KVK-4

KVK-4

விடியல் இன்று மிகவும் அழகாக இருந்தது. சிட்அவுட்டிலிருந்து வந்த பறவைகளின் கீதமும், பார்வதி பூஜை அறையில் பாடும் பாடலும் அவனை எழுப்பியது. சித்துவிற்கு அன்று ஐ டி யிலிருந்து வெளிவரப்போகும் இறுதிநாள். அவன் வாழ்வில் மிகப் பெரிய போராட்டங்களையும் வேதனைகளையும் இனி சந்திகப்போவதாலோ என்னவோ அவன் இன்று மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவன் அன்னை அவனுக்குப் பிடித்த குட்டி தோசையும் இரண்டு வகை சட்னிகளும் சாம்பாரும் செய்து வைத்திருந்தார்.
குளித்து விட்டு ஈரத் தலையுடன் விசில் அடித்துக்கொண்டே வந்து தன் அலமாரியை துழாவினான். அவனின் வெள்ளை நிற எம்பராயடரி செய்த ஷர்ட் கண்ணில் பட முகத்தில் புன்னகை படர்ந்தது. அன்று லைப்ரரியில் சக்தியைச் சந்திப்பதற்கு முன்னால் அவளைப் பார்த்த முதல் நாளின் ஞாபகம் எப்பொழுதும் தன்னோடு இருக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்தான். அவனே செய்யவில்லை!. அவன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியின் மகள் எம்பராய்டரி செய்யும் இடத்தில வேலை செய்வதாக ஒரு முறை கூறி இருந்தார். அதனால் அவரிடம் கொடுத்துச் செய்யச் சொல்லி இருந்தான். அந்த அழகிய வேலையைச் செய்தது வேறு யாரும் இல்லை நம்ம யுவாவின் தாய் மலர்மொழி தான். இதைப் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மிகவும் கலைனயத்துடன் அதைச் செய்திருந்தார். சித்துவிற்கு மிகவும் பிடித்து இருந்தது அந்த டிசைன் செய்தவரை மனதார பாராட்டினான்.
இன்று ஒரு அடர் நீல நிற சட்டையும் அதற்க்கு ஏற்றச் சந்தன நிற பேன்ட்டும் அணிந்து கொண்டான். தன் அம்மா வைத்த சாம்பார் மணத்தில் ஒரு நான்கு தோசைகளை விழுங்கிவிட்டு கிளம்பினான்.
கம்பெனியில் அவனுடைய பொறுப்புகள் அனைத்தையும் ஒப்படைக்க மதியம் ஆகிவிட்டது. அனைவரும் சேர்ந்து அவனுக்குச் சென்ட் ஆப் செய்ய ஒரு கேக் ஆர்டர் செய்து இருந்தார்கள். அதை அவனை வெட்டச் செய்து அவனுக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள். பின் அனைவரும் அவனைப் பாடச் சொல்லி வற்புறுத்த அவனும் பாடினான் (தன் சகியை நினைத்து).
“வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!”
கண்ணை மூடி மெய்மறந்து அவன் பாட அனைவரும் ஒரு நிமிடம் அவன் குரல் வளத்தில் மெய்மறந்து போயினர். எங்கும் நிசப்தம், அந்த இடம் முழுதும் அவன் குரலே ஒலித்தது. அவன் பாடி முடித்தபின் சிறிது நேரம் கழித்தே அனைவரும் சுயஉணர்வு பெற்றனர். ஒரு திறமையான பாடகன் பாடும்பொழுது மற்றவர்களுக்குப் புல்லரித்து விடும் அல்லது கண்களில் நீர் துளிர்க்கும். இப்பொழுது அங்கு இருந்த பலரின் நிலைமையும் இதே தான்.
அவன் கூட வேலைபார்த்த அனைவரும் வந்து பாராட்டினர். “உங்க மனைவி ரொம்ப குடுத்து வெச்சவங்க”  ஒரு பெண் வந்து கூற சுந்தர் எங்கோ பார்த்துக்கொண்டு “”ஹ்ம்ம் ஹ்ம்ம்” தன் தொண்டையை செருமினான்.
சித்து தன் இடத்திலிருந்து கொண்டே கை யை மடக்கிக் காட்ட பின் வாங்கினான் சுந்தர்.
அனைவரும் சென்றபின் சுந்தர் அருகே வந்தான்.
“என்ன டா காதலி வந்ததும் நண்பனை அடிக்கற அளவு வன்முறைல இறங்கிட்ட” எனக் கேட்க
“இப்போ என்னங்கற” கையைக் கட்டிக்கொண்டு மேஜையின் மேல் சாந்து நின்று சித்து உணர்ச்சியே இல்லாமல் ஒரு பார்வை பார்த்துக் கேட்டான்.
“அடப்பாவி!! உனக்கு ஒரு பழமொழி தெரியுமா ?”, கடுப்பாகக் கேட்டான் சுந்தர்.
“???”
“காதலி என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நண்பன் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓட்டும்” சொல்லிவிட்டு, ஏதோ புதக் கவிதை சொன்னது போல் சித்துவைப் பார்த்தான்.
அவனோ இவன் சொன்னதை கேட்காதது போல் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.
“நான் இங்க ஒருத்தன் கவிதையா கத்திக்கிட்டு இருக்கேன் அங்க யாருக்கு டா நீ போன் பண்ற” என்றான்.
“இல்ல.. நீ சொன்ன பொன்மொழிகளைச் சுஜா கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா அதான் அவளுக்குப் போன் பண்றேன், என்ன ஓகே வா??”  காதில் போனை வைத்துக்கொண்டே கேட்டான். பதறிய சுந்தர், “ஐயையோ !! நீ எனக்கு டிவோர்ஸ் வாங்கித்தராம போகமாட்ட போல இருக்கே!!” போனை வாங்கி அதைக் கட் செய்தான்.
கல கல வெனச் சிரித்த சித்து

” இவ்ளோ பயம் இருக்குல அப்புறம் எதுக்கு உனக்கு இந்தப் பந்தா?, நீ எல்லாம் காலேஜ் ல லெக்சரரா எப்படி தான் இருந்தியோ?” நக்கலடிக்க
“ஹலோ பாஸ்! லெக்சரரா இருந்தப்ப நானும் ஸ்டிரிக்ட் தான். என்னைப் பார்த்துத் தான் அவ பயப்படுவா. ஐ டி வந்தப்புறம் கதையே மாறிபோச்சு . இப்போ அவளுக்குத் தான் நான் பயப்படறேன். இதுவும் ஒரு லவ் தான் டா “, சுந்தர் அனுபவத்தில் பேசினான்.
இதைப் போல் ஒரு ஆனந்தமான உரையாடல் இனி யாரிடம் பேசுவது? அவரவர் வேலையில் இனி கவனம் செலுத்த வேண்டிய நேரம். ஒரு நண்பனைப் போலவோ அல்லது அவனை ஈடு செய்யவோ மற்றோருவரால் இயலாத ஒன்று. அது தானாக அமைய வேண்டும்.
அவன் கிளம்பவேண்டிய நேரம் வந்தது. அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வந்தான்.
சுந்தர் மனதில் இப்பொழுது ஒரு பாரம் இருப்பதைப் போன்று உணர்ந்தான். எல்லாருக்கும் நட்பு என்ற ஒன்று வாழ்வில் இன்றியமையாதது. பெற்றோரைப் பிரிந்து கூடச் சில காலம் விடுதியிலும் வெளியூர்களிலும் சென்று தங்கிவிடுகிறோம். அந்தப் பிரிவை எளிதில் தாங்கிக்கொள்ள முடியும் அருகில் நண்பர்கள் இருப்பதால். ஆனால் அந்த நட்பைப் பிரியும் தருணம் கொடுமையானது. எல்லாவற்றையும் நண்பர்களிடம் பகிரும் நாம் அந்த நண்பர்களைப் பிரிந்ததால் ஏற்படும் வலியை யாரிடம் சென்று பகிர்ந்து கொள்ளவது. அது உயிரில் வலியை ஏற்ப்படுத்தத் தான் செய்யும். ஏனென்றால் உயிர் நண்பர்கள் அல்லவா?’.
அப்படியொரு வலியைத் தான் இருவரும் உணர்ந்த்தனர். இருப்பினும் ஒரே ஊரில் இருப்பதால் அடிக்கடி சந்திக்க முடியும் என்று மனதை தேற்றிக்கொண்டனர்.
இருவரும் கட்டிப்பிடித்து வருத்தத்தைப் போக்கிக்கொள்ள முயன்றனர்.
“நீயாவது இந்த ஐ டி ல இருந்து தப்பிச்சியே மச்சான், லக் இஸ் யூவர்ஸ்”, வாழ்த்தினான் சுந்தர்.
” தேங்க்ஸ் டா , சனிக்கிழமை மீட் பண்ணுவோம் ” சிரித்துவிட்டு கிளம்பினான். வீட்டில் அவனது அக்கா மைதிலியும் அவளின் மூன்று வயது மகள் வர்ஷினியும் அவனை வாழ்த்த வந்திருந்தார்கள்.
பார்வதி மகளோடு பேசிக்கொண்டிருக்க அந்தச் சிறு பெண் வாசலில் விளையாடிக்கொண்டிருந்தாள். சித்துவின் கார் வாசலில் நுழைவதைப் பார்த்ததும் உள்ளே ஓடிச்சென்று தன் தாயின் பின்னால் ஒளிந்தது.
அதைப் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்த சித்து “வர்ஷி… மாமா கிட்ட வரமாட்டியா? மாமா மேல கோவமா” என்று கேட்க, 
மைதிலி அவனைப் பார்த்து

” ஆமா நாங்க கோவமா இருக்கோம். ரெண்டு வாரமா நீ எங்கள பாக்க வரல? அதுனால நாங்க பேசமாட்டோம் ” வர்ஷினியை கையில் தூக்கிக்கொண்டு அவனைப் பார்த்து இரு கண்களையும் சிமிட்டி சைகை செய்தாள்.
பார்வதி ” நீங்கச் சண்ட போட்டுகிட்டே இருங்க நான் எல்லாருக்கும் சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன் ”  சமையல் அறைக்குள் நுழைந்தார்.
சித்து சாதரணமாகச் சோபாவில் அமர்ந்து தன் ஷூ வை கழட்டி வைத்து விட்டு,

” பேசலேனா போங்க ! நான் வெச்சு இருக்கற பெரிய சாக்லேடை நானே சாப்டுக்கறேன்” என்று அந்தக் குழந்தையைப் பார்த்துக் கூற
அதுவோ சாக்லேட் என்றதும் ஒரு நொடி யோசித்தது . பின் தன் தாயின் காதில் கை வைத்து ரகசியம் சொல்வதுபோல்

” பவ்வால்ல மா , இந்த ஒரு வாத்தி வித்துத்தலாம் ” , சத்தமாகக் கூற சித்துவோ முகத்தைத் திருப்பி கொண்டு அமர்ந்த்திருந்தான்.
“சரி , அப்போ நீயே போய் மாமா கிட்ட பேசு ” , அவளை இறக்கி விட்டாள். அவன் அருகே சென்று தன் பிஞ்சு கைகளால் அவன் முகத்தைத் திருப்பி
” கோச்சிக்காத ! நான் உன்கூத பேசதேன். ஆனா நீ என்னை வீகெந்த் வந்து  பாக்கணும் ஓகேவா ?! தீல்?! ”  தன் கட்டை விரலை உயர்த்திக்காட்ட அதற்கு  மேல் அவளைத் தூக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.

அவளைத் தூக்கி தன் மடியில் அமரவைத்து கட்டிப்பிடித்து “என்கிட்டையே கோவமா டி?” என அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்.
அதுவோ , “ஆ! உன் மீசை குத்துது மாமா ”  தன் கன்னத்தைத் துடைத்துக் கொள்ள
அதைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “எனக்கு எங்க டி மாமூல் ?” எனக் கேட்க
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு எம்பி அவன் கன்னதில் வலிக்காமல் முத்தமிட்டது. அந்த மென்மையான முத்தத்தை ரசித்தவன் புன்னகையோடு மீண்டும் ஒரு முறை அவளை முத்தமிட்டு பின் அவளைத் தூக்கிச் சென்று பிரிட்ஜில் இருந்த சாக்லேட்டை எடுத்துக் கையில் கொடுத்தான்.
அதை வாங்கிக்கொண்டு மீண்டும் விளையாடச் சென்றது. இதை அனைத்தையும் தன் கன்னத்தில் கை வைத்து ரசித்துக் கொண்டிருந்த மைதிலி தன் தம்பியின் பாசத்தை நினைத்து அகமகிழ்ந்தாள்.
“எப்போ க்கா வந்த? மாமா வ ஏன் கூட்டிட்டு வரல ?” என்றான்.
“வர்ஷி ய ஸ்கூல் ல இருந்து கூட்டிகிட்டு நேரா இங்க வந்துட்டேன். நாளைல இருந்து நம்ம கம்பெனிக்குப் போக போற ன்னு அம்மா சொன்னாங்க அதான் உனக்கு விஷ் பண்ணிட்டு போகலாம்ன்னு வந்தேன். மாமா இன்னும் ஆபீஸ்ல இருந்து வரல டா. நீ வந்ததும் போன் பண்ண சொன்னாரு ”  தன் கைபேசியில் தன் கணவர் ராஜேஷிர்க்கு டயல் செய்து கொடுத்து விட்டுச் சென்றாள்.
“ஹலோ “
“ஹலோ மாமா, எப்படி இருக்கீங்க?”
“சொல்லுடா மாப்ள, கம்பெனி போக ரெடி ஆயிட்டியா? ஆல் தி பெஸ்ட் ” வாழ்த்தினான் ராஜேஷ்.

“தேங்க்ஸ் மாமா, எப்போ வீட்டுக்கு வரீங்க? ரொம்ப நாள் ஆச்சு உங்கள பார்த்து” எனக் கேட்கவும்
“வரணும் டா , கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு, சீக்கரம் மீட் பண்ணுவோம்,பை “
“பை மாம்ஸ் ” , இணைப்பைத் துண்டித்தான்.
அனைவரும் அமர்ந்து பேசிச் சிரிர்த்துக்கொண்டு சிற்றுண்டியை முடித்துவிட்டு, வர்ஷினியுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு பின் அவர்களை வீட்டில் விட்டு வந்தான்.
மறுநாள் சித்தார்த் கோட் சூட்டுடன் கம்பெனிக்குக் கிளம்பிக்கொண்டிருக்க, அவனுக்கு அது ஒரு கம்பீரத் தோற்றத்தை அளித்தது. அதைக் கண்ட பார்வதி மகன் பெரிய மனிதன் ஆகிவிட்டதைப் போன்று உணர்ந்தார். அவன் நெற்றியில் விபூதியை பூசி வாழ்த்துக் கூறினார் பார்வதி. தன் தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பின் தந்தையுடன் கிளம்பினான். இருவரையும் வழி அனுப்பி வைத்தார் பார்வதி.
கம்பெனியில் வேலை செய்யும் அனைவரும் ஓர் அளவு அவனுக்குத் தெரிந்தவர்கள் தான். அனைவரும் அவனுக்கு வாழ்த்துக் கூறி பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
அதைப் பெற்றுக்கொண்டு தன் தந்தையுடன் அவர் அறைக்குச் சென்றான். அங்குப் போடப் பட்டிருந்த டேபிளில் பூக்களை வைத்துவிட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான்.
மனோகர் அவனைப் பார்த்து ” வெல்கம் மை சன்! இனிமே நீ கொஞ்சம் கொஞ்சமா இந்தக் கம்பெனிய ஓவர்டேக் பண்ணி எப்பவும் நம்பர் ஒன்ல வெச்சிருக்கணும்” என்று வாழ்த்தினார்.
“வெச்சிருப்போம்ன்னு சொல்லுங்க ப்பா ” என்றான்.
” இல்லை சித்து நீ தான் இதை நடத்தனும், என் மனசு இப்போலாம் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கணும் ன்னு தோணுது. உனக்கு நான் துணையா இருப்பேன் எப்பவும். அதுனால நீ இப்போ கரண்ட் ஆ நாம பண்ற ப்ராஜெக்ட்ஸ் அப்புறம் புது கான்டிராக்ஸ் எல்லாத்தையும் கவனமா ஸ்டடி பண்ணு. அதுக்கு அப்புறம் இன்னும் இன்னொவேடிவா என்ன பண்ணலாம்ன்னு யோசி” திடமாகவே சொல்லி அவனுக்குப் பொறுப்புகளை கொஞ்சம் கொஞ்சாமாகப் புரியவைத்தார்.
இருந்தாலும் அவரிடம் இது நாள்வரை இல்லாத ஒரு பற்றுதல் இல்லாத தன்மை இருப்பதாக உணர்ந்தான். இந்த மாற்றம் எதனால் என்று யூகிக்க முடியவில்லை. மனதில் எங்கோ ஒரு மூலையில் சிறு வலி உண்டானதோ? ‘அவருக்கும் வயதாகிறது அதனால் கூட பொறுப்புகளைத் தன்னிடம் ஒப்படைக்க நினைக்கலாம். இது என் கடமை’ என்று ஒரு புறம் தோன்ற,
“கண்டிப்பா நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன் அப்பா நீங்க எதுக்கும் கவலைப் பட வேண்டாம்” என்று அவருக்கு நம்பிக்கை அளித்தான்.
உடனே தன் லேப்டாப்ஐ இயக்கினான். மனோகர் அவரது மேனேஜரை அழைத்துச் சித்துவிற்கு அணைத்து தகவல்களையும் தரச்சொன்னார்.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவனுக்கு யாரிடமும் பேசவும் நேரமில்லை. முழுக்க முழுக்க தன் கம்பெனியில் என்ன நடக்கிறது என்று மேனேஜர் அனுப்பிய ஃபைல்களின் மூலம் தெரிந்து கொண்டான்.
இன்னும் இரண்டு நாட்களில் அவன் கம்பெனியின் அனைத்து தகவல்களின் டேட்டாபேஸ் ஆகிவிடுவான். அனைத்தையும் மறந்து சனிக்கிழமை அதிகாலை வரை படித்துக்கொண்டிருந்தான்.
அவனுக்கும் அவன் மூளைக்கும் இப்பொழுது சிறு ஓய்வு தேவைப்பட்டது. லேப்டாபை மூடிவிட்டு அவனது வலிய கைகளைத் தலைக்குப் பின் வைத்து நெட்டி முறித்தான். எழுந்து சென்று அவன் வீட்டு தோட்டத்தில் உலவினான். அதிகாலையின் குளுமையும் அமைதியான சூழலும் காதல் கொண்ட அவன் மனதை தட்டி எழுப்பியது. சக்தியின் நினைவு வர இன்று அவளைச் சந்திக்கப் போவதை எண்ணி உற்சாகம் அடைந்தான். இன்று வார்த்தைகளால் இல்லாமல் வேறு வழியில் அவளுக்குத் தன் காதலை உணர்த்த நினைத்தான். காதல் தந்த சுகமான நினைவுகளுடன் அந்த முன்விடியல் நேரத்தின் இனிமையும் சேர்ந்து கொள்ள அங்கிருந்த புல் தரையில், கைகளைத் தலைக்குப் பின் வைத்துப் படுத்தான். விண்ணிலே தனியாகத் தவிக்கும் நிலவும் அவனும் மட்டுமே இப்பொழுது அந்த இடத்தில் இருப்பதாகத் தோன்றியது. அவளின் அருகாமை அந்த நேரத்தில் நிச்சயம் வேண்டும் என்று மனம் கெஞ்சியது.
தன் இதயத்தைக் கையால் தடவினான்.

“சீக்கிரம் அவ உன்னைத் தேடி இங்க வருவா ” அதற்க்கு சமாதானம் சொன்னவன், கண்களை மூடி அவளை நினைத்தான். அவளின் சிரிக்கும் கண்களும், துடிக்கும் இதழ்களும் அழகாய் மனக்கண்ணில் தோன்றியது. கண்ணைத் திறந்து நிலவைப் பார்த்தபோது அவளின் பிம்பம் அதில் பிரதிபலிக்க அதை மனதில் பதிய வைத்தான். இரண்டு நாள் உழைத்த களைப்பு உடலைத் தூக்கத்தில் தள்ளியது, தென்றல் தாலாட்ட அங்கேயே உறங்கி விட்டான்.
அதிகாலை வேலைக்காரன் வந்து எழுப்பியபின்னே தன் அறைக்குச் சென்று படுத்தான்.
சுந்தர் ஏதேதோ செய்ய நினைத்து உதவிக்காகச் சுஜாவிற்கு போன் செய்தான்.
“எனக்கு நல்ல சாப்பிடதான் தெரியும் சுந்தர் ”  பல்லைக் காட்டி இளித்தாள்.
“உன்னைக் கட்டிக்கிட்டா அடுப்பங்கரைலையே என் வாழ்க்கை முடிஞ்சுடும் போல இருக்கே, அடியேய்! கல்யாணத்திற்கு முன்னாடி ஒரு உப்புமா செய்யறதுக்காவது கத்துக்கிட்டு வா டி ” தலையில் அடித்துக்கொண்டு சாம்பார் வைத்தான். வாசலில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
கதவைத் திறக்க அங்கே ஸ்டைலாகக் கூலர்ஸ் அணிந்து எளிய உடையில் சித்தார்த் நின்றான். சுந்தரின் தோற்றம் அவனுக்குச் சிரிப்பை வர வழைத்தது. தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு மஞ்சள்பொடியும் மிளகாய்ப் பொடியும் அப்பிய

பனியன் லுங்கியுடனும் கையில் கரண்டியுடனும் நின்றிருந்தான். வாய்க்குள் சிரிப்பை முழுங்கி அவனைச் சீண்டினான்.
” தம்பி! சுந்தர் சார் இல்லையா?” என்று கேட்க,

