மயங்காதே மனமே 20

வீடே அன்று அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அபி அன்று ஹாஸ்பிடலில் இருந்து வரும் நாள். மாடியிலிருந்த அபியின் ரூம் கீழ்தளத்திற்கு தற்காலிகமாக இடமாற்றப் பட்டிருந்தது.

அபியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தாலும், பேன்டேஜ் எதுவும் அகற்றப்பட்டிருக்கவில்லை. கீதாஞ்சலி மிகவும் வேண்டிக் கேட்டதன் பேரிலேயே சீஃப் டாக்டர் வீட்டிற்குப் போக சம்மதித்திருந்தார்

ஒவ்வொரு நாளும் ஃபிஸியோதெரப்பிஸ்ட் வீட்டிற்கு வந்து பயிற்சி அளிப்பதாக ஏற்பாடாகி இருந்தது. விலா எலும்புகள் நல்ல முறையில் சீராகிக் கொண்டு வருவதாலேயே அத்தனை சுலபத்தில் வீட்டுக்கு வர அனுமதி கிடைத்திருந்தது.

இரண்டு வார ஹாஸ்பிடல் வாசத்திற்குப் பிறகு அன்று வீட்டிற்கு வருகிறான் அபி. நாராயணனும், ஈஷ்வரனும் ஹாஸ்பிடலுக்கு அபியை அழைத்து வரப் போயிருந்தார்கள்.

அந்த black Audi தன் எஜமானனின் வருகைக்கு முன்னரே தயாராகி வந்து விட்டது. அபியின் விருப்பு, வெறுப்புகளை ஓரளவிற்குப் புரிந்து கொண்ட கீதாஞ்சலி, அந்தக் காரை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. புதிதாக வேறு ஒன்று வாங்கலாம் என்று நாராயணன் சொன்ன போது கூட மறுத்து விட்டாள்.

சரியாகப் பத்து மணிக்கு அந்த black Audi வீட்டிற்கு முன் வந்து நின்றது. வெற்றியும், ஈஷ்வரனுமாகச் சேர்ந்து அபியை சக்கர நாற்காலியில் உட்கார வைத்தார்கள். சிரித்த முகமாக முன்னே வந்த அன்னலக்ஷ்மி தன் பேரனுக்கு ஆரத்தி எடுத்தார். புடவைத் தலைப்பைச் சுருட்டி வாயில் வைத்து விம்மிய சீமாவை, கீதாஞ்சலியின் ஒரு பார்வை அடக்கியது

சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு போன வெற்றி அதை ஹாலில் நிறுத்தி இருந்தான். அபியின் கண்கள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தன. அந்த சக்கர நாற்காலியிலேயே கண்களை மூடி சாய்ந்து உட்கார்ந்தான். மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதற்கு மேலும் பொறுக்க முடியாத சீமா,

அபி…!” என்று கூவியபடி மகனை அணைத்துக் கொண்டார். அத்தனை பேரின் கண்களும் கலங்கி இருந்தன. அமைதியாகப் பார்த்திருந்த கீதாஞ்சலி மெதுவாக மாடிப்படியேறினாள்

தன்னிச்சையாகக் கால்கள் மாடித் தோட்டத்தில் அவளைக் கொண்டு வந்து நிறுத்தின. நெஞ்சை யாரோ கத்தியால் கீறியது போல வலித்தது. அபியின் வலி, அவனின் கண்ணீர் அவளை என்னவோ செய்தன.

இதே தோட்டத்தில் தன்னை அணைத்தபடி அவன் கதைகள் பேசியது ஞாபகத்திற்கு வந்தது. ஆக்சிடென்ட் ஆன நாளிலிருந்து இன்று வரை அத்தனை உறுதியாக இருந்தவன் இன்று கண்ணீர் வடிக்கவும் அவள் மனம் ஊமையாக அழுதது

யாரோடு என்ன பேசுவதென்று தெரியாமல் அந்தத் தளத்தில் இருந்த அவர்களின் ரூமிற்குள் போய் கதவை அடைத்துக் கொண்டாள். கட்டிலில் கால்நீட்டி அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள். இந்த அமைதியும், தனிமையும் அவளுக்கு அப்போது தேவையாக இருந்தது.

அபியை கீழே ஏற்கனவே ஆயத்தப்படுத்தி இருந்த ரூமின் கட்டிலில் உட்கார வைத்திருந்தார்கள். குடும்பமே கூடி நின்று அவனோடு பேசி மகிழ்ந்தது. அபியின் கண்கள் ஒரு முறை அத்தனை பேரையும் வலம் வந்ததுதன் அஞ்சலி அங்கு இல்லையென்று அவன் கண்கள் கண்டு கொண்டாலும், யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.

