KYA -20

KYA -20

 காலம் யாவும் அன்பே 20

 

ஆகாஷ் அந்தப் பெரியவரைக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, “என்னைப் பத்தி அறிமுகம் இப்போது தேவை இல்லை. காலம் கனியும் போது தானாகவே தெறியும். உனது நண்பர்கள் இப்போது வரமாட்டார்கள். நீயும் கிளம்பிச் செல்.” சொன்னவர் மறு நொடி அங்கு நிற்க வில்லை.

‘இப்போது வரமாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? ஆகாஷுக்கு குழம்பமே மிஞ்சியது.

அதிக நேரம் நீரில் இருந்தால் மூச்சுத் திணறல் ஏற்படும், அவர்களிடம் அதற்கான ஆக்சிஜென் மாஸ்க் கூட இல்லையே என்று கவலைப் பட்டான்.

அவர்களோ, அந்த நீரைத் தாண்டி, வேறு காலத்திற்குச் சென்றது இவர்கள் அறியாத ஒன்று.

ஆம்! இப்போது அவர்கள் நீருக்குள் சென்றிருந்தாலும் , அந்த மாயக் கதவினுள் நுழைந்ததால் பல நூறு ஆண்டுகள் கடந்து அவர்களின் பழைய வாழ்விற்கு சென்றுவிட்டனர்.

அவர்களது அன்றாட வாழ்வியலை அங்கே கண்டு வியந்தனர். இருவரும் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறோம் என்று வியக்க, இயல் மேல் தனக்கு இப்படி ஒரு காதலா என நெகிழ்ந்தான் வாகீசன்.

வர்மாவும் பாகிரதியும் காதலிலும் அன்னியோன்யத்திலும் திளைத்திருந்தனர்.

ஒரு மனைவியை கணவன் இப்படியெல்லாம் கூட தாங்க முடியுமா என்பதற்கு விடை வர்மாவிற்கு மட்டுமே தெரியும்.

பாகிரதியை ஒவ்வொரு முறையும் ரசித்து, அவளின் எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் மதிப்புக் கொடுத்தான். அதே போல ரதியும், கணவன் மீது அளவிட முடியாத காதலும், அவனின் பணிகளுக்கு உறுதுணையாகவும் , அவனின் புதுமைகளை நாள் தோறும் ரசித்து அவன் வாழ்வை இன்பமயமாக்கிக் கொண்டிருந்தாள்.

அன்று அதிகாலையிலேயே மனைவியைக் கொஞ்சிக் கொஞ்சி எழுப்பினான். இரவு முழுதும் காதலில் களைத்து, அசந்து உறங்கும் அவளைச் சீண்ட,

அந்தக் கள்வனின் சீண்டலில் உறக்கத்திலும் வெட்கப் புன்னைகை சிந்தினாள்.அது மேலும் அவனைக் கவர,

தன்  தோள் மேல் படுத்து உறங்கும் அவளை இழுத்து மார்பில் கிடத்திக் கொண்டான். அந்த இடம் இன்னும் அவளுக்கு வசதியாக இருக்க, அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டு அவனுக்கும் இதமளித்து மீண்டும் உறங்கினாள்.

அவளை எழுப்பியே ஆகவேண்டும் என்று கலைந்திருந்த அவளது ஆடைகளின் வழியாகத் தெரியும் அந்த மஞ்சள் நிற இடையை லேசாகத் தன் விரல் தொட்டுத் தீண்ட, கூச்சத்தில் விதிர்த்து எழுந்தாள்.

“அத்தான்.. என்ன இது!” அவனது வெற்றுமார்பில் வலிக்காமல் அடிக்க,

“என் மனைவியை எழுப்பும் தந்திரம்” அவனும் எழுந்து அமர்ந்து அவளது கன்னம் தீண்ட,

“எதற்கு இத்தனை சீக்கிரம் எழுப்பினீர்கள்! இன்னும் கோழி கூவும் நேரம் கூட ஆகவில்லையே!” அவிழ்ந்திருந்த தன் நீண்ட கூந்தலை கொண்டையாக போட்டுக்கொண்டே கேட்க,

“இன்று நானும் என் நண்பன் சேனாவும் ஒரு புது வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டும். அதை நீ தான் ஆரம்பித்துத் தர வேண்டும்!” அவளது கையைப் பற்றிக் கொண்டு முத்தமிட,

அவனது தலையை கோதி, “சரி வாங்கத்தான் ”என்றாள் வாஞ்சையாக.

