6
ஜெயா அப்படியே ஷாக்கடித்த உணர்வில் நின்றுவிட, வாகனத்திலிருந்து இறங்கி வந்த சாரங்கபாணி அவளெதிரே வந்து நின்றார்.
“என்ன? நீ இன்னும் கிளம்பல” என்று ஜெயாவை பார்த்து கேட்டு கொண்டே அவள் அருகில் வரவும் குப்பென்று வீசிய போதை நெடி அவளுக்கு குமட்டியது.
‘சை’ என்று அவரை பாராமல் முகம் சுளித்தாள். இந்த அனுபவம் ஒன்றும் அவளுக்கு முதல்முறை இல்லைதான். எனினும் aதாங்க முடியாமல் அவள் உள்ளம் குமுறியது.
இலட்சியத்தோடும் கொள்கையோடும் இந்த சீருடையை அணிந்து கொண்டு தன் உயிரையே பணயம் வைத்து வேலை செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை போன்ற சில விஷக்கிருமிகளால் இந்த ஒட்டுமொத்த காவல் துறையே கறை படிந்ததாக மாறிவிடுகிறது
சாரங்கபாணி அவள் எண்ணம் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படவில்லை.
வன்மமான புன்னகையோடு அவளிடம், “அந்த பொண்ணு உள்ளேதானே இருக்கு” என்று கேட்டார்.
ஜெயாவிற்கு பற்றி கொண்டு வந்தது.
‘என்ன மாதிரி மனுஷன் இவன் எல்லாம்’ என்று அருவருக்க தோன்றியது. முதலில் இவர்களை எல்லாம் என்கவுன்ட்டர் செய்தால்தான் இந்த நாடு உருப்படும் என்று எண்ணமிட்டவளுக்கு அந்த நொடி சரவணன் உள்ளே சென்றிருப்பதை எண்ணி பீதியானது.
ஜெயாவின் மௌனத்தை ஆழ்ந்து பார்த்த சாரங்கபாணி, “வாயில என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்க… பதில் சொல்லு” என்று கேட்க,
“இல்ல சார்… அந்த பொண்ணு நம்ம கஸ்டடில இருக்கு… எதாச்சும் பிரச்சனைன்னா” என்று சுற்றி வளைத்து அவர் எண்ணுவது தவறென்று சொல்ல,
“உன்கிட்ட நான் என்ன கேட்டேன்… நீ என்ன சொல்லிட்டு இருக்க” என்று எரிச்சலாக அவளை முறைத்தவர்,
“ஆமா… நீ கிளம்பிட்ட இல்ல… ஒழுங்கா போய் வீட்டில சேரு” என்று அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளை கடந்து சென்றார்.
ஜெயாவிற்கு அவரை எப்படியாவது தடுக்க வேண்டுமே என்ற பரபரப்பு உணர்வு தொற்றி கொள்ள, “சார்” என்று வேகமாக அவரை வழிமறித்து நின்றாள்.
“என்ன?” என்றவர் படுகேவலமாக அவளை ஒரு பார்வை பார்த்தார்.
“அது ஒரு கேஸ் விஷயமா பேசணும்” என்றதும் அவளை ஏறஇறங்க பார்த்துவிட்டு,
“அதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்… என்னை கடுப்பேத்தாம கிளம்புறியா” என்றார்.
ஜெயாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் தான் வீட்டிற்கு போகிறேன் என்று சொல்லும் போதெல்லாம் ஏதேனும் வேலை கொடுத்து தாமதப்படுத்துபவர் இப்போது அவளை துரத்துவதிலேயே கண்ணாக இருந்தார்.
எல்லாமே இந்துமதிக்காக. தேன் குடித்த நரி போல் அவளை பார்த்த மாத்திரத்திலிருந்து அவர் பார்வையும் சிந்தனையும் அவளை சுற்றி கொண்டிருந்தது.