அபி, நீ எதை நினைச்சும் கவலைப் படாதப்பா. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிரும்னு சொல்லுவாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் பழையபடி திரும்பிரும். அதுவா திரும்புதோ இல்லையோ? உம் பொண்டாட்டி திருப்பிடுவா.” சொல்லிவிட்டுச் சத்தமாகச் சிரித்தார் சீமா. சிரிக்கும் அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தான் அபி.

அட ஆமாப்பா! ஹாஸ்பிடல்ல இருந்து முதல் முதலா வீட்டுக்கு வர்றா, நாங்கெல்லாம் ஓன்னு அழறோம். இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்பிடி ஒப்பாரி வைக்குறீங்கன்னு என்னை ஒரு அதட்டு அதட்டினா பாருநான் ஆடிப் போயிட்டேன்.” சிரித்தபடியே மருமகளை மகனிடம் மாட்டிவிட்டார் சீமா. இருந்தாலும் அந்தப் புகாரில் பெருமையே விஞ்சி நின்றது.

பின்ன, நீ பண்ணின காரியத்துக்கு உன்னைப் பாராட்டுவாங்களா? அதுவே சின்னப் பொண்ணு. மனசொடைஞ்சு போய் வந்து நின்னா, பெரியவங்க நாம தான் அணைச்சு ஆறுதல் சொல்லணும். அதை விட்டுட்டு நீ ஒப்பாரி வைச்சாஅந்தப் பொண்ணுக்கு எரிச்சல் வராதா?” தன் பங்கிற்கு இப்போதும் மகளைச் சாடினார் அன்னலக்ஷ்மி.

அதுவும் சரிதான்.” சொல்லிய படியே அம்மாவும், மகளும் சமையலைப் பார்க்கப் போய் விட்டார்கள். நாராயணன் கொஞ்ச நேரம் பிஸினஸ் பற்றி அபியிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போய் விட்டார். ரஞ்சனியும், ஈஷ்வரனும் மட்டும் தான் எஞ்சி இருந்தார்கள்.

அண்ணா.” வாஞ்சையுடன் அழைத்த தங்கையைத் திரும்பிப் பார்த்தான் அபிமன்யு.

நீ ரொம்பவே லக்கிண்ணா.” ரஞ்சனியின் குரலில் கேள்வியாகப் பார்த்தான் அபி. கண்களில் சிரிப்பு இருந்தது.

இப்பிடி ஒரு சந்தர்ப்பத்துல எந்தப் பொண்ணா இருந்தாலும், எவ்வளவு தைரியசாலியா இருந்தாலும் உடைஞ்சு தான் போவாங்கண்ணா. ஆனா அண்ணி இருக்காங்க பாரு…” சொல்லிவிட்டுக் கண் கலங்கினாள் ரஞ்சனி. மனைவியின் தோள்களை லேசாக அணைத்தார் ஈஷ்வரன். கண்களைத் துடைத்துக் கொண்டவள் தொடர்ந்தாள்.

நீ பொழைப்பியா, இல்லையான்னு கூட எங்களுக்குத் தெரியாது. நீ இருந்த கோலத்தைப் பாத்தப்போ நாங்கெல்லாம் பாதி செத்துட்டோம். நாங்கெல்லாம் பட்ட பாட்டைப் பாத்துட்டு இவரு எங்களை யாரையும் ICU பக்கமே விடல்லை.” குறைப்பட்ட மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தார் ஈஷ்வரன்.

அது அப்பிடி இல்லைம்மா. பேஷன்ட்டை சுத்தி எப்பவும் பாசிட்டிவ்வான எண்ணங்கள் தான் இருக்கணும். அத்தை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினதை பாத்த உடனே எனக்கே அபி பொழைக்குமான்னு டவுட் வந்திருச்சு.” கணவனின் பேச்சில் புன்னகைத்தாள் ரஞ்சனி.

அம்மாவையும் குத்தம் சொல்ல முடியாதுங்க. பெத்தவங்க இல்லையா? அதான் அப்பிடி நடந்துக்கிட்டாங்க.”

ம்அதான் எல்லாரையும் பிடிச்சு வீட்டுக்கு அனுப்பிட்டேன் அபி. என்ன நடக்குமோன்னு எனக்கே பயமா இருக்கும் போது இவங்களை வெச்சு சமாளிக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க.” கேட்ட ஈஷ்வரனைப் பார்த்தபடியே இருந்தான் அபி.

உண்மைதான் அபி. நம்பிக்கையே இருக்கல்லை. ஹார்ட் பீட் வேற சட்டு சட்டுன்னு இறங்குது. என்ன பண்ணுறதுன்னு புரியாம சீஃபே கொஞ்சம் தடுமாறினாரு.” பெருமூச்சு விட்டார் ஈஷ்வரன்.

எனக்கு அப்போதான் கீதா ஞாபகம் வந்திச்சு. எங்க யாரோட குரல் உங்களை வந்து சேராமப் போனாலும், அந்தப் பொண்ணோட குரல் உங்களை கட்டாயமா வந்து சேரும்னு தோணிச்சு.” சற்று நிறுத்திய ஈஷ்வரன் வாய்விட்டுச் சிரித்தார்.

என்னங்கசொல்லிட்டுத்தான் சிரிங்களேன்.”

ரஞ்சி, அநியாயம் சொல்லக்கூடாது. உங்கண்ணா காதல் மன்னன் தான். அந்தப் பொண்ணு ரெண்டு தரம் தான் அபின்னு கூப்பிடுது, உடனே ஐயாவோட விரல் அசையுது. நான் ஆடிப் போயிட்டேன். இந்தப் பயலுக்கு எதுக்குப்பா மருந்து? அதான் இந்தப் பொண்ணு இருக்கேன்னு சீஃபே சிரிச்சாருன்னா பாரேன்.” ஈஷ்வரன் சொல்லவும் இப்போது ரஞ்சனியும் சேர்ந்து சிரித்தாள். அபியின் முகமும் லேசாகச் சிவந்தது.

அண்ணா, நாங்க எல்லாரும் வீட்டுக்கு வந்தாலும்என்ன ஆகுமோ? ஏது ஆகுமோங்கிற ஒரு படபடப்பிலேயே இருந்தோம். ஒரு ப்ராப்ளமும் இனி இல்லைன்னு இவர் சொன்னாலும் மனசு கிடந்து அடிச்சுக்கிட்டே இருந்துது. ஆனா அன்னைக்கு அண்ணி வீட்டுக்கு வந்தாங்க பாரு…” தங்கையின் பேச்சில் ஆச்சரியமாகப் பார்த்தான் அபி.

அப்ப புரிஞ்சுதுண்ணா, இது லேசுப்பட்ட பொண்ணில்லைன்னு. தனியா உக்காந்து அழுதாங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனா அத்தனை பேர் முன்னாடியும் நிமிந்து நின்னாங்க பாரு. நான் ஆடிப் போயிட்டேன்.” இப்போது அபியின் முகத்தில் பெருமை தோன்றியது.

அழுத அம்மாக்கு ஒரு அதட்டல். என்னோட அபி உயிரோடதான் இருக்காரு, எனக்கு அது போதும். எந்தக் கோலத்துல என்னோட அபி வந்தாலும் இந்த வீடு அதை ஏத்துக்கணும்னு ஒரே சத்தம். அப்பாக்கிட்ட போய், மாமா, தொழில்ல எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. அபி திரும்ப வரும்போது எல்லாம் ஒழுங்கா இருக்கணும்னு ஒரு ஆர்டர். அப்பதான் எனக்குப் புரிஞ்சுது. உம் பொண்டாட்டி உன்னை பழையபடி மாத்தாம விட மாட்டான்னு.” சொல்லிவிட்டுப் பொங்கிச் சிரித்தாள் ரஞ்சனி. அபியின் இதழ்களும் லேசாகக் கோணியபடி சிரித்தன.

                            _____________________________________________

காலைப் பொழுதின் உற்சாகத்தோடு பிஸ்கட் ஃபாக்டரியில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன். அவன் தாத்தா ஆரம்பித்த தொழில் அது. மகனிடம் கொடுக்கப் பிரியப்படாத மதுராந்தகன், தன் தொழிலைப் பேரனிடம் நம்பி ஒப்படைத்திருந்தார்

மற்றைய விஷயங்களில் எப்படி இருந்தாலும் தொழிலில் மித்ரன் அவன் தாத்தாவைக் கொண்டிருந்தான். பிஸ்கட் ஃபாக்டரி இன்று வரை நல்ல லாபத்தையே கொடுத்தது

மகனது காபினுக்குள் எந்தவித அறிவிப்பும் இன்றி வந்தமர்ந்தார் ராஜேந்திரன். முகத்தில் அத்தனை மலர்ச்சி தெரியவில்லை

குட் மார்னிங் டாட்.”

ம்குட் மார்னிங்.”

என்னாச்சு, ரொம்ப டல்லா இருக்கீங்க?” சன்னச் சிரிப்போடு கேட்டான் மித்ரன்.

மித்ராஇந்த நாராயணன் இருக்கானில்லை…” அவர் முகத்தில் பலத்த சிந்தனையின் சாயல் தெரிந்தது.

யாரைச் சொல்லுறீங்க? அபியோட அப்பாவையா?”

ம்அந்தப் பயல் தான்.”

ஏன்அவருக்கு என்ன ஆச்சு? அவர் மேலயும் லாரியை ஏத்திட்டீங்களா?” ஒற்றைப் புருவம் ஏற்றிக் கேட்டான் மகன். அந்தக் கேள்வியில் கேலியையும் தாண்டி ஒரு எரிச்சலே தெரிந்தது.

ம்ப்ச்நீ வேற மித்ரா. நேரங் காலம் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு.” அங்கலாய்த்த தந்தையை ஆச்சரியமாகப் பார்த்தான் மித்ரன்

ராஜேந்திரன் சுகவாசி. எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ரகம். ராஜேந்திரனுக்கும், அவர் மனைவிக்கும் அத்தனை ஒற்றுமை இருப்பது என்றால், அந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான். எத்தனை பெரிய பிரச்சினை வந்தாலும் தூசு போல தட்டிவிட்டுப் போய்விடுவார் மனிதர்.

வாட் இஸ் ஈட்டிங் யூ டாட்?” 

மித்ராஇந்த நாராயணன் ரெண்டு ரைஸ் மில்லை புதுசா வாங்கி இருக்கான் பா.” கொஞ்சம் கவலை தோய்ந்த குரலில் சொன்னார் ராஜேந்திரன்.

ஸோ…?”

ரொம்ப நாளைக்கு முன்னாடியே விலைக்கு வந்த மில்லை, இப்போ வாங்கி இருக்கான்னாஎனக்கு இது அவ்வளவு நல்லாப் படலை மித்ரா.”

எதுக்கு ஐடியாப் பண்ணுறார்னு உங்களுக்கு ஏதாவது தோணுதா டாட்?” மித்ரன் கேட்கவும், கழுத்தை லேசாகத் தடவிக் கொண்டார் ராஜேந்திரன்.

நம்ம கஸ்டமர்ஸை அவன் பக்கம் இழுக்க ட்ர்ரை பண்ணுற மாதிரி தெரியுது…” 

நம்ம கஸ்டமர்ஸ் இல்லை டாட், உங்க கஸ்டமர்ஸ்.” அந்தப் பதிலில் சட்டென்று மகனை நிமிர்ந்து பார்த்தார் அப்பா.

என்ன மித்ரா? இப்பிடிப் பேசுற?”

வேற எப்பிடிப் பேச? கொஞ்ச நஞ்ச டாச்சரா அவங்களைப் பண்ணி இருக்கோம். இருந்தாலும் அது எல்லாம் பிஸினஸ் சம்பந்தப்பட்டது. ஆனா நீங்க இப்போ என்ன பண்ணி வச்சிருக்கீங்க? அவரோட பையன் மேல லாரியை ஏத்திக் கொல்லப் பாத்தா சும்மா இருப்பாங்களா?”

என்ன பண்ணிக் கிழிச்சிடுவான் அவன்?” ஆவேசமாகக் கேட்ட தந்தையை நக்கலாகப் பார்த்துச் சிரித்தான் மித்ரன்.

அவர் பண்ணிக் கிழிச்சதுக்குத் தான் இத்தனை நேரமும் நீங்க வொர்ரி பண்ணினீங்க டாட்.”

என்ன மித்ரா? தேர்ட் பெர்ஸன் மாதிரி பேசுற?”

இந்த விஷயத்தைப் பொறுத்த வரைக்கும் நான் அப்பிடித்தான். அபியைப் பத்தி டோன்ட் கெயார் டாட். பட் இப்போ அங்க கீதாஞ்சலி இருக்கா. அந்தப் பொண்ணுக்கு எதிரா நான் ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்க மாட்டேன்.” ஆணித்தரமாகச் சொன்னான் மித்ரன்.

வாட்…? என்ன பேசுற மித்ரா நீ? உன் டேஸ்ட் ஏன் இப்பிடிப் போகுது? ஆஃப்டர் ஆல்…” தாறுமாறாக வார்த்தைகள் வந்து விழும் முன் தந்தையின் வாயை அடக்கினான் மித்ரன்.

டாட்…! போதும். இதுக்கு மேல எதுவும் பேச வேணாம் டாட்.” கையமர்த்தித் தடுத்த மகனை முறைத்துப் பார்த்த ராஜேந்திரன், அவன் இறங்கி வராமல் உறுதியாகப் பார்க்கவும் கோபத்தோடு வெளியேறினார். தோள்களை லேசாகக் குலுக்கிக் கொண்டான் மித்ரன்.

கோபமாக வெளியேறிப் போகும் ராஜேந்திரனைப் பார்த்த படியே உள்ளே நுழைந்தான் கதிர்.

என்ன சார்? உங்கப்பா ரொம்பக் கோபமா போறாப்பல இருக்கு?” அந்தக் குரலில் இருந்த கேலியை மித்ரனால் உணர முடிந்தது. ராஜேந்திரன் இருக்கும் இடத்திற்கு எப்போதும் கதிர் வரப் பிரியப்படுவதில்லை. அது மட்டுமன்றி, அவரைப் பற்றிப் பேசும் போது அவன் குரலில் தோன்றும் ஒரு இகழ்ச்சி பாவம் மித்ரனை இலேசாகக் கலவரப்படுத்தும்.

வழமை போலவே இன்றும் அந்தக் குரல் அவனைச் சீண்டிப் பார்த்தது. இருந்தாலும் கதிர் என்று வரும் போது தனக்குள் தோன்றும் இனம்புரியாத ஒரு அன்பு மித்ரனின் வாயைக் கட்டிப் போட்டது.

அதை விடு கதிர். அப்புறம், எப்பிடி இருக்கா உன்னோட வீரத் திருமகள்?” சொல்லிவிட்டு நாற்காலியில் வசதியாகச் சாய்ந்து கொண்டான்.

கீதாம்மாவைக் கேக்குறீங்களா?” சொல்லும் போதே கதிரின் முகம் மலர்ச்சியைக் காட்டியது.

எங்க ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க சார்.” 

என்னது?”

இல்லைசும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஒருத்தன்னு சொல்லுவாங்க. அந்தப் பொண்ணு தான் உண்டு, தன்னோட நர்சரி உண்டுன்னு இருந்திச்சு. நீங்க சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்டீங்களோன்னு…” முடிக்காமல் இழுத்தான் கதிர்.

ஹாஹா…” எப்போதும் போல இப்போதும் கதிரின் அந்தத் துடுக்குப் பேச்சை ரசித்துச் சிரித்தான் மித்ரன்.

உனக்கு வாய் ரொம்பவே நீண்டு போச்சு கதிர். முதலாளிகிட்ட பேசுறோம்ங்கிற பயம் கொஞ்சமாவது இருக்கா? உன்னைச் சொல்லிக் குத்தமில்லைப்பா, என்னைச் சொல்லணும். சீட்டைக் கிழிக்காம வச்சிருக்கேன் பாரு, அந்தக் கொழுப்பு உனக்கு.” மீண்டும் சிரித்தபடியே சொன்னான் மித்ரன்.

அடப்போங்க சார், இந்த மடம் இல்லைன்னா இன்னொரு சந்தை மடம். உழைக்க அஞ்சாதவனுக்கு எதுக்கு சார் பயம்? அதுவுமில்லாம இப்போ தங்கச்சி வேற சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டா. இந்த அண்ணனுக்கு தாராளமா சோறு போடுவா சார்.”

அட! அந்தத் தைரியத்துலதான் வாய் இப்போ இந்தக் கிழி கிழியுதா? ஆமா, கேக்கணும்னு நினைச்சேன். எப்பிடி இருக்குதாம் புது வேலை?” உண்மையான அக்கறையோடு கேட்டான் மித்ரன்.

நல்லாப் போகுதாம் சார்.” ஆரம்பித்த கதிர் பாதியில் நிறுத்திவிட்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போனான். எதையோ அவன் சொல்லத் தயங்குவது போல் தோன்றியது மித்ரனுக்கு.

சொல்லு கதிர்.”

சார்நாராயணன் சார் ரெண்டு ரைஸ் மில்லை புதுசா வாங்கி இருக்காராம், நீங்க கேள்விப் பட்டீங்களா?” கதிரின் கேள்வியில் புன்னகைத்தான் மித்ரன்.

