KYA-14
KYA-14
காலம் யாவும் அன்பே 14
அந்த முன்னிரவு நேரம் ஊரே அடங்கி இருந்தது. சின்ன சப்தம் கூட இல்லை. எங்கோ மூலைக் கடையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் கூட நின்றிருந்தது.
ஏணி யை சைக்கிளின் நடுவில் படுக்க வைத்து நன்றாகக் கட்டினான் வாகீசன். அவனது ஜீப்பில் எடுத்து செல்லலாம் , இருந்தாலும் சத்தம் கேட்கும் என்பதால் அதைத் தவிர்த்தான்.
தீப்பந்தத்திற்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு , அவன் கூறிய கயிற்றையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் இயல். அத்தோடு அவளது கையில் ஒரு சிறிய பையும் இருந்தது. அதை சந்தேகத்தோடு பார்த்தான் வாகீ.
“ என்ன இருக்கு அதுல?” மெதுவாக அவளிடம் கேட்க,
“ஓ! இந்தப் பையா .. அதுல ஒரு சின்ன விளக்கு அப்பறம் கற்பூரம் இருக்கு. எங்க ஊர் சிவன் கோயிலுக்குப் போனா எப்போதும் விளக்குப் போடாம வரமாட்டேன். அதான் இங்க எதுவுமே இல்லையே, விளக்காவது எத்தலாம்னு நினச்சு கொண்டு வந்தேன்.” அவனிடம் நன்றாகவே பேச ஆரம்பித்திருந்தாள்.
அதை அவனும் கவனிக்கவே செய்தான்.
“சரி போலாம்” என்றவன் சைக்கிளை தள்ளிக் கொண்டே நடந்தான். அவளும் சைக்கிளின் மறுபுறம் அவனுக்குச் சமமாக நடந்து வந்தாள்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் தங்களின் எண்ணங்களோடு நடந்து கொண்டிருந்தனர்.
அந்த இரவு வேளையும் , அவனுடன் தனியே நடந்து செல்லும் பாதையும் இயலுக்கு மிகவும் பிடித்திருந்தது.
வாகீசனும் இப்படி நடு சாமத்தில் ஒரு பெண்ணுடன் , அந்தக் காலம் போல சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அவளோடு சேர்ந்து நடப்பான் என்று கற்பனை கூட செய்ததில்லை.
அதிலும் ஏனோ இயலுடன் இப்படி நடந்து செல்லவது மனதிற்கு இதமளித்தது.
ஆனால் இதே போன்று ஏற்கனவே ஒரு முறை இருவரும் நடந்து சென்றது போல இருவருக்கும் தோன்றிக் கொண்டே இருந்தது.
இருவரின் காலடி ஓசை மட்டும் வெகு நேரமாகப் பேசிக் கொண்டு வந்தது. அதைக் கலைத்து முதலில் வாய் திறந்தாள் இயல்.
“ அந்தக் கோவில்ல என்ன இருக்கும்னு நினைக்கறீங்க?” பக்கவாட்டில் அவனைப் பார்த்துக் கேட்க,
“ என்ன வேணாலும் இருக்கலாம், என்னால இன்னும் சரியா சொல்ல முடியல..” அவனும் சற்று யோசித்து சொல்ல,
“ நீங்க அன்னிக்கி சொன்ன மாதிரி, காலம் கடந்து போற விஷயம் எதாவது இருந்தா …” அவளுக்கு அன்று சொன்னதிலிருந்து அதில் ஆர்வம் அதிகமாகி, கூகிள் தேடலில் தேடித் தேடிப் படித்திருந்தாள்.
“ கண்டிப்பா நான் காலத்தை கடந்து போய்ப் பார்ப்பேன். திரும்பி வர முடியாத நிலையில் இருந்தாலும் பரவாயில்ல. நீயும் வரியா?!” நக்கலாக அவளைப் பார்த்துக் கேட்க,
அவன் கிண்டல் செய்கிறான் என்று தெரிந்தும் ,
“ நான் வர ரெடி. வேற காலத்துலயும் போய் நீங்க பேசாம இருந்தா அங்க எப்படி பொழப்பு ஓடறது. உங்களுக்கு ஹெல்ப்க்கு ஆள் வேணுமே!” அதே நக்கலாகத் திருப்பிக் கூறிவிட்டு, உடனே அவன் கோபித்துக் கொள்வானோ என உதட்டைக் கடித்துக் கொண்டு அவனைப் பார்க்க,
அவனோ நடப்பதை நிறுத்தி விட்டு அவளையே பார்த்தான்.