“ முதலில் குளித்துவிட்டு பூஜையறைக்கு வா” என்றவன், அவளோடு சேர்ந்து சென்றான்.

இந்திரவர்மனும் அவனது நண்பன் அஷ்டசேனாவும் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள். இருவரும் பல துறைகளில் வல்லுனர்களாக இருந்தனர்.

சிற்பக் கலை, வானியல் சாஸ்த்திரம் இரண்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்தனர். எதனையும் கூர்ந்து ஆராயும் தெளிவு அவர்களிடம் உண்டு. அதனால் பல ஊர்களில் கோயில் மூலவர் சிலைகள் செய்யவும் , அதனை சாஸ்திரப்படி எங்கு வைக்கவேண்டும், கோபுரக் கலசம் எங்கு அமைந்தால், விண்ணிலிருந்து வரும் கண்ணுக்குத் தெறியாத சக்திகளை அது ஈர்க்கும் போன்ற விவரங்களை அறிய இவர்களையே நாடினர்.

இன்றும் அதே போல் ஒரு சிவன் கோவில் கட்ட இடம் பார்த்து, எங்கு எதை செய்ய வேண்டும் என்பதைக் கேட்க, இவர்களை அழைத்திருந்தனர்.

அதிகாலையிலேயே எழுந்து பூஜை செய்துவிட்டுத் தான் அவன் வேலையை ஆரம்பிப்பான்.

பாகிரதி குளித்துவிட்டு அழகான மஞ்சள் நிறப் பட்டுடுத்தி, சில நகைகளும் போட்டு அம்சமாக வந்து நின்றாள்.எப்போதும் அவள் இப்படி இருப்பதைத் தான் அவன் விரும்புவான்.

அவள் வருவதற்குள் இவனும் கிணற்றடியில் குளித்துமுடித்து சந்தன திரவியம் தடவி, நெற்றியில் விபூதிப் பட்டையுடன் வந்து நின்றான்.

“ ரதி! இன்று ஒரு சிவன் கோயில் அமைக்க திசை பார்க்கப் போகிறோம், அதற்காக பூஜை செய்யப் போகிறேன்.” என்றவன், பூஜை செய்ய  ஒரு ஸ்படிக லிங்கத்தை வைத்திருந்தான்.

அவளும் கணவனின் பணி வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, பூஜை செய்ய உதவினாள்.

கடைசியாக பூஜை முடிந்ததும் அவன் தலையசைக்க, அந்த சிறிய ஸ்படிக லிங்கத்தை ஒரு பட்டுத் துணியில் சுற்றி அவனிடம் கொடுத்தாள்.

இது தான் அவர்களது வழக்கம். அவன் கோயில் பணிக்காக எப்போது சென்றாலும், அவள் கையால் அந்த லிங்கத்தை எடுத்துக் கொடுக்க, அவன் கூடவே எடுத்துச் செல்வான்.

எப்போதும் அவனுக்கு அது நல்வழி காட்டும்.

நன்றாக விடிந்து விட, இந்திரவர்மன் தன் மனைவி கையால் சிற்றுண்டி உண்டு  அவளுக்கும் ஊட்டி விட்டு மகிழ்ச்சியாகக் கிளம்பினான்.

மற்றவர்கள் தன் மனைவியை தன் முன் நின்று பேசவே அனுமதிக்காத அந்தக் காலத்தில் கூட, அவன் அவளுக்கு சமஉரிமை கொடுத்து மதித்தான்.

வாசலில் குரல் கேட்க,

“ உள்ளே வாருங்கள் அண்ணா!” என்று அழைத்தாள் பாகிரதி.

“என்னம்மா நலமா! இந்திரன் கிளம்பிவிட்டானா?” என்று அவர்கள் வீட்டு திண்ணையிலேயே அமர்ந்தான் அஷ்டசேனா.

“ வந்துவிட்டேன் நண்பா!” என வர்மா உள்ளிருந்து வர, அதற்குள் சேனாவிற்கு குடிக்க நீர் கொடுத்தாள் ரதி.

பின் இருவரும் கிளம்ப, அன்றைய தங்களின் வேலையைப் பற்றி பேசிக்கொண்டே நடந்தனர். காட்டிற்குள் குறுக்குவழி இருக்க, சீக்கிரம் செல்லும் மார்க்கமாகத் தெரிந்தது. அந்த வழியில் சென்று கொண்டிருக்க, வர்மாவிற்கு ஒரு எண்ணம் உதித்தது.

“சேனா, இதே போல இந்த உலகின் மற்ற பகுதிகளுக்கும் செல்ல குறுக்கு வழி அல்லது ஒரு சுரங்கப் பாதை அமைத்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!” நண்பனின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு நடந்தான்.

“ம்ம்.. அதற்கு மாய வித்தை தான் கற்கவேண்டும். இந்த உலகம் எவ்வளவு பெரியது! ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குச் செல்லவது சாதாரண விஷயமா?” அலட்ச்சியமாகக் கூற,

“ஏன் முடியாது! இந்த உலகம் என்னும் கோளை விட்டு நிலாவிற்குக் கூட செல்ல முடியும் என்று நாம் படித்திருக்கிறோமே!” கற்றவற்றை அவனுக்கு நினைவூட்டினான் வர்மா.

“உண்மை தான். ஆனால் அதற்கு வழி காட்ட யார் இருக்கிறார்?” சிரித்துக்கொண்டே சொன்னான். இப்படி பேசிக்கொண்டே வந்தவர்கள்,

அந்த ஊருக்குள் சென்று கோயில் பணிக்காக தங்களை அழைத்தவர்களை சென்று பார்க்க,  ஊருக்கு மையத்தில் கோவிலுக்காக ஒதுக்கிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.

வானியல் சாஸ்த்திரம் அறிந்தவனான வர்மா, சூரியன் உதிக்கும் , மறையும் திசை , துருவ நட்சத்திரம் தோன்றும் இடம் என அனைத்தையும் கணித்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சதுரம் வரைந்து அங்கே நின்றான்.

“இந்த இடத்தில் மூலவர் இருக்க வேண்டும் என்று சொல்ல, மற்றவர்களும் அந்த இடத்தை சுற்றிலும் முதலில் மஞ்சள் சந்தனம் தடவிய பெரிய கற்களைக் கொண்டு வந்து அடையாளத்திற்கு வைத்தனர். அப்போது யாரோ தன்னை மறைமுகமாகப் பார்ப்பதாக உணர்ந்தான் வர்மா.

சுற்றிலும் பார்க்க, சட்டென மரத்தின் பின்னால் ஒளிந்தது போல் தோன்றியது.

அங்கு சென்று பார்க்க நினைத்தவன் , சேனா விற்கு ஜாடை காட்டி விட்டு அங்கிருந்து சென்றான்.

சேனா மற்ற உப தெய்வங்கள் இருக்கவேண்டிய இடத்தைக் குறித்துக் கொடுத்து, கலசம் , வாயில் கோபுரம் போன்றவை எங்கே அமைய வேண்டும் என அனைத்தையும் சொல்லிவிட்டு, அதை அவர்களுக்கு ஒரு பெரிய பாறையில் மாதிரிக்காக வரித்தும் கொடுத்தான்.

அந்த மரத்தின் பின்னே சென்று பார்த்த வர்மா, யாரும் இல்லாது போகவே ஒரு வேளை பிரம்மையோ என்று நினைத்துத் திரும்பினான்.

அவர்கள் வந்த வேலை முடிய அங்கிருந்து கிளம்பினார்கள். மீண்டும் அந்தக் காட்டு வழியே சென்றனர். மதியத்திற்கு மேல் ஆகிவிட, ரதி கொடுத்தனுப்பிய உணவு மூட்டையை காலி செய்ய முடிவு செய்து , நிழலாக ஒரு இடம் பார்த்து அமர்ந்தனர்.

