KVK-15

KVK-15

ஆராதனா அனைத்தையும் கதிரிடம் சொல்ல, அவன் எழுந்து ஆடாத குறை தான். மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றான். அதுவும் அவன் ஆராதனாவின் அப்பாவிடம் பேசியதைப் பற்றிச் சொல்லவும், ‘ அவனை யாராலையும் புரிஞ்சுக்கவே முடியல ‘ மனதில் பாராட்டினான்.
இனி தன் பங்கிற்கு இதைப் பற்றி மலரிடமும் பேச நினைத்தான். உடனே அவர்கள் வீட்டிற்கு செல்ல, அங்கே மலர் என்றும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தார்.
“ என்னம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க ?” கேட்டுக்கொண்டே உள்ளே செல்ல,
“ யுவா தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டானே கதிர். அதுவே பெரிய விஷயம். இப்போ தான் பொண்ணோட அப்பாகிட்ட பேசினோம். யுவா ஊர்ல இருந்து வந்ததும் பொண்ணு பார்த்து நிச்சியம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டோம்.” அவரின் முகம் முழுதும் மகிழ்ச்சியில் பூரித்தது.
“ உங்ககிட்ட முன்னாடியே சொல்லிட்டானா? நான் தான் லேட்டா ! “ அலுத்துக்கொண்டான்.
“ நீயும் எங்க கூட வரணும் கதிர். நீ தான் அவனுக்குப் பக்கத்துல இருக்கணும். உனக்கு காஃபி கொண்டுவரேன் “ சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
“ துணை மாப்பிள்ளை வேலையும் எனக்கே வா “ சத்தமாகச் சொல்ல
அன்பரசு அங்கே வந்தார்.
“ கதிர் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். “ சிறிது கலக்கத்துடனே இருந்தார்.
“சொல்லுங்க மாமா. என்ன விஷயம் “
“அவன் ஊருக்குப் போயிருக்கான். என்ன நடக்குமோன்னு பயமா இருக்கு” மலரின் காதில் விழுந்துவிடாமல் மெதுவாகக் கேட்டார்.
“ மாமா! அவன் எல்லாத்தையும் யோசிச்சு தான் செய்வான். நீங்க கவலைப் படாதீங்க “ ஆறுதலாகப் பேச
“ என்னம்மோ பா அமைதியா வாழ்ந்துட்டு இருக்கா மலர். மறுபடியும் அவளுக்குச் சங்கடம் வராம இருந்தா போதும். “ மனத்தாங்கலை சொல்ல,
“ அவன் கூடப் போயிருக்கற ஆளு பயங்கர கில்லாடி. எல்லாம் நல்லா நடக்கும் பாருங்க “ சூசகமாச் சொல்ல
“யாருப்பா அது ?” ஆச்சரியமாகக் கேட்டார்.

“எல்லாம் உங்களுக்கு வேண்டியவங்க தான். “ சிரித்துக் கொண்டே சொல்ல
யோசனையோடு அவனைப் பார்த்தார்.
“ மிஸ்டர். சித்தார்த் மனோகர் “ புன்னைகையுடன் சொல்ல
அதிர்ச்சியில் அவருக்கு இதயமே நின்றுவிடும் போல ஆகிவிட்டது.
“ என்ன சொல்ற கதிர். நீங்க என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சு தான் பண்றீங்களா?” சற்று கோபமாகவே கேட்டார்.
“ மாமா. அவன் ரொம்ப பராக்டிகல் பெர்சன். கண்டிப்பா புரிஞ்சுப்பான். அதுனால தான் அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்ல முடிவு பண்ணான் யுவா. “ சொல்லிக்கொண்டிருந்தவன் மலர் வருவது தெரிந்ததும் அமைதியானான்.
அவனைக் கலக்கமாகவே பார்த்துக்கொண்டிருந்தார் அன்பரசு. அதற்கு மேல் அங்கிருந்தால் அவர் குடைந்து கொண்டே இருப்பார் என்று அவரசமாகக் காஃபியை அருந்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
அன்பரசுவிற்கு படபடப்பாகவே இருந்தது. ‘ இப்பொழுது அவன் அங்குச் சென்றிருப்பான், என்ன நடக்கும்?’ என்று அவருக்குப் பயமாகவே இருந்தது.