‘இன்னைக்கு ஸ்டேஷன்ல ஏதோ விபரீதமா நடக்க போகுது… இப்பன்னு பார்த்து அந்த பொண்ணோட புருஷனை நான் உள்ளே அனுப்பி தொலைவேனா… என்ன நேரமோ’ என்று ஜெயா மனம் திக்திக் உணர்வோடு அடித்து கொள்ள, கிட்டத்தட்ட சாரங்கபாணி அப்போது உள்ளே சென்றுவிட்டிருந்தார்.
ஜெயா இயலாமையோடு பார்த்திருந்தாள். அவளால் வேறென்ன செய்ய முடியும். எல்லாம் அவள் கையை மீறி போய்விட்டது.
சரவணனை உள்ளே அழைத்து வந்த அந்த கான்ஸ்டபிள், “சீக்கிரம் பேசிட்டு வந்திருங்க” என்று சொல்ல, விரக்தி நிலையில் தரையை பார்த்தபடி அந்த மரபெஞ்சில் அமர்ந்திருந்த இந்துமதி நிமிர்ந்து பார்த்தாள்.
ஆனால் அவளிடம் எந்தவித ஆர்வமும் இல்லை. தேடலும் இல்லை. யாரோ வந்திருக்கிறார்கள் என்று ஒருவித அலட்சிய நிலையோடு நிமிர்ந்தவள் எதிரே தன் கணவனை பார்த்து திகைப்பிலாழ்ந்தாள்.
நொடிக்கும் குறைவாக அந்த திகைப்பு உணர்விலிருந்து தன்னை மீட்டு கொண்டவள், “மாமா” என்று அவனை இறுக அணைத்து கொண்டு கதறி அழுதாள். அவன் எதிர்பாராமல் அங்கே வந்து நின்றதில் அவள் மனம் நெகிழ்ந்து போனாள்.
உயரமான சிகரத்திலிருந்து தவறி விழும் ஒருவனுக்கு தன்னை காப்பாற்றி கொள்ள பற்றுகோல் கிடைத்தால் எப்படி அதை இறுக்கமாக பற்றி கொள்வானோ அப்படிதான் இருந்தது அவள் அணைப்பு!
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதுநாள் வரை தன் மூச்சு காற்று கூட அவளை தீண்டிவிடாத வண்ணம் விலகி விலகி செல்பவள், இன்று இத்தனை நெருக்கமாக தன்னை அணைத்து கொள்கிறாள் எனில் எந்தளவு அந்த சூழ்நிலையும் இடமும் அவளை பயப்படுத்தியிருக்கும் என்பதை அவனால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.
“மாமா” என்று விடாமல் அழுது கண்ணீரில் கரைந்தாள். இந்த சில மணிநேர நேரங்களில் வாழ்க்கை அவளுக்கு நிறைய மோசமான பாடங்களை கற்பித்துவிட்டது.
நம்பிக்கையற்று போய் வாழ்வே சூன்யமாகி போன நிலையில் அமர்ந்திருந்தவளுக்கு அவன் வருகை ஒரு பெரும் நம்பிக்கை சுடராக ஒளிர, அவள் மனதில் மண்டியிருந்த காரிருள் எங்கோ தூரமாக விலகி ஓடி போனது.
மழையில் நனைத்திருந்த அவன் சட்டையை அவள் தன் கண்ணீரால் இன்னும் இன்னும் நனைத்து கொண்டிருந்தாள்.
‘நீயே என்னுடைய எல்லாம்’ என்று மொத்தமாக அவனிடம் சரணா கெதி அடைந்துவிட்ட அவளுக்கு அந்த நொடி இந்த உலகிலே வேறெதுவும் வேண்டாமென்று தோன்றியது.
அவனால் பேச முடியாமல் போகலாம். ஆனால் தனக்காக அவன் வந்திருக்கிறான் என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. வாழ்க்கையில் அதைவிடவும் வேறென்ன வேண்டும்!
ஆனால் சரவணன் மனமோ அந்த நொடி குமுறி கொண்டிருந்தது. ‘நான் இருக்கேன் உனக்கு… அழாதே மதி’ என்ற அவன் மனக்குரலை அவளிடம் வாரத்தைகளாக சேர்க்க முடியவில்லையே என்ற வேதனையில் தவித்து கொண்டிருந்தது.
இந்த உலகின் மொழிகள் அனைத்தும் கூட அவனின் அந்த ஆழமான வலியை விவரிக்க முடியாது. தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லி தேற்ற முடியாத தன் குறையை எண்ணி எண்ணி உள்ளுர துடித்து கொண்டிருந்தான்.
இந்துமதி அப்போது தன் அழுகையை நிறுத்திவிட்டு,
“மாமா என்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிடுங்க மாமா… ப்ளீஸ் மாமா” என்று அவன் முகம் பார்த்து கெஞ்சினாள்.
அவன் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் அழுது அழுது சிவந்த அந்த விழிகளை வேதனையோடு பார்த்திருந்தான்.
அப்போது பார்த்து உள்ளே வந்த சாரங்கபாணி முதலில் லேசாக அதிர்ச்சியடைந்தாலும் பின் ஒருவாறு நடப்பதை புரிந்து கொண்டு,
“இதென்ன போலிஸ் ஸ்டேஷனா இல்ல லவர்ஸ் பார்க்கா” என்று கேலி தொனியில் கேட்டு நாராசமாக சிரித்துவைத்தார்.
இருவரும் அந்த திடீர் அதிர்ச்சியில் முகம் வெளிறி போக, சரவணன் அந்த நொடி இந்துவை விட்டு விலகி நிற்க பார்த்தான். ஆனால் அவளோ இன்னும் நெருக்கமாக அவன் சட்டையை கொத்தாக பிடித்தபடி நின்றிருந்தாள்.
“என்னை விட்டு போயிடாதீங்க மாமா” என்று அவள் மெலிதாக அவனுக்கு மட்டும் கேட்குமாறு பயத்தோடு சொல்ல,
சாரங்கபாணி அந்த அறையிலிருந்த மேஜை மீது ஏறி அமர்ந்து கொண்டு, “இவன்தான் உன் மளிகை கடை புருஷனா?” என்று இளக்காரமாக கேட்டார். அவளோ அவர் முகத்தை கூட பார்க்க சகியாமல் சரவணன் மார்பில் ஒண்டி கொண்டிருந்தாள்.
சாரங்கபாணி முகம் கறுத்து போனது. சிகரட்டை எடுத்து பற்ற வைத்து கொண்டே, “ஜெயா” என்று சத்தமாக அழைத்தார். அவள் அந்த நொடியே வேகமாக அந்த அறை வாசலில் வந்து நிற்க சாரங்கபாணி கடுப்போடு, “இவனை நீதான் உள்ளே விட்டியா?” என்று கேட்க, அவள் பதிலேதும் சொல்லாமல் தலை கவிழ்ந்து கொண்டாள். அதேநேரம் சரவணனை பார்த்து, “கிளம்புங்க” என்று ஜாடை மாடாக சொன்னாள்.
ஆனால் இந்துமதி அவளை விட்டால்தானே அவன் போவதற்கு. அவன் அசையாமல் மனைவியை தவிப்போடு பார்த்திருக்க,
“அதான் பொண்டாட்டியை பார்த்தாச்சு இல்ல… கிளம்பு” என்று காரமாக வந்தது சாரங்கபாணியின் குரல்!
சரவணன் தன் மனைவியை தவிப்போடு பார்க்க அவள் விழிகளோ போக வேண்டாமென செய்தியை தாங்கி நின்றது.
“கிளம்புங்க” என்று ஜெயாவும் சொல்ல, “போயிடாதீங்க மாமா” என்ற இந்துமதியின் கண்களில் நீர் தாரை தரையாக வழிந்தது.
இந்த பற்றுகோலை மட்டும் தான் விட்டுவிட்டால் அதோடு தன் வாழ்க்கையே முடிந்துவிடும் என்ற பரிதவிப்பான நிலையிலிருந்தாள் அவள்.
