KVK-3

KVK-3

வீட்டிற்கு வந்த சக்திப்ரியா வேகமாகத் தன் அறைக்குள் சென்று புகுந்தாள். தன் படபடப்பிற்கு காரணம் என்ன என்று யாராவது கேட்டு விடுவார்களோ என்று. ஆனால் அவள் அப்பா அவளைக் கூப்பிட்டது அவளுக்குக் காதில் விழவில்லை. அவரோ ‘என்ன ஆச்சு இவளுக்கு?’என்ற யோசனையில் தன் மனைவியிடம் சென்று கேட்டார்.
இதை எல்லாம் இப்பொழுது கவனிக்க அவளுக்கு மூளை வேலை செய்யவில்லை. அவனைப் பார்த்தபோது ஏற்பட்ட பதட்டம் இன்னும் குறைந்த பாடில்லை.
மறுபடியும் கண்ணாடி முன் சென்று அமர்ந்தாள். சிவந்து போய் இருந்த தன் முகத்தைப் பார்த்தாள். ‘இப்படி அவன் முன்னால் சிவந்து வைக்காதே அவன் என்ன நினைப்பான் ‘ எனத் தன்னைப் பார்த்தே திட்டிக்கொண்டிருந்தாள்.
‘நாம அவனைச் சும்மா சைட் அடிக்கரோமா இல்லை இது வேற எதாவது பீலிங்கா’ என யோசித்தாள்.
அவன் உடையில் இருந்த எஸ் எஸ் என்ற எழுத்தின் அர்த்தம் அவளுக்குப் புரியாமலா இருக்கும்.
‘எஸ் எஸ் ன்னா?? சக்தி சித்து வா .. ஒரு முறை தான் பார்த்திருப்போம். அதற்குள் அவனுக்கு இப்படி செய்யும் அளவு துணிவா. என்ன பார்வை அது, காந்தம் போல!’ நினைக்கும் போதே அவளுக்குள் ஒரு பனிமலையே உருகியது போன்ற உணர்வு.

அவனைத் தான் கவர்ந்து இருக்கிறோம் என்ற உணர்வு அவளுக்கு இன்பத்தே தந்தது. இருந்தாலும் அவளால் இதைக் காதல் என்று எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை. பார்த்ததும் காதல் எல்லாம் கதைக்கு ஒத்துவரலாம், அனால் நிஜ வாழ்க்கையில் எல்லாருக்கும் அது சரியாக இருக்காது என்றே நினைத்தாள். அவளுக்கு வந்ததும் உண்மைக் காதலே என்பதை உணர மறுத்தாள். ஒரு நாள் அதை உணரும் தருணம் வரும்பொழுது அந்தக் காதல் அவளை ஏற்காமல் போகலாம். இருக்கும்போது ஒன்றின் அருமை யாருக்கும் தெரிவதில்லை. கிடைக்காதபோது அதை நினைத்து ஏங்குவதற்கும் தவறுவதில்லை. இது விதி விளையாடும் ஆட்டம். அனைவரும் அதில் பகடைக் காய்களே!
தன்னுடைய ஹேண்ட் பேகில் வைத்திருக்கும் சிறிய நோட் பேடை எடுத்தாள். அதில் ஒரு ஹார்டின் வரைந்தாள் அதற்குள் “சித்து” என எழுதினாள். பின் ஒரு நிமிடம் யோசித்தாள் சித்து என்ற எழுத்திற்கு பக்கத்தில் ஒரு ‘கேள்விக்குறி’ போட்டாள். சிரித்து விட்டு “எனக்கே புரியலை”  அந்த நோட்டால் தன் நெற்றியில் அடித்துக்கொண்டாள்.
“என்னடி நீயே சிரிச்சுட்டு இருக்க”  பின்னால் தன் தாயின் குரல் கேட்கத் தூக்கிவாரிப்போட்டது. சுதாரித்துக்கொண்டு

“ஒன்னும் இல்லம்மா சுஜா ஒரு ஜோக் சொன்ன அதை நினைச்சு சிரிச்சேன்”  சமாளித்தாள்.
“அப்பா உன்னைக் கூப்பிட்டாராம் நீ காதுல வாங்காம வந்துடியாமே..அப்படி என்ன யோசனை??”  சகஜமாகக் கேட்க
என்ன சொல்வதென்று தெரியாமல் திக்கி திணறி

“ப்ராஜெக்ட்… பத்தி… யோசிச்சுட்டே…. வந்தேனா…. அதான் சரியா கவனிக்கல”  ஒருவாறு சொல்லிமுடிக்க
“இன்னிக்காவது உன்னோட ரூமை கொஞ்சம் சுத்தம் பண்ணு. தேவ இல்லாத புக்ஸ் எல்லாம் உன்னோட ஜூனியர் க்கு குடுக்கணும்ன்னு சொன்னியே அதுக்கு எல்லாத்தையும் எடுத்து வை”  சொல்லிவிட்டு சென்றார்.

