KVK-7

KVK-7

சிறிது தூரம் சென்றவன் மறுபடி திரும்பி வரத் தூரத்தில் ஆராதனா செல்வதைப் பார்த்தான். ‘காலேஜில் பார்த்த ஆராதனாவிற்கும் இப்போது இருப்பவளுக்கும் எவ்வளவு வித்தியாசம். இவளைத்தான் அன்று நாம் புடவையில் பார்த்தோமா? மிகவும் ஸ்லிம்மாகி உடலை கச்சிதமாக வைத்திருக்கிறாள். வாக்கிங் வருவதால் கூட இருக்கலாம். ஆனால் அன்று இருந்த அந்தத் தைரியமும் திமிரும் மட்டும் குறையவில்லை, ‘ சிந்தனை ஓட்டம் ஓடிக்கொண்டிருக்க அவனும் அங்கிருந்து சென்றான்.
வீட்டிற்கு சென்றதும் அங்கே மலர் ஒரு ஜோசியரை வரவழைத்துப் பேசிக்கொண்டிருந்தார், அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டே உள்ளே நுழைந்தான்.
“இவன் தான் என் மகன், இவன் தான் வீடு கட்டி இருக்கான், சீக்கரம் ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்க ஜோசியரே”
யுவராஜ் மலரின் அருகே சென்று நின்றுகொண்டான். அந்த ஜோசியர் நான்கு ஐந்து தேதிகளைக் குறித்துக்கொடுத்தார். அதைப் பார்த்து விட்டு ” வீக் எண்டு ல எந்த நாள் வேணும்னா வெச்சிக்கலாம்மா, நீங்களே பார்த்துச் சொல்லுங்க, எனக்கு டைம் ஆச்சு “
“சரிப்பா நீ குளிச்சுட்டு வா டிபன் எடுத்து வைக்கறேன் ” அவனை அனுப்பி விட்டு ஜோசியரிடம் திரும்பி
“இது என் பையனோட ஜாதகம் , ஒரு நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க. நல்ல குடும்பமா நல்ல குணம் உள்ள பொண்ணா இருந்தா போதும் வேற எதுவும் வேணாம் , என் பையனுக்கு இது தெரியாது. இதைப் பத்தி நீங்க என்கிட்ட மட்டும் சொன்னா போதும்”
“சரிம்மா நான் பாத்து சொல்றேன் . அப்போ நான் கிளம்பறேன் ம்மா ” அவர் சென்றுவிட்டார்.
கம்பனிக்கு சென்ற யுவா , அங்கே ஆராதனா ஆரஞ்சு நிற சல்வார் அணிந்து பளிச்சென்று அமர்ந்து தன் வேலைகளைச் செய்துகொண்டிருந்ததை கவனித்தான்.
தன் அறைக்குச் சென்று, இண்டர்காமில் அவளை அழைத்தான்.
“எஸ் சார்” அவன் அழைப்பை எதிர் பார்த்தே அமர்ந்திருந்தாள்.
“கெட் மீ அ காஃபி லாட்டே” அதிகாரமாகச் சொன்னான்.
“வாட்? நானா ?” அவளுக்குக் கோபம் வந்தது.
“நீ தான என் பி ஏ , அப்போ நீ தான் பண்ணனும், இன்னும் பைவ் மின்ட்ஸ்ல வேணும் , மேக் இட் ஃபாஸ்ட் ” புன்னைகைத்துக் கொண்டே கட் செய்தான்.
அவளுக்குக் கோபம் தலைக்கேறியது. கதிர் அங்கே வர
“என்ன ஆச்சு ஆராதனா ஏன் இவ்ளோ கோபமா இருக்க ?” அவளின் முகத்தைப் பார்த்துக் கேட்க
“உங்க பாஸ் என்ன காஃபி கொண்டு வரச் சொல்றாரு அதுவும் ஆர்டர் பண்றான் எனக்கு வரக் கோபத்துல ….” கொதித்துக் கொண்டிருந்தாள்.
“ஹா ஹா ! இதுக்கே இப்படியா ? அவன் உன்ன ரிசைன் பண்ண வைக்கப் பாக்கறான், நீயும் அதுக்கு ஏத்த மாதிரி தான் கோபப்படர , பாத்து நடந்துக்கோ அவன் இப்படி தான் டார்ச்சர் பண்ணுவான் உன்ன வெளிய அனுப்ப, நீ தான் கேர்புஃல்லா இருக்கனும் ” அவளுக்கு எடுத்துரைத்தான்.
நீண்ட ஒரு பெருமூச்சு விட்டாள். ” நீங்கச் சொல்றது கரெக்ட் தான் கதிர். இப்போ தெளிவாயிட்டேன் . அவன் என்ன பண்ணாலும் இனிமே நான் பாத்துக்கறேன்” அவனுக்கு காஃபி எடுத்துவர சென்றாள்.

கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள். கோட் சூட்டுடன் அமர்ந்து கையில் உள்ள பைஃலைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் அந்தக் கம்பீரம் அவன்மேல் கோபம் இருந்தாலும் அவனை ரசிக்கச் செய்தது. கண்ணை மட்டும் நிமிர்த்தி அவளைப் பார்த்தான். ‘இந்தப் பார்வையும் இந்தத் திமிரும் தான் உன்னை விடாமல் துரத்தச் சொல்லுது.’ மனதில் உள்ளதை வெளியே சொல்ல முடியுமா? அதுவும் இந்தச் சிடுமூஞ்சியிடம்’!
“யுவா காஃபி”, ட்ரேயில் இருந்த கப்பை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“என்ன சொன்ன ?” அவளை முறைத்து பார்த்தான்.
‘ஐயையோ ! அவனைப் பேர் சொல்லி அழைத்துவிட்டோமே’ என்று உணர்ந்தாள்.
“யுவர் காஃபின்னு சொன்னேன் சார் ” பல்லைக் கடித்துக்கொண்டே சிரித்து சமாளித்தாள்.
கப்பை அவளிடமிருந்து வாங்கி அருந்தினான். “குட் நல்லா காஃபி போடற நாளைலேந்து நான் வந்ததும் நீ தான் காஃபி எடுத்துட்டு வரணும், யு கேன் கோ ” அவளைச் சீண்டிவிட்டு எதுவும் நடக்காதவன் போல மறுபடியும் பைஃலில் மூழ்கினான்.
அவன் சொன்னதில் அவளுக்குக் கோபம் வந்தாலும் , தன்னை அனுப்பத் தான் இதனைச் செய்கிறான் என்று உணர்ந்ததால் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ,” இது எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு ஒரு நாள் உனக்கு இருக்கு ” முணுமுணுத்துக் கொண்டே மெதுவாகக் கதவு அருகே சென்றாள்.
“வாட்ஸ் தட் ” அவள் அருகில் குரல் கேட்கவும் கையில் இருந்த ட்ரே கீழே விழுந்தது. திரும்பிப் பார்த்ததும், அவன் பின்னால் அவ்வளவு நெருக்கமாக நின்றதால், அவன்மேல் இடித்துக் கீழே விழப்போனாள். அவள் இடையை ஒரு கையால் தாங்கி அவளை விழாமல் பிடித்தான். அவளுக்கு மூச்சு முட்டியது. அவன் தொட்டதால் ஏற்பட்ட கூச்சம் வேறு அவளை வதைத்தது. அவனைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. முகத்தை திருப்பி கொண்டு சுதாரித்து எழுந்தாள். என்ன சொல்வதென்று தெரியவில்லை அவளுக்கு. அவனோ உணர்ச்சியற்ற பார்வையுடன் அவளைப் பார்த்தான்.

