மாயவனின் மயிலிறகே

அத்தியாயம் 10

ஊரின் மையப்பகுதியில் அமைந்திருந்தது அந்த ராஜபவனம். போர் வீரனை போன்ற மதில் சுவர்கள் தனது நூறு அகவைத் தாண்டியும் சேவகம் புரிந்துக் கொண்டிருந்தன. அதனுள் பவனத்தைச் சுற்றிலும் பசுமையான பலவகை மரங்கள், பலவித வண்ணங்களை வாரியிறைக்கும் பூஞ்செடிகள் கண்களைக் குளிர்வித்தது.

துவார பாலகனை போல இரு தூண்கள் மாளிகையை தாங்கி நிற்பது போல தோற்றமளித்தது. உள்ளே நுழைந்ததும் ஒய்யார ஊஞ்சல் ஒன்று தன் எஜமானனை சுகமாய்த் தாங்கி அசைந்துக் கொண்டிருந்தது.

ரவிசந்திரன் கம்பீரமாய் முறுக்கிவிட்ட மீசையுடன் கணக்கு வழக்குகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். தலையில் ஆங்காங்கே தெரிந்த வெள்ளை நிற ஒற்றர்கள் அவரது வயதைக் காட்டிக் கொடுத்தன.

அப்போது வெளியே கார் நிற்கும் சத்தம் கேட்டக்க தொடர்ந்து மனைவி மகளின் பேச்சுக்குரலும் மெலியதாய் கேட்க தானாக இதழ் விரிந்தது அவருக்கு.

“அப்பா வந்துட்டாரு.. வர வர எங்கப்பாவக் கண்டுக்கவே மாட்டிங்கற. மணி எத்தன, அவருக்குப் பசிக்காது” என மகள் தாயைக் கடிய,

“ஏன் உங்கப்பாச் சாப்பிட வேண்டியதுதான யார் தடுத்தது”

திரும்பி அவரை முறைத்தவள் ” உன்னை விட்டு என்னைக்கு அவர் சாப்பிட்டிருக்காரு! ம்”

“நானா வேண்டான்னு சொன்னேன்” பேச்சில் கணவனின் தன்மீதான நேசத்தைப் பற்றிய கர்வமே தொணித்தது.

இருக்காதா பின்னே அன்றிலிருந்து இன்றுவரை இணைபிரியா அன்றில்கள் போல அல்லவா வாழ்ந்து வருகின்றனர்.

“யாரு அவரா! ஊரே இவர பார்த்து அடங்குது, ஆனா இவரு உன்னைப் பார்த்ததும் அடங்கிடறாரு” என மகள் அங்கலாய்ப்பாய் கூறினாலும் அதில் சந்தோஷமே இருந்தது.

சந்திரன் கணக்கு நோட்டை உதவியாளரிடம் கொடுக்கவும் அவன் வாங்கிக்கொண்டு “நீங்க சொன்னபடி செஞ்சிடறேங்கய்யா, நான் கெளம்பறேங்க” என விடைப் பெற்றான் ராம்.

சந்திரன் “ராம் சாப்பிட்டு போப்பா”

“அதான கனி ராமண்ணாக்கு சாப்பாடு எடுத்து வை” என உள்ளே நுழைந்தவாரே அதிகாரமாக உரைத்த ஜனனி, ராமை பார்த்துக் கண்சிமிட்டினாள். ராம் திருதிருவென விழித்தான்.

ராம் இங்கு வேலைக்கு சேர்ந்து ஏழு வருடங்களாகின்றன. தாய் தந்தை இல்லாத அவனுக்கு தன் ஐய்யாவின் குடும்பம்தான் தன்னுடையக் குடும்பம்.

ஜனனியின் பிரிய ராமண்ணா. ராமிற்கு பிரியம் கனி. கனி இந்த வீட்டில் வேலை செய்யும் கனகாவின் மகள். கனியும் ஜனனியும் கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் உயிர்த் தோழிகள்.

ஓய்வு நேரங்களில் இதுபோல அம்மாவுக்கு உதவி செய்ய வந்து விடுவாள். காயத்ரி எவ்வளவு தான் வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை.

ராம், கனி இருவரும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். அது தெரிந்துக் கொண்ட ஜனனி அவ்வப்போது அவர்களைச் சீண்டிக் கொண்டே இருப்பாள்.

“ராம் போப்பா போய் சாப்பிடு” என காயத்ரி கூற மறுக்க முடியாமல் ஆவலுடன் சாப்பாட்டு மேஜையை நோக்கி சென்றான் ராம். அவனது ஆவல் எதுவென்று கூற வேண்டுமா என்ன?

ராம் சென்றதும் மனைவி மகளின் புறம் திரும்பியவர் “என்ன ரெண்டு பேருக்கும் வாக்குவாதமா?”

தந்தையுடன் அமர்ந்து காலை உந்தி ஊஞ்சலை ஆட்டியவாறே “ஆமாப்பா கோவில்ல அப்படியே உருண்டு புரளாதக் குறையா மகனுக்காக வேண்டுறதப் பார்க்கனுமே.. அப்பப்பா என்னா ஒரு பக்தி. வர வர இந்த காயு மகனுக்காக நம்மளயெல்லாம் பட்டினிப் போடறாங்க. இது ரொம்ப ஓவர்” எனப் பொங்க

சாமிப் பிரசாதத்தைச் சந்திரனுக்கு வைத்து விட்டவாறே அவளை சிரிப்புடன் பார்த்தக் காயத்ரி “அப்படியா! அப்ப சின்ன மகாராணி என்ன வேண்டுனீங்களாம்”

“நான் எங்கண்..” ஸ்ஸ் என நாக்கைக் கடித்துக் கொண்டு ஒற்றைக் கண்ணை மூடி தலையைத் தட்டிக் கொண்டாள்.

அதில் அன்னை தந்தை இருவரும் சிரித்தனர்.

“என்னவோ எனக்கு மட்டும்தான் அக்கறைங்கற மாதிரி பேசுவா. இவளும்தான் அவனுக்காகத் தினமும் வேண்டுறா” என கூறியவரிடம் தன் மக்களைப் பற்றியப் பெருமையே விரவியிருந்தது.

செல்ல சிணுங்கலுடன் “எங்கண்ணன் நான் வேண்டுவேன். ஆனா அவன்தான் என்னைக் கண்டுக்க மாட்டிங்கறான்” என வேகமாய் ஆரம்பித்தவள் சோகமாய் முடித்தாள்.

அவளின் வருத்தத்தில் ஜனனியை ஆதரவாய்த் தன் தோளில் சாய்த்த சந்திரன் “ச்சே..ச்சே அப்படியெல்லாம் இல்லடா. அவனுக்கு நீ ன்னா ரொம்ப பிடிக்கும்.”

“அப்பறம் ஏன் எங்கிட்ட பேசமாட்டிங்கறான். நானே பேசினாலும் ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தை பேசிட்டு வச்சிடறான்” கண்கள் கலங்கியது அவளுக்கு.

அவளின் பிரிய அண்ணனாயிற்றே. அவனது பாராமுகம் இவளுக்குப் பெரும் வேதனையாய் இருந்தது. அவனை பற்றிய பாராட்டு செய்திகள் இவளை எட்டும்போது எவ்வளவுக்கு எவ்வளவு மகிழ்வாளோ அவ்வளவுக்கு அவ்வளவுத் தான் அண்ணனின் அருகில் இல்லையே என்ற வருத்தமும் எழும்.

ஆனால் அவன் பிறந்தத் தினத்திற்கு மட்டும் விடாமல் வாழ்த்துச் சொல்லி விடுவாள். அதேபோல் அவனும் எங்கிருந்தாலும் தங்கையின் பிறந்தநாளிற்கு வாழ்த்தும் பரிசும் கொடுக்கத் தவறியதில்லை.

நேரில் வரமாட்டானே ஒழிய பாசம் பார்சலில் வந்துச் சேரும். அதில் ஜனனிக்கு சிறுச் சுணக்கம் இருந்தாலும் இந்தளவிற்கே மகிழ்ந்து போவாள்.

கலங்கிய மகளை மேலும் அணைத்த சந்திரன் “ஆஹா! என்னோட செல்லக்குட்டி அழலாமா. உங்க அண்ணன ரெண்டு மொத்து மொத்திடலாண்டா அழாத”

தானும் பதிலுக்கு அவரை அணைத்து “யாரு நீங்களா நாங்களாவது வெளிப்படையா பாசத்தை காட்டறோம். உங்கள மாதிரி மறைஞ்சு மறைஞ்சு அவனப் பாக்கல” என அப்பனின் ரகசியத்தை நடுவீட்டில் போட்டு உடைத்தாள்.

அதில் காயத்ரி பட்டென்று சிரித்து வைக்க சந்திரன் அவரை பொய்யாய் முறைத்தார். “இந்த முறைப்புக்கெல்லாம் நாங்கள் அசருவோமா” என அவர் மேலும் நகைக்க

“செல்லக்குட்டி இப்படியெல்லாம் அப்பாவ நாக் அவுட் பண்ணாதடா உங்கம்மா என்னை பார்த்துக் கிண்டலா சிரிக்கறா” என மகளிடம் புகார் அளித்தார்.

“ம்… கிண்டல் பண்ணாங்கன்னா நீங்க அவங்கள அடிங்க, ப்ராப்ளம் சால்வ்ட்” என இன்ஸ்டன்ட் நீதிபதியாய் தீர்ப்பெழுதினாள் மகள்.

“அடிப்பாவி எம்புருஷனுக்கு நீயே சொல்லிக்கொடுப்பப் போல”

“ஏன்? எம்பொண்ணு சொல்லிக்கொடுத்துதான் அடிக்கனுமா!” என கூறிய சந்திரனின் முகம் எந்த அடி எனச் சொன்ன விதத்தில் இத்தனை வயதிலும் காயத்ரியிடம் வெட்கப்பூக்கள் பூத்தது.

“அதான எங்கப்பாவப் பத்தி உனக்கு இன்னும் சரியாத் தெரியல”

“யாரு எனக்கா?” என்றவர் அப்படியா? என்பதைப் போல கணவனை பார்த்தார். சந்திரன் ‘ஆமாம்’ எனச் சைகைச் செய்ய காயத்ரி வாய்க்குள் ஏதோ முனுமுனுத்தார்.

“ப்பா அடிங்கப்பா” என காலைத் தரையில் அடித்து கூற, இப்போது என்ன செய்வது? என முழித்தார் சந்திரன்.

“ஸ்ஸப்பா வரவர இவ சேட்டை தாங்கல. என்னவோ? பண்ணுங்க நான் போறேன்” எனத் தங்களது அறையை நோக்கி சென்றார் காயத்ரி.

மகள் தந்தையை முறைக்க சந்திரன் பரிதாபமாக பார்த்தார். “விடுடா செல்லக்குட்டி இங்க எல்லார் முன்னாடியும் அடிக்க வேண்டாமேன்னு பார்த்தேன். இப்பப்பாரு அடிக்கற அடில கன்னம் எப்படி சிவக்குதுன்னு” என மீசையை முறுக்கிக் கைக்காப்பை ஏற்றிவிட்டவாறே வீரமாக பேசியவர் மகள் அடுத்த கேள்வி கேட்கும் முன் தங்களது அறைக்குச் சென்றார்.

ஆவென வாய்ப்பிளந்த ஜனனி “என்னா நடிப்புடாச் சாமி” என வாய்விட்டுக் கூறியவள், “அட அங்க ஒரு ஃப்ரீ ஷோ ஓடுமே.. ஓடு ஜனனி… ஓடு.. ” எனச் சாப்பாட்டு மேஜையை நோக்கிச் சென்றாள்.

கனி குனிந்தத் தலை நிமிராமல் அவனுக்குப் பரிமாறச் சிலபல சீண்டல்களுடன் சாப்பிட்ட ராம், சிறு இடைவெளியில் அவளின் இடையை பதம் பார்த்து விட்டு நமட்டுச் சிரிப்புடன் எழுந்துச் சென்றான்.

சரியாக அப்போது வந்த ஜனனியின் கண்ணில் அது பட “அடடா அல்வாத் துண்டு இடுப்பு உன் இடுப்பு” எனத் திரும்பி நின்றிருந்த கனியின் காதில் பாட,

திடுமென அதிர்ந்த கனி “பிசாசே இப்படியாப் பயப்படுத்துவ” என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஆசுவாசமானாள்.

“ஆஹான்… இவங்க ரொமான்ஸ் பண்ணும் போது பயம் வரலயாம், நாங்க பாடித்தான் பயம் வந்ததாம்” நான் பார்த்துவிட்டேன் என ஜாடையில் கூற,

“ச்ச் …போடி” என அழகாக வெட்கப்பட்ட கனி உள்ளே ஓடிவிட்டாள். “அடப் பக்கி ஓடிட்டாளே இனி நான் தனியாதான் சாப்பிடனுமா” எனப் புலம்பியவாறேச் சாப்பிட ஆரம்பித்தாள்.

அறையின் உள்ளே சென்ற காயத்ரி அங்கிருந்த அபியின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அறையினுள் வந்த சந்திரன் மனைவியின் மனம் அறிந்தவராக ஆதரவாய் இரு தோள்களிலும் கை வைத்துத் திருப்பக் கலங்கியிருந்தது அவரது கண்கள்.

“என்னடா”

ஒன்றும் பேசாமல் அவரின் தோளில் சாய்ந்து கொண்டார் காயத்ரி. “சரியாகிடும்டா” என ஆதூரமாய் தலையை வருடினார்.

“என் நம்பிக்கை குறைஞ்சிட்டே வருதுங்க”

தான் வருந்தினால் மேலும் வருந்துவாள் என நினைத்தச் சந்திரன் “பாரு எம்பொண்ணு உன்னை அடிக்க சொன்னா நான் இப்படி நிக்கறேன்” என அணைத்த நிலையைச் சுட்டிக்காட்ட,

அதில் கோபம் போல் விலகியவர் “ஏன் அடிங்களேன்” என முறைப்பாய்க் கூறினார்.

“கன்னத்தில் அடிக்கும் அடி முத்தத்தாலே வைப்பேனடி” என காயத்ரியின் கன்னத்தை வருடியவாறுப் பாடலை மாற்றிப் பாடினார்.

“இந்த வயசுல பாட்டைப் பாரு” என அதட்டினாலும் கன்னங்கள் செம்மையைப் பூசிக் கொண்டது.

” ஏன் என் வயசுக்கு என்ன”

“ஆமா பையனுக்கு கல்யாணம் பண்ணா அடுத்த வருஷம் தாத்தா. இப்பதான் இளமை திரும்புதோ” என நொடிக்க,

மனைவி இயல்பாகிவிட்டதை உணர்நததும் “சரி கெழவி, வா சாப்பிடலாம் பசிக்குது” எனக் கூற இருவரும் வெளியே வந்தனர்.

அபிஜித் மிகவும் கோபமாய் இருந்தான். இல்லை அப்படிக் காட்டிக் கொண்டான். சிறிது தூரத்தில் அவனயேப் பரிதாபமாக பார்ப்பதும், பின் திரும்பி எதையோ பார்ப்பதுமாக நின்றிருந்தாள் பாப்பு.

அவள் உடல் நிலை முழுவதுமாக தேறவும், அவனை நச்சரித்து வெளியேக் கூட்டி வந்திருந்தாள். பல இடங்களில் அவன் கைக்கோர்த்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

அடம்பிடித்து சிலவற்றை வாங்கியும் குவித்தாள். கடைக்காரர்கள் இவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்ததைக் கூட கண்டுக்கொள்ளவில்லை.

இறுதியாக ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் என்று கூற, ஒரு ஐஸ்க்ரீம் ஷாப்பிற்கு சென்றனர். ஆளுக்கொன்றாய் வாங்கி ஒரு மேஜையில் அமர்ந்துக் கொண்டனர்.

அபி மெதுவாக உண்டுக் கொண்டிருக்க இந்த வளர்ந்தும் வளராதவளோ வேகமாய் உண்டுவிட்டு மீண்டும் ஒன்று வேண்டும் என அடம்பிடித்து வாங்கிக்கொண்டாள்.

இதுவரை நன்றாகதான் போனது, ஆனால் மீண்டும் இன்னொன்று வேண்டும் என கேட்க, அபி முடியாது என மறுத்தான்.

“பாப்பு வா போகலாம்”

“எனக்கு இன்னொன்னு வாங்கிக்கொடு நான் வரேன்”

“நோ வே நீ இப்ப வரலன்னா நான் இங்கயே விட்டுட்டு போய்டுவேன்” எனப் பயமுறுத்தினான்.

போய்டுவானா! என அதிர்ந்தாலும் “போயேன், நான் பயப்பட மாட்டேன். அதோ அந்த மாதிரி ஆட்டோப் புடிச்சு நானே வந்திடுவேன்.”

“பாப்பு சொன்னா கேளு. போதும், நாளைக்கு வாங்கி தரேன். வா போலாம்” வார்த்தைகள் கண்டிப்பாய் வந்தது.

“ஜித்து..ஜித்து..ப்ளீஸ் ஜித்து ஒண்ணே ஒண்ணு மட்டும். ப்ளீஸ்…ப்ளீஸ்.” என அவன் தாடையைப் பிடித்துக் கொஞ்ச, சற்று இளகிய மனதும் “டேய் மச்சான் அங்க பார்றா அம்சமான ஃபிகரு” எனப் பக்கத்து டேபிளின் இளைஞர்கள் இவளைக் கமெண்டடிப்பதுக் கேட்டு காற்றோடுப் பறந்தது. மனமெங்கும் அனலாய் தகிக்க ஆரம்பித்தது.

ஆயினும் சூழ்நிலைக் கருதி அமைதிக் காத்தான். “பாப்பு வா போலாம்” என அவள் மறுக்க மறுக்க கையைப் பிடித்து வெளியே அழைத்து வந்தான்.

“ஜித்து நான் வரல எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்” எனப் பிடியை விடுவிக்க முயல

நின்று அவளைப் பார்த்தவன் கையை விடுவித்து விடுவிடுவெனத் தனதுக் காரை நோக்கிச் சென்றான். அங்கேயே பரிதாபமாக விழித்துக் கொண்டு நின்றாள் பேதைப்பெண்.

தன் காரின் அருகில் சென்றவன் திரும்பி நின்றவாரே பக்கத்தில் இருந்த மற்றொரு காரின் கண்ணாடியில் இவளைதான் கவனித்துக் கொண்டிருந்தான்.

சோக ஸ்மைலியாய் உதடுகள் வளைய இவனைப் பார்த்தவாறே நின்றிருந்தாள். “ச்சே அபி பாவம்டா போய் கூட்டிட்டு வா” என மனம் எடுத்துரைத்தாலும்,

இல்ல நானா? ஐஸ்க்ரீமா? அவளே முடிவெடுக்கட்டும் என அமைதியாய் வேடிக்கைப் பார்த்தான். தான் மட்டுமே அவளுக்கு முக்கியமானவனாக இருக்க வேண்டும் என்ற நெஞ்சத்தின் ஆசை அவனை ஆண்டது.

சிறிது நேரம் நின்றவள் மெதுவாக இவன் புறமாய் நகரத் தொடங்கவும் ஆர்ப்பரிக்க முயன்றக் கால்களை அடக்குவது பெரும்பாடாய்ப் போனது அவனுக்கு. மெதுவாக இவன் அருகில் வந்தவள் இவன் டி சர்ட்டின் நுனியை பிடித்து இழுக்க ‘செல்லப்பட்டு’ என மனதில் கொஞ்சிக் கொண்டவன் முகம் மகிழ்ச்சியில் விகாசித்தாலும் அதை அவளுக்கு காட்டாமல் காரின் முன் டோரைத் திறந்தான்.

மீண்டும் அந்த ஷாப்பை பார்த்தவள் இவனையும் பார்த்து ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

கதவைச் சாற்றியவன் சிறிது நேரம் கழித்துத் தானும் அமர்ந்துக் காரைக் கிளப்பினான். வீட்டிற்கு சென்றதும் அவனைப் பாராமல் இறங்கியவள் விடுவிடுவென அறையை நோக்கி சென்றாள்.

அது அவளின் அறை. அவள் ஜித்துவின் அறை முன்பு. இப்போது அவர்களது அறை.

ஒரு மழைநாள் இரவில் இடியும் மின்னலும் சரமாரியாய்ப் பூமியைத் தாக்கிக்கொண்டிருந்தது. ஏதோக் கனவு கண்டுப் பயந்துப்போனவள் தூக்கம் வராமல் எழுந்து அமர்ந்தாள். பொன்னம்மா துணைக்கு இருந்தாலும் அவள் மனம் ஜித்துவைச் சரணடையச் சொல்ல,

மெல்ல நடுங்கிய நெஞ்சத்தை அழுத்திப் பிடித்தவாறே மேலே இருந்த அவனறைக்குச் சென்றாள். அவனறை கதவுத் திறந்திருக்க உள்ளே சென்று , அவன் பெட்டில் ஏறி “ஜித்து” என அழைத்தவாறே அவன் அருகில் படுத்து, கழுத்தடியில் முகம் புதைத்து இறுக்கிக்கொண்டாள்.

அபி எப்பொழுதும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்ல மாட்டான். இப்போதும் பாப்பு பெட்டில் ஏறும் போதே விழிப்பு வந்துவிட எச்சரிக்கையுடன் தலையணை அடியில் இருந்த கைத்துப்பாக்கியில் கை வைக்க “ஜித்து” என்ற அழைப்புடன் கழுத்தில் உரசிய சூடான மூச்சுக்காற்று அது யாரென உணர்த்தியது.

முதலில் அதிர்ந்தாலும் என்னவாயிற்றோ என்று பயந்து “பாப்பு என்னடா” என்றவாறே எழுந்து லைட்டை போட்டான்.

மருண்டு விழித்தவாறே ” பயமா இருக்கு ஜித்து.”

“ஏன்டா”

” யாரோ துரத்தறாங்க கைலக் கத்தியெல்லாம் வச்சிருந்தாங்க நான் பயந்து ஓடினேனா அப்படியே முழிச்சுட்டேன். அதான் பயமா இருக்கு” எனத் தாய் மடித் தேடும் மழலையாய் அவனுடன் ஒன்றினாள்.

அவளைச் சமாதானப்படுத்தி அவளறைக்கு அழைத்துச் செல்ல எத்தனிக்க, பயமாக உள்ளதென்று இங்கேயேப் படுப்பதாகக் கெஞ்சினாள், வேறுவழியில்லாமல் சரி வாவென்று படுக்க வைத்து தட்டிக் கொடுக்க சிறிது நேரத்தில் உறங்கிவிட்டாள்.

லைட்டை அணைத்து, விடிவிளக்கை போட்டவன் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான். கனவுக் கண்டிருப்பாள் போல என எண்ணியவன், ஒருவேளை இதுப் பழைய நினைவுகளா?

அப்படியென்றால் அன்று துரத்தியதை எண்ணியா? இல்லையே! கத்தியெல்லாம் வைத்திருந்ததாக கூறினாளே எனப் பல சிந்தனைகளில் உழன்றவன் அவனையும் அறியாமல் உறங்கி விட்டான்.

காலையில் வழக்கம் போல ஆறு மணிக்கு விழிப்புத் தட்ட, கண்விழித்தவன் கண்டதுப் பெட்டின் குறுக்குவாட்டில் கைக்கால்களைப் பரப்பிப் படுத்திருந்த அழகியைத் தான்.

பார்த்ததும் சிரிப்பு வந்தது அவனுக்கு… இது வேறயா? நல்ல வேளை இரவு உடையாகப் பேண்ட் சர்ட் அணிந்திருந்ததால் உடை விலகவில்லை.

எழுந்து அவளை நேராகப் படுக்க வைக்க, கதவுத் தட்டும் சத்தம் கேட்டது, “குட்டிப்பா” பொன்னம்மாப் பதற்றமாக அழைத்தார்.

தாத்தா பாட்டிக்கு எதாவதா என்று வெளியேச் செல்ல, “கண்ணு பாப்பாவக் காணோம், நைட்டு எங்கூடதான் தூங்குச்சுக் காலைல பார்த்தா ஆளக் காணோம்” எனக் கண்ணீர்க் குரலில் கூற,

அவன் கதவை நன்றாகத் திறந்து வைத்து, “இங்கதான்மா இருக்கா கனவு கண்டுப் பயந்திருப்பா போல நடுராத்திரி இங்க வந்துப் படுத்துட்டாங்க மேடம்” என அவளை பார்த்துக் கொண்டேக் கூறினான்.

“நான்கூடப் பயந்துட்டேன்.. புள்ளைய காணோமேன்னு”

“சரிம்மா நான் ஜாக்கிங் போறேன், மேடம் எந்திருச்சாங்கன்னா பாத்துக்கோங்க” என்றவன் அதற்கான உடையணிந்துச் சென்றுவிட்டான்.

தூக்கத்தில் அலறுவது மறுநாளும் தொடர, அவளைத் தன் அறையிலேயே இன்னொரு கட்டில் போட்டுப் படுக்க வைத்துவிட்டான்.

சங்கடமாய் பார்த்த தாத்தா, பாட்டியையும் “அவ குழந்தை, அப்படின்னா என்மேல உங்களுக்கு நம்பிக்கையில்லயா?” என வாயடைத்து விட்டான்.

அப்போதும் நடுராத்திரி தூக்கத்தில் இவன் பெட்டிற்கு அவள் தாவ, இவன் அவளைத் தூங்க வைத்துவிட்டு அவள் பெட்டிற்கு தாவ என கபடி ஆடியப்படியே உறங்குவர்.
***************

சென்னை விமான நிலையம் மும்பை – சென்னை விமானத்தின் பயணிகள் ஒவ்வொருத்தராய் செக்கிங் முடித்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அவரவர் லக்கேஜ்களை சேகரித்துக் கொண்டிருக்க அவனும் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தின் வெளிவாயிலை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

கண்களில் தீவிரம் குடிக்கொண்டிருந்தது. அப்போது அவன் அலைபேசி ஆங்கிலப் பாடல் ஒன்றைச் சிதறவிட , அழைப்பை ஏற்றவன் “போல்” என ஆரம்பித்து ஹிந்தியில் ஏதோப் பேசி முடித்தான்.

பேசி முடித்ததும் அலைபேசியை பார்த்து “ஐ ம் கம்மிங் டாலு… ஒன்லி ஃபார் யு, ஜஸ்ட் ஃபார் யு” என இறுகியக் குரலில் கூறினான். அதில் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் அவனின் டாலு. புரியும்படிக் கூறினால் ஜித்துவின் பாப்பு.

error: Content is protected !!