தன் அறையைச் சுத்தப்படுத்தி பின்பு தன் அம்மாவிற்கு சமையல் செய்ய உதவினாள். தன் அப்பாவைச் சாப்பிட அழைக்கச் சென்றாள். அவர் ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அருகில் சென்று, “சாரி ப்பா நீங்கக் கூப்பிட்டதை சரியா கவனிக்கல” வருத்தப்பட்டு சொன்னாள்.
“பரவால்ல டா உனக்கு ஏதோ தலை வலியோ ன்னு நினைச்சு தான் அம்மா கிட்ட சொன்னேன். ப்ராஜெக்ட் வொர்க் ஸ்டார்ட் பண்ணிட்டியா?” அவள் தலையை வருடிக் கேட்டார்.
“ம்ம்ஹும்!! இனிமே தான் ப்பா. நீங்க வாங்க சாப்பிடலாம், இன்னிக்கு நான் அம்மாக்கு ஹெல்ப் பண்ணேன் சாப்ட்டு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க”  அவரது புத்தகத்தை வாங்கி வைத்துவிட்டு டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றாள்.
ஜானகி அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார். “ஆமா மகாராணி ஹெல்ப் பண்ணிட்டாங்க. சட்னி பண்ணா, அவ்ளோ தான். ஒரு வெங்காயம் உறிக்கறதுக்குள்ள படாத பாடு”  அலுத்துகொண்டார் ஜானகி.
“கண்ணுல தண்ணி வந்துடுச்சு நான் என்ன பண்றது”  சிணுங்கினாள் சக்தி.
“மாமியார் வீட்ல போய் இப்படி சொல்வியா?” கண்ணுல தண்ணி வந்தா புடிச்சு வை எதுக்காவது உபயோகப்படுத்திக்கலாம்ன்னு சொல்லுவாங்க”  மேலும் அவளைக் கிண்டலடித்தார்.
“என் கண்ணுல தண்ணி வராம பாதுக்கிறவனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் இல்லைனா கல்யாணமே வேண்டாம் என்னபா சொல்றீங்க ??”  சேரில் அமர்ந்து கால் ஆட்டிக்கொண்டே ஸ்ரீனிவாசனை பார்த்துக் கேட்டாள்.
“ஆமா டா. உன்னை நல்லா பார்த்துப்பான்ன்னு எனக்கு நம்பிக்கை வந்தா தான் உன்னைக் கல்யாணம் பண்ணி கொடுப்பேன்”  அவரும் சேர்ந்துக்கொண்டார்.
“நல்லா இருக்கு நீங்கப் பேசறது. வெங்காயம் வெட்டிக் கண்ணுல தண்ணி வந்தா அவன் என்ன பண்ணுவான்”  எதிர்கால மாப்பிள்ளைக்குப் பரிந்து பேசினார். “அப்படின்னா அவனே எனக்குச் சமைச்சு போடணும்ன்னு அர்த்தம்” என அவள் சிரிக்க அவளை முறைத்துப்பார்த்து முடியாமல் ஜானகியும் சிரித்தார்.
ஸ்ரீனிவாசன் மட்டும் வெளியில் சிரித்தாலும் தன் ஒரே மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மனதில் கவலை பிறந்தது.
இரவு தங்கள் அறையில் உறங்க வந்த ஜானகி தன் கணவரின் முகம் ஏதோ சொல்ல அவர் அருகே சென்றார். “என்ன ஆச்சு? என்ன யோசனை செய்யறீங்க ?”  மெதுவாகக் கேட்க,
“ஒன்னும் இல்லை ஜான்.. நம்ம சக்தி பத்தி தான் யோசிக்கறேன். இந்த வருஷம் அவ படிப்பு முடிஞ்சதும் உடனே கல்யாணம் பண்ணி வெச்சுடனும். அவளுக்கு வயசாகுதில்ல..”,  தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னார்.
“அவ ஏதோ வேலைக்குப் போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க அவ விருப்பத்தையும் கேட்டுட்டு முடிவு செய்யுங்க, எனக்கு உங்க முடிவுல சந்தோஷம் தான்”   கணவனது வார்த்தைக்கும் மதிப்பளித்தார்.

“சரி ஜானு. இப்போ அவ கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். இந்த ப்ராஜெக்ட் எல்லாம் முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம். படிக்கற பொண்ணு கிட்ட இப்போ இதைப் பத்தி பேசினா கவனம் சிதறும் ,நீயும் ஏதும் சொல்லாத”  தெளிவாகக் கூற,
“அவ எதாவது லவ் அப்படின்னு சொன்னா என ஜானகி இழுக்க”,  அவரை ஆழ்ந்து பார்த்தார் ஸ்ரீனிவாசன்.
‘”அவள பாத்தியா?  இன்னும் டேபிள் ல உட்கார்ந்து கால் ஆட்டிட்டு  குழந்தை தனமா இருக்கா அவளுக்கு அப்படியொரு எண்ணம் இருக்கறதா எனக்குப் படல “

“இப்போ இல்ல ஆனா இனிமே வரலாம் . எப்போ எது நடக்கும்ன்னு யாராலையும் சொல்ல முடியாதுங்க”
உடனே அவர் முகம் வாட ..

“நான் காதலுக்கு எதிரி இல்ல ஜானகி, ஆனா சக்திக்கு ஒருத்தன புடிச்சு இருந்தா எனக்கும் அவனை மனசார புடிக்கணும். என் பொண்ண நல்லா பாத்துப்பான்னு எனக்கு நம்பிக்கை வரனும். குடும்பம் நல்ல குடும்பமா இருக்கனும். அப்புறம் தான் நான் சம்மதிப்பேன். எதுக்கும் அவ ஜாதகத்த நம்ம தரகர் கிட்ட குடுத்து வை .நல்ல இடம் வந்தா சொல்லச் சொல்லு.” என உறுதியாகக் கூறினார்.
“சரீங்க. நாளைக்கே நல்ல நாள் நாளைக்கே குடுத்துடறேன் ” மகிழ்ச்சியாவே ஜானகி சொன்னார்.
அதே நேரம் சித்துவோ மிகவும் சந்தோஷமாகச் சுந்தரிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“ரொம்ப தேங்க்ஸ் மச்சான். சுஜாக்கும் தேங்க்ஸ் சொல்லிடு. இன்னிக்கு மறுபடி அவள பாத்ததும் ரொம்ப ஹாப்பியா இருக்கு டா. அவளுக்கும் என்னைக் கண்டிப்பா புடிச்சிருக்கு.”
“எப்படி டா அவ்ளோ உறுதியா சொல்ற ?” – சுந்தர்.
“அவ கண்ணு சொல்லுது டா. ” 
“நீ என்ன கண் டாக்டரா? கண்னை பார்த்துச் சொல்றதுக்கு”. அவ வாய திறந்து சொன்னாளா.?” – சுந்தர்
“டேய்! நானும் சொல்லல அவளும் சொல்லல. ஆனா என் மனசுக்கு தெரியும். அவள ஒரு நாள் பாத்ததுக்கே இவ்ளோ நிறைவா இருக்கு. என் வாழ்க்கை முழுசும் அவள என் பக்கத்துல வெச்சு பாத்துக்கணும். அவளுக்கு ஒரு சின்னக் கஷ்டம் கூட வராம பாத்துப்பேன் டா”.  மனம் உருகினான் சித்து.
“நீ சொல்றத கேட்கச் சந்தோஷமா இருக்கு சித்து. எனக்கு நீங்க ரெண்டுபேருமே முக்கியம் தான். உன்கூட இருந்தா கண்டிப்பா சக்தியும் சந்தோஷமா இருப்பா. உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் நான் பண்றேன் சித்து. சரி அவகிட்ட எப்போ சொல்லப் போற?” ஆவலாகக் கேட்டான் சுந்தர்.

