உலாவரும் கனாக்கள் கண்ணிலே-1
காலம் தோறும் கண்ட காட்சிகள்
கலைந்தாலும், கலைத்தாலும்?
முற்றுப்பெறாத காவியம்… கனாக்கள் !!!
மூடிய இமைகளுக்குள் மூச்சு முட்டும்
கல்யாணக் கனவுகள்…!!!
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள சுபலெட்சுமி திருமண மஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வளர்பிறை முகூர்த்தத்தில் ஒரே மண்டபத்தில் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரு திருமணங்கள்.
வழிநெடுக ஃப்ளக்ஸ், அதில் திருமணத்திற்கு வருகை புரிந்திருந்த சிலரின் அடையாளங்கள் மறைக்கப்பட்டு, படு டிப்…டாப்பாக மாற்றஞ் செய்யப்பட்டு, கம்பீரமாக காட்சியளித்தனர்.
சில ஃப்ளக்ஸ்கள் சந்திரசேகர் வெட்ஸ் ஜனதா எனவும், சில ஃப்ளக்ஸ்கள் அமர்நாத் வெட்ஸ் அர்ச்சனா எனவும், வாழ்த்துகள் கூறிய பல நல்ல உள்ளங்களை தனக்குள் மத்தாப்பூ போன்ற செயற்கைப் புன்னகையை ஒட்ட வைத்த முகங்களை தன்னகத்தே கொண்டவாறு, வந்தவர்களை வரவேற்றது.
வீசுகின்ற காற்றை தடை செய்த பல ஃப்ளக்ஸ்கள், பேசுகின்ற வார்த்தைகளை அமைதியாகக் கேட்டவாறு நின்றிருந்தன.
விருத்தாசலம், அருகேயுள்ள சத்யவாடி கிராமத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன், சுசீலா தம்பதியரின் மகன் சந்திரசேகருக்கும், நெய்வேலி டவுன்சிப்பைச் சேர்ந்த கிருஷ்ணன், அன்பரசி தம்பதியரின் மகள் ஜனதாவிற்கும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் முடிந்திருந்தது.
நெடுஞ்செழியன் அவர்களின் சொந்த திருமண மண்டபம் ஆகையால், முதல் முகூர்த்தத்தில் அவரின் மகன் சந்திரசேகருக்கு ஜனதாவுடனும், அடுத்த முகூர்த்தத்தில் அவரின் மகள் அர்ச்சனாவிற்கு அமர்நாத்துடனும் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
பெண் கொடுத்து பெண் எடுக்கப்பட்ட திருமணத்தில், விருந்தைவிட விமர்சனங்கள் விவாதிக்கப்பட்டது.
“பொண்ணு எப்டி இருக்குனு பாரு, அவங்கம்மா ஏன் அவசரப்பட்டு இந்த பொண்ண முடிக்கிறானு தெரியல”
“வசதியுள்ளவங்க, காசு பணம் வெளிய போகாத அளவுல அவங்களுக்குள்ள பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்கறாங்க”
“இருந்தாலும் பையனுக்கு என்ன குறையோ! அதான் இந்த பொண்ண சரினு சொல்லியிருப்பாங்களா இருக்குமோ?!!”
“ஆனாலும், நம்ம வீட்டுல இருக்கற பசங்கள்ளாம் இப்படி ஒரு பொண்ண பார்த்தா சரினு சொல்லுங்களா? இந்த காலத்துலயும் இப்டி ஒரு பையன்!”, என அங்கலாய்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.
மாநிறம், நாட்டு உயரத்தில் வாட்ட சாட்டமாக இருந்த சந்திரசேகர், சந்தன நிற பட்டு வேஷ்டி, சட்டையில் மாப்பிள்ளைக்குரிய மிடுக்குடன் இருந்தான்.
மெரூன் வண்ண ஸ்டோன் வைத்த காஞ்சிப்பட்டில் மாநிறத்திற்கும் குறைவான நிறத்துடன், பழகினால் பிடிக்கும் குணத்துடனும், சுமாரான தோற்றத்துடனும், வசியமில்லா ஆனால், வயதிற்கான வனப்புடன் இருந்த ஜனதா, சந்திரசேகருக்கு சற்றும் பொருத்தமில்லாத பெண்ணாக திருமணத்திற்கு வந்திருந்த பெண்களால் விமர்சிக்கப்பட்டதை அறியாதவளாய் இயற்கையாய் புன்னகைத்திருந்தாள்.
“இவ, என் ஸ்கூல் மேட், இப்ப சென்னைல இருக்கா…”
“இது, என் காலேஜ் மேட், பங்களூரு, ஐடி கம்பெனில வேலை பாக்குறா…”
“இவங்க, என் சீனியர், பிஜி படிக்கும் போது ஹாஸ்டல் ரூம் மேட், வேற டிப்பார்ட்மெண்ட்…”
“இவ என் பெஸ்ட் ஃப்ரண்ட்…”, என தனது திருமணத்தில் கலந்து கொண்ட தமது தோழிகளை சளைக்காமல் கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ஜனதா.
சந்திரசேகரும் வந்தவர்களை இன்முகத்துடன் வரவேற்று, நன்றி கூறியதோடு, கண்டிப்பாக உணவருந்திச் செல்லுமாறு அன்புக் கட்டளையிட்டான்.
சந்திரசேகர் தற்போது சுயதொழிலில் ஈடுபட்டு இருந்ததால், தொழில் முறை சார்ந்த பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றவண்ணம் இருந்தனர்.
—————-
அர்ச்சனா, அமர்நாத் இருவரின் பொருத்தங்கள்… வந்தவர்களால் வரவேற்கப்பட்ட அளவு, சந்திரசேகர், ஜனதா இருவரின் பொருத்தம் வரவேற்கப்படவில்லை.
“ஐயா” பட நயன்தாரா சாயலில், ரோஸ்மில்க் எசன்ஸ் நான்கு சொட்டு கலந்த பாலின் வண்ணத்தில், புன்னகையை இதழில் தேக்கியபடி, காண்போரை கவரும் வண்ணம் இருந்த அர்ச்சனா, மெஜந்தா நிறத்தில் ஸ்டோன் வைத்த காஞ்சிப்பட்டில் ஐந்தரை அடி உயரத்தில் இருக்க,
அருகே வெண்ணிற பட்டு வேஷ்டி, சட்டையில் உணர்வுகளை வெளிக்காட்டாமல், புன்னகையை ஒட்ட வைத்த இதழ்களுடன், மாநிறத்தில், ஐந்தே முக்கால் அடி உயரத்தில், களையான முகத்துடன் நின்றிருந்த அமர்நாத், இருவரும் அனைவராலும் பொருத்தமான ஜோடியாக போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
“இது நல்ல பொருத்தமான ஜோடி!!!”
“ஆமாடி, போட்டு இருக்கறதெல்லாம் தங்கமா? இல்ல வெளியில கல்யாணத்துக்கு வாங்குன செட்டானு தெரியல!?”
“அவங்ககிட்ட இருக்கற காசு பணத்துக்கு, செட்டெல்லாம் வாங்க மாட்டாங்க, எல்லாம் தங்கமும், வைரமுமாத்தான் இருக்கும்”
“புது டிசைனா… ரொம்ப நல்லாருக்கு!!”
“பொண்ணுக்கு அலங்காரம் பண்ணதுல தான் இவ்வளவு அழகா தெரியுது!”
“ஆமா, புது மாடலா முடி அலங்காரம் அழகா இருக்கு!”
“நடிகை மாதிரி ப்யூட்டி பார்லர்காரங்க மாத்திட்டாங்க”
“நிஜத்துலயே பொண்ணு அழகு தான்!, நான் பாத்திருக்கேன்”
“பையனும் ஒன்னும் குறை இல்ல, பாக்க ராஜாவாட்டம் இருக்கான்!”
“ஆமா, நல்ல வேலைல எங்கயோ, வடநாட்டு பக்கமா இருக்கானாம்”
“கவர்மெண்ட் உத்தியோகமா?”
“அது என்னனு தெரியல, நல்ல சம்பாத்தியம்னு கேள்விப்பட்டேன்”, என அர்ச்சனா, அமர்நாத் தம்பதியை ஆதரித்து சிலர் குறைந்த குரலில் ரகசியமாய் பேசியபடி விருந்துண்ணச் சென்றனர்.
உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் என, சபை நாகரிகம் கருதி இரு திருமண ஜோடிகளையும் வாழ்த்திச் சென்றபடி இருந்தனர் சிலர்.
கறி விருந்து விரும்பப்பட்டாலும், அனைவரது மனதிலும் எழுந்த பதில் தெரியாத, கேட்டுத் தெளிந்து கொள்ள இயலாத கேள்வியுடன், அங்கங்கு கூடி, யூகத்துடனான கருத்துப் பரிமாற்றங்களுடன் திருமணவிழாவில் கலந்து கொண்டு, கலைந்து சென்ற வண்ணம் இருந்தனர் சிலர்.
மதியம் வரை மண்டபத்தில் இருந்து விட்டு, சம்பந்தகாரர்கள் இருவரும், அவரவர் மகன், மருமகளுடன் அவரவர் இருப்பிடம் நோக்கிச் சென்றனர்.
———————
கல்வியில் பின் தங்கிய சத்யவாடி கிராமத்தில், பெரும்பாலும் மேல்நிலைக் கல்வியோடு நின்றுவிடுகின்றனர். கடலூர் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இயங்கும் பீங்கான் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைப் பணிகள், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என ஏதேனும் ஒன்றில் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள்.
அப்படியொரு கிராம சூழலில் வளர்ந்ததால், சந்திரசேகர் தனது கல்வித்தகுதியை பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மேல் கொண்டு செல்லவில்லை. விருத்தாசலத்தில் தொழில் செய்து வரும் தந்தைக்கு உதவியாக இருந்து தொழிலைக் கற்றுக்கொள்ளுமாறு தாய் பணிக்க, அவனும் அதை ஏற்றுக்கொண்டான்.
மூத்த மகள் மங்கையர்கரசிக்கு திருமணத்தை முடித்துவிட்டு சுசீலா தம்பதியர் சற்று நிதானித்தே மகனுக்கு திருமணம் செய்ய எண்ணியிருந்தனர். சந்திரசேகரும் புதிய தொழில்களில் கால்பதித்து இருந்ததால் சற்று கால அவகாசத்திற்கு பின் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியிருந்தான்.
தொழிலில் தன்னால் இயன்ற வகையில் நல்ல முன்னேற்றத்தினை கொண்டு வர அவனும் பாடுபட, வருமானத்திற்கு குறை இல்லாமல், மேற்படி சொத்துக்கள் சேர்ப்பதிலும், தொழிலை விரிவுபடுத்துவதிலும் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டான்.
சந்திரசேகரின் திருமண பேச்சினை எடுக்கும் வரை அவனுடைய கல்வித்தகுதியை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை.
அவனுடைய பெண் பார்க்கும் படலத்தில் குறைந்த பட்ச தகுதியாக, மணப்பெண்களால் எதிர்பார்க்கப்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி, டிப்ளமோ இல்லாத காரணத்தால் திருமணம் கைகூடுவதில் இழுபறியாக இருந்தது.
சொந்தத்தில் இருந்த பெண்களை எடுக்க சுசீலா யோசிக்க, நெடுஞ்செழியன் தனது மனைவியின் எண்ணத்தை உணர்ந்து வெளியில் பெண் பார்த்தார்.
அதிக இடைவெளி சந்திரசேகருக்கும், அர்ச்சனாவிற்கும் இடையில் இருந்ததால், முதலில் சந்திரசேகருக்கு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தார் நெடுஞ்செழியன். ஆனால் பெண் பார்க்கும் படலம் முடிவிற்கு வராத நிலையில், இளங்கலை முடித்து விட்ட அர்ச்சனாவிற்கும் மணமகனைத் தேடும் பணியையும், இணைத்து மேற்கொண்டார்.
அந்நிலையில் முதுநிலை கணினி அறிவியல் முடித்திருந்த ஜனதாவின் வீட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த சந்திரசேகரை மருமகனாக்கிக் கொள்ள இசைந்த வேளையில், ஜனதாவை பெண் பார்க்க சென்றனர்.
ஜனதாவின் தோற்றத்தைக் கண்டவுடன் மனக்குறை வந்தபோதிலும், குணமிருந்தால் போதும் என மனதை தேற்றினார் சுசீலா. மகனின் வயதை நினைத்தும், இதுவரை கடந்து வந்த பெண் தேடும் படலத்தால் உண்டான அதிருப்தியிலும் ஒப்புக்கொள்ள எண்ணினார்.
ஆனாலும், சந்திரசேகரிடம் தனது எண்ணத்தினைக் கூறி, பெண் படித்திருக்கிறாள், மற்றபடி சுமாரான பெண் என்பதையும் கூறினார். அவனுடைய விருப்பத்தை கேட்டபோது, யோசித்து சொல்வதாக முதலில் கூறிவிட்டான்.
சுமாராக படித்த பெண்களே தன்னை நிராகரித்து வந்த நிலையில்…, முதுநிலைப் பட்டாதாரியான பெண்ணுக்கு விருப்பமென்றால் தனக்கும் சம்மதமே என்றிருந்தான்.
தனக்கு இல்லாத படிப்பு தனது வாழ்க்கைத் துணையிடம் இருந்தால் வருங்காலத்தில் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஏதுவாக இருக்கும் எனக் கணித்திருந்தான்.
அப்போது அவர்கள் குடும்பத்தில் அனைவரைப் பற்றிய அறிமுகங்கள் மற்றும் அறிதலுக்குப் பின், ஜனதாவின் திருமணத்தால் தனது திருமணத்தைத் தவிர்த்து வந்த கிருஷ்ணன்-அன்பரசி தம்பதியரின் இரண்டாவது மகன் அமர்நாத் பற்றி அறிய வர, அமர்நாத்தின் புகைப்படத்தினை பார்க்க விருப்பம் தெரிவித்தார் நெடுஞ்செழியன்.
கிருஷ்ணன் அவர்களின் மொபைலில் இருந்த அமர்நாத்தின் புகைப்படத்தை அவரிடம் காட்டினார். களை, கல்வி மற்றும் உத்யோகம் என எல்லா விதத்திலும் அமரின் நிலை நிறைவைத் தர, தனது மகளுக்கு சரியாக வருமென்று தோன்றியதால், படித்த தனது மகளை அமர்நாத்திற்கு பார்க்க விரும்பும் எண்ணத்தை வெளியிட்டார்.
இதைக் கேட்ட கிருஷ்ணன் தம்பதியினரும் அர்ச்சனாவிற்கும், அமர்நாத்திற்கும் பொருத்தம் பார்த்தனர். பொருந்தியவுடன் இருவரும் பெண்ணை நேரில் பார்க்கச் சென்றனர்.
பார்த்ததும் பிடித்துவிட, மருமகளின் அழகை மூலதனமாக்கி, மகனிடம் பெண் பார்த்த விடயங்களைப் பகிராமலேயே… அவர்களது மகனின் மேல் இருந்த நம்பிக்கையில் முதலில் சரியென்று விட்டனர் பெற்றோர்கள்.
பிறகே மொபைலில் அமருக்கு விடயத்தைப் பகிர்ந்ததுடன், அர்ச்சனாவின் புகைப்படத்தையும் மகனுக்கு அனுப்பி வைத்திருந்தார் கிருஷ்ணன்.
விருத்தாசலத்தில் இருக்கும் வீட்டிற்கு வந்த மணமக்களான சந்திரசேகர் – ஜனதா இருவரையும் ஆரத்தி எடுத்து அழைத்துச் சென்றனர். சாமி அறைக்குள் சென்ற மருமகளை விளக்கேற்றச் செய்தார் சுசீலா. ஜனதா அனைத்தையும் இன்முகத்துடன் செய்தாள்.
மற்ற சம்பிரதாய பழக்க, வழக்கங்களைச் செய்த பிறகு, ஜனதாவை அவளுடைய பொருட்கள் வைக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றார், சுசீலா.
“ஜனதா, இந்த ரூம்ல உன்னோட பொருட்களெல்லாம் இருக்கு, முகூர்த்தபட்ட மாத்திட்டு, எதாவது சில்க் பேட்டர்ன்ல ஒரு நல்ல சாரிய உடுத்திட்டு இரு, உங்க வீட்ல உனக்கு துணைக்கு வந்தவங்களையும் இங்க கூட்டிட்டு வர சொல்றேன், உனக்கு துணைக்கு என் மச்சான் மக அபியயும் இங்க அனுப்பி விடுறேன்”, என்றவர் முதல் தளத்தில் இருந்த அறையில் ஜனதாவை இருக்குமாறு கூறிவிட்டு அகல,
“சரி அத்த, தலை அலங்காரமெல்லாம் அப்படியே இருக்கட்டுமாத்த?”, ஜனதாவின் கேள்விக்கு நின்றவர்
“அபிய வரச் சொல்றேன், அவ உனக்கு உதவி செய்வா, மஹாலுக்கு வர முடியாதவங்க வீட்டுக்கு வருவாங்க, அதனால சீக்கிரமா ரெடியாகு”
“சரி அத்த”, சுசீலா கிளம்பிச் சென்றவுடன், தனக்கென ஒதுக்கப்பட்ட அறையின் கதவினைப் பூட்டினாள். பிறகு, அங்கு வைக்கப்பட்ட தனது சூட்கேஸில் இருந்த மக்கம் ஹெவி வர்க் ப்ளவுஸ் மற்றும் சாண்டல் வண்ண சில்க் சாரி எடுத்துக் கொண்டாள்.
ரெஸ்ட் ரூம் சென்று, தன்னை ரெஃப்ரெஷ் செய்தவள், முகூர்த்தப் பட்டை மாற்றிவிட்டு புதிய சேலையை உடுத்தினாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்.
அவளுக்கு துணையாக அவர்கள் வீட்டு சார்பில் அவளுடன் வந்திருந்த ஒன்று விட்ட அண்ணனின் மனைவி சீதாவுடன், அபியும் வந்திருந்தாள்.
“அட, அதுக்குள்ள சாரி மாத்திட்டீங்களா?”
“அத்த சீக்கிரமா ரெடியாகச் சொன்னாங்க”
“சித்தி எங்கிட்டயும் சொன்னாங்க, ஆனா, நீங்க ரொம்ப ஃபாஸ்ட்!”
“தலை அலங்காரம் கொஞ்சம் எடுத்துட்டு, சிம்பிளா எதாவது பண்ணுங்க… அண்ணி”
“என்ன சொன்னீங்க? அண்ணியா!”
“ஆமா…, அண்ணி தான நீங்க எனக்கு”
“உங்கள விட சின்ன பொண்ணு நானு, அண்ணினு சொல்லாதீங்க… அபினு பேரு சொல்லிக் கூப்பிடுங்க”
“சரி இனி அப்படியே கூப்பிடுறேன் அண்ணி”
“திரும்பவுமா! ஏன் இப்படி? இனி அண்ணினு கூப்பிட்டா நான் என்னனு கேக்கமாட்டேன்”
“சாரி அபி, நேரமாகுது சீக்கிரம் எனக்கு தலை அலங்காரம் மாத்திவிடுங்க”
“இவங்க, என் அண்ணன் வைஃப்”, ஜனதாவின் முகூர்த்த புடவையை ஃபேன் காற்றில் உலருமாறு போட்டுக் கொண்டிருந்த ஜனதாவின் அண்ணன் மனைவி சீதாவை, அபிக்கு அறிமுகம் செய்து வைத்தாள், ஜனதா.
“ம்… தெரியும், ரெண்டு பேரும் வரும்போது, செல்ஃபா அறிமுகமாகிட்டோம்”
“எங்க அண்ணி எங்க போனாலும் டக்குனு எல்லார்கிட்டயும் பழகிருவாங்க!”
“நானும் அப்படிதான்”, என பேசியவாறு மணமகளின் பின்னலில் இருந்த அலங்காரங்களை அகற்றிவிட்டு, புதிதாக தலையை பின்னி, தலையில் அதிகமாக மல்லி, கனகாம்பரம் பூவை வைத்து விட்டாள், அபி.
“மதுர பக்கமெல்லாம் பூ நெருக்கமா கட்டுவாங்க, தலைல வச்சா அப்படி ஒரு அம்சமா இருக்கும், ஆனா இங்கல்லாம் இடைவெளி விட்டு கட்டுறது நல்லாவே இல்ல” என சீதா சந்தடி சாக்கில் தனது ஊர் பெருமையை அள்ளி விட்டவாறு பூவைக்க உதவினாள்.
“அப்டியா, இங்கல்லாம் நாங்க ஆரம்பத்துல இருந்தே இப்படியே பாத்து பழகினதால் எங்களுக்கு ஒன்னும் தெரியல”
“எங்க அண்ணிக்கு எப்போதும் அவங்க ஊருனா ஒரு படி மேல தான்”, என பேசியபடி அலங்காரங்களை முடிக்க, சரியான நேரத்தில் காஃபீ எடுத்து வர, நிதானமாக குடித்துவிட்டு, மூவரும் தரை தளத்தில் இருந்த ஹாலுக்கு வந்தனர்.
உடைமாற்றி வந்திருந்த சந்திரசேகர், புதிய அலங்காரத்தில் சற்றே மிரண்ட பார்வையை மறைத்தவாறு வந்த மனைவியை, மென்னகையுடன், அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவாறு கைபேசியில் வந்திருந்த தகவல்களை, திருமண வாழ்த்துகளை பார்ப்பது போல், பிறர் பாராமல் தன்னவளை பார்த்தவாறு… அமர்ந்திருந்தான்.
தன்னவனின் பார்வையை உணராத பாவையவள், பார்வையிருந்தும், பார்வையற்றவள் போல, புது இடமாகையால் உட்கார இடமிருந்தும்… என்ன செய்யலாம் என மனதில் யோசித்து, நடையில் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
நாணத்தால் அல்ல! அங்கு கூடி இருந்தவாறு, இவளின் வருகையை, செயலை, கருத்து சொல்லக் காத்துக்கொண்டிருக்கும் கமெண்ட்ரிகளின் கண்களில் கண்ட பிரகாசம் சொன்ன செய்தியால் வந்த தயக்கம் அது!
“மீன் கொடி தேரில் மன்மதராஜன்… “, எனும் ரிங் டோனில் நிகழ்விற்கு வந்தவள் ‘யாருடையது அத்த பழைய இந்த ரிங்க் டோன்?’ என அறிந்து கொள்ளும் ஆவலில் பார்வையை சுழற்ற அவள் கண்களில் சிக்கியது கணவனின் இயல்பான அலைபேசியுடனான பேச்சு
பார்வையை மாற்றாமல் கணவனைக் கண்ணெடுக்காமல் கண்டவளின் கண்களில் கணவனின் பதட்டமான முகம் பட, அவளைக் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்தவர்களின் கண்ணில் அவளின் முகமாறுதல்… சொன்ன செய்தி, அதற்கு காரணமானவனை பார்க்கச் சொன்னது.
பார்வைக்குள் வந்தது, எழுந்தபடி பேசிக்கொண்டிருக்கும் சந்திரசேகரின் பதற்ற முகத்துடனான பேச்சு. அவனில் கவனம் வைத்த அங்கிருந்த அனைவரும், இன்னும் அலைபேசியுடன் உரையாடுபவனை பார்த்திருந்தனர், அவன் கூறப்போகும் செய்திக்காக…
மணப்பெண்ணும் பயந்திருந்தாள்… ‘அழைப்பு யாரிடமிருந்து? என்னவாயிற்று? யாருக்கு?’ எனும் பல கேள்விகளைத் தனக்குள் கேட்டவாறு…
உயிர் தொடும் கனவுகள் கலைந்தால்
உற்சாகம் போனதோடு உறக்கமும் பறி போகும்…!
பழி யாருக்கு?!!!
———–