 

யாருக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல் யோசனையில் அமர்ந்திருந்தார் ஜானகி. அருகில் சக்தி சிறிதும் சலனம் இல்லாமல் தெளிவாக அமர்ந்திருந்தாள்.
“ ஏன் டீ முன்னாடியே என்கிட்ட சொல்லல? இப்போ உங்க அப்பா நிச்சியம் வரைக்கும் பேசிட்டு வந்திருக்காரு. இப்போ போய் அவங்ககிட்ட வேண்டாம்ன்னு எப்படி சொல்றது? “ குழப்பத்துடன் அவளைக் கத்திக்கொண்டிருந்தார்.
“ நீங்க இப்படி திடிர்ன்னு முடிவு செய்வீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்?நீ என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் .” நகத்தைக் கடித்துக்கொண்டே சொல்ல
“அசால்டா சொல்ற. கொஞ்சமாவது உனக்குப் பயம் இருக்கா?”
“அம்மா சித்து ரொம்ப நல்லவர்மா. நிச்சயம் அவர உங்களுக்குப் பிடிக்கும்.” அவளும் தன் பங்கிற்குச் சொல்ல
“ அதுக்காகச் சொல்ல சக்தி. இப்போ வரவங்களுக்கு என்ன பதில் சொல்றது. உங்க அப்பாவை எப்படி சமாளிக்கறது? எனக்கு ஒன்னும் புரியல!” தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.
“ அம்மா , நான் வர அந்தப் பையன் கிட்டப் பேசிப் பார்க்கறேன். நான் ஒருத்தரை விரும்பறதா சொல்றேன். அப்போ அவங்களே வேண்டாம்ன்னு சொல்லிடுவாங்க !” தன்னுடைய ஐடியாவைச் சொல்ல
“ சக்தி! இது விளையாடற விஷயம் இல்லை. அவங்கள அவமானப் படுத்தற மாதிரி இருக்கும். இது சரிப்பட்டு வராது.”
“ அம்மா அதுக்காக அவங்கள கல்யாணம் பண்ணிக்க முடியுமா?என்னால முடியாது. சித்துவைத் தவிர நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.அதுல நான் உறுதியா இருக்கேன்.” தன் முடிவைச் சொன்னாள்.
“ சரி இன்னும் ஒரு நாலு நாள் டைம் இருக்கு. யாரையும் புண்படுத்தாம இருக்கனும். யோசிக்கலாம் “ யோசித்தபடியே வெளியே சென்றார்.

ஜான்சி சென்றதும் மீண்டும் சித்துவிற்கு செல்லில் அழைத்தாள். அது அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லவும் எரிச்சலாகத் தானும் வைத்தாள்.
சுந்தரும் சுஜாவின் மூலம் விஷயம் அறிந்தான். சித்துவிற்கு தொடர்புகொள்ள நினைத்த அவனுக்கும் பதில் இல்லை.
இருவரும் செய்வதறியாமல் தவித்தனர்.

 

 