எப்போதும் வெளியூர் சென்றால், ரதி அவனுக்கு கையோடு உணவையும் கொடுத்தனுப்பி விடுவாள். உணவைப் பிரித்ததும் இருவரும் உண்ண ஆரம்பிக்க, எங்கிருந்தோ ஒரு கழுகு வந்து அவர்களின் அருகே அமர்ந்தது.

இருவரும் ஒரு நொடி திகைக்க, அது அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

உடனே கீழே கிடந்த ஒரு சருகு இலையை எடுத்து அதில் அதற்கும் சிறு உணவை வைத்தான் வர்மா.

அதைத் தொடாமல் மீண்டும் இருவரையும் உற்றுப் பார்த்தது, பின்பு ஏனோ வர்மாவை மட்டும் பார்க்க,

உடனே அவன் வைத்த அந்த சிறு உணவை உன்ன ஆரம்பித்தது.

இவர்களும் அதனோடு சேர்ந்து உணவு உண்டு எழ,  அவர்களையே வட்டமிட்டபடி கூடவே பறந்து வந்தது. இருவருக்கும் அதன் நடவடிக்கை சந்தேகத்தைக் கொடுக்க அமைதியாகவே வந்தனர்.

சட்டென ஒரு பாம்பு அவர்களின் காலின் அருகே ஊர்ந்து வர, இவர்களோ அதைக் கவனிக்காமல் மேலே வந்த கழுகைப் பார்க்க,

அது வேகமாக இவர்களை நோக்கி கீழே பறந்து வந்து, இமைக்கும் நேரத்தில் அவர்கள் காலின் கீழே இருந்தப் பாம்பைக் கொத்திச் சென்றது. செல்லும்போதும் வர்மாவையே பார்த்துக் கொண்டு பறந்து சென்றது.

இருவரும் ஸ்தம்பித்து நின்று விட்டனர்.

“நம்மைக் காப்பாற்றத் தான் அது சுற்றி வந்ததா?” சேனா கேட்க,

“இருக்கலாம். எனக்கு என்னவோ இந்தக் கழுகு தான் என்னை கோவிலில் நோட்டம் விட்டதோ என்று தோன்றுகிறது சேனா! ஆனால் நம்மிடம் அதற்கு என்ன வேலை?” அவனால் யூகிக்க முடியவில்லை.

காட்டை விட்டு வெளியேறி தங்கள் ஊருக்கு வந்த பிறகும் அதே சிந்தனை தான். வீட்டிற்கு வந்தவன், முதல் வேலையாக தன் மனைவியை அழைத்து நடந்த அனைத்தையும் சொல்ல, பாகிரதிக்கு உயிரே நின்று விட்டது.

“அத்தான். என்ன சொல்கிறீர்கள்! இந்நேரம் அந்தப் பாம்பு உங்களைத் தீண்டியிருந்தால்..! ஈஸ்வரா..என்னால் கற்பனை கூட  செய்ய முடியவில்லை. அந்த ஈசன் தான் உங்களுடன் இருந்து காப்பாற்றியிருக்கிறார்.” அவனைத் தலை கை கால் என அங்குலம் அங்குலமாகத் தொட்டுப் பார்த்து, ஏதும் ஆகவில்லை என ஆறுதல் அடைந்தாள்.

“எனக்கு ஒன்றுமில்லை ரதி. அந்தக் கழுகு தான் காப்பாற்றியது.” என்று சொன்னவன் தன் இடையில் கட்டியிருந்த பையை அப்போது தான் கழட்டி வைத்தான்.

அதில் காலையில் கொண்டு சென்ற ஸ்படிக லிங்கம் இருப்பதை உணர்ந்தவன், உடனே அதை பூஜை அறைக்குஎடுத்துச் சென்று பத்திரமாக வைத்தான்.

அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது. அந்தக் கழுகு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த போது அதன் பார்வை இந்தப் பை மேல் தான் படிந்திருந்தது என்பதை புரிந்துகொண்டான்.

