Kumizhi-6

மௌனம்– 6

கட்டுப்பாடுகளும், கண்டிப்புகளும் கூடிய கிராமத்து பழக்க வழக்கங்களில் வளர்க்கப் பட்டவன் தான் வருண பாண்டியன். ஆணிற்கும், பெண்ணிற்க்குமான எல்லைக்கோட்டை என்றும் தாண்டாமல் பழக வேண்டும் என்று தன் தந்தை ஈஸ்வர பாண்டியனின் அறிவுரைகளை என்றுமே மறக்காதவன். என்ன நற்குணம் இருந்தும் என்ன செய்ய, அவனது அவசரபுத்தி அவனை சற்றும் யோசிக்க வைக்காமல், ஆத்திரத்திற்கு அடமானம் போயிருந்தது.

அபாண்டமான பழியை ஒரு பெண்ணின் மேல் சுமத்தியதை சற்றும் உணராமல், கோபாவேசமாக சிவனியாவை இழுத்துக் கொண்டு ஆட்டோவில் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தான். பேருந்தில் இருந்து இறங்கும் பொழுது பிடித்த அவளது கையை இன்னும் விடவில்லை, சில சந்தர்ப்பங்களில் விட்டு விட்டாலும் மீண்டும் தானாய் அவள் கையை இறுகப் பற்றிக்கொண்டு அவளை இழுத்து செல்லாத குறையாய், தன் கைப்பொருளை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்னும் ரீதியில் வீட்டிற்க்கு அவளை இழுத்து வந்தான்.

சிவனியாவிடம் ஒரு பிடிவாத குணம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த இடத்திலும் அழுவது என்பது அவளுக்கு பிடிக்காதது மட்டுமல்ல அதைச் செய்யவும் மாட்டாள். தன் மகிழ்ச்சியை வெளியே கொண்டாடிக் கொள்பவள், அழுகையை உள்ளேயே பூட்டி வைத்துக் கொள்வாள். சிறு வயதில் இருந்தே பழக்காமன ஒன்று இது.

இருவரின் முகபாவத்தையும் பார்த்தே ஏதோ நிலைமை சரியில்லை என்பதை யூகித்த ராமலிங்கம், அவனாய் சொல்லும் வரை அமைதி காத்தார். ஆட்டோ சத்தம் கேட்டு மேலிருந்து எட்டி பார்த்த செங்கமலமும், மகளின் வரவை எதிர்நோக்கி இருந்தவர், விரைந்து கீழே வந்தார்.

“எங்கேடி போய்த் தொலைஞ்சே? சொல்லிட்டுப் போக மாட்டியா? வெளியே போயிட்டு வந்தவங்க திரும்பவும் எங்கே ஊர் சுத்த போனீங்க? எங்கேடி அந்த பொண்ணு?” மேலே இருந்து இறங்கும் பொழுதே இத்தனை கேள்விகளை அடுக்கிகொண்டே இறங்கியவர், பக்கத்தில் வந்ததும் அவளின் காயம்பட்ட முகத்தையும், ஓய்ந்த தோற்றத்தையும் கண்டு பதறிவிட்டார்.

“என்னடாம்மா ஆச்சு உனக்கு? எப்டி அடிபட்டுது? கன்னத்துல என்னடி இப்டி ஒரு வீக்கம்? வாயத் தொறந்து பேசு சிவா? பாண்டியன் கூட எங்கே போயிட்டு வர்றே?” இந்த சத்தத்தில் கோதைநாயகியும் முன்னறைக்கு வந்து விட்டார்

கண்களில் வெறுமையும் வெறுப்பும் சூழ்ந்திருக்க, வலியால் உடம்பு முழுவதும் அவளுக்கு சிவக்க ஆரம்பித்திருந்தது. பாண்டியனோ இன்னும் அவள் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டே இருக்க, வலது கை மணிக்கட்டு வலியால் சிறிது சிறிதாக வீக்கமும் அடையத் தொடங்கியது. இதை எல்லாம் கவனிக்காதவன், செங்கமலத்தைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

“யார் அந்த பொண்ணு? என்ன புது கதை சொல்றீங்க? எப்போ வந்தா? என்ன நடக்குது இந்த வீட்டுல? ரெண்டு பேரும் சேர்ந்து என்ன காரியம் பண்ணிட்டு இருக்கீங்க?” அடுக்கடுக்காய் கேள்விகளை, செங்கமலத்தை நோக்கி கேட்கவும், வாயடைத்துப் போனார் அவர்.

“வருணா என்ன பேச்சு பேசுறடா? எதுவா இருந்தாலும் பொறுமையா கேளு. பெரியவங்கள நிக்க வச்சு கேள்வி கேக்குறது நல்லா இல்ல சொல்லிட்டேன்” கோதை நாயகி கண்டிக்க

“எனக்குமே பிடிக்கல தான்ம்மா, ஆனா கேட்டே ஆகணும் இப்போ, பஸ் ஸ்டாண்ட்ல எல்லோரும் பாக்குற மாதிரி கையில பேக் வச்சுட்டு, ஒரு பையன் கூட பதட்டமா நிக்கிற இவள அதட்டி இங்கே கூட்டிட்டு வந்தா, அத்தை வேற பொண்ணப் பத்திக் கேட்டு வைக்குறாங்க, என்ன நடக்குது இங்கே? எனக்கு தெரிஞ்சாகனும்”

மீண்டும் படையெடுத்த அவனது கோபத் தாக்குதல்களைக் கேட்டு, இன்னமும் தன்னை நம்பாமல், நிமிடத்திற்க்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்த குற்றப் பார்வையும், பேச்சையும் அனுபவித்த சிவனியாவிற்கு, குத்திய இடத்தில் மீண்டும் சொருகிய வலியாய் இதயத்தை ரணமாக்கியது.

“என்ன பாண்டியா? என்னன்னெவோ சொல்ற? என் பொண்ணு அப்படிபட்டவ இல்லப்பா, இத்தன நாள்ல அவளை பத்தி நீ புரிஞ்சு வச்சுகிட்டது இவ்ளோ தானா? அங்கே என்ன சூழ்நிலையில இருந்தான்னு கேட்டிருந்தா அவளே சொல்லிருப்பாளே தம்பி, அவசரப்பட்டு வார்த்தைய விட்டுட்டியே நீ?” செங்கமலம் ஆதங்கமாய் பேசிட

“நான் வார்த்தைய விட்டேனோ, வாங்குறேனோ அது என் பாடு. நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லுங்க! யார் அந்த பொண்ணு? எப்போ இங்கே வந்தா?” அசரவில்லை அவன், மகளோடு தாயையும் சேர்த்தே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி வைத்தான்.

“அது பாண்டியா! அவ ஃப்ரண்ட் ஊர் சுத்தி பாக்கறதுக்குன்னு வந்திருந்தாப்பா, மதியம் தான் வந்தா, அண்ணி தூங்கி இருந்ததால அப்போ வந்து சொல்ல முடியலே, ரெண்டு பேரும் சாப்பிட்டதும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு போயிட்டாங்க. நான் அப்பாவ கூட்டிட்டு கோவிலுக்கு போன சமயம் திரும்பி வந்திருப்பாங்க போலிருக்கு, அப்பறம் எங்கே போனாங்கன்னு தெரியலப்பா. எங்கேடி போனீங்க? வாய தொறந்து சொல்றாளா பாரு” பாண்டியனிடம் பேசியபடியே செங்கமலம் மகளை அதட்ட

“அந்த பொண்ணு வந்து போன விஷயத்தை அப்பறமா கூட என்கிட்டே சொல்லலையே கமலம் எதுக்காக?” இப்பொழுது மகனின் செயலை தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் கோதைநாயகி கேள்வி கேட்க

“வேலை அசதியில மறந்துட்டேன் போலண்ணி” – செங்கமலம்

“மறந்துட்டீங்களா? எவ்ளோ ஈஸியா சொல்லிட்டீங்க!! இன்னைக்கு என்ன நடந்திருக்கு தெரியுமா?” என கமலத்திடம் கேட்டவன், தன் அன்னையிடமும் விளக்கம் கேட்டான்.

“அப்போ உங்களுக்கும் அந்த பொண்ணு வர்றது தெரியுமாம்மா?”- பாண்டியன்

“வரப்போறான்னு தெரியும் வருணா! சிவாதான் நீ ஒத்துக்க மாட்டேன்னு உன் கிட்ட சொல்ல வேணாம், நான் மேலேயே வச்சிருந்து ஊருக்கு அனுப்புறேன்னு சொல்லி வச்சா, ஆனா அந்த பொண்ணு இங்கே வந்து போன விஷயம் எனக்கு தெரியாதுய்யா. நானும் பொண்ணோட அம்மா கூட பேசனும்ன்னு சிவா கிட்ட கேட்டேன், அவளும் சரின்னு சொல்லிட்டு இது வரைக்கும் போன் போட்டு குடுக்கலப்பா” விளக்கத்தை சொல்லி தன்னை நிலைப்படுத்திக் கொண்டதுடன்

“சொந்த வீட்டுல யார் வர்றாங்க, யார் போறாங்கன்னு அய்யனார் கணக்கா இனிமே காவலுக்கு நிக்கணும் போல, வேலை முடிச்சு கொஞ்ச தலைய சாச்சது தப்பா போச்சு” கோதை அம்மாள் தன் ஆதங்கத்தையும் குதர்க்கமாய் வெளியிடத் தவறவில்லை.

தாயின் விளக்கத்தைக் கேட்டதும், சிவனியாவை ஒரு வெறுப்புப் பார்வை பார்த்துக்கொண்டே இறுக்கிப் பிடித்திருந்த அவள் கைகளை முழு வீச்சில் உதற, நிலை தடுமாறி கீழே விழப்போக இருந்தவளை செங்கமலம் தான் தாங்கிப் பிடித்தார்.

தலையில் கை வைத்தவாறே நாற்காலியில் அமர்ந்தவன், தன்னை நிலைபடுத்திக் கொள்ள இரண்டு நிமிடம் அமைதியாய் இருக்க, அந்த நேரத்தில் செங்கமலம் மகளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

“எங்கேடி போனீங்க? அந்த பொண்ணு எங்கே? இப்போ வாய்தொறந்து சொல்றியா, இல்ல இன்னொரு கன்னமும் வீங்க வைக்கட்டுமா?” – செங்கமலம்

“அவள பஸ் ஏத்தி விடத்தானம்மா போனேன்” என்றவள், அபர்ணாவுக்கு அழைப்பு வந்ததையும், இருவரும் பேருந்தில் சென்று அமர்ந்தது வரை கூறிய சிவனியா

“அங்கே அந்த பையன் வந்தப்புறம் தான்ம்மா எனக்கு இவ இங்கே எதுக்காக வந்திருக்கான்னு தெரிஞ்சது, அத பத்தி கேட்டுட்டு இருக்கும் போது தான் இவர் வந்து…” என சொல்லமுடியாமல் வார்த்தைகளை விழுங்கியவள், தொடர்ந்து அங்கே நடந்த கலவரத்தை திக்கித் திணறி சொல்லி முடித்தாள்.

இப்பொழுது பெரியவர்கள் மூவருக்கும் கோபங்கள் முளைத்திட, ராமலிங்கம் முகத்தை சுளித்து தன் அதிருப்தியை காட்டினார். கோதைநாயகிக்குமே மனம் தாங்கவில்லை…

“என்ன காரியம் பண்ணியிருக்க வருணா? உன்னோட கோபத்துக்கும், அவசர ஆத்திரத்துக்கும் ஒரு அளவில்லையாடா? நீ எல்லாம் என்ன தொழில் செஞ்சு என்ன பண்ண? ஒரு பொண்ண எல்லோர் முன்னாடியும் தலை குனிய வச்சுட்டு வந்திருக்கியே? இந்த தப்ப எப்படிடா சரி பண்ணப் போறே” – கோதை

“அந்த பொண்ணு வரப்போற விஷயத்த முன்னாடியே சொல்லி வச்சுருந்தா நானே என்ன ஏதுன்னு விசாரிச்சுரிப்பேன், ஏன் அவ ஊருக்கு கிளம்பும் போது, இவ எனக்கு போன் பண்ணி சொல்லிருந்தா இந்த அளவுக்கு பிரச்சனை நடந்திருக்காது, என்னை மட்டும் குத்தம் சொல்லாதீங்க” – பாண்டி

“அப்போ தப்பு எங்க மேல தானா? நீ பேசினது, நடந்துகிட்டது எதுவும் தப்பில்லையா பாண்டியா?”- செங்கமலம்

“கொஞ்சம் யோசனை பண்ணி பேசுங்கத்த… நாளைக்கே விஷயம் தெரிஞ்சு அந்த பொண்ணு வீட்டுல உள்ளவங்க இங்கே தேடிட்டு வந்தா என்னைத்தானே கேள்வி கேப்பாங்க, உங்களை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. என் வீட்டுல எனக்கு தெரியாம எப்படி ஒரு ஆள், அதுவும் ஒரு பொண்ணு வந்து தங்கிட்டு போனதுங்கிற கேள்விக்கு நான்தானே பதில் சொல்லி ஆகணும். என் வீட்டுல என்னோட பாதுகாப்புல நீங்க இருக்கிறீங்க. எது செஞ்சாலும் எனக்கு தெரிஞ்சு செஞ்சா நல்லது, இல்லைன்னா அது தப்புத்தான்” பாண்டியன் காட்டமாய் தன் கடுப்பை காட்டிட

“அதுக்காக இப்டி தான் ஊரே நின்னு வேடிக்கை பாக்குற இடத்துல கேள்வி கேட்டு என் பொண்ணை அவமானப்படுத்தி வைப்பியா? வயசுப் பொண்ணு கிட்ட கைய நீட்டுவியா? உனக்கு யார் அந்த உரிமைய கொடுத்தது பாண்டியா? கேக்குறதுக்கு யாரும் இல்லாதவங்க, எப்படி வேணும்னாலும் பேசி வைக்கலாம்ங்கிற நெனைப்பு தானே இப்படியெல்லாம் செய்ய வச்சது உனக்கு” தன் பெண் பலர் பார்க்கும் படி அடியும், பேச்சும் வாங்கி அவமானப்பட்டது மனதை ரணப்படுத்திட செங்கமலம் தன் கோபத்தை வார்த்தைகளால் கொட்டினார்.

“கமலம்! இப்போ நீதான் நிதானமில்லாம பேசிட்டு இருக்கே, யாரும் யாரையும் குறையா பாக்கல? கொஞ்சம் அமைதியா இரு” கோதை சமாதானப் படுத்திவிட்டு, பாண்டியனிடம்

“நீ சொல்றது சரிதான் வருணா… அதுக்காக யோசிக்காம நீ செஞ்ச வேலைய சரின்னு நான் சொல்லமாட்டேன். பொம்பளப் பிள்ளை மனசு தாங்காதுடா, அது சிதைஞ்சு போற மாதிரி காரியம் பண்ணி வச்சுருக்கியே, அதுக்கு என்ன பதில் சொல்லப் போறே? இது எவ்ளோ பெரிய தலைகுனிவு தெரியுமா? எல்லா காரியத்திலயும் கண்டிப்பும், கட்டுப்பாடுமா இருக்க தெரிஞ்ச உனக்கு, இந்த அவசரமும் ஆத்திரமும் இப்போ விரோதியா வந்து நிக்குதே!!, உங்க அப்பா வளர்த்த வளர்ப்ப இப்படி பொய்யாக்கிட்டு வந்து நிக்கிறியேடா” என அவர் உரைத்த சொற்களில் அப்படி ஒரு சங்கடம் வெளிப்பட்டது.

“போதும் நிறுத்துங்கம்மா! இவ அங்கே என்னை பத்தி என்ன சொல்லிட்டு வந்திருக்கான்னு தெரிஞ்சுட்டு, அப்பறமா என்னை திட்டுங்க? இவ கூட பேசுறதுக்கு, அந்த நேரத்துல நான்தான் இவள பஸ் ஸ்டாண்ட்க்கு கூப்பிட்டேன்னு எல்லோர் முன்னாடியும் சொல்லிட்டு வந்திருக்கா. இப்போ இவ செஞ்சது சரியா சொல்லுங்க? இது எனக்கு தலைகுனிவு ஆகாதா? இத கேட்டு என்னோட மனசு மட்டும் என்ன பூத்துக் குலுங்குமா?” பல்லைக் கடித்தபடியே, முறைத்துக்கொண்டே பாண்டியன் கூற

“அப்படி சொன்னியா சிவா?” – செங்கமலம்

“அ…து…. அது… நான் சொல்றத நம்பாம, விடாம கேள்வி கேட்டுட்டு இருந்தாரும்மா… எனக்கும் கோபத்துல… என்ன பேசுறோம்னு தெரியாம, எதையாவது சொல்லி இவர் பேச்சுல இருந்து தப்பிக்கணும்னு நினைச்சு, பேசிட்டேன்ம்மா” மென்று முழுங்கிய படியே சொன்ன மறுநொடி, அவளுக்கு தன் அன்னையிடம் இருந்து பல அடிகள், உடம்பில் பல இடங்களில் விழ

“போதும்மா… ரொம்ப நல்ல பேர் வாங்கி குடுத்துட்டீங்க அம்மாவும் பொண்ணும் சேர்ந்து… தொழில் பண்ணற இடத்துல ரொம்ப நல்ல விதமா இப்ப என் மகனை பார்த்து வைப்பாங்க ரொம்ப சந்தோசம், சின்ன பொண்ணுன்னு உன்னை கண்டிக்காம விட்டது, இப்ப என் பையனோட நல்ல பேரையே கேள்விக்குறியாக்கி பாக்குது. யோசிக்காம அவசர ஆத்திரத்துல பேசி வைக்கிறதுல ரெண்டு பேரும் ஒண்ணு போலவே இருக்கீங்க, யாரை இப்போ குத்தம் சொல்ல? நடந்த எதுவும் மனசுக்கு சரியாப் படல, பேசுற வார்த்தைகளோட மதிப்பும், அர்த்தமும் புரியாம பேசத்தான் இந்த காலத்துல படிச்சிட்டு வர்றீங்களா?” ஒரு சேர அனைவரையும் கண்டித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் கோதைநாயகி.

“எனக்குமே மனசு கேக்கல அண்ணி, எந்த காலத்துலேயும் இத மறக்க முடியும்னு எனக்கும் தோணல. இவ பேச்ச உங்க பையன் நம்பி இருந்தா, இவளும் இப்படி ஒரு பேச்சு பேசியிருக்க மாட்டா. நானும் கோவிலுக்கு போகாம இங்கேயே இருந்திருந்தா இந்த பிரச்சனை நடந்திருக்காது, இவ இப்டி பேசினது தப்பு தான், அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்”- செங்கமலம்

“என்ன தேவைக்கு அது?, இன்னும் சொல்லித் தெளியுற வயசுலையா ரெண்டு பேரும் இருக்காங்க? இத்தனைக்கும் படிச்சு பட்டம் வாங்கின பசங்க. இவங்க ரெண்டு பேர் பேச்சையும் கேட்டவங்க, யோசிக்காம ஆத்திரத்துல, ஏதோ ஒரு வேகத்துல தான் பேசி இருக்காங்கனு நம்பப் போறாங்களா என்ன? எப்படி சமாதானம் சொன்னாலும் ரெண்டு பேர் மேலயும் ஒரு கறுப்புப் புள்ளி விழுந்து போச்சு. எப்படி அழிக்கப் போறோம்னு தெரியல, இதுல நீ மன்னிப்பு கேட்ட உடனே நடந்த எதுவும் மாறப்போகுதா? வாசல்ல நிச்சயத்த வச்சுட்டு இந்த மாதிரி எல்லாம் பேசி வச்சா எதுல போய் நிக்கும்னு புரிய வேணாம், இது எதுல போய் முடியப் போகுதோ?” புலம்பியாவறே ஏதும் செய்யவும் சொல்லவும் தோன்றாமல் தன் அறைக்குள் போய் முடங்கிக் கொண்டார்.

இரு அன்னையரும் தங்கள் பிள்ளைகள் செய்தது தவறு என்று ஒத்துக் கொண்டாலும், அவரவர் தரப்பு நியாயங்களாய் எதையும் சொல்ல முடியாத வண்ணம் மனம் அலை மோதியது. தமது பிள்ளைகளுக்கு எதிராக பேசப்பட்ட பேச்சுக்களை மனதில் எண்ணிக்கொண்டே, அவ்விருவரும் தங்களது மனதில் விரிசலை உண்டு பண்ணிக்கொண்டார்கள்.

பாண்டியனும் ஏதும் பேச முடியாத சூழ்நிலையில் வெளித் திண்ணையில் வந்தமர்ந்திட, தாயும் மகளும் தங்கள் கூட்டிற்கு சென்றனர். கோபம் அனைவர் மனதிலும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதை அடக்கும் வழி தான் தெரியவில்லை.

ராமலிங்கத்திற்கும் மனதிற்குள் சஞ்சலங்கள் வந்தமர்ந்திட, பெருமாளிடம் வேண்டுதலை வைத்து, திருநாமத்தை மனனம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

ஹோட்டலை அடைத்து விட்டு, சாவியையும், கணக்கையும் கொடுக்க வந்த ரவியும், கதிரும் நடந்தவைகளை கேட்க, அவனும் விவரிக்க, ரவியின் சிறப்பு அர்ச்சனை பாண்டியனுக்கே உரித்தானது.

“என்ன காரியம்டா செஞ்சு வச்சுருக்கே? பாவம்டா தங்கச்சி, கொஞ்சமும் மனுசத்தனம் இல்லாம நடந்துருக்கே… வெளியே உள்ளவன் ஆயிரம் சொல்லலாம்டா, உனக்கு தெரிய வேணாமா நம்ம பொண்ணைப் பத்தி? யோசிக்க மாட்டியா நீ? இவ்ளோ நாள் இந்த லட்ச்சணத்துல தான் பஞ்சாயத்து பண்ணி கிழிச்சியா? ஒருவேளை கேக்குறதுக்கு யாரும் இல்லைன்னு நினைச்சி இப்டி ஒரு காரியத்த செஞ்சு வைச்சியோ? எல்லா இடத்துலயும் காசுக்கணக்கு பார்த்து தொழில் பண்றவனுக்கு, மனுஷங்களோட மனசப் பார்த்து பேசத் தெரியாம போய்டுச்சாடா?. உன்னை எல்லாம் எதுல சேக்கிரதுன்னே தெரியலடா?” கோபமாய் சொல்லி, வந்த வேலை முடித்து விட்டு கிளம்ப, கதிர் அங்கேயே நின்றிருந்தான்.

“என்னடா நீயும் திட்டனுமா? ஏதும் பாக்கி வச்சுருக்கியா? கொட்டிரு அதையும் வாங்கிக்கிறேன்” – பாண்டி

“ம்ஹும், அப்படியெல்லாம் இல்லன்னே? என்னோட மொபைலையும் நீங்க கையோட கொண்டு போனீங்க. அதை வாங்கிட்டு போக வந்தேன்”

“என்னடா சொல்றே? நான் உன் ஃபோனக் கொண்டு போனேனா?” என அந்த சமயத்தில் நடந்ததை எண்ணிப் பார்க்க தன் செல்போனில் பேசிக்கொண்டே பழக்க தோஷத்தில் அவன் செல்போனையும் சட்டைப்பையில் போட்டுக் கொண்டது அப்போது தான் புரிந்தது.

அவன் சட்டைப்பையில் தேடிப்பார்க்க கிடைக்கவில்லை, பேண்ட் பாக்கெட்டில் பார்த்தால் அவன் செல்போன் மட்டுமே கைக்கு கிடைத்தது. கதிரின் ஃபோனை தவற விட்டிருந்தான் பாண்டியன்.

“காணோமேடா? எங்கே போச்சுன்னு தெரியலேடா?” – பாண்டியன்

“நானும் கால்(call) பண்ணி பார்த்தேண்ணே!! சுவிட்ச் ஆஃப்ன்னு வருது, நீங்க அட்டென்ட் பண்ணிருந்தா நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன்னு சொல்லிருப்பேன்” – கதிர்

“வேலுகிட்ட சொல்லி அங்கே தேட சொல்றேன், எதுக்கும் நாளைக்கு காலையில ஃபோன் வாங்கின பில் கொண்டு வா, நம்ம ஏட்டையா கிட்ட குடுத்து கம்ப்ளைய்ன்ட் பைல்(file) பண்ணுவோம். அடுத்து என்னன்னு யோசிப்போம்” – பாண்டியன்

“அண்ணே நாளைக்கு சாயந்திரம் தாண்ணே வரமுடியும், காலேஜ் இருக்குண்ணே” – கதிர்

“சரி வாடா பாப்போம்! நான் காலையில உன் நம்பர பிளாக் பண்ணி வைக்கச் சொல்றேன். நேரமாச்சு இப்போ கிளம்பு” அன்றைய பொழுதை ஒரு வழியாய் முடித்து வைத்து தன் வீட்டிற்க்கு நடையை கட்டினான் பாண்டியன்.

தினமும் உறங்கும் சொற்ப மணிநேரங்கள் கூட இனி அவனுக்கு கிடைக்கப் போவதில்லை என்பதை அறியாமல் உறங்கச் சென்று விட்டான். விடியாத இரவுப் பொழுதுகள் அவனை இருகரம் விரித்து தன்னோடு வளைத்துக் கொண்டது.

*******************