Poi Poottu 6

Poi Poottu 6

11
சட்டையில் சிந்தியிருந்த உணவை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் ரோஷன். “குழந்தைங்க சாப்பிடுறதே அழகு தான் கா… அத விடுடா குட்டி” என்ற செண்பகம் அவனுக்கு மாற்றிவிட வேறு சட்டை எடுத்து வந்தாள்.
கவிதா கை கழுவி மகனை தூக்கிச் சென்று முகம் கை கால் துடைத்துவிட்டாள். அதற்குள் செண்பகம் சாப்பிட்டுவிட அவனுக்கு உடை மாற்றி மாடியறைக்கு வந்து மதியம் பாதியில் விட்ட இடத்திலிருந்து மீண்டும் டைரியை படிக்க ஆரம்பித்தாள்.
இன்னைக்கு கௌதம் எங்களுக்கு முன்னாடி பார்க்கிங் ஏரியா வந்து எங்களுக்காகக் காத்துட்டிருந்தான். இவன் ஏன் நான் சொல்லுறத கேக்க மாட்டேங்குறான்? நான் வண்டிய விட்டு எறங்கி அவன்கிட்ட பேசுறதுக்கு முன்னாடி கைய காட்டி நிறுத்த சொல்லிட்டு “நான் உன்கிட்ட பேச வரல ரேணு. நீ போகலாம். எனக்கு ஜென்னி கூடப் பேசணும்”னு சொன்னான். அவன் கண்ணுல கோபத்த பார்த்தேன்.
ஜென்னி “நீ போ ரேணு”னு சொன்னா. நான் திரும்பினப்போ அவன் கண்ணுல கோவம் இல்ல. “போ”னு மட்டும் சொன்னான்.
வேகமா கிளாஸுக்கு வந்துட்டேன். ஜென்னி வரதுக்காகக் காத்துட்டு இருந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு மண்ட வெடிச்சுடும் போல இருந்துது.
அப்படி என்ன அவனுக்கு அவகிட்ட பேசணும்? அதுவும் தனியா? என்னை அங்கேருந்து போகச் சொல்லுறதுலயே இருந்தானே… என்ன பேசுவான்? கண்டிப்பா என்னைப் பத்தி தான் பேசுவாங்க. என்னவா இருக்கும்?
என்னால கெஸ் பண்ண முடியல.
ஒரு வழியா ஜென்னி கிளாஸுக்கு வந்த சமயம் ப்ரொபசர் வந்துட்டாங்க. என்னால அவக்கிட்ட எதுவும் கேட்க முடியல. சரி இந்த ஹவர் முடிஞ்சு அடுத்த ஸ்டாப் வரதுக்குள்ள கேட்டுடலாம்னு நெனச்சா… எப்பயும் லேட்டா வர அந்த மேம் இன்னைக்கு கரெக்ட் டைமுக்கு வந்து நின்னுட்டாங்க. இவங்களுக்கெல்லாம் எப்போ சீக்கிரம் வரணும் எப்போ லேட்டா வரணும்னே தெரியாதா?
ப்ரேக் விட்டதும் அவசரமா அவ பக்கம் திரும்பி “என்ன சொன்னான்?”னு கேட்டேன். “அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் நடுவுல ஆயிரம் பேசுவோம். அது எதுக்கு உனக்கு?”னு அசால்ட்டா கேட்டுட்டு அவ பாட்டுக்கு எழுந்துப் போயிட்டா.
ஒரு நிமிஷம் என்ன சொல்லுறதுன்னு தெரியாம முழிச்சேன்.
அப்பறம் தான் அவ கிளாஸ் விட்டு வெளில போயிட்டான்னு ஒரச்சுது. எழுந்து அவ பின்னாடி ஓடிப் போனேன்.
“உன்னக் கெஞ்சிக் கேக்குறேன் ஜென்னி. சொல்லுடி ப்ளீஸ்”னு அவ கைய பிடிச்சுக் கெஞ்சுனேன். அவளுக்கே என்னைப் பார்த்தா பாவமா இருந்துதோ என்னமோ… ரேணுவுக்கு என்னைப் பிடிக்குமானு கௌதம் கேட்டானாம்.
எனக்கு ஒண்ணும் புரியல.
“அவ்வளவு தானா? அது மட்டும் தான் கேட்டானா? அப்பறம் எதுக்குடி நீ வரதுக்கு இவ்வளவு நேரம் ஆச்சு?”னு கேட்டேன்.
“கௌதம் அண்ணா அது மட்டும் தான் கேட்டாங்க. நம்ம காலேஜ் வந்த முதல் நாள் நடந்ததுலேருந்து இன்னைக்குக் காலையில நான் உங்க வீட்டுக்கு வந்ததும்’அம்மா நான் கிளம்புறேன். கௌதம் வந்துட்டான்’னு கத்திட்டு அப்பறம் அத சமாளிக்க உங்க அம்மாவையே குழப்பி விட்டியே… அது வரைக்கும் எல்லாத்தையும் சொன்னேன்…”னு சொன்னா.
அடிப்பாவி… அவன் சிம்பிளா ஒரே ஒரு கேள்வி தானடி கேட்டான்… அதுக்கு எதுக்குடி நீ ஒரு புராணமே படிச்சுட்டு வந்து நிக்குறன்னு இருந்துது எனக்கு.
இவளயெல்லாம் வெச்சுக்கிட்டு என்ன தான் செய்யுறது? அவக்கிட்ட அப்போ பேசி, திட்டி எந்தப் பிரயோஜனமும் இல்லன்னு எனக்குத் தெரியும். அதான் எல்லாம் கௌதமுக்கு தெரிஞ்சுடுச்சே…
“காலங்காத்தால ரொம்ப நல்ல காரியம் பண்ணிட்டு வந்திருக்கடி… நல்லா இரு…”னு சொல்லிட்டு கோவத்துல என்ன பண்ணுறதுன்னு தெரியாம வேகமா நடக்க ஆரம்பிச்சேன்.
