Mayam 17

Mayam 17

இரவு வானில் நிலவு மேக மூட்டங்களோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க இளங்காற்று அந்த மேகங்களையும், அந்த சூழலையும் தழுவி செல்ல அதை ரசித்து பார்க்கும் மனநிலையில் இல்லாமல் எங்கோ ஓர் மூலையை வெறித்துப் பார்த்து கொண்டிருந்தான் ரிஷி ஆகாஷ்.

கைகள் இரண்டையும் பால்கனி சுவற்றில் ஊன்றிய படி நின்றவன் மனமோ பல்வேறு வினாக்களால் குழப்பமடைந்து போய் இருந்தது.

ரிசப்சன் நடந்த மண்டபத்தில் வைத்து தன் நண்பன் சொன்ன செய்தியை இன்னும் அவனால் முழுமையாக உள் வாங்கிக் கொள்ள முடியவில்லை.

அந்த விடயத்தில் எந்தளவிற்கு நம்பகத்தன்மை இருக்கும் என்பது கூட அவனுக்கு தெரியவில்லை.

கிட்டத்தட்ட நான்கு, ஐந்து மணி நேரத்திற்கு மேலாக அந்த விடயத்தை பற்றியே யோசித்து கொண்டு நின்றவன் அந்த விடயத்தை பற்றி அதற்கு காரணமான அனுஸ்ரீயிடமே கேட்டு விடலாம் என்று எண்ணிக் கொண்டு அவளின் வருகைக்காக காத்து நின்றான்.

சில மணி நேரங்களுக்கு முன்னர் ரிசப்சன் மண்டபத்தில்…..

அனுஸ்ரீ வெகு நாட்களுக்குப் பின்னர் தன் தாய் மற்றும் தந்தையோடு தன் மனம் விரும்பிய படி சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க ரிஷி மற்றைய புறமாக தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டு நின்றான்.

கொஞ்சம் கொஞ்சமாக ரிசப்சனிற்கு வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் கலைந்து செல்லத் தொடங்கி இருக்க அந்த மண்டபத்தில் ஒன்றிரண்டு பேரே எஞ்சி இருந்தனர்.

“ஹாய் டா புது மாப்பிள்ளை! இன்னையில் இருந்து நீயும் பேச்சுலர் லைஃப்பை மிஸ் பண்ணுவோர் சங்கத்தில் ஜாயின் பண்ணிக்கோடா!” ரிஷியின் நண்பன் சிரித்துக் கொண்டே அவனது தோளில் கை போட்டு கொண்டு கூறவும்

பதிலுக்கு அவனைப் பார்த்து புன்னகத்து கொண்டவன்
“நான் எல்லாம் அப்படி எதையும் மிஸ் பண்ண மாட்டேன் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேனோ அப்படியே தான் இனியும் இருப்பேன்” என்று கூறவும் அவனை சுற்றி நின்ற நண்பர்களோ அவன் கூறியதை கேட்டு கீழே விழாத குறையாக தங்கள் வயிற்றைப் பிடித்து கொண்டு சிரித்துக் கொண்டு நின்றனர்.

“எதுக்கு டா இப்படி சிரிக்குறீங்க எல்லோரும்?” ரிஷி சற்று அதட்டலாக கேட்கவும்

அவனருகில் நின்ற நண்பனோ
“இப்படி சொன்ன எல்லாரும் இப்போ என்ன நிலைமையில் இருக்காங்கனு நினைத்து பார்த்தோம் அது தான் சிரிப்பு தாங்க முடியல” என்று விட்டு மீண்டும் சிரிக்க தொடங்க ரிஷியும் அவர்கள் சிரிப்பில் இணைந்து கொள்ள இப்படியாக அவர்கள் பேச்சு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

அப்போது அவன் நண்பர்கள் கூட்டத்தில் இருந்தவன் ஒருவன் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக இருக்கவும் அவனருகில் வந்து அவனது தோளில் கை போட்டு கொண்ட ரிஷி
“என்னடா விக்கி ஏதோ பலமான யோசனையோடு இருக்க? என்ன மேட்டர்?” என்று வினவ அவனை திரும்பி பார்த்து புன்னகத்தான் விக்கி என்கிற விக்னேஷ் ரிஷியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவன்.

சந்துரு, ரிஷி மற்றும் விக்னேஷ் மூவரும் தான் எப்போதும் ஒன்றாகவே இருப்பவர்கள்.

விக்னேஷ் வேலை விடயமாக ஒரு வருடத்திற்கு முன்பு கனடா சென்று இருந்ததால் அவனுடனான பேச்சு வார்த்தை சிறிது குறைவடைந்து இருந்தது.

ஆனால் இப்போதும் விக்னேஷ் ரிஷியின் நெருங்கிய நண்பனாகவே இருந்து வருகிறான்.

“இல்லை டா உன் வைஃப்பை இதற்கு முன்னாடி எங்கேயோ பார்த்த மாதிரி ஒரு நினைவு வருது பட் எங்கேனு தான் சரியா பிடிபடல ஏதோ ஒரு இம்ப்பார்ண்ட் மேட்டர் விஷயமாக பேசும் போது அவங்களும் இருக்குற மாதிரி ஒரு சந்தர்ப்பம் தான் ஆனா சரியாக சொல்ல வரல!” விக்னேஷ் யோசனையோடு கூறவும் சற்று ஆச்சரியமாக அவனை பார்த்தான் ரிஷி.

‘எனக்கும் பர்ஸ்ட் அனுவைப் பார்த்த அப்போ இப்படி தானே தோணுச்சு’ மனதிற்குள் நினைத்ததை அப்படியே தன் நண்பனிடமும் கூறியவன்

“அனுஸ்ரீ பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தானே ஷோ எங்கேயாவது ஈவன்ட்ல பார்த்து இருப்ப” என்று கூறிய பின்பும் அவனது நண்பனின் முகத்தில் படர்ந்து இருந்த யோசனை ரேகைகள் மறையவில்லை.

‘ஈவன்ட்டா?’ என்று சிறிது நேரம் யோசித்து பார்த்தவன்

“யாஹ் கரெக்ட்! ஞாபகம் வந்துடுச்சுடா” புன்னகையோடு ரிஷியின் முகம் பார்த்து கூறினான்.

“கண்டு பிடிச்சுட்டியா! சரி சொல்லு எங்க பார்த்த?”

“சரியா ஒரு வருஷம் முன்னாடி உன் ஆபிஸில் நாம எல்லாம் ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணோம் ஞாபகம் இருக்கா? அந்த பார்ட்டியில் வைத்து நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொன்னேன் உனக்கு நினைவு இருக்கா?”

“என்னடா இது தெருவில் இரண்டு கண்ணு உள்ள ஆள் போனதை பார்த்தியாங்குற மாதிரி கேட்குற? அன்னைக்கு எவ்வளவு விஷயம் பேசுனோம் அதில் நீ எதை சொல்லுற?”

“போடா! காலையில் நடந்த விடயத்தை மறந்து போற எனக்கே ஞாபகம் இருக்கு உனக்கு இல்லையா? நம்ம பிரண்ட்ஸ் எல்லார் கிட்டயும் இரண்டு பொண்ணுங்க உன்னை பற்றி விசாரிச்சுட்டு இருக்காங்க என்ன விஷயம்னு நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் உன்னை ரவுண்டு கட்டி விசாரித்தோமே மறந்துட்டியா?” விக்னேஷ் சொன்ன விடயத்தை சிறிது நேரம் யோசித்து கொண்டு நின்றான் ரிஷி.

அப்போது தான் மெல்ல மெல்ல அவனுக்கு அந்த நிகழ்வு நினைவு வந்தது.

யாரோ இரண்டு பெண்கள் அவனது நண்பர்கள் பல பேரிடம் அவனைப் பற்றி தொடர்ந்து ஒரு சில நாட்களாக விசாரித்து கொண்டு இருப்பதாக கூறி அவனை அவர்கள் எல்லோரும் சேர்ந்து உண்டு இல்லை என்று ஆக்கியது எல்லாம் இப்போதும் அவன் கண் முன்னால் காட்சியாக அரங்கேறியது.

“ஆமா சொன்னீங்க! அதற்கு இப்போ என்ன?” குழப்பமாக ரிஷி கேட்கவும்

அவனது தலையில் தட்டிய விக்னேஷ்
“அந்த இரண்டு பொண்ணுல ஒண்ணு
சிஸ்டர் தான்” என்று கூறவும்

“என்ன?” என்றவாறே அவனை ரிஷி அதிர்ச்சியாக நோக்கினான்.

“நான் அப்போவே நினைச்சேன் எதற்குடா இவங்க இவனை பற்றி இவ்வளவு தூரம் விசாரிக்குறாங்கனு இப்போ தான் தெரியுது எல்லாம் நல்ல விஷயத்துக்காக தான் போல!”

“உனக்கு நல்லா தெரியுமா? அனுஸ்ரீ உன் கிட்ட வந்து என்னை பற்றி பேசுனாளா?” இன்னமும் அவனால் அனுஸ்ரீ தன்னை பற்றி மற்றவர்களிடம் விசாரித்து பார்த்தாள் என்பதை நம்ப முடியவில்லை அதுவும் அவளை பெண் பார்க்க செல்வதற்கு முன்பே.

அவளை பெண் பார்த்து விட்டு வரும் போது அவள் கூறி இருந்தாள் தான் அவனை பற்றி விசாரித்து பார்க்க வேண்டுமென்று.

ஆனால் இந்த சம்பவம் நடந்தது அவனுக்கும், ஆத்மிகாவிற்கும் நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்ட ஒரு சில மாதங்களில்.

அப்படி என்றால் அவளுக்கு முன்பே தன்னை தெரியுமா?

அப்படி தெரிந்து இருந்தால் அதை ஏன் அவள் தன்னிடம் இத்தனை நாட்களாக சொல்லவில்லை என்ற கேள்வி இப்போது அவனது மனதை சூழ்ந்து கொண்டது.

விக்னேஷ் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சியாக அவளையே பார்த்து கொண்டு நின்றவன் ஏன் அவள் தன்னிடம் இந்த விடயத்தை மறைக்க வேண்டும் என்ற கோபம் மேலெழ அவளை வெறித்துப் பார்த்து கொண்டு நின்றான்.

“ரிஷி! டேய் ரிஷி!” தன்னை நண்பனின் குரலில் தன்னை மீட்டு கொண்டவன்

தன் முகத்தை சரி செய்து கொண்டு கேள்வியாக அவனை நோக்க
“என்னடா திடீர்னு அமைதியாகிட்ட நான் சொன்னது எதுவும் தப்பா?” விக்னேஷ் நல்ல விடயமாக நினைத்து கூறியது தவறோ என்றெண்ணிக் கொண்டு சற்று தயக்கத்துடன் அவனிடம் கேட்டான்.

“சேச்சே! அதெல்லாம் எதுவும் இல்லை அனுஸ்ரீ என் கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தா தான் நான் தான் மறந்துட்டேன்” தன் நண்பனின் முன்னால் ஏனோ அவளை அவனால் விட்டு கொடுக்க முடியவில்லை.

“ஓஹ்! நான் கூட உன் முக ரியாக்ஷனை எல்லாம் பார்த்து ஒரு செக்கன் பயந்து போயிட்டேன்”

“அவ்வளவு பயங்கரமாகவா இருந்தேன்?” முயன்று அந்த சூழ்நிலையை சகஜமாக ரிஷி மாற்றி கொண்டாலும் ஏனோ அவன் நண்பன் சொன்ன விடயத்தை அவ்வளவு எளிதாக அவனால் விட்டு விட முடியவில்லை.