சும்மா வாங்கல்லை கதிர், மருமகள் பேருல வாங்கி இருக்கார்.”

…! நம்ம கீதாம்மா பெயருல வாங்கி இருக்காரா?” அதைச் சொல்லும் போதே கதிரின் முகம் மகிழ்ச்சியைத் தத்தெடுத்துக் கொண்டது.

நம்ம கீதாம்மா இல்லை, உன்னோட கீதாம்மா.” தன்னைத் திருத்திய முதலாளியைக் கூர்மையாகப் பார்த்தான் கதிர்.

அப்போ அவங்க உங்களுக்கு யாரு சார்?” அந்தக் கேள்வி ஆயிரம் அர்த்தங்களுடன் தன் மீது வீசப்பட்டிருப்பதை உணர்ந்தான் மித்ரன். அவன் முகம் சிந்தனையைக் காட்டியது. அந்த எண்ணத்தை அப்புறப் படுத்தி விட்டு தன் வேலையைத் தொடரப் போனான்.

சார், நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை.” தன்னைப் பார்த்தபடியே நின்ற கதிரை ஆழ்ந்து பார்த்தான் மித்ரன்.

நான் என்ன சொல்லணும்னு நீ எதிர்பாக்குற கதிர்?”

உங்க மனசுல உள்ளதைச் சொல்லுங்க சார். உண்மையைச் சொல்லுங்க சார்.” தயவாக வந்த அந்தக் குரலுக்கு அடி பணிந்த மித்ரன், தனக்கு முன்னால் இருந்த லாப்டாப்பை மூடி வைத்தான். முகத்தில் லேசான வருத்தம் தெரிந்தது.

கதிர்இதையெல்லாம் நான் இதுவரைக்கும் யார் கிட்டயும் ஷெயார் பண்ணினது கிடையாது. ஆனா உன்னைப் பாக்குறப்போஎன்னமோ தெரியலைஏதோ ஒரு நெருக்கம். சில நேரங்கள்ல எனக்கே ஆச்சரியமா இருக்கும்.” இதை மித்ரன் சொல்லும் போது கதிரின் முகம் வேதனையில் கசங்கியது. தன்னுடைய உலகத்தில் இருந்த மித்ரன் அதைக் கவனிக்கவில்லை.

கதிர்பொண்ணுங்களைப் பத்தி அவ்வளவு நல்ல அபிப்பிராயம் எனக்கு இது வரைக்கும் இருந்ததில்லை. லைஃப்ல ஈசியாக் கிடைக்கிற பொருட்கள்ல அதுவும் ஒன்னு. தட்ஸ் இட்.” சொன்ன மித்ரன் நிறுத்திப் பின் தொடர்ந்தான்.

ஆனாஇந்தப் பொண்ணைப் பாத்தப்போ எல்லாம் தலைகீழா மாறிப் போச்சு. என்னையே நான் மாத்திக்கிட்டேன் கதிர். நீ கூட அதை உணந்திருப்ப. பட்…” பேப்பர் வெயிட்டை உருட்டியபடி பேச்சை நிறுத்தினான் மித்ரன்.

சொல்லுங்க சார்.”

அபிக்கும் அந்தப் பொண்ணுக்கும் கல்யாணம்னு கேள்விப்பட்டப்போ அவனை அடிச்சு நொறுக்கணும்னு தான் ஆத்திரம் வந்திச்சு. ஆனாஅந்த லவ் எனக்கானது இல்லைன்னு தெரிஞ்சப்போஎனக்கு சொல்லத் தெரியல்லை கதிர். ரொம்பவே வலிச்சுதுஅந்தப் பொண்ணை அவங்கிட்ட இருந்து பறிச்சு, அதே வலியை அவனுக்கும் குடுக்கணும்னு தான் அந்த நிமிஷம் தோணிச்சு. ஆனாஅதால யாருக்கு என்ன லாபம் சொல்லு?” தன் முதலாளியின் பேச்சில் மந்திரித்து விட்டது போல நின்றான் கதிர்.

எவ்வளவு லவ் அபி மேல இருந்திருந்தா, அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வைச்சு அப்பிடிப் பேசி இருப்பா? அந்தப் பயல் லக்கி கதிர். அவன் ரொம்பவே லக்கி.” மனது கனக்க வெளியேறப் போன கதிரைத் தடுத்தது மித்ரனின் குரல்.

ஏய் கதிர்! என்னாச்சு? நீ பாட்டுக்கு ஒன்னும் பேசாம போறே.” வெளியே போன கதிர் அங்கேயே நின்று திரும்பிப் பார்த்தான். அவன் கண்கள் லேசாகக் கலங்கி இருப்பது போல தோன்றியது மித்ரனுக்கு.