புட்பால் கிரௌண்ட் பக்கத்துல இருக்க ஒரு மரத்தடி பெஞ்ச்ல போய் உட்கார்ந்ததுக்கு அப்பறமும் என் கோவம் அடங்கல.
அடுத்து என்ன செய்யப் போறேன்? கௌதம் வந்து என்கிட்ட பேசுனா நான் என்ன பதில் சொல்லுவேன்? எனக்குத் தல வலிக்க ஆரம்பிச்சுது.
கண்ண மூடி என்னை நானே அமைதிப்படுத்திக்க முயற்சிப் பண்ணேன். என் நெனப்பு முழுக்க அவன சுத்தியே தான் இருந்துது.
“என்னைப் பத்தி தான் யோசிக்குறியா ரேணு?”னு பக்கத்துலக் கேட்ட குரல்லத் தூக்கிவாறிப் போட்டு கண்ணத் திறந்து பார்த்தேன்.
நான் உட்கார்ந்திருந்த பெஞ்ச்ல இன்னொரு மூலைல கௌதம் உட்கார்ந்து என்னையே பார்த்துட்டு இருந்தான். அவன் எப்போ வந்தான்? எவ்வளவு நேரமா அங்க உட்கார்ந்திருந்தான்? யாராவது பார்த்தா என்ன நெனைப்பாங்க?னு யோசிச்சு சுத்திப் பார்த்தேன்.
கொஞ்ச தூரத்துல சில ஸ்டூடண்ட்ஸ் புட்பால் விளையாடிட்டு இருந்தாங்க. யாரும் எங்கள கவனிக்கல.
“கவலைப்படாத. யாரும் பார்க்க மாட்டாங்க. அப்படியே பார்த்தாலும் என்கூடப் பேசுறதால உன்னை யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க. எனக்கு அவ்வளவு நல்ல பேரு இருக்கு”னு சொன்னான்.
அங்கேருந்து எழுந்து ஓடுன்னு மூளை சொல்லுச்சு. அவன் எழுந்து போயிடக் கூடாதேன்னு மனசுத் தவிச்சுது.
அவனைப் பார்க்குறதத் தவிர்த்து நேரா திரும்பி உட்கார்ந்தேன். அப்போ எனக்கு மத்தவங்களப் பத்தின பயம் இல்ல. கௌதம் என்ன கேப்பான்?
அவனும் நேரா திரும்பி உட்கார்ந்து பேச ஆரம்பிச்சான். அவன் பேசுன ஒவ்வொரு வார்த்தையும் இன்னுமும் என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு.
“உனக்கு என்னைப் பிடிக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும் ரேணு. ஆனா ஜென்னிகிட்ட பேசுனதுக்கு அப்பறம் தான் எவ்வளவு பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். காலையில உன்கிட்ட நான் கோவமா பேசியிருக்கக் கூடாது. சாரி”
அவன் குரல்ல எதுக்காக அவ்வளவு வருத்தம் இருந்துது? அவன் என்னைத் திட்டக்கூட இல்லையே… இதுக்காகவா இவ்வளவு பீல் பண்ணுறான்?
“நீ இப்படி பீல் பண்ணுறத என்னாலத் தாங்கிக்க முடியல கௌதம்”னு கத்தணும் போல இருந்துது. என்னால வாயத் திறந்து பதில் சொல்ல முடியல.
“நீ என்னை முதல் தடவ பைக் ஸ்டாண்ட்ல பார்த்த பார்வையில என்ன இருந்துதுன்னு எனக்குத் தெரியாது… ஆனா அதுக்கு அப்பறம் எப்போ உன்னப் பார்த்தாலும் பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கும்.
அதுவும் உன்னை அன்னைக்கு என் கிளாஸுக்கு வெளிலப் பார்த்தப்போ… யாரு இந்தப் பொண்ணு? நம்மளப் பார்க்க தான் வந்தாளான்னு தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்…
அதனால தான் உன் கிளாஸ் கண்டுப்பிடிச்சு உன்கிட்ட வந்து பேசினேன். எதுக்கு என்னை இப்படிப் பார்க்குறன்னு கேட்டப்போ விட்டா போதும்னு நீ ஓடுனதுலயே எனக்கு கன்பார்ம் ஆயிடுச்சு… நீ என்னைப் பார்க்க தான் வந்த… உனக்கு என்னைப் பிடிச்சுருக்குன்னு…
அன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? ஏதோ எனக்கே எனக்காக ஒரு பொண்ணு… என்ன நெனச்சுக்கிட்டு என் பின்னாடியே சுத்தி சுத்தி வர ஒரு பொண்ணு… என்ன பார்க்கணும்னு ஏங்குற ஒரு பொண்ணு இருக்கா… அதுவும் எனக் கண்ணு முன்னாடி இருக்கான்னுத் தோணுச்சு…
உன்கிட்டத் திரும்ப நான் வந்து பேசுனப்போ என் பின்னாடி வராதன்னு சொன்னியே… அப்போ எனக்கு எவ்வளவு வலிச்சுதுத் தெரியுமா?
ஆனா அதுக்கப்பறம் யோசிச்சுப் பார்த்தேன். ஜென்னி கௌதம் அண்ணான்னு சொன்னா. நீ அண்ணான்னு சொல்லலனாலும் பரவாயில்ல. ஆனா வாங்க போங்கன்னு கூடச் சொல்லல. வராதன்னு தான் சொன்ன.
எனக்கு அந்த ஒரு விஷயம் கொஞ்சம் நம்பிக்கையைக் குடுத்துது. இன்னைக்குக் காலையில ஜென்னிட்ட பேசுனதுக்கு அப்பறம்…” னு சொல்லி என் பக்கம் திரும்பி உட்கார்ந்தான்.
