KVK-2

KVK-2

அன்று இரவு சித்து வீட்டுக்கு வந்ததும் உணவு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றான். முகம் கழுவிவிட்டுப் படுக்கையின் மீது வந்து அமர்ந்தான். தூக்கம் சிறிதும் வராது என்று நன்றாகத் தெரியும். ஏனென்றால் மனத்தில் மகிழ்ச்சியோ துக்கமோ இரண்டில் எது அதிகமாக இருந்தாலும் உறக்கம் என்பது உறங்கிவிடும். இது அவன் என்றுமே உணர்ந்திராத முதல் முதல் உயிர்த் தீண்டல். காதலே வரவிட மாட்டேன் என்று இருந்தவன் இப்படி ஒரே பார்வையில் தன்னுனர்வையே இழந்து நிற்கிறான்.
தன் அறையில் உள்ள சிறிய பால்கனியில் ஒரு ரெக்லைனர் போட்டிருந்தான். அதில் சென்று உட்கார்ந்தது இரு கைகளையும் தலைக்குப் பினால் வைத்து வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். சில்லென்ற காற்று முழுநிலவு இரண்டும் அவனுக்கு இன்று புதிதாகத் தெரிந்தது. இத்தனை நாள் இதையெல்லாம் பார்க்கும்போது அதன் அழகு அவனுக்குத் தெரிந்தது ஆனால் இன்று அவை சக்தியின் முகத்தையும் அவள் கண்களையுமே நினைவுபடுத்தியது. அவள் அணிந்திருந்த மரூன் நிற குர்தி அவள் அழகை இன்னும் அதிகமாகக் காட்டியிருக்க வேண்டும். கற்பனையில் மூழ்கிவிட்டான். அவளைப் பார்த்த நிகழ்சிகள் அவன் மனக்கண் முன் ஓடிக்கொண்டே இருந்தது. அவள் நினைவே அவனை இதமாய் தாலாட்டியது.
‘அந்தக்காலத்தில் தென்றல் விடு தூது, புறா விடு தூது மாதிரி இப்பவும் இருந்தா தலைவி என்ன செய்யறானு என்ன நினைக்கறான்னு இந்த நிலாவையும் தென்றல் காற்றையும் அனுப்பி தெரிஞ்சு இருந்திருக்கலாம்’ என யோசித்தான். அந்தச் சமயம் தெருவில் ஏதோ நாய் குரைக்க அந்தச் சத்தத்தில் கனவிலிருந்து மீண்ட உணர்வுடன் தலையைச் சிலுப்பிக்கொண்டு எழுந்தான். ‘டேய் சித்து எப்போலேந்து டா இப்படி கிறுக்குத்தனமா யோசிக்க ஆரம்பிச்ச’ என்று தன் தலையில் அடித்துக்கொண்டான். பின்பு தன் கையில் இருந்த வாட்சை பார்க்க அதில் ஒன்று எனக் காட்டியது. ‘இவ்ளோ நேரமா நாம மெண்டல் மாதிரி இருந்தோமா!’ என்ற உணர்வு வர அத்தனை நேரம் அந்தக் குளிர் காற்று தந்த இதம் இப்பொழுது தூக்கத்தை பரிசாக அளித்தது. எழுந்து தூங்கச்சென்றான். (இன்னும் எனென்ன பண்ண போறானோ…)
சரி வாங்க தலைவன் தூங்கியாச்சு தலைவி என்ன செஞ்சாங்கன்னு பாக்கலாம்.ஹ்ம்ம் அதே தான். நீங்க நினைச்சது சரி தான்.அவளும் தூங்கல. ஆனா ஹீரோ மாதிரி மென்டலா யோசிக்கல.
இரவு நேர விளக்கை மட்டும் எரிய விட்டு இருந்தாள். டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் அமர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் சக்தி.சித்துவின் அந்த வசீகரப் புன்னகையும் அவளைப் பார்த்து அவன் புருவத்தை உயர்தியதுமே நினைவுக்கு வந்தது. அவனது அந்தப் பார்வை அவளை வேறு எதையும் யோசிக்க விடவில்லை. ‘அவன் கண்ணுல மேக்னெட் தான் வெச்சு இருக்கான் சக்தி அவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. கொஞ்சம் ஏமாந்தா கண் வழியாவே மனசுக்குள்ள போய்டுவான் போல’ தன்னையே எச்சரித்துகொண்டாள். ‘”ஆனால் கொஞ்சம் அழகன் தான்.. ம்ம்கும்!!” தனக்கே அழகு காட்டிக்கொண்டாள் பின் சிரித்துக்கொண்டு படுக்கைக்குச் சென்று படுத்தாள். “இனிமேல் இந்த சுஜா கூட அண்ணனைப் பார்க்கப் போகவே கூடாது பா. அப்படியே போனாலும் அவன் வரலன்னு சொன்ன அப்புறம் தான் போகணும்.. நம்மக்கு இந்தக் காதல் எல்லாம் செட் ஆகாதுப்பா” வாய்விட்டுப் புலம்பினாள். உடனே தலையில் அடித்துக்கொண்டு “ச்சே! ஒரு தடவ தான் பாத்தோம் அதுக்குள்ள காதல்ன்னு என்னையே பேசவெச்சுட்டானே.நோ வே!! சக்தி நீ எப்பவும் நீயா இருக்கனும்.ரொம்ப யோசிக்கறது எல்லாம் நம்மால முடியாது” எனத் தன்னையே திடப்படுத்திக்கொண்டாள்.
“சக்தி இன்னும் ஏன் முழிச்சுட்டு இருக்க !தூங்குகுகு”….. என வடிவேல் போல் சொல்லிவிட்டு கண்மூடினாள். தூக்கம் வந்தா தான… ஹீரோ அதே வெள்ளை நிற ட்ஷிர்ட்ல் கண்ணுக்குள்ளே தெரிய…”ச்சே! நீ நல்லா தான் டா இருக்க ஆனா என்னை மட்டும் தொல்ல பண்ணாத சித்தார்த்” எனச் சிணுங்கினாள். ‘சரி பாட்டு கேட்போம்’ எனத் தன் மொபைலில் எப் எம் ப்ளே செய்தாள்.
செக்க சிவந்து நான் போகும் படியா
தன்ன மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குது என்கிடன்னு
என்னை முழுங்க நீ பாக்குற
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழனேன்

             