அபி சாரும், கீதாம்மாவும் நல்லதா ஒரு வாழ்க்கை வாழுவாங்க, அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை சார். ஆனா, மித்ரன் சாரோட வாழ்ந்திருந்தாலும் அதேயளவு சந்தோஷத்தை என்னோட மித்ரன் சார் கீதாம்மாக்கு குடுத்திருப்பாங்க. அதுலயும் இப்போ எனக்கு எந்த சந்தேகமும் இல்லை சார்.” சொல்லிவிட்டு சட்டென்று போய்விட்டான் கதிர். மித்ரனின் முகத்தில் நிறைவான ஒரு புன்னகை தோன்றியது.

                          ________________________________________________

இரவு உணவை முடித்துவிட்டு அத்தனை பேரும் அபி இருந்த ரூமில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அபிக்கு இன்னும் திரவ உணவுகளே அனுமதிக்கப் பட்டிருந்தது.

தூங்கும் நேரம் என்பதால்நெக் ப்ரேஸஸ் ஈஷ்வரன் கழட்டி விட்டிருந்தார். அன்று முழுவதும் சற்றுத் தூரத்திலேயே நின்றிருந்தாள் கீதாஞ்சலி. யாருக்கும் அது புரியாவிட்டாலும், அபிக்கு அவளின் ஒதுக்கம் நன்கு புரிந்தது

அன்றைய நாளின் கனம் எல்லோருக்கும் ஒரு சோர்வைக் கொடுத்திருக்க, தூக்கம் கண்ணைச் சொருகியது. ஒவ்வொருவராக பேச்சை முடித்துக்கொண்டு தங்கள் ரூமிற்குப் போனார்கள்

எஞ்சியிருந்த கீதாஞ்சலி அபியை அண்ணார்ந்து பார்த்தாள். அவளையே பார்த்திருந்தவன் லேசாகப் புன்னகைத்தான். நன்றாக இருந்த வலக்கரத்தை அவள் புறமாக நீட்ட, அருகே வந்து அந்தக் கரத்தைப் பற்றிக் கொண்டாள். தன்னருகே அவளை அமர்த்திக் கொண்டான் அபிமன்யு. பக்கத்திலிருந்த ஃபோனை எடுத்து, அதில் கடகடவென்று டைப் பண்ணினான்.

என்னாச்சு அஞ்சலி?” ஃபோனை அவள் புறமாகக் காட்ட, படித்தவள் லேசாகத் தலையை ஆட்டினாள்.

சொல்லமாட்டியா?” மீண்டும் டைப் பண்ணினான்.

ஒன்னுமில்லை அபி. உங்க ஃபாமிலியோட நீங்க டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தான் நான் கொஞ்சம் ஒதுங்கி நின்னேன்.”

அப்போ நீ யாருடா?” அவன் ஃபோனில் விழி பதித்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அபி…”

அத்தனை பேர் எம் பக்கத்துல இருந்தாலும் நீ இல்லைன்னா நான் தனி ஆள்தான் அம்மாடி.” அந்த வாக்கியத்தில் உருகிப் போனாள் கீதாஞ்சலி. அவன் பக்கத்தில் நெருங்கி அவனை மெதுவாக அணைத்துக் கொண்டாள். சற்று நேரம் அமைதியாக இருந்தவன் அவளின் தோளைத் தட்டினான்

என்ன அபி?” கேட்டவளுக்குக் கதவைச் சுட்டிக் காட்டினான். லேசாகத் திறந்திருந்த கதவில் சட்டென்று விலகியவள், எழுந்து போய் தாள் போட்டுவிட்டு, லைட்டையும் ஆஃப் பண்ணினாள்.

அபியின் ஃபோன் வெளிச்சம் மட்டுமே ரூமிற்குள் நிறைந்திருந்தது.

காலை நீட்டி கட்டிலில் உட்கார்ந்திருந்தவனுக்குதூங்குவதற்கு உதவியவள், அவன் அருகில் தானும் கால் நீட்டி அமர்ந்து கொண்டாள்

கோபம் போயிருச்சா?” படுத்தவாறே ஃபோனில் மீண்டும் டைப் பண்ணினான்.

கோபமா? எனக்கா? இல்லையே அபி.”

சம்மதம் கேக்காம தாலி கட்டினேனே, அந்தக் கோபம்.” டைப் பண்ணியவனின் கண்களில் குறும்பிருந்தது

அதுஅந்தக் கோபம் என்னைக்கும் தீராது அபி.” அவன் நைட் ட்ரெஸ்ஸின் காலரைத் திருகிய படி சொன்னாள் மனைவி.

அப்பிடியா? இப்பிடி அடிபட்டு ஒரு கிஸ்ஸுக்கு கூட வழியில்லாம கிடக்குறேனே. இப்போ கூட என்னை மன்னிக்கக் கூடாதா அஞ்சலி?” அவன் ஃபோன் சொன்ன சேதியில் வாய் விட்டுச் சிரித்தாள் கீதாஞ்சலி.

சரியான காரியவாதி அபி நீங்க.”

இல்லையே, என்னால தான் இப்போ ஒரு காரியமும் பண்ண முடியாதே.” ஃபோனின் திரையில் தெரிந்த பதிலில் அவனை அண்ணார்ந்து பார்த்தாள் கீதாஞ்சலி. அந்தக் கண்களில் அத்தனை தாபம் தெரிந்தது. அந்த பாவத்தில் விக்கித்துப் போனாள் மனைவி.

அபி…” 

கிஸ் மி பேபி.” அவனுக்குப் பதிலாக இப்போது அவன் ஃபோன் ரொமான்ஸ் பண்ணியது.

அபி…!”

கிவ் மி கிஸ்.” ஃபோனில் மீண்டும் அதே ஆணையே பிறந்தது. அதை மறுக்க முடியாமல் அந்த ஷேவ் பண்ணாத கன்னத்தில் மெதுவாக முத்தம் வைத்தாள். அவனுக்கு வலிக்குமோ என்று வேறு பயமாக இருந்தது.

அவ்வளவுதானா?” மீண்டும் ஃபோன் திரை ஒளிர்ந்தது.

ஐயாக்கு எதுக்கு இவ்வளவு அவசரம்? கொஞ்சம் பொறுமையா இருந்தா என்னவாம்?” அதிகாரமாகச் சொன்னாள் கீதாஞ்சலி.

முடியாது.” வில்லங்கமாகவே டைப் பண்ணினான் அபி.

முடியாதா? ரொம்ப வம்பு பண்ணினா அத்தையைக் கூப்பிட்டுச் சொல்லுவேன்.”

என்ன சொல்லுவே?” மீண்டும் கேள்வி வந்தது.

உங்க மகன் உடம்புக்கு முடியாம இருக்கறப்போ சமத்தாத் தூங்காம, வம்பு பண்ணுறார்னு சொல்லுவேன்.” சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சிரிக்காமல் சொன்னாள்.

எங்ககூப்பிடுடி உன்னோட அத்தையை.” விட்டேனா பார் என்று மீண்டும் டைப் பண்ணினான். கீதாஞ்சலி வேண்டுமென்றே குரலைச் சற்று உயர்த்தி,

அத்தை உங்க மகன்…” ஆரம்பித்தவளை முடிக்க விடாமல் இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். கீதாஞ்சலி நிறுத்தாமல் சிரிக்க, அபியின் உடலும் சிரிப்பில் குலுங்குவதை அவளால் உணர முடிந்தது.

டீ சொல்லுறீங்க இல்லை. ஞாபகம் வச்சுக்கிறேன். உடம்பு குணமானதும் என்னைடீ’ சொன்ன வாயில நல்லா ரெண்டு குடுக்குறேன். அப்போ தெரியும் உங்களுக்கு.” சொல்லிவிட்டு அவன் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

காத்திருக்கிறேன் கண்மணி.” என்றது ஃபோன்.

என்னதுபதில் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கு?” அவள் வாய்க்குள் முணுமுணுக்கவும், மீண்டும் டைப் பண்ணினான்.

நீதான் ரெண்டு என் வாயில குடுக்கப் போறதா சொன்னியே அஞ்சலி.”

ஐயோ அபி! உங்களோட பேச என்னால முடியாதுப்பா. நான் தூங்கப் போறேன்.” சொல்லிவிட்டு அவன் வலது கை வளைவிற்குள் சுகமாக உறங்கிப் போனாள் கீதாஞ்சலி

நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த அவள் ஸ்பரிசத்தில் அபியும் நிம்மதியாக உறங்கிப் போனான். கூடலில்லாத அந்தக் கூடலினால் அவர்கள் இருவர் முகத்திலும் அத்தனை அமைதி தெரிந்தது, இரவும் நகர்ந்தது.

 

error: Content is protected !!