அவ்வளவையும் கேட்டதுக்கு அப்பறம் நான் ஸ்தம்பிச்சுப் போயிட்டேன்னு தான் சொல்லணும். நானும் அவனைத் திரும்பிப் பார்த்தேன். “ஐ லவ் யூ ரேணு. என் வாழ்க்க முழுக்க நீ என்கூடவே இருப்பியா? என்னோட சரி பாதியா?”னு கேட்டான்.
எனக்கு மூச்சே நின்னுடுச்சு. எனக்குப் பிடித்த கௌதம்… என் கௌதம்… என் கிட்ட அவன் காதலை சொல்லிட்டான்.
எனக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியல. இது ஒத்து வருமாத் தெரியல. என் வீடு, அவனோட வீடுன்னு யோசிக்க எவ்வளவோ விஷயம் இருக்கு.
“எப்பயும் போல இப்பயும் இப்படி வெச்ச கண்ணு வாங்காமப் பார்த்தா என்ன அர்த்தம்? எனக்குப் பதில் வேணும் ரேணு”னு அவன் சொன்னதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுது… நான் அவனையே பார்த்துட்டு இருந்தேன்னு.
அங்கேருந்து என்னால அமைதியா எழுந்து வந்திருக்க முடியும். ஆனா அவன இதுக்கு மேலயும் என்னால டிஸ்டர்ப் பண்ண முடியாது.
“முடியாது கௌதம். இது எதுவும் ஒத்து வராது. வேணாம். என்னை மறந்துடு”ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
ஜென்னி எவ்வளவு கேட்டும் நான் கௌதம்கிட்ட பேசுனதப் பத்தி எதுவுமே சொல்லல. வீட்டுக்கு வந்து அவன் என்கிட்ட சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் யோசிச்சு யோசிச்சு பூரிச்சுப் போயிட்டு இருக்கேன். அவன் காதலை ஏற்க எது என்னைத் தடுக்குது? தெரியல…
-ரேணு
ரோஷனை தட்டிக் கொடுத்து உறங்க வைத்துக் கொண்டிருந்த கவிதா’போடி லூசு… நீ தான அவன் பின்னாடி போன? உனக்கும் அவன எவ்வளோ பிடிச்சிருக்கு? அவனாவே வந்து உன்கிட்ட லவ் சொல்லிட்டான். இன்னும் எது தடுக்குது தெரியல… பிடிச்சு வெச்சுருக்கு புரியலன்னு டையலாக் பேசிட்டு இருக்க?’என்று மனதிற்குள் பொருமி மகன் உறங்கி விட்டானா என்று பார்த்தாள்.
அவன் நல்ல உறக்கத்தில் இருக்கவும் அவனை மெல்ல தூக்கித் தொட்டிலில் கிடத்தினாள். பின் விளக்கை அணைத்துவிட்டுக் கையில் டைரியுடன் அறையைவிட்டு மெதுவாக வெளியே வந்தவள் அறைக்கு நேரெதிரே போடப்பட்டிருந்த சோபாவில் வாகாக அமர்ந்து டைரியை திறந்தாள்.
இன்னைக்குக் காலையில ஜென்னி வண்டி நிறுத்துறப்போ கௌதம் வந்தான். அவனோட பைக்கக் கொஞ்சம் தள்ளி பார்க் பண்ணான். ஜென்னி “குட் மார்னிங் கௌதம் அண்ணா”னு சொன்னா. அவனும் பதிலுக்கு “குட் மார்னிங் ஜென்னி. நேத்து என்ன தோசை சாப்பிட்டு ஒன்பது மணிக்கே தூங்கிட்ட போல?”னு கேட்டான்.
என்னது ஜென்னி நேத்து நைட் தோசை சாப்பிட்டாளா? அவ எத்தன மணிக்கு தூங்குனான்னு எனக்கே தெரியாது. இவன் எப்படிக் கரெக்டா சொல்லுறான். இதெல்லாம் யோசிச்சு நான் குழம்பி ரெண்டு போரையும் மாறி மாறிப் பார்த்தேன். ஆனா அவங்க என்னைக் கவனிச்சதாவே தெரியல.
சாரி கௌதம் அண்ணா சாப்பிட்டதும் தூங்கிட்டேன்னு இவ கெஞ்சுனா. அவன் என்னமோ காலையிலேருந்து எத்தன சாரி மெசேஜ் அனுப்புவன்னு கேட்டான்.
இவங்க முதல்ல எப்போ மொபைல் நம்பர் எக்ஸ்சேஞ் பண்ணிக்கிட்டாங்கன்னு நான் யோசிச்சிட்டு இருந்தேன். “நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன். நீ கிளாஸுக்கு போ”னு சொல்லிட்டு அவன் கூட ஜென்னி நடக்க ஆரம்பிச்சுட்டா. அப்பயும் கௌதம் என் பக்கம் திரும்பல.
அந்த நிமிஷம் அவங்கள பார்த்து எனக்கு ஏற்பட்ட உணர்வுக்குப் பேர் கோவமா? ஏமாற்றமா? பொறாமையா? ஒதுக்கப்பட்ட உணர்வா? தெரியல. ஆனா அதையெல்லாம் தாண்டி என் கண்ணு மட்டும் கலங்குச்சு.
ச்சே இது என்ன? வர வர எதுக்கெடுத்தாலும் எப்பப் பார்த்தாலும் அழுதுட்டே தான் இருக்கேன். முதல்ல இத மாத்தணும்.
அவங்க பேசிக்கிட்டா எனக்கென்ன? எப்படியோ கௌதம் என்னைத் தொந்தரவுப் பண்ணல. அது போதும்னு அப்போதைக்கு மனச சமாதானம் பண்ணிக்கிட்டு வேகமா நடக்க ஆரம்பிச்சேன்.
க்ளாஸுக்கு வந்ததுக்கு அப்பறம் எனக்கு இருப்புக் கொள்ளல. ஜென்னி உள்ள வந்ததும் ஏதாவது சொல்லுவான்னு அவ முகத்தையே பார்த்தேன். அவ பாட்டுக்கு என் பக்கத்துல வந்து உட்கார்ந்து மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சுட்டா.
எனக்கு வந்த கோவத்துல “ஜென்னி”னு கத்திட்டேன். கிளாஸ்ல எல்லாரும் என்னைத் திரும்பிப் பார்த்தாங்க.
எனக்கு அவமானமா இருந்துது. நான் ஏன் இப்படி ஆகிட்டேன்?
அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட அங்க உட்கார எனக்குப் பிடிக்கல. வேகமா எந்திரிச்சு கிரௌண்டுக்கு ஓடிட்டேன்.
நேத்துக் கௌதம் கூட உட்கார்ந்திருந்த அதே பெஞ்ச்ல போய் உட்கார்ந்தேன். ஏனோ இன்னைக்கும் அவன் என் பக்கத்துல வந்து உட்காரணும்னு மனசு ஏங்குச்சு.
ரெண்டு நிமிஷம் கழிச்சு நான் நெனச்ச மாதிரியே கௌதம் வந்து அந்த பெஞ்சோட இன்னொரு மூலைல உட்கார்ந்தான். ஆனா எதுவும் பேசல. என்னைத் திரும்பியும் பார்க்கல.
அமைதியா உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தான். எனக்கு அவன் பக்கத்துல இருக்குறதே நிம்மதியா இருந்துது. நானும் வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்.
கொஞ்ச நேரம் கழிச்சு “டைம் ஆயிடுச்சு. கிளாஸுக்கு போ”னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போயிட்டான்.
ஒரு தடவ கூட என்னைத் திரும்பிப் பார்க்கணும்னு அவனுக்குத் தோணவே இல்லையா? அப்பயும் எங்கயோ பார்த்து தான் சொல்லிட்டுப் போனான். நான் அசையாம அங்கயே உட்கார்ந்திருந்தேன்.
திடீர்னு கௌதம் மறுபடியும் வந்து அதே இடத்துல என் பக்கம் திரும்பி உட்கார்ந்தான். “உன் கண்ணுலத் தெரியுற இந்தத் தவிப்பு உண்மைன்னா நீ என்னை அந்தளவுக்கு லவ் பண்ணுற ரேணு. இப்போ கூட நான் உன்னைக் கண்டுக்காததுக்கு நீ எவ்வளவு பீல் பண்ணுவன்னு எனக்குத் தெரியும் ரேணு”னு சொன்னான். எனக்குப் பதில் சொல்லத் தெரியல.
“நீ இப்பயும் பேசப் போறதில்ல… கிளாஸுக்கு போ ரேணு”னு சொன்னான். நான் அவன நிமிர்ந்து பார்த்தேன்.
கௌதம் அவனோட ரெண்டு புருவத்தையும் மாத்தி மாத்தித் தூக்கி ஆட்டினான். எப்படி அவன் அத செய்யுறான்னு ஆச்சரியமா இருந்துது.
ஏதோ கீ குடுத்த பொம்ம மாதிரி தலைய ஆட்டிட்டு எந்திரிச்சு வந்துட்டேன். கொஞ்ச தூரம் நடந்ததும் அவன் ஏதோ விசில் அடிச்ச சத்தம் கேட்டுத் திரும்பினேன்.
கௌதம் ஏதோ ஒரு பாட்ட விசில் அடிச்சுட்டு இருந்தான். அவன் முகத்த நான் பார்க்கலன்னாலும் அவனோட சந்தோஷத்த என்னால உணர முடிஞ்சுது. எதுக்காக அவ்வளவு சந்தோஷப்பட்டான்?
நான் கிளாஸ்கு வந்ததும் ஜென்னி கேட்ட முதல் கேள்வி “என்னடி? மந்திரிச்சு விட்ட மாதிரி வர?” அப்பயும் நான் முழிச்சுட்டு இருந்தேன்.
“அப்படி ஒண்ணும் பெருசா கௌதம் அண்ணா சொன்ன மாதிரியே தெரியலயே… இதுக்கா இந்த எபெக்ட் குடுக்கற?”னு கேட்டா.
அதுக்குள்ள இவக்கிட்ட சொல்லிட்டானான்னு இருந்துது. கூட்டுக் களவானிங்க.
நான் பதில் சொல்லல. அதுக்கப்பறம் அவ கூட இன்னைக்கு புல்லா நான் பேசவேயில்ல.
கௌதமுக்கு எப்படி நான் என்ன யோசிக்குறேன்னு தெரிஞ்சுது? அவனால என்னை இந்தளவுக்குப் புரிஞ்சுக்க முடியுமா? நான் அவன்கிட்ட ஒழுங்கா பேசுனது கூட இல்லையே? இப்ப வரைக்கும் இதே தான் யோசிச்சுட்டு இருக்கேன்.
வீட்டுக்கு வந்து டிரஸ் மாத்தும் போது இன்னொரு வேலையும் செஞ்சேன்… கௌதம் செஞ்ச மாதிரி என்னாலையும் ரெண்டு புருவத்தையும் மாறி மாறி தூக்க முடியுதான்னு கண்ணாடி முன்னாடி நின்னு செஞ்சு பார்த்தேன். ம்ம்ஹும்ம்… அவன் அத அழகா செஞ்சான்.
-ரேணு
ஏதோ சத்தம் கேட்க கவிதா கூர்ந்து கவனித்தாள். ரோஷன் சிரிக்கும் சத்தம் கேட்கவே டைரியை மூடி வைத்துவிட்டு வேகமாக அறையினுள் சென்றாள்.
