Kumizhi-4

Kumizhi-4

குமிழி- 4

கவிதாராணி ஒத்தக்கடையில் வட்டி மற்றும் ஏல சீட்டுக்களை பரம்பரையாக நடத்தி, விவசாய உரக்கடை ஒன்றையும் மதுரையில் நடத்தி வரும் சடகோபன் – மரகதம் தம்பதியரின் செல்வமகள்.

பள்ளி இறுதி வகுப்பை தடுக்கி விழுந்து படித்து, தன் கல்வி காலத்தை சுபமாய் முடித்து கொண்டவள். சிவனியாவுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அவளது படிப்பு, அழகு, நிறம் என அனைத்துமே சற்றுக் குறைவு தான். உடன் பிறந்த அண்ணன் பிரபு தந்தையின் தொழிலுக்கு துணையாய் நிற்க, இவள் வீட்டினில் தன் அன்னைக்கு உதவி செய்து வந்தாள்.

பாண்டியனின் உழைப்பையும், தொழில் நேர்த்தியையும் பார்த்த சடகோபன் தானாய் பெண்ணைக் கொடுக்க முன் வந்தார்.. பாண்டியனைக் கடத்திச் செல்லாத குறையாய் ரவியும், சிவனியாவும் சேர்ந்து பெண் பார்க்க அழைத்து சென்றது தனிக்கதை.

“இதெல்லாம் வேணாம் பாப்பா!! உன்னைப் பார்த்தே அலறி அடிச்சுட்டு ஓடாத நான் அந்த பொண்ணைப் பார்த்தா நல்லா இல்லன்னு சொல்லி வைக்கப் போறேன்?” சிவனியாவை சீண்டியபடியே “எனக்கு எப்படி இருந்தாலும் ஓகே தான், நீங்க மட்டும் போய் பேசிட்டு வாங்க” தன் பல்லவியை பாடிக் கொண்டிருந்தான்.

“ரவியண்ணே!! நீங்க ஹோட்டலுக்கு போன் போட்டு எல்லோரையும் பொண்ணு வீட்டுக்கு வரச் சொல்லுங்க, மாமா ஒருத்தரே நைட் 1 மணி வரைக்கும் தனியா இருந்து திண்டாடட்டும்.. இன்னும் பத்து நிமிஷம் டைம் குடுப்போம், இவர் வரலையா அங்கே இருக்கறவங்கள தூக்கி போட்டுட்டு பொண்ணு பாக்க போயிருவோம்” செல்ல மிரட்டலுடன் சிவனியா சொல்ல

“சரியா சொன்னே தங்கச்சி!! இவனுக்கு இப்படி ஆப்பு வச்சா தான் வழிக்கு வருவான். என்னடா மைனர் மாப்ளே! இங்கே உன்ன தூக்கவா? இல்ல அங்கே எல்லோரையும் தூக்கவா? எப்போடா லீவ் கிடைக்கும்ன்னு எல்லா பயபுள்ளையும் ஏங்கிட்டு இருக்கு” ரவியும் ஒத்து ஊத ஒரு வழியாய் பெண் பார்க்க கிளம்பி, இனிதாய் பெண் பார்க்கும் படலமும் முடிந்தது.

ஹோட்டல் பாண்டியாவில் சூடான பதார்த்தங்கள் சுவையாய் பரிமாறி, வந்தவர்களின் சூட்டை தணிக்கும் ஆதவனின் உச்சி கால வேளையில் சிவனியா அங்கே வருகை தந்தாள்.

“மாமா உங்களுக்கு ஒரு ஸ்வீட் சர்பிரைஸ்”

“என்ன அது?” பலசரக்கு பட்டியலை பார்வையிட்டவாறே சற்றும் நிமிராமல் பதில் சொன்னான் பாண்டியன்.

“கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து பதில் சொன்னா உங்களுக்கே புரியும்”

“வேலை நேரத்துல என்ன விளையாட்டு சிவனி?” அனைவருக்கும் “சிவா”வாக மட்டுமே இருப்பவள், சூழ்நிலை பொறுத்து பாண்டியனுக்கு மட்டும் “சிவனி”, “சியாபாப்பா”, “சிவும்மா” எனப் பல பெயர்களில் மாறி விடுவாள்.

