KYA-21

காலம் யாவும் அன்பே 21

 

கழுகைக் கண்டதும் இதயம் பக் என்றானது வர்மாவிற்கு. அடுத்த நொடி தன்னை சுதாரித்துக் கொண்டு, அருகே சென்றான்.

அவனையே எதிர்ப்பார்த்து அது அமர்ந்திருப்பது தெரிந்தது. இரண்டு நிமிடம் அது அசையாமல் அவனைப் பார்த்து விட்டு, அங்கிருந்து மெதுவாகப் பறந்தது.

அது சென்ற திசையில் அவனும் பின் தொடர, அது அந்த ஊரின் எல்லைக்குச் சென்றது. அர்த்த ராத்திரியில் , ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலைகளில் இவன் மட்டும் நடந்து செல்ல , அந்தக் கழுகு ஓர் இடத்தில் நின்றது.

அது வந்தது சேர்ந்தது ஒரு வெட்டவெளியான இடம். ஓரமான இடத்தில் நான்கைந்து தென்னை ஓலைகளை வைத்து சிறு மறைவொன்றைக் கட்டியிருந்தது.

அதற்குள்ளே அந்தக் கழுகு செல்ல, வர்மாவும் உள்ளே சென்றான். அங்கே ஒரு வயதான முதியவர் படுத்திருந்தார்.

அவருக்கு உடல் நிலை சரியில்லையோ அதற்குத் தான் நம்மை இது அழைத்து வந்ததோ என நினைத்தவன் , அவரின் கையைப் பிடித்து நாடி பார்க்க, அவர் இறந்துவிட்டார் என்று தெரிந்தது.

உடனே அதற்கு வருத்தப்பட்டவன், அந்தக் கழுகைப் பார்க்க, அதுவும் கண்ணை மூடி மண்ணில் சாய்ந்தது.

‘அடடா! இதுவும் இறந்துவிட்டதே! இவருக்கும் அந்தக் கழுகுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்குமோ!’ என்று யோசிக்க, அடுத்த நொடி, அந்த முதியவர் உயிருடன் எழுந்தார்.

“இது கூடுவிட்டு கூடு பாயும் வித்தை!” என்று ஆச்சரியத்தில் சத்தமாகச் சொல்ல,

“ஆமாம்! இது அந்த வித்தை தான். உன்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே இந்த இறந்த  கழுகைப் பயன்படுத்திக் கொண்டேன்.” பதமாசனத்தில் அமர்ந்து கொண்டு சொல்ல,

“என்னைத் தேடினீர்களா! எதற்காக? முதலில் நீங்கள் யார்?” வர்மா கேள்விகளை அடுக்க,

“ என் பெயர் பரஞ்சோதி சித்தன். உன்னால் எனக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும். அதற்குத் தான் உன்னைத் தேடி வந்தேன். என்னாலும் உனக்கு பல விதங்களில் நன்மை உண்டு.” சிரித்துக் கொண்டே சொன்னவர்,

“நாளை உன் இல்லத்திற்கு வருகிறேன். உன் மனைவியிடம் சொல்லி வை.” என்றார்.

“என்ன! நீங்கள் சித்தரா?” வர்மா ஆச்சரியப் பட்டான்.

“ எல்லாவற்றையும் நாளை விளக்குகிறேன். இந்த இடத்தை உனக்குக் காட்டவே இப்போது உன்னை அழைத்து வந்தேன். நீ கிளம்பலாம்” என்றார்.

அவரை வணங்கியவன் நேரே வீடு வந்து சேர்ந்தான். உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியினைக் கண்டவன், அவளை எழுப்பாத வண்ணம் மெல்ல அவள் அருகில் சென்று படுத்தான்.

சற்று நேரத்திற்கு முன்பு நடந்தவற்றை நினைத்துப் பார்த்தவனது உடல் இப்போது புல்லரித்தது. அவர் கூடு விட்டு கூடு பாய்ந்தது அவனுக்கு ஆச்சரியாமாக இருக்கவில்லை. ஏனெனில் இவை எல்லாம் சாத்தியம் என்பது அவனும் அறிந்த ஒன்றே! பிரமிப்பு என்னவென்றால் முதல் முறை ஒரு சித்தரைப் பார்க்கிறான்.

‘அவருக்கு என்னிடம் என்ன வேலை! அவர்களாலே எல்லா வேலையும் செய்து கொள்ள முடியுமே! என்னை எதற்காகத் தேடி வர வேண்டும்.

அவருக்கு பல வித்தைகள் தெரியும். நிச்சயம் நம் ஆராய்ச்சி பற்றி அவரிடம் சொல்லி மற்றொரு உலகத்தைப் பார்க்க வழி செய்யும்படி கேட்க வேண்டும். நமக்கு உதவுவதாக வேறு சொல்லியிருக்கிறாரே!’

அனைத்தையும் நினைத்து பூரிப்பில் உறக்கம் வராமல் இருந்தான்.