ஒரு வேளை அனுஸ்ரீ தன்னை ஆரம்பத்தில் இருந்தே பின் தொடர்கிறாளா?

அப்படி இருந்தால் எதற்காக தன்னை பின் தொடர வேண்டும்?

ஏன் இதை எல்லாம் தன்னிடம் மறைக்க வேண்டும்?

திருமணமே வேண்டாம் என்று சொன்னவள் தன்னை பார்த்த பின்னர் திருமணம் செய்ய சம்மதித்ததற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?

மனதில் எழுந்த பல கேள்விகளை அவளிடம் அந்த சூழ்நிலையில் கேட்க முடியாமல் தனக்குள்ளேயே வைத்து கொண்டவன் வசந்தபுரம் சென்றதும் அவளிடம் கேட்கலாம் என்று தங்கள் வீடு செல்லும் தருணத்திற்காக காத்து நின்றான்.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அவர்கள் வசந்தபுரம் வந்து சேர நள்ளிரவு பன்னிரண்டு மணியை நெருங்கி இருந்தது.

அந்த நேரத்திலும் அனுஸ்ரீயை மிதமான அலங்காரம் செய்து ரிஷியின் அறைக்கு அனுப்பி வைத்தார் பத்மினி.

வெட்கம் முகத்தில் தாண்டவமாட அறைக்குள் தயக்கத்துடன் நுழைந்து கொண்ட அனுஸ்ரீ அங்கே ரிஷியைக் காணாமல் போகவே அறையை சுற்றிலும் நோட்டம் விடத் தொடங்கினாள்.

அந்த அறையின் நடுவே கட்டில் நடு நாயகமாக வீற்றிருக்க அதன் அருகில் ஒரு சிறு மேஜை இருந்தது.

அறையின் ஒரு மூலையில் ரிஷியின் சிறு ஜிம் இருக்க சற்று தள்ளி ஒரு பெரிய கப்போர்ட் இருந்தது.

அதில் இருந்து சற்று தள்ளி பலவாறான புத்தகங்கள் நிறைந்த ஒரு மேஜையும், அதனருகே ஒரு டிரஸ்ஸிங் டேபிளும், அதன் அருகில் அனுஸ்ரீயின் உடைகள் இருக்கும் பெட்டியும் இன்னும் சில பொருட்களும் இருக்க அந்த அறை முழுமையாக நேர்த்தியாக இருந்தது.

“பரவாயில்லையே! ரூமை ரொம்ப நீட்டா வைத்து இருக்காங்க” மனதிற்குள் ரிஷியைப் பாராட்டிக் கொண்டவள் கண்களோ அவன் எங்கே இருக்கிறான் என்று நோட்டம் விடத் தொடங்கியது.

பால்கனிக்கு செல்லும் கதவு திறந்து இருப்பதை பார்த்தவள் ஒரு வேளை ரிஷி அங்கு இருக்கக்கூடுமோ என்றெண்ணிக் கொண்டு பால்கனியை நோக்கி நடை போட்டாள்.

அவளது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் தன் கையை சுவற்றில் ஊன்றி பலத்த யோசனையோடு நின்று கொண்டிருந்தவனை பார்த்து புன்னகத்து கொண்டவள்
“ரிஷி! இந்த நேரத்தில் இங்கே என்ன பண்ணுறீங்க?” என்றவாறே அவன் முன்னால் வந்து நின்றாள்.

அவளது வருகைக்காக அத்தனை நேரமாக காத்து நின்றவன் அவளை பார்த்ததுமே தன்னை மறந்து போனான்.

மஞ்சள் பச்சை நிற சேலையில் புத்தம்புது பூப்போல வந்து நின்றவளைப் பார்த்து அவன் மூளையோ வேலை நிறுத்தம் செய்து கொண்டது.

எந்தவித மேலதிக ஒப்பனையும், ஆபரணங்களும் இன்றி கழுத்தில் அவன் காலையில் கடவுள் சாட்சியாக கட்டிய மஞ்சள் தாலி மின்ன நிலவொளியில் முகம் பிரகாசிக்க நிற்பவளைப் பார்த்ததுமே அவன் மனதில் இருந்த கேள்விகள், குழப்பங்கள் எல்லாம் பின்னோக்கி செல்ல ஆரம்பிக்க உடனே தன் முகத்தை திருப்பிக் கொண்டு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்
‘நோ ரிஷி! நோ! மனதில் இருக்குறதை எல்லாம் ஓபனா பேசிடு’ தனக்குள்ளேயே பேசி கொண்டவன் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு கொண்டு அவளின் புறம் திரும்பி நின்றான்.

“நான் உன் கிட்ட ஒரு விஷயம் கேட்பேன் ஓபனா பதில் சொல்லு”

“சரி கேளுங்க”

“உனக்கு இந்த கல்யாணப் பேச்சு தொடங்குவதற்கு முதலே என்னை தெரியுமா?”

“ஹப்பா! இப்போவாது கேட்டீங்களே தாங்க் காட்!” தன் தலைக்கு மேல் கையை எடுத்து கும்பிட்டு கொண்டவள்

“நம்ம நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து நானும் எத்தனையோ தடவை இதை சொல்ல ட்ரை பண்ணேன் தெரியுமா? கடைசியாக இப்போ தான் சொல்ல நேரம் கூடி வந்திருக்கு” புன்னகையோடு கூறவும்

ரிஷியோ தன் மனதிற்குள்
‘அப்போ அனு இதை பற்றி சொல்ல ட்ரை பண்ணி தான் இருக்கா நான் தான் அவளை தப்பாக நினைத்துட்டேன் போல
சே! பர்ஸ்ட் அனு கிட்ட அவளை தப்பாக நினைத்ததற்கு ஸாரி சொல்லணும்’ என்று நினைத்து கொண்டு

“என்ன விஷயம் சொல்லு?” என்று கூறினான்.

“ஒரு நிமிஷம்” என்று விட்டு அறைக்குள் ஓடிச்சென்று தன் போனை எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் ஒரு போட்டோவை எடுத்துக் காட்டியவள்

“இதை ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்.

அதில் அனுஸ்ரீயோடு இன்னும் நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் புன்னகையோடு நின்று கொண்டிருக்க அவர்களின் பின்னால் ரிஷியும் அவன் தோளில் சாய்ந்தவாறு ஆத்மிகாவும் நின்று கொண்டிருந்தாள்.

“இது?” ரிஷி சற்று குழப்பமாக அனுஸ்ரீயை பார்க்க

“ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி உங்க ஆபிஸில் வைத்து எடுத்த போட்டோ இது எங்க காலேஜ் பைனல் இயர் டைம் எங்க டீம் ப்ராஜெக்ட்க்காக உங்க கம்பெனியில் ஒரு செக்ஷனுக்கு ஆட் பண்ணோம் ஞாபகம் இருக்கா?” ஆவலாக அவள் அவன் முகம் பார்த்து வினவ

அவனோ
‘இவ என்ன வேற ஏதோ சொல்லுறா?’ என முற்றிலும் குழப்பமடைந்து போய் அந்த புகைப்படத்தை பார்த்து கொண்டு நின்றான்.

அவனுக்கு அந்த கல்லூரி மாணவர்கள் வந்தது அவர்களுடன் இணைந்து சில விடயங்கள் பேசியது எல்லாம் நினைவு இருந்தது தான் அதில் அனுஸ்ரீயும் இருந்தால் என்பது இப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது.

அப்படி என்றால் தன் ஆபிஸில் வைத்து அனுஸ்ரீயை பார்த்தது தான் அவனுக்கு அவளை முதல் தடவை பார்த்ததும் இதற்கு முதல் அவளை பார்த்தது போல தோன்ற காரணம்.

அப்படி என்றால் விக்னேஷ் சொன்ன விடயம்.

“அதற்கு அப்புறமாக நீ என்னை வேறு எங்கேயும் பார்க்கவோ, என்னை பற்றி கேட்கவோ இல்லையா?” ரிஷியின் கேள்வியில் குழப்பமாக அவனை பார்த்தவள்

“இல்லையே ரிஷி! ஏன் கேட்குறீங்க?” என்று கேட்டாள்.

விக்னேஷ் தன்னிடம் ரிசப்சன் நடந்த மண்டபத்தில் வைத்து சொன்ன விடயங்களை எல்லாம் அவளிடம் கூறியவன்
“விக்னேஷ் அப்போ எதற்காக இப்படி சொல்லணும்?” என்று கேட்டான்.

“எனக்கு எப்படி தெரியும்? நான் கடைசியாக இந்த போட்டோ எடுக்கும் போது தான் உங்களை பார்த்தேன் உங்க பேரை கேட்டேன் அதற்கு அப்புறமாக பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு தான் உங்களை பார்த்தேன் இன்னும் சொல்லப்போனால் அந்த விக்னேஷ் எப்படி இருப்பாங்கனு கூட எனக்கு தெரியாது” அனுஸ்ரீயின் பதிலில் மேலும் குழப்பம் அடைந்தவன்

“சரி நாளைக்கு நாம விக்னேஷ் கிட்டயே இதை பற்றி பேசிக்கலாம் நீ போய் தூங்கு நான் ப்ரெஸ் ஆகிட்டு வர்றேன்” என்று விட்டு அறைக்குள் நுழைந்து கொள்ள

அவளோ
“நான் எப்போ யாரு கிட்ட போய் இவரை பற்றி போய் கேட்டேன்? சும்மா வேற யாரையும் பார்த்துட்டு நான்னு உளறி வைத்து இருக்காங்க ஆனா ரிஷியும் அதை நம்புன மாதிரி தானே கேட்குறாங்க என்ன நடக்குதுனே புரியல” சற்று சத்தமாக ரிஷி சென்ற திசையை பார்த்து புலம்பிக் கொண்டு நிற்க

அந்த நேரம் பார்த்து ரிஷியின்
“அனு!” என்ற கோபமான குரலும் கேட்டது.

“அச்சோ! என்னாச்சு ரிஷி?” அவனது குரல் கேட்ட அடுத்த நொடியே பதட்டத்துடன் அவன் முன்னால் ஓடி வந்து நின்றாள் அனுஸ்ரீ.

“இன்னும் எத்தனை பொய் என் கிட்ட சொல்லப்போற?” ரிஷி கோபமாக அவளை பார்த்து கேட்க

அவளோ
“பொய்யா? யார் என்ன பொய் சொன்னா?” அவன் கூறியதன் அர்த்தம் புரியாமல் அவனை நோக்கினாள்.

“போதும் நீ நடிச்சது என்னை பற்றி விசாரித்ததே இல்லைன்னு சொன்ன அப்போ இதற்கு என்ன அர்த்தம்?” தன் கையில் இருந்த புகைப்படங்களை எல்லாம் அவன் அவள் முகத்தின் முன்னால் தூக்கி போட

“இந்த போட்டோஸ்?!” அதிர்ச்சியாக அதற்கு மேல் பேச வார்த்தைகள் இன்றி நின்றவள் அவனை தயக்கத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

“சொல்லு இத்தனை நேரம் எல்லா விஷயத்திற்கும் உடனே பதில் சொன்னியே இதற்கு மட்டும் ஏன் பேசாமல் இருக்க?” கண்கள் சிவக்க கோபமாக தன் முன்னால் நின்றவனைப் பார்த்ததுமே அவளுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கியது.

“ரிஷி ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையாக…”

“வாயை மூடு! பொறுமையாம் பொறுமை!” அவனது அதட்டலில் ஒரு கணம் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

“என்னை பாலோ பண்ணி என்னை பற்றி டீடெய்ல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி என்ன பண்ண திட்டம் போட்டு இருக்க? சொல்லு? யாருக்காக என்னை வேவு பார்க்க வந்து இருக்க?”

“ரிஷி! அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்க இந்த போட்டோ எல்லாம் நான் எடுத்தது தான் ஆனா இது யார் சொல்லியும் எடுத்தது இல்ல”

“அப்போ நீ என்னை பாலோ பண்ணி இருக்க அப்படி தானே?”

“அய்யோ! இல்லை ரிஷி இது எல்லாம் நான் உங்க ஆபிஸில் ப்ராஜெக்ட் வர்க் பண்ண வந்த டைம் எடுத்தது அன்ட் ஒரு எக்சிபிஸனில் வைத்து எடுத்தது இரண்டும் இருக்கு”

“எக்ஸ்சிபிஸன்?” அவன் கேள்வியாக அவளை நோக்க

“உங்களை அங்கே தற்செயலாக தான் பார்த்தேன்” என்றவள் அவன் பார்வையை சந்திக்க துணிவின்றி தன் தலையை குனிந்து கொண்டாள்.

“சரி அந்த நேரம் நான் ஆத்மிகாவோடு ரிலேசன்ஷிப்ல இருந்தேன் தானே அப்புறம் எதற்கு இந்த போட்டோ?”

“அது வந்து அது”

“சொல்லு எதற்கு இது எல்லாம்?”

“…….”

“இப்போ சொல்ல போறியா இல்லையா?” மீண்டும் ரிஷி அவளை அதட்டி கேட்க திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களோ கண்ணீரால் நிரம்பி போய் இருந்தது.

“இந்த அழுது ட்ராமா பண்ணுற வேலை எல்லாம் வேண்டாம் ஒழுங்காக பதில் சொல்லு எதற்காக என்னை பாலோ பண்ணி டீடெய்ல்ஸ் எடுத்த?”

“நான் டீடெய்ல்ஸ்…”

“ப்ச்! திரும்ப திரும்ப சின்ன பாப்பா மாதிரி நான் பண்ணல பண்ணலனு சொல்லாமல் உண்மையை சொல்லு என்ன நோக்கத்தில் என் லைஃப்க்குள்ள நீ வந்த? இத்தனை நாளாக கல்யாணம் வேண்டாம்னு சொன்னவ எங்க வீட்டு சம்பந்தம் வரவும் எதற்கு உடனே ஓகே சொல்லணும்? அந்த ஆத்மிகா மாதிரி நீயும் பணத்தி…”

“ரிஷி!” அனுஸ்ரீ கோபத்துடன் முகம் சிவக்க அவனை பார்க்க அவனுக்கோ கண்கள் இரண்டும் இருட்டி தலை சுற்றுவது போல இருந்தது.

‘அனுஸ்ரீயின் கோபமான குரலிற்கே தனக்கு இப்படி இருக்கிறதா?’ ரிஷி அதிர்ச்சியாக அவளை பார்க்க அவளோ தன் முகத்தை சுளித்துக் கொண்டு தன் கையை உதறிவிட்டு கொண்டு நின்றாள்.

அப்போதுதான் அவனுக்கு புரிந்தது தன் கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சி பறந்தது போன்று இருந்த உணர்வு அவள் போட்ட சத்தத்தினால் அல்ல அவளது கைகள் தன் கன்னத்தை பதம் பார்த்ததினால் என்று….

error: Content is protected !!