யுவராஜும் சித்துவும் காரில் வந்து இறங்கினர். ராஜேஷ் தான் அவர்களை முதலில் வரவேற்றது. யுவாவை அறிமுகப் படுத்தி வைத்தான் சித்து.
தன்னுடைய நண்பன் என்றும் , “மலர் அட்ஸ் இவருடையது தான் மாமா. ஊர் சுற்றிப் பார்க்க என்கூட வந்திருக்காரு” இயல்பாகக் கூற
“ஹலோ யுவராஜ் “ சிநேகமாகக் கைகுலுக்கினான்.
உள்ளே சென்று அனைவரிடமும் அறிமுகப் படுத்தி வைத்தான் மனோகரைத் தவிர..
“இது மைதிலி என்னோட அக்கா” சத்தமாகச் சொல்லிவிட்டு
அவன் காதருகில் சென்று “உங்களுக்குத் தங்கச்சி “ என்றான்.
அவனைப் பார்த்து இதழோரம் சிறு புன்னைகையை வீசிவிட்டு, மைதிலியைப் பார்த்து சின்னத் தலையசைப்புடன் புன்னகைத்தான்.
தனது தாயான பார்வதியைப் பார்த்து “ அம்மா” என்றான் சித்து.
தன் தாய் வாழ வேண்டிய இடத்தைச் சுலபமாகப் பெற்றுக்கொண்டவர் என்று மனதில் கோபம் வந்தது. ஆனாலும் அவரின் முகத்தைப் பார்த்து அவனால் சிறு வெறுப்பைக் கூடக் காட்ட முடியவில்லை.
முகத்தில் சாந்த்தம் தான் தெரிந்தது. அவனைப் பார்த்து அந்நியன் என்ற நினைப்பும் இல்லாமல் நலம் விசாரித்தார்.
“ நீயே வண்டி ஓட்டிட்டு வந்தியாப்பா, ரொம்ப களைப்பா இருக்கியே! ஏன் டா சித்து ! நீ கொஞ்ச நேரம் ஒட்டியிருக்கலாம்ல?”
“ இல்லம்மா அவர் என்னை ஓட்ட விடல” முந்திக்கொண்டு சித்து சொன்னான்.
“பரவால்லங்க , எனக்கு லாங் டிரைவ் பண்ணி பழக்கம் இருக்கு.” அடக்கமாகவே பதில் உரைத்தான் யுவா.
“சரி நீங்க ரெண்டு பேரும் மேல ரூம் க்கு போய்க் குளிச்சுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க, டிபன் சாப்பிடலாம். நான் காஃபி மேல அனுப்பறேன்” சிரித்த முகத்துடனே சொல்லிவ்ட்டு சென்றார்.
இருவரும் மேல இருக்கும் அறைக்குச் சென்றனர். அமைதியாகவே இருந்தான் யுவா.

“என்ன யோசிக்கறீங்க?” ஒரே கட்டிலில் இருவரும் படுத்திருக்க , சித்து யுவாவைக் கேட்டான்.
“ உங்க அம்மா அக்கா மாமா எல்லாரும் மனசில கள்ளமில்லாமல் பேசறாங்க. நான் நினச்ச மாதிரி இல்லை. ஆனா அவங்கள டிஸ்டர்ப் பண்ண நான் எப்பவும் நினச்சது இல்லை. உங்க அப்பா மட்டும் தான் என்னோட டார்கெட்” மெதுவாக ஆரம்பித்துப் பின் வெறுப்பில் முடிந்தது அவன் வார்த்தைகள்.
“ கூல்…. கூல்… உங்களுக்கு நல்ல மனசுன்னு நான் நேத்தே புரிஞ்சுக்கிட்டேன். அப்பா விஷயத்தை அப்புறம் பாப்போம். அப்புறம் என்கூட ஒரே ரூம்ல இருக்க உங்களுக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே?” அவன் மூடை மாற்ற நினைத்தான்.
“எனக்கு ஒன்னும் இல்லை, சக்திக்கு ஓகே வா ன்னு கேட்டுக்கோ.” அவனை வம்பிழுக்க, அப்போது தான் அவளிடம் பேசாதது நினைவுக்கு வந்தது.
“ ஸ்ஸ்.. நீங்க எனக்குக் குடுத்த டென்ஷன்ல அவ கிட்ட கத்திட்டு போனை வெச்சிட்டேன். பாவம். இருங்க போன் பண்ணிப் பார்க்கறேன்.” நெற்றியைத் தேய்த்துக் கொண்டே சொல்லிவிட்டு தன் செல்லை இயக்கி , அவளுக்குப் போன் செய்தான். இப்போது அவளது போன் அனைத்து வைக்கப் பட்டிருந்தது.
“ சுத்தம். இப்போ மேடம் கோவமா இருப்பாங்க” பின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு சொல்ல