காலையில் அதை ரதியிடம் சொல்லி அவள் ஆச்சரியப் படுவதையும்  பார்க்க வேண்டும் என்று அவளைத் திரும்பிப் பார்க்க, உறங்கிக் கொண்டிருந்த அவளது தலையில் வைத்த மல்லிகை அவனை திசை திருப்பியது.

மனையாளின் மென்மை அவன் நினைவில் குடிகொள்ள, ஒருக்களித்துப் படுத்திருந்த அவளின் கையை மெல்ல விலக்கி, சற்றே நலிந்திருந்த அவளது பருத்திப் புடவையின் உள்ளே தன் கரம் செலுத்தி இடையைத் தீண்டினான். அதை இருக்கப் பற்றிக் கொண்டு தன்னோடு சேர்த்து இழுத்து அணைக்க, அவளின் அருகாமை எப்போதும் போல் நிம்மதியும் இன்பமான சுகத்தையும் நல்க, அப்படியே  உறங்கிப் போனான்.

அவனது செயலில் விழித்துப்பார்த்தவள், குழந்தையாய் தூங்கும் அவனைக் கண்டு புன்னகைத்து அவனது கரத்தின் மேல் தன் கையை வைத்து மீண்டும் உறங்கினாள்.

காலையில் எப்போதும் போல அவள் முதலில் எழுந்து வீட்டு வேலைகளைச் செய்து உணவு சமைத்துக் கொண்டிருக்க , அவனும் குளித்துவிட்டு வந்து, இரவு விட்ட இடத்திலிருந்தே தொடங்கினான்.

அவளுக்காக சமையலறையில்  மேடை செய்து அதில்  அடுப்பை அமைத்து சமையல் இலகுவாகச் செய்ய  ஏற்பாடு செய்திருந்தான். மேடை மீதே அம்மியும் ஆட்டுக்கல்லும் ஒரு ஓரத்தில் அமைத்திருந்தான். (அந்தக் காலத்து மார்டன் கிச்சன்)

நின்ற வாக்கில் ரதி அம்மியில் அவனுக்காகத் தேங்காய்த் துவையல் அரைத்துக் கொண்டிருக்க , இழுத்து சொருகிய புடவை ஈர்க்க,  மீண்டும் அவளது இடையைக் கட்டிக் கொண்டு அவளைத் தொல்லை செய்தான்.

“அத்தான்.. என்ன உங்களுக்கு இன்று வேறு வேலை இல்லையா! நான் சமைக்க வேண்டும். விலகுங்கள்.”  செல்லமாக மிரட்டும் குரலில் கட்டளையிட,

“ உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன் காதலே!” என்று கழுத்தில் முத்தமிட,

“ ம்ம் சீக்கிரம் சொல்லுங்கள் அத்தான், அடுப்பில் ரசம் கொதிக்கிறது. இதை வேறு அரைக்க வேண்டும்.” என்று அடுப்பில் ஒரு கண் வைத்துக்கொண்டு ரதி பரபரக்க,

“நீ அடுப்பைப் பார்! நான் விஷயத்தை துவையல் அரைத்துக் கொண்டே சொல்கிறேன்!” என்றவன் அவள் கையில் இருந்த அம்மிக் குழவியைத் தான் வாங்கி பதமாக அரைக்க ஆரம்பித்தான்.

அவன் செயலில் அழகாகப் புன்னைகத்தவளுக்கு, அவன் மேல் காதல் காட்டாறு போல கட்டுக்கடங்காமல் ஓடியது.

இருவரும் சமையல் அறையில் சேர்ந்து வேலை செய்ய  , வர்மா சொன்ன விஷயத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு ஏதோ உள்ளுணர்வு தோன்ற,

“அத்தான்! இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல உள்ளது.” யோசனையாகக் கூற,

“ இது பொதுவாக இருக்கும் பெயர் தானே! ‘பரஞ்சோதி’. இதைப் பல இடங்களில் கேட்டிருக்கலாமே ரதி!” துவையலை வழித்து ஒரு வெங்கலக் கிண்ணத்தில் வைத்தான்.

“ ஆமாம்..ஆனால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. சரி வரட்டும் பாப்போம். அத்தான் அவருக்கும் சேர்த்து அரிசி உலையில் போடுகிறேன்.” சொன்னவள் அதைச் செய்தும் விட,

கை கழுவிக் கொண்டு வந்தவன் அதை அவளின் முந்தானையில் துடைத்து விட்டு, “அவருக்கு பரிமாறிய பின்பு, இன்று நானும் நீயும் சேர்ந்து உண்போம், சரிதானா காதலே!” அவளது  நெற்றி முட்டி விலகிச் சென்றான்.

அவனது அருகாமை அவளை ஒவ்வொரு முறையும் ரசிக்க வைத்து விடும். இப்படி ஒருவன் கிடைக்க என்ன புண்ணியம் செய்தேனோ என்று அவள் நினைக்காத நாளில்லை. இந்த நொடியும் அப்படியே உணர்ந்தாள்.