“சொல்லணும் டா. ஆனா இப்போ இல்லை. இன்னும் அவளுக்கு என்னைப் பத்தி சரியா தெரியாது. இப்போ போய்ச் சொன்ன முடியாதுன்னு தான் சொல்லுவா. என்னை அவ புரிஞ்சுக்க டைம் வேணும். என்னை ரிஜெக்ட் பண்ண முடியாதுன்னு நான் எப்போ ஃபீல் பண்றேனோ அப்போ சொல்லுவேன்.” 
“அதுவும் சரிதான். அவ ஒரு குழந்தை மாதிரி ஆனா ஒரு முடிவு எடுத்துட்டா அதுல ஸ்ட்ராங்கா இருப்பா. அதனால எத செஞ்சாலும் நல்ல யோசிச்சு பண்ணு”.

“கண்டிப்பா சுந்தர். சரி அடுத்த மீட்டிங் எப்போ? அகைன் நான் தற்செயலா பாத்தா அவளுக்குச் சந்தேகம் வரும். அதுனால நீ சுஜாவையும் சக்தியையும் சேர்ந்தே கூப்பிடு நான் உன்கூட வரேன்”,  தன் பங்கு ஐடியாவைச் சொன்னான் சித்து.

“என்ன டா நீ! என்னை மாடிவிடற. இப்படி அடிக்கடி நான் கூப்டா சுஜா என் மேல கோபப்படுவா. நான் கூப்டா வரமாட்ட ஆனா இப்போ உன் பிரன்ட், தங்கச்சின்னா என்னை யூஸ் பண்ணிப்பியான்னு காரி துப்புவா டா, இது எனக்குத் தேவையா?”  பரிதாபமாகக் கெஞ்சினான் சுந்தர்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போ தான சொன்ன ஹெல்ப் பண்ணுவேன்னு அதுக்குள்ள இப்டி மாறிட்டியே டா துரோகி!! ” என சித்து  சண்டைக்கு வர
“சிக்கிட்டேன்!! இனி தப்பிக்க வழி இல்லை.  சுஜாவ சமாளிக்கறேன், வேற என்ன பண்றது. சரி நாம நாளைக்கு ஆபீஸ் ல பேசுவோம். நான் அடுத்த கால் பண்ணனும் நீ கடைய மூடு”  அவனைக் கட் செய்துவிட்டு சுஜாவிற்கு போன் செய்தான்.
மறுநாள் காலை எப்போதும் போல் மிக சுறுசுறுப்பாகக் கிளம்பிக்கொண்டு இருந்தான் சித்தார்த். அவன் அறைக்கதவை தட்டினார் மனோகர். “இதோ வந்துட்டேன்”  கதவைத் திறந்தான் சித்தார்த்.
“வாங்கப்பா..என்ன என் ரூம் பக்கம் வர உங்களுக்கு இன்னிக்கு நேரம் இருக்கா? இது உங்க ஜிம் டைம் ஆச்சே ”  கிண்டலாகக் கேட்க அவரோ மிகவும் கவலையாகக் காணப்பட்டார்.
“என்னப்பா ஆச்சு? ஏன் டல்லா இருக்கீங்க? எப்பவும் என்னைவிட ஆக்டிவா இருப்பீங்க இன்னிக்கு என்ன ஆச்சு?”  அவரிடம் சீரியஸாக கேட்டான்.
“ஒன்னும் இல்லை சித்து. நீ எப்போ நம்ம ஆபீஸ்ல ஜாயின் பண்ண போற?” எனப் பேச்சை மாற்றினார்.
“இன்னும் ஆறு மாசம் இருக்கே ப்பா மூணு மாசம் கழிச்சு இங்க பேப்பர் போட்ட கரெக்டா இருக்கும்ன்னு தின்க் பண்ணேன். என்ன ஆச்சு?? ஆபீஸ் ல எதாவது ப்ராப்ளம்மா? சொல்லுங்கப்பா !!”. அவரின் மனம் ஏதோ சிந்தனையில் உள்ளது என்பதை உணர்ந்தே அவ்வாறு கேட்டான்.

” நத்திங் மச் சித்து. புதுசா ஒரு அட் கம்பெனி வரப்போகுது அது ரொம்ப காம்ப்படீஷன் குடுக்கும்ன்னு நினைக்கறேன்”  விஷயத்தை மெதுவாக ஆரம்பித்தார் மனோகர்.
“நான் கூடக் கேள்விப்பட்டேன். யு எஸ் ல வொர்க் பண்ண ஒருத்தர் இப்போ இங்க வந்து புது கம்பனி ஸ்டார்ட் பண்ண போறாரு. வெரி டலேண்டேட் பெர்சன். அவர் பண்ண ப்ராஜெக்ட்ஸ் எல்லாம் சூப்பர் ஹிட். அவர் பேரு கூட ஏதோ??” ,   அவன் யோசிக்க
“யுவராஜ்” என்றார் மனோகர்.
“ஆங்!! எஸ் யுவராஜ். அதுனால நமக்கு என்ன ப்பா? எவ்ளோவோ அட் கம்பனீஸ் இருக்கு அதுல இதுவும் ஒன்னு அவ்ளோ தான? அதுக்கு ஏம்ப்பா நீங்க வருத்தப்டறீங்க?. நாம எவ்ளோ சக்சஸ் ப்ராஜெக்ட்ஸ் பண்ணிருக்கோம் நம்ம ரெகுலர் கான்ட்ராக்டர்ஸ் நம்ம கிட்ட தானப்பா வராங்க அப்புறம் என்ன?”  கூலாகக் கேட்டான்.
“அப்படி நாம சாதாரணமா இருக்க கூடாது சித்து. அப்பறம் நம்ம பொஷீஷன அவங்க ஈஸியா கேட்ச் பண்ணிடுவாங்க. இன்னும் அவங்க கம்பனி ஸ்டார்ட் ஆகல. ஆனா இப்போவே அவங்ககிட்ட பன்னிரண்டு ப்ராஜெக்ட்ஸ் இருக்கு. அத எப்படியும் அவங்க சக்சஸ்புல்லா பணிடுவாங்க. அதுக்கு அப்புறம் ஒரே ஷாட்ல பேர் வாங்கிடலாம். சோ நாம அவங்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நம்மள இன்னும் கொஞ்சம ஸ்ட்ராங் ஆக்கணும். அதுக்கு நீ என்கூட இருக்கனும்.” ஏதோ முடிவு செய்து பேசினார்.
“????”  சித்து புரியாமல் பார்க்க,
“அதுனால எவ்ளோ சீக்கரம் முடியுமோ அவ்ளோ சீக்கரம் இந்த ஐ டி யை விட்டுட்டு வா”, முடித்தார்.
அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கண்ணை மூடித் தன் பின் கழுத்தை தடவினான். பின் எதையும் யோசிக்காமல்
“ஒரு ஒன் வீக் டைம் குடுங்க ப்பா, அங்க எல்லாத்தையும் கிளியர் பண்ணிட்டு வந்துடறேன்.நம்ம பொஷிஷன் நமக்குத் தான் எப்பவும்” என அவரின் கையை பற்றிச் சொல்ல,

“குட் சித்து ஐ அப்ரிஷியேட் யு” என அவன் தோளில் தட்டி புன்னகைத்துவிட்டு சென்றார்.
காரில் செல்லும்போதே போன் பேசிக்கொண்டே சென்றான்.மிகுந்த யோசனையுடன் ஆபீஸ் சென்று சுந்தரிடம் தன் நிலைமையைச் சொல்ல அவனோ வருத்தப்பட்டான்.
“என்ன சித்து இப்படி திடீர்னு சொல்ற. பார்மாலிட்டீஸ் நிறைய இருக்கே!!” சுந்தர் குழம்பினான்.
“இல்லை சுந்தர் நான் ஏற்கனவே எச் ஆர் கிட்ட பேசிட்டேன். அவங்க த்ரீ டேஸ்ல கிளியர் பண்ணி தரேன்னு சொல்லிட்டாங்க”.
“மேனேஜர் கிட்ட சிட்டுவேஷன் சொன்னேன். அவருக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. நம்ம டி எல் கிட்ட மட்டும் தான் பேசணும் கொஞ்சம் சீன் போடுவான் அந்தச் சோடாபுட்டி ..பாத்துக்கலாம்”.
“போடா.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”  சுந்தர் வருந்தினான்.
“எங்க டா போகப் போறோம் இந்த ஊர்ல தான குப்பை கொட்ட போறோம். எப்போ வேணாலும் மீட் பண்ணலாம். சரி நான் கேட்ட விஷயம் என்ன ஆச்சு??”  கண்ணடித்தான் சித்து.
“ஏன் டா இந்த நிலமைலயும் உன் விஷயம் உனக்கு முக்கியம் இல்ல?”  பல்லைக் கடித்தான் சுந்தர்.
“கூல் கூல் மச்சி எல்லாத்தையும் நான் ஒருத்தனே தான சமாளிக்கணும். சொல்லு என்ன பிளான் பண்ண மீட்டிங்க்கு?? ” சிரித்துக்கொண்டே புருவத்தை உயர்த்திக் கேட்க
“இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை” எனச் சலித்துக்கொண்டு “சனிக்கிழமை மத்தியானம் லஞ்ச்க்கு வாங்க சார் என் வீட்டுக்கு” என்று புன்னகைத்தான்.

“ஹே! என்ன டா வீட்டுக்கா? இப்பயாவது உன் வீட்டுக்கு என்னைக் கூப்டியே ரொம்ப சந்தோஷம்”  தலைக்கு மேல் கை தூக்கி சித்து வணங்க,
அவனை முறைத்தான் சுந்தர். “இப்போ தான டா வீடு பாத்து போயிருக்கேன். இதுக்கு முன்னாடி ஷேரிங் ரூம் ல தான இருந்தேன். இன்னும் அம்மா அப்பா கூட வரல, ஊர்ல ஏதோ வேலை இருக்காம். நீங்க தான் முதல் விருந்தாளி, எனக்குத் தெரிஞ்சத நான் செஞ்சு வைக்கறேன் வாங்க சார்”  இடை வரை குனிந்து அழைத்தான்.
“சிரித்துவிட்டு சரி சரி வரேன் . மேடம் எப்படி வரேன்னு சொன்னாங்க?”. என்ன சொல்லிக் கூப்பிட்ட?”  கேட்டுக்கொண்டே அருகில் அமர்ந்தான்.
“அந்தப் பொறுப்பு சுஜா கிட்ட குடுத்துட்டேன். நான் ஈவினிங் தான் பேசணும்” எனச் சொல்ல
“சரி நீ பேசறப்போ சொல்லு” என்றான்.
“உனக்குத் தான் நம்பர் குடுத்தேனே நீயே பேச வேண்டியது தான..”. அலுத்துக்கொண்டான் சுந்தர்.

“இல்லடா.. இப்போ பேசமாட்டேன் இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்”  புன்னகைத்துக்கொண்டே சொல்ல,
அதற்குள் அவர்களின் டீம் லீட் வந்துவிட சித்து எழுந்து சென்று அவரிடம் வேலையை ரிசைன் செய்வது பற்றிப் பேசினான்.
“நீங்க உங்க மாடியூல் கம்ப்லீட் பண்ணி குடுத்துட்டு போங்க சித்து மத்ததெல்லாம் சுந்தர் கிட்ட அப்டேட் குடுங்க. புது ஆள் வர வரைக்கும் அவரே பாக்கட்டும் . மேனேஜர் ஏற்கனவே பேசிட்டார் சித்தார்த். ஆல் தி பெஸ்ட். யு ஹவ் அ பிரைட் பியுச்சர்” என்று முடித்தார்.
அனைத்தையும் சுந்தர் தலையில் கட்டிவிட்டான் சித்து.

“உனக்கு என்ன டவுட் வந்தாலும் நான் வீக் எண்டுல ஹெல்ப் பண்றேன் டா” என்றான் சித்து.
“நான் பாத்துகறேன் டா . நீ உன் பிஸ்னெசை கவனி” நண்பனுக்குத்  தெம்பூடினான்.
சுஜா அங்குக் கல்லூரியில் சக்தியை, சுந்தர் வீட்டிற்க்கு வரசொல்லிக் கொண்டிருந்தாள். சக்தி முடியாது என மறுத்துவிட்டாள்.

 

“ஹே! ஏன் டி வரமாட்ட? உனக்கு சுந்தர் கால் பண்றேன்னு சொல்லி இருக்காரு “.
“நீ ஏன் அன்னிக்கு லைப்ரரிக்கு வரல ?”  பேச்சை மாற்றினாள் சக்தி.                                     
“இல்லப்பா அன்னிக்கு கெளம்பிட்டேன் ஆனா வண்டி பஞ்சர் ஆயிடுச்சு அதான் அப்டியே மெக்கானிக் கடைக்குப் போயிட்டேன். அங்கேயே ஒரு மணி நேரம் ஆயிடுச்சு. அப்புறம் நீ  போயிருப்பன்னு தான் நானும் வீட்டுக்குப் போய்டேன்”
சக்தி கேட்டால் என்ன காரணம் கூற வேண்டும் என்று முன்னமே யோசித்து வைத்திருந்தாள்.அதனால் சரளமாகப் பொய் சொன்னாள்.
“நல்ல நேரத்துல பஞ்சர் ஆச்சு. நீ வந்திருந்தா பிரச்சனையே இல்லை”  சக்தி  அலுத்துக்கொண்டாள்.
“என்ன ஆச்சு ?”  (அனைத்தையும் சுந்தர் போன் செய்து சொல்லிவிட்டானே! ) ஒன்றும் தெரியாதவள் போல முகத்தை வைத்துகொண்டு  சுஜா கேட்க,  
சுஜா விடம் எதையும் மறைக்கும் பழக்கம் இல்லை சக்திக்கு, ஆனால் அன்று நடந்ததை எப்படி கூறுவது. தனக்கே தன் நிலைமை புரியாதபோது அதை எப்படி அடுத்தவளுக்கு விளக்குவது. சொல்லாமல் இருப்பதே நல்லது என்று நினைத்தாள்.
“நீயும் வந்திருந்தா இன்னும் ரெண்டு புக்ஸ் சேர்த்து எடுத்திருக்கலாம் அத சொன்னேன்” என மாற்றிப் பேசினாள்.
சுஜா விடுவதாக இல்லை. ‘ மவளே என்கிட்டையே மறைக்கிரியா?, இரு! உன் வாயாலே சொல்ல வைக்கறேன்’ மனதில் சொல்லிக்கொண்டாள்.
“சரி சரி . நான் தான் வரமுடியாம போனதுக்கு காரணம் சொல்லிட்டேனே! நீ ஏன் வரமாட்டேன்கற??”
சித்துவும் கண்டிப்பாக வருவான் என்று உணர்ந்த சக்தி அவனைச் சந்திப்பதை தவிர்க்க முயன்றாள்.

‘இவ கிட்ட சொலவும் முடியல,  புரிஞ்சிக்காம எதாவது உளறுவா’, இருந்தாலும் “இத்தனை நாள் நாம மட்டும் போனோம் இப்போ இன்னொரு ஆள் கூடச் சேர்ந்து இருக்காங்களே”  மனதில் உள்ளதை கூறினாள்.
அப்படி வா வழிக்கு என நினைத்தவள் . “அவங்க வந்தா உனக்கு என்ன?”  அவளை மேலும் பேசவைத்தாள் சுஜா.
“எனக்கு ஒன்னும் இல்ல. தெரியாதவங்க கூட எப்படி ஒன்னா சாப்டறது?”  ஏதோ வாய்க்கு வந்த காரணத்தைக் கூற ,

சுஜா விடுவதாக இல்லை. “நீ தான் எல்லார்கிட்டயும் நல்ல பேசுவியே அப்புறம் என்ன?  மேலும் தூண்டினாள்.
ஆத்திரம் வந்தது சக்திக்கு. “ஹே ! அவன பாத்தாலே ஏதோ செய்யுது. அவன் கண்ணை பார்த்துப் பேசமுடியல போதுமா”  ஆத்திரத்தில்  என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் விஷயத்தைப் போட்டு உடைத்தாள்.
உற்சாகமானாள் சுஜா. “இத இத இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்”  அவள் கன்னத்தைப் பிடித்து ஆட்ட,
“ஐயோ!!” என நோட்டால் முகத்தை மூடிக்கொண்டாள். பின் அவளுக்கு ஏதோ புரியவைக்க முயன்று “சுஜா நீ தப்பா எடுத்துக்காத நான் நீ நினைக்கற மாதிரி அர்த்தத்துல  சொல்லல”  தெளிவுபடுத்த முயன்றாள்.
“செல்லாது செல்லாது..”   எங்கோ பார்த்துக்கொண்டு கையை ஆட்டினாள்.
“சொல்றதை கேளு டி”  அவளைப் பிடித்து உலுக்கினாள் சக்தி.
“இது லவ் எல்லாம் இல்லை . வெறும் அட்ட்ராக்ஷன். அத நான் கடந்து போய்டணும், இல்லன்னா நான் தான் பின்னாடி வருத்தப் படனும் அதான்  அவாய்ட் பண்றேன் புரிஞ்சுகோ” என வருத்தப்பட்டாள்.
‘அடடா!! இவ ட்ராக் வேற மாறிப் போகுதே ! இவளை எப்படியாவது தெளிவான முடிவுக்குக் கொண்டு வரணும்’ என நினைத்த சுஜா.

” நீ சனிக்கிழமை என்கூட வர நான் பாத்துக்கறேன்”  தைரியப்படுத்தினாள்.

“நீ அவாய்ட் பண்ண பண்ணத் தான் அதையே நினச்சுட்டு இருப்ப. ஃப்ரீ யா பழகு அப்புறம் எல்லாம் சகஜமாயிடும்”
அவள் கூறுவதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்தது. அதைச் சக்தியும் உணர்ந்தாள்.
நீண்ட நேரம் அவளிடம் ஏதேதோ பேசிக் கடைசியில் சம்மதிக்க வைத்தாள்.
அரை மனதாய் அதை ஏற்றாள் சக்தி.
———————————————————————————————————
கதிர் அவசரமாக யுவராஜிற்கு போன் செய்தான். செய்தியைக் கேட்டவுடன் ஆச்சரியமும் ஏளனமும் ஒரே சமயத்தில் தோன்றியது யுவராஜிற்கு. இரவு உணவிற்கு சமைக்க டேபிளில் அமர்ந்து காய்களை வெட்டிக்கொண்டிருந்தான் அதை அப்படியே நிறுத்தி விட்டு ,
“இன்டிரெஸ்டிங்!!. அப்பா சொன்னதும் உடனே வேலைய விட்டுட்டு வந்துட்டாரா.? அவன் அப்பா மேல அவ்ளோ மரியாதை”,  ஏளனமாகச் சிரித்தான். உள்ளே கொதித்துக்கொண்டிருந்தது. கை விரல்களை மடக்கி அருகில் இருந்த டேபிளில் குத்தினான்.
மறுபுறம் சத்தம் கேட்கக் கதிர் பதறினான்.

“கண்ட்ரோல் யுவர் செல்ப் யுவா. எனக்கு என்னவோ நீ ஒரு தடவ அவங்க கிட்ட பேசிப்பார்க்கலாம் ன்னு தோணுது” எனத் தடுமாறி சொன்னான்.
சொன்ன மாத்திரத்தில் கத்திவிட்டான் யுவராஜ். “கதிர் என்ன பேசற. நான் எவ்வளோ ஏமாந்திருக்கேன்னு உனக்குத் தெரியாதா. என் அம்மாவை நினைச்சு பாரு. எப்படி உன்னால இதைச் சொல்ல முடியுது.?”
“புரியுது டா. இருந்தாலும் அவங்க பக்கத்துல நியாயம் இருந்தா ..?”  கதிர் இழுக்க
“நியாயம்ன்னா என்ன விலைன்னு கேக்கற குடும்பம் அது. அவங்க கிட்ட பேச்சுவார்த்தை நடத்தவா நான் இவ்ளோ நாள் கஷ்டப்பட்டேன். இன்னொரு முறை இந்த மாதிரி பேசாதே கதிர்”  எரிந்து விழுந்தான்.
மறுபுறம் மௌனம் நிலவியது.

ஒரு நிமிடம் தன்னை அமைதிப்படுத்திக்கொண்டவன் பின்பு தன் நண்பனை அவ்வாறு பேசியதை நினைத்து வருந்தினான்.

“சாரி டா. கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்” உடனே  மன்னிப்புக் கேட்டான் யுவா.
“எனக்கு புரியுது டா. நான் இனிமே அப்படி கேட்க மாட்டேன்” அவனும் நண்பனின் நிலையை உணர்ந்தான்.
“இன்னும் அவங்க அப்பனோட இன்னொரு முகம் தெரியல அந்த சித்தார்த்துக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவான்னு பாக்கறேன்.. லெட்ஸ் வெயிட் அண்ட் ப்ளே தி கேம்” சிரித்தான் யுவா.
“ஆனா இந்த மனோகர் இவன வெச்சு என்ன பிளான் பண்றாருன்னு வாட்ச் பண்ணு கதிர். நம்மகிட்ட இப்போ இருக்கற பராஜெக்ட்ஸ் சீக்கரம் முடிக்கணும் அப்போ தான் நல்ல பேர் கிடைக்கும். நெக்ஸ்ட் அவங்க கம்பெனி எந்தெந்த க்ளைன்ட்ஸ் கிட்ட டீலிங் வெச்சு இருக்காங்களோ அத நாம டார்கெட் பண்ணனும். நம்மளோட வொர்க பார்த்து அவங்களே நம்ம கிட்ட வருவாங்க. இப்போவே அந்த டீடைல்ஸ் கலெக்ட் பண்ணு கதிர் . கொஞ்சம் கொஞ்சமா அந்த மனோ அட் கம்பெனிய மூட வைக்கணும்”  பெருமூச்சு விட்டான்.
“சீக்கரம் அந்த டிடைல்ஸ் உனக்கு வரும் யுவா” 
“அப்பறம் அவன் ஏதோ லவ் பண்றான்னு சொன்னியே அது என்ன ஆச்சு?”  ஆர்வமாக கேட்க,
“அந்த பொண்ணுக்கு இவன புடிக்கலன்னு நினக்கறேன் டா. அவ சைடுல இம்ப்ப்ரூவ்மென்ட் இல்லை” – கதிர் 
“அப்படி சொல்லாத எல்லாம் மெதுவா தான் நடக்கும். அவனும் பார்க்க நல்லா தான இருக்கான். பத்தாததுக்கு நல்லவன் வேற சோ எப்படியும் சம்மதிக்க வெச்சுடுவான். அதை கொஞ்ச நாள் கழிச்சு பாத்துக்கலாம், கடுப்புடன் சொன்னான் யுவா.

சிறிது இடைவெளி விட்டு, 
“நம்ம கம்பனி ஸ்டார்ட் பண்ண அம்மா டேட் சொல்லிட்டாங்கல. அந்த வேலைய பாரு இப்போ. நான் சீக்கரம் வரேன். வேற என்ன விஷயம்??”  தன் கிச்சன் வேலைகளை செய்து கொண்டே கேட்டான்.
“அப்புறம் ஒரு விஷயம் சொல்லணும் உன்னோட பி ஏ பொசிஷன்க்கு நிறைய பேர் அப்பளை பண்ணி இருக்காங்க..” கதிர் சொல்ல,
“குட். நீயே அவங்கள்ள யாரு கரெக்டா இருப்பாங்க ன்னு செலக்ட் பண்ணு கதிர். உனக்கு தான் என்னை பத்தி நல்லா தெரியுமே”.

“நான் ஒருத்தர செலக்ட் பண்ணி இருக்கேன். எல்லா குவாலிபிகேஷனும் அவங்களுக்கு இருக்கு. உனக்கு ஓகே னா நான் அப்பாயின்ட் பண்ணிடறேன்”  பீடிகை போட்டன்.
“உனக்கு ஓகே ன்னா எனக்கும் ஓகே டா நண்பா” நண்பனிடம் நம்பிக்கையாக சொல்ல,
“அப்புறம் பேச்சு மாறக் கூடாது”  கதிர் சந்தேகமகச்   சொல்லவும், 
“என்னடா ரொம்ப பில்டப் பண்ற யார் ஆது?”  சிரித்துக்கொண்டே கேட்டான் யுவராஜ்.
“நீ இங்க வந்தப்றம் உனக்கே தெரியும். இப்போ போய்ச் சாப்பிட்டு தூங்கு. நான் நெக்ஸ்ட் வீக் கம்பெனி ஒப்பனிங் வேலைய பாக்கறேன்”,  இணைப்பைத் துண்டித்தான்.
‘அது யார்??’ என்ற கேள்வி மனதை அரித்தது யுவாவிர்க்கு. எல்லாருக்கும் மனதோடு ஒரு மழைக்காலம் இல்லாமலா போகும். இப்பொழுது அவன் மனம் பழிவாங்குவதில் மூழ்கி இருந்தாலும் அவனும் ஒரு காலத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தவன் தான். தன்னைப் பற்றித் தெரிந்தவுடன் அந்த மகிழ்ச்சிக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தான்.
கதிர் ஒரு புறம் மகிழ்ச்சியுற்றான். தன் நண்பனின் வாழ்வில் சிறு வசந்தம் வீசப் போவதை எண்ணி ஆனந்தம் அடைந்தான். யுவா தன் மனதை அடக்கி மிகவும் கடினமாக்கி வைத்திருக்கிறான் தான். ஆனால் எந்த ஒரு மனிதனும் எப்பொழுதும் கோபத்தின் உருவாக இருப்பது கடினம். அதிலிருந்து என்றாவது ஒரு நாள் வெளியில் வர வேண்டும். யுவராஜின் வாழ்வில் வீச வேண்டிய வசந்த காலக் காற்று திசை மாறிப் போனது என்னவோ உண்மை, ஆனால் அதை மறுபடியும் வீச வைக்கக் கதிர் எடுத்த முயற்சி இப்பொழுது கை கொடுத்தது.
கதிர் இப்பொழுது ஒரு முக்கியமான நபரைக் காண சென்றுகொண்டிருந்தான். அது வேறு யாரும் இல்லை, பி ஏ வாக வரப் போகிற “ஆராதனா” தான். இருவருக்குமே அவள் புதியவள் இல்லை. இன்ஜினியரிங் படிக்கும்போது இவர்களின் ஜூனியர். ஆனால் யுவரஜ்ஜும் இவளும் ஒரே வயதை உடையவர்கள். காலேஜில் இவள் ஒரு ரவுடி என்றே சொல்லலாம். ஆண்களை பெண்களுக்குச் சமமானவர்களாய் நினைப்பவள். எந்தவகையிலும் பெண்கள் குறைந்தவர்கள் இல்லை என்பதை பல வழிகளில் நிரூபித்து இருக்கிறாள். அம்மா இல்லாமல் வக்கீல் அப்பாவின் வளர்ப்பில் வந்தவள், பின் எப்படி இருப்பாள்?
கல்லூரியின் முதல் நாள் தன்னை யாரும் ராகிங் செய்யக் கூடாது என்பதற்காக இவள் செய்த வேலை தெரியுமா? வாங்க பார்ப்போம்.
எப்பொழுதும் ஆண்களைப் போல் பேன்ட் சட்டை அணிபவள் அன்று புடவை கட்டி இருந்தாள். கல்லூரிக்குள் நுழைந்ததும் மாணவர்கள் என்னென்ன செய்கிறார்கள் எனக் கவனித்தாள். சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை கூப்பிட்டு அதைச் செய் இதைச் செய் எனப் பணித்துக்கொண்டிருக்க, அவர்களும் அதைப் பயம் இல்லாமல் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு புறம் இரண்டு மாணவிகள் பயந்து கொண்டிருக்க அங்கே சீனியர்கள் மாணவர்கள் நான்கு பேர் அவர்களைப் பாட்டுப் பாட சொல்லி வற்புறுத்த , அழுதுவிடும் நிலைமையில் இருந்தார்கள். இவள் அங்கே தைரியமாகச் சென்று, “நான் பாடலாமா ?” எனக் கேட்டாள்.