ரோஷன் கையில் ஒரு பொம்மையை வைத்து கவிதாவை பார்த்துச் சிரித்தான். “இப்போ எல்லாம் நைட் அடிக்கடி முழிச்சுக்குற நீ” என்று கூறி அவனைத் தூக்கி அவன் கையில் இருந்த பொம்மையை மெதுவாக வாங்கிக் கீழே வைத்து விட்டு அவனை அருகில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அவனை உறங்க வைத்தாள்.
பின் அவனைத் தொட்டிலில் கிடத்திவிட்டு அறைக்கு வெளியே சென்று சோபாவில் வைத்திருந்த டைரியை எடுத்து வந்து மெத்தை அருகில் டேபிளில் வைத்துவிட்டுப் படுத்தாள்.
காலை மீனாவிற்கு அழைத்துத் தான் படித்தவரை அவளிடம் கூற வேண்டும் என்று எண்ணியவளுக்கு இன்று கார்த்திக் அழைத்துப் பேசாதது நினைவுக்கு வந்தது.
‘என் மேல அக்கறையே இல்லையா?’மனதை அரித்த கேள்வியைப் புறக்கணிக்க முயன்று அந்த எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளி உறங்க ஆரம்பித்தாள் கவிதா.
12
      காலை எழுந்தது முதல் அனைத்து வேலைகளையும் முடித்துக் கலைத்து போய் அமர்ந்தாள் கவிதா.
மீனாவின் நினைவு வரவே’இவகிட்ட சொல்லலன்னா அப்பறம் அதுக்கு வேற சண்டை போடுவா…’என்று நினைத்தவள் அவளுக்கு அழைத்துத் தான் படித்தவரை கூறினாள்.
“இந்த ரேணு பொண்ணுக்கு என்ன தான்டி பிரச்சன? இப்போ எதுக்கு கௌதம் வந்து லவ் பண்ணுறேன்னு சொன்னதுக்கு அப்பறம் இப்படி யோசிக்குறா?”
“எனக்கு என்ன தெரியும்? அவ யோசிக்குறது கரெக்டா தப்பான்னுத் தெரியல மீனா. ஆனா ரொம்ப லேட்டா யோசிக்குறான்னு மட்டும் தெரியுது. கௌதம் முதல் நாளுலேருந்து இவள கவனிச்சுட்டு தான் இருக்கான்னு இவளுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை தான்…”
“என்னவோ போ. ராஜேஷ் இன்னைக்கு அவங்க அக்கா வீட்டுக்கு போகலாம்னு சொல்லாம இருந்திருந்தா நானும் அங்க வந்து உட்கார்ந்து உன்கூடச் சேர்ந்து கதை படிச்சிருப்பேன்… ஆனா அவங்க அக்காவுக்கும் உடம்பு சரி இல்லைடி. போய்ப் பார்க்கலன்னா நல்லா இருக்காது.
ஒண்ணு பண்ணு கவி. நாளைக்கு நீ கிளம்பி இங்க வாடி. நீயும் எங்கயும் போறதில்ல… அந்த வீட்டுலயே தான அடஞ்சுக் கெடக்குற… நீயும் வெளில போன மாதிரி இருக்கும்”
“நல்ல ஐடியா தான். ரோஷன் வெச்சுக்கிட்டு… சரி மீனா. நீ சொல்லுற மாதிரி நான் எங்கயும் போறதில்ல. நாளைக்கு மத்தியானம் வரேன்டி”
“அதெல்லாம் முடியாது. எந்திரிச்சு குளிச்சுட்டு இங்க வந்துடு. செண்பகத்தையும் கூட்டிட்டு வா கவி. மறக்காம டைரி எடுத்துட்டு வா. உன்னோட ரெண்டு நாள் கெடு நாளையோட முடியுது”
“ஏன்டி இப்படி வட்டிக் கடக்காரன் மாதிரி பேசுற?”
“அந்த டைரி நான் தான் முதல்ல படிப்பேன். சரிடி வெக்கவா?”
கவிதா ரோஷனை செண்பகத்திடம் கொடுத்து “இவன இப்போ தூங்க வெக்காத செண்பா. நைட் முழிச்சுக்குறான். மதியம் தூங்க வெப்போம். இப்போ இவன் கூடக் கொஞ்சம் விளையாடு.
இன்னைக்குச் சாப்பாடு வெளில வாங்கிட்டு வர சொல்லிக்கலாம். உனக்கும் ரெஸ்ட் இருக்கும். ஒரு மணி நேரம் கழிச்சு வந்து எனக்கு ஞாபகப்படுத்து… செல்வம் அண்ணாக்கிட்ட போய் வாங்கிட்டு வர சொல்லுவோம்” என்றாள்.
“எனக்கு எதுக்குக் கா ரெஸ்ட்? நானே…”
“அதெல்லாம் நீ பேசாத செண்பா. கிச்சன விட்டு வெளில வரதே கிடையாது. நாளைக்கு மீனா வீட்டுக்குப் போகலாம். உன்ன கண்டிப்பா கூட்டிட்டு வர சொல்லி இருக்கா” என்று கறாராய் கூறிய கவிதா டைரியில் மூழ்கினாள்.
ஒருத்தர் நம்மள பார்த்துச் சிரிக்குறது ஒரே நேரத்துல சந்தோஷமாவும் அவஸ்தையாவும் இருக்க முடியுமா?
காலையிலேருந்து எனக்கு அப்படித் தான் இருந்துது.
பைக் ஸ்டாண்ட்ல கௌதம் வண்டிய நிறுத்திட்டு நடந்து வந்தப்போ அவனை நாங்க க்ராஸ் பண்ணோம். என்னையும் ஜென்னியையும் பார்த்து சிரிச்சான். ஒரு நிமிஷம் மனசுக்குள்ள மின்னல் வெட்டுன மாதிரி இருந்துது.
இன்னைக்குத் தான் அவன் என்னைப் பார்த்துச் சிரிக்குறான். என்கூடப் பேசுறப்போ எல்லாம் சிரிச்சுட்டே தான் இருக்கான்… அது வேற.
இன்னைக்கு இந்த ஸ்நேகப் புன்னகை மனசுக்கு இதமா இருந்துது. நேத்து அவன் என்னைக் கண்டுக்கலன்ற என்னோட வருத்தம் சுத்தமாப் போயிடுச்சு.
நான் சிரிக்கலாமா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ள அவனை க்ராஸ் பண்ணிட்டோம்.
மறுபடியும் நான் லைப்ரரி போனப்போ எதிர்ல அவனைப் பார்த்தேன். என்கிட்ட வந்ததும் “நேத்து மாதிரி உன்னை என்னைக்கும் அவாய்ட் பண்ண மாட்டேன். பயப்படாத ரேணு. அது சும்மா நீ உன் மனச புரிஞ்சுக்கணும்னு பண்ணது”னு சொல்லிட்டு வேகமாப் போயிட்டான்.
இவனுக்கு நான் என்ன நினைக்குறேன்னு எப்படித் தெரியுது? நம்ம முகத்துல எல்லாமே அவ்வளவு அப்பட்டமாவாத் தெரியுதுன்னு யோசிச்சுட்டே லைப்ரரிக்குள்ள போனேன்.
அங்க எதுக்கு வந்தேன்னே மறந்துப் போயிடுச்சு. சரி எங்க டிபார்ட்மெண்ட் புக்ஸ் இருக்க இடத்துக்குப் போனாலாவது ஏதாவது ஞாபகம் வருமாப் பார்த்தேன்… ம்ம்ஹும்ம்… கௌதம் பேசுனது… அவன் சிரிச்சதுன்னு இது மட்டும் தான் மண்டைல ஓடுச்சு.
திரும்ப கிளாஸுக்கே வந்துட்டேன். நான் வந்து ஜென்னி பக்கத்துல உட்கார்ந்ததும் ஏதோ மெசேஜ் அனுப்ப ஆரம்பிச்சுட்டா.
இப்போ நம்ம மூஞ்சில என்ன தெரியுதோ அத அப்படியே அவனுக்குச் சொல்லிடுவான்னு எனக்குத் தெரிஞ்சுப் போச்சு.
ரம்யா, கிருபா, பூஜா, கலை எல்லார்க்கிட்டயும் பயங்கரமா அரட்டை அடிக்குற மாதிரி பில்ட் அப் குடுக்க ஆரம்பிச்சுட்டேன்.
மறுபடியும் லஞ்ச் அப்போ கேண்டீன்ல கௌதம் பார்த்தேன். அதே புன்னகை… லேசா சிரிச்சுட்டுத் திரும்பிட்டேன்.
இவன் முகத்தைப் பார்த்தாதான் நான் பார்த்துட்டே இருப்பேனே… எனக்கு முன்னாடி வருசைல ஜென்னி வேற நின்னுட்டு இருந்தா. அவ பார்த்தா… ஓட்ட ஆரம்பிச்சுடுவா.
கௌதம் நேரா எங்கள நோக்கி வந்தான். எனக்குப் பதட்டமா இருந்துது. இத்தன பேரு முன்னாடி பேசப் போறானா?
ஜென்னி பக்கத்துல போய் நின்னு “ஜென்னி எனக்கும் சேர்த்து பிரியாணி வாங்கு”னு சொல்லி அவ கைல பணம் குடுத்தான். எனக்கு அப்போ தான் மூச்சே வந்துது.
கௌதம் என்னை ஒரு தடவத் திரும்பிப் பார்த்துட்டு “ஜென்னி… சில பேர் என்ன எதிர்ப்பார்க்குறாங்கன்னே தெரிஞ்சுக்க முடியல. நான் பார்த்தா பார்க்காதன்னு சொல்லுறாங்க. நான் பார்க்கலன்னா பீல் பண்ணுறாங்க. பேசுனா என்கிட்ட பேசாதன்னு சொல்லுறாங்க. பேசலன்னா ஏக்கமா லுக் விடுறாங்க… என்னால முடியலம்மா”னு சொன்னான்.
ஜென்னி என் கைல பணத்த குடுத்து டோக்கன் வாங்க சொல்லிட்டு எனக்குப் பக்கத்துல நின்னு கௌதம் கூடப் பேச ஆரம்பிச்சுட்டா. “அது சில லூசுங்க அப்படித் தான் அண்ணா. என்ன நினைக்குதுங்கன்னு நம்மளால புரிஞ்சுக்க முடியாது”னு ரொம்ப சீரியஸா சொன்னா. நான் திரும்பி அவளை முறைச்சேன்.
“தனக்கு என்ன வேணும்னு தனக்கே தெரியாதப்போ… தனக்கு என்ன பிடிக்கும்னு தனக்கே புரியாதப்போ… அடுத்தவங்க சொல்லுறதயாவதும் கேக்கணும்”னு கௌதம் என்னைப் பார்த்துட்டே நிறுத்தி நிதானமா சொன்னான்.
என் பேச்சை கேளுன்னு எவ்வளவு நாசுக்கா சொல்லுறான். நான் அமைதியா டோக்கன் வாங்கிட்டு நகர்ந்து வந்துட்டேன்.
அடுத்து பிரியாணி வாங்க திரும்ப வரிசைல நின்னோம். இந்தத் தடவ ஜென்னி எனக்குப் பின்னாடியும் கௌதம் எனக்கு முன்னாடியும் நின்னாங்க. இது என்ன கொடுமைன்னு நான் நெளிஞ்சுக்கிட்டே இருந்தேன்.