இம்முறை தன்னுடைய சொந்த உடலிலேயே வந்தார் பரஞ்சோதி சித்தர். கணவன் மனைவி இருவரும் வாசிலேயே நின்று அவருக்கு வரவேற்பளித்தனர்.

அவருடைய பாதங்களை ஒரு தாம்பாளத்தில் வைத்து, பாகிரதி தண்ணீர் கொடுக்க அதனால் அவரது பாதங்களைக் கழுவி, அந்நீரை தன் தலையில் தெளித்துக் கொண்டு, ரதிக்கும் தெளித்தான்.

இது அந்தக் காலத்தில் வழக்கில் இருந்த ஒரு முறை. உயர்ந்த மகான்கள், சித்தர்கள், யாத்ரை செல்பவர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களது பாதம் கழுவி அந்நீரை தங்களது தலையில் தெளித்துக் கொள்வார்கள்.

அவ்வாறு செய்தால் , அவர்களின் ஆசீர்வாதம் கிடைப்பதோடு, அவர்கள் சேர்த்த புண்ணியத்தின் பலனில் தங்களுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதாகும்.

அவரை அழைத்துக் கொண்டு இருவரும் வீட்டிற்கு வந்து, ஒரு சிறு மரப்பலகையில் அவரை அமர வைத்தான்.

“நான் வந்த விஷயத்தை முதலில் கூறிவிடுகிறேன்.” என்று அவர் தொடங்க, அதற்குள் பாகிரதி,

“முதலில் பசியாறுங்கள். பிறகு பேசிக்கொள்ளலாம்” என அன்புக்கட்டளையிட,

அவருக்கு இந்திரவர்மனும் பாகிரதியும் சேர்ந்தே உணவு பரிமாறி, திருப்தியடைந்தனர்.

இருவரின் அன்னியோன்யம் அவருக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று. இன்று அதைக் கண்ணால் கண்டவுடன் , மகிழ்ச்சியாகவே இருந்தது.

“ இந்திரா.. இந்தக் காலகட்டத்தில் நீ பகுத்தறிவு உள்ளவனாகவும், மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று அறிந்தவனாகவும் இருக்கிறாய். நீ பல்லாண்டு காலம் இவளோடு ஆனந்தமாக வாழ்வாய்.” என்று ஆசீர்வதித்தார்.

ரதி பெருமிதம் பொங்க தன் கணவரைப் பார்க்க, அவனோ,

“ என் மனைவியும் எனக்கு ஏற்றார் போல நடந்துகொள்வதனால் தான் என்னால் அப்படி இருக்க முடிகிறது ஐயா. அவள் இல்லாமல் என் வாழ்வில் எதுவும் இல்லை.” என்று சொல்ல,

ரதிக்கு கண்கள் கலங்கியது.

யாரும் அறியாமல் அதைத் துடைத்துக் கொண்டு ஒரு தூண் அருகில் நின்றாள்.

அவன் சொன்னதைக் கேட்டு வியந்தவர்,

“சரி நான் வந்த விஷயம் இது தான். எனக்கு ஒரு உதவி உன்னால் நடக்க வேண்டும். உன்னுடைய ஸ்படிக லிங்கத்தை நான் பார்க்க வேண்டும். என்னை அழைத்துச் செல்” உரிமையுடன் கேட்க, அவரை பூஜை அறைக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே காலையில் பூஜை செய்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சாம்பராணி வாசத்துடன் வீற்றிருந்தது லிங்கம்.

அதன் முன் அமர்ந்தவர் சிறிது நேரம் கண்மூடி இருந்துவிட்டு பின் எழுந்தார்.

இந்திரனைப் பார்த்து,

“இந்த லிங்கம் எப்படிப்பட்டது, அது உன்னிடம் எப்படி வந்தது தெரியுமா?” என்றார்.

“இது எனது பரம்பரை சொத்துக்களில் ஒன்று. எனது முன்னோர்கள் வழிவழியாக பூஜை செய்து வந்த ஒன்று , இப்போது அதை நான் வழிபடுகிறேன்.” அமைதியாகச் சொன்னவன்,

“ ம்ம்.. அது மட்டுமல்ல . இது சாதாரண லிங்கம் இல்லை. உனக்கும் எனக்கும் உதவப் போகும் சக்தி லிங்கம். இதை உன் பரம்பரையில் சேர்த்ததே நான் தான். உன் முப்பாட்டனுக்குப் பாட்டன் நான். இதை நான் வரமிருந்து பெற்றேன். ஆனால் இதன் சக்தி ஒன்பது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சம்சாரியாகி  பூஜை செய்த பின் தான் கிட்டும்.

நீ தான் ஒன்பதாவது . இந்த ஸ்படிக லிங்கம் இப்போது எனக்கு வழிக்காட்டும்.” ஒரு நிறைவோடு அவர் சொல்ல,

ரதிக்கும் வர்மாவிற்கும் ஆச்சரியமாக இருந்தது.

“அத்தான், