளிட்டேன். சாரி கூட சொன்னேன். இந்த பிசாசு தூரத்துல இருந்து வந்து திடீர்னு என் தலைல கம்புல அடிச்சிருச்சு. ஐ ஹேட் திஸ் கேர்ள்.” தீபாவைக் காட்டி கோபத்தில் சொன்னான்.
“ஐ ஹேட் யூ டூ. இனிமே என் அக்காவ புடுச்சு தள்ளுன, இன்னும் அடிப்பேன்” அவளும் கத்தினாள்.
ஒரு வழியாக இரு சைடும் பேசி , மிஸண்டேர்ஸ்டேண்டிங்கில் நடந்த தவறு தான் என முடிவெடுத்து பஞ்சாயத்தை முடித்தார்கள்.
கிளம்பும் போது கூட, தீபா இந்திரக்குமாரையே முறைத்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளைதான் முறைத்து கொண்டே போனான்.
மகனை கையில் பிடித்துக் கொண்டு கிளம்பிய மலர்வேந்தன், தன் மனைவியிடம்,
“பொண்ணு உன்ன மாதிரியே கோபக்காரியா இருப்பா போல இருக்கே. ஐ லைக் ஹேர்” என முனுமுனுத்தான்.
“ரொம்ப பிடிச்சிருந்தா மருமகளா கூப்டுக்க போறிங்களா மலர்?” கணவனை வாரினாள் அவள்.
இருவரும் சிரித்தவாறே வெளியேறினார்கள்.
வீட்டிற்கு வந்த தீபாவை பேசுவதற்கு அழைத்தான் பிரகாஷ். அவள் வாயில் இருந்து எதுவும் வரவில்லை. அமைதியாகவே நின்றிருந்தாள்.
‘ஆறு வயசுல இவ்வளவு அடம்.’ கோபம் வரவில்லை அவனுக்கு. மாறாக பிரமிப்பு தான் வந்தது. பிள்ளைகள் இருவரும் இவர்கள் மேல் உயிராய் இருந்தாலும், மனதில் உள்ளதை அவர்கள் விளையாட்டு தோழன் மணியிடம் மட்டும் தான் சொல்லுவார்கள். அதுவும் தீபாவுக்கு மணி தான் க்ளோஸ் பிரண்ட். அருகில் இருந்த மணியிடம் கண் காட்டிவிட்டு வெளியேறினான் பிரகாஷ்.
“தீப்ஸ் குட்டி”
“ஹ்ம்ம்”
“ஏன் இப்படி செஞ்சீங்க? மத்தவங்கள காயப்படுத்தறது ரோங் தானே?” கேட்டான் மணி.
“எனக்கு தெரியுது மணி. ஆனா அக்காவ யாராச்சும் என்னாச்சும் சொன்னாலோ, அழ வச்சாலோ எனக்கு கோபம் வருது. நான் என்ன செய்யட்டும்? பிதாஜி சொல்லிருக்காங்க, அக்கா என்னோட ரெஸ்பான்சிபிலிட்டின்னு”
“ஹ்ம்ம். அக்கா இப்போ நல்லா ஆகிட்டாங்க. அவங்களே அவங்கள பார்த்துக்குவாங்க. இனிமே நீங்க அவங்கள பார்த்துக்க வேணாம். சரியா?”
“முடியாது. நான் தான் பார்த்துப்பேன்”
“சரி, பார்த்துக்குங்க. ஆனா இப்படி வயலண்ஸ் கூடாது. ப்ராமிஸ் மீ”
“ஓகே. அடிக்க மாட்டேன். அந்தப் பையன்கிட்ட சண்ட போட மாட்டேன். “ ப்ராமிஸ் எனும் வார்த்தையை மட்டும் தீபா குட்டி உச்சரிக்கவே இல்லை.
அதை மணி உணர்ந்துக் கொண்டாலும் குழந்தை தானே, சீக்கிரம் சரி ஆகி விடுவாள் என விட்டுவிட்டான்.
இரவின் தனிமையில், கணவனின் மார்பில் கவலையுடன் சாய்ந்திருந்தாள் சித்ரா.
“எனக்கு பயமா இருக்கு ப்ரௌனி”
“இதுல பயப்பட என்ன இருக்கு சிமி! ரெண்டு பேருக்கும் இப்போத்தான் ஆறு வயசு ஆக போகுது. இந்த வயசுல இப்படிதான் இருப்பாங்க”
“தீபா, தீபீ மேல இவ்வளவு பொசேசிவா இருக்காளே!”
