Kumizhi-18

நேசம் – 18

விக்ரம் – அபர்ணா திருமணப் பத்திரிக்கையை பார்த்த சிவனியாவிற்கு, என்னவென்று சொல்லத் தெரியாத இறுக்கம் மனதில் வந்துவிட, அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் 

“உங்களுக்கு இவங்கள தெரியுமா? எப்டி இதெல்லாம்?” அதிர்ச்சி விலகாமல் பாண்டியனிடம் கேட்டு வைத்தாள்.

“உன்கிட்ட நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டு வந்த ஒரு வாரம் கழிச்சு, விக்ரம், அவங்க அப்பா, அபர்ணா அப்பாவ கூட்டிட்டு என்னை பாக்க வந்தான்”

“ரெண்டு பேர் அப்பாவும் வந்தாங்களா? ஏதும் பிரச்சனையா மாமா?”

“அபர்ணா காணாம போயிருந்தா… சிவும்மா!”

“எப்போ?”

“அன்னைக்கு நைட் பஸ் ஸ்டாண்ட்ல நடந்த பிரச்சனைக்கு பிறகு விக்ரம், அவகிட்ட கோபப்பட்டு, அவள பாக்காம கூட போயிட்டான், இந்த பொண்ணும் அவங்க வீட்டுக்கு போகல!”

“எங்கே போனாளாம்?”

“இவங்க லவ் மேட்டர் தெரிஞ்சு, இவ விக்ரம் கூடத்தான் போயிருப்பா! எப்டியும் நம்மை பாக்க வருவா! அப்போ பேசுவோம்னு அபர்ணா அப்பா அப்டியே விட்டுட்டார்.”

“——“

“ஆனா இருபது நாள் கழிச்சும் வரல! இவருக்கும் பொண்ணு பத்தின விவரம் தெரிஞ்சுக்காம, அவள பாக்காம இருக்க முடியல! எப்டியும் அவ சந்தோஷமா இருந்தா போதும்ன்னு விக்ரம் வீட்டுக்கு பாக்க போயிருக்கார். அப்போ தான் விக்ரம் அங்கேயே அபர்ணாவ விட்டுட்டு வந்த விவரத்த சொல்ல, ரொம்ப பிரச்சனை ஆகிடுச்சு”

“——–“

“’என் பொண்ணு செஞ்சது தப்பு, உனக்கு அவமானம்ன்னு சொல்ற, நீ செஞ்சது மட்டும் சரியா? உன்ன நம்பி வந்த பொண்ண, அவ வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டு அப்புறம் நீ விலகிப் போயிருக்கலாம்’ன்னுஅபர்ணா அப்பா சத்தம் போடவும் தான், விக்ரம் அப்பாவுக்கும் இவங்க செஞ்ச காரியம் தெரிஞ்சு போய், எல்லோரும் சேர்ந்து அபர்ணாவ தேடி இருக்காங்க!”

“எங்கே கிடைச்சா அவ?”

“அவங்க ஊர்ல கிடைக்கலன்னதும், இங்கே தேடி பாப்போம்னு, என்னைப் பாக்க வந்தாங்க”

“அவங்கள பத்தி உங்களுக்கு தெரியுமா?”

“அப்போ தான் எனக்கும் அவங்க விவரம் தெரியும் சிவு!, அந்த நேரம் வரைக்கும் எனக்கு உன்ன பத்தின நினைப்பு மட்டுந்தான். உன்மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சதும், என்ன ஏதுன்னு அடுத்த நாள் நான் போய் கேட்டிருக்கணும், அப்போ இருந்த டென்ஷன்ல அத நான் மறந்தே போயிட்டேன். விக்ரம் அட்ரஸ், வேலுகிட்ட இருந்தும் எதுவும் கேட்டு வைக்க தோணல”