கௌதம் திரும்பி ஜென்னிகிட்ட பேசுற மாதிரி என்னைத் தான் பார்த்துட்டு இருந்தான். அவன் கூட இவ்வளவு பக்கத்துல என்னால நிக்க முடியல.
நான் அவஸ்தைப்படுறேன்னு தெரிஞ்சதும் அவன் கொஞ்சம் முன்னாடித் தள்ளி நகர்ந்து நின்னு ஜென்னி கூடப் பேச ஆரம்பிச்சான்.
“நான் உன் கிட்ட எதுவுமே சொல்ல வேண்டாமா கௌதம்? எல்லாத்தையுமே நீயே புரிஞ்சுப்பியா? எப்படி உன்னால முடியுது?”னு அவன்கிட்ட கேக்கணும் போல இருந்துது.
அவன் நகர்ந்தது கூடப் பார்க்குற யாருக்கும் வித்யாசமா தெரியாத மாதிரி இயல்பா தான் இருந்துது.
அவன் ஜென்னிகிட்ட என்னமோ பேசிட்டு இருந்தான். அவங்க என்ன பேசுனாங்கன்னு ஒரு வார்த்தைக் கூட என் காதுல விழல. மூணு பேரும் கைல தட்டோட ஒரு டேபிள்ல போய் உட்கார்ந்தோம்.
நல்லவேளை அவன் என் எதிர்ல உட்காரல. அவன் முகத்தைப் பார்த்துட்டே சாப்பிட வேண்டாம்னு நான் நெனச்ச நேரம் என் பக்கத்துல உட்கார்ந்திருந்த கௌதம் குனிஞ்சு எனக்கு மட்டும் கேட்குற மாதிரி “நான் உன் எதிர்ல உட்கார்ந்து உன்னையே பார்த்துட்டு இருந்தா நீ ஒழுங்கா சாப்பிட மாட்டேன்னு தெரியும். எனக்கு உன்னைப் பார்த்துட்டே இருக்கணும்ங்கறத விட உன்கூடவே உன் பக்கத்துலயே இருக்கணும் ரேணு. சாப்பிடு”னு சொன்னான்.
உடனே நான் அவன் பக்கம் திரும்பினேன். இதுக்கு முன்னாடியாவது அவன் என் முகத்தைப் பார்த்து நான் நினைக்குறத தெரிஞ்சுக்கிட்டான்னு நெனச்சேன்.
ஆனா இப்போ… என் பக்கத்துல உட்கார்ந்து என் முகத்தையே பார்க்காம என் மனநிலையை அவனால உணர முடியுதுன்னா… அந்த அளவுக்கு என்னை அவன் நேசிக்குறானான்னு பிரம்மிப்பா இருந்துது.
“லுக் விட்டது போதும் சாப்பிடுடி” னு ஜென்னி சொன்னதுக்கு அப்பறம் தான் நான் அவனையே பார்த்துட்டு இருந்தது தெரிஞ்சுது. எனக்கு வெட்கமா இருந்துது. ச்ச இப்படியா பக்கத்துல உட்கார்ந்து பார்த்துட்டு இருப்போம்?
கௌதம் எதையும் கண்டுக்காம சாப்பிட்டுட்டு இருந்தான். நானும் அமைதியா சாப்பிட்டேன். அவன் பக்கத்துல இருக்கான்ற நிம்மதியோட…
காண்டீன் விட்டு வெளில வந்தப்போ ஜென்னிக்கு பை சொல்லிட்டு கௌதம் என்னைப் பார்த்த பார்வை… உன்ன விட்டுட்டுப் போகணுமான்ற ஏக்கம் அவன் கண்ணுல தெரிஞ்சுது. எதுவும் சொல்லாம நடக்க ஆரம்பிச்சுட்டான்.
இவன் எப்படி எதையும் பேசாம இவனோட உணர்வுகள எனக்குப் புரிய வெக்குறான்? என்னை உணர வெக்குறான்?
ஈவ்னிங் கௌதம் ஜென்னியோட வண்டி மேல உட்கார்ந்து எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான். நானும் ஜென்னியும் அவன் பக்கத்துல வந்ததும் அவகிட்ட பத்து நிமிஷம் வெயிட் பண்ண சொல்லிட்டு’வா’னு மட்டும் சொல்லி முன்னாடி நடக்க ஆரம்பிச்சான். ஜென்னி என்னைப் போகச் சொன்னா.
நானும் அவன் பின்னாடி நடக்க ஆரம்பிச்சேன். கௌதம் அவனோட பைக்ல சாய்ந்து உட்கார்ந்து அமைதியா என்னைப் பார்த்தான்.
அவன் என்ன பேசப் போறான்னு எனக்கு நல்லாத் தெரியும். என்ன பதில் சொல்லுறதுன்னு தான் தெரியல.
“நேத்து நீ என்கிட்ட சொன்னதத் திரும்ப இப்போ சொல்லு ரேணு”னு சொன்னான்.
அவன் என்ன கேக்குறான்னே எனக்குப் புரியல. நேத்து அவ்வளவு தெளிவா சொன்னத எதுக்கு இப்போ திரும்பச் சொல்லணும்னு முழிச்சேன்.
அத சொல்ல ஆரம்பிக்கும்போது தான் எதுக்குன்னு புரிஞ்சுது…
இது எல்லாத்தையும் இன்னையோட முடிவுக்குக் கொண்டு வரணும்னு தீர்மானமா நெனச்சு பேச ஆரம்பிச்சேன்.
நேத்து அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லிட்டேன். இன்னைக்கு அவன் கண்ணைப் பார்த்தா என்னால வாயே திறக்க முடியல.
சரி சொல்லி தான் ஆகணும்னு வேற பக்கம் பார்த்தென். “இது ஒத்து…” என்னாச்சு எனக்கு? ஏன் அதுக்கு மேல என்னால சொல்ல முடியல?