“நாம தான் அவ கிட்ட பொறுப்ப கொடுத்தோம். அதுல அவ சீரியசா இருக்கா. அதுல என்ன தப்பு? அதே ஒரு தம்பியா, இல்ல அண்ணனா இருந்தா இப்படி தானே தீபீய பார்த்துக்குவாங்கா? அத தான் நம்ம தீபா செய்யறா. இதுல கவலைப் பட ஒன்னும் இல்லம்மா. சொல்லப்போனா நாம பெருமை தான் படனும். நம்ம பிள்ளைங்க ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்வளவு பாசம் வச்சிருக்காங்கன்னு நினைச்சு.”
“எனக்கு பெருமையா தான் இருக்கு ப்ரௌனி. நம்ம குட்டிங்க ரெண்டும் தங்க கட்டிங்க”
“உள்ளுக்குள்ள ஜீனியர் கேட்டுட்டு தான் இருக்காரு. அவரையும் கொஞ்சம் புகழ்ந்துரு. அவர் வேற கோவிச்சிக்கப் போறாரு”
“சரி, சரி! நம்ம புள்ளைங்க எல்லாமே தங்க கட்டிங்க தான்”
அவள் காதோரம் குனிந்தவன்,
“அப்போ நானு?”
“என் ப்ரௌனி, தங்கம் , ப்ளாட்டினம், வைரம், வைடூரியம் எல்லாத்துக்கும் மேல”
பெருமையாக சிரித்தவனைப் பார்த்தவள்,
“அப்படின்னு சொல்ல மாட்டேன். அவன் ஒரு வெத்து வேட்டு” என கண்ணால் சிரித்தாள்.
“என்னடி பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட?”
“அப்புறம் என்ன? பொண்டாட்டி மூட் அவுட்ல இருக்கேனே, இந்நேரம் முத்தக் கச்சேரிய ஆரம்பிச்சிருக்கனும்ல. அத விட்டுட்டு வேஸ்டா பேசிட்டு இருக்க” நாக்கைத் துருத்திக் காட்டினாள்.
“அந்தப் பேச்சுக்கே இடம் இல்ல. மாசம் நெருங்குது, தள்ளி தான் இருக்கனும்”
“டேய் ப்ரௌனி! நீ இப்ப சொன்ன வசனத்த நான் தாண்டா சொல்லனும். இங்க எல்லாம் உல்டாவா இருக்கு. ஒழுங்கு மரியாதையா வந்து முத்தம் குடு.”மிரட்டினாள்.
“சொன்னா கேளு சிமி செல்லம். முத்தம் வெறும் முத்தமா இல்லாம மூன்றாம் உலக யுத்தமா மாறிடும்டா. வேணாம்டா கண்ணம்மா”
“இப்ப குடுக்க போறியா இல்லையா?”
“தரேன்! ஒன்னே ஒன்னுதான்” டீல் பேசினான்.
கண்களில் குறும்பு மின்ன, சரி என ஒத்துக் கொண்டாள். அவர்கள் அகராதியில் ஒன்று என என்றுமே நின்றதில்லை. அதை நினைத்துதான் அவளுக்கு சிரிப்பு.
ஆசையாக நேரம் எடுத்து தன்னவளுக்கு செடக்டிவ் கிஸ்சை(seductive kiss) அள்ளிக் கொடுத்தான் ப்ரௌனி. இருவரும் தங்கள் இன்ப உலகில் மூழ்கி காணாமல் போனார்கள்.
சில வருடங்களுக்குப் பிறகு 
சிவாவின் கேக் அண்ட் டோஸ்ட் கபே திறப்பு விழாவுக்கு அனைவரும் குடும்பமாக கூடி இருந்தனர். அமெரிக்காவிலிருந்து வந்த கையோடு இந்த கடையை ஆரம்பித்திருந்தார்கள் நிலாவும் சிவாவும். அங்கே இருக்கும் வரை குடும்பக் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள், இங்கே வந்தவுடன் தான் கடையை மட்டும் அல்ல குடும்பத்தையையும் விருத்தி செய்ய தொடங்கி இருந்தார்கள். நிலா இப்பொழுது நான்கு மாத கர்ப்பிணி. பிள்ளை பிறந்தவுடன் டான்ஸ் அகடேமியை ஆரம்பிக்க பிளான் செய்திருந்தார்கள். இப்பொழுது இருவர் கவனமும் கபேயில் தான் இருந்தது.
