KVI2

பொழுது புலர்ந்தது. அன்றைய விடியலின் போதே, ஏதோ இனம் கண்டறிய இயலா இன்னலை இதயத்தில் உணர்ந்தாள், சயனா . இருந்தும், அன்றாடப் பணிகளை, அன்றையதினமும் செய்யத் தவறவில்லை. தன் தேவைகள் முடிந்ததும், தாயாரின் தேவைகளைக் கவனிப்பதற்காகக் கிளம்பினாள். சமையலறை சென்று, வழக்கம் போல கஞ்சி தயாரிக்க ஆரம்பித்தாள்.

அரைமணி நேரத்திற்குப் பின்னர், சயனாவின் வீட்டு அழைப்பு மணி ஓசை கேட்டது. ஓடிச்சென்று திறந்தாள். அங்கே நின்று ரேவை ஓய்ந்து போன பார்வையுடன், சயனா பார்த்தாள்.

“என்ன சயனா? காலையிலே போஃன் பண்ணி வரச் சொல்லிருக்க. என்ன விஷயம்?” – சயனாவின் பார்வை தந்த பதிலை வாசித்திருந்தாலும், பதற்றத்துடன் வார்த்தையாகக் கேள்வி வந்தது.

ரேவின் பதற்றத்திற்குப் பதில் சொல்ல முடியாமல் சயனா நின்றிருந்தாள்.

” சொல்லு சயனா”

“ரேவ், அது… அது…” என்று தாயாரின் அறையைக் காட்டினாள்.

படியேறிய போது வாங்காது மூச்சு, இப்பொழுது பலமுறை வாங்கியது.

“ரேவ், அது எந்திரிக்கவே மாட்டேங்குது. நான் நிறைய தடவை எழுப்பிப் பாத்துட்டேன். அப்புறமும் எந்திரிக்கவே மாட்டேங்குது”

எதிர்பார்த்ததுதான், ஆனால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள என்றுதான் தெரியவில்லை, இருவருக்கும்.

“நீ இங்கயே இரு, நான் உள்ளே போய் பார்த்துட்டு வரேன்” என்று, அவசர அவசரமாக, சயனாவின் தாயார் அறைக்கு விரைந்தாள்.

ரேவ்,  அங்கிருந்து நகர்ந்தும் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு, சயனாவிற்குள். ஆதலால் ரேவைப் பின்தொடர்ந்தாள்.

இதயத்துடிப்பைக் காட்டும் கருவி வேலை செய்யவில்லையா? இல்லை, இதயமே வேலை செய்யவில்லையா? – இது ரேவின் மூளை. ஆனால் அவள் முகத்தோற்றமே சொல்லியது, அந்தச் சோகச் செய்தியை.

“என்ன ரேவ், இனிமே எந்திரிக்காதா”

“சயனா… ” – அதற்கு மேல் பேச முடியாமல் ரேவ்.

“ம்ம்ம், இனிமே எந்திரிக்காதுல” – உணர்வுக் குமியலாய் சயனாவின் உதட்டுச் சிரிப்பு.

“தெரிஞ்சிருச்சி.” – ஆள்காட்டி விரலால், நெற்றியில் தட்டியபடி.

” ஆனா, இப்பதான் ரேவ் நிம்மதியா இருக்கு” – என்று உள்ளங்கையால், இதயம் இருக்கும் இடத்தை தேய்த்துக் கொண்டே.

ரேவின் விழிநீர் வினாக்கள் ஏந்தி வந்தன.

“இனிமே அதுவும் கஷ்டப்பட வேண்டாம். நானும், அது கஷ்டப்படுறதப் பார்க்க வேண்டாம். அதான் நிம்மதினு  சொன்னேன்”ரேவின் விழிநீர் விரக்தியைக் காட்டின.

“ஆனா ரேவ், இது தெரியாம நான் அதுக்கு சமைச்சு வேற வச்சிருக்கேன் ரேவ்”

“சயனா”

“அவ்வளவும் வேஸ்ட் ஆயிரும், இல்ல ரேவ்”

“…. “

“சரி ரேவ், நான் ஆபீஸ் போறேன்”  என்று திரும்பி வெளியே செல்லலாகினாள்.

“சயனா, இப்படி பண்ணாத ” – முற்றிலும் உடைந்த ரேவின் குரல். திண்டாடித் திரும்பினாள் சயனா.

“வாழவேண்டிய வயசுல, அது சரியா வாழல ரேவ்” – வார்த்தைகள் வருத்தமாக வந்தன.

“…. “

“எனக்காக, என்னயப் படிக்க வைக்கறதுக்காக, எனக்கு சாப்பாடு போடறதுக்காக வேல செஞ்சி செஞ்சி, அதோட உடம்பை கெடுத்துக்கிடுச்சி” – வருத்தங்கள் கோபமாக மாறின.

“….”

“நான் கேட்டனா ரேவ்? வீட்டு வேலை செஞ்சி, என்னைய படிக்க வையினு. ஆங், சொல்லு ரேவ் நான் கேட்டனா? ” – கோபம் அதிகமாயின.

“….”

“ஒரு ரெண்டு வீட்டில பாத்திரம் தேய்க்கிறத நிறுத்தியிருந்தா கூட, இன்னும் கொஞ்ச நாள், என்கூட வாழ்ந்து இருக்கும்ல ரேவ்” – கோபங்கள் ஏக்கமாய் மாறின.

“….. “

“பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாமே கஷ்டத்தில, ரேவ். அதனால்தான் இந்த வீட்ட வாங்கி, அத சந்தோஷமா வச்சிருக்க நினைச்சேன். ஆனா இங்கயும் வந்து கஷ்டப்பட்டுக்கிட்டு… ச்சே”

‘ போதும் சயனா ‘ – ரேவின் பார்வை யாசித்தன.

“ரேவ், இனிமே டெய்லி நைட் யாரு கூட பேசுவேன். யார் இருக்கா சொல்லு? “

இதைக் கேட்ட பின், தனது கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் ரேவ்.

“இவ்வளவு நேரம் புத்தியோட புலம்புறனு நினச்சேன். அதான் எதுவும் பேசாம இருந்தேன். ஆனா இப்ப புத்தியில்லாம புலம்பற” – ரேவ்.

சயனாவின் புத்தி கேள்வி கேட்டு நின்றது.

“என் முன்னாடி நின்னுகிட்டு, எனக்கு யாரு இருக்கான்னு நீ கேட்பியா? சொல்லு சயனா கேட்பியா? ” – சரியான கேள்வி.

“இல்ல ரேவ், அப்படியில்ல” – இது சரியான பதில் இல்லை.

“உனக்கு அழனும்னு  தோணுச்சுன்னா அழுதிடு. ஆனா இப்படி புலம்பாத”

“நான் அழறதால அது திரும்பி வந்திடவா போகுது” –  உடல், உயிர், உள்ளம், உதடு மற்றும் உதிர்த்த வார்த்தைகள் என அத்தனையும் துடித்தன சயனாவிற்கு.

“அழறதால இழப்புக்கள சரிகட்ட முடியாது. ஆனால் இதயத்த சரியாக்கலாம்”

“அழலாம் வரல ரேவ் “

“சரி அழ வேண்டாம். நீ போய் பேசாம உட்காரு. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்”

” இது.. ” என்று, தனது தாயாரைக் காட்டினாள்.

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன். என்ன பண்ணணுமோ, அதை நான் செய்யறேன்”

” இல்ல ரேவ்”

“பேசாம வெளியே போய் உட்காரு” என்ற ரேவ்,

சயனாவை, அந்த அறையிலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தாள். வரவேற்பு அறையில் இருந்த உட்காரவைத்தாள். பின் தன் கைப்பேசியை எடுத்து யாரையோ அழைக்க எத்தனித்தாள்.

“யாருக்கு ரேவ் போன் பண்ண போற”

“அப்பா அம்மாக்கு போஃன் பண்ணி வர சொல்லப் போறேன்”

” வேண்டாம் “

“ஏன்?”

“வேண்டாம்னா, விடேன்”.

“அவங்க வந்து கேட்டா?”

“நான் சொல்லிக்கிறேன்.”

ரேவ், திரும்பவும் கைப்பேசியை எடுத்து இலக்கங்களைத் தட்டினாள்.

“இப்ப யாருக்கு?”

“கனகா மேம்கிட்ட சொல்லனும்ல. அவங்ககிட்ட கூட சொல்லக்கூடாதா?”

“சரி சொல்லு”

கனகா மேமிடம், தெரிவிக்கப்பட்டது.

“சயனா, உன்னோட சொந்தக்காரங்க யாருக்காவது சொல்லணுமா? “

“சொந்தக்காரங்களா? அப்படி யாரும் இருக்கிறாங்களா?”

“இல்ல சயனா, இதெல்லாம்”

“விடு ரேவ். நாங்க கஷ்டப்படுறப்ப, கவலைப்படாதவங்க… இப்போ நான் கவலைப்படறத பார்த்து கஷ்டப்படவா போறாங்க? “

விட்டுவிட்டாள் ரேவ்.

சிறிது நேரத்தில் ‘கனகா மேமும்’ வந்துவிட்டார். சயனாவின் அருகில் வந்து அமர்ந்தவர், அவளை விட்டு அகலவேயில்லை. அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.சிறிது நேரம் கழித்து, சயனாவின் தாயார் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. கனகா மேமும், ரேவும் முன்னின்று முறைப்படி எல்லா காரியங்களையும் செய்தனர்.  காரியங்களில் கலந்து கொள்ளாமல், கலைந்து போய் நின்றாள் சயனா. எல்லாம் முடிந்தபின், இருவரும் சயனாவிடம் வந்தனர்.

“எனக்கு ஒரு டூ டேய்ஸ் டைம் கொடுங்க மேம். தென் கேஸ் பத்தி யோசிக்கிறேன்.” – சயனா.

“டேக் யூவர் ஓன் டைம் சயனா”

“பட், என்னால முடியலனா  வேற யார்கிட்டயாவது கேஸ கேண்டோவர் பண்ணிடுங்க”

“அப்படியெல்லாம் வேண்டாம் சயனா. கண்டிப்பா உன்னால முடியும்”

“என்னால முடியும்னு எனக்கே தெரியும். ஆனா இப்போ முடியுமான்னு தெரியல. அதனாலதான் சொன்னேன்”

கண்களில் கண்ணீர் சொட்ட சொட்ட, நின்று கொண்டிருந்தாள், ரேவ்.

“மேம், இவளை மட்டும் அழாம இருக்க சொல்லுங்க”

“ஏன் ரேவ். அவளே தைரியமா இருக்கா. நீ ஏன் இப்படி பண்ற? “

“அவ ஒன்னும் தைரியமா இல்ல. சும்மா நடிக்கிறா” என்றாள், ரேவ் உண்மையாக. உண்மை சுட்டது.

“சரி ரெண்டு பேரும் வீட்டுக்கு போக வேண்டாம். இன்னைக்கு என்னோட வீட்டுக்கு வந்து தங்கிக்கோங்க. தனியா இருக்க வேண்டாம்”

“அதெல்லாம் தேவையில்லை மேம்” – சயனா.

“இங்க பாரு சயனா, மத்த நேரத்துல நீ சொன்னதைக் கேட்பேன். ஆனா இந்த நேரத்துல முடியாது”

‘நான் உங்களது தலைமை’ , ‘நீங்கள் எனக்கு கீழே வேலை செய்பவர்கள்’ , ‘உங்களை விட நான் வயதில் மூத்தவர்’ , என்று பல விஷயங்கள் அடங்கி வந்த அவரது குரல், அவர்களை அடக்கியது. தன்னுடன், தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, கனகா மேம். அந்த இரண்டு பெண்களையும், தனது ப்ரத்யேக கவனிப்பில் வைத்துக்கொண்டார்.

இரவு உணவிற்குப் பின் சயனா தூங்கச் சென்றாள்.

சாப்பாடு மேசையில் கனகா மேமும், ரேவும்…

“கேஸ் டிடெயில்ஸ் சொல்லு ரேவ்”

“ம்ம்ம். அக்கவுண்ட் ஹேக் பண்ண அந்த நைட், நாலு பேருக்கும், பேங்க்ல இருந்து அனுப்புற மாதிரி ஒரு மெசேஜ்  வந்திருக்கு. “

“எதுல? ஐ மென்ட் போஃன் ஆர் மெயில்”

“மெயில் மேம்”

“அதுல ‘அக்கவுண்ட் ஹேக்டு. கிளிக் ஹியர் டூ செக் யுவர் அக்கவுண்ட் பேலன்ஸ்’ : அப்படின்னு ஒரு மெசேஜ் மேம்”

” நாலும் கிளிக் பண்ணிருச்சா”

“யெஸ் மேம். லிங்கை கிளிக் பண்ண உடனே, அது வேறவொரு பேஜுக்கு போயிருக்கு. அந்தப் பேஜ, பேங்கோட ஹோம் பேஜ் மாதிரி டிசைன் பண்ணிருக்காங்க. ஸோ பேங்க் லாகின் பண்றதுக்காக யூசர் நேம், பாஸ்வேர்ட் கேட்டிருக்கு”

“இவனுங்களும் பேக் பேஜ்(fake page) அப்படின்னு தெரியாமா, டிடெயில்ஸ் கொடுத்திப்பானுங்க. கரெக்டா? “

“யெஸ் மேம். யூஸர் நேம், பாஸ்வேர்டு கிடைச்சா, ஈசியா பேங்க்லருந்து காசு எடுத்திடலாம்ல”

“பட் ரேவ், இங்க மணி டிரான்ஸ்பர் நடந்திருக்கு. அப்போ பின்நம்பர் வந்திருக்கணும்ல. “

“பின்நம்பர் வந்திருக்கு மேம். போஃனுக்கும் ஈமெயில் ஐடிக்கும். “

“ஓகே, இது ரெண்டுல எத ஹேக் பண்ணிருக்காங்க”

” ஈமெயில் ஐடி, மேம்”

“எவ்வளவு டிடெயில்ஸ் கலெக்ட் பண்ணிருக்காங்க. ஒன் மோர் டவுட்”

” யெஸ் மேம் “

“நாலு பேருக்கும் ஒரே பேங்கலயா அக்கவுண்ட் இருக்கு? “

“நோ மேம். வேற வேற பேங்.  இந்த நாலு பேர்லயும் போலீஸூம்  ரிப்போர்ட்டரும் மட்டும்தான் அவங்களா லாகின் பண்ணி இருக்காங்க. அமைச்சருக்கும், அந்த பிசினஸ்மேனுக்கும் அவங்க அவங்க பீஏ  பண்ணியிருக்காங்க”

“இட்ஸ் யூஸ்வல். அத யோசிக்காத”

“ஓவர் நைட்ல நிறைய டீடெயில்ஸ் கேதர் பண்ணியிருக்க. “

“தேங்க்ஸ் மேம். ஐபி அட்ரஸ் லோகேட் பண்ண டிரை பண்றேன்”

“ஹேக்கர் அப்படிங்கறப்ப, அதான கஷ்டம். டேக் ரெஸ்ட். டூ டேஸூக்கு அப்புறமா கேஸ கண்டினியூ பண்ணலாம்”

“ஓகே மேம். “

“சயனாகிட்ட டிடெயில்ஸ் சொல்லு. பட் அவ இந்த ஆங்கிள்ள கொண்டு போக மாட்டானு நினைக்கிறேன்.”

” ம்ம்ம் “

“ஓகே ரேவ், குட் நைட்”

” குட் நைட் மேம்”

*****

சயனா…

பகல் பொழுதுகளில் வெறும் பாறாங்கல்லாய் கனத்த இன்னல்கள் அனைத்தும், இரவில் இமாலய கனம் கனத்தது. வெளிச்சத்தில் கண்ணாமூச்சி ஆடிய கவலைகள், இரவில் கண்முன்னே வந்து நின்று உறக்கத்தைப் பார்க்க விடாமல் தடுத்தது. அவளது கண்கள் அழவில்லை. ஆனால் இதயம் அழுதது.

*****

இரண்டு நாட்களுக்குப் பின், ஒரு  ரெஸ்டாரன்டில்…

அம்மாவாசை இருளில், ஒற்றை தீபத்தின் ஒளி என்ன வெளிச்சம் தரமுடியுமோ, அந்த ஒளி வறட்சியின் தன்மையில் அமைக்கப்பட்டிருந்தது.

பஞ்சுப் பொதியாய் போடப்பட்டிருந்தன இருக்கைகள். அதில் ஒன்றில் ரேவ் மற்றும் சயனா.

சயனாவின் முகத்தில், எப்பொழுதும் இருக்கும் தெளிவு தெரியாததால், ரேவ், தன்னைத் தெம்பாக உணர முடியவில்லை.

இருந்தும் “சயனா” என்றாள் ரேவ்.

“ம்” என்று சுருக்கென்று சூழல் உணர்ந்தாள், ரேவின் அந்த அழைப்பில்.

“என்ன யோசிக்கிற? “

“நத்திங்”

“இல்லை, ஏதோ இருக்கு” –

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ரேவ்”

“சொல்லு சாய்னா” – அம்மாவின் நினைவோ என்ற அச்சத்தில், அழுத்தம் கொடுக்கப்பட்டது.

“ஓகே, அந்த ஆப்பிரிக்கா பையனப் பத்திதான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன்”

ரேவ் நினைத்தது போல இல்லை. சயனாவின் எண்ணத்தில், ‘எவனோ ஒருவன்’.

“அவனுக்குப் பேர் இருக்கு. மனோகர்னு சொல்லு” என்று, சயனாவைத் திருத்தினாள்.

“சரி ரேவ், மனோகர் பத்திதான் யோசிக்கிறேன்”

“ஏன்? என்ன திடீர்னு?”

“இப்படி நடக்கிறதுக்கு முந்தின நாள் நைட்டு, அது சொல்லிச்சு ரேவ்”

“அம்மாவா?”

“ம்ம்ம்”

“என்ன சொன்னாங்க? “

“நான் மனோகர கல்யாணம் பண்ணா, அது ரொம்ப சந்தோஷமா இருக்குமாம்”

‘இவள், அம்மாவிற்காகத்தான் அவனைப் பற்றி பேசுகிறாளா’ என்று தெரிந்ததும், ரேவ் தளர்ந்தாள்.

“இதுவரைக்கும் அது சந்தோஷமா இருந்து நான் பார்த்ததே இல்லை. திடீர்னு அந்த மாதிரி சொன்னதும் ஒரு மாதிரி ஆயிடுச்சு”

“நீ மட்டும் அந்தப் பையன கல்யாணம் பண்ணா, அம்மா ரொம்ப சந்தோஷப் படுவாங்க ரேவ்” – ரேவின் அந்தப் பேச்சு, ‘எனக்கும் அதுதான் சந்தோஷம்’ என்று சொன்னது.

” ம்ம்ம் “

” சரி சொல்லு, எப்ப மனோகரோட பேசப் போற?”

“பேரு மனோகர்னு தெரியும் ரேவ். ஆப்பிரிக்கால இருக்கான். கேமராமேன், போட்டோகிராபர். ஆனா இத தவிர, எனக்கு வேறு எதுவுமே தெரியாது. “

“நீ இன்ரெஸ்ட் எடுக்கலனு தெரிஞ்சதும், நானும் எதுவும் கண்டுக்கலை. நிஜமாவே சொல்றயா சயனா, வேற எதுவுமே தெரியாதா? “

“ம்கும், தெரியாது”

“அவனோட போஃன் நம்பர் “

” ம்கும், தெரியாது”

” அவன் வேல பார்க்கிற இடம். ஐ மென்ட் சேனல் நேம்”

“ம்கும், தெரியாது”

“அவனோட ஸ்டேயிங் அட்ரெஸ் “

” ம்கும், தெரியாது”

” பெர்பெக்ட் சயனா”

” வ்வாட்”

“இத்தனை ‘தெரியாது’ சொல்ற பார்த்தியா? அதான் லவ் பண்றதுக்கு பேசிக் குவாலிபிகேஷன்” – காதல் ‘டிகிரி ‘ வாங்கியவள் போல் பேச்சு.

“அப்படிப் பார்த்தா? அந்தக் ஹேக்கர் யாருன்னு தெரியாது. பெயர் தெரியாது. ஊர் தெரியாது. எங்க இருக்காங்கன்னு தெரியாது. அதுவும் குவாலிபிகேஷனா, நீ சொல்ற மாதிரி லவ் பண்றதுக்கு” – சயனா.

காதலின் தகுதிகள் பற்றிப் பேசும் போது, சம்பந்தப்பட்ட நபருக்கு யார் நியாபகம் வருகிறார்களோ, அந்த ‘யார்’ தானே, அந்த நபருக்கு ‘யாதும்’.

“நீ ஏன் இப்படி பேசற?  அது ஹேக்கர் அவ்வளவுதான். ஆணா? பெண்ணா? அப்படினு நமக்குத் இன்னும் தெரியாது. நீயா ஏதாவது கற்பனை பண்ணாத”

“ஸாரி,  டக்குன்னு மைன்ட் அந்த ஹேக்கரோட கனெக்ட் ஆயிருச்சி”

சிந்தனை, அந்த ‘ஹேக்கருடன்’ சிக்கிக் கொண்டது என்பதுதானே இதன் பொருள்.

ரேவின் முகத் தெளிவின்மை கண்ட சயனா, “ஹே, மைன்டுதானு சொன்னேன். மனசுனா சொன்னேன். ” என்று, மேலும் குழப்பினாள்.

“உன்னோட மனசு மனோகருக்கு மட்டும்தான், சரியா” – சிறுபிள்ளைத்தனமாக ரேவின் அடம். உற்ற தோழியே என்றாலும், ‘இவன்தான் உன் உரியவன்’ என்று சொல்லும் உரிமை கிடையாதல்லவா? – பொதுவான கருத்து. இரு தோழிகளுக்கும், இது என்றுமே கருத்தில் வராது.

“இங்க பாரு ரேவ்,  இவனா? அவனா? அப்படிங்கிற டிபேட்டுக்குப் போகாத”

“அஹெயின் நீதான் சொல்ற. அந்த ஹேக்கர், அவனாவும் இருக்கலாம் அவளாவும் இருக்கலாம்”

“வேற பேசிறியா” என்றாள், சலிப்புடன் சயனா.

“அம்மாக்கு இந்த அலையன்ஸ் எப்படி தெரியும்? “

‘விடமாட்டியா’ என்பது போல் சயனாவின் பார்வை.

” சொல்லு… “

“சொந்தக்காரங்க சொன்னாங்கனு  சொல்லிச்சி”

“அது யாருனாவது தெரியுமா? இல்ல அதுவும் தெரியாதா? “

“நீ ஏன் இவ்வளவு அவசரப்படுற. இதப் பத்தி, நான் எந்த முடிவும் எடுக்கல “

” ஏன்? “

“நானா எதுவும் இன்ஷியேட் பண்ண பிடிக்கல.”

“அவ்வளவுதான, இன்னும் ரெண்டு நாள்ல மனோகர உன்கிட்ட பேச வைக்கிறேன்.”

“போதும். ஹேக்கிங் பத்தி டீடெயில்ஸ் கண்டுபிடிச்சியா? அதச் சொல்லு”

“எந்த உலகத்தில இருக்க? பப்ளிக் ப்ளேஸ்ல வச்சி பேசற விஷயமா இது? “

“அஹெயின் ஸாரி. “

சயனாவின் அத்தனை ‘ஸாரி’களும் ரேவிற்கு உணர்த்தியது ஒன்றுதான். அது, சயனாவின் சங்கடங்கள்.

இந்தக்கணம்,

கஃபே சிப்பந்தி, ஒரு டிரேயைக் கொண்டுவந்து வைத்து விட்டுச் சென்றார்.  ட்ரேயில் ஒரு காஃபி கோப்பை, ஒரு கிண்ணத்தில் சக்கரை வில்லைகள். ஒரு சிறிய தேக்கரண்டி.

கோப்பையை எடுத்து ஒரு மிடரு வைத்தவள், சிப்பந்தியைத் திரும்பவும் அழைத்தாள்.

” இப்ப எதுக்கு அவரக் கூப்பிடுற”

“ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்ச விஷயம், கேட்டுக்கிறேன்”

“என்ன கேட்கப் போற?”

அதற்குள், சிப்பந்தி அவர்கள் மேசை அருகில் வந்து நின்றார்.

“காஃபில சுகர் இல்லை” என்றாள் கடுப்பான குரலில்.

‘இதுதான இன்னைக்கா’ என்பது போல் ரேவ்.

“மேம், சுகர்  க்யூப்ஸ் ஆர் அவெலபிள் ஹியர். யூ கேன் யூஸ் இட்” – வெண்ணையைப் போல் மென்மையுடன் சிப்பந்தியின் குரல்.