ஒரு தடவ தொண்டைய செருமி “இது ஒத்துவராது கௌதம்”னு சொன்னேன்.
எனக்குத் தெரிஞ்சு “இது” மட்டும் தான் அவன் காதுல விழுந்திருக்கும். “ஒத்துவராது” எனக்கு மட்டும் தான் கேட்டுச்சு. “கௌதம்” எனக்கே கேக்கல.
எனக்கு அங்கேருந்து ஓடிப் போயிடணும் போல இருந்துது. இவன் யாரு என்னை இப்படி நிக்க வெச்சு பேச சொல்லி டெஸ்ட் பண்ணுறதுகுன்னு கோவம் வந்துச்சு.
என்னால இத சொல்ல முடியாதா? நேத்து நான் சொன்னத இன்னைக்கு என்னாலயே சொல்ல முடியாதா? மனசுக்குள்ள வீராப்பு…
“இது ஒத்துவராது கௌதம்”னு அழுத்தம் திருத்தமா சொல்லி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். அப்பறம் அப்படியே ப்ரீஸ் ஆகி நின்னுட்டேன்.
இவன் முகத்தைப் பார்த்தா மட்டும் நான் ஏன் இப்படி ஆகுறேன்னு கத்தணும் போல இருந்துது. கௌதமும் என் கண்ணைப் பார்த்துட்டே தான் நின்னான்.
எவ்வளவு நேரம் அப்படியே நின்னோமோ ஜென்னி வந்து “அண்ணலும் நோக்கினார். அவளும் நோக்கினாள். ஸ்டாப் யாராவது நோக்கி கேஸ் புக் பண்ணுறதுக்குள்ள… கௌதம் அண்ணா… நாங்க கிளம்புறோம்”னு மொக்கப் போட்டு எங்கள இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தா.
கௌதம் அப்பயும் அசையாம பைக்ல சாய்ந்து நின்னுட்டு இருந்தான். எனக்கு அந்த இடத்தை விட்டு வர மனசே வரல. அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துட்டே ஜென்னி பின்னாடி போனேன்.
வண்டி ஸ்டார்ட் பண்ணதுக்கப்பறம் கௌதம திரும்பிப் பார்த்துட்டு பின்னாடி ஏறி உட்கார்ந்தேன். என்னமோ அவன விட்டுட்டு போற உணர்வு…
இது என்ன பைத்தியக்காரத்தனம்? நாளைக்கு காலேஜ்ல பார்க்க தான போறோம்…
என்ன சமாதானம் சொல்லியும் என் மனசு என் பேச்சக் கேட்கல. வீட்டுக்கு வந்து மூனு மணி நேரம் கழிச்சும் மனசுல ஏதோ ஒரு வெறுமை இருக்கு. என்னமோ கௌதம் ஒரு தடவப் பார்க்கணும் போல இருக்கு.
-ரேணு
நேத்து நான் பீல் பண்ணதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு கௌதம் இன்னைக்கு என்னைக் கடுப்பேத்திட்டான்.
காலையில வண்டிய நிருத்திட்டுத் திரும்பினப்போ கௌதம் வந்து ஜென்னியோட ஸ்கூட்டிக்கு பக்கத்துல அவன் பைக்க நிறுத்தினான்.
ஹெல்மெட் கழட்டி வண்டியிலேருந்து இறங்கி “குட் மோர்னிங் ஜென்னி”னு சொல்லி “ஐ லவ் யூ ரேணு”னு என்கிட்ட சொல்லி ரெண்டு புருவத்தையும் மாத்தி மாத்தித் தூக்கி ஆட்டி கண்ணடிச்சுட்டு அவன் பாட்டுக்கு நிக்காம போயிட்டான்.
நான் கிட்டத்தட்ட வாயப் பொளந்து நின்னுட்டு இருந்தேன். இப்போ என்ன சொன்னான் இவன்? எங்கிருந்து வந்துது இவ்வளவு தைரியம்? அதுவும் ஜென்னி முன்னாடி… இவனுக்கெல்லாம் அறிவே இல்லையா? எதுக்கு இவ்வளவு சொன்னதுக்கு அப்பறமும் என் பின்னாடி வரான்?
ஜென்னி வழக்கம் போல வாயப் பொத்தி சிரிச்சுட்டு இருந்தா. இவள… வேகமா நடந்து கிளாஸுக்கு வந்துட்டேன்  .
என்னால இன்னைக்கு புல்லா யார்கிட்டயும் பேச முடியல. இயல்பா இருக்க முடியல. லாப்ல எத்தன தப்புப் பண்ணேன்…
ஈவ்னிங் நாங்க போனப்போ கௌதம் அவனோட பைக்க எடுத்துட்டு இருந்தான். பைக்ல உட்கார்ந்து ஹெல்மெட் மாட்டிட்டு ஜென்னிகிட்ட “பை ஜென்னி”னு சொல்லிட்டு என்கிட்ட “லவ் யூ ரேணு”னு சொல்லி மறுபடியும் ரெண்டு புருவத்தையும் மாத்தி மாத்தி தூக்கி ஆட்டி கண்ணடிச்சுட்டு வேகமா வண்டிய ரைஸ் பண்ணிப் போயிட்டான்.
ஐயோ இது என்ன புது டார்ச்சர்? இத எப்படிச் சமாளிக்கப் போறேன்னு தெரியலயேன்னு மனசுக்குள்ள ஒரு பக்கம் புலம்பினாலும் அவன் சொல்லும்போது நெஞ்சுக்குழில ஜில்லுன்னு தான் இருக்கு…
இன்னைக்கும் வீட்டுல கண்ணாடிப் பார்த்து அவன் செஞ்ச மாதிரி ரெண்டு புருவத்தையும் ஆட்ட ட்ரை பண்ணேன். எனக்கு வரல.
-ரேணு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!