முகம் மலர, குடும்பத்துடன் வந்து இறங்கிய தன் அக்காவை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள் நிலா. சித்ராவின் இரு கைகளையும் தீபா, தீபீ பிடித்திருக்க அவர்கள் செல்ல மகன் தீபேஷ்வரன் கப்பூரை பிரகாஷ் தூக்கி வைத்திருந்தான். அவர்களோடு வந்த தன் தம்பி மணியை வாஞ்சையுடன் பார்த்திருந்தாள் நிலா. ஆணழகனாய் இருந்தவனை காண காண தெவிட்டவில்லை அவளுக்கு.
“வாங்க, வாங்க” பத்மாவும், பாலனும் தங்கள் மகனுடன் வந்து வரவேற்றார்கள். வேலையாக இருந்த சிவா கூட வெளியே வந்து இவர்களை வரவேற்றான்.  
எல்லோரும் வந்தவுடன், கோலாகலமாக திறப்பு விழா நடைப்பெற்றது. அனைவருக்கும் ஹை டீ ஸ்டைலில் கேக், டிசர்ட், பன்ஸ், ப்ரேட்ஸ், ஹோட் அண்ட் கோல்ட் ட்ரிங்க்ஸ் வழங்கப்பட்டது. உணவருந்தி வந்தவர்கள் கிளம்பியவுடன், இவர்கள் மட்டும் குடும்பமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பழைய கதைகளை அசைப்போட்டப்படி, இங்கும் இங்கும் ஓடும் பிள்ளைகளை துரத்திப் பிடித்தவாறே மகிழ்ச்சியுடன் வளைய வந்தனர் அவர்கள்.
“சரி வாங்க! எல்லாரும் ஒரு குரூப்பீ எடுத்துக்கலாம்” என கூப்பிட்டான் மணி.கூட்டமாக அனைவரும் தங்கள் பிள்ளைகளை தூக்கியபடி நிற்க , தனது போனில் ஒரு குரூப்பி எடுத்தான் மணி.
“எல்லோரும் ஜோடியா இருக்காங்க! நீ எப்படா மணி?” பத்மா கிண்டலடித்தார்.
அவன் பிரகாஷைப் பார்க்க,
“கூடிய சீக்கிரம் நம்ம மணியும் செட்டல் ஆகிறுவான். இப்படி குடும்பம், குட்டி, கமிட்மேண்ட் இதெல்லாம் வேணாண்டான்னு சொன்னா எங்க கேட்கறான்” என கலாய்த்தான் பிரகாஷ்.
“போங்க ஜீஜூ!” அழகாக வெட்கப்பட்டான் மணி.
“யாருடா பொண்ணு?” கேட்டான் சிவா.
“அதெல்லாம் உங்க பொண்டாட்டிக்கு புடிச்ச ஆளுதான். என் ஆள வச்சு, உங்க ஆள கதற விடல என் பேரு மணி இல்ல” சவால் விட்டான்.
“டேய்! அந்த பல் செட்டாடா? அவள நீ இன்னும் மறக்கலியா?” அதிர்ந்தாள் நிலா.
“மறந்து போக அவ என்ன என் கடந்த காலமா? அவ தான் என்னோட எதிர்காலம்”
“அட்ரா, அட்ரா! நம்ம மணி பின்னறாண்டா.” சிரித்தாள் சித்ரா.
“இதுக்கு நான் ஒரு கவிதை சொல்லனுமே” சற்று நேரம் யோசித்தவள்,
“கொடியில காயுது துணி
காஞ்சதும் எடுத்து அத அணி
சாப்பிடறது தான் என்னோட பணி
அடுத்த காதல் மன்னன் நீதாண்டா மணி” என எடுத்து விட்டாள். பலத்த கைத்தட்டல் எல்லோரிடமும் இருந்து.
சித்ராவின் காதில் ,
“சாப்பிடறது என்னோட பணின்னு கரேக்டா சொல்லிட்டடா மேரி பியாரி மோட்டி” காதலுடன் கிசுகிசுத்தான் பிரகாஷ்.
“ஏஜி என்னோட ஸ்வீட் பாவ் பஜ்ஜி! என்ன, லந்தா?” அவன் தலையை முட்டினாள் சித்ரா. அவர்கள் தனி உலகத்தில் இருப்பதைப் பார்த்து பொறுக்காத மகன், பூப்பூ என எச்சிலை ஊதி இருவர் மேலும் தெளித்து பூலோகத்துக்கு கொண்டு வந்தான். மகன் செய்த லீலையில் இருவருக்கும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. எல்லோரையும் அமர வைத்து சுற்றிப் போட்டார் பத்மா.
என்றென்றும் இவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்.
(உயிர் விடும் வரை உன்னோடுதான்)
ஆகஸ்டில், சில்லல்லவா சில்லல்லவா காதல் நயாகரா கதையின் மூலம் மணியையும் கவியையும் சந்திக்கலாம். நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!