மீண்டும் அவளை ஏதோ ஒரு பயங்கரமான காரிருள் உள்ளிழுத்து கொள்வதை போல உணர்ந்தவள் அவளின் ஒரே நம்பிக்கையை விட்டு கொடுக்க தயாராக இல்லை.
அதவும் சாரங்கபாணியின் முகத்தை பார்க்கவே அவளுக்கு பயங்கரமாக இருந்தது. உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அருவருப்பு உணர்வு தொற்றி கொண்டது.
சரவணனோ அவள் பிடிப்பை விலக்கிவிட முடியாத இக்கட்டான நிலைமையிலிருந்தான். இந்துமதியின் கண்ணீர் அவனை இம்மியளவு கூட அங்கிருந்து நகரவிடமால் கட்டி போட்டது.
அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த சாரங்கபாணியின் மூளை சூடேறியது.
“என்னடி… பசை மாதிரி ஓட்டிட்டு இருக்க… சீ கையை எடு” என்று அவர் சொன்ன மறுகணமே இந்துமதி அவமானத்தில் துடித்து போனாள். அவள் கைகள் தானாக அவன் சட்டையின் மீது தளர்ந்த நொடி சரவணின் கரங்கள் அவளை அழுத்தமாக அணைத்து கொண்டன.
அத்தனை நேரம் அவளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளை தேடி கொண்டிருந்தவன் திடமாக அவள் விழிகளுக்குள் பார்த்தான். ‘நான் இருக்கிறேன்’ என்று.
அந்த ஒரு பார்வையில் அவள் மனம் லேசாக அமைதியுற, அதேநேரம் அவன் நிமிர்ந்து சாரங்கபாணியை உஷ்ணப் பார்வை பார்த்தான். அவள் மீது அவர் வீசிய மரியாதையற்ற வார்த்தைகள் தவறென்று கண்டிக்கும் நோக்கத்தில்.
சாரங்கபாணி எள்ளலாக சிரித்து கொண்டே அவர்கள் இருவரையும் நெருங்கி வந்தவர், “எவன் கூடவோ ஓடி போக பார்த்தவளுக்காகவா இவ்வளவு சீன்? விட்டுட்டு போவியா அந்த ****” என்று ரொம்பவும் இழிவான வார்த்தையில் அவர் இந்துமதியை நிந்திக்க, சரவணன் சீற்றமானான்.
யாரிடமும் இதுவரை கோபப்படாதவன் அன்று தன் வாழ்க்கையில் முதல் முறையாக கோபம் கொண்டான்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல சரவணன் சாரங்கபாணியை சீற்றமாக தாக்கிவிட, போதை நிலையிலிருந்தவர் அவனின் அந்த ஒற்றை தாக்குதலுக்கே நிலைதடுமாறி விழுந்தார். மலை போன்ற அவரின் உருவம் சரிந்ததில் ஏற்பட்ட பெரிய சத்தத்தில் அனைத்து காவலர்களும் அங்கே கூடிவிட்டனர்.
அத்தனை நேரம் அந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் குழம்பி கொண்டிருந்த ஜெயா நடந்த நிகழ்வை பார்த்து அப்படியே தலையில் கை வைத்து கொண்டாள்.
யாரையும் முறைத்து கூட பார்த்திராத தன் கணவனா இது என்று இந்துமதி வியப்படங்காமல் நிற்க, சரவணன் பார்வையில் அந்த சீற்றம் கொஞ்சமும் அடங்கவில்லை.
தன் வாழ்நாளில் எத்தனை எத்தனையோ அவமானங்களை அவன் கடந்து வந்த போதும் அதெல்லாம் அவன் ஒரு பெரிய விஷயமாக கருதியதே கிடையாது. தேவையில்லாமல் கோப உணர்ச்சிக்கு அவன் ஆட்பட்டதும் கிடையாது.