“டேய்… ”  முறைத்தான் சுந்தர்.
“அட! வீட்டுக்கு வந்தவங்களுக்கு மரியாதையை தரணும்ன்னு உங்க முதலாளி சொல்லலையா ?” சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
வேகமாகத் தலையில் இருந்த துண்டை எடுத்துவிட்டு, ” நீயும் ஏன்டா வந்ததும் என்னைக் கொல்ற, யாரும் இல்லாம கஷ்டப் பட்டுச் சமைக்கறேன் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு”  காலில் விழாத குறையாகக் கெஞ்சினான்.
“நோ வே ! நானே சிம்பிளா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். உன் டிரஸ் மாதிரி ஆயிடுச்சுன்னா அப்புறம் சக்திய எப்படி ஃபேஸ் பண்றது? .கோ மேன்!” என்றான்.
இவனை எப்படியாவது சமைக்க வைக்க வேண்டும் என்று, ” பண்ணலனா போ. உன் ஆளுக்குப் பாயசம்ன்னா உயிரு, உனக்கும் இம்ப்ரெஸ் பண்ண ஒரு சான்ஸ் கெடைக்கும்ன்னு சொன்னேன்”, கொள்ளுதிப் போட்டான்.
அடுத்த நொடி கிச்சனில் இருந்தான் சித்து.
ஏப்ரன் போல ஒரு டவலைக் கட்டிக்கொண்டு பாயசம் வடை ரசம் எனத் தனக்கு தெரிந்தவற்றை செய்து வைத்தான். எல்லாம் முடித்தபின்னர் சுந்தர் குளிக்கச் சென்றான். சித்து தன் உடையைச் சரி செய்து கொண்டு சக்திக்காகக் காத்திருந்தான்.
அவம் எதிர்ப்பார்த்தபடி வாசலில் சக்தியும் சுஜாவும் வருவது தெரிந்தது. உள்ளே அவர்கள் நுழைந்ததும் கம்மென மனம் வீசக் கண்ணை மூடி அதைச் சுவாசித்தான்.
“என்ன அண்ணா ? உங்களுக்கும் வாசனை வருதா?” என்றாள் சுஜா.
” ம்ம்ம்ம் “
“சக்தியோட புது சென்ட், ஆனா இது என்ன வாசனைன்னு எங்க ரெண்டு பேருக்குளையும் ஒரு சின்ன சண்டை. நான் இது ஃப்ரூட் ஸ்மெல்ன்னு சொல்றேன் அவ ஃபளவர் ஸ்மெல்ன்னு சொல்றா, நீங்களே சொல்லுங்க ”  சுஜா கேட்க
“சரி சொல்றேன்”.
சக்தியின் அருகே சென்றான். வெள்ளை நிற சுடிதார் அணிந்து, விரித்த கூந்தலுடன் புது மலர்போல இருந்தாள்.
“ஃஇப் யூ டோன்ட் மைன்ட், மே ஐ ” என அவளைப் பார்த்துக் கேட்கச்,  ‘சகஜமாகப் பழகு’ என்று சுஜா கூறியதை மனதில் கொண்டு,

“சரி ” தயக்கத்துடன் சொன்னாள்.

இருவருக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று ஒதுங்கி சுஜா சுந்தரை தேடி கிச்சனுக்கு சென்றாள்.
சக்திக்கு உள்ளே படபடப்பு. எப்படி சொல்லப் போகிறான் என்று யோசிக்கும் முன்பே அவளை நெருங்கி வந்தான்.
வேறு வழியின்றி, தன் கூந்தலை வலது பக்கமாக ஒதுக்கி, தன் இடது பக்க கழுத்தை காட்டினாள். அவளின் எதிரே நின்றிந்தான் சித்து. சிறு தயக்கத்துடன் குனிந்து அவளின் கழுத்தின் அருகே முகர்ந்தான். அவனின் மூச்சு காற்று அவள்மேல் பட அவள் இதயம் ஒரு நொடிக்கு நூறு முறை துடித்தது. கூச்சத்தினால் அவள் உடல் லேசாக நடுங்கியது. அவன் அருகாமை அவளுக்குச் சொல்ல முடியாத உணர்வுகளைத் தந்தது. ஒரு ஆண் தன்னிடம் இத்தனை நெருக்கமாக இருப்பது இதுவே முதல் முறை. அவனின் வாசம் தான் அணிந்திருத்த சென்ட்டின் வாசத்தையும் தாண்டி அவள் உயிர்வரை பரவியது. கண்ணை மூடி உறைந்துபோய் நின்றுவிட்டாள்.
சித்துவிற்கோ வாசனையையும் தாண்டி அவள் அருகாமை தன்னிலை மறக்கசெய்து கொண்டிருந்ததது. அவளைத் தன் மார்போடு சேர்த்துக்கொள்ள கைகள் துடித்தது. அந்தத் தங்க நிறக் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொள்ள தவித்தான். அவன் மனது இன்னும் என்னென்னவோ எண்ணித் தவித்தது. இருவரும் ஒருவித மோன நிலையில் இருந்தனர்.
“ஹம்ம்ம்ம்….. ஹம்ம்ம்ம்……” என்று சுஜாவும் சுந்தரும் தொண்டையை சரிசெய்ய பதறிக் கொண்டு விலகினாள் சக்தி.
“என்ன ஸ்மெல்ன்னு கண்டுப்பிடிச்சீன்களா ?”  புன்னைகை மாறாமல் சுஜா கேட்க,
அவன் தன் பாக்கெடிற்குள்  கைவிட்டுக் கொண்டே வந்து, ” எஸ்.. அஃப்கோர்ஸ்” என்றான்.
“எங்கே சொலுங்க பார்ப்போம்” 
“செவன்ட்டி பெர்சென்ட் ஆஃப் ஃப்ளவர் அண்ட் தேர்ட்டி பெர்சென்ட் ஆஃப் ஃப்ருட்” என்றான் சக்தியைப் பார்த்துக்கொண்டே,

“வாவ் ”  குதித்தாள் சுஜா.
அவன் சொல்வது தன்னையா அல்லது உண்மையாகவே ச்செண்டைப் பற்றிக் கூறுகிறானா என்று குழம்பினாள் சக்தி.
” லெட்ஸ் ஹாவ் லஞ்ச் ” என்று சுந்தர் கூற
நடந்த நிகழ்விலிருந்து தற்காலிகமாக மீண்டு அவர்களோடு சென்றாள் சக்தி.
அனைவரும் வட்டமாகக் கீழே அமர்ந்தது உண்டனர்.
“பாயசம் வடை செம டேஸ்ட் அண்ணா”,  ருசித்து  மேலும் அதைச் சாப்பிட
“இதை நம்ம சித்து தான் செஞ்சான்” , சுந்தர் அவனைக் கைகாட்ட
தன் தந்தையிடம் தனக்கு சமைத்துப்போடும் பையன் வேண்டும் என்று சொன்னது ஏனோ இப்போது நினைவு வந்தது.
அவள் ஏதோ யோசிப்பதை பார்த்து “என்ன” என சுஜா கேட்க
“ஒன்னும் இல்ல வெரி நைஸ்” , லேசாகப் புன்னகைத்து சித்துவை பார்த்தாள்.
அவனோ தன் காலரை தூக்கி விட்டு அவளைப் பார்த்துக் கண்ணடித்து “தேங்க்ஸ் ” என்றான்.
——————————————————————————————————–
ஆராதனா அடிக்கடி யுவராஜிடம் சென்று பாடத்தில் சந்தேகம் கேட்டாள்(அவனைப் பார்க்கத்தான்). நிறைய மாணவர்கள் அவனிடம் பாடம் கேட்க வருவதால் அவளைத் தவறாக நினைக்க அவனுக்குத் தோன்றவில்லை.
வருடங்கள் ஓடின. யுவராஜ் கடைசி ஆண்டில் இருந்தான்.
அவனைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொண்டாள். அவளையுமறியாமல் அவன்மீது காதல் கொண்டாள். அது அவளுக்கே வியப்பை அளித்தது. ஆண்களை அவள் மதிப்பதில்லை, அவளுடைய தந்தையைத் தவிர. ஒரு அழகானப் பெண்ணைப் பார்த்தால் வழிவதும் அவள் பின்னால் சுற்றுவதும் தான் ஆண்களுக்கே உரிய குணம் என்று நினைத்திருந்தாள்.
யுவராஜின் திறமையும்,  இத்தனை ஆண்டுகளில் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத தன்மையும் அவளை மிகவும் ஈர்த்தது.
இதைப் பற்றி ஒரு நாள் கதிரை கூப்பிட்டு சொல்ல, அவனோ முதலில் ஆச்சரியப் பட்டான். யுவராஜிடம் சொல்லச் சொன்னாள்.
“என்னது நானா? உனக்குத் தான் தைரியம் ஜாஸ்தி ஆச்சே நீயே போய்ச் சொல்லு” என்று சொல்ல,
அவள் அவனிடமே சென்றாள். வீட்டிற்க்கு செல்லத் தன் பைக்கை ஸ்டார்ட் செய்துகொண்டிருந்தான் யுவா.
“யுவா உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்”  அருகே வந்தாள்.
“பேசலாமே! சொல்லு என்ன விஷயம்”  பைக்கை ஆஃப் செய்துவிட்டு, இறங்கி அதை ஸ்டாண்டில் நிறுத்தியவன் அதில் சாய்ந்து நின்று, கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு கேட்டான்.
ஒரு பெண்ணிற்குறிய அடக்கம் அவளிடம் இல்லை. மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசியே பழக்கப்பட்டவள். எப்படி சொல்வது என்று எதையும் யோசித்தும் பார்த்து வரவில்லை.
“நான் எதையும் மறச்சு பேசற டைப் இல்ல”
“சரி…..” என்றான் புருவத்தை தூக்கி
“உனக்கும் எனக்கும் ஒரே வயசு தான் ” 
“சரி”
“எங்க வீட்ல பிரச்சனை இல்லை “
“எதுக்கு?” அலட்டிக்கொள்ளாமல் கேட்டான்.
“சொல்றேன்..” சற்று தயங்கினாள்.

“????”

“எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. ஐ அம் இன் லவ் வித் யூ ” திக்கித் திணறிச் சொல்லியே விட்டாள்.
அவளையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். இதுநாள் வரையில் அவளைத் தைரியமானவள் சற்று துடுக்கான பெண் என்றே நினைத்திருந்தான். அவளைப் பற்றிய அவனது நினைப்பு அவ்வளவுதான்.
அழகில் சற்று குறைந்த்தவள் தான், சற்று பூசிய உடம்பு. தோள்வரை இருந்த கூந்தலை தூக்கி ஒரு ரப்பர் பேண்டில் அடக்கி இருந்தாள். எப்பொழுதும் பேன்ட் சட்டையுடன் சுற்றுவதால் அவளை ஒரு பெண்ணின் லட்ச்சனங்களை கொண்டு பார்ப்பது கடினமே. அவளின் இந்த ப்ரோபோசலை அவனுக்கு ஏற்கும் எண்ணம் சிறிதும் இல்லை.
அவனுக்கு ஏற்றவளைப் பற்றி அவன் சிறிதும் யோசித்துப் பார்த்ததில்லை. அது இவளா என்றும் யோசிக்க முடியவில்லை. அவள் தன் பதிலுக்காகக் காத்திருக்கிறாள் என்று உணர்ந்தான்.
“இங்க பாரு ஆராதனா, எனக்கு உன்னைப் பார்த்தா அப்படி எதுவும் தோனல ,  அம் நாட் இம்ப்ரஸ்ட், சோ…” என இழுக்க
அவனைப் பற்றி அறிந்தவள் தானே!, அதனால் அவனின் இந்தப் பதில் அவளைப் பாதிக்கவில்லை. மாறாக அவனிடமே கேட்டாள்.
” ஐ நோ ! பட் உனக்கு எப்படி இருந்தா பொண்ணுங்களை பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியல. நீ எந்தப் பெண்ணையும் அந்த மாதிரி பார்த்தத நான் பார்த்ததில்லை. அதுனால நீ தான் சொல்லணும் உனக்கு எப்படி இருந்தா புடிக்கும்?  நான் யாருக்காகவும் மாறுகிற டைப் இல்லை. ஆனால் உனக்காக எதையும் செய்ய ரெடியா இருக்கேன். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ”  கெஞ்சாமல் கேட்டாள்.
அவள் இப்படிக் கேட்டது தான் அவனுக்குப் பிடித்தது.
ஆனாலும் ஒரு பெண்ணை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொண்டால் அவன் யுவா அல்லவே!
அவளை ஏற இறங்கப் பார்த்தான். ” ஐ லைக் யுவர் ப்ரேவ்நெஸ் பட் தட் கான்ட் பீ லவ், ட்ரை சம்திங் பெட்டெர் நெக்ஸ்ட் டைம். இப்போ வழிய விடு ”  சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்.
கல்லூரி முடியும் வரை அவளால் அவனை இம்ப்ரஸ் செய்ய முடியவில்லை.

இன்று ,
கதிர் அவளைப் பார்க்கச் சென்றான். “யூ ஆர் அப்பாயின்டட்” என்று அவளிடம் அப்பாயின்மென்ட் ஆர்டரை நீட்டினான்.
அவளோ ஆர்வமாக ” யுவா ஓகே சொல்லிட்டானா?”   கேட்க,
அவனுக்கு நீ தான் வரப் போறன்னு தெரியாது. ஆனா நான் சொன்னதுக்காகச் சரின்னு சொல்லிட்டான்.” புன்னைத்துக் கொண்டே சொன்னான்.
” வாட் எவர் இந்தத் தடவை அவனை நான் விடறதா இல்லை”  உருதியாகச் சொன்னாள்.
“நான் சொன்னதை ஞாபகம் வெச்சிக்கோ ஹி இஸ் அ ஆங்க்ரி பேர்ட் நவ், சோ பீ கேர்ஃபுல் ”  எச்சரித்தான்.
“நானும் முன்னாடி மாதிரி இல்லை. அப்டேட்டட் வெர்ஷன் 2.௦. வெயிடிங் பாஃர் ஹிம் ”  தன் கூலர்சை மாட்டிக்கொண்டே சொல்ல
“இப்போ நான் தான் மத்தளம் மாதிரி ரெண்டு பக்கமும் அடி வாங்கப் போறேன் ”  தலையில் கை வைத்துக் கொண்டான்.
யுவாவின் வருகையை அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.

error: Content is protected !!