யுவா வாய்விட்டுச் சிரித்தான்.
“என்ன அண்ணா நக்கலா, ஆமா! கேட்க மறந்துட்டேன். எனக்கு அண்ணி இருக்காங்களா?” ஒற்றைக் கண்ணை மூடி அவன் கேட்க
“ ம்ம்ம் ம்ம்ம்ம் “ பதில் சொல்லாமல் மழுப்ப
“ என்ன ம்ம்ம்? கல்யாணம் ஆயிடுச்சா ? “
“இல்லை. இனிமே தான்.” கண்ணை மூடிப் படுத்துக் கொண்டே சொல்ல
“ அப்புறம்.. லவ்வா !! நீங்களா!!?” ஆச்சரியமாக எழுந்துக் கேட்க
“ஏன் டா . நான் லவ் பண்ணக் கூடாதா?” அவனை முறைத்தான் யுவா.
“அப்டி சொல்லல… உங்க ஸ்டைல் க்கு சூட் ஆகணுமே! நீங்க வேற ரொம்ப யோசிச்சிருபீங்க. அதான் டவுட் வந்துச்சு” மெதுவாகச் சித்து சொல்ல
“ ஆமா! நான் உன்னை மாதிரி காதல் மன்னன் இல்லை. அவ தான் ஏழு வருஷமா வெயிட் பண்றா, நானும் அஞ்சு வருஷம் முன்னாடியே முடிவு பண்ணிட்டேன், ஆனா இப்போ தான் அவகிட்ட சொன்னேன்.” இதழ்க்கடையில் புன்னகை அரும்பச் சொன்னான்.
“பாவம் என் அண்ணி. நீங்க ரொம்ப பேட்.” இருவருக்கும் இடையில் தலையணையை வைத்தான்.
“ நீ என்னடா சின்னபுள்ள மாதிரி பிஹேவ் பண்ற” சிரிர்த்தான் யுவா.
“என்னமோ தெரியல, உங்க கூடா தான் இப்படி உரிமையா விளையாடத் தோணுது. ஐ ரியலி லைக் யூ அண்ணா “ சற்று உணர்ச்சிப் போங்க சொல்லவும்,
“ டேய்! நெஞ்ச நக்காம படு.” அவனைத் தலையில் தட்டினான்.
அறைக் கதவில் ஏதோ சத்தம் கேட்க சித்து எழுந்து சென்றுப் பார்த்தான்.

வர்ஷினி ஓடி வந்து சித்துவைக் கட்டிக்கொண்டாள்.
அவளைத் தூக்கி முத்தமிட்டவன் , அவள் யுவாவையே பார்ப்பதைக் கவனித்தான். யுவாவை தன் குடும்பத்துடன் இணைத்துக் கொள்ள இது சரியான சந்தர்ப்பமாகத் தோன்றியது.
“வர்ஷி! இந்த மாமா பேரு யுவா மாமா. அவரும் உனக்கு மாமா தான்.சரியா?” அவள் காதில் ரகசியமாச் சொல்ல
“ அவர் எனக்கு சாக்கி தருவாரா ?” அப்பாவியாய் கேட்டாள்.
“ அவரு நீ என்ன கேட்டாலும் வாங்கித் தருவாரு.” சொன்னவுடன் அவனை விட்டிறங்கி யுவாவிடம் ஓடினாள்.
அவன் கண்ணை மூடிப் படுத்திருக்க, அவன் அவன் கன்னத்தைத் தன் பிஞ்சுக் கையால் தொட்டாள்.
கண்ணைத் திறந்து அவன் பார்க்க, அழகிய அந்த முகம் அவனையும் முகமலரச் செய்தது.
எழுந்து அமர்ந்தான். அவளையும் மெத்தையில் அமர வைத்தான்.
“ ஹாய் ! உங்க பேர் என்ன ?” அவள் கையைப் பிடித்துக் கேட்டான்.
“ வர்ஷினி. உங்க பேர் யுவா வா?”
“ஆமா ! நல்ல இருக்கா?”
சற்று யோசித்துவிட்டு “ நல்லா இருக்கு. “ என்றாள்.
“ உங்கள நான் எப்படி கூப்பிடனும்? “ கண்ணை விரித்துக் கேட்க , சித்து அருகில் வந்தான்.
“யுவா மாமா” என்று சொல்ல
“ எனக்கு அப்போ ரெண்டு மாமா வா?”
“ஆமா. எங்கே கூப்பிடு.? “ எடுத்துக் கொடுத்தான் சித்து.
“யுவா மாமா.. எனக்குச் சாக்கி வாங்கி தருவியா?” தன் சின்னக் கைகளை நீட்டிக் கேட்க,
யுவாவிற்கு ஏதோ செய்தது. அவனுக்கு இப்படியொரு சிறு குழந்தையுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்ததில்லை. அச்சிறுமியின் அழைப்பில் அந்த உறவின் மகிமையை உணர்ந்தான். தன்னுடைய மாமாவும் தனக்கு அப்படித்தான். தனக்காக எதையும் செய்வார். அந்த நினைப்பில் அவளைத் தூக்கி முத்தமிட்டான்.
“உனக்கு எல்லாம் வாங்கித் தரேன்.”
பதிலுக்கு அக்குழந்தையும் அவனைக் கட்டிக்கொண்டு முத்தமிட அவனுக்கு அது புது அனுபவமாக இருந்தது. கொடுத்துவிட்டு அவனைவிட்டு இறங்கி ஓடியது.
“ஸ்வீட் “ என்றான் தன் கன்னத்தைத் தடவி.
சித்துவும் அதைக் கண்டு மகிழ்ந்தான். இருவரும் குளித்துவிட்டு பின் கீழிறங்கிச் செல்ல, அங்கே ஹாலில் மனோகர் அமர்ந்திருந்தார்.
அவரைக் கண்டதும் சொல்லமுடியாத அளவு கோபம் பொங்கியது யுவாவிற்கு. அவன் தோளைத் தொட்டு சித்து அழைத்துச் சென்றான் யுவராஜைக் கண்டதும் சட்டென எழுந்தார் மனோகர்………………..!!!??
மனோகரின் முகத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள். ‘இவன் மலர் அட்ஸ் கம்பனியின் முதலாளி ஆயிற்றே. இவன் இங்கே எப்படி வந்தான். அதுவும் சித்துவுடன் கை கோர்த்துக் கொண்டு நடந்து வருகிறான். இவனைச் சமாளிக்கத் தான் சித்துவை பொறுப்பேத்துக்கச் சொன்னோம். ஒன்னும் புரியலையே!’ தனக்குள்ளே கேள்விப் போராட்டமே நடத்தினார்.
சித்து சிரித்துக்கொண்டே வந்தான். முன்னம் இருந்ததற்கு இப்போது சற்று இளைத்தே காணப்பட்டார் மனோகர்.
“அப்பா ! எப்படி இருக்கு உடம்பு. ஆர் யூ ஆல்ரைட் நவ்?” அவரின் கண்கள் யுவாவிடம் நிலைத்திருப்பதை உணர்ந்தான்.