“———“

“நடந்ததெல்லாம் சொன்னதும் அபர்ணா அப்பா, உனக்காக ரொம்பவே வருத்தப்பட்டார். அதுக்கும் மேல என்கிட்ட கோபப்பட்டார். தப்பு செஞ்ச பொண்ணா இருந்தாலும், அவ என் பொண்ணு தான், அவ்வளவு லேசில எப்டி அவள விட முடியும்ன்னு தவிப்போட பேசுறப்போ, ஒரு தகப்பனோட வலி அவர் கண்ணுக்குள்ள பார்த்துட்டேன்! என்னோட ஆத்திரம், அவசரம், கோபம் எல்லாமே இப்டி ரெண்டு பொண்ணுகளை சிதற வைச்சு வேடிக்கை பாக்கும்ன்னு நினைக்கவே இல்லடா!” என குற்ற உணர்வில் இவன் பேச, அந்த நாளின் தாக்கம் சிவனிக்கும் மனதில் வந்து சேர

“அப்புறம் என்ன செஞ்சீங்க மாமா?” இறுகிய குரலில் சிவனி கேட்டு வைத்தாள்.

“பஸ் ஸ்டாண்ட்ல இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல, அன்னைய தேதியில இருக்குற சி‌சி‌டி‌வி ரெகார்ட் எல்லாம் பார்த்து தான் கண்டுபிடிச்சோம். சரியா அன்னைக்கு ராத்திரி ஒருமணி வரைக்கும் அபர்ணா ஆம்னி பஸ் ஸ்டேஷன்ல தான் நின்னுட்டு இருந்திருக்கா… வேற வழியில்லாம அங்கே இருந்து கிளம்பி போகும் போது, தடுமாறி ஒரு தள்ளு வண்டி மேல விழப்போய், அந்த வண்டிக்காரங்க பிடிச்சு உக்கார வச்சுருக்காங்க…

தடுமாறி விழுந்தவ அடுத்தும் எதுவும் பேசமா இருக்கவும், அந்த வண்டிக்காரருக்கு தான் பதட்டமாகி, வற்புறுத்தி, அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்காரு. அவங்ககிட்ட வேலை தேடி வந்த இடத்துல பணம் மிஸ்ஸாகிடுச்சு, வேலை தேடிட்டு இருக்கேன்னு சொல்லியிருக்கா! இவங்க காசு குடுத்தும் அத வாங்காம, அவசரத்துக்கு ஒரு வேலை வாங்கிக் குடுங்கன்னு கேட்டு வைக்க, அந்த வீட்டு அம்மாவும், திருமங்கலத்துக்கு பக்கத்துல, அவங்க வேலை பாக்குற ஆசிரமத்துக்கு கூட்டிட்டுப் போய், ஆபீஸ் வேலைக்கு சேர்த்து விட்ருக்காங்க! மெயின் ரோட்ல வியாபாரம் பார்த்ததால அந்த வண்டிகாரர தேடிக் கண்டுபிடிக்கிறது ஈசியா போச்சு, அவர் மூலமா தான் அபர்ணாவ பார்த்தோம்.”

“உடனே எப்படி வேலைக்கு எடுத்துகிட்டாங்க?”

“இவங்க பிளான் பண்ணி வந்ததால, இவ சர்டிபிகேட், ஐடி எல்லாத்தையும் கையோடு கொண்டு வந்திருக்கா! அத எல்லாம் காட்டவும், அங்கே தங்கி வேலை பாக்க சம்மதமான்னு கேட்டு வேலை போட்டு குடுத்துட்டாங்க”

“அப்போ நீங்களும் அங்கே போனீங்களா?”

“ம்ம்ம்… பொண்ண பார்த்ததும் அபர்ணா அப்பா கோபப்பட்டு அந்த இடத்துலேயே அடிச்சிட்டார், ரொம்பவே திட்டினார், அப்புறம் அவரே பொண்ணை பார்த்து கதறும் போது, எங்க எல்லோருக்கும் ரொம்ப சங்கடமா போச்சு!

அபர்ணாவும் செஞ்ச தப்ப உணர்ந்து, யார் மொகத்தையும் பாக்க பிடிக்காமதான், இப்படி ஒதுங்கி வந்ததா சொல்லவும் ரொம்ப கஷ்டமா போச்சு சிவு!

என்னதான் பிரச்னைக்கு ஆரம்பம் அபர்ணாவா இருந்தாலும், நான் அகங்காரமா, அதிகாரத்தோட செஞ்சது தான் அங்கே பெரிய தப்பா போயிடுச்சு. என்னோட கோபம் ஒரு பொண்ணை நடுரோட்ல நிக்க வச்சது, உன்னை இந்த வீட்டை விட்டே போக வச்சுடுச்சு! அந்த நாளை நினைச்சாலே என்னை ரொம்ப கேவலமா நினைக்கிறேன். ஏற்கனவே உனக்கு செஞ்சத நினைச்சு வேதனைபட்டுட்டு இருந்த எனக்கு, இவங்க இப்படி ஒரு பிரச்சனையோட வந்து நிக்கவும் மனசளவுல செத்துப் போயிட்டேன்!”

“———–“

“அபர்ணாவுக்கு மட்டும் தவறுதலா வேற ஏதாவது நடந்திருந்தா, நம்ம கல்யாணத்தை நிப்பாட்டி, தண்டனை அனுபவிக்கிற மனநிலையில தான் அன்னிக்கு நான் இருந்தேன். அடியோடு என்னை வெட்டி சாய்ச்ச மாதிரி உணர்ந்துட்டேன். அதுல இருந்து தான் மத்தவங்களுக்கு என் பேச்சால கூட கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன். அதுல கொஞ்சம் மாறியிருக்கேன்னு நினைக்கிறேன்”

“அப்புறம் என்ன நடந்தது மாமா?”

“அப்புறம் என்ன? ரெண்டு பேரும் சாரி சொல்லிகிட்டாங்க… அதுக்கு மேல எதுவும் பேசிக்கல… அபர்ணா அப்பா தான், விக்ரம் மேல ரொம்ப கோபத்துல இருந்தார்! இவ அவனை விட்டு போனதுக்கும், இவன் அவளை விட்டுட்டு போனதுக்கும் சரிக்கு சரியா தப்பு பண்ணி வச்சுருக்காங்கன்னு விக்ரம் அப்பா சலிச்சுகிட்டார்!”

“அப்போ கல்யாணம் எப்டி?”

“அது தெரியலடா? நாலு வருஷம் கழிச்சு தானே கல்யாணம் பண்ணிக்க ரெடியாகியிருக்காங்க! காலம் எல்லாத்தையும் மாற வைக்கும், எல்லா காயத்தையும் ஆற வைக்கும்ன்னு நீ சொன்னது உண்மையிலேயே நடந்திருக்குன்னு நினைப்போம்”

“இந்த விக்ரம் ரொம்ப நல்லவன், அப்டிதானே மாமா?”

“ஆமா சிவு! அன்னைக்கு உனக்கு நடந்தத நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்டான். அதுக்கு பிறகு என்கிட்ட பேச ஆரம்பிச்சான். நம்ம கல்யாண பத்திரிக்கை கூட அவனுக்கு அனுப்பி வைச்சேன், புனேல இருக்கேன், வர முடியாத சூழ்நிலைன்னு சொல்லிட்டான்.”

“அபர்ணாக்கு பத்திரிக்கை வைக்கலையா?”

“விக்ரம் கிட்ட அட்ரஸ் கேட்டு, அவங்க அப்பாக்கு அனுப்பி வச்சேன். அவங்க வரல, எப்டியும் ஒரு தயக்கம் இருக்கும் தானே!”

“விக்ரம் நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தா எனக்கும் முன்னாடியே இதெல்லாம் தெரிஞ்சுருக்கும் தானே!”