“எதுக்கு என் பின்னாடி வந்தீங்க ?” கோபமாகக் கேட்க
“நீ தான் காலேஜ்ல இருந்து என் பின்னாடியே சுத்திகிட்டு இருக்க, முதல்ல அத புரிஞ்சுக்கோ” பதிலுக்கு அவன் புருவத்தை ஏற்றி இறக்கி நிதானமாகவே பதில் சொல்ல
அதைக் கேட்டு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் திணறினாள். பின் தொண்டையை செருமிக்கொண்டு
“நான் அத கேக்கல , இப்போ ஏன் வந்தீங்கன்னு கேட்டேன் ?” உள்ளுக்குள் அந்த உதறல் இருந்தாலும் அமர்த்தலாகவே கேட்டாள்.
“காஃபிகப் குடுக்க வந்தேன். என்னமோ சொல்லிட்டு இருந்தியே , என்னமோ இருக்குன்னு .. என்ன அது ” குனிந்து அந்த ட்ரேயில் கப்பை வைத்து அவளிடம் கொடுத்துவிட்டு கேட்டான்.
‘சத்தமாவா கேட்டுச்சு’ மனதில் தன்னையே அதற்க்கு திட்டிக்கொண்டு
“ஒன்னும் இல்ல நான் ஏதோ மனசுக்குள்ள பேசிட்டு இருந்தேன்” சமாளிக்க
“இந்தப் பிரச்சனை வேற இருக்கா உனக்கு ” கடுமையாகவே கேட்க
அவளுக்கு ஆத்திரம் தலைக்கேரியது. எதுவும் பேசிவிடக் கூடாது என்று அமைதியாகவே நின்றாள்.
அதற்குள் கதிர் உள்ளே வர , சட்டெனத் திரும்பி நடந்தான் யுவராஜ்.
கதிர் என்ன நடந்திருக்கும் என்பதை யூகிப்பதற்குள் , யுவராஜ் அவளைப் பார்த்து
” காஃபி ஆரிடிச்சு , சூடா ஒன்னு கொண்டு வா ” நக்கல் பார்வை பார்த்துவிட்டுத் தன் இடத்திருக்கு சென்றான்.
கோபமாக வெளியேறிய ஆராதனா , வேறு காஃபி கலந்து எடுத்துச் சென்றாள்.

அங்கே கதிருடன் வேறொரு விவாதத்தில் இருந்ததால் அவளை அவன் கவனிக்கவில்லை. அவளும் அதை வைத்துவிட்டு சென்றாள்.
“சித்துவோட ப்ராஜெக்ட் சக்சஸ் ஆகணும்ன்னு நான் தான் அந்த க்லைன்ட்ஸ் கிட்ட ஆர்கியு பண்ணாம ஓகே பண்ண சொன்னேன் கதிர்.”
கதிர் வாயைப் பிளந்தான்.

“ஏன் டா அவன கவுக்கனும்ன்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு ஹெல்ப் பண்ண, எனக்கு ஒன்னும் புரியலை!”
“ஒரு சின்ன வெற்றிக்கே அப்பாவும் பையனும் ரொம்ப சந்தோஷப் பட்டாங்கல , அந்தச் சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமா போகறப்ப தான் வலி ஜாஸ்தி இருக்கும் கதிர்.” சிரித்துக்கொண்டே சொன்னான் யுவராஜ்.
அவன் கூறியதைக் கேட்டுச் சற்று சங்கடமாக உணர்ந்தாலும் நண்பனுக்குப் பக்கபலமாக எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நினைத்தான் கதிர்.
மறுபடியும் அவனே தொடர்ந்தான். “அந்த ஹீரோயின் கிட்ட பேசிப்பாத்தியா ?”
“அவ, மறுபடியும் அனுப்பாத்தீங்கன்னு கெஞ்சறா , அவன் கிட்டயே நெருங்க முடியலையாம்.” கதிர் அழுதுக்கொண்டு சொன்னான்.
“இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. அப்பன மாதிரி இருப்பான்னு பாத்தா , ராமன மாதிரி நடந்துக்கறான்.” கோவமாகக் கூற
“சரி விடு , அவனோட அடுத்த ப்ராஜெக்ட்ல பாத்துக்கலாம் டா” கதிர் அவனைச் சமாதனம் செய்தான்.
“பாத்துக்கலாம் இல்ல கதிர். பாத்தாச்சு.” காஃபியை பருகிக்கொண்டே ஒற்றைக் காலை ஊன்றி டேபிள் மீடி அமர்ந்தபடி சொல்ல
“என்ன டா சொல்ற?! எப்போ பண்ண? என்ன பண்ண?” ஆச்சரியமாகக் கேட்க
“சிம்பிள் . அவங்க கம்பெனி மேனேஜர விலைக்கு வாங்கிட்டேன்” காஷுவலாகச் சொன்னான்.
“அவரு ரொம்ப நாளா அங்க இருக்காரே டா அவரை நம்பலாமா ?”
“அவரோட பையன் இப்போ வெளிநாட்டுல படிக்கறான். அதுக்கு நான் தான் ஹெல்ப் பண்றேன். அதுக்கு கைமாறா ‘மனோ அட்ஸ்’ கம்பெனிக்கு எந்த ஆடர் வந்தாலும் அந்த டீடைல்ஸ எனக்கு இன்பார்ம் பண்ணனும்ன்னு சொன்னேன். முதல்ல யோசிச்சாரு அப்புறம் பையன் தான் முக்கியம்ன்னு ஒத்துகிட்டார்.” நடந்து கொண்டே அவன் சொல்ல,
“இதெல்லாம் எப்போ நடந்தது ?” கதிர் விழிவிரியக் கேட்டான்.
“நான் இங்க வரத்துக்கு ஒரு வாரம் முன்னாடி தான் அவரைக் கன்வின்ஸ் பண்ணேன்” சிரித்துக்கொண்டே சொன்னான்.
“உன்னோட பிளான் என்ன யுவா?”
“எல்லாத்தையும் இப்பயே கேட்காத, இப்போதிக்கு அவனோட நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் அவன் கம்பிலீட் பண்ணா கூட அதை ரிலீஸ் பண்ண விடமாட்டேன்.” அவன் உறுதியுடன் கூற கதிர் அதிர்ச்சியில் இருந்தான்.
நடப்பவை அனைத்தும் தனக்கு எதிராக உள்ளது என்பதை அறியாத சித்து ஆனந்தமாக அவனது அடுத்த வேலையில் மூழ்கியிருந்தான். மனோகர் தன் மகன் விரைவிலேயே அனைத்தையும் கற்றுக்கொண்டுவிட்டான் என்று மகிழ்ச்சியாக இருந்தார்.
இந்த நேரத்தில் தான் அவர் தனது சொந்த ஊருக்குச் சென்று வரத் திட்டமிட்டார். இப்பொழுது அங்கே திருவிழா. வீட்டில் அனைவரிடமும் கலந்து பேசி மகள் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு போக முடிவெடுத்தார். சித்து தனது வேலைகளை முடித்துவிட்டு பிறகு இரண்டு நாள் வருவதாகக் கூறினான். எனவே அனைவரும் கிளம்பத் தயாரானார்கள்.
ஆனைமலை அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் தான் அவர்களின் சொந்த ஊர். அங்கே அவர்களுக்கு நிறைய சொத்துக்கள் பெரிய அரண்மனை போன்ற வீடு , நிறைய நிலபுலங்கள் அனைத்துமே உள்ளது. அங்கிருந்து அதைக் கவனித்துக்கொள்ள மனோகர் விரும்பவில்லை. அதை விடுத்து அவர் விளம்பர கம்பெனி ஆரம்பித்து இங்கயே தங்கிவிட்டார். இருந்தாலும் சொந்த ஊருக்கு அவர் அவ்வப்போது வருவதுண்டு. இங்கே கிடைக்கும் நிம்மதி அவருக்கு வேறு எங்கும் கிடைப்பதில்லை. எங்கே ஒரு பொருளைத் தொலைத்தோமோ அங்குத் தானே அதைத் தேட முடியும்.