யுவாவும் தான் சிறுவயது முதலே தான் காணத் துடித்த தந்தை என்று ஒரு புறம் தோன்றினாலும் , தன் தாயைக் கொல்ல நினைத்த பாவி என்று மனதில் அவரைக் கிழித்துக் கூருபோட்டுக் கொண்டிருந்தான். முகத்தில் எதுவும் காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான். சிரிக்கவும் முடியாமல் முறைக்கவும் முடியாமல் அவரையே வெற்றுப் பார்வை பார்த்தான்.
இருவரின் மனநிலையையும் உணர்ந்தான் சித்து. அவனே பேச்சை மீண்டும் துவக்கினான்.
“ அப்பா ! இது யுவராஜ். உங்களுக்குத் தெரியுமே! மலர் அட்ஸ் கம்பெனியின் சி ஈ ஒ. இப்போ என் பிரண்ட். அதையும் தாண்டி அண்ணன் மாதிரி.” அவன் சொல்லி முடிக்க இருவரும் வெவ்வேறு மனநிலையில் அவனைப் பார்த்தனர்.
யுவாவிற்கு அவன் உண்மையைச் சொன்ன சிறு கோவம். மனோகருக்கு இவ்வளவு சீக்கிரம் எப்படி இவர்கள் நட்பானார்கள் என்ற குழப்பம்.
சித்து யுவாவைப் பார்க்க , அவன் மொட்டையாக ஒரு வணக்கம் சொன்னான் மனோகருக்கு. ‘பெற்ற மகனைக் கூட அடையாளம் தெரியாத தந்தை. அது சரி! இவர் தான் மனைவியோடு சேர்த்து பிள்ளையையும் ஆற்றில் விட்டப் பாவி ஆயிற்றே! பிள்ளை நினைப்பு எப்படி வரும். எல்லாம் பணம் செய்யும் பாடு. ஆசைக்கு ஒருத்தி ஆஸ்திக்கு ஒருத்தி! ச்சே!’ மனதில் அனல் பறந்தது.
“வணக்கம். என்னால நம்ப முடியல நீங்க எப்படி சித்து கூட…..?” அவனைப் பார்த்துப் பேச
“ அது … ஒரு கான்டராக்ட் விஷயமா மீட் பண்ணோம். அப்போ தான் …” என்று துடைத்த முகத்துடன் உணர்ச்சியில்லாமல் பதில் சொன்னான். அவன் மனதை அறிந்த சித்து,
“ வாங்க சாப்ட்டுகிட்டே பேசுவோம் , வாங்கப்பா “ இருவரையும் அழைத்துச் சென்றான்.
அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க , பார்வதி மட்டும் வர்ஷினிக்கு ஹாலில் அமர்ந்து டிபன் ஊட்டிக்கொண்டிருந்தார். எப்பொழுதும் மனோகருக்கு அவர் பரிமாறுவது தான் வழக்கம். இன்று வழக்கத்திற்கு மாறாக உணர்ந்தான் சித்து.
சிறுமி அங்கும் இங்கும் ஓடி ஓடிப் பார்வதிக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்.
“ சொல்லுங்க யுவராஜ். உங்களைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். இன்பாஃக்ட் உங்க வளர்ச்சியப் பார்த்து நான் ஆச்சரியப் பட்டேன். ரொம்ப சீக்கிரம் நீங்க பெரிய லெவல்க்குப் போயிடீங்க. ஐ அப்ரிசியேட் யூ.” மனோகர் அவனை மனதாரப் பாராட்டினார்.
யுவாவிற்கு அந்தப் பாராட்டு சிறிதும் ரசிக்கவில்லை. மருந்துக்கும் அவன் முகத்தில் சிரிப்பில்லை. ஒரு இயந்திரம் போல அமர்ந்திருந்தான்.
“ தேங்க்ஸ். நம்பர் ஓன் கம்பனியா என்னோட கம்பனி வரணும். அது தான் என்னோட அம்பிஷன்.” சாப்பிட்டுக்கொண்டே சொல்ல
“அப்போ மத்த கம்பனிஸ் டவுன் ஆகணும்ன்னு சொல்லு…” சிரித்துக்கொண்டே சொல்ல,
“ அது அவங்க சாமர்த்தியம். ஆனா நான் சில பேர் மாதிரி ஏமாத்தல. எல்லாமே என்னோட உழைப்பு மட்டும் தான்.” சொல்லிவிட்டு அவரைப் பார்த்தான்.
மெல்லிதாகச் சிரித்தார் மனோகர். சிறிது இடைவெளி விட்டு
“ உங்க கம்பனி நேம் நல்லா இருக்குப்பா .. யாருடைய பேர் அது?” ஒரு சிறு தயக்கத்துடன் கேட்டார்.
அலட்சியப் பார்வை பார்த்தான் யுவராஜ். சித்துவும் அவரைப் பார்க்க, பார்வதியும் அவரைத் தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

“ என்னோட அம்மா பேர் அது.” அழுத்தமாகச் சொன்னான்.
மனோகரின் உள்ளம் ஒரு நொடி நின்று பின் துடித்தது. யுவாவை ஆழமாகப் பார்த்தார். யுவா அனைத்தையும் போட்டு உடைக்கும் நிலையில் இருப்பதை உணர்ந்தான் சித்து. ஆனால் இது சரியான தருணம் இல்லை. ஆகவே
“அவங்க அம்மா பேர் மலர்க்கொடி.” சித்து முடித்தான்.
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டார் மனோகர்.
சித்து பொறுமையாக இருக்கும்படி கண்ணால் சைகை செய்தான். யுவா அவனை முறைத்துக்கொண்டே சாப்பிட்டான். ‘இவனால் தான் இவ்வளவு பொறுமையாக இருக்கிறோம். இல்லை என்றால் எப்போதோ விஷயத்தைக் கேட்டு அவரைத் திணற வைத்திருக்க வேண்டும்.’ மனதில் நினைத்ததை வெளியில் சொல்ல முடியாமல் இருந்தான்.
மைதிலிக்கும் யுவாவிடம் தன் தந்தையின் சாயல் இருப்பதாகத் தோன்றியது. இருப்பினும் எதுவும் கேட்காமல் மெதுவாக உண்டு முடித்தாள்.
அனைவரும் உண்டு எழுந்தபிறகு, தன்னைக் கட்டுபடுத்த முடியாமல் அவனையும் மீறி யுவா மனோகரிடம் பேசினான்.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” அவன் சொன்னதும் சித்து சிறிது அதிர்ந்ததுவிட்டான். ‘இங்கேயே பேச்சைத் துவங்கிவிடுவானோ’ என்று!
“அப்பா இப்போ வெளில தோப்புக்கு போவாங்க, நாமளும் போகலாம் அங்க பேசுவோம் “ அவசரமாகக் கூறினான்.
மனோகரும் சம்மதமாகத் தலை அசைத்துச் சென்றார். சித்து அவனைப் பார்வையால் இறைஞ்ச, சற்று பொறுமை காத்தான் யுவராஜ்.
அந்த ஊரில் திருவிழாவிற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தது. அதனால் எங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிந்தனர். தங்கள் குடும்பம் அந்த ஊரில் செல்வாக்கு உள்ள குடும்பம் என்பதால் அவர்கள் தான் நிறைய ஆட்களை வைத்து வேலை செய்தனர்.
ராஜேஷ் தான் பக்கத்துக்கு டவுனுக்கு அடிக்கடிச் சென்று சில முக்கியமானப் பொருள்களை வாங்கி வந்தான். அன்றும் அவன் சில பொருட்கள் வாங்கக் கிளம்பினான். மைதிலி அவளுக்கும் சிலவற்றை வாங்க வேண்டும் என்பதால் உடன் செல்வதாக இருந்தாள்.
வர்ஷினியை அவள் கூப்பிட, அவள் பாட்டியுடனேயே ஒட்டிக்கொண்டாள். இருவர் மட்டுமே கிளம்பினர்.
யுவாவும் சித்துவும் மனோகர் கிளம்பிச் சென்றபிறகு, தங்கள் அறையில் பேசிக்கொண்டனர்.
“ சித்து நான் எல்லார்க்கும் முன்னாடி அவரைக் கேட்கனும்னு தான் வந்தேன். நீ ஏன் என்னைத் தடுத்த ? “ நினைத்தது நடக்காத கோபம் அவனுக்கு.