நீ என்னிடம் சொல்லவில்லை’ பாவனையில் கேட்டு வைக்க

“தெரிஞ்சிருக்கும்… அதோட உன் மனசும் கஷ்டப்பட்டிருக்கும், அதான் நானும் சொல்லலடா, தப்பா நினைக்காதே!”

“ரெண்டு பேரும் விருப்பபட்டு, ஆசைப்பட்ட வாழ்க்கை அவங்களுக்கு கிடைச்சிருக்கு”

“ம்ம்ம்…. அவங்க ரொம்ப லக்கி”

“நீங்களும் தானே! உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கைய அமைச்சுகிட்டீங்க?”

“புரியல சிவு?”

“என்னை யோசிக்கவும் விடாம கல்யாணம் பண்ணிக்கிட்டத சொல்றேன் மாமா!”

“இப்போ இந்த பேச்சு எதுக்குடா?”

“அன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு காரணமானவங்க எல்லாரும் அத மறந்துட்டு, இப்போ மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ்றாங்க! ஆனா நான் என்ன தப்பு பண்ணேன்? எனக்கு ஏன் அன்னைக்கு அவ்ளோ பெரிய அவமானம், கெட்ட பேர் எல்லாம்” சொல்லும் போதே குரலில் கலக்கம் வந்து விட

“நடந்தத மறந்திருடா சிவும்மா!”

“எப்டி மறக்க? நீங்க எதிர்பார்த்த வாழ்க்கை ஈசியா கிடைச்சதால நீங்க சொல்லிட்டீங்க! ஆனா நடந்தத மறக்க முடியாம, எவ்ளோ நாள் அத பத்தியே நினைச்சு, எனக்கு மனசு வலிச்சுருக்கும். அது மட்டுமா? அந்த போஸ்டர் வந்தத நினைச்சா, இப்போவும் எனக்கு உடம்பெல்லாம் கூசிப் போகுது. நானும் எங்கம்மாவும் எவ்ளோ கஷ்டத்த அனுபவிச்சோம் அந்த நேரத்துல… எல்லாருக்கும் விரும்பினது கிடைச்சா, எனக்கு மட்டும் கிடைச்சத, பிடிச்சுக்க வேண்டியதா போச்சு அந்த பிரச்சனையால… அதுமட்டும் நடக்காம இருந்திருந்தா நம்ம கல்யாணமும் நடந்திருக்காது தானே?” – சிவனி

“இதுக்கு பதில் நமக்கு கல்யாணமான மறுநாளே நான் சொல்லி முடிச்சுட்டேன்! திரும்பவும் ஆரம்பிக்காதே! இனி ஒரு தரம் இந்த காரணம் தான் நம்ம வாழ்க்கை ஆரம்பிக்க அடிப்படைன்னு பேசி வைக்காதே சிவும்மா!”

“எங்கம்மாகிட்ட உங்கள பத்தின கணிப்பு தப்பா போகக்கூடாதுன்னு தானே, நீங்க என்கிட்ட கல்யாணமே பேசினது” கோபங்கள் இருவரையும் ஆட்சி செய்ய, தர்க்கங்கள் அவர்களை ஏற்றி வைத்து வேடிக்கைப் பார்த்தது.

“உன்மேல இருக்குற விருப்பத்த புரிஞ்சுக்க முடியாம தடுமாறி இருக்கேனே தவிர, கடமைக்கு நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கல! உனக்கு நடந்தது ஜீரணிக்க முடியாது தான், ஒத்துக்குறேன். அதுக்காக இப்படி என் மேல பழி போட வேணாம்”

“அப்போ நீங்க செஞ்சதெல்லாம் ரொம்ப நல்ல காரியமா? இன்னும் எங்க அம்மா பழைய மாதிரி, இங்கே வந்து தங்குறதுக்கு தயங்குறாங்க! அப்போ அவங்களுக்கு இன்னும் மனசு சமாதனம் ஆகலன்னு தானே அர்த்தம்?”