உடனே அவள் மன்னிப்புக் கேட்டாள்.
“ சாரி! நான் வந்தனா ஆகாஷ் கிட்ட பேசற மாதிரி உங்ககிட்டையும் பேசிட்டேன். அப்படி பேசியிருக்கக் கூடாது..!” அவள் வருந்த,
“ ம்ம் பரவால்ல நல்லாவே பேசற…அப்போ நீயும் என்கூட வர ரெடி ..?? ” மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.
‘இவரு உண்மையிலேயே கேட்கராரோ…’ “நிஜமாவே நீங்க சொல்ற மாதிரி வேற காலத்துக்குப் போகப் போறோமா?” உள்ளுக்குள் சிறு பயம் தோன்றவே செய்தது இயலுக்கு.
அவளின் பயமறிந்து, “ நான் தான் சொன்னேனே! என்ன நடக்கும்னு எனக்கே ஐடியா இல்ல, போய் பார்க்கலாம்” தைரியமாகப் பேசினான்.
சிறிது நேரம் மீண்டும் மௌனம் தொடர, இயல் எதையோ யோசித்துக் கொண்டே வந்தாள்.
அந்த இரவு நேரத்தின் நிலவொளியில் அவளின் முகம் அவனைக் கவரவே செய்தது. இருப்பினும் அதை வெளிக்காட்டாமல் நடந்துகொண்டது அவனது மனது.
“எனக்கு இன்னொரு சந்தேகம்.. கேட்கலாமா?” அவனது சிந்தனையைக் கலைத்தாள்.
“ம்ம் கேளு” ‘இவ மண்டைக்குள்ள என்ன ஓடுதோ’என நினைத்தவாறே கேட்க,
“ இந்தக் கோயில் பத்தி இந்தக் காலத்துல வேணா தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனா இது மண்ணுக்குள்ள போய் ஒரு இருநூறு வருஷம் இருக்கும்னு ஆகாஷ் சொன்னானே, அப்போ இதப் பத்தி எதுவும் குறிப்பு அல்லது புத்தகம், இது மாதிரி எதுவுமே கிடைக்கலையா?”அவளது கேள்வி அவனுக்கு மலைப்பாகத் தான் இருந்தது.
வேறு வழிகளில் அவன் இடத்தைப் பற்றி யோசித்த போதே இந்தக் கேள்வி அவனுக்குள் வந்தது. இவளும் அதே போல யோசிப்பது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
அதை ஒதுக்கிவிட்டு அவளின் கேள்விக்கு பதில் அளித்தான்.
“ அதைப் பத்தி இந்த ஊருக்கு வருவதற்கு முன்னமே விசாரிச்சுட்டேன். ‘மகாவில்வம்’ அப்டீன்னு ஒரு புத்தகம் இருந்துது. ஒரு சித்தர் மூலமா சொல்லப் பட்ட விஷயங்களை அதில் தொகுத்து எழுதியிருந்தாங்க. அதுல இந்தக் கோவிலப் பத்தி இருந்ததாக நான் விசாரிச்சத்துல தெரிஞ்சுக்கிட்டேன்.” சைக்கிளைத் தள்ளிக் கொண்டே அவளின் கேள்விக்கு பதில் அளித்தான்.
“இப்போ அந்தப் புத்தகம் எங்கே?!” ஆர்வமாகக் கேட்டாள்.
“ ப்ப்ச்..அது இப்போ இல்ல. அழிச்சுட்டாங்க.”
“யாரு?” – இயல்
“ அதை அழிக்க நிறைய பேர் இருந்தாங்க. முகலாயர்கள் , ஆங்கிலேயர்கள், நம்ம நாட்டுலையே சில வெள்ளைக் காரங்களுக்கு சலாம் போட்ட கைக்கூலிங்க.. இவங்களுக்கு பயந்துகிட்டு அந்தப் புத்தகத்தை எழுதினவரே அதை அழிச்சுட்டாரு.” அவனது வருத்தம் வெளிப்படக் கூறினான்.
