KYA – 13

KYA – 13

                                    காலம் யாவும் அன்பே 13

 

மெழுகுவர்த்தியின் ஒளியின் இறைவனைக் சரியாகக் காண முடியவில்லை. ஆகவே கீழே இறங்கிப் பார்க்க நினைத்தான் வாகீசன். வேறு வழி இருக்கிறதா என்று அனைவரும் அந்த இடத்தைச் சுற்றித் தேட ஒன்றும் அகப்படவில்லை.

அந்தக் கிணற்றுக்குள் இறங்க ஒன்று மேலிருந்து குதிக்க வேண்டும் அல்லது பெரிய ஏணி வேண்டும். இரண்டாவதே மேல் என்று நினைத்து அனைவரும் வெளியே வந்தனர்.

அவர்களின் வீட்டிற்கு வந்தபிறகு பஞ்சாயத்துத் தலைவரிடம் பேசி , ஒரு பெரிய ஏணிக்கு ஏற்பாடு செய்தான். உதவிக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூரியவரைத் தடுத்து, தாங்களே எடுத்துச் செல்வதாகக் கூறிவிட்டான்.

அதை அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க, ஆகாஷ் , “ஏன் ஹெட், நமக்கும் ஈசியா இருக்குமே ! அவங்களயே ஹெல்ப் பண்ண சொல்லியிருக்கலாமே!” புரியாமல் கேட்க,

“ இல்ல நாமளே எடுத்துட்டுப் போகலாம்” வாகீ முடித்துவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

சிறிது நேரத்தில் ஆட்களும் வந்து ஏணியை வைத்துவிட்டுப் போக,அதன் உயரத்தைப் பார்த்து ‘இத எப்படி நாம கொண்டு போறது’ மலைத்து விட்டான் ஆகாஷ்.

சமையல் செய்துவிட்டு அந்த பெண்மணி சென்றதும், வாகீசன் குளித்துவிட்டு தனது இரவு உடையில் சாப்பாட்டு மேசைக்கு வந்தான்.

அதற்குள் அங்கே அனைவரும் அமர்ந்திருக்க, ஆகாஷ்  இயலின் தட்டில் விடாப்படியாக இன்னொரு சப்பாத்தியை  வைத்துக் கொண்டிருந்தான்.

“வேண்டாம் ஆகாஷ். எனக்கு சப்பாத்தி பிடிக்காது.” தனது தட்டை ஒரு பக்கமாகத் தூகிக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, அவளது கையைப் பிடித்து “ நோ வே! இது உடம்புக்கு நல்லது. யு ஆர் சோ லீன்” தட்டில் வைத்து விடும் முயற்சியில் இருந்தான் ஆகாஷ்.

அவளது கையை அவன் அழுத்தமாகப் பிடித்திருப்பது ஏனோ வாகீக்கு எரிச்சலைக் கிளப்பியது.

இயலின் எதிர்ப்புறம் வந்து அமர்ந்து அவளை இமைக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வை என்ன பாஷை பேசியதோ!? ஆகாஷுடன் கத்திக் கொண்டிருந்தவள் , அமைதியாகித் தட்டைக் கீழே வைத்தாள்.

ஆகாஷும் அவனது பிடியை விட்டான், அவள் தட்டில் சப்பாத்தியை வைத்த பிறகே!

தன் இருக்கையில் அமர்ந்த ஆகாஷ்  அப்போது தான் வாகீசனைப் பார்த்தான்.

“ ஹலோ ஹெட்! எப்பவுமே எப்படி நீட்டா ஸ்மார்ட்டா இருக்கீங்க?” எப்போதும் போல ஆரம்பிக்க,

அவனைக் கண்டுகொள்ளாமல் தன் தட்டில் உணவை வைத்துக் கொண்டிருந்தான் வாகீசன்.

“டேய்! டெய்லி இதையே கேப்பியா?” வந்தனா சப்பாத்தியை பிய்த்துக் கொண்டே அவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.

“  சப்பாத்தி டெய்லி பண்ண சொல்லி நான் கேட்கல பேபி, அந்த ஆண்ட்டி பண்ணிட்டு போய்ட்டாங்க” அவளைப் பார்த்து கண்ணடிக்க,

“ யப்பா மொக்க ராசா போதும் !” வாயை மூடுமாறு சைகை செய்ய,

“போதும் னா விட்டுடு, ஏற்கனவே இந்தியன் ஃபுட் நெறைய சாப்ட்டு வெய்ட் போட ஆரம்பிச்சுட்ட..அப்புறம் உன்ன எப்படி தூக்கறது” பற்கள் தெரிய சிரித்தான்.