ஆனால் இன்று நடந்தது அப்படி இல்லையே. தன் மனைவியை உயிராக நேசிக்கும் அவனால் எப்படி அத்தகைய கேவலமான வார்த்தை தாக்குதல்களை தாங்கி கொள்ள முடியும்.
கரையை கடந்து பொங்கும் கடல் போல அவன் பொறுமையும் அந்த நொடி தம் கரைகளை கடந்திருந்தது. ஆனால் அதனால் ஏற்பட போகும் மோசமான எதிர்வினைகளை பற்றி அவன் யோசித்திருக்கவில்லை.
எதிரே நின்ற சாரங்கபாணியை அடித்து தள்ளிவிட்டான். அங்கிருந்த காவலாளிகள் அவரை கை கொடுத்து தூக்கிவிட்டனர்.
சாரங்கபாணி எழுந்த மறுகணம் சரவணன் சட்டை காலரை கொத்தாக பிடித்து தரதரவென வெளியே இழுத்து கொண்டு செல்ல இந்துமதி பதறி போனாள்.
“அவரை விட்டுடுங்க” என்று கதறி பின்னே செல்ல பார்த்தவளை ஒரு பெண் கான்ஸ்டபிள் தடுத்து பிடித்து கொள்ள,
“ஐயோ! அவரை விட்டுடுங்க” என்று கண்ணீர் விட்டு கதறினாள். அவள் கெஞ்சலையோ கதறலையோ யாரும் கேட்கவில்லை.
சாரங்கபாணிக்கு வெறி பிடித்துபோனது. இரண்டு பெண்கள் முன்னிலையில் அவன் தன்னை தாக்கிவிட்டதை எண்ணி அவர் உள்ளம் எரிமலையாக தகித்தது.
உடனடியாக அங்கிருந்த காவலாளிகளுக்கு உத்தரவுகள் பறந்தன. சரவணனை மாட்டை விடவும் மோசமாக அடித்து காயப்படுத்தினர்.
ஜெயா அந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் விக்கித்து போய் அந்த அறையிலேயே தேங்கி நின்றாள்.
இந்துமதி அப்போது அந்த பெண் கான்ஸ்டபிள் பிடியிலிருந்து திமிறி கொண்டு வந்து ஜெயாவின் கால்களை பற்றியவள்,
“ப்ளீஸ் அவரை விட்டுட சொல்லுங்க மேடம்… ப்ளீஸ் மேடம்… யாருக்கும் மனசால கூட கெடுதல் நினைக்க தெரியாது மேடம் அவருக்கு” என்று அவளிடம் அழுது மன்றாடினாள்.
ஜெயா அவளை இயலாமையோடு பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் நகர்ந்துவிட, இந்துமதியின் அழுகையும் கதறலும் அந்த காவல் நிலையம் முழுக்க எதிரொலித்தது.
நேராக ஜெயா சாரங்கபாணியிடம் வந்து நிற்க அவர்களோ சரவணனை மனிதத்தன்மையே இல்லாமல் அடித்து கொண்டிருந்தனர். கொஞ்சம் விட்டால் அவனை கொன்றே விடுவார்கள் என்று தோன்றியது.
எல்லாமே தன்னால்தான். அவனை தான் உள்ளே விட்டதால்தான் என்று குற்றவுணர்வில் தவித்தவள், “சார்… அவனை விட்டுடுங்க… அவனுக்கு எதாச்சும் ஆகி தொலைஞ்சுதுன்னா நமக்குதான் கஷ்டம்” என்று படபடப்போடு சொல்ல,
“சாகட்டுமே… என்ன கெட்டு போச்சு” என்று அவன் நெஞ்சின் மீது பூட்ஸ் கால்களால் மிதித்து கொண்டிருந்தார் சாரங்கபாணி. சத்தம் போட்டு அழ கூட முடியாதவன் அந்த நொடி வலியால் துடித்து கொண்டிருந்ததை பார்க்க உயிரே போனது அவளுக்கு.