“அதற்கு எப்படியோ இதில் லிங்கம் இருப்பது தெரிந்திருக்கிறது. அதனால் தான் என் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்தது ரதி. ஒருவேளை நீ கொடுத்த உணவை உண்ட பின் நன்றிக்காகக் கூட அது என்னை ஆபத்திலிருந்து காப்பாற்ற வந்திருக்கலாம். எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.” எதையோ கண்டுபிடித்தவன் போல தன் ரதியிடம் சொன்னான்.

“சரி அத்தான். அப்படியே சிவலிங்கம் இருப்பது தெரிந்தாலும் ஒரு கழுகு  எதற்காக சுற்ற வேண்டும்?” தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.

“அதற்கு என்னால் ஏதோ காரியம் ஆகவேண்டும். அது எனக்குப் புரிகிறது, நிச்சயம் அது என்னைத் தேடி மீண்டும் வரும்.”

வர்மா தினமும் காத்திருந்தான்.

வானியல் பற்றி ஆராய்ச்சி செய்ய அவனது தோட்டத்தில் இருக்கும் ஒரு பகுதியில் ஒரு குடிசை போட்டு அவனும் சேனாவும் தங்களின் கண்டுபிடிப்புகளை ஓலையில் எழுதி வைத்திருப்பார்கள். அந்த இடம் அதற்கென்றே ஒதுக்கி வைத்திருந்தான். சில நாட்கள் இரவு கூட அங்கே தங்கி விடுவான்.

அவர்களது ஆராய்ச்சியே இன்னொரு உலகம் இருக்கிறதா என்பதைக் கண்டவறிவது தான்.

வானியல் சாஸ்த்திரத்தின் படி சில நட்சத்திரங்களும் கோள்களும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சேரும் நாள் , இரண்டு உலகங்கள் இருந்தால் அதன்  ஈர்ப்புவிசை ஒன்றோடு ஒன்று ஈர்க்க அவை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது இரண்டு உலகமும் சுற்றிக் கொண்டே இருப்பதால், ஒரு சில நொடிகள் மட்டும் அதைக் காணாலம்  என்ற வரை கண்டு பிடித்து வைத்திருந்தார்கள்.

எண்ணற்ற நட்சத்திரங்களோடு இன்னொரு புள்ளி போல் சில நொடிகளே தெரியும் இன்னொரு உலகத்தைக் கண்டுபிடிக்கத் தான் அவனது ஆராய்ச்சியே!

‘அந்தக் கோள்கள் இந்த குறிப்பிட்ட கோணத்தில் சந்திக்க நமக்கு இன்னும்  எத்தனை ஜென்மங்கள் வேண்டுமோ’ என்று சில நேரத்தில் சேனா அலுத்துக்கொள்வதுண்டு.

அதுவும் உண்மை தான். அப்படி ஒரு கோணம் இது வரை வானத்தில் நிகழ்ந்ததில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் கண்டுபிடித்து விடமாட்டோமா என்பது தான் வர்மாவின் கனவு!

ஒரு நாள் இரவு ஆராய்ச்சிக் கூடத்திலேயே  தங்குவதாக ரதியிடம்  சொல்லிவிட்டு சென்றவன் , பாதி இரவிற்கு மேல்  வேலையில் கவனம் இல்லாமல் போகவே வீட்டிற்கு கிளம்ப நினைத்தான். சேனா மட்டும் அங்கேயே உறங்கிவிட , இவன் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

சில நிமிடத்திலேயே வீட்டை அடைந்தவன், முகம் கழுவி வர கொல்லைபுறம் சென்றான். இருட்டில் கிணற்றின் அருகே செல்ல, அந்தக் கிணற்றுக் கட்டையின் மேல் கண்கள் பளபளக்க அந்தக் கழுகு அமர்ந்து அவனுக்காகக் காத்திருந்தது.

திருவாசகம் :

பூவார் சென்னி மன்னன்எம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளங் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய்
ஆட்பட் டீர்வந் தொருப்படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!