அவனுக்கு அழகு காட்டிவிட்டு , மீண்டும் உணவை உண்ண ஆரம்பித்தாள்.

அங்கு நடந்தவைக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல இயலும் வாகீயும் தட்டில் கவனம் செலுத்த,

அவர்களைக் கண்ட வந்தனா, ‘என்ன’ என்று கண்ஜாடையில் ஆகாஷிடம் கேட்க, அவன் தனக்குத் தெரியாது என்று உதட்டைப் பிதுக்கினான்.

ஏதோ புரிந்தது போல வந்தனா லேசாக சிரித்த படி தலை அசைக்க, ஆகாஷும் எழுந்து வா என்று சைகை செய்ய, இருவரும் ஏற்கனவே உண்டுவிட்டதால் எழுந்து சென்றனர்.

இயலும் வாகீசனும் மட்டும் இருக்க, இயல் அவனை மறந்தும் நிமிர்ந்து பார்க்காமல் , பிடிக்காத அந்தச் சப்பாத்தியை கஷ்டப் பட்டு முழுங்கிக் கொண்டிருந்தாள். வெகு நேரமாக அவளை கவனித்தவன் ,

“ பிடிக்கலானா ஏன் கஷ்டப்படற..?” குரல் சற்று கணமாக ஒலித்தாலும் அதில் அக்கறை இருக்கவே செய்தது.

நிமிர்ந்து அவனைப் பார்க்க,

“வேண்டாம்னா போர்ஸ் பண்ணி சாப்டாத..விடு வேற எதாவது சாப்பிடு”  கை கழுவ எழுந்து சென்றான்.

அவன் இருந்த வரை ஏதோ விடாப்படியாக அமர்ந்து சாப்பிட்டவள், அவன் தலை மறைந்ததும் தானும் அதைக் குப்பையில் போட்டுவிட்டு கை கழுவி வந்தாள்.

டேபிளை சுத்தம் செய்துவிட்டு தன் அறைக்குச் செல்லத் திரும்பியவள் முன் திடீரென வந்து நின்றான் வாகீசன்.

சட்டென பயந்து வேகமாகத் துடிக்கும் தன இதயத்தை கை வைத்து அடக்கினாள்.

“சாப்டலையா..” தான் சொல்லி அவள் செய்யவில்லையே என்ற ஆதங்கம்.

“வேற எதுவும் கிச்சன் ல இல்ல..அதான் காலைல எதாவது சாப்பிட்டுக்கலாமே ….”தைரியமாக ஆரம்பித்தவள் அவன் விடாப்படியான பார்வையால் இறுதியில் குரல் உள்ளே சென்றது .

“அப்படியா .. வா பார்க்கலாம்” அவளையும் அழைத்துக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தவன், அங்கிருந்த அலமாரிகளில் தேட, அவர்கள் ஊருக்கு வந்த போது கொண்டு வந்த இரண்டு மேகி பாக்கெட்டுகள் மட்டுமே இருப்பதைக் கண்டான்.

“இந்தா இப்போதிக்கு இதை சாப்பிடு, நாளைலேந்து சப்பாத்தி செஞ்சா உனக்கு மட்டும் வேற எதாவது செய்ய சொல்லலாம்.” என்றவன் அவளது கையில் அந்தப் பொட்டலத்தைத் திணிக்க,

இயல் மனத்திற்குள் அவன் அக்கரையில் கரைந்தாலும், எங்கே வேறு எதாவது சமைத்துச் சாப்பிட சொல்லிவிடுவானோ என்ற பயம் அகன்றதில்  நிம்மதியே வந்தது.

“ என்ன நின்னுட்டே இருக்க, மேகியாவது செய்யத் தெரியுமா.. இல்ல அதுவும் தெரியாதா?” கையைக் கட்டிக் கொண்டு கிச்சன் மேடை மீது சாய்ந்து நின்று கேட்க,

இயலுக்கு இந்த உலகமே நின்றது போல இருந்தது. தன் இதயத்துடிப்பை காதருகில் உணர்ந்தாள்.

‘ஐயோ நான் ஏமாத்திட்டேன்னு நினைப்பாரோ! ஹிட்லர் மாதிரி நிக்க வெச்சு கேள்வி கேட்காரே! இவருக்கு இந்த விஷயம் எப்படி தெரிஞ்சுது…ஆகாஷ் .. வந்தானா .. யாராச்சும் வந்து என்னை காப்பாத்துங்க…!” ஊமையாய்க் கத்திக் கொண்டிருந்தாள்.

அவள் திரு திரு வென விழிப்பதைப் பார்க்க அவனுக்கு உள்ளே சிரிப்பாக இருந்தது. இருந்தாலும் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டே பேசினான்.