கேள்வியை கேட்டுகொண்டே நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில், முன்தினம் தனக்கென நிச்சயிக்கப்பட்ட கவிதாராணியும், சிவனியுடன் சேர்ந்து நிற்பதை கண்டான். பெண் பார்க்கும் படலமும், திருமண நிச்சயத்திற்க்கான பேச்சு வார்த்தைகளும் முன்தினம் முடிந்திருந்தது

ஆயிரம் பேர் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில், வீட்டுப் பெண்கள் அங்கே வருவதை சற்றும் விரும்பாதவன் பாண்டியன். பாதுகாப்பிற்க்கு அங்கே பஞ்சம் இல்லை என்றாலும், சிலரது பார்வைகளும், பாவனைகளும் எதிர்பாராத அசம்பாவிதங்களை எளிதில் அரங்கேறும் இடமாய், தன் தொழில் நடக்கும் இடம் இருக்க, இன்று இவர்களின் வருகை அவனுக்கு மகிழ்வை தரவில்லை.

“இங்கே என்ன வேலை உங்களுக்கு? எதுக்கு இங்கே வந்தீங்க” என குரலில் கடுமையை காட்ட,

“மாமா! அமைதியோ அமைதி சின்சான் மந்திரத்த மனசுக்குள்ளே ஓட விட்டு நான் சொல்றத கேளுங்க! நேத்து நீங்க பொண்ணு பாக்குற இடத்துல அஞ்சு நிமிஷம் கூட உட்காரல, அதான் இன்னிக்கு காலையில கவிதா அக்காவோட அப்பா வந்து, என் பொண்ணு மாப்பிள்ளை கிட்ட பேசணும்னு ஆசைப்பட்றா, அவர வீட்டுக்கு வர சொல்லுங்கன்னு அத்தம்மா கிட்ட சொன்னாரு, அத்தம்மா தான் நீங்க அப்படியெல்லாம் வர மாட்டீங்க, அப்படி நிச்சயமா பேசியே ஆகணும்னா சிவா கூட ஹோட்டலுக்கு போய் பேசிட்டு வரட்டும்ன்னு என் கூட அனுப்பி விட்டாங்க அவ்ளோ தான், வேற எது கேக்கணும்னாலும் அத்தம்மா கிட்ட கேளுங்க, எங்கள முறைக்காதீங்க” ராகமாய் சொல்லி முடித்தவள்

“ஷப்பா எவ்ளோ நீளமா பேசியிருக்கேன்… இதுக்கே ரெண்டு ஜிகர்தண்டா வாங்கிக்குடுக்கணும் நீங்க”

“நாடி நரம்பெல்லாம் திங்குறதுலயே பின்னி பிணைஞ்சு இருக்குற ஒரே ஜீவன் நீதான்…” முறைத்துக் கொண்டே அவளை வாரி விட்டவன்

“நீ பேசணும்னு சொன்னியா ராணி?” நேரடியாய் அவளை பார்த்து கேட்டு வைக்க, அந்த ஒற்றை கேள்வி கேட்ட தோரணையிலும், பார்த்த பார்வையிலும் அந்த பெண் அங்கேயே வெலவெலத்துப் போய் விட்டாள்.

“இல்ல… இல்ல,  சும்மா உங்க குரலை கேக்கலாம்னு தான் அப்படி சொன்னேன், வேற எந்த ரீசனும் இல்ல” என மிடறு விழுங்கியபடியே, இதற்கு மேல் எந்த கேள்வி கேட்டாலும் என்னிடம் பதில் இல்லை என்று தன் பயத்தை கூறாமல் கூறிட,

அவளது மண்டையில் குட்டு வைக்கும் ஆத்திரம் தான் சிவனிக்கு வந்தது. “இதுங்க எல்லாம் எப்போ பேசி, எப்போ டூயட் பாடப் போகுது? இந்த அழகு காதலுக்கு எங்கள தூது போற வேலைய வேற குடுத்து அம்பயர் ஆக்கி வச்சிருக்காங்க வீட்டுப் பெரியவங்க!!” மனதோடு நினைத்ததை வெளியே சொல்ல முடியாமல், இருவரையும் பார்த்து இளித்து வைத்து, தன்னாலான உதவியை செய்வோம் என்ற நல்ல எண்ணம் மனதினில் தோன்ற