“இப்படியெல்லாம் கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்றது சிவனி? உங்க அம்மாவ என்னால கைய பிடிச்சு இழுத்துட்டு வர முடியாதுடி! அவங்க மனசு சமாதனம் ஆகலைன்னா எப்படி நம்ம கூட சகஜமா இருக்க முடியும்? அது கூட புரியலையா உனக்கு?”

“வேற வழி இல்லையே! அதான் என்னை மாதிரி அவங்களும் இருக்காங்க”

“ஏண்டி இப்படி குதர்க்கமாவே பேசி வைக்கிற? உன் மேல நான் வச்சிருக்கிற பாசம் எப்போ தான் உனக்கு புரியும்?”

“என்னை அன்பாலேயே அடிச்சு, உங்க அடிமையா என்னை மாத்தி வச்சிட்டீங்க!”

“சத்தியமா சொல்லு… என் கூட வாழ்றது உனக்கு தண்டனையா? அவ்ளோக்கு பிடிக்காமயா என்னை சகிச்சுட்டு இருக்க? உனக்கு என்மேல கொஞ்சம் கூட இஷ்டம் இல்லையா?”

“என்ன மாறினாலும் அடிப்படை அந்த ஒரு நாள் பிரச்சனை தானே? நம்ம கல்யாணத்தில இருந்து இப்போ வரைக்கும், உங்க இஷ்டத்துக்கு தானே எல்லாம் நடக்குது?”

“இப்போ உனக்கு என்னதான்டி பிரச்சனை? இந்த பேச்ச முடிக்க மாட்டியா?”

“உண்மைய சொன்னதும் கசக்குதா? உங்களுக்கு கோபம் வந்தா நீங்க என்னை அடிக்கலாம், திட்டலாம், அதுவே எங்களுக்கு வந்தா உங்களை ஒண்ணும் சொல்லகூடாது அப்டித்தானே?”

விரும்பியோ விரும்பாமலோ அமைந்த திருமண வாழ்வில் சரிபாதியாக வருபவர்களின் குணத்தைச் சார்ந்தே, அடுத்தவரின் குணமும் மாறுவது இயல்பாகவே நடந்து விடுகிறது. அது போலத் தான் பாண்டியனின் கோபங்கள் சிவனியாவிடம் எதிரொலித்ததோ?

தன் செயலால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் சமாதானம் ஆகும் வரை, ஓயாமல் அதே சிந்தனையில் இருந்தவன் பாண்டியன். தன் சுயமரியாதையை கேள்விகுறி ஆக்கியவனையும் ஏற்றுக் கொண்டு, மனதிற்கு பொருந்தி விட்டது என திணிக்கப்பட்ட அவனுடனான திருமணம், அந்த வாழ்க்கை பயணம் சந்தோசத்தை கொடுத்தாலும், ஒரு நொடியில் அனைத்தும் மாறி போகும் அவலம், எல்லாவற்றையும் சீர் தூக்கி பார்த்து, சமாதனப்படுத்திக் கொள்ள தயாராகாத மனம், இப்படி எல்லாக் கலவையும் சேர்ந்து சிவனியாவை அலைகழிக்க, வார்த்தைகள் நிதானம் இன்றியே அவளிடமிருந்து வர ஆரம்பித்தது.

“ஒரு தப்பும் செய்யாம, நான் இன்னைக்கு வரைக்கும் தண்டனை அனுபவிச்சுட்டு இருக்கேன், அதுக்கு என்ன பதில் சொல்றீங்க?”

“பொறுமைய ரொம்ப சோதிக்கிற… இனிமே இத பத்தி பேச வேணாம் போய் தூங்கு!”

“வாழ்க்கை, வேலை இந்த ரெண்டையும் கடமைங்கிற பேர்ல பிடிக்க வச்சு, வாழ்ந்தே ஆகணும்னு என்னை கட்டிப் போட்டுட்டீங்க!”