“எனக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கிறியா?” தலையை ஒரு பக்கம் சாய்த்து அவன் பேச,

‘ ஆகாஷ் சொன்ன மாதிரி எப்படி இருந்தாலு ஸ்மார்ட் தான் இவரு.. ஹீரோ ..’ ஒரு பக்கம் இயல் மனது அவனை ரசித்துக் கொண்டு வேறு இருந்தது.

“ம்ம்..” தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

“ நேத்து நைட் நீ வந்தனா கிட்ட தோட்டத்துல பேசிட்டு இருந்த, அப்போ நான் மாடில  தான் இருந்தேன்.சோ எல்லாமே கேட்டேன்!” அவளைப் போலவே அவனும் தலையை ஆட்டி சொல்ல,

இயலுக்கு அங்கிருந்து எங்காவது காணாமல் போய்விட மாட்டோமா என்றிருந்தது.

நேற்று தான் அவளைப் பற்றி, சிறு வயது முதல் , இந்த வேலைக்குக் கிளம்பி வரும் வரை நடந்த தன் வாழ்க்கை வரலாற்றை பொழுது போகாமல் வந்தனா கேட்க, அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

‘அத்தனையும் கேட்டானா!’ சுவரில் போய் முட்டிக் கொள்ளாமல் என்றிருந்தது இயலுக்கு.

“எல்லாமே கேட்டீங்களா..??!.” தெளிவு படுத்திக் கொள்ளக் கேட்டாள் வாகீயிடம்.

கண்ணை மூடி புருவத்தை உயர்த்தி ‘ஆம்’ என உறுதி படுத்தினான்.

உடனே தன் பக்கத்து நியாயத்தை பொரிந்து தள்ளினாள்.

“ நான் உங்க கிட்ட பொய் எல்லாம் சொல்லல.. நீங்க சமைக்கத் தெரியுமான்னு என்னை கேட்கவே இல்லையே! வந்ததும் முதல் வேலையா காபி போட்டு எடுத்துட்டு வர சொல்லிட்டீங்க.. எனக்கு என்ன செய்றதுன்னு தெரில , ஆகாஷ் தான் போட்டுக் குடுத்தான். அதுக்கப்பறம் நான் உங்களுக்குகாக காபி போட கத்துக்கிட்டேன். இங்க வந்து எனக்கு சமைக்க சொல்லுவீங்கன்னு நான் எதிர்ப்பாக்கல, அப்படி மட்டும் சொல்லியிருந்தா….” மூச்சு வாங்கிநின்றாள்.

“சொல்லியிருந்தா… நான் வயித்துல ஈரத்துணிய போட்டுட்டு உட்கந்திருக்கணும் இல்ல…” இரண்டடி முன்னே வந்து அவள் எதிரே நிற்க,

“ அப்படி சொல்லல, எதாவது நெட்ல பாத்தாவது சமச்சிருப்பேன்னு சொல்ல வந்தேன்” அவனது அருகாமை சிறு படபடப்பை எப்போதும் போல ஏற்படுத்த, சட்டென இப்படிச் சொல்லிவிட்டாள்.

அவளின் பதிலில் வாய்விட்டு சிரித்தான் வாகீசன்.

அவனது இப்படிப்பட்ட சிரிப்பை இப்போது தான் முதல் முறை காண்கிறாள். அவனுமே இப்படி சிரித்து பல வருடங்கள் ஆகியிருந்தது.

அதை சாக்காக வைத்து அங்கிருந்து அவள் ஓடப் பார்க்க, அவளை ஒரு கையால் பிடித்து நிறுத்தினான்.

“ஆ!” என கத்தியவளை  சட்டென விட்டான்.

‘இப்போது மட்டும் வலிக்கும் ஆனா ஆகாஷ் பிடிச்சா வலிக்காதா’ மனதில் தோன்ற

“சாரி!” என்றவன் தன் அத்துமீறலை உணர்ந்தான்.

“நீ மொதல்ல சாப்பிடு.. நத்திங் டு வொரி, உன்ன சமையல் வேலைக்கு வர சொல்லல, உனக்கு தெரியாதுன்னு நீ அன்னைக்கே சொல்லிருக்கலாம்னு நெனச்சேன் அவ்ளோ தான். கேரி ஆன்..”

கொதித்த மனதை அடக்க , தன் அறைக்குச் செல்லாமல் தோட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

தன் கையை உடனே அவன் விட்டதும் , பின்பு சாரி கேட்டதும் இயலுக்கும்  ஏதோ சங்கடமாகவே இருந்தது. இருந்தாலும் அவன் சொன்னதால் ஒரு மேகியை வெண்ணீரில் போட்டு சமைத்து உண்ட பிறகு தான் அங்கிருந்து வெளியே வந்தாள்.

அவனது கொஞ்ச நேர அருகாமை ஏதோ அவளுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவன் அவளது தவறை சுட்டிக் காட்டி கேள்வி கேட்டாலும் அதில் ஒரு உரிமையை  உணர்ந்தாள். அதைக் கூட அவளால் தாங்கிக் கொள்ள முடிந்தது,

ஆனால் அவன் சட்டென விலகியதில் ஏற்பட்ட வலி பாரமாய் அவளுள் அழுத்தியது. ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன.. ஏன் அவசரம் ’ பாட்டு வேறு ஞாபகம் வர, தன் அறைக்குச் சென்றவள் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.

மறுபக்கம் வாகீசனோ, ‘ டீன் ஏஜ் பையன் மாதிரி நான் ஏன் நடந்துக்கறேன்’ என தன்னைத் தானே திட்டிக் கொண்டிருந்தான். ஆகாஷ் பற்றி நன்றாகவே தெரிந்தும் அவன் இயலுடன் சகஜமாக இருப்பது மட்டும் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே! என்பதே அவனது நெருடல்.

‘இயலும் சின்னப் பொண்ணு, தனக்குச் சமமாக வேலை செய்யறவங்க கிட்ட சகஜமா இருக்கறது ஒரு தப்பில்ல,  நம்ம கிட்ட ஹெட் ங்கற ஒரு ஒதுக்கம் இருக்கத் தான் செய்யும் .’ தெளிவாகவே யோசித்தான்.

‘ஆனா அதுக்காக நானும் அவங்களுக்குச் சமமா சின்ன பிள்ள மாதிரியா நடக்க முடியும்’ தன் மனதுடனே வாதிட, அடுத்த கேள்வி உதித்தது.

‘நாம ஏன் இயல் கிட்ட சகஜமா இருக்க நினைக்கணும்!?’ இந்தக் கேள்வி எழுந்ததும் அதைப் பற்றி யோசிக்கக் கூட அவன் மனம் தயங்கியது. அதைத் தாண்டி தன்னை வெளியே கொண்டுவந்தவன்,

‘ மொதல்ல வொர்க் தான் முக்கியம்’ தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு அங்கிருந்த ஏணியைப் பார்த்தான்.

‘எதுக்கு காலைல வரைக்கும் வெய்ட் பண்ணனும். இப்போவே அந்தக் கோயிலிக்குள்ள போய் பார்த்தால் என்ன!’ இயலிடமிருந்து நினைப்பை திசை திருப்ப இப்படி யோசித்து அந்த ஏணியை அங்கிருந்த ஒரு சைக்கிளில் கட்டினான்.

ஆகாஷ் வந்தனா நான்றாக உறங்கிக் கொண்டிருக்க, சத்தம் கேட்டு இயல் மட்டும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள்.

‘இப்போவே அங்க போகப் போறாரா! ஏன்?” என நினைத்தவள் அடுத்த நொடி யோசிக்காமல் தானும் கிளம்பினாள். நல்ல வேளையாக இன்னும் இரவு உடைக்கு மாறாமல் சுடிதாரில் இருந்தாள்.

கதவைத் திறந்து கொண்டு அவள் வெளியே வர, வாகீ அவளைப் பார்த்து

“நீ எங்க கிளம்பற?” தன் மேல் இருந்த எரிச்சல் அவளிடம் திரும்ப,

“உங்க கூட நானும் வரேன்..” கூலாகவே அவளும் சொல்ல

“வேண்டாம் இது நைட் நேரம்” அவளைத் தடுத்தான்.

“ எனக்கு ஒன்னும் பயம் இல்ல, அதான் கூட நீங்க வரீங்களே!” விடாப்படியாக அவனுடன் நிற்க,

அவளின் அந்த கடைசி வார்த்தை அவனை மறுத்துப் பேச விடவில்லை.

‘தமாத்தூண்டு என்னையே பேச விடாம பண்ணுது’

சரி யென அவளையும் அழைத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்தான்.

“ நீ கொஞ்சம் இந்த தீப்பந்தம் , தீப்பெட்டி இதெல்லாம் எடுத்துக்கோ,அப்பறம் அங்க ஒரு பெரிய கயிறு பார்த்தேன், அதுவும் எடுத்துக்கோ” நேராக சம்மதிக்காமல் இவ்வாறு சொல்ல, சிரித்துக் கொண்டே அவன் சொன்னவற்றை எடுத்துக் கொண்டு அவனுடன் கிளம்பினாள்.

திருவாசகம்:

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

பொருள்:
குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே !
ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே !
பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே !
இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய,
என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !

error: Content is protected !!