“என்ன … ?! இத்தன பேர் எதுக்காக அந்தப் புத்தகத்தை அழிக்கனும்? அப்படி என்ன ரகசியம் இருக்கு?” அவளுக்கு மண்டையே வெடித்து விடும் போல ஆனது.
“ அது தான் தெரியல, சில பேர் தேவ ரகசியம் அப்டீங்கறாங்க.. சிலர் இங்க ஏதோ பொக்கிஷம் இருக்குன்னு சொன்னாங்க.. ஆனா அதை எல்லாம் கட்டுக் கதைன்னு நம்ப வச்சு இந்த விஷயத்தை ஒண்ணுமில்லாம பண்ணிட்டாங்க.. இதெல்லாமே ஒரு புரளி அப்படீன்னு அந்தக் கதைய முடிச்சுட்டாங்க”. இதைக் கேட்டு அவள் எப்படி ரியாக்ட் செய்கிறாள் என்று பார்த்தான்.
அவளோ முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு நடந்தாள்.
“ஹே! என்ன ஆச்சு !” வாகீசன் நடப்பதை நிறுத்தி விட்டுக் கேட்க,
“ பின்ன என்ன தல, இப்படி ஒரு சஸ்பென்ஸ் நாவல சீரியஸா படிக்கறப்ப கடைசில கட்டுக்கதையா மாத்திட்டீங்க” சிறு உரிமையுடன் அவள் கேட்க,
அவன் வாய்விட்டு பற்கள் தெரிய அழகாச் சிரித்தான்.
“ ரொம்ப புக்ஸ் படிப்ப போலிருக்கே!”
“ஆமா , புக்ஸ் இல்லனா நான் பைத்தியம் ஆயிடுவேன். அப்படி ஒரு அடிக்டட்” அவளும் அவனுடன் சேர்ந்து புன்னகைத்தாள்.
“ சரி அது என்ன ‘தல’ ன்னு சொன்ன?” சரியாக பாயிண்டைப் பிடித்துக் கேட்டான்.கண்ணைக் குறுக்கி அவளைப் பார்க்க,
அத்தனை நேரம் புன்னகைத்தவள் முகம் சட்டென மாறியது. ‘ஐயையோ கவனிச்சுட்டாரே..உளறிட்டியே இயல்..’ தலையில் கைவைத்துக் கொண்டாள்.
“சாரி, ஹெட் அ தான் தல நு தமிழ்ல சொன்னேன்” நாக்கைக் கடித்துக் கொண்டே சொன்னாள்.
“ சரியான வாயாடியா இருப்ப போலிருக்கே.. இத்தனை நாள் கம்முனு இருந்த..” சற்று குற்றம் சாற்றும் தோரணையில் சொல்ல,
அவளுக்கு தவறு செய்துவிட்ட உணர்வு வந்தது. உடனே முகம் வாட,
“ ஹே! என்ன ஆச்சு, எனக்கு எப்பவுமே ஒரிஜினலா இருக்கறது தான் பிடிக்கும், மத்தவங்களுக்காக நம்ம சுயத்த மாத்திக்கக் கூடாது.புரியுதா?” பற்கள் தெரியாமல் லேசாகச் சிரித்து அவளிடம் சொல்ல,
அவனது மனம் எத்தனை அழாகானது அவனைப் போலவே என்று எண்ணியவள், அவனுக்குச் சரியென தலையாட்டினாள்.
இருவரும் பேசிக் கொண்டே அந்தக் கோயிலை அடைந்தனர்.
நிலாவின் வெளிச்சம் லேசாக அந்த இடத்தை ஒளிரச் செய்ய , கையில் இருந்த தீப் பந்தத்தை ஏற்றினாள் இயல்.
அதற்குள் ஏணியை சைக்கிளில் இருந்து எடுத்தவன், தன் தோள்களில் அதைச் சுமந்து கொண்டு கோவிலை நோக்கி நடந்தான்.
“நீ என் பின்னாடியே வா” என முன்னே நடந்தான்.
அவளும் அவனுக்கு ஒளி தெரியுமாறு பந்தத்தை தூக்கிப் பிடித்து நடந்தாள்.