“மாமா இப்படி நீங்க முறைச்சு பார்த்து கேள்வி கேக்குறத கொஞ்சம் நிப்பாட்டுங்க! பாவம் அக்கா இப்போதான் உங்க கூட பழகப்போறாங்க, கொஞ்சம் சிரிச்சு வைங்க, பயந்துட்டாங்க பாருங்க”

“இந்த ஐடியா கொடுத்தது நீ தானே? எங்க அம்மா இவ்ளோ தூரம் யோசிக்க மாட்டாங்க” பாண்டியன் முறைத்துக் கேட்க

“எப்படி மாமா? சூப்பர், கரெக்டா என்னை புரிஞ்சு வைச்சுருக்கீங்க!! அத்தம்மா வேணாம்ன்னு தான் சொன்னாங்க. நான்தான் இவங்கள கூட்டிட்டு வந்தேன்” சிவனியாவின் இந்த பேச்சு கவிதாராணிக்கு மனதில் நெருடலை தர ஆரம்பித்தது. ஏற்கனவே சிவனியாவுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து, தன்னை குறைவாய் எடை போட்டுக் கொண்டிருந்தாள்.

“சரி… சரி… அக்கா ஆசையா வந்திருக்காங்க!! உங்க முதாலாளி போஸ்ட எனக்கு தாரை வார்த்துட்டு, அவங்க கூட வெளியே போயிட்டு வாங்க, அப்படியே அடுத்த வாரம் நிச்சயத்துக்கு என்ன மாதிரி கலர், டிசைன் பிடிக்கும்னு கேட்டு வைங்க அவங்களுக்கு பிடிச்சத எடுத்திரலாம்”

நிமிடத்துக்கு நிமிடம் அங்கே நடந்த அவளின் உரிமைப் பேச்சும், இவள் சொல் பேச்சு கேட்டு அவன் நடக்க போகிறானோ? அப்படியானால் இவன் வாழ்க்கையில் என்னை எந்த இடத்தில் வைத்து பார்ப்பான்? என பல சந்தேகங்கள் அவள் மனதில் ஆழமாய் பதியவிட, அதனை தடை செய்தவாறே

“உன்னோட ஆட்டத்துக்கு எல்லாம் “ஆமாம் சாமி” போட வேற ஆளைப் பாரு! வியாபார நேரம் எங்கேயும் நான் அசைய மாட்டேன். வந்ததுக்கு ரெண்டு பேரும் சாப்பிட்டு போங்க” தன்னை ஒரு பொருட்டாய் பார்க்காமல், தன் எண்ணத்தை கேட்காமல் பாண்டியன் தனக்கு சரியென்று தோன்றியதை மட்டுமே பேசி அவர்களை தடுத்து நிறுத்தியதும், கவிதாராணியின் மனதில் ஏற்கனவே அலையடித்த எண்ணங்கள் ஸ்திரத்தன்மை கொண்டு இந்த திருமணத்தில் அவனுக்கு நாட்டம் இல்லை என்ற முடிவிற்கே வந்து விட்டாள்.

“இந்த சாப்பாடு நாங்க வீட்டுலயே சாப்பிடுவோம் மாமா!! ரொம்ப பிகு பண்ணாம கொஞ்ச நேரம் போயிட்டு வாங்க!! உங்களுக்காவே வந்திருக்காங்க…” சற்று மெதுவாய் அவன் காதில் மட்டுமே கேட்கும் படி இவள் பேசவென்று அவன் அருகில் குனிய, இவனும் அவளை ஏறெடுத்து பார்த்து முறைக்க, இருவரையும் மிக அருகில் பார்த்த அந்த காட்சி ஏனோ கவிதராணியை ஒரு நிலையில் நிற்க வைக்கவில்லை.