இதைக் கேட்டவுடன், ’இங்கயுமா?’ என்ற உணர்வு வர “யு டூ ப்ரூடஸ்” எனக் கத்திவிட்டு அதையும் அனைத்துவிட்டாள். “ஆண்டவா! என்னை ஏன் இப்டி சோதிக்கற… தூக்கத்த குடுப்பா ப்ளீஸ்!” என அழாத குறையாக வேண்டினாள். புரண்டு புரண்டு படுத்தாள், பின்பு எப்பொழுது தூங்கினாளோ அவளுக்கே தெரியாது.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் சக்தி படிப்பிலும் தன் தாய் தந்தையுடன் வெளியில் சென்றும் இன்னும் சில நண்பர்களுடன் பேசியும் அவன் நினைப்பின்றி இருந்தாள். அனால் சித்துவோ இரண்டு நாட்களும் வீட்டிலேயே கழித்தான். எப்பொழுதும் தன் அக்கா வீட்டிற்க்கு வார இறுதியில் சென்று அவள் குழந்தையுடன் விளையாடுவான். இந்த வாரம் அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை.
முதல் நாள் சக்தி யை நினைத்தான். அடுத்த நாள் சக்தி அவன் மனதின் “சகி” ஆனாள். தனக்கு அவள் தான் வாழ்நாள் முழுவதும் கூட வர வேண்டும் என முடிவே செய்துவிட்டான். அவன் தாய் பார்வதி அவனை இவ்வளவு சிந்தனையோடு பார்த்ததே இல்லை.உடம்பு சரில்லையோ என அவன் அறைக்கு வந்தார்.
அவன் அங்குத் தன் லேப்டாப்பில் ஏதோ செய்துகொண்டிருந்தான்.”என்ன சித்து .. உடம்பு சரில்லையா” என அவன் அருகில் சென்று நெற்றியை தொட்டு பார்க்க ,
“ஒன்னும் இல்ல மா நல்லா தான இருக்கேன்” என்றான்.
“உன் அக்கா மைதிலி ரெண்டு தடவ கால் பண்ணிட்டா..வர்ஷி , மாமா ஏன் வரலன்னு? கேட்டுட்டே இருக்காளாம். மாமாக்கு வேலை இருக்குன்னு ஏதோ சொல்லிச் சமாளிச்சேன்ன்னு சொன்னா , உனக்குப் போன் பண்ணாளாமே நீ எடுக்கலையா” என அவைனையே ஊன்றிப் பார்க்க
அது எங்கே இருக்கிறது என்று தெரிந்தால் தானே எடுத்துப் பேச முடியும்.இப்போது தான் அவன் போன் நினைவே அவனுக்கு வந்தது.”இல்ல மா சார்ஜ் போடல அதான்..” என அசடு வழிந்து சமாளித்தான். ” என்னவோ! ஒன்னும் சரில்லை,  சரி சாப்பிட வா அப்புறம் ஒழுங்கா தூங்கு.. நாளைக்காவது நல்லா குளிச்சுட்டு ஆபீசுக்கு போ.. என்ன நினைப்புல இருக்கியோ தெரியல” என அவனைக் கையோடு அழைத்துச்சென்றார்.
‘அம்மா பார்த்துச் சொல்லும் அளவுக்கு நாம் சக்தியின் நினைவாக இருந்திருக்கிறோம். இந்த மாதிரி இருக்கறது எனக்குச் செட் ஆகாது.சீக்கரம் அவ கிட்ட சொல்லியே ஆகணும்.அப்போ தான் மனசு லேசாகும். நாளைக்கே சுந்தர் கிட்ட பேசணும்’ என நினைத்துக்கொண்டன்.
மறுநாள் சுந்தருக்கு முன்பே அவன் ஆபீசுக்கு வந்துவிட்டான். சுந்தர் வந்தவுடன் “வா டா டீ பிரேக் போலாம்” என்று எழுந்தான். “என்னடா இது அதிசயம் நீ சீக்கரம் வந்துட்ட அதுவும் இல்லாம வந்தவுடனே டீ பிரேக் போலாம் ன்னு சொல்ற என்ன விஷயம் எதாவது இஸ்ஷுவா காலைலேயே ??” எனப் பரபரக்க ,  “அதெல்லாம் ஒன்னும் இல்லை டா .. நீ வா” என அவன் பேக்கை வாங்கி வைத்துவிட்டு அவனையும் இழுத்துக்கொண்டு வெளியே சென்றான்.
இருவரும் கையில் டீ எடுத்துகொண்டு ரிசெப்ஷன் அருகே போடப்பட்டு இருந்த அழகிய சோபா மீது அமர்ந்தனர்.
“இப்போ சொல்லு என்ன விஷயம்” எனச் சுந்தர் ஆரம்பித்தான். சித்துவிற்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. “அது அது வந்து..”  இழுத்தான்.

“என்னடா காலைல இருந்து உன்கிட்ட நிறைய மாற்றம் தெரியுது.. நீ இப்படி இருக்கற ஆள் இல்லையே” என அவனை உற்று நோக்க. “எதுவா இருந்தாலும் சொல்லு நண்பா” என அவன் கேட்கவும் உடனே , “எனக்கு சக்திய ரொம்ப புடிச்சிருக்கு டா”  போட்டு உடைத்தான்.
ஒரு நிமிடம் அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் விழித்தான். பின் அதை உணர்ந்தவன் மெல்ல சிரித்தான்.சித்து இந்த இரண்டு நாளும் இதையே யோசித்துக்கொண்டிருந்தானெனக் கூறவும், அவன் முகத்தைத் தன் கையால் இந்தபக்கம் அந்தப்பக்கம் திருப்பி , “இந்த மூஞ்சி தான நான் லவ்வே

 பண்ணமாட்டேன்னு சொல்லிச்சு” எனக் கிண்டலடிக்கக் கோபப்ப்பட்டான் சித்து. “நான் சீரியஸா சொல்லிட்டு இருக்கேன் நீ விளையாடுறியா” எனக் கொதிக்க
“சரி சரி… சாரி டா!… எனிவே நீயும் சக்தியும் பெர்பெக்ட் மேட்ச் டா குட் சாய்ஸ்” என்றான் தோள்களைத் தட்டி.
“அவ கிட்ட எப்படி சொல்றதுன்னு தான் யோசிக்கறேன். அதுக்கு எதாவது ஐடியா குடு டா” பாவமாகக் கேட்டான் சித்து .

“உடனே கேட்டா எப்டி டா? நான் ஈவினிங் சுஜா கிட்ட கேட்டுப் பாக்கறேன்” என்க, உடனே முகம் மலர “நன்பேண்டா!!” என சித்து அவன் தோள்களைப் பற்றிகொண்டான்.

“கடவுளே காப்பாத்துப்பா!!” என மேலே பார்த்துச் சொல்லி “சரி கூல் டௌன் ..டீ ஆரிடப் போகுது குடி” என்றான் சுந்தர்.பின் இருவரும் வேலையில்மூழ்கினர்.
அன்று ஆபீஸ் முடிந்ததும் சுந்தர் சுஜாவிற்கு போன் செய்தான். சித்துவும் அருகில் இருக்க அவன் சுஜாவிடம் சித்துவின் விருப்பத்தைப் பற்றிக் கூறினான். சுஜாவிற்கு மிக்க மகிழ்ச்சி ஏனென்றால் சித்துவைப் பற்றி அடிக்கடி சுந்தர் அவளிடம் பேசுவான் ரொம்ப நல்லவன் என்றும் அறிவாளி என்றும் கூறுவான். தன் உயிர் தோழிக்கு இப்படியொரு நல்ல துணை கிடைத்தால் அவள் வாழ்வு நன்றாக இருக்கும் என்று நினைத்து மனதார மகிழ்ந்தாள்.
“ஆனால் அவளுக்கு இந்த லவ் எல்லாம் சுத்தமா விருப்பம் இல்லை. அவகிட்ட போய் நான் எப்படி கேட்கறதுன்னு தான் யோசிக்கறேன்” என்றாள்.

“அவ கிட்ட இத பத்தி நீ ஏதும் பேசிடாத. எல்லாம் சித்துவே பேசிப்பான். அவளத் தனியா மீட் பண்ண எதாவது சந்தர்ப்பம் இருக்கா?? அத மட்டும் சொல்லு” சுந்தர் வினவ,
“ரொம்ப கஷ்டம் தான் சுந்தர், அவ அவங்க அம்மா அப்பா கூட, இல்லனா என்கூடத் தான் வெளில போவா.தனியா எங்கயும் போகமாட்டா. எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குண்டுங்க நான் எப்படியாவது அவளை மீட் பண்ண வைக்கப் பாக்கறேன்” என்றாள். அவன் பேசிவிட்டு சித்துவிடம் விவரத்தைக் கூறினான்.
“சரி வெயிட் பண்றேன்” அலுத்துக்கொண்டான் சித்து,

“டேய் இது ஓவர் டா ரெண்டு நாள் தாங்கமாடீன்களா சார்” அவன் கையில் தன் கையை மடக்கிக் குத்தினான் சுந்தர். 

“ஆஆ!!” பொய்யாகக் கத்தி விட்டு “வேற வழி இல்லையே” எனக் கூறிவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.
இப்படியே ஒரு வாரம் ஓடிவிட்டது. சித்து சற்று பொறுமை காத்தான். சுந்தர் சுஜாவிடம் தினமும் கேட்டவண்ணம் இருந்தான். “உன் மரமண்டைல எந்த ஐடியாவும் வரலையா?” என்று கேட்க  இன்று எதாவது யோசித்து அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தன் மண்டையை உடைத்து யோசித்துக்கொண்டிருந்தாள். “எங்கயாவது அவள கூப்பிட்டு விட்டு நாம போகாம இருந்திடலாமா?! அவ, வீட்டுக்கு வா ரெண்டுபேரும் சேர்ந்தே போகலாம்ன்னு சொல்லிடுவாளே..!” மண்டையை குட்டி குட்டி யோசித்தாள்.
அதே சமயம் அவளின் செல்போன் சினுங்கியது. சக்தி தான் அழைத்திருந்தாள். ‘தின்க் ஆப் டெவில்’ என நினைத்துச் சிரிப்பு வந்துவிட்டது. எடுத்துப் பேசினாள்.
“ஹே சுஜா லைப்ரரி போகணும் வரியா” என்றாள் சக்தி. துள்ளி குத்தித்துக்கொண்டு எழுந்தாள் சுஜா.தன் மகிழ்ச்சியை மறைத்துகொண்டு “ஓ!!போலாமே!! .. ஏன் திடிர்ன்னு போகணும்ங்கற” எனக் கேட்க

“லாஸ்ட் செமஸ்டர் இது நாம ப்ராஜெக்ட் பண்ண வேண்டாமா அதுக்கு தான் ரெபரென்ஸ் புக் எடுக்கணும் வா” கூப்பிட்டாள் சக்தி.
இதையே ஒரு நல்ல சந்தர்ப்பமாக நினைத்தாள். “சரி சக்தி நீ நேரா லைப்ரரி வந்துடு நான் ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பறேன்” எனக் கூறி வைத்தாள். உடனே சித்துவிற்கு போன் செய்து இதைச் சொல்ல அவன் உடனே கிளம்பிவிட்டான். சுஜா போகாமல் இருக்க முடிவெடுத்தாள். அங்கே சக்தி தன் வீட்டின் அருகே உள்ள நூலகத்தில் தனக்கு வேண்டிய புத்தகத்தைத் தேடிக்கொண்டு இருந்தாள். சித்து வும் தனது காரைப் பார்க் செய்துவிட்டு வந்தான். சக்தியின் ஆக்டிவா வை வெளியில் பார்த்ததும் உற்சாகமானான். வேகமாக உள்ளே சென்றான். அவள் எங்கு இருக்கிறாள் என்று தேட அவள் கடைசி வரிசையிலிருந்து புத்தகத்தைத் தேடிக்கொண்டிருந்தாள். அந்தபகுதியில் அவளைத்தவிர வேறு யாரும் இல்லாததால் அவள் அருகில் சென்றான். அதே நேரம் அவள் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு திரும்ப அவன் பின்னால் நின்றது தெரியாமல் அவன்மேல் மோதிப் புத்தகம் கீழே விழுந்தது. பின் “சாரி!!” சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்தாள்.
அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. செய்வது அறியாமல் சிலையாக நின்றாள். அவன் கீழே இருந்த புத்தகத்தை எடுத்துக்கொடுக்க , அவனிடமிருந்து வாங்கினாள். ‘தேங்க்ஸ்’ சொல்ல நினைத்தாள் ஆனால் வார்த்தை வரவில்லை.

“கேர்புல் சக்தி” அவன் சொல்ல,

எதுவும் சொல்ல முடியாமல் “ம்ம்ம்..” எங்கோ பார்த்துக் கூறினாள்.

“எப்படி இருக்க??” என்றான். அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் வாயில் இருந்து வார்தைகள் வரமறுத்தன.அவள் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டது. வியர்த்து விட்டது.
அவள் கண்முன்னே தன் விரலால் சொடக்கினான். சட்டெனப் பின்னால் நகர்ந்து தன் நெற்றி வியர்வையை துடைத்துக்கொண்டு

“என்ன.. என்ன சொனீங்க?” திணறினாள்.

தன் இதழைச் சுழித்து லேசாகச் சிரித்தான். பின் ஏதோ புரிந்தவன் போலத் தன் தலையை ஆட்டினான். அந்தச் சிரிப்பில் அவள் இமைக்கவும் மறந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“எப்படி இருக்கன்னு கேட்டேன்” என்றான் சத்தமாக. “நல்லா இருக்கேன்” நீங்க?? என்றாள். “அம் குட் சக்தி அண்ட் தேங்க்ஸ் பார் ரிமெம்பெரிங் மீ ” என்று சொல்ல
‘உன்ன மறக்க முடியுமா’ என இன்னர் வாய்ஸ், அதாங்க மனசாட்சி எட்டிப்பார்த்தது. அவளுக்கே உள்ளூர சிரிப்பு வர

“என்ன தனியா வந்திருக்க கூட யாரும் வரலயா?” அவன் கேட்டபோது ,

“இல்லை சுஜா வரேன்னு சொன்னா இன்னும் காணும்” முந்திக்கொண்டு உள்ளிருந்த ஆர்வத்தோடு சொல்ல , ‘சக்தி நீயே வழிஞ்சு உன்னைக் காட்டிக்குடுக்காத’ என மூளை உரைத்தது. பின் உடனே முகத்தை மாற்றிக்கொண்டு

“ஆமா!! என்னை என்னன்னு சொன்னீங்க..நீ யா?” கோபமாகக் கேட்டாள்.(பொய் கோபம் தான்!)
“ஆமா நீ என்னை விடச் சின்னவ தானே அப்படி கூப்பிட்டா என்ன தப்பு?” நிமிர்வாகவே கேட்டான்.
“நாம பழகியதே இல்லை அதுக்குள்ள எப்படி ஒருமை ல கூப்பிடலாம்”  வேண்டுமென்றே சண்டை வளர்த்தாள். அவனைத் தவிர்க்கவேண்டும் என்று ஒருபுறம் அவள் நினத்திருந்தாலும் மனமோ அவனிடம் இன்னும் கொஞ்ச நேரம் பேசு என்று கெஞ்சியது.
“எனக்கு அப்படி தோனல” என்றான் கண்களால் சிரித்தபடி.
“எப்படி??” – சக்தி 
“நாம பழகினதே இல்லைன்னு சொன்னியே எனக்கு அப்படி தோனலன்னு சொன்னேன். ரொம்ப  நாளா பார்த்துப் பேசின மாதிரி தான் தோணுது” என்று மனதில் உள்ளதை அவளின் கண்களைப் பார்த்துக்கொண்டே சொல்ல
அவளால் அந்தப் பார்வையை தவிர்க்க முடியவில்லை. அவளும் இமைக்க மறந்து பார்த்தாள். சுற்றி நடப்பவை ஒன்றும் தெரியவில்லை. கண்கள் அவன் கண்களோடு கலந்துவிட்டதாகவே தோன்றியது. அங்குப் போடப்பட்டிருந்த ஏசி காற்றில் அவன் தலை முடி அழகாக அசைய மன்மதன் போலக் காட்சியளித்தான். அவன் கூறிய அந்த வார்த்தைகளே காதில் இன்னும் கேட்டுக்கொண்டிருந்தது. ‘எனக்கும் ரொம்ப நாள் பார்த்த உணர்வு தானோ’ என்ற எண்ணம் வந்தது. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ தெரியவில்லை.
முதலில் சுதாரித்தது சித்து தான்.

“என்ன?! அப்படி கூப்பிடலாம் இல்லையா?”  மெதுவாக அவன் கேட்க,

 “கூப்பிடலாமே”  தன்னையும் மீறிச் சொன்னாள். உடனே தலையைக் குனிந்து கொண்டு சக்தி ‘என்ன நடக்குது’ என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டாள். அப்போது தான் அவன் அணிந்திருந்த உடையைப் பார்த்தாள். அன்று அவன் அணிந்திருந்த அதே வெள்ளை நிற டிஷர்ட் ஆனால் அதில் ஒரு மாற்றம்.
அன்று பாக்கெட் இருந்த இடத்தில் இப்போது இல்லை. அந்த இடத்தில் இப்பொழுது புதிதாக எம்பராய்டரி செய்திருந்தான்.மரூன் நிறத்தில் இதயம் வரையப்பட்டு உள்ளே எஸ் எஸ் என்று எழுதப்பட்டு மேலே இரண்டு புறாக்கள் பறந்தன. அப்போது தான் அவள் அன்று அணிந்திருந்தது இதே மரூன் நிற குர்தி என்று நினைவிற்கு வந்தது.

 

அவன் ஏதோ அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தான் ஆனால் அவள் மூளை அவன் உடையைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்க காதில் எதுவும் விழவில்லை.
அவன் மறுபடி சொடக்கு போட்டதில் நினைவிற்கு வந்தவள்

“எ.. என்ன?”  என்றாள்.
“சுத்தம்.. அடிக்கடி மேடம் ட்ரீம்ஸ்கு போய்டறீங்க. புக்ஸ் எடுத்தாச்சா?  இங்க ரொம்ப நேரம் பேச முடியாது, வெளிய போலாம்” என்றான்.
தன் நிலையை உணர்ந்தவள் சட்டென “எடுத்தாச்சு” , சொல்லிவிட்டு கையெழுத்திட்டு அதை எடுத்துகொண்டு வெளியே வந்தார்கள்.

“ஒரு கப் காபிக்கு டைம் இருக்குமா?” என்றான்.

“இல்லை நான் வரல அம்மாகிட்ட அரை மணி நேரத்துல வந்துடுவேன்னு சொல்லிட்டு வந்தேன், தேடுவாங்க. நான் கிளம்பறேன்”  வேகமாகத் தன் வண்டிய ஸ்டார்ட் செய்தாள்.
பின்னோடு வந்தவன் “சக்தி!!” என அழைத்தான்.
என்ன? என்பது போல் பார்க்க “டேக் கேர். பட் நெக்ஸ்ட் டைம் காபிக்கும் சேர்த்து கொஞ்சம் டைம் சொல்லிட்டு வா ” என்றான்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பினால் போதும் எனத் தோன்ற “ஓகே” என்றுவிட்டு கிளம்பினாள்.
அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றவன் ‘எனக்குள் இத்தனை மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு உனக்குள் அது இல்லாதது போல் நடிக்க நினைக்கிறாயா மை சகி. உன் கண்கள் சொல்லும் பாஷை எனக்கு மட்டுமே தெரியும். ரொம்ப நாள் காக்க வைக்காம சீக்கரம் சொல்லிவிடு..சொல்ல வெச்சிடுவேன் ..’

            

——————————————————————————————————————————————–

 

“ஆல் தி பெஸ்ட் யுவராஜ்” . “யு ஆர் ஆல் செட் டு ப்ரோசீட் வித் யுவர் நியூ அட் கம்பெனி” என யுவராஜய் போனில் வாழ்த்திக்கொண்டிருந்தார் பாஙக் மேனேஜர்.
“தேங்க யு மிஸ்டர் விஸ்வநாதன்”. “நான் இன்னும் மூணு மாசத்துல இந்தியா ல இருப்பேன்”. “என் நண்பன் உதவியோட நீங்க ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சுடுடலாம். எல்லாமே என் அம்மா பேர் ல தான் இருக்கும்” எனக் கூறிவிட்டு இன்னும் சில விவரங்களைப் பேசிவிட்டு வைத்தான்.
ஆறு மாதம் கழித்து தாய்நாடு செல்ல நினைத்தவன் கம்பெனி ஆரம்பிக்க எல்லா வேலையும் சரியாய் நடக்கிறது என்று ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொண்ட பிறகு மூன்று மாதத்தில் செல்ல முடிவெடுத்தான்.
தான் ஆரம்பிக்கப் போகும் சொந்த நிறுவனம், புதிய வீடு அனைத்துமே தன் தாயின் பெயரிலேயே இருக்க வேண்டும் என முன்னமே தீர்மானித்து இருந்தான். இப்பொழுதும் அவர்கள் இருப்பதும் சொந்த வீடு தான். அவன் மாமாவும் அம்மாவும் தங்கள் உழைப்பினால் வாங்கிய வீடு. ஆனால் யுவராஜ் தன் அம்மாவும் மாமாவும் இப்பொழுது இருப்பதை விட இன்னும் பெரிய வீட்டில் ஐந்து ஆறு வேலையாட்களுடன் சௌகரியமாக இருக்க வேண்டும் என விரும்பினான். அவர்கள் வாழ்வில் இனி எந்தக் கஷ்டமும் படக் கூடாது என்று எண்ணினான். அதற்குத்தான் தன் தாய் டிசைனிங் செய்வதை கூட அவருக்குக் கஷ்டமாக இருக்கும் என்று வேண்டாம் என்றான்.
இருப்பினும் அவரின் துக்கத்தை மறக்க இது போன்ற வேலைகள் உதவும் என்பதால் தான் அதை லேசாக விட்டுவிட்டான்.
இப்பொழுது அவனின் கவனம் எல்லாம் தான் வெறுக்கும் அந்தக் குடும்பத்தை எந்தெந்த வகையில் துன்பப்படுத்துவது என்பது தான். அதற்காக அவன் ஆட்களைக் கொண்டு அந்தக்குடும்பத்தில் இருப்பவர்களைக் கண்காணிக்க சொல்லிவிட்டான். எந்த வகையிலும் பெண்கள் மட்டும் பாதிக்கப் படக் கூடாது என்பது அவன் எண்ணம். அவன் தாயும் ஒரு பெண் ஆதலால் அவர் படும் துக்கத்தை தான் வேறு எந்த ஒரு பெண்ணிற்கும் கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
மனது முழுவதும் ரணமாகிக் கிடக்கிறது. அவன் இப்பொழுது நின்றுகொண்டிருக்கும் கோல்டன் கேட் பிரிட்ஜின் அழகு கூட அவனுக்கு ரசிக்கும்படி இல்லை.
மேகங்கள் அதன் உச்சியைத் தழுவிச்செல்லாம் காட்சி வானத்திற்கும் பூமிக்கும் இடையே ஒரு பாலம் அமைந்தது போல் இருந்தது. அதைக் காணத்தானே அத்தனை மக்களும் கூடமாக அங்கு வருவதே. அங்குப் பரவும் குளிர்ந்த காற்றும் மேகக் கூட்டமும் கீழே இருக்கும் கடலின் அழகும் அந்த இடத்தை ஒரு சொர்க்க லோகமாகவே மாற்றி இருந்தது. அங்குப் பறந்து செல்லும் பறவைகள் தேவலோக அன்னப்பறவையை ஒத்து இருந்தது. இருள் தொடங்கிய நேரம் ஆனபோது அங்குள்ள மின்விளக்குகளின் உதவியால் அந்த இடம் விண்ணில் அமைந்த ஒரு மாளிகை போலக் காட்சி அளித்தது. இத்தனைக் காட்சிகளும் ரசனையுள்ள எந்த ஒரு மனிதன் பார்வையில் இருந்தும் தப்பாது.
யுவராஜ் ஒன்றும் ரசனை இல்லாதவன் இல்லை. அவனுக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கிறான். தன் தாயின் கலைநயத்தை அவனே பல முறை பாராட்டி இருக்கிறான். சில சமயம் அவரின் வேலைக்குத் துணையாக நிறங்களைத் தேர்ந்தெடுப்பதும் அவன் தான்.

அவர்களின் புது வீட்டை ரசித்துக் கட்டியிருந்தான்.
அப்படிப் பட்டவன் நல்ல மனநிலையில் இருந்தால் இந்த இடத்தைப் பார்த்துக் குறைந்தபட்சம் ஒரு “ஆஹா!!” வாவது அவன் வாயில் இருந்து வந்திருக்கும். தன் வாழ்வின் மூலத்தை அவன் தெரிந்து கொண்டபோது அது அவ்வளவு இனிப்பாக இல்லை. மாறாக வெறுப்பையும் பழிவாங்கும் உணர்வையுமே அது தூண்டியது. இருள் சூழ்ந்தது கூடத் தெரியாமல் அந்த ஆழக் கடலையே வெரித்துகொண்டிருந்தான். மறுபடியும் அவன் செல்போன் சிணுங்க அதைப் பார்த்தவன் முகத்தில் சிறிய புன்னகை. 

அவன் அம்மா தான் அழைத்தது.
எடுத்ததும் “சொல்லுங்கம்மா குட் மார்னிங்” என்றான்.
“யுவா இன்னும் ஒரு மணி நேரத்துல குட் நூன் ஆயிடும் , நேரம் போறது கூடத் தெரியாமல் என்ன செஞ்சிட்டு இருக்க”  அன்பாகக் கேட்டார்.
நேரம் இப்பொழுது இரவு பத்தரையென அவனுடைய டேவிட் யூர்மான் வாட்ச் காட்டியது. தன் காரை நோக்கி நடந்தபடியே பேசினான். “உங்கள பத்தி தான் அம்மா நினைச்சுட்டு இருந்தேன் நீங்களே பேசிடீங்க”‘  உண்மையும் இல்லாமல் பொய்யும் இல்லாமல் கூறினான். “நானே பேசணும்னு நினச்சேன் மா” ஆர்வமாக அவன்  சொல்ல, 
“என்ன விஷயம் கண்ணா சொல்லு” அவரும் கேட்டார்.
தன் காரில் உள்ள ப்ளூடூத்தில் போனை கனக்ட் செய்து கார் ஓட்டியபடியே பேசினான்.
“இன்னும் இரண்டு மூணு மாசத்துலயே அங்க வந்துடுவேன் மா. நம்ம கம்பெனி வேலை எல்லாம் இப்போ ஸ்மூத்தா போகுது நாம நினைச்ச தேதிக்கு முன்னாடியே ஆரம்பிச்சுடலாம். இந்தக் கம்பெனில என்னோட வேலையை ரிசைன் செஞ்சுட்டேன். இன்னும் ரெண்டு மாசத்துல எல்லாம் முடிஞ்சுடும். அப்புறம் உங்ககூட தான்” உற்சாகமாகக் கூறினான்.
“ரொம்ப சந்தோஷம் யுவா. நீ என் பக்கத்துல இருந்தா எனக்கு அதுவே போதும். அஞ்சு வருஷம் உன்ன பாக்காம கஷ்டபட்டாச்சு, குரலை மட்டும் கேட்டு ஆறுதல் பட்டுக்கிட்டு இருக்கேன். இப்போ தான் எனக்குப் புது தெம்பு வருது. ஒவ்வொரு நாளும் இனிமே சீக்கரம் கடந்து போகணும்ன்னு கடவுள் கிட்ட வேண்டிகிட்டே இருப்பேன். நீ இப்படியொரு நல்ல நிலைமைக்கு வரணும்ன்னு நான் வேண்டாத தெய்வம் இல்லை. அந்தக் கடவுள் கண் திறந்துட்டான்.இனிமே நமக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும்”  தன் மகனின் வளர்ச்சி கண்டு அந்தத் தாய்மனம் பூரித்து போனது.
“ஆமாம் அம்மா!! இனிமே நமக்கு நல்ல காலம் தான்” எனக் கூறிவிட்டு ‘ஆனால் அவன் குடும்பத்திற்க்கு தான் கெட்ட நேரம் ஆரம்பிக்கப் போகுது’  அவன் மனம் சந்தோஷப்பட்டது.
“அம்மா ரெடியா இருங்க நான் அங்க வந்ததும் முதல் வேலை, நாம புது வீட்டுக்குக் குடிபோறது தான். இப்போ இருக்கற வீட்டை அப்படியே வெச்சுக்கணும் ஏன்னா அது உங்க உழைப்பு” உருகினான்.
“நீ சொல்றதுக்கு நான் சம்மதிக்கறேன். அதே மாதிரி நான் சொல்றதுக்கு நீயும் சம்மதிக்கணும் சரியா கண்ணா ?” ஆவலாகக் கேட்டார்.
“நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். எனக்குக் கொஞ்சம் டைம் வேணும். ஒரு வருஷம் பொறுத்துக்கோங்க அப்புறம் நானே சொல்றேன் மா ப்ளீஸ்!!”  கெஞ்சினான்.
“முடியாது யுவா”!! “எனக்கும் ஆசை இருக்கு, உன்னைத் திரும்பவும் குழந்தையாக்கி கொஞ்சனும்னு. அதுக்கு நீ ஒரு பேரக்குழந்தைய எனக்குக் குடுத்தே ஆகணும். நீ யாராயாவது விரும்பிக் கல்யாணம் பண்ணிகிட்டாலும் எனக்குச் சம்மதம் தான் பா. உன்னைக் கல்யாணக் கோலத்துல பார்க்க எனக்கு ஆசையா இருக்கு யுவா.அப்படி எதாவது இருந்தா சொல்லு”  உணர்ச்சிவசப்பட்டார்.

“அம்மா அப்படி எதாவது இருந்தா உங்க கிட்ட சொல்லாம நான் வேற யார்கிட்ட சொல்லபோறேன். எனக்கு இப்போ கம்பெனி நல்லபடியா ஆரம்பிக்கனும், அது மட்டும் தான் மனசுல இருக்குமா. இப்போ போய்க் கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்னோட வேலைல கவனம் செலுத்த முடியாது. கொஞ்ச நாள் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிகோங்க ப்ளீஸ்!! என் செல்ல அம்மால..”  தாஜா செய்தான்.
“சரி கம்பெனி ஆரம்பிச்சு ஆறு மாசம் தான் உனக்கு டைம் அதுக்கப்பறம் நான் சொல்றத தான் நீ கேட்கணும் புரியுதா”  கட்டளை இட்டார் மலர்.
“எஸ் யுவர் ஆனார்!! “அஸ் யு சே”  சிரித்துக்கொண்டே கூற இருவரும் மனம்விட்டு சிரித்தனர்.
‘உனக்கு எந்தக் கஷ்டமும் வரவிடமாட்டேன் அம்மா. உனக்குக் கஷ்டம் குடுதவங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்காம விடமாட்டேன் அதுக்கு தான் நான் டைம் கேட்டேன்’. ‘ஐ அம் சாரி மா’  மனதினுள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.
அவன் அம்மாவிடம் பேசியபடியே வீடு வந்து சேர்ந்தான். இன்று ஏனோ அவனையும் அறியாமல் ஆழ்ந்து உறங்கினான். அடுத்து வரப்போகும் நாட்களில் அவனால் நிம்மதியாக உறங்க முடியாமல் கூடப் போகலாம்.
கம்பெனி ஆரம்பிக்க அங்கிருந்தே ஆட்களைத் தெரிவு செய்திருந்தான். அவனுடன் இப்பொழுது வேலை பார்க்கும் சிலர் அவனின் திறமையைக் கண்டு அவன் தொடங்கவிருக்கும் கம்பெனியில் வேலைக்குச் சேர முடிவு செய்து அவனிடம் கேட்டனர்.

அவன் அதிலும் ஒரு சிலரை மட்டுமே தேர்வு செய்தான். அதுவும் இந்தியாவில் வேலை செய்யச் சம்மதிக்க வேண்டும். அது போக அவன் இந்தியாவில் இருக்கும் ஆட்களிலே சிலரை டெலிபோன் மூலம் இன்டெர்வியு செய்தான். அவன் தனது மற்ற பணிகளைச் செய்ய மேனேஜர் ஆகத் தனது கல்லூரி நண்பன் கதிர் என்கிற கதிரேசனை நியமித்து இருந்தான். இருவரும் நெருங்கிய நண்பர்கள். போட்டி போட்டுகொண்டு படித்தனர். கதிருக்கு இந்தியாவை விட்டுச் செல்ல விருப்பம் இல்லை அதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டு இங்கேயே ஒரு சிறந்த கம்பனில் மேனேஜ்மன்ட் ஹெட் ஆகா பணிபுரிந்தான்.கதிர் தான் இப்பொழுது இந்தியாவிலிருந்து கொண்டு அவனுக்கு அணைத்து வேலைகளையும் சுலபமாக்கினான்.

ஆட்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் கம்பெனிக்கான இடத்தை நகரின் பிரதான பகுதியில் அமைத்துக் கொடுத்தது எல்லாமே அவன் தான். அவன் அந்தத் துறையில் வேலை செய்தவன், அவனுக்கு இது பெரிய விஷயமே இல்லை.
யுவராஜ் அங்கிருந்து எப்படி ஆபீஸ் அமைய வேண்டும் என்று இவனிடம் சொல்லிவிடுவான். அவன் கற்பனைக்குச் சிறிதும் மாறாமல் அப்படியே செய்து விடுவான். அவனைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டான். அதேசமயம் அவன் சொன்னதை செய்யாமல் இருக்க மாட்டான்.
அதற்காகத் தான் அவன் முன்பு வேலை செய்துகொண்டிருந்த இடத்திலிருந்து இவன் கூறிய ஒரு வார்த்தைக்காக அதை ரிசைன் செய்துவிட்டு வந்தான். அவன்மீது அளவு கடந்த நம்பிக்கை.

கதிர் அவ்வப்போது யுவராஜின் வீட்டுக்குச் சென்று அவன் மாமாவையும் அம்மாவையும் சென்று பார்த்துவிட்டு வருவான். யுவராஜ் தான் இருவரையும் அடிக்கடி சென்று பார்த்துக்கொள்ளச் சொல்லி இருந்தான். ஆனால் கதிருக்கும் அவர்களின் மீது மதிப்பும் பாசமும் இருந்தது. இப்பொழுது அவன் அவர்களைப் பார்க்கத் தான் சென்றான்.

இருவரும் வீட்டில் தான் இருந்தார்கள். காலிங் பெல்லை அழுத்தியவுடன் கதவைத் திறந்தார் அன்பரசன்.
“வாப்பா கதிர். என்ன இந்தப்பக்கம்? ராஜ் எங்களைப் பார்த்துட்டு வரச் சொன்னான??”  நக்கலாகக் கேட்டார்.

உடனே அவன் “அம்மா பாருங்கம்மா மாமா என்னைக் கிண்டல் பண்றார், நான் அவன் சொல்லலனா வரமாட்டேனா..??”

“எனக்குக் கொஞ்சம் வேலை அதிகம் அதான் வரமுடியல ஆனாலும் உங்களுக்கு யுவராஜ் பண்றத விட நான் தான் உங்க ரெண்டு பேருக்கும் அதிகமா போன் பண்ணி விசாரிக்கறேன்” மலர்மொழியிடம் தன் பங்கு நியாத்தை சொல்ல ஆரம்பித்தான்.
“அண்ணா அவன விடுங்களேன். ஒரு  பக்கம் யுவா அவனைத் தூங்ககூட விடாம தொல்லை பண்றான் நீங்களும் அவன கிண்டல் பண்ணாதீங்க. அவன் பாவம்” அவனுக்குப் பரிந்து பேசினார்.
“அம்மா தான் என்னை நல்ல புரிஞ்சுவெசிருக்காங்க”  மேலே அவன் கூற

“சரி சரி மலர் அவனுக்குக் காபி குடு அதான் பையன் ஐஸ் வைக்கறான்”  அன்பு சிரித்துக்கொண்டே சொன்னார்.
“இருங்க எடுத்துட்டு வரேன்” என உள்ளே சென்றார் மலர்.
“அப்டியே எனக்கும் கொண்டு வாம்மா!!!”  இப்பொழுது அவரே கேட்க,
“மாமா இது தான் பக்கத்துக்கு இலைக்குப் பாயசம் வேணும்ன்னு கேட்கறது” அவன் இப்பொழுது காலை வாரினான்.
இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
“சரி சொல்லுப்பா என்ன விஷயம்” எனக் கேட்க அதற்குள் மலரும் காபி கொண்டு வந்தார். மூவரும் காபி குடித்துக்கொண்டு பேசினர்.

“இன்னும் மூணு மாசத்துல யுவராஜ் வந்துடுவான். ஆனா அதுக்குள்ள கம்பெனில சில வேலைகளை ஒரு மாசத்துக்குள்ள ஸ்டார்ட் பண்ணி ஆகணும். அப்போதான் அவன் வரப்ப சரியா இருக்கும். அவனுக்கும் மெயில் அனுப்பி விவரத்தைச் சொல்லிட்டேன். அவன் உங்க கிட்ட நல்ல நாள் பார்த்து ஆரம்பிக்கச் சொல்லிட்டான். அப்படியே புது வீட்டையும் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய்க் காட்ட சொன்னான். அதான் அத பத்தி கேட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றான்.