“புரியல”

“சுகர், டேபிள்ல இருக்கு. எவ்வளவு வேணுமோ அவ்வளவு போட்டு கலக்கிக்கோங்க”

“அத செய்ய முடிஞ்சா, வீட்லே நான் செஞ்சிருக்க மாட்டேனா?  இங்கே ஏன் வரப் போறேன்?” – கடுப்பு கொஞ்சம் கத்தலாக மாறியிருந்தது.

“இல்ல மேம், இங்க இப்படித்தான்” – சிப்பந்தியின் சிறிய சீற்றம்.

அந்தக் கத்தலைக் காணத் தயாராகினர், வாடிக்கையாக வேடிக்கைப் பார்க்கும் மனிதர்கள்.

“சயனா, எல்லாரும் பார்க்கிறாங்க. ப்ளீஸ் உட்காரு” – தன் தோழியை வேடிக்கைப் பொருளாகப் பார்க்க விரும்பாத, ரேவ்.

“இல்லே ரேவ், பத்து ரூபாய்  கொடுத்தாலே, நுரை பொங்க காஃபி போட்டு, கைல கொடுக்கறானுங்க. இவனுங்க  நூறு ரூபா வாங்கினது மட்டுமில்லாமல், நூதனமாய் நம்மளயே காஃபி போடச் சொல்றானுங்க”

நியாயம் தான். ஆனால் நயமாக உணரப்படவில்லை, சூழு இருந்த சுற்றத்தாரின் முகச்சுளிப்பில்.அதற்குள்  மேனேஜர் வந்திருந்தார்.

” வாட் கேப்பண்ட்? வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்? ” என்றார், ‘அதே’ இல்லை அந்த ‘கோட்’ போட்ட மனிதர்.

‘மறுபடியுமா’ என்று நினைத்தவாறு, ” ஐ பிரிஃபர்  காஃபி வித் சுகர். வில் யூ” என்றாள்.

“ஸுயர் மேம்” என்றார்.

பின் அவர் சிப்பந்தியிடம் திரும்பி, அதற்கானக் கட்டளைகளைப் பிரப்பித்தார். அதன் பிறகே சயனா சாந்தமானாள்.

“ஏன் சயனா, இப்படிக் கோவப்படுற. நீ கண்டிப்பா யோகா பண்ணனும். “

“ரெண்டு நாளா சொல்லாம இருந்த, இன்னைக்கு திரும்பவும் ஸ்டார்ட் பண்ணிருக்க”

“எப்படி கத்தற? அதான் சொன்னேன்”

“அதான் உனக்கு எதுவும் கேட்கலையா? “

” ம்” – கேள்வியாய் ரேவ்.

“உன் போஃன் அடிக்குதுமா. எடுத்துப் பேசு”

அப்போதுதான் அதை கவனித்து போஃனை எடுத்தாள். எதிர் முனையில் பேசப்பேச முகம் ஒருவித விருப்பமின்மை உணர்வை பிரதிபலித்தது.

பேசிக்கொண்டே சயனாவிடம், ‘உன் போஃனை எடுத்துப் பாரு’ என்று சைகையால் கூறினாள். சயனாவும் எடுத்துப் பார்த்தாள். கனகா மேமிடம் இருந்து வந்த பதினைந்து அழைப்புகளைத் தவறவிட்டிருந்தாள்.

‘என்ன’ என்பது போல் ரேவிடம் சைகையால் கேட்டாள். ‘இரு’ என்பது போல் சைகை வந்தது. பின் போஃன் அழைப்பை துண்டித்து விட்டு, சயனாவின் முகத்தைப் பார்த்தாள்.

“நீ ஏன் போஃன அட்டென்ட் பண்ணல?”

“சைலன்ட் மோட். என்ன ரேவ்? என்னாச்சி? “

“வா, உடனே ஆபீசுக்கு போகணும்”

“ஏன்? எதுக்கு?”

“அந்த ஹேக்கர்கிட்ட இருந்து  கொரியர் வந்திருக்காம். அதான், மேம் கால் பண்ணி வரச் சொல்றாங்க”

‘இந்த ஹேக்கர் ஏன் இவ்வளவு சீக்கிரமா என்ட்ரி ஆகுது ‘ என்ற எண்ணம் ரேவிற்கு. ஆனால், சயனாவின் முகத்தில், இரண்டு நாட்களுக்குப் பிறகு புன்னகை. அதுவும் வெற்றிப் புன்னகை!!