“அவருக்கு வேலை இருக்கும் போல சிவா!! விடு வேற ஒரு நாள்ல பேசுறேன், இங்கே தானே இருக்கிறோம் எப்போன்னாலும் பேசிக்கலாம், அவர வேலை பாக்க விடு, தொல்லை பண்ண வேணாம்” என்று தன் மறுப்பை உரைத்தவள் அங்கிருந்து கிளம்ப ஆயுத்தமானாள்.

“வாவ்!! ஜோடிப் பொருத்தம்ன்னா இது தான். சூப்பர்க்கா நீங்க!! எங்க மாமாக்கு இப்படி பொறுப்பா இருந்தா தான் ரொம்ப பிடிக்கும். பேசுறத்துக்கு முன்னாடியே இப்படி இருந்தா, இன்னும் பழகி புரிஞ்சு நடக்கும் போது அப்படியே எங்க மாமாக்கு ரொம்ப பொருத்தமா மாறிடுவீங்க, ரொம்ப சந்தோசம்க்கா எனக்கு”

சிவனியின் “மாமா” என்னும் அழைப்பு கவிதாவிற்கு உலைகலனில் இருக்கும் உணர்வை தர, பதில் பேசாமல் வெளியே நடக்க தொடங்கினாள்.

விடுதியில் இருப்பவள் என்று வீட்டில் உள்ளோர் சொல்லி வைக்க, இவளானால் வார்த்தைக்கு வார்த்தை “மாமா” என்று அழைத்து உரிமையுடன் பேசிட, அமைதியாய் இருந்தாலும் வெட்டி விட்டு பேசும் குணமுடைய கவிதாவிற்கு இந்த திருமணத்தின் மீது வந்த பிடித்தம் ஆட்டம் காணச் செய்தது.

நிச்சயதார்த்த வேலைகளை சிவனியாவே முன்னின்று தன் பாசமான அத்தையிடம் கேட்டு செய்ய தொடங்கினாள். நிச்சயப்பட்டு எடுக்கவென மணப்பெண்ணுடன் சென்று வந்தாள். எந்நேரமும் ஏதாவது ஒரு விதத்தில் குறும்புகளை செய்து கொண்டு, தன் இருப்பை காட்டிக்கொண்டே இருந்தாள்.

இதனை மறைமுகமாய் கவனித்துக்கொண்டே வந்தாலும், வெளியே கண்டிக்கவில்லை கவிதாராணியின் பெற்றோர். சின்னப்பெண் இன்னும் சில நாட்களில் வேலைக்கு சென்று விடுவாள் என்ற யோசனையில் அனைவரும் அவளது கொட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அவள் தாய் செங்கமலம் மட்டுமே அவளுக்கு கடிவாளத்தை போட்டு அவ்வப்போது அடக்க வேண்டி இருந்தது.

“நாம இங்கே கூட்டாஞ்சோறு சாப்பிட்டுகிட்டு இருக்கோம் சிவா!! நம்ம எல்லை என்னான்னு தெரிஞ்சுட்டு, அதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் அமைதியா தான் இருக்கணும். அண்ணியும், பாண்டியனும் நம்ம உறவா பாத்தாலும், மத்தவங்க வேலைக்காரங்க மாதிரி தான் பாத்து வைப்பாங்க, அது புரிஞ்சு நடந்துக்கோ!!”

“நான் யார் வம்புக்கும் போகாம என்னோட வேலைய மட்டும்தானேம்மா பார்த்துட்டு வரேன். அத்தம்மா கிட்ட தானே பேசுறேன்!! என்னோட வால் தனத்தை யார்கிட்டயும் காமிக்காம ரொம்ப நல்ல பொண்ணா தானே இருக்கேன்!! குட் கேர்ள்ம்மா நான்!!” இரு கண்களை விரித்து, தோள்களை குலுக்கி சின்னஞ்சிறு சிறுமியை போல் பேசி வைக்க

“இப்டி தான் யார்கிட்டயும் பேசி வைக்காதேன்னு சொல்றேன், பாண்டியன் எனக்கு குடுக்குற சம்பளமும், நான் அவன்கிட்ட குடுக்குற வாடகையும் எல்லாருக்கும் தெரிய வாய்ப்பில்ல, ஒட்டுப்புல்லா நம்மள பார்த்து வைக்கிறவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க சிவா!! எனக்கு என்னமோ கவிதா அப்பா உன்னை முறைச்சு பாக்குற மாதிரியே தோணுது, எதுக்கும் கொஞ்சம் கவனமா இருக்க பாரு!”

“சரிம்மா அப்படியே இருக்கேன். என் ஃப்ரண்ட் அபர்ணா நாளைக்கு இங்கே வர்றேன்னு சொல்லி இருக்காம்மா, அவளுக்கு மதுரைய சுத்தி பாக்கணுமாம்”

“அவ கூட வேற யாரெல்லாம் வர்றாங்க சிவா?”

“அவ மட்டுந்தான்ம்மா திருச்சியில இருந்து வர்றா!”

“எப்படி அவங்க வீட்டுல தனியா அனுப்பி வைக்கிறாங்க? விஷேசத்த பக்கத்துல வச்சுட்டு எனக்கு இது சரியா தோணல சிவா, உன்னை வெளியே அனுப்பி வச்சாலே பாண்டியன் ஏன், எதுக்குன்னு எங்கள நிக்க வச்சு கேள்வி கேட்டு வைப்பான், இதுல வயசுப் பொண்ணுங்க உங்க ரெண்டு பேரையும் வெளியே அனுப்பி வைச்சது தெரிஞ்சா ஆடித் தீர்த்திடுவான்”

“நீயும் எங்க கூட வாம்மா ஒரே ஒரு நாள் மட்டும், யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க”

“வேலை நிறைய இருக்கு சிவா, உனக்கு தெரியாததா? நிச்சயத்துக்கு இன்னும் மூணு நாள் வச்சுகிட்டு, நான் எப்படி வர முடியும்? இப்போ அவள வர வேணாம்னு சொல்லி வை”

“அதெப்படிம்மா முடியும்? அடுத்து எனக்கு வேலைக்குன்னு லெட்டர் வந்தா அதுக்கு ரெடி பண்ணிக்கவே சரியா இருக்கும். அவளுக்கும் அப்படித் தான். விஷேசத்துக்கு முன்னாடி அவள அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு என்னோடது, ப்ளீஸ் யார் கிட்டயும் சொல்லாதே, நான் கீழே கூட்டிட்டு போகலே, நீயும் வெளியே சொல்லாதே!”

“எப்படி சிவா? அண்ணிகிட்ட கூட சொல்லாமா எப்படி இருக்க முடியும்?”

“அத்தம்மா கிட்ட சொல்லி சம்மதம் வாங்க வேண்டியது என்னோட வேலை கவலப்படாதே, மாமாகிட்ட மட்டும் சொல்லி வைக்காதே!” சில பல கொஞ்சல்கள், கெஞ்சல்கள் பேசி தன் அன்னையை சரி கட்டியவள், அதே முறையில் தன் அத்தையிடமும் பேசி அவரை வென்று விட்டாள்.

“எனக்கு நீ சொல்றது கொஞ்சங்கூட பிடிக்கல ராசாத்தி! பாண்டியனுக்கு தெரிஞ்சா வேற வினையே வேணாம், எதுக்கும் அவங்க அம்மாக்கு போன் போட்டு குடு, நான் என்ன எதுன்னு விவரம் கேட்டு வைக்குறேன்”

“சரி அத்தம்மா!! அவளுக்கு போன் போட்டு, அவ அம்மாவ உங்ககிட்ட பேச வைக்கிறேன்” என்று சொன்னவளுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை.

இங்கே இவள் விடாமல் அபர்ணாவிற்கு அழைக்க முயற்சி செய்ய, அங்கே அவளின் கைபேசி அணைத்து(OFF) வைக்கப்பட்டு, மதுரைக்கு வந்து சேர்ந்த பிறகு தான் இயக்கப்பட்டது.

“சிவா நான் ஒத்தக்கடை மெயின் ரோட்ல நிக்கிறேன்டி, நீ வர்றியா?” என அபர்ணா அழைப்பை விடுக்கும் நேரம் தான், தன் கைபேசியை இயக்கி(ON) இருந்தாள்.