அதுபோல அவர் தன் நிம்மதியை தொலைத்த இடம் அந்த ஊர் தான்  . அதனால் தான் அங்கே செல்வதை ஆனந்தமாக உணர்ந்தார்.
பார்வதிக்கு மகனை விட்டுச்செல்ல மனம் வரவில்லை. சித்து அவரைச் சமாதானப் படுத்தி அனுப்ப முயன்றான்.
“சித்து ! கரெக்டா டைம்க்கு சாப்டு டா , சீக்கிரமா தூங்கு. வேலைக்காரி கிட்ட உனக்குப் புடிச்சதே பண்ண சொல்லிருக்கேன். வேலையெல்லாம் முடிஞ்சதும் சீக்கிரம் வந்துடு டா. கவலையோடு அனைத்தையும் சொல்லிக்கொண்டு இருந்தார்.
“அம்மா! நான் என்ன சின்னக் குழந்தையா ? என்னை நான் பாத்துக்கறேன். நீங்க அங்க போய் நிம்மதியா சந்தோஷமா இருந்துட்டு வாங்க. உனக்கும் அது தான சொந்த ஊரு. உங்க மாமா கூடச் சுத்தினது எல்லாம் ஞாபகப் படுத்தி மலரும் நினைவுகளை ஓட்டிப் பாருங்க. ” தன் பெற்றோரைக் கிண்டல் செய்தான்.
பார்வதி, மனோஹரின் அத்தை மகள் தான். சிறு வயதிலிருந்தே இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள் தான். அதைத் தான் அவன் கிண்டல் செய்தான்.
அதற்குள் மைதிலியும் ராஜேஷும் குழந்தையுடன் வந்தனர். ஓடி வந்து சித்துவைக் கட்டிகொண்டாள் வர்ஷினி.
“மாமா நீ எப்போ வருவ”? மழலையாக அவனிடம் கேட்க
“மாமா வேலையெல்லாம் முடிச்சுட்டு சீக்கரமா வந்து வர்ஷி கூட விளயாடுவேணாம் சரியா?”
“சரி மாமா” அவனுக்கு முத்தமிட்டு சொன்னாள்.
அனைவரும் ஊருக்கு செல்லப் பெட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
ராஜேஷ், சித்துவை தனியாக அழைத்துப் பேசினான். “தனியா இருக்க மோகினி பிசாசு கிட்ட மாட்டிகாத டா. உன்னை மாதிரி வயசு பசங்கள கண்டா விடாதாம்.”
“அதெல்லாம் என்னை ஒன்னும் செய்யாது மாம்ஸ், நம்ம ஆளு கிட்ட சொன்னா மோகினி எல்லாம் ஓடிடும்” கண்ணடித்து சொன்னான்.
“டேய் மச்சான்! என்ன டா சொல்ற? ஆளா ? எப்போலேந்து ? என்கிட்டையே மறச்சிட்டியே?!” ஆச்சரியமும் வருத்தமும் கலந்து கேட்க
“இல்லை மாம்ஸ், இன்னும் யாருக்கும் தெரியாது, உங்ககிட்ட தான் முதல்ல சொல்றேன். அக்கா கிட்ட கூட மூச்சுவிடாதீங்க. முதல் வேலையா அப்பா கிட்ட சொல்லிடுவா.

 “அதற்குள் மைதிலி ராஜேஷை அழைத்தாள்.

“கொஞ்சம் இங்க வந்து ஹெல்ப் பண்ணுங்க “
“உங்க அக்காக்கு பொறுக்காது. சரி ஊருக்குப் போயிட்டு வந்து டீடைலா கேட்டுக்கறேன்”,  சொல்லிவிட்டு மைதிலியை தேடிச்சென்றான்.
சித்துவும் சிரித்துவிட்டு பெட்டிகளைக் காரில் எடுத்துவைத்தான். அனைவரும் கிளம்பினர். மனோகர் அவனை அழைத்து “எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் எனக்குப் போன் பண்ணு ” என்றார்.
“கவலைப் படாம நீங்க ஊர்ல சந்தோஷமா இருங்கப்பா நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்” , நம்பிக்கையாகச் சொன்னான்.
சித்துவிடம் விடைபெற்றுக்கொண்டு அனைவரும் சென்றனர். சித்து வீட்டிற்குள் வந்து சுந்தருக்கு போன் செய்தான்.
“சொல்லு சித்து ரொம்ப வேலையா டா பாத்து ரொம்ப நாள் ஆச்சு”,  குரலில் உற்சாகத்துடன் கேட்டான்.
“ஆமா சுந்தர், இப்போ எங்க வீட்ல எல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க, நீ உன்னோட டிரஸ் மட்டும் எடுத்துட்டு ஒரு பத்து நாள் வந்து தங்கிட்டு போடா, டைம் ஸ்பென்ட் பண்ண மாதிரி இருக்கும், உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?”  வருவானோ மாட்டானோ என்று யோசைனையாகக் கேட்டான். 

“நீ போனை வை இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்” சொல்லிவிட்டு உடனே கிளம்பினான் சுந்தர்.

இருவரும் சேர்ந்து சமைத்து சாப்பிட நினைத்தான். வேலைக்காரியை இரண்டு நாள் கழித்து வரச் சொன்னான். சுந்தர் வந்தவுடன் இருவரும் நீண்ட நாள் கழித்து சந்தித்த மகிழ்ச்சியில் இருந்தனர். அந்த ஒரு மாதம் நடந்தவைகளை பகிர்ந்தது கொண்டனர்.
தோட்டத்தில் உள்ள புல் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வழக்கம் போலச் சுந்தர் தன் கிண்டல்களை ஆரம்பித்தான்.
“வர வர நீ எங்க இருக்க என்ன பண்றன்னு சக்திகிட்ட தான் கேட்டுத் தெரிஞ்சுக்க முடியுது. அவ்ளோ போன் பேசற அவ கிட்ட, எனக்கு ஒரு தடவ போன் பண்ணியா டா ” , நக்கலாகக் கேட்க
“ஆமா! நான் அவளுக்கு ஃப்ரீயா இருக்கறப்ப நைட்ல பேசறேன். உன்கிட்ட நைட்ல பேசினா நீ சுஜா கிட்ட திட்டு வாங்குவ பரவாலையா?” அவனும்   சீண்ட , 
“ஓகே டா, நான் சரன்டர் ஆயிடறேன். போதும் விட்டுடு. அது சரி வீட்ல யாரும் இல்லனா நீ சக்திய கூப்டா ஒரு லாஜிக் இருக்கு என்ன ஏண்டா கூப்பிட்ட “,  சித்துவை பார்த்துக் கண்ணடித்தான்.
“நீ தான பேச முடியலன்னு பீல் பண்ற என் லவர் மாதிரி அதான் உன்னைக் கூப்பிட்டேன்”. முறைத்தான் சுந்தர்.
“நல்ல நாள்ல எங்க கல்யாணம் முடிஞ்சு அதுக்கு அப்புறம் தான் சக்தி என் வீட்டுக்கு வரணும்ன்னு நான் ஆசைப்படறேன் டா.” மனதில் உள்ளதை நண்பனிடம் சொன்னான்.
“சரி டா, இப்போ நாம ஏன் அவங்கள வெளில கூபிட்டு போகக் கூடாது” சுந்தர் கேட்க
“ஓகே டா, போலாமே! இரு சக்திக்குக் கால் பண்றேன், நீயும் சுஜாக்கு போன் பண்ணி வரச் சொல்லு.”
அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்து பின் சித்துவின் காரில் சென்றனர். சக்தியும் சுஜாவும் பின் சீட்டில் அமர்ந்துகொண்டனர். சித்துவிடம் போனில் பேசிப் பழக்கப் பட்டவள் தான் ஆனாலும் அவனை நேரில் காண்கையில் அந்தக் கூச்சம் மட்டும் இன்னும் இருப்பதாக உணர்ந்தாள். அந்தச் சிறு தயக்கத்தையும் சித்து ரசித்தான். கார் ஓட்டும்போது கண்ணாடி வழியாக அவளையே பார்த்துக்கொண்டு வந்தான். அதை அவளும் பார்த்து உள்ளுக்குள் வெட்கப்பட்டாள்.

ஒரு அழகிய பூந்தோட்டத்தின் முன் காரை பார்க் செய்தான்.

இறங்கியதும் சுந்தரிடம் , ” அரை மணி நேரத்தில இதே இடத்துல மீட் பண்ணலாம் , பை டா ; பை சுஜா “, என்றுவிட்டு சக்தியை கூட்டிக்கொண்டு சென்றான்.
“அடப்பாவி !! எப்படி கழட்டி விடறான் பாரு ?”, சுந்தர் கன்னத்தில் கை வைத்தான்.
அங்கே பல வண்ண நிறத்தில் ரோஜாக்களும் சாமந்தியும் இன்னும் பலவகைப் பூக்களும் வரிசையாக பூத்து இருந்தன.அவற்றை ரசித்துக்கொண்டே வந்தாள் சக்தி. பூக்களை ரசிக்கும், பூவை விட மென்மையான தன் காதலியை ரசித்தான் சித்து. இருவரும் அருகருகே உறசிக்கொள்ளாமல் நடந்தனர். யாரும் இல்லாத ஒரு தனி இடத்தை அடைந்தனர்.
“உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா சகி”, அவள் காதோரம் மென்மையாக கேட்டான்.
“இந்த இடமும் புடிச்சிருக்கு அதை விட உங்கள ரொம்ப புடிச்சிருக்கு சித்து. உங்கள நேர்ல பாக்கறப்ப சொல்லனும்னு நினச்சேன். நீங்க அன்னிக்கு உங்க ஷர்ட்ல போட்டிருந்த டிசைன் மூலமா உங்க மனசு புரிஞ்சுது. ஆரம்பத்துல, இது காதலா இல்லையான்னு கொஞ்சம் குழப்பம் இருந்துச்சு, பட் நாளாக ஆக இது காதல் தான்னு புரிஞ்சுகிட்டேன்.. கொஞ்சம் கொஞ்சமா நீங்க என் மனசு பூரா நிரஞ்சுடீங்க. இப்போ நீங்க இல்லாம ஒரு நாள் போறது கூட எனக்கு ரொம்ப கஷ்டம்.. அம் அட்டிக்டெட் டு யூ சித்.” மனதில் உள்ள அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
அவள் பேசுவதையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் முகம் பலவித உணர்சிகளை வெளிபடுத்தியது. அவள் சொல்லி முடித்ததும் , அவளை அருகில் இழுத்தான். அவள் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தி , “நீ ஐ லவ் யு சொல்லி இருந்தா கூட இவ்வளவு சந்தோஷமா இருக்குமான்னு தெரியல , பட் அட்டிக்டெட்ன்னு நீ சொன்னது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சகி. இப்போவே உன்னை என்னோட என் வீட்டுக்கு கூட்டிட்டு போய்டனும்ன்னு தோணுது.”

அவள் வெட்கத்தில் அவன் முகம் பார்க்க முடியாமல் அவன் தோளில் சாய்ந்தாள். அவன் உள்ளம் அவளின் வருகையை வேகமாகத் துடித்து வரவேற்றது. அவளை ஒரு கையால் சுற்றி வளைத்துக் கண்ணை மூடி அந்த ரம்யமான நேரத்தை அனுபவித்தான். அந்த நொடி அவன் வாழ்வின் பொன்னான நேரம் ஆனது.

error: Content is protected !!