“——-“

“உங்க வீம்பும், பிடிவாதமும், என் ஆசைகளை அழிச்சு, உங்ககிட்ட என்னோட சுயத்தையே மாத்தி வச்சிடுச்சு”

“அப்போ இவ்ளோ நாள் கடமைக்காக தான் என்கூட வாழ்ந்தியா?”

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட கோபம், தன் முகத்தை காட்டிட, அதை அடக்கிய படியே பல்லை கடித்துக் கொண்டு பாண்டியன் கேட்டு வைத்தான்.

“இதுல சந்தேகம் வேறயா உங்களுக்கு? நீங்க செஞ்ச காரியத்துக்கு, உங்க மேல ஆசை வந்து வேற வாழணுமா நான்?”

“ஒஹ்…. அவ்ளோ கஷ்டபட்டு இனி என்கூட இருக்க வேணாம், இப்போவே உங்க அம்மா வீட்டுக்கு போய்டு”

“எதுக்கு? திரும்பவும் ஊர் உலகத்துக்கு நீங்க மட்டுந்தான் நல்லவர், நான் எப்போவும் போல நன்றி கெட்டவனு காமிக்கவா? நல்லதோ கெட்டதோ இருக்குற வரைக்கும் உங்க கூட வாழ்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்! இதுல கடமையில இருந்தா என்ன? பாசத்துல இருந்தா என்ன? எல்லாம் ஒரே எழவு தான்” இவள் அடித்துப் பேச, மனைவியின் இந்த முகம் பாண்டியனுக்கு புதிதாய் தோன்றியது.

திமிராய், நிமிர்வாய், சற்றும் சிதறாமல் இவள் பேசிய பேச்சுக்கள் அனைத்தும், அவளை வேறொரு பரிணாமத்தில் காட்ட, பாண்டியன் பார்த்து ரசிக்கும் சின்னப்பெண் அங்கே தொலைந்து போயிருந்தாள்.

“என்னத் திமிரு உனக்கு? இருந்துக்கோ! உன்னோட இஷ்டப்படியே இங்கேயே இரு! நானும் என்னோட கடமைக்கு இங்கேயே இருந்து தொலைக்கிறேன்… எல்லாம் நானா இழுத்துகிட்டது” வெறுப்போடு, கோபத்தில் கத்திவிட்டான்.

இந்த சூழ்நிலையில் வெளியே சென்றால், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பாள் என்பதை ஏற்கனவே அனுபவப்பட்டவன் என்ற முறையில், வேறொரு தனி அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

தன்னை எங்கும் தப்பித்துச் செல்ல முடியாத தளையாய், கட்டிப்போட்டுக் கடுப்படித்துக் கொண்டிருக்கும், தன் மனைவியின் பேச்சை ஜீரணிக்க முடியாமல், “கடமைக்காய் வாழ்கிறேன்” என்ற சொல்லில், தன் நேசத்தை அறியாதவளின் மீது கட்டுகடங்காத கோபம் பெருகிட, அதை ஆற்றும் வகை அறியாது முதன் முதலாய் தன் கம்பீரத்தை தள்ளி வைத்து மனதிற்குள் அரற்றி வைத்தான்.

பாண்டியனுக்கு தனிமை வேண்டி இருந்தது. மீண்டும் எழுந்த இந்த பிரச்னையை சரி செய்ய, தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில், இனி அவளாக உணர்ந்து, அறிந்து கொண்டால் மட்டுமே அவளுடனான வாழ்க்கையை தொடர முடியும் என்ற முடிவிற்கு வந்திருந்தான்.

இங்கே சிவனியாவிற்க்கும் அதே தனிமையில், தன்னை பற்றி சிந்திக்க வேண்டி இருந்ததால், அவனைப் பற்றி யோசனை செய்யாமல், தன் நிலையை நினைத்து கழிவிரக்கம் தோன்ற மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள்.

எந்த இடத்தில் தான் தவறு செய்தோம் என நடந்தவைகளை மீண்டும் தன் மனதில் ஓட்டிப் பார்க்க, இவனுடன் தான் இப்பொழுது பேசிய பேச்சுகளில் தவறேதும் இல்லை என்பது அவளது மனதிற்கு தெளிவாய் தோன்றினாலும், மன உளைச்சலில் தான் உறங்கிப் போனாள்.

எப்பொழுதும் காலை தேநீர் வேளையை இருவரும் மகிழ்ச்சியுடன் தான் எதிர்கொள்வர். இரவின் மீதங்கள் காலையில் சீண்டலில் தொடங்கிட, அதில் உண்டாகும் புத்துணர்ச்சியிலேயே வேலைகளும் ஆரம்பமாகும். அந்த எண்ணத்தில் இவள் அவனை எதிர்பார்த்திருக்க, அவனோ எதுவும் பேசாமல், தன் காலை வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டான்.

இவளுக்கும் ‘போகட்டுமே? ஒரு தடவை நான் பேசினதுக்கே இவ்ளோ ஆத்திரம் வந்தா, ஒவ்வொரு தடவையும் எனக்கு எப்டி வலிச்சிருக்கும்ன்னு இப்படியாவது தெரிஞ்சுக்கட்டும்’ மனதிற்குள் கருவியவாறே அவனை தாளித்து வைத்தாள்.

புதிய கட்டிடத்திலோ அல்லது ஹோட்டலிலோ பாண்டியன் இருப்பான் என்று சிவனியா நினைத்திருக்க, அவன் எங்கும் இல்லாமல், செல்லும் இடத்தை யாரிடமும் சொல்லாமல், எங்கோ சென்றிருந்தான்.

கோபத்தில் சென்றவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் அன்றைய வேலைகளை ஆரம்பித்து செய்து முடித்தவளுக்கு, மாலை தேநீர் வேளையிலும் கணவன் வராதது மனதைக் குடையச் செய்ய, யாரிடம் எப்படி கேட்பது எனத் தெரியாமல் மனம் தவித்து வைத்தது.

“பாண்டியன் எங்கே போயிருக்கான்மா தங்கச்சி? போஃன் சுவிட்ச் ஆஃப்ல இருக்கு” ரவி கேட்டு வைக்க, காலையில் இருந்து அவனுக்கு, தான் அழைக்காதது வேறு நினைவிற்கு வந்து சலனப்படுத்தியது.

ரவியிடம் தெரியவில்லை என்று சொல்லி தங்கள் நிலையை வெளிப்படுத்த விரும்பாமல் “பத்திரிக்கை வைக்க போயிருக்காருன்னே!” சிவனியா சமாளித்து வைக்க,

“என்கிட்ட லிஸ்ட் கேட்டுட்டு அண்ணன் மட்டும் தனியா போயிருக்காரா சிவாண்ணி? யாரையாவது சைட் அடிச்சு, செகண்ட் சானலா கூட்டிட்டு வந்துடாம?” கதிரும் எப்பொழுதும் போல் வேடிக்கையுடன் பேசி வைக்க, இவளுக்கு தான் அய்யோ என்றிருந்தது.

“மொத இருக்குற சானல்ல ஒழுங்கா படத்த ஓட்டச் சொல்லுடா உங்க அண்ணன! அடுத்து வேற பேசலாம்!” எப்பொழுதும் போல் சிவனியும் பேசி வைக்க

“அப்டி சொல்லு தங்கச்சி! தேவையாடா உனக்கு? போய் அந்த சாமியார சீக்கிரம் வரச் சொல்லு” ரவியும் சேர்ந்து கதிரை வாரி விட்டான்.

ஒரு வழியாய் இருவரையும் சமாளித்து வைத்தவள், எப்பொழுதும் போல் இரவு எட்டுமணிக்கு வீட்டிற்கு கிளம்பியும், பாண்டியன் வந்தபாடில்லை. கணவனிடம் காட்ட முடியாத கோபத்தை, வீட்டு வேலைகளில் காண்பித்து ஒழுங்காய் முடித்து வைத்தாலும், மனம் என்னவோ அவனை தேடுவதை விடவில்லை.

தனிமை ஆக்ரோசமாய் இவளை ஆக்கிரமிக்க, இரவு உணவினையும் தவிர்த்து விட்டு அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். காத்திருப்பின் அவஸ்தயை முதன்முதலாய் அனுபவித்தாள்.

முன்தினம் கொண்டு வந்த திறப்பு விழா பத்திரிக்கையை அந்த நேரத்தில் தான் பார்த்து வைத்தாள். ‘கோதை கிராண்ட்(kothai grand)’ என ஹோட்டல் பெயர் தங்கத்தில் மினுமினுத்துக் கொண்டிருக்க, சிறப்பு விருந்தினராய், திறந்து வைப்பவர்களின் பெயர்களாக ராமலிங்கம், கோதைநாயகி, செங்கமலம் என வரிசையாய் கீழே பட்டையாய் அச்சிடப்பட்டிருந்தது.

எப்பேர்பட்ட பெரிய மனிதர்களை அழைத்தாலும், தன் நலம் நாடும் பெரியவர்கள் மூலம் திறந்து வைப்பதே தனக்கு பெருமை என்று கூறி, அதை சாதித்தும் காட்டி இருந்தான் பாண்டியன். ஹோட்டல் பெயரை ‘கோதை’ என்றே வைக்க வேண்டும் என சிவனியும் தன் பிடிவாதத்தை செயல்படுத்தி இருந்தாள்.

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் அவளுக்கு சிரிப்பு வந்தது. திருமணம் முடிந்த பிறகு, அவனுக்கு சமமாய் ஒவ்வொரு காரியத்திலும், தானும் பிடிவாதத்தை கையில் எடுத்து சாதித்திருக்கிறேன் என்று தோன்ற, தன் முடிவுகளில் நிலையாய் நின்று அவனை பயமுறுத்தி வைத்த தருணங்களும் அவள் மனதில் வலம் வர ஆரம்பித்தன.

கடமைக்காக பெயருக்கு அவனோடு வாழ்ந்திருந்தால் கவனமாய் படிக்காமல் இருந்திருக்கலாம்? பவானிதீவில் அவன் தவிப்பை பார்த்து மனம் கலங்காமல், எனது நிலை உன்னை விட்டு தள்ளி இருப்பதே என்று செயலால் காட்டியிருக்கலாம். தான் சம்மதித்த பிறகு தானே பொறுப்புக்களை அவளிடத்தில் பாண்டியன் ஒப்படைத்தது. அதை வேண்டாம் என்று தவிர்த்திருக்கலாம் என ஏகப்பட்ட ‘லாம்’கள் மனதிற்குள் படையெடுக்க, மனதோடு மூளையும் சேர்ந்து குழம்பிப் போனது. முடிவில் நேற்று இரவு அவனுடன் செய்த தர்க்கங்கள்  எல்லாம் அபத்தமாய் தோன்ற ஆரம்பிக்க, முன்னை விட அதிகமாய் கணவனை மனம் தேட ஆரம்பித்தது.

‘வாய்க்கு வந்தத பேசி வைக்காதேன்னு அதட்டி, புரிய வைக்கிறத விட்டுட்டு, கோவிச்சுட்டுப் போனா எல்லாம் சரி ஆகிடுமா? எப்போ என்ன செய்யணும்னு ஒண்ணுமே தெரியுறதில்ல? இதுல முறைக்கிரது மட்டும் குறைச்சல் இல்லாம நடக்கும்’ மனதோடு சமாதானம் அடைந்தவளாக மீண்டும் அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள். இரவு பதினோரு மணிக்கு பிறகும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட அவனது மொபைல் உயிர் பெற்றிருக்கவில்லை.