“அண்ணா , கொஞ்சம் பொறுமையா இருங்க, அம்மாக்கு இதைப் பத்தி தெரியுமான்னு கேட்காம அவங்க முன்னாடி பேசவேண்டாமே. அவங்க அப்பா மேல ரொம்ப அன்பு வெச்சிருக்காங்க.” எடுத்துச் சொல்ல முயன்றான்.
“எங்க அம்மாவும் தான் இன்னும் அவர்மேல …….. ச்சே! “ சொல்லமுடியாமல் யுவா தவிக்க, தலையில் கை வைத்து அமர்ந்தான்.
“ ஐ அம் சாரி ண்ணா . எனக்குப் புரியுது. அம்மா கிட்ட பேசிட்டு நாம போகலாமா?” முகம் வாட அவனைக் கேட்டான்.
“எனக்கு உங்க அம்மாவைக் கஷ்டப்படுத்த எண்ணம் இல்லை சித்து. பட் வேற வழியில்லை. அவங்க இதை ஏத்துகிட்டுத் தான் ஆகணும்.”
“ அவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல. லெட்ஸ் ட்ரை.“ சொல்லிவிட்டு அவன் பார்வதியை அழைத்தான்.
விளையாடிக் களைத்த வர்ஷினியைத் தூங்க வைத்திருந்தார் பார்வதி. முன்பு போல் அல்லாமல் அவரும் ஏதோ வருத்தமாகவேக் காணப்பட்டார். அறைக்குள் சென்ற சித்து,
“அம்மா ! ஒரு முக்கியமான விஷயம் பேசணும். வீட்ல இப்போ யாரும் இல்லை. இப்போ பேசுனா சரியா இருக்கும்ன்னு நினைக்கறேன்.” பீடிகையுடன் ஆரம்பித்தான்.
எப்போதும் அவன் சொல்ல வருவதை ஆர்வமாகக் கேட்பவர், இன்று சாதரணமாகவே இருந்தார்.
“சொல்லு சித்து.என்ன விஷயம்?”
“என்ன ஆச்சும்மா? அன்னிக்கு போன் பண்ணப்ப கூட நல்லா தான பேசுனீங்க. இப்போ ரொம்ப டல்லா தெரியறீங்க “ அவரின் அருகில் சென்று கேட்க,
“ அதெல்லாம் ஒண்ணுமில்ல சித்து நீ விஷயத்துக்கு வா” சட்டெனச் சொல்ல, அவனும் வெளியே வந்து யுவராஜை அழைத்தான்.
குழந்தை தூங்குவதை உறுதி செய்து கொண்டு வெளியே வந்தார் பார்வதி.
சித்து எப்படி ஆரம்பிப்பது என்று திணற, யுவா அனைத்தையும் கொட்டிவிடும் மனநிலையில் இருந்தான்.
“ உங்களுக்கு மலர்மொழி பத்தி எதாவது தெரியுமா?” முதலிலேயே அணுகுண்டை இறக்கினான் யுவராஜ்.
அப்பெயரைக் கேட்டதும் அவர் இதயம் வேகமாகத் துடித்தது.
“ தெரியும் .” எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னார். யுவா , சித்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சியுற்றனர்.
“இதே கேள்விய ரெண்டு நாள் முன்னாடி கேட்டிருந்தா , தெரியாதுன்னு சொல்லியிருப்பேன். ஆனா இப்போத் தெரிஞ்சுக்கிட்டேன்.” மிகவும் சிரமப்பட்டு வார்த்தைகள் வெளிவந்தன.
“ அம்மா! என்ன தெரிஞ்சுகிட்டீங்க?!” சித்து அவரைக் கேள்வி கேட்க
“ உங்க அப்பாவோட முதல் மனைவி தான் மலர். ஆனா அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. “ அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னார்.
மற்ற இருவருக்கும் மிகுந்த சங்கடமாகிப் போனது.
“எங்களை மன்னிச்சிடுங்க. சித்து வா போகலாம்” யுவாவிற்கு அதற்கு மேல் எதுவும் கேட்டு அவரை வேதனைப் படுத்த விருப்பமில்லை.
“இருங்கண்ணா. எப்படி இருந்தாலும் எல்லரும் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும். அந்த நாள் இதுவா இருக்கட்டும்.” சித்து இப்போது ஒரு முடிவுடன் பேசினான்.
யுவா அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. சித்து பொறுமையாக ஆரம்பித்தான்.

“அம்மா! நான் சொல்லப்போறதை நீங்க முழுசா கேட்கணும். நீங்க என்னைப் பொறுத்தவரை ரொம்ப ஸ்ட்ராங். எல்லாருக்கும் நல்லது நடக்கணும்ன்னு தான் நான் இதைச் சொல்றேன்.” சிறிது இடைவெளி விட்டான்.
பார்வதி அவன் பெரிதாகச் சொல்லவருகிறான் என்பதை நன்றாக உணர்ந்தார்.
“ சொல்லு சித்து. நான் எல்லாத்துக்கும் தயாரா தான் இருக்கேன்.” என்று சொல்ல, அவரை அருகில் இருந்த சோஃபாவில் அமர்த்தித் தானும் அமர்ந்த்துகொண்டான். யுவா அவர்களுக்கு எதிரே அமர்ந்தான்.
“ எங்களுக்குத் தெரிந்த வரை நான் சொல்றேன். இதுல அப்பா சைடு என்ன பிரச்சன, இல்லை அப்பா தான் இதற்குக் காரணமா என்பது தெரியாது. அவர் கிட்ட பேசினாதான் தெரியும். அதுனால இப்போவே எந்த முடிவுக்கும் நாம வர வேண்டாம்.” ஒரு பெருமூச்சுடன் அனைத்தையும் சொல்லிமுடித்தான்.

error: Content is protected !!