“நீ அப்படியே பெருமாள் கோவில் எங்கே இருக்குனு கேட்டு அங்கே வந்து சேர்ந்திரு அபி, இங்கே இருந்து நானும் கோவிலுக்கு வர்றதுக்கு டைம் சரியா இருக்கும், அங்கே இருந்து வீடு பக்கம் தான்”

“சரிடி அப்படியே செய்றேன்” என்றவள் சிவனியா சொன்னபடியே கோவிலை வந்தடைய, இருவரும் சேர்ந்து கோதை இல்லத்திற்க்கு வந்தனர்.

இருவரும் வீட்டிற்கு வந்த நேரம் மதிய உறக்கம் அனைவரையும் தழுவிக்கொள்ள, இவர்கள் மேலே சென்றது யாருக்கும் தெரியவில்லை.

செங்கமலம் மட்டுமே இவர்களுக்கென்று உணவினை மேல கொண்டு வந்து பரிமாறினார்.

“அத்தம்மா எந்திரிச்சதும் ரெண்டு பேரும் போய் பேசிட்டு வாங்க, உங்க அம்மாகிட்ட பேசணும்னு நினைச்சேன் அபர்ணா!! உன்னோட நம்பர் ஆஃப் ஆகி இருக்குனு சிவா சொன்னா, நீ வந்து சேர்ந்தத உங்கம்மா கிட்ட சொல்லிட்டியா?”

“இங்கே ஒத்தகடைக்கு வந்து இறங்கினதும் சொல்லிட்டேன் ஆண்டி, என்னோட மொபைல் சர்வீஸ்க்கு குடுத்திருந்தேன், அதான் ஸ்விட்ச் ஆஃப்ல இருந்தது.”

“அப்படியா… உங்க அம்மாகிட்ட நான் பேசணும், இப்போ போன் போட்டு குடு அபர்ணா!”

“இப்போ அவங்க ரெஸ்ட் எடுத்திட்டு இருப்பாங்க ஆண்டி”

“சரி… அப்புறமா நான் பேசுறேன், இப்போ நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க” என அவர் சொல்லிவிட்டு செல்ல, இரு தோழிகளும் தங்கள் ஊர் சுற்றலை திட்டமிட்டுக் கொண்டனர்.

அதன் படி அன்றைய மாலை வேளையில் திருப்பரங்குன்றம் சென்று முருகப் பெருமானை தரிசித்து விட்டு, மறுநாள் காலையில் அழகர்கோவிலுக்கும், பழமுதிர்சோலைக்கும் சென்று வருவதென தங்கள் பயண திட்டத்தை வகுத்தவர்கள், சற்றும் தாமதிக்காமல் உடனே புறப்பட்டனர். கீழே சென்று கோதையம்மாளை பார்த்து பேச வேண்டும் என செங்கமலம் சொன்னதை, இரவில் வந்து பேசிக்கொள்ளலாம் என்று அபர்ணா சிவனியாவை அவசரப்படுத்தி கிளம்ப வைத்தாள்.

தோழியர் இருவரும் ஊர் சுற்றலை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து சேர்ந்த நேரம் இரவு ஒன்பதைத் தொட, அப்பொழுது தான் அன்றைய நாளின் அனைத்து வேலைகளும் முடிந்து, சமையற்கூடத்தையும் ஒளித்து வைத்து, அங்கே அமைதி திரும்பி இருந்தது. கூடத்தில் யாரையும் பார்க்க முடியவில்லை.

கோதையம்மாள் ஓய்வுக்கென்று தன்னறையில் தஞ்சம் புகுந்திருக்க, செங்கமலமோ பள்ளியறை பூஜையை சேவிக்கும் பொருட்டு, ராமலிங்கத்தை கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்றிருந்தார். இயற்கை காற்றை சுவாசித்தவாறு தினமும் அமைதியான மனநிலையில் நடந்து சென்று வருவது இருவரின் வழக்கம்.

அன்றைய நாளின் மிகுதியான வேலைப் பளுவில் அபர்ணா வந்ததையும், தோழிகள் கோவிலுக்கு சென்றுள்ளதையும் கோதை நாயகியிடம் சொல்ல மறந்து விட்டிருந்தார் செங்கமலம். இதனால் தோழிகளின் ஊர் சுற்றல் கோதைநாயகிக்கு தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போனது.

கீழே உள்ள அமைதியை பார்த்த சிவனியா “அத்தம்மா ரெஸ்ட் எடுக்குறாங்க போல நாம டிஸ்டர்ப் பண்ண வேணாம், மேலே போயிருவோம், வா அபி”

“நீ மேலே போ சிவா, நான் அம்மாட்ட பேசிட்டு வந்திட்றேன், மேலே ரூம்ல சிக்னல் சரியா கிடைக்கல”

“சரி சீக்கிரம் வா, ரொம்ப நேரம் வெளியே நிக்காதே அம்மா வந்தா சத்தம் போடுவாங்க” சொல்லி மேலே சென்றவளிடம் பத்து நிமிடங்களில் வந்த அபர்ணா

“அம்மா என்னை இப்பவே ஊருக்கு கிளம்பி வரச் சொல்றாங்கடி, நான் கிளம்புறேன் சிவா”

“ஏய் டைம் என்ன தெரியுமா? இப்போ கிளம்பி நீ போய் சேர மிட்நைட்(நடுநிசி) ஆகிடும் அபி, யார் வருவா அந்த நேரத்துக்கு உன்னை கூட்டிட்டு போக?, நான் சொல்றேன் ஆண்டிகிட்ட, நீ போன் போடு அவங்களுக்கு”

“இல்லடி, அப்பாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம், நான் பக்கத்துல இருந்தா கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு பீல் பண்ணறாங்க, அண்ணனும் ஊர்ல இல்ல, அதான் நான் இப்பவே கிளம்புறேன்” தன் உடைமைகளை சேகரித்தபடியே அபர்ணா கூற

“சரி சாப்பிட்டு போகலாம் அபி, கீழே அத்தம்மா கிட்ட சொல்லிட்டு நானும் உன்னை பஸ் ஏத்தி விட வரேன்”

“அதுக்கெல்லாம் நேரம் இல்ல சிவா! நான் இப்பவே போயாகனும், நீ எனக்கு ஆட்டோ மட்டும் அரேன்ஜ்(ஏற்பாடு) பண்ணி குடு, நானா போயிர்றேன்.”

“என்னடி இவ்ளோ அவசரப்படறே? எங்கம்மா வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுடி, இல்லைன்னா உன்னோட சேர்ந்து எனக்கும் திட்டு விழும், ரவியண்ணனை கூப்பிடறேன் அவர் வந்து பஸ் ஏத்தி விடுவாரு அபி”

“சூழ்நிலை தெரியாம பேசாதே சிவா, நான் இப்பவே கிளம்பி ஆகணும், நான் போயிட்டு வரேன்” என்று அவசர கதியில் அபர்ணா கிளம்ப, இவளுக்கு சற்றே பதற்றம் தொற்றிக் கொண்டது.

“ரொம்ப சீரியசாடி அப்பாவுக்கு?, முன்னாடியே தெளிவா சொன்னா இவ்ளோ நேரம் நான் பேசி இருக்க மாட்டேனே? நானும் வர்றேன் உன்னை பஸ் ஏத்திவிட, கொஞ்சம் அமைதியா இரு” என சொல்லி இருவரும் அடித்து பிடித்து எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தை அடைந்து, திருச்சி செல்லும் மார்க்கத்தில் உள்ள ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்திட, அந்த பேருந்து புறப்பட இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன.

பேருந்து புறப்படும் வரை சிவனியா, தோழிக்கு துணையாய் இருக்கும் பொருட்டு பக்கத்து இருக்கையில் அமர்ந்து ஓட்டுனர் வருகிறாரா என்று வெளியே தன் பார்வையை பதித்திட, அபர்ணாவோ தன் கைபேசியில் யாருக்கோ குறுந்தகவலை அனுப்பிக் கொண்டிருந்தாள். இந்தச் செயலை சிவனியா கண்டுகொள்ளவில்லை.

இரண்டாவது நடைமேடையில் உள்ள பேருந்தில் தான் தோழிகள் இருவரும் அமர்ந்திருந்தது, பாண்டியனின் உணவகம் இருந்ததோ எட்டாவது நடைமேடையில். அங்கே வணிக வளாகத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு சிவனியாவை நன்றாய் அடையாளம் தெரியும்.

