நேசம் – 16
நள்ளிரவின் அரைவட்ட வளர்பிறை நிலவொளியில், லக்ஜுரி டீலக்ஸ் AC கோச்சில் ஏழு நாள் பயணமாக ஆரம்பித்த அந்த சுற்றுலாவை இருவருமே மிகவும் விரும்பி அனுபவித்தனர். இருபத்திநான்கு மணிநேரமும் ஒருவரையொருவர் சார்ந்த படியே இருந்தது மனதிற்குள் பலவித மாறுதல்களை கொண்டு வந்திருந்தது.
தோளில் சாய்ந்து கொண்டு பயணிக்கும் பொழுதுகள் யாவும் சீண்டல்களுடன் கூடிய இனிமையை கொடுத்தன. சிறுசிறு அணைப்புகளும், தீண்டல்களும் பாண்டியனின் அன்பினை மேலும் எடுத்துச் சொல்ல, சமயங்களில் சிவனியா திண்டாடிப் போனாள்.
“எத்தன கிஸ், எத்தன ஹக் என்கிட்டே இருந்து வாங்கிக்கிற, ஒரு தடவையாவது திருப்பி குடுக்கிறியாடி நீ! எருமை மாடு மாதிரி மூஞ்சிய சுருக்கிட்டு நிக்கிற”
“பிடிக்கலன்னு இப்படி தான் செய்வேன்”
“நீ இப்படியே சொல்லிட்டு இரு, ஒரு நாள் உன்னை கிரில் சிக்கனா சுருட்டி விடப்போறேன் பாரு”
“அடப்பாவி மாமா! உன்னை நம்பி வந்ததுக்கு, என்னை நல்லாவே மிரட்டி வைக்கிற” வெளியே புலம்பி விட்டு
‘நெஜமாவே நடந்துருமோ? சேச்… சே… ஒரு வாரமா ஒண்ணா இருக்கோம், அவ்ளோ மோசமா எல்லாம் இல்ல என் மாமா!’ மனதிற்குள் கணவனை மெச்சிக் கொண்டாள்.
எதற்கும் தன்னை தவிக்க விடாமல், எப்பொழுதும் பின் தொடர்ந்தவன் பார்வையில், அவனது கிளிப்பிள்ளையாய் எங்கும் செல்லாமல், அவன் வேலை பார்ப்பதையே வேலையாகக் கொண்டு நாட்களைக் கடத்தினாள்.
முக்கியமாய் பாண்டியனின் தொழில் அணுகுமுறையும், வெளிமனிதர்களிடமும், சக வேலையாட்களிடமும் காட்டும் சிரித்தமுகமும், அதிராத பேச்சுக்களையும் பார்த்து, சிவனியாவை ஆச்சரியப்பட வைத்தது.
ஹூடியுடன் கூடிய ஜீன்ஸ் சிறிய டாப், குர்த்தி மற்றும் ஜீன்ஸ் பாண்ட் இவளது உடைகளாக இருக்க, கேசுவல் டி-ஷர்ட்டும், த்ரீஃபோர்த் ட்ராக் பாண்டும் இவனது வேலைக்கான உடையாக, அந்த பயணம் முழுவதும் எளிமையாய் வலம் வந்தனர்.
இரவின் கடைசி நேரத்தில் தான் இவர்களின் உலா ஆரம்பம் ஆகும். நன்றாய் பழகும் பயணிகளோடு ‘சென்று வா’ என பாண்டியன் சொன்னாலும், சிவனி சட்டமாய் மறுத்து, அவனுடன் மட்டுமே வெளியே சென்று வந்தாள். நடுஇரவில் இவர்கள் அலைந்து, களைத்து வந்தாலும், அதிகாலையில் தன்னை வேலைக்குள் பொருத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டான் பாண்டியன்.
ஆந்திரா ஸ்பெசல் டூர் பேக்கேஜில் சிம்மாச்சலம், ஸ்ரீகூர்மம், அகோபிலம் மஹாநந்தி, அண்ணவரம், பத்திரவசலம், மங்களகிரி, ஸ்ரீசைலம், என அனைத்து இடங்களைகளையும் ஏழு நாட்கள் சுற்றி விட்டு இறுதியாக விஜயவாடாவுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
விஜயவாடா செழுமையான விவசாய பூமியாகும். தெலுங்கானாவின் தலைநகரம், சுற்றிப் பார்க்கும் இடங்கள் நிறைந்த ஊர்.
மணற்பாறாங்கற்களில் குடைவறைகளால் உருவாக்கப் பட்ட உன்டவலி குகையும், மொகலராஜபுரம் குகைகள், மற்றும் அந்த ஊரின் கனக துர்க்கை கோவில் போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு, இறுதியாய் பவானி தீவிற்க்கு வந்திருந்தனர்.
இதற்குப் பிறகான அடுத்த பயணம் மதுரை போய் சுற்றுலாவை நிறைவு செய்வது என்றிருக்க, அந்த பொறுப்புகளை தன்னுடன் வேலைக்கு வந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு, டிராவல்ஸ் அமைப்பாளரிடம் விவரங்களை சொல்லி அவர்களை வழியனுப்பியவன், தனியாய் மனைவியுடன், ஒரு வார அலைச்சலையும், களைப்பையும் தீர்க்கவென பவானி தீவிலேயே தங்கி விட்டான் பாண்டியன்.
பிரகாசம் குறுக்கணையின் நீரோட்டத்திற்கு எதிர்த் திசையில் 133 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப் பெரிய ஆற்றுத் தீவுகளில் ஒன்று தான் பவானி தீவு. இதனை ஓர் சொர்க்கத்தீவு என்றும் சொல்லலாம்.
பொழுதுபோக்கு அம்சங்களும், படகுசவாரி, நீச்சல் குளங்கள் மற்றும் சாகச நீர் விளையாட்டுக்கள் நிறைந்த இத்தீவில் தங்குவதற்கு மனம் விரும்பும் வகையில் சொகுசு அறைகளும், இயற்கை எழிலை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட மரக்குடில்களும் அனைவரையும் கவர்ந்து கொண்டிருந்தன.
இரவின் முழுநிலவு வெளிச்சத்தில், இயற்கையை ரசித்தபடியே, காற்றில் ஆடும் இலைகளின் சத்தங்களை கேட்டுக் கொண்டு, கால் போன போக்கில் இருவரும் நடந்து கொண்டே இருக்க, இந்த ஒரு வாரத்தில் இல்லாத பழக்கமாய் அவள் இடையோடு அணைத்துக்கொண்டு நடப்பதை பாண்டியன் அன்றிலிருந்து வழக்கமாக்கி கொண்டிருந்தான்.
இவன் செயலால் ஏற்பட்ட தயக்கம் சிவனியின் மனதில் அலைபாய்ந்து, தடுமாற வைத்து, அவனுடன் சேர்ந்து நடக்க முடியாமல் பின்னடைய வைத்தது.
இதை பார்த்த பாண்டியனுக்கு ‘என்னிடம் பயம் கொள்ளும் அளவுக்கு இன்னும் அவளை வைத்திருக்கிறேனோ?’ என்ற சந்தேகம் வர, அதை தகர்த்தெறியவே முயன்றான்.
“ஏண்டா ஒரு மாதிரி இருக்க? ஊருக்கு போகணுமா சிவு?”
“இல்லையே! ஐ’ம் ஆல்ரைட் மாமா!”
“அப்போ என்கிட்டே பயமா?”
‘உன்னுடைய இந்த தொடுகை என்னை தடுமாற வைக்கிறது என்பதை எப்படி சொல்வது?’ என மனதில் இருந்ததை வெளியே சொல்லவும் முடியாமல் தவித்துப் போனாள்.
“இன்னுமா என்மேல இருக்குற கோபம் குறையல?” பாண்டியன் கேட்க, பதில் வரவில்லை.
இவளுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அவன் தான், அந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பதும் அவன்தான். இதுவரை சகஜமாய் பேசிக் கொண்டாலும், வாக்குவாதங்கள் மட்டுமே இவர்களுக்கிடையில் பிரதானமாய் இருக்க, இவளின் இந்த தடுமாற்றத்தை சொன்னால் என்னவென்று எடுத்துக் கொள்வானோ கோபக்காரன் என்று தான் சிவனியின் மனம் யோசிக்க ஆரம்பித்தது. அவனும் அவள் மனதை படித்தவன் போல்
“உன் சம்மதம் இல்லாம எதுவும் நடக்காது, இதை மனசுல பதிய வச்சுக்கோ! எப்போவும் போல இரு!” பேசி வைக்க
“நான் எப்போவும் போல தான் இருக்கேன், நீங்க தான் எனக்குப் பிடிக்காத வேலைய செஞ்சுட்டு இருக்கீங்க” மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லி விட,
“அப்டி என்ன செஞ்சுட்டேன்ன்னு கோபப்படறே? நீ என் பொண்டாட்டி, இதுக்கெல்லாம் உன்கிட்ட தான் வருவேன்” இவனும் வீம்பாய் இடையோடு அணைத்து, தான் விட்ட வேலையை தொடரும் விதமாய், இவளை இழுத்துச் செல்ல,
“விடுங்க மாமா! எனக்கு நடக்க தெரியும்”
“ப்ச்… நகரக் கூடாது, என்னை வில்லன் ஆக்காதே?” இவன் செய்யும் ஒவ்வொரு செயலும், இவளது உடல் கூசி சிலிர்க்க, இவனோ மீண்டும் தன் கேள்வியில் வந்து நின்றான்.
“இன்னும் என் மேல கோபத்தை இழுத்து வச்சுட்டு இருக்கியா?”
“தெரியல எனக்கு? விடுங்க!”
“பதில் சொல்லாம விடமாட்டேன்” என்றவன் அவளை முழுதாய் தன் அணைப்பிற்க்குள் அவளை கொண்டு வந்திருந்தான்.
இவன் காதலை உணரவும், இவனைக் காதலிக்கவும், என்றைக்கும் இவன் நேரம் கொடுத்ததில்லை. இதுவரை ஒரு ஆசை வாரத்தைகள் இல்லை, அன்பான தொடுகை இல்லை, சீண்டல்களுடன் தான் இவன் தீண்டல்களே இவளை ஆக்கிரமித்திருக்க
“இப்படியெல்லாம் செஞ்சு என்னை உங்க பக்கம் திருப்ப வேணாம்.”
“ஏற்கனவே பிடிச்சு போய் தானே என்கூட சுத்திட்டு இருக்கே இன்னுமா உனக்கு தெரியல? தெளிவா தெரிய வைக்கவா?” என்றவன், என்ன செய்ய போகிறான் என ஏறிட்டு பார்க்கும் பொழுதே அவள் இதழை, தன்னோடு பொறுத்திருந்தான்.
அவளை உற்சாக மனநிலைக்கு மாற்றவென ஆரம்பித்த முற்றுகை, மூச்சுக்கும் முற்றுகை இடப்பட்டு விட, தவித்துப் போனாள் சிவனி. முதல் இதழ் ஒற்றல், தடுமாறியே பயணித்த அவளது மனநிலையை, உணர்வு பூர்வமான மயக்கத்திற்கு கொண்டு சென்றது.
விளையாட்டாய் ஆரம்பித்த பாண்டியனுக்கும் தாபத்தீயை ஏகத்துக்கும் ஏற்றி வைக்க, அவசரகோலத்தில் பிரிந்தவர்கள் ஒருவரையொருவர் ஏறிட்டு பார்த்திடாமலேயே தங்கள் அறைக்கு வந்தடைய, தப்பிக்கும் முயற்சியாக இருவரும் அடுத்தடுத்து குளியலறையில் தஞ்சம் அடைந்தனர்.
மிதமான வெளிச்சத்தில், இரவின் அத்தனை அமைதியையும் தழுவி இருந்த அந்த சொகுசு அறையில் ஏனோ இருவருக்கும் இருப்பு கொள்ளாமல், பால்கனியின் நிலவொளியில் லயித்திருந்தனர்.
புன்னகை பூத்த முகத்துடன் உறங்கச் செல்பவளுக்கு, மனதில் பல யோசனைகள் தோன்றி நின்றது. தன் மனம் அவனுடனான வாழ்வை ஏற்று, பயணிக்க ஆரம்பித்ததின் பிரதிபலிப்பு தான், சற்று நேரத்திற்கு முன் தான் மயங்கி நின்றாதோ என்ற கேள்வியை மனதோடு கேட்டுகொண்டே இருக்க, பின்னோடு வந்து நின்றவனின் முகம் பலவித ரசனைகளை தாங்கி நின்றது.
“என்ன யோசனை சிவும்மா?”
“ஹாங்… ஒண்ணுமில்ல…”
“சாரிடா! உன்னை நார்மலுக்கு கொண்டு வர நினைச்சு அப்படி பண்ணிட்டேன், தப்பா நினைக்காதடி”
“ம்ம்ம்…” என அமைதியே பதிலாக
“அப்படி ஒண்ணும் கஷ்டமா இல்லைதானே?” சீண்டலாய் கேட்டு வைக்க, இவளுக்கோ அந்த நிமிடத்தை நினைத்து சொல்ல முடியாத இன்ப உணர்வு ஆட்கொண்டது.
“என்னையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன்!” ஏக்கத்துடன் சொல்லியே, அவள் கைகளை தன் கைகளுக்குள் புதைத்துக் கொள்ள, அவனை ஏறிட்டு பார்த்தவள் கூச்சத்துடன் வேகமாய் விலகிக்செல்ல, இவன் அமைதியாய் அறையில் சென்று அமர்ந்து கொண்டான்.
இப்பொழுது ஏகத்திற்கும் இவள் மனது தவித்துப் போனது இவனை எப்படி சகஜநிலைக்கு திருப்புவது என யோசிக்க, தலையை சிலுப்பிக் கொண்டாள்.
‘இவரோட எல்லாத்தையும் என் மேல இறக்கி வச்சுட்டு, நிம்மதியா இருக்குறதே இவர் வேலையா போச்சு’ என புலம்பிக் கொண்டவள், அவனை சமாதானப் படுத்தவென அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.
“சாரி மாமா!”
“விடு பாப்பா! ரெண்டு பேரும் மாறிமாறி சாரி சொல்லிட்டு இருக்குறது நல்லா இல்ல!” பட்டும் படாமல் பேசி வைக்க, இவளுக்கோ முகம் சுருங்கிப் போனது. அதையும் தாங்கிக் கொள்ள முடியாதவனாய்
“என்கிட்ட என்ன பயம் சிவும்மா?”
“———-“
“நீ விலகிப் போறது, என் மேல நம்பிக்கை இல்லாத மாதிரியே நினைக்க தோணுதுடி” என ஆதங்கமாய் சொல்லி முடிக்க, இவளுக்கு தான் அனலாய் நெஞ்சம் தகித்தது.
தன் தயக்கத்தையும், மயக்கத்தையும் புரிந்து கொள்பவன் மேற்கொண்டு முன்னேறாமல், அவனை அடக்கி கொண்டு அமர்ந்திருப்பது அவளுக்கே பெரும் சங்கடமாய் போனது.
தான் சம்மதம் சொல்லாமல் பக்கத்தில் வர மாட்டான் என்பதை புரிந்தவள், தயங்காமல் அவன் தோள் சாய்ந்து, தன் கைகளை அவன் கழுத்தில் கோர்த்துக் கொள்ள, அதை உணர்ந்து கொண்டவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் அவனது மனதின் வேட்கை சொன்னதா? ‘எனது இந்த தவிப்புகள் எல்லாம் உன்னிடத்தில் மட்டுமே’ என்று சொன்னதா தெரியவில்லை
“பைத்தியமா என்னை சுத்த வைக்கிறடி!” என சொன்னவன் அவள் இதழை முற்றுகையிட, தனது ஆதரவாய் அவன் முதுகை அணைத்து அவன் செயலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.
சில நொடிகளில் மீண்டவர்கள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தே ரசித்ததில், உணர்வின் தாக்கத்தால் உடலெங்கும் புத்துணர்ச்சி பரவ, அதை மேலும் வேண்டும் என்றே இருவரின் உள்ளங்களும் எண்ணியதை, யார் முதலில் சொல்ல என்று தடுமாறும் வேளையில், மோகத்தில் திளைத்தவனின் கண்கள் அடுத்த செயலுக்கு அவளிடம் சம்மதத்தை வேண்ட, கூச்சமும், மயக்கமும் கொண்ட கண்களில் காதலை தேக்கியவள், தன் கண்களை மூடி சம்மதத்தை தெரிவித்தாள்.
அடுத்து நடந்த நிகழ்வுகளுக்கு இருவரின் வேட்கைகளும் பாலமாய் வழிகாட்டிட, ரத்த நாளங்களில் அதிவேக ஓட்டமும், அணுஅணுவாக ரகசியங்களை அறிந்திடும் உத்வேகமும் பிறக்க, இனிதாய் தங்கள் இளமைகளை அரங்கேற்றம் செய்து இதுவரை காணாத புது உணர்வை கண்டுகொண்ட அயர்ச்சியில் இருவரும் மயங்கிக் கிடந்தனர்.
இருவரது மௌனமான நேசக் குமிழிகளும் உடைந்து, ஒரு வகையான புரிதலில் இணைத்திருக்க, அந்த மாயாஜாலத்தை உண்டு பண்ணிய இரவிற்கு நன்றி சொல்லியே கொண்டாடி களித்தனர்.
வாய் வார்த்தைகளில் வெளியிடப்படாத காதல், காமத்தில் வெளிப்பட்டு விடும் மாயம் இது தானோ? புரிதல் இல்லாத நேசங்கள், பல சமயங்களில் காமத்தில் புரிந்து கொள்ளப்பட்டு விடும் தன்மையது. அத்தகைய காதல் இங்கே பரிமாறப்பட்டு, இருவரின் காதலையும் திடப்படுத்தியது.
“என்னை சீண்டிச் சீண்டியே, என்னோட மொத்தத்தையும் சுருட்டி வச்சுகிட்ட வருமாமா”
“அப்போ நீ கைய கட்டிட்டு வேடிக்கை பார்த்தியா சியாபாப்பா?”
“ஒரு சின்ன பொண்ண, கெட்ட பொண்ணா மாத்தி வச்சுட்டு சண்டைக்கு வர்றீங்க?” செல்லக்கோபம் கொண்டு விலகிட,
“இப்டி கோபப்பட்டு போனா திரும்பவும் மொதல்ல இருந்து ஆரம்பிப்பேன் சிவும்மா! ரெடியா நீ?” என்றே அவளை தன்மேல் இழுத்துப் போட்டுக் கொள்ள
“முரட்டு மாமா! கொஞ்சமாவது ஆசையா, அன்பா பேசத் தெரியுதா?
“அப்போ நேத்து நீ சொன்னதுக்கெல்லாம், உன்கிட்ட புலம்பித் தள்ளுனது யாரு?”
“இது எப்போ?”
“ஐயோ சிவும்மா! நீ இன்னும் வளரணும்டி தங்கம்”
“உளறாதே மாமா!”
“நேத்து நீ செஞ்சதெல்லாம் சொல்லவாடா?” என ஆரம்பித்தவனின் வாயை தன் கைகளால் பொத்தியவள்,
“ஃப்ராடுமாமா! சின்னப்பொண்ணுக்கு மை வச்சு, உன் காரியத்த சாதிச்சுட்ட!” வெட்கத்துடன் சிணுங்கிக்கொண்டே, செல்ல அடிகளை பரிசாய் கொடுத்து விட்டு விலகினாள்.
நாளும், பொழுதுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் யார் யாரை களவு கொண்டது என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தங்கள் புரிந்துணர்வை பரிமாறிக் கொண்டே, ஏக்கங்களையும், ஆசைகளையும் மொத்தமாய் தீர்த்துக் கொண்டனர்.
எந்நேரமும் சண்டைக்கோழிகளாய் இருந்தவர்களுக்கு, காதலை பகிர்ந்து கொள்ள நேரங்கள் போதவில்லை.
மூன்று நாட்கள் தங்குவது என்ற பாண்டியனின் எண்ணத்தில் மாற்றம் செய்யப்பட்டு, வாரமாகி, பத்து நாட்களில் மனமில்லாமல் பயணத்தை முடித்து வைத்து ஊருக்கு திரும்பி இருந்தனர்.
*********************************
மதுரை ரிங்ரோட்டில் உள்ள உணவு விடுதி ‘VS டிபன் சென்டர்’ என்ற பெயர் தாங்கி நிற்க, மேலே தகரம் வேயப்பட்டு, தற்காலிக உணவகமாக உருவாகி இருந்தது. சுமார் 1000 சதுர அடி பரப்பளவில், பிரதான சாலையில் அமைந்திருந்த அந்த உணவகத்தை சுற்றிப் பார்த்தபடி பாண்டியனும் சிவனியாவும் நின்றிருந்தனர். தனது வேலைக்கான விவரங்களை கேட்டு இவள் நச்சரிக்க, இங்கே கூட்டி கொண்டு வந்து நின்றான் பாண்டியன்.
“யார் இடம் மாமா? இன்னும் பில்டிங் பினிஷ் பண்ணல? அதுக்குள்ள வியாபாரத்தை ஆரம்பிச்சுட்டாங்க”
“இது எங்கம்மா மருமகளுக்கு கொடுத்த கிஃப்ட்” திடுக்கிட்டு திரும்பியவள்
“புரியல மாமா? விவரமா சொல்லுங்க”
“நான் ஹோட்டல் ஆரம்பிக்கும் போது, அம்மா நகை எல்லாத்தையும் வாங்கிட்டேன். அவங்க ‘என் மருமகளுக்கு நான் குடுக்கபோற சொத்து இது, கொஞ்சமும் குறையாம எனக்கு திருப்பிக் குடுக்கணும்’னு சொல்லியே குடுத்தாங்க!”
“நீங்க திருப்பி குடுக்கலையா?”
“நகை வாங்க பணமா தான் குடுத்து வச்சிருந்தேன், நீதான் எனக்குன்னு முடிவு பண்ணின பிறகு தான், அம்மாகிட்ட இருந்து திருப்பி வாங்கி இந்த இடத்துக்கு அட்வான்ஸ் குடுத்தேன்.”
“அப்போ மீதிக்கு என்ன செஞ்சீங்க?”
“எப்போவும் போல லோன் தான், வீட்டு லோனும், ஆட்டோ லோனும் முடியறதுக்கும், இங்கே டிபன் சென்டர் ஸ்டார்ட் பண்ணிட்டேன், இதுல வர்றத வச்சு லோன் கட்டிறேன். இன்னும் மூணு மாசத்துல அதையும் முடிச்சுரலாம்.”
“சுப்பர் மாமா! இங்கே நான் என்ன செய்யணும்?”
“இங்கே இப்போ உனக்கு வேலை இல்ல… இன்னும் ஒரு மாசத்துல பில்டிங் கட்ட ஸ்டார்ட் பண்ண போறேன், அதுக்கும் லோன் சாங்க்ஷன் ஆயிடுச்சு, த்ரீ ஸ்டார் ஹோட்டல், போர்டிங் அன் லாட்ஜிங் சேர்த்து மூணு மாடி கட்டப் போறோம். பில்டிங் முடிய எப்டியும் ஒன்றை வருஷம் ஆகும், அதுக்கு பிறகு தான், இந்த ஹோட்டல் நிர்வாகத்துக்கும், பில்டிங் லோனுக்கும் பொறுப்பெடுத்துகிட்டு உன் திறமைய காட்டனும்.”
“மாமா! இவ்ளோ பெரிய பொறுப்பு என்னால முடியுமா? பயமா இருக்கு”
“கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் இருக்குடா! அதுக்குள்ள நீ நிறைய தெரிஞ்சுக்கலாம். உன் பின்னாடி நான் இருக்கும் போது நீ எதுக்கும் தயங்காம வேலை பாக்கணும், உன்னோட ஐடியா எல்லாத்தையும் நடைமுறைப் படுத்தி பார்க்கலாம்.”
“நீங்க சொல்றது சரி தான், ஆனா அனுபவம் இல்லாம எப்படி செய்ய?”
“அதுக்கு தானே நீ படிச்சுருக்கே? இனி இத பத்தி இன்னும் ஜெனரலா தெரிஞ்சுக்கணும். எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்க அந்த நேரத்துல வந்து ஜாய்ன்ட் பண்ணுவாங்க. நிறைய வேலைகள் உனக்கு காத்துகிட்டு இருக்கு. நீ செய்ய ரெடின்னு சொன்னா நான் சொல்ல ரெடி”
“என்ன வேலை?”
“மார்னிங் இங்கே கொஞ்ச நேரம் வந்து உக்காரனும், பில்டிங் ஸ்டார்ட் பண்ணினாலும் வந்து கவனிச்சு உன்னோட ஐடியாஸ் சொல்லணும். நெக்ஸ்ட் கேட்டரிங் – சமையலை பாக்கணும்! நான் சொல்றது இங்கயும், நம்ம ஹோட்டலுக்கும் சேர்த்து ஃபுட் ஐட்டம்ஸ் ப்ரீஃபேர் பண்ணறது கவனி! ஈவினிங் இருக்குற அக்கௌன்ட்ஸ் எல்லாத்தையும் கொண்டு வந்து குடுக்குறேன் வரவு செலவு பார்த்து பழகு”
“இவ்ளோவும் தாங்குவேனா நான்? மொத்தமா செஞ்சதில்லையே மாமா?”
“சந்தேகம் வந்தா தீர்த்து வைக்க ஆள் இருக்காங்க… அக்கௌன்ட்ஸ் பாக்க ஆடிட்டர் கிட்ட ரெண்டு மாசம் போயிட்டு வா! உன்னோட தொழில் இதுன்னு மனசுல பதிய வை சிவும்மா! தன்னால செய்ய முடியும், எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லு, எந்த இடத்திலயும் தயக்கமே வரக்கூடாது.”
“ம்ம்ம்… நல்லாவே டீச் பண்றீங்க! இங்கே ரெசிடென்சி வொர்க்அவுட் ஆகுமா? ஏற்கனவே நிறைய இருக்கே?”
“இங்கேயிருந்து ஏர்போர்ட் 15கி.மீ. தான், அதே போல மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்ட்க்கும் ரொம்ப பக்கம், ஐஞ்சு நிமிச ட்ராவல் தான், நிறைய எதிர் பாக்கலாம். அதுக்கேத்த மாதிரி பிளான் பண்ணுவோம்”
“ஓகே மாமா! நானும் பிக்ஸ் ஆயிட்டேன், வொர்க் ஸ்டார்ட் பண்ணிடறேன்”
“என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டி கேக்குற கேக்குற பார்த்தியா! இது தான் உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது”
“சாய்ஸ் குடுக்காம சொன்னா என்ன பண்ண? அட்வான்ஸ் அத்தம்மா கிஃப்ட், மிச்சம் உங்க கிஃப்டா?”
“இது எங்க வீட்டுல வளந்த சின்ன பொண்ணுக்கு, இந்த மாமனோட சின்ன கிஃப்ட்”
“அப்போ உங்க வைஃப்க்கு என்ன பண்ண போறீங்க?”
“நான் எதுவும் செய்ய போறதில்ல, அவ தான் எனக்கு ஏதாவது பார்த்து செய்யணும்”
“அதுல குறையா உங்களுக்கு? நீ நினைக்கிறத தானே என்னை செய்ய வைக்கிறீங்க”
“ரெண்டு வருஷம், ரெண்டு ப்ராஜெக்ட் பினிஷ் பண்ணனும் சிவும்மா! தீயா வேலை பாக்கணும் நீ!”
“இந்த ஹோட்டல் ஒண்ணு, இன்னொன்னு என்ன?”
“அது நம்ம ப்ராஜெக்ட்… நீ கரக்டா என் பேச்ச கேட்டா, கூடிய சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடலாம்”
“உங்க பேச்ச கேக்கலன்னா, என்னை சும்மா விட்ருவீங்களா என்ன?”
“இல்லடா! இதுக்கு இன்னும் நீ மெனக்கெடனும், அப்போதான் நம்ம ஜூனியர சீக்கிரம் ரிலீஸ் பண்ண முடியும்”
“சீரியஸா பேசும் போது, நெனப்பு போகுது பாரு! நானும் ரொம்ப சின்சியரா கேட்டுட்டுத் தொலையுறேன்!”
“நீ இன்னும் வளரணும்னு சொல்றது இதுக்குத்தான் பாப்பா!”
“ஷ்ஷ்ஷ்… பாப்பா சொல்லாதீங்க மாமா!” என சிணுங்கியவள், “எப்போ ஸ்டார்ட் பண்ணீங்க இந்த ப்ராஜெக்ட்?”
“நம்ம கல்யாணம் முடிச்ச ஒரு மாசத்துல அட்வான்ஸ் போட்டு, இப்போ உன்பேர்ல ரெஜிஸ்டர் பண்ணியாச்சு”
“ஏன் மாமா? அத்தம்மா பேர்ல வாங்கி இருக்கலாமே”
“அம்மாவோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர், இனிமே எது செஞ்சாலும் மருமக பேர்ல தான் செய்யணுமாம்”
“எதுக்கு இந்த கண்டிஷன்?”
“நீ வந்த பிறகு தான் எங்க வீட்டுல சுக்கிரன் எட்டிபார்த்து, கூரையில கொஞ்சம் ஓட்டை போட்டு குடுக்க ஆரம்பிச்சானாம், அந்த ஓட்டையும் உடைச்சு, எல்லாத்தையும் கொட்டணும்னா உன் பேர்ல இருந்தா தான் நடக்குமாம் சிவு!” சிரிக்காமல் சொல்லி வைக்க
“இதென்ன ஓவர் சென்டிமெண்ட்? நான் உங்கள கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா என்ன செஞ்சுருப்பீங்க?”
“அப்போவும் உன்னை விட்ருக்க மாட்டாங்க! உனக்கு குடுக்கணும்னே, நாலு வருசத்துக்கு முன்னாடி கள்ளந்திரியில அம்மா இடம் வாங்கி போட்டுட்டாங்க, அதோட மதிப்பு இப்போ நல்லா ஏறிப் போச்சு, கொஞ்ச நாள் போகட்டும் அதுக்கு வேற வழி பண்ணுவோம்”
“இன்னும் எனக்கு தெரியாதது என்னென்னே இருக்கு மாமா? இப்டி எல்லாத்தையும் மொத்தமா சொல்லி எனக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கிறீங்க! இதுக்கு மேல எதுவும் சொல்லாதீங்க தாங்காது எனக்கு”
“சரி சிவு! கொஞ்சம் ஸ்டடி பண்ணிட்டு, உன்னோட வேலைய ஆரம்பிக்கப் பாரு”
“எது செஞ்சாலும் என்கிட்டே சொல்லிட்டு செய்ங்க மாமா! இப்படி ஹோட்டல் கட்டபோறேன்னு சொல்லி என்னை படிக்க அனுப்பி இருந்தா இன்னும் நல்லா கவனமா படிச்சிருப்பேன்”
“ஏன் வேண்டா வெறுப்பா படிச்சியா என்ன? அப்படித் தெரியலயே உன்னோட ரிப்போர்ட்ஸ் பார்த்தா?”
“இல்ல… அப்போ இருந்த மன கஷ்டம், கோபம் எல்லாம் குறைஞ்சிருக்குமே?”
“அப்போ சொல்லியிருந்தா என் மேல கோபம் போயிருக்காது, இதுக்கு தான் படிக்க வைக்கிறாங்கன்னு புதுசா இன்னொரு கோபமும் உனக்கு சேர்ந்திருக்கும்.”
“எல்லாத்துக்கும் உங்ககிட்ட பதில் இருக்கு வருமாமா! உங்க முன்னாடி எப்போவும் நான் ஊமை தான்”
“நம்பிட்டேன் வாயாடி!”
இனி தொழிலிலும் இருவரும் இணைந்தே பயணிக்க இனிதாய் ஆரம்பமானது.