ஜெயா எப்படியாவது அவர்களை தடுக்க வேண்டுமே என்றெண்ணி, “சார்… அந்த மதுபாலா ரொம்ப விவாகரமான பொண்ணு… அதுவும் அவ இவனுக்கு தெரிஞ்சவ போல… அவளுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா” என்று சொன்ன நொடி சாரங்கபாணியின் வெறி அடங்கியது.
அவளை நிதானித்து பார்த்தவர் காவலாளிகளிடம் அடிப்பதை நிறுத்த சொல்லி கை காட்டினார்.
ஜெயாவிற்கு அப்போதுதான் மூச்சே வந்தது.
“மது… பாலா” என்று அவள் பெயரை தனக்குள்ளாக உச்சரித்து கொண்டவர் முகத்தில் முன்பை விடவும் கோபம் உக்கிரமாக தாண்டவமாடியது.
சாரங்கபாணியின் மௌனத்தை தனக்கு சாதகமாக்கி கொண்ட ஜெயா அவரிடம், “இப்போ இவனை விடலன்னா இந்த கேஸ் தேவையில்லாம பெருசாகும்… அப்புறம் நமக்குதான் சிக்கல்” என்றாள்.
“ஹ்ம்ம்” என்றவர் அடிப்பட்டு கிடந்த சரவணனை பார்த்து, “இவனை தூக்கி வெளியே போடுங்க” என்று சொல்லிவிட்டு வேகமாக தன்னறைக்குள் சென்றுவிட்டார்.
சரவணன் குருதி குளத்தில் மிதந்து கொண்டிருந்தான். இன்னும் உயிர் மட்டும்தான் அவனிடம் மிச்சமிருக்கிறது. இந்த கலியுகத்தில் பதவி என்பது பணம் படைத்தவனுக்கு மட்டும்தான். அடித்தட்டு மக்கள் எல்லாம் இவர்கள் அதிகாரத்தில் இப்படி அடி வாங்கி சாக வேண்டியதுதான்.
ஜெயா சரவணனை இரக்கத்தோடு பார்த்துவிட்டு அருகே நின்ற கான்ஸ்டபிளிடம், “ஆட்டோ பிடிச்சு கொஞ்சம் ஹாஸ்பெட்டில சேர்த்துட்டு வந்திருங்க” என்று தன் கை பையிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்தாள்.
“இல்ல ம்மா… சாருக்கு தெரிஞ்சா” என்று அந்த கான்ஸ்டபிள் தயங்க,
“நான் சமாளிச்சிக்கிறேன்… நீங்க போங்க” என்று அவர்களை அனுப்பிவைத்தாள்.
சாரங்கபாணி தன்னறைக்குள் அடிப்பட்ட சிங்கம் போல நடந்து கொண்டிருந்தார். ஜெயா வாசலில் போய் நிற்க அவளை எரித்துவிடுமளவுக்கு பார்த்தவர்,
“உன்னை யார் அவனை உள்ளே விட சொன்னது” என்று வெறிபிடித்தது போல் கத்தினார்.
“இல்ல சார்… பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு” என்றவள் தன் தலை தாழ்ந்தபடி சொல்ல,
“பாவம் பார்த்தியா?” என்று அவளை இளக்காரமாகப் பார்த்தவர்,
“நீயெல்லாம் எதுக்கு போலிஸ் வேலைக்கு வந்த… வீட்டில புருஷனுக்கு சமைச்சிட்டு போட்டுட்டு… புள்ளைங்களுக்கு பாடம் எடுத்துட்டு கிடக்க வேண்டியதுதானே… சை” என்று அவளை முடிந்தளவு அவமானப்படுத்தினார்.
ஜெயா பதிலேதும் சொல்லாமல் மௌனமாக நின்றாள். அவளை மனதார அவர் திட்டி தீர்த்த பின், “ஆமா அந்த மது பாலா… என்ன சொன்னா?” என்று கேட்க, ஜெயா அவள் வந்த பின் நடந்தவற்றை விவரமாக உரைத்தாள்.
“அது சரி… இந்த மளிகை கடைகாரனுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சாரங்கபாணி குழப்பமாக கேட்க,
“தெரியல சார்… ஆனா அந்த மதுபாலா பேசுனதை பார்த்தா அந்த பொண்ணோட புருஷன் அவளுக்கு நல்லா தெரிஞ்சவன்னுதான் தோணுது” என்றாள்.
“அப்போ அந்த மதுபாலா இந்த கேஸ்ல இன்வால்வ் ஆவாங்கிற” என்றவர் யோசனையாக தாடையை தடவி கொண்டே கேட்க,
“கண்டிப்பா” என்றாள் ஜெயா!
தன்னிருக்கையில் வந்த அமர்ந்த சாரங்கபாணி, “அப்போ நான் சொல்ற மாதிரி சார்ஜ் ஷீட் போடு” என்று அவர் இந்துமதி மீது போடும் குற்றப்பத்திரிகையை குறித்து விலாவாரியாக விளக்கினார்.
ஜெயா ஸ்தம்பித்து போனாள். இந்துமதி குற்றவாளி இல்லை என்று நன்றாக தெரிந்த பிறகும் அவளை பலிக்கடாவாக மாற்ற வேண்டுமென்று இவர்கள் தீர்மானமாக முடிவெடுத்துவிட்டார்கள். ஆனால் அது இப்படி ஒரு கேவலமான பழியை சுமத்திதான் செய்ய வேண்டுமா? மனம் வலித்தது அவளுக்கு!
சாரங்கபாணி அப்போது, “நான் சொல்ற மாதிரி செய்… அவ புருஷன் அசிங்கப்பட்டு போகணும்… அவமானத்தில அவன் தூக்கில தொங்கணும்” என்றார்.
‘சை இவனெல்லாம் மனித ஜென்மம்தானா? இப்படி செய்து பழி தீர்த்து கொல்வதற்கு பதிலாக அவனை அடித்தே கொன்றிருக்கலாமே’ என்ற எண்ணம் தோன்றியது அவளுக்கு!
சாரங்கபாணியின் வஞ்சகமான எண்ணத்திற்கு பின்னணியில் வேறொரு காரணமும் இருந்தது.
‘மதுபாலா… நீ என் கண்ணில திரும்ப பட்டுட்டா இல்ல… இத்தோட செத்தடி மவளே’ என்று உள்ளுர பொறுமி கொண்டிருந்தார்.
தனக்கு தெரியாமலே இப்படியொரு மோசமான பகையாளியை சம்பாதித்து வைத்திருக்கிறோம் என்று அறியாத மது ஜன்னல் வழியாக மிதமாக தூறல்கள் சிந்தும் அந்த வானத்தை பார்த்து கொண்டிருந்தாள்.
மழை கொஞ்சம் அடங்கி அந்த இரவு ஓர் ஆழமான அமைதிக்குள் அமிழ்ந்து கொண்டிருந்தது. அஜய் தன் மனைவி தூங்கிவிட்டதாக எண்ணி அப்போதுதான் புறப்பட்டு போனான்.
அதோடு அழுத்தி அழுத்தி ஒருமுறைக்கு இருமுறை அவள் பெற்றோரிடம், “மதுவை பத்திரமா பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு!
ஆனால் அவள் மனம் உறக்கத்தில் ஆழவில்லை. சரவணனை பற்றிய கவலை அவளை உறங்கவிடவில்லை. எந்த சூழ்நிலையிலும் உன்னோடு நான் எப்போதும் இருப்பேன் என்று சரவணனுக்கு தான் செய்த கொடுத்த சங்கல்பத்தை காப்பற்ற முடியாமல் போகுமோ? என்று வருந்தினாள்.
அவர்கள் நட்பு மற்ற நண்பர்களை போல் பார்த்து பேசி பழகி உருவானதல்லவே! அது உணர்வின் பால் உருவானது அவர்களுக்கு மட்டுமே அதன் ஆழம் புரியும்.