பள்ளிப் பருவத்தில், சிறுமியாய் உணவுப் பதார்த்தங்களை கொண்டு வரும் பொழுதில் பாண்டியனின் முறைப்பினை பரிசாக வாங்கிக் கொண்டே, அடிக்கடி இங்கே வருகை தந்து, வேலைகளை ஆர்வத்துடன் செய்தவள். கல்லூரி சென்ற பிறகு தான் இங்கே வருகை தருவது அவளுக்கு குறைந்து போனது.

பேருந்து நிறுத்தப் பட்டிருந்த நடைமேடையின் முன்புறத்தில் இருந்த  கடைக்காரர் (பெயர் வேலு) அலைப்புறுதலுடன் அமர்ந்திருந்த சிவனியாவை நன்றாக அடையாளம் கண்டு கொண்டார், அவள் தனியாய் பயணம் மேற்கொள்ள பயந்து போய் அமர்ந்திருப்பதாக நினைத்துகொண்டு பாண்டியனுக்கு அழைத்து விட்டார்.

“பாண்டியா! இங்கே திருச்சி பஸ்ல உங்க வீட்டு பொண்ணு டென்ஷனோட உக்காந்திருக்குப்பா, துணைக்கு நீ யாரையும் அனுப்பலையா?” என்று கேட்டு வைத்தவர், உடன் மற்றொரு பெண்ணும் சேர்ந்து இருந்ததை கவனிக்கத் தவறி விட்டார். எந்த இடத்திலும் தூரத்தில் தெரிந்தவர் ஒருவர் நின்றிருந்தால் அவரை மட்டுமே நம் கண்கள் பார்த்து வைக்கும். அந்த ரீதியில் தான் தற்போது அந்த கடைக்காரரும் சிவனியாவை மட்டுமே கண்டு கொண்டது.

தன் கைபேசிக்கு அழைப்பு வரும் நேரத்தில், உணவகத்தில் கதிரின் கைபேசியில் இருந்து தன் கைபேசிக்கு பாடல்களை பகிர்ந்து(share it) கொண்டிருந்தான் பாண்டியன். அழைப்பை ஏற்றவன், கேள்வி கேட்ட கடைக்காரரிடம் நெற்றியை சுருக்கியபடியே யோசனை செய்தவாறு,

“என்ன வேலுண்ணே சொல்றே? ஏதாவது புரியற மாதிரி பேசு?”

“அதான்ப்பா உங்க வீட்டுல தங்கி வேலைபாக்குதே உங்க உறவுக்கார அம்மா, அது பொண்ணு இங்கே திருச்சி பஸ்ல பயந்துட்டு உட்காந்திருக்கு, இப்படி பயப்படுற பிள்ளைய எதுக்கு ஒத்தையில அதுவும் இந்நேரத்துக்கு அனுப்பி வைக்கிற?” என்று அவர் சொல்லி நேரத்தை குறிப்பிட்டதைப் பார்த்தபோது மணி 10 அடிக்க பத்து நிமிடம் இருந்தது.

தன் கைப்பேசியை காதில் வைத்துப் பேசிக் கொண்டிருப்பதையும் மறந்து, பழக்க தோஷத்தில் கதிரின் கைபேசியை தன் சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டே வேலு அண்ணன் சொன்ன இடத்திற்கு கிளம்பி விட்டான்.

*********************************************** 

முருகனின்ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடான திருப்பரங்குன்றமும், ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையும் மதுரை மாவட்டத்திலேயே  அமைந்துள்ளன.

திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமண நிகழ்வும், பழமுதிர்ச்சோலையில் ஒளவையாரை சோத்தித்த சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற நிகழ்வும் நடந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அழகர் கோவிலும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமாகும். கடவுளையும், காதலையும் ஒன்றாய் பாவித்து பெருமாளை பாடியுள்ளனர் ஆழ்வார்கள். மதுரைக்கு மிக அருகிலேயே தான் இந்த ஆலயங்கள் அமைந்துள்ளன.

********

error: Content is protected !!