அனைவரும் அவளின் உடையை வைத்து இவள் ஆசிரியராக இருக்குமோ எனப் பயந்தனர். ஒருவன் மட்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நீங்க யாரு? புதுசா இருக்கீங்களே ?” தான் சீனியர் என்ற முறையில் கேட்க
” ஐ அம் அ நியூ லெக்சரர்” என்று தைரியமாகக் கூற
அவர்கள் உடனே “மார்நிங் மேம்” என்று சொல்லி மரியாதையுடன் பார்த்தனர்.
“ராகிங் பண்ணலாம் ஒன்லி ஃஇப் தே பீல் ஹாப்பி அபௌட் இட் . அவங்கள பயமுறுத்திச் செய்ய வைக்கக் கூடாது. ஜூனியர்ஸ் அண்ட் சீனியர்ஸ்க்கு நடுல ஒரு பிரின்ட்ஷிப் கிரியேட் பண்றமாதிரி இருக்கணும். காட் இட் ?”  அவள் ஒரு பாடம் எடுக்க அனைவரும் அங்கிருந்த ஜூனியர்கள் ” சாரி மேம் ” அவளிடம்  வருந்திவிட்டு புதிய மாணவிகளுக்குக் கை கொடுத்து “வெல்கம்” என்றனர். பின் அனைவரும் சென்று விட, “யாருகிட்ட ”  தன் தோளைத் தட்டி தானே பாராட்டிக்கொண்டாள்.
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த யுவராஜிர்க்கும் கதிருக்கும் அவளின் செய்கை வியப்பை அளிக்க அவளைப் பின் தொடர்ந்தனர். யாரும் அறியாமல் ஒரு மரத்தின் பின் நின்றிருந்தனர்.
பாத்ரூமிற்கு சென்று பேன்ட் ஷர்ட்டுடன் திரும்பி வருபவளைக் கண்டு ஆச்சரியப் பட்டனர். ” இவ சரியான கேடி போல இருக்கே யுவா”  கதிர் கூற
“ஸ்மார்ட் அண்ட் பிரேவ்” என்று பதிலுக்கு அவள் தைரியத்தை பாராட்டினான் யுவராஜ்.
ஒரு மாதம் கழித்து சீனியர்ஸ் கொடுக்கும் வெல்கம் பார்ட்டி வந்தது. அதில் என்ன கேள்வி வேண்டுமானாலும் சீனியர்களை கேட்கலாம் என்று சொல்லப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. யுவராஜிடம் “பெண்களைப் பற்றி உங்கள் கருத்து ” என்று ஒரு மாணவன் கேட்க
அவனோ “ஆல்வேஸ் பெட்டெர் தென் மென் ” என்று ஒரே வரியில் கூற, அங்குப் பலமான கைதட்டல் கேட்டது. இதைக் கேட்ட ஆராதனா தன் இரு விரல்களை வாயில் வைத்துச் சத்தமாக விசில் அடித்தாள். சத்தம் வந்த திசையைப் பார்த்து மெலிதாக மிகவும் மெலிதாக அவன் புருவத்தை உயர்த்தி சிரிக்க அசந்தே போனாள் அவள்.
“சுப்ஜெக்ட்டில் எந்தச் சந்தேகம் வந்தாலும் என்னைக் கேட்கலாம்”  பொதுவாக அனைவரையும் பார்த்துச் சொல்லிவிட்டு சென்றான்.
எழுந்து அவன் பின்னோடு சென்று “ஹலோ” என்றாள். திரும்பிப் பார்த்து “மீ?” என்று கேட்க
“ஐ அம் ஆராதனா. நீங்க ?” கண்களில் ஆர்வம் பொங்க நின்றவளைப் பார்த்துத் தன் நெற்றியில் ஆள்காட்டி விரலை வைத்து “ஓ ! நீங்க ஸ்டூடென்ட்டா ? ஐ தாட் யு ஆர் அ லெக்சரர்” என்று அவளை ஊடுருவிப் பார்க்க
அவளோ சிறிதும் தயக்கமின்றி ” சும்மா விளையாட்டுக்குப் பண்ணி பாத்தேன். நாட் இன்டென்ஷ்னல்”  புன்னைகயோடு சொன்னாள்.
“பட் ஐ லைக் யுவர் அட்டிடியுட், ஐ அம் யுவராஜ்”  கைகளைக் கட்டிக்கொண்டு ஸ்டைலாகச் சொன்னான்.
“யுவா”  சற்று தொலைவிலிருந்து கதிர் அழைக்கவவும்.
” சி யூ ” என்றுவிட்டு திரும்பி நடந்தான்.
அவன் அறிமுகம் கிடைத்ததே அந்த நேரத்தில் போதுமானதாக இருக்க ” டவுட்ஸ் இருந்தா…..? ” என இழுத்தாள்.
“எனி டைம் யு கேன் ரீச் மீ” என்று திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டான்.

error: Content is protected !!