“என்னப்பா இது மொதல்ல ஆறு மாசம்னு சொன்னான். அப்புறம் மூணு மாசம்ன்னு சொன்னான். இப்போ ஒரு மாசத்துல ஆரம்பிக்கணும்ன்னு சொல்றீங்க. அவன் வராம எப்படி பண்றது. அவசரமா ஏன் எல்லாம் பண்ணனும். பொறுமையா பண்ணலாமே” வருத்தப்பட்டார் மலர்.
“இல்லம்மா நாங்க எல்லாம் ரொம்ப பர்பெக்ட்டா வெச்சிருக்கோம். அதுனால எந்தப் பிரச்சனையும் இல்லை.

அதுவும் இல்லாம ஆட்களை எல்லாம் தேர்வு செஞ்சாச்சு.அவங்கள ரொம்ப நாள் வெய்ட் பண்ண வைக்க முடியாது அதான் ஒரு மாசம் டைம் சொல்லிருக்கோம். உங்க பையன் எல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டான். நீங்க எப்போன்னு சொன்னவுடனே பூஜை போட்டுடலாம்”  ஆர்வமாக அவரைப் பார்த்தான் கதிர்.

தன் அண்ணனைப் பார்த்து, “நீங்க என்ன சொல்றீங்க அண்ணா” எனக் கேட்க
அவரும் “எனக்குச் சம்மதம் தான் மலர். யுவராஜும் கதிரும் எதையும் யோசிக்காம செய்யமாட்டாங்க. அவங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு”  மனதாரக் கூறினார்.
“சரிப்பா. அப்போ நான் ஜோசியர் கிட்ட பேசிட்டு ஒரு நல்ல நாள் சொல்றேன் ஆனா வீடு கிரகப்பிரவேசம் அவன் வந்ததுக்கு அப்புறம் தான்” உறுதியாய் சொன்னார் மலர்.

“சரிம்மா இப்போ போய்ப் பாத்துட்டு வரலாம் வாங்க”  அழைத்துக்கொண்டு சென்றான்.
வீடு மிகவும் அழகாக இருந்தது. உள்ளே நுழையும் முன்பே அழகிய தோட்டம் அவர்களை வரவேற்றது. ரோஜா செடியும் முல்லை கொடியும் மனதை கவர்ந்தது. சில இடங்களில் மணல் கொட்டி வைத்திருந்தனர். 

அது மலர்மொழியின் விருப்பத்தைப் பொருத்து அவர் என்ன செய்ய நினைக்கிறாரோ அதை வைத்துக்கொள்ள விட்டிருந்தார்கள். நடுவில் துளசி மாடம் அமைத்து ஒரு சிறிய துளசி செடி நடப்பட்டு இருந்தது. வீட்டைச் சுற்றி தென்னை மரமும் கொய்யா மரமும் வளர்ந்திருந்தது. வீட்டிற்குள் செல்லப் பலவண்ண நிறங்களுள்ள சிறிய கற்களை வைத்துப் பாதை அமைந்திருந்தது.

ரசித்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தனர்.
ஹாலில் அழகாகச் சோபாக்கள் போடப்பட்டு இருந்தது. ஹாலில் அமர்ந்து கொண்டே வெளியே உள்ள தோட்டத்தைப் பார்க்க முடியும். நல்ல வெளிச்சம் வரும் விதமாகக் கண்ணாடி வைத்துக் கட்டப்பட்டு இருந்தது.அழகிய ஓவியங்கள் ஆங்காங்கே காட்சி அளித்தது. அம்மாவிற்கும் மாமாவிற்கும் கீழே தனித்தனி அறைகளை அவர்களின் தேவைகளுக்குத் தகுந்த மாதிரி அமைத்திருந்தான். ஹாலின் நடுவில் ஒரு அழகிய ஊஞ்சல் போடப்பட்டிருந்தது. வீட்டிக்குள்ளேயே மாடி வைத்து அங்கு இரண்டு அறைகள் அமைத்திருந்தான்.

படி ஏறும் இடத்தில் அவனும் அவன் தாயும் சேர்ந்து இருந்த படமும், மாமா வுடன் மூவரும் சேர்ந்து இருந்த படமும் மாட்டியிருந்தது. சமையல் அறையே ஒரு பெரிய ஹால் போல் இருந்தது. இந்தக் காலத்திற்கு ஏற்றார் போல் ஓபன் கிட்சன் அங்கேயே பிரிட்ஜ், ஓவன் எனச் சகலமும் பொருத்தி இருந்தது.
அருகிலேயே டைனிங் ஹால். மலர்மொழி மிகவும் தெய்வபக்தி உள்ளவர். அவருக்குப் பிடித்த மாதிரிப் பூஜை அறை அமைக்க ஏற்பாடு செய்தான்.

மலர்மொழி அதை ஒரு கோவில் போன்ற வடிவமைப்பிலேயே அலங்கரிக்கச் சொல்லியிருந்தார். வீட்டின் பின் புறம் நீச்சல் குளம் அமைத்திருந்தான். அதன் அருகேயே ஒரு சிறிய கூடைப் பந்து விளையாடும் இடம் இருந்தது. ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து அமைத்திருந்தான் யுவராஜ். வீட்டின் பின் புறம் அவுட் அவுஸ் கட்டிகொண்டிருந்தார்கள்.
“ரசிகன்!!” என்றான் கதிர்.

அனைவருக்கும் திருப்தி அளித்தது அந்த வீடு. அன்பரசு தன் தங்கை மகனை நினைத்து உள்ளம் நெகிழ்ந்தார்.
இவை தன் மகனின் சொந்த உழைப்பு என நினைக்கும்போது மிகவும் பெருமை அடைந்தார் மலர். “அவன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாக நடக்கும்” என வாய்விட்டுக் கூறினார். ஆனால் அவன் மனதில் இப்பொழுது சிறிது நஞ்சும் கலந்து இருந்ததை அவர் உணரவில்லை. அதை எப்படி நீக்கப் போகிறாரோ??!!

    உனக்கெனவே நான் பிறந்தேன்

    எனக்கெனவே நீ பிறந்தாய்

    கணக்கினிலே தவறு செய்த

    கடவுள் செய்த குற்றமிது

    ஒரு மனதை உறங்க வைத்தான்

    ஒரு மனதை தவிக்கவிட்டான்

    இருவர் மீதும் குற்றமில்லை

    இறைவன் செய்த குற்றமிது…

இதை ஒரு நாள் அவனும் உணர்வான்.

error: Content is protected !!