KVK-14
KVK-14
“ அந்த ஆத்துல அடிச்சுட்டு போய்டா உங்க அம்மா ….. ஊரிலிருந்து வந்த எனக்கு ரெண்டு அதிர்ச்சி. மலர் போன துக்கத்துல எங்க அம்மா படுத்த படுக்கையாயிட்டாங்க. மலர் ஆத்துல தண்ணி எடுக்கப் போனப்ப ஆத்தோட போய்டான்னு சொல்லிட்டாங்க. அவ படத்துக்கு மாலை போட்டு வெச்சிடாங்க. அந்தப் பெரியவர் வந்து அழுத மாதிரி
நடிச்சிட்டு இருந்தாரு. மனோகருக்கு செய்தி அனுப்பிட்டோம்ன்னு சொல்லிட்டாங்க” சொல்லிவிட்டு யுவாவை கவனிக்க , அவனோ பல்லைக் கடித்துக்கொண்டு கை முஷ்டிகள் இறுகி நரம்புகள் தெறிக்க அமர்ந்திருந்தான்.
அதைப் பார்த்துச் சற்று பதட்டமான அன்பரசு, அவன் கையைப் பற்றினார்.
“ முழுசா சொல்லிடுங்க மாமா ….. “ தன் தாயின் அறைக் கதவைப் பார்த்த படியே சொல்ல
“ உனக்குக் கஷ்டமா இருந்தா……. “
“சொல்லிமுடிங்க “ அழுத்தமாகச் சொல்லவும் அவர் மீண்டும் தொடர்ந்தார்.
“ மனோகர் ஒரு வாரம் ஆகியும் வரல. அதைப் பற்றிக் கேட்கப் போனபோது, அவன் அன்று வருவதாகவும் அன்று அவனுக்கும் அவன் அத்தை மகளுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் சொன்னார்கள். கோபம் வந்த நான் அந்தப் பெரியவரைப் பார்த்துக் கேட்க , மனோகர் சம்மதத்தோடு தான் நடந்ததாகச் சொல்ல, நான் நம்பமால் மனோகர் வரும் வரை அங்கேயே காத்திருந்தேன். என் அம்மா இறந்ததாக ஒருவன் வந்து சொல்ல அங்கிருக்க முடியாமல் சென்று விட்டேன்.
அடுத்த நாள் மனோகர் என்னை வந்துப் பார்க்க , அவன் கண்கள் எல்லாம் சிவந்து மிகவும் அழுதிருந்ததைக் காட்டியது.
மலரின் போட்டோவைப் பார்த்து மிகவும் அழுது புரண்டான். அவனுக்கு யாரும் தகவல் சொல்லவில்லை என்று புரிந்தது. அவனுக்குப் பிடிக்காமல் நிச்சயம் செய்து விட்டதாகவும் ஆனால் வேறு யாரையும் அவன் மனைவியாக ஏற்கப் போவதில்லை என்றும் சொன்னான். அவன் இனி தன் தந்தையுடன் இருக்க விருப்பம் இல்லை அதனால் தான் வேலை செய்யும் இடத்திலேயே தங்கிவிடப் போவதாகக் கூறிச் சென்றான்.
அவன் சென்ற ஒரு மணி நேரத்தில் போலீஸ் வந்து என்னைக் கைது செய்தது. மனோகரின் செயின் காணவில்லை , அவன் இங்கு வந்தபோது நான் அதைத் திருடி விட்டேன் என்று மனோகர் புகார் கொடுத்ததாக என்னைக் கைது செய்தனர். இதற்குக் காரணம் யார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனோகர் இதைச் செய்திருப்பானா என்றும் நம்ப முடியவில்லை. ஆனால் அவன் கையெழுத்திட்ட அந்தக் கம்ப்ளைன்ட் பேப்பேரைக் காட்டினார்கள். அதன் பிறகு நான் மனோகரை என் வாழ்நாளில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.
என் தங்கையின் மீது வைத்திருந்த பாசம் அவள் இல்லாதபோது மிகுந்த வேதனை அளித்தது. ஒரு கர்பவதி, வாழவே ஆரம்பிக்காத நிலையில் அவள் உயிர் பிரிந்ததை எண்ணி வருந்தினேன்.
வெளியில் இருப்பதை விடச் சிறையில் இருப்பதே நிம்மதியாக இருந்தது. ஒரு மாதம் சிறைக்குப் பின் என்னை அனுப்பினார்கள். நான் வெளியில் வந்த அன்று மனோகருக்கு மறுநாள் திருமணம் என்று கேள்விப்பட்டேன்.
என் தங்கை இறந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. இப்போது போய் அவன் திருமணத்தைத் தடுப்பதால் மட்டும்
என்ன ஆகிவிடப் போகிறது என்றெண்ணி ஊரைவிட்டுக் கிளம்ப முடிவு செய்தேன்.
அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கதவைத் திறக்க, என் மூச்சே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது. மலர் அழுதுகொண்டே நின்றிருந்தாள். ஆளின் நிலை என் கண்களில் ரத்தக் கண்ணீரை வர வைத்தது. கர்பத்தால் வந்த சோர்வா இல்லை அவள் இத்தனை நாள் பட்ட வேதனையா ? கடவுளே என் தங்கையைக் காப்பாற்று என்று வேண்டிக்கொண்டேன்.
அவளிடம் நடந்ததைக் கேட்க, அவள் ஆற்றில் அடித்துச் செல்வதைக் கண்ட ஒரு பெண்மணி அவளைக் காப்பாற்றித் தன் வீட்டிற்குக் கொண்டு சென்றார், அவருக்குத் தெரிந்த கை வைத்தியத்தை செய்து இவளைக் காப்பாற்றினார். மயக்கத்தில் ஒரு வாரம் இருந்திருக்கிறாள். பின்பு அவளுக்கு ஏற்பட்ட மசக்கைக் காரணமாக அவளால் நடமாடக் கூட முடியவில்லை. அவள் உடல் நிலையைத் தேற்றி அவளைச் சீர் செய்தபின், என்னைக் காண வந்துவிட்டாள்.
அவளிடம் நான் நடந்ததைக் கூறினேன். மறுநாள் மனோகருக்கு கல்யாணம் என்றதும், அவள் அதைத் தடுக்க முயற்ச்சிக்கவில்லை. ‘அவரின் தந்தைக்கு விருப்பமானதை அவர் செய்யட்டும். அவர் நினைவாக இருக்கும் இந்தக் குழந்தை போதும் எனக்கு. அவருடன் நான் இருந்த அந்த நான்கு மாத நினைவுகள் என் வாழ்க்கை முழுதும் என்னால் மறக்க முடியாது. என்னால் அவருக்கு இனி எந்த மனகசப்பும் வரக் கூடாது. அவர் நிம்மதியாக வாழட்டும். நான் இறந்துபோனதாகவே இருக்கட்டும்.’ என்று சொல்லிவிட்டாள்.
அவள் நினைத்திருந்தால் அன்று மனோகர் முன் சென்று நின்று அவன் திருமணத்தைத் தடுத்திருக்க முடியும். அவள் அதைச் செய்யவில்லை. மனோகரின் வாழ்வு நிம்மதியின்றிப் போவதோடு முகம் தெரியாத அந்தப் பெண்ணிற்காகவும் இரக்கப்பட்டாள்.
அதன் பிறகு நான் முடிவு செய்தபடி அந்த ஊரைவிட்டே வந்துவிட்டோம். நீயும் பிறந்தபிறகு, நீயே அவளின்
உலகமாகிப் போனாய். உங்கள் இருவரையும் என்னால் முடிந்த வரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயற்சி
செய்தேன். இருந்தாலும் அவள் மனதில் இருக்கும் அந்த நினைவுகளை அழிக்க யாரால் முடியும். இன்று அவளுக்குத் திருமண நாள். அவளால் கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறாள். “ சொல்லி முடித்ததும் யுவாவின் கண்களில் ஒரு வெறியக் கண்டார் அன்பரசு.
எதுவும் பேசாமல் எழுந்து தன் அறைக்குச் சென்றான். ஒரு மூலையில் விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருந்தார். அவர் மடியில் சென்று படுத்துக் கொண்டான். மெளனமாக அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிய, மனதில் ஒரு சபதம் செய்துகொண்டிருந்தான்.
இத்தனை நாள் யாருக்காக ஏங்கிக் கொண்டிருந்தானோ அவை அனைத்தும் பொய்யாகிப்போன காயம் அவனுக்குப் பெரிய ரணத்தை உண்டாக்கியது. கண்ணில் படாத அந்தத் தந்தையைப் புறக்கணித்தான். எந்த அளவு அவரைப் பார்க்க ஆவல் கொண்டானோ அவை அனைத்தும் இப்போது
காழ்ப்புணர்ச்சியாக மாறியது. தன் தாயின் வலியை அவனால் இப்போது நன்றாக உணர முடிந்தது.
அவன் தலையைத் தடவிக்கொடுத்தார் மலர்.
“ யுவா ! உனக்குத் தெரியாததை நான் சொல்றேன். உங்கப்பா இப்போ ஒரு பெரிய விளம்பரக் கம்பனி வெச்சிருக்காரு. நம்ம கிட்ட பணம் இல்லைன்னு தான் அவங்க அப்பா என்னை ஏத்துகல. அந்தப் பணத்தை நீ சம்பாதிக்கணும். அவங்கள மாதிரி நீயும் ஒரு கம்பனிக்கு முதலாளி ஆகணும்.
அது தான் என் ஆசை. செய்வியா ? “ அவன் முகத்தைத் திருப்பிக் கேட்க
“ அம்மா ! அவங்கள விடப் பெரிய அளவுல நான் வந்துக் காட்றேன். நிச்சயம் ஒரு நாள் உங்களோட கண்ணீருக்கு அந்தக் குடும்பமும் அவரும் பதில் சொல்லியே ஆகணும்.” கழுத்து நரம்புகள் புடைக்க அவன் எழுந்து கத்த, அன்பரசு ஓடி வந்தார்.
“ யுவா! உன்னை நான் பழிவாங்க சொல்லல. நம்ம தரம் உயரனும்ன்னு தான் சொல்றேன். “ மலர் அவனை ஒரு பயத்துடனே பார்க்க ,
அன்பரசு அவனைப் பார்வையால் தடுக்க , அந்த நேரத்தில் மலரை மேலும் வேதனைப் படுத்தக் கூடாது என்று
“ சரி அம்மா. ஆனால் நான் ஒரு நாள் அவங்களுக்கு சரிசமமா வந்து அவங்க முன்னாடி போய் நிப்பேன். உங்க வாழ்க்கைக்கு அவர் பதில் சொல்லியே ஆகணும் “ சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
மலரும் அன்பரசுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள “ அண்ணா ! அவன் போக்கை நினச்சா பயமா இருக்கு . அவருக்கு இவனால எந்தத் தொல்லையும் வராம நீங்க தான் பாத்துக்கணும் “ பதட்டத்துடனே சொல்ல
“ நான் பாத்துக்கறேன் மலர். நீ கவலைப் படாத. இந்த வெறி தான் அவனைச் சீக்கரம் ஒரு பெரிய இடத்தில் கொண்டு சேர்க்கும். நீ போய் ரெஸ்ட் எடு “ அவரும் அங்கிருந்து சென்றார்.
யுவராஜின் பழிவாங்கும் எண்ணம் புரிந்தது. வெளிப்படையாகவே அவரிடம் சொல்லிவிட்டான். நிறைய பேசிப்பார்த்தும் அவனை மாற்ற முடியவில்லை. ஒரு வேளை அந்த மனோகர் உண்மையிலேயே தன்னையும் தன் தங்கையையும் ஏமாற்றியிருந்தால் யுவா வின் முடிவு சரியே என்று ஒரு புறம் தோன்ற அவன் முடிவிற்கு ஒத்துக்கொண்டார்.
அன்றிலிருந்து யுவராஜ் மிகவும் மாறிவிட்டான். மனதில் வெறிமட்டுமே எஞ்சியிருந்தது. ஆராதனாவிடம் இப்போது காதலைச் சொல்ல விரும்பவில்லை. தன் தாயின் ஆசையை நிறைவேற்றுவதே குறிக்கோளாகக் கொண்டான்.
பின்பு எம் பி ஏ முடித்து அமரிக்கா செல்லும் முன்பு ஆராதனாவின் தந்தையை சந்தித்தான். அவரிடம் அனைத்தையும் கூறி அவன் காதலையும் சொல்ல, அவர் அவனிடம் சரணாகதி தான். இப்படி ஒருவன் தன் மகளுக்குக் கிடைக்க அவர் ஆனந்தம் அடைந்தார்.
அவன் தான் தனக்கு மாப்பிள்ளை என்று உறுதி அளித்தார். இதை ஆராதனாவிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னதால் அவரும் காட்டிக்கொள்ளவில்லை.
இதோ இன்று நினைத்ததை சாதித்துக் காட்டி அந்த மனோகர் கம்பனியின் வேலைகளையும் தனதாக்கிக் கொண்டான். இனி சித்துவிற்கு வரப் போகும் கான்ட்டராக்ட்களைக் கூட எளிதாக அவனால் கைப்பற்ற முடியும்.
அனைத்தையும் பொறுமையுடன் சொல்லி முடித்தான் யுவராஜ்.
சித்துவிற்கு அவன் சொல்வதைக் கேட்க தன் அப்பா அப்படி செய்திருப்பாரா என்று சந்தேகம் இருந்தாலும் , யுவாவின் பக்கம் ஞாயம் இருப்பதாகப் பட்டது. தன் தாய்க்கு இப்படி நேர்ந்த்திருந்தால் அவனும் சும்மா இருந்திருக்க மாட்டான். யுவாவின் சிறு வயது ஏக்கம் நன்றாகப் புரிந்தது.
சித்து சிறு வயதில் மனோகரை ஒரு நிமிடம் கூடப் பிரிந்து இருக்க மாட்டான். அவர் வீட்டுக்கு வரும் வரை காத்திருந்து அவருடனேயே தான் உணவு உண்பான்.
ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அவனுக்குப் புதுவித பரிசுகளைக் கொடுத்து அவனைக் கொஞ்சுவார். சைக்கிள் ஓட்டுவதிலிருந்து , படிப்பு , விளையாட்டு என அனைத்திலும் அவர் தான் அவனுடன் இருந்தார். தன் தந்தை தான் உலகில் சிறந்தவர் என்று எண்ணிக்கொண்டிருந்தான். அவரைப் பார்த்துத் தான் உடற்பயிற்சி செய்வது , அன்பாகப் பேசுவது அனைத்தையும் கற்றான்.
அப்படிப்பட்ட தந்தைக்கு இப்படியொரு பின்கதை இருக்கும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லை.
என்ன இருந்தாலும் யுவாவும் அவனது தாயும் இழந்தது மிகவும் அதிகம் என வருந்தினான். யுவாவை தனது அண்ணனாக ஏற்க அவன் மனம் எந்தத் தடையும் சொல்லவில்லை.
அவன் தன் கம்பனிக்கு செய்த எந்தச் செயலும் அவன் மனதில் இப்போது இல்லை. அனைத்தையும் மறந்துவிட்டான். தன் தந்தையிடம் அவனுக்காகப் பேச முடிவெடுத்தான்.
அவர் மறுத்தாலும் ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் என்று மனதில் தீர்மானித்து விட்டான்.
யுவா அங்கே அனைத்தையும் கொட்டிவிட்ட துயரத்தில் வானத்தைப் பார்த்து அந்த மரத்தடியில் படுத்திருந்தான். சித்து அருகில் சென்றான்.
“ அண்ணா…. “ மெதுவாக அழைக்க
அந்த வார்த்தையில் சிலிரித்தெழுந்தான் யுவராஜ்.
“ என்ன சொன்ன …? உங்களோட சொந்தம் கொண்டாட நான் வரல .. எங்க அம்மாவுக்கு ஒரு நியாயம் கிடைக்கணும். “ அவனைப் பார்க்காமல் சொல்ல
“ நீங்க என்ன சொன்னாலும் நீங்க என்னோட அண்ணா தான். உங்களுக்காக நான் சப்போர்ட் பண்றேன். அப்பாவாவே இருந்தாலும் அவரைக் கேள்வி கேட்பேன் “ அவனைப் பார்த்து மனதிலிருந்து சொல்ல
சித்துவை நம்பினான் யுவராஜ். மெலிதாகப் புன்னகை செய்ய
“ தம்பியா ஏத்துக்கிடீங்களா ? “ அவனை நோக்கிக் கை நீட்ட
அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டான் யுவராஜ்.
“ நம்மைப் போன்ற நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை “
ராஜேஷும் மைதிலியும் சேர்ந்து மனோகரின் கவலையை அறிய முற்பட்டனர். ஆனால் அதற்கான முயற்ச்சியை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று விளங்கவில்லை.
“ மைதிலி, நான் அத்தை கிட்ட பேசிப் பாத்துட்டேன். அவங்க உங்க அப்பாவா சொன்னா தான் தெரிஞ்சுப்பேன்னு சொல்லிட்டாங்க . அவங்களா எதையும் அவர் கிட்ட கேட்க விருப்பப்படல… “ அவளைக் கேள்வியுடன் பார்க்க
“ எனக்கும் புரியுதுங்க. ஆனா , அப்பா எதையாவது வெளில சொன்னா தான் அவர் மனசில இருக்கற பாரம் குறையும். அதுவரை அவருக்கும் நிம்மதியிருக்காது. எப்படியாவது சொல்ல வைக்கனும் “ இருவரும் யோசனையில் ஆழ்ந்தனர்.
“ சித்துக்கு எதாவது தெரியுமா? “ சந்தேகமாகக் கேட்க
“ நிச்சயம் இல்லை. அவனுக்குத தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அப்பாவை இவ்வளவு வருத்தப்பட விடமாட்டான். “ நிச்சயமாச் சொன்னாள்.
“இப்போ என்ன பண்ணலாம்?” ராஜேஷ் கேட்க
“ நாமளே எதாவது க்ளு கிடைக்குதான்னு அப்பா ரூம் ல போய்ப் பார்க்கலாமா? “ அவள் மண்டையில் பல்பு எரிந்தது.
“ மாமா வெளில போயிருக்காரு. சரி வா தேடிப்பாப்போம் “ இருவரும் மனோகர் அறையை நோக்கிச் சென்றனர்.
**********
மனோகர் தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கி, மலருடன் தான் இருந்த இடங்களுக்குச் சென்று ஆறுதல் தேட முயற்ச்சித்தார். மனம் ஏனோ அந்த நினைவுகளை விட்டு வெளி வர மறுத்தது. அது ஒரு பக்கம் இருக்க , இந்த விஷயங்களைப் பார்வதிக்குச் சொல்லாமல் இருப்பது வேறு உறுத்தியது.
தான் யோசிக்காமல் நடந்து கொண்ட விஷயங்களினால் பலர் பேர் நிம்மதியின்று இருந்தனர். மலரின் வாழ்வு ஆரம்பிக்கும் முன்பே முடிந்துவிட்டது ; அன்பரசு என்ன ஆனான் என்பது இது வரைத் தெரியவில்லை. பார்வதியுடன் வாழும் இந்த வாழக்கையில் அவளுடன் மகிழ்ச்சியாக இருந்தாலும் சில விஷயங்களை மறைப்பது அவளுக்குத் தெரிந்தும் உள்ளுக்குள் வேதனைப் படுகிறாள். இவை அனைத்தும் தன்னால் தான்
இவை அனைத்தையும் பற்றிப் பார்வதியிடம் கூறத் தடையாக இருப்பது தனது அத்தையான , பார்வதியின் தாய்க்கு அவர் செய்த சத்தியம் தான். ஆனால் தன்னையும் வேதனைப் படுத்தி , பார்வதிக்கும் உண்மையாக இல்லாமல் இப்படி இருதலைக் கொள்ளி எறும்பாகத் துடிப்பதை விட , பார்வதியிடம் சொல்லிவிடுவது மன நிம்மதியைத் தரும் என்று யோசிக்க ஆரம்பித்தார்.
மனோகரின் அறையில் சென்று தேடியவர்கள் எதுவும் கிடைக்காமல் நின்றிருந்தனர். அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள் மைதிலி.
அந்தப் படுக்கை விரிப்பில் எதுவோ உறுத்த போர்வையை சரி செய்ய எடுத்தாள் . மெத்தை சிறிது மேடாக இருப்பதாத் தோன்றியது. அதை லேசாகத் தூக்கிப் பார்க்க அதில் ஒரு பழையை கிழிந்த புடவை இருந்தது.
அதை வெளியே எடுத்துப் பார்க்க, இருவருக்கும் சந்தேகம் வந்தது.
“ இது யாருடையது ? “ ராஜேஷ் கேட்க
“ அம்மா கிட்ட கேட்போமா ? “சொல்லிக்கொண்டு திரும்பியவள் அங்கே பார்வதி நிற்பதைக் கண்டாள். தவறு செய்த உணர்வு வர …
“ அம்மா … ! அது வந்து… “
“ அதை அங்கேயே வெச்சிடு மைதிலி “ ஆணையிட்டார்.
“ அத்தை அது யாருடையது ?” கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ராஜேஷ் கேட்க
“ எனக்கும் தெரியாது. ஆனா இப்போ ரெண்டு மூணு நாளா ராத்திரி எல்லாம் “ மலர் மலர் “ ன்னு பொலம்பறாரு. இந்த ஊருக்கு வந்தப்றம் தான் இப்படி ஆகுது. முன்னாடி கூட இங்க வருவோம் ஆனா அப்போல்லாம் இவரு ஒரு நாளுக்கு மேல தங்கமாட்டாறு. வேலை இருக்குன்னு போய்டுவாரு .” சொல்லிவிட்டு இருவரையும் பார்க்க,
“ மலரா !! ? அப்படி யாரும் உனக்குத் தெரிஞ்சு இருக்காங்களாம்மா? “ மைதிலி தீவிரமாக ஏதோ அர்த்தத்துடன் கேட்டாள்.
“ இல்லை மைதிலி. ஆனா எங்க கல்யாணத்துக்கு முன்னாடி என் மாமா யார் கிட்டயோ மலர் அப்படீங்கரவங்கள பத்தி ரொம்ப கோவமா பேசினாங்க. ஆனா என்ன பேசினாங்கன்னு தெரியல.” சொல்லிவிட்டு அமைதியானார்.
“ அவங்களுக்கும் அப்பாவுக்கும் என்ன சம்மந்தம். ? “ மைதிலி யோசிக்க
“ இங்கபாருங்க. அவர் மனசில என்ன வேணும்னாலும் இருக்கட்டும். அதை நீங்க கிளறி அவர் மனச காயப்படுத்தாதீங்க. அவர் நல்லா இருந்தா போதும். அதை அங்கேயே வெச்சுட்டு கிளம்பு. அப்பா வர நேரம். “ தன் வேலையைக் கவனிக்கச் சென்றார்.
ராஜேஷும் மைதிலியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக வெளியேறினர்.
சித்து கார் டையரைக் கழட்டிவிட்டு மாற்று டயரை மாட்டிக்கொண்டிருந்தான். அந்த இருட்டிலும் கார் ஹெட் லைட் வெளிச்சத்தில் வேலை செய்தான்.
“ச்சே ! ஹெல்ப்க்கு யாரையாவது கூப்பிடலாம்ன்னு பார்த்தா செல்லுல சிக்னல் கூட இல்லை. இந்த நேரத்துல இவரு எங்க போய்ட்டாரு. சுத்தி இருக்கற இருட்டுல பேய் வந்தாக் கூடத் தெரியாது போலிருக்கே “ புலம்பிக்கொண்டே வேலை
செய்துகொண்டிருந்தான். யுவா அவனை மெதுவாகப் பின்னிருந்து தொட்டு அழைத்தான். பயந்து எழுந்தான் சித்து. அவன் திகைப்பைக் கண்டு சிரித்தான் யுவராஜ்.
“ என்ன பெரிய தைரியசாலின்னு நினச்சேன். தொட்டதுக்கே பயப்படற” சிரிப்பை அடக்க முடியாமல் கேட்க,
“ அடப் போங்கண்ணா! என்ன இருந்தாலும் வயசுப் பையன், நாளைக்கு எதாவது ஆயிடுச்சுன்னா யார் பதில் சொல்றது.” சின்னப் பிள்ளைப் போலப் பாவனை செய்து சொன்னான்.
அவன் தன்னிடம் இயல்பாக ஒட்டிக்கொண்டதைக் கண்டு வியந்தான். யாருமின்றி தனியே வளர்ந்தாலும் அவனுக்குப் பாசத்தைப் பற்றித் தன் மாமா அம்மா மூலம் நன்கு தெரியும். தனக்கும் அப்படியொரு உறவு கிடைக்கும் என்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. தனக்காகத் தன் தந்தையைக் கூடக் கேள்வி கேட்க துணிந்தான். வார்த்ததைக்கு வார்த்தை தன்னை அண்ணா என்று பாசமாக அழைக்கிறான். இதனாலேயே சித்துவை மிகவும் பிடித்துவிட்டது.
“ என்ன அண்ணா யோசிக்கறீங்க ?”
“ இல்லை. சக்திப்ப்ரியா க்கு நான் என்ன பதில் சொல்லலாம்ன்னு யோசிக்கறேன்” சாதரணமாக அவன் சொல்ல
தன்னைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறான் என்று வியந்தான் சித்து.
“ நீங்க பெரிய ஆளு.. எல்லாத்தையும் நோட் பண்ணியிருக்கீங்க.” நிஜமான பாராட்டு.
மெல்லிதாக யுவா சிரிக்க,
“உங்களை என்னால தப்பாவே நினைக்க முடியல அண்ணா. ஆனா அப்பா மேல தப்பிருக்காதுன்னு தோணுது.” மீண்டும் டயரை சரி செய்துகொண்டு சொல்ல ,
யுவா அவனைக் கோவமாகப் பார்த்தான்.
“உங்க அப்பாவக் காப்பாத்த என்கிட்ட நீ வேஷம் போடாத. என்னால அவர மன்னிக்கவே முடியாது “ அடிக்குரலில் சீறினான்.
“நான் அவரைக் காப்பாத்தறதுக்காக இதைச் சொல்லல, எல்லாத்தையும் பேசித் தெரிஞ்சுக்கலாம் . நான் உங்க பக்கம் தான் அண்ணா. என்னை நம்புங்க” அவனுக்குப் புரிய வைக்க முயன்றான்.
“ இங்க பாரு. உன்னைப் பற்றி எனக்கு நல்லா தெரியும்.. உனக்கும் உங்கப்பாவைப் பத்தி எல்லாம் தெரியனும். அதுனால தான் உங்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். உன்னோட சப்போர்ட்ட எதிர்பார்த்து இல்லை. என்னால தனியாவே இதை ஹன்டில் பண்ண முடியும். அதை முதல்ல புரிஞ்சுக்கோ.”
“அண்ணா . உங்களால எல்லாத்தையும் செய்ய முடியும். நான் இல்லைன்னு சொல்லல. ஆனா எல்லா பக்கமும் நாம விசாரிச்சு செய்யலாம்ன்னு தான் சொல்றேன். உங்க மேல எனக்கு என்னையும் அறியாமலே பாசம் வந்துடுச்சு. காரணம் தெரியல. உங்களுக்கும் அப்படிதானே ?” அவன் முன் நின்று கேட்க
யுவாவும் அப்படித்தான் உணர்கிறான் என்பதை மறுக்க முடியவில்லை. மெளனமாக நின்றான்.
“உங்க அம்மா எனக்கும் அம்மா தான். அவங்களுக்கு நியாயம் கிடைக்க நானும் உதவறேன்னு தான் சொல்றேன்.” அவனது நல்ல குணம் அவன் பார்வையிலேயே தெரிய , அவன் தோளில் கை போட்டு நடந்தான் யுவா.
“ சரி வா சாப்பிடலாம்.” தன் கையில் இருந்த பழங்களை எடுத்தான்.
“ இது எங்க இருந்து வந்துது.?” அருகில் சென்று பார்க்க
“ இங்க பக்கத்துல யாராவது இருக்காங்களான்னு பார்க்க போனேன். யாரும் இல்லை. வாழை மரம் தான் இருந்தது. அதன் பழத்தை மட்டும் பறிச்சுட்டு வந்தேன் “ அவனிடம் இரண்டு பழத்தைக் கொடுக்க
இருவரும் சேர்ந்து அதைக் காலி செய்தனர். சித்து டயரை மாற்றிச் சரி செய்ய இருவரும் தங்கள் பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.