கருவறையை அடைந்தவர்கள் , அந்த சிறு பாதாளப் பாதையின் முன் நின்றனர்.இயலை முதலில் இறங்கச் சொன்னான். பின்னர் ஏணியை இறக்கியவன் , தானும் உள்ளே இறங்கினான். இயல் இப்போது முன்னே செல்ல, லாவகமாக அந்த குறுகிய பாதையில் ஏணியை நுழைத்து எடுத்துச் சென்றான் வாகீசன்.
சிறிதும் பயமின்றி இயல் முன்னே சென்றாள். வாகீசன் தன்னுடன் இருக்கிறான் என்ற தைரியம் அவளுக்குள் ஊன்றிப் போய் இருந்தது. அது எந்த மாதிரி உணர்வு என்று அவளுக்கு விளங்கவே இல்லை.
அந்தப் படிகளின் கடைசியில் நின்றனர்.
வாகீசன் மெல்ல அதன் திட்டில் நின்று கொண்டு , ஏணியை மட்டும் உள்ளே செலுத்தினான். ஏணி தரையைத் தொட்டது.
“ ஏணி உயரம் கம்மியா இருக்குமோன்னு நினச்சேன். நல்ல வேளை சரியா இருக்கு, நீ அந்த பந்தத்தை இந்த கல்லில் சொருகி வை” என்றான்.
அவளும் அதே போலச் செய்ய,
வாகீ இன்னும் இரண்டு பந்தங்களை எடுத்துக் கொண்டு அதில் ஒன்றை மட்டும் கொளுத்தி இன்னொன்றை தன் முதுகுப் பக்கம் சட்டையில் திணித்துக் கொண்டான்.
முதலில் தான் ஒரு பதத்தைப் படித்த படி, ஏணியில் இறங்கினான்.
கீழே இறங்கியவன் , ஏணியைப் பிடித்துக் கொள்ள இயலும் இறங்கினாள். அப்போதே அந்த ஏணியின் படிகள் சற்று உடையும் நிலையில் இருப்பது தெரிந்தது. இருந்தாலும் பார்த்து கால் வைத்து இறங்கிவிட்டார்கள்.
அங்கே தரைப் பகுதி சுற்றிலும் இருக்க, நடுவில் லிங்கம் நீரில் வீற்றிருந்தது.
அந்தத் தண்ணீர் சத்தம் முன்னை விட இப்போது அதிகமாகக் கேட்டது. கொதிக்கும் வெந்நீர் போல தள தள வென பொங்கிக் கொண்டிருந்தது.
இன்னொரு பந்தத்தை கொளுத்தியவன் இரண்டையும் எதிரெதிரே உள்ள கல் சுவரில் பதித்து வைத்தான்.
இருவரும் அந்த இடத்தைக் காண, ஒரு குகை போல இருந்தது.
சிவலிங்கம் அத்தனை கம்பீரமாய் அந்த ஒளியில் காட்சியளித்தது. அந்த இருட்டு குகைக்குள் இப்படி ஒரு பிரமாண்ட லிங்கம் வீற்றிருக்க, மயான அமைதியும் சேர்ந்து யாராய் இருந்தாலும் உள்ளே ஒரு பயத்தை உண்டு செய்யும்.
‘கொதிக்கும் நீரில் சிவலிங்கம்’ இப்படி ஒரு காட்சியை உலகில் எவரும் கண்டிருக்க முடியாது, இயலும் வாகீசனும் சேர்ந்து அந்தக் காட்சியை சிறிது நேரம் மோன நிலைக்குச் சென்று அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இருவருக்கும் இதயத் துடிப்பு அதிகமாகி, அந்த லிங்கம் தங்களை அதற்குள் ஈர்ப்பது போன்ற உணர்வு .
நின்ற இடத்திலேயே இயலுக்கு கால்கள் துவளுவது போல ஆனது.
இயலின் உடல் லேசாக தள்ளாடுவது போலத் தோன்ற, உடனே அவள் அருகில் சென்று அவளை தோளோடு இருக்கப் பற்றி நிறுத்தினான்.
“ஒண்ணுமில்ல, இங்க காந்த சக்தி அதிகமா இருக்கு. அதுனால தான் இப்படி ஆகுது. பயப்படாத” என அவளைத் தேற்ற,
இருவரும் முதலில் அந்த லிங்கத்தை வணங்கினார்கள். பின்னர் இயல் தான் கொண்டு வந்திருந்த சிறு மன்விளக்கில் எண்ணெய் ஊற்றி , திரியிட்டு தீபம் ஏற்றினாள்.
அதை அந்த சிவலிங்கத்தின் முன்பு வைத்து வணங்க, சற்று அவளுக்கு அந்த நடுக்கம் பழகிப் போனது. அந்தத் தரையில் சூடம் ஏற்றி அந்த லிங்கத்தை மனதார வேண்டினாள்.
அதே நேரம் வாகீசனோ அந்த நீரை தொட்டுப் பார்க்க எண்ணினான்.
கீழே மண்டியிட்டு அமர்ந்து , அந்த கொதிக்கும் நீரில் கைவைக்க, அத்தனை நேரம் ஆராவாரம் செய்து கொண்டிருந்த நீர் இப்போது சட்டென சமநிலைக்கு வந்தது. கடல் அலைப் போல சத்தம் செய்து கொண்டிருந்தது இப்போது அமைதியடைந்தது.
சட்டென கையை எடுத்தவன், இயலைப் பார்க்க, அவள் ஓடி வந்து அவன் அருகில் நின்று கொண்டாள்.
“என்ன இது? நீங்க தொட்டதும், தண்ணீர் கொதிப்பு அடங்கிப் போய்டுச்சே!” என அவனைப் பார்க்க,
“நீயும் விளக்கு வெச்சதுனால இப்படி ஆகிருக்கலாம்ல…!”
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் குழம்பினர். ஆனால் அந்த இரண்டு செய்கைகளுமே அந்த நீரின் அடக்கத்திற்கு காரணம்!
இயலுக்கு அங்கு நடக்கும் விசித்திரங்களைக் காண ஒரு புறம் பயம் இருந்தாலும், அதை நேரடியாக தான் உணர்கிறோம் என்பதில் சிறு துள்ளல் இருக்கவே செய்தது.
அவளைச் சற்று தள்ளி நிறுத்தியவன், மீண்டும் கீழே குனிந்து அந்த நீரைத் தொட்டான். இப்போது எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது.
உடனே தான் கொண்டுவந்திருந்த சிறு பாட்டிலில் அந்த நீரை சிறிது எடுத்துக் கொண்டான்.
சட்டென சிவலிங்கத்தின் மேல் ஏதோ நிழல் போலத் தெரிய அங்கிருந்து விலகினான். மேல நிமிர்ந்து பார்க்க, அங்கே எதுவும் இல்லை.
இப்போது அந்த நிழல் லிங்கத்தின் மேலும் இல்லை. ஒரு வேளை தனக்கு பிரம்மையோ என நினைத்தவன், இயலைக் கேட்க,
“ எனக்கும் அந்த நிழல் தெரிஞ்சுது” என்றாள்.
அடுத்து யோசிக்கும் முன்பு,
அந்த அமைதியான இடத்தில் இப்போது கழுகு கத்தும் சத்தம் கேட்டது. இயல் உடனே வாகீசனின் கையைப் பற்றிக் கொண்டாள்.
அவனும் அவளை அணைத்தபடி நின்றான். சத்தம் நின்றது.
இருவரும் நின்றிருந்த கோலம் அப்போது தான் உணர, சட்டென விலகினார்கள்.
“ஹ்ம்ம் ம்ம்..” என கனைத்துக் கொண்டவனுக்கு
அதற்கு மேல் அங்கிருப்பது சரியெனப் படவில்லை. அந்த குகையிலிருந்து வெளியேற நினைத்தான். முதலில் இயலை ஏணியில் ஏற்றி, அவளை ஏறச் சொல்ல, பின்னால் தானும் ஏறினான்.
வேகமாக ஏறினாள் இயல், ஏணியில் மேல் பகுதிக்கு வந்தவள் வேகமாக அடுத்த படியில் கால் வைக்க , அந்தப் படி உடைந்து அடுத்தடுத்த படிகள் சறுக்கி ஏணியின் நடுப் பகுதியில் ஏறிக் கொண்டிருந்த வாகீயின் மேல் சாய,
அவனும் இரண்டு படிகள் சறுக்க, அதற்குள் அவளது இடையை இறுக்கிப் பிடித்து தங்களை சமன் செய்து கொண்டான்.
திருவாசகம்:
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
பொருள்:
தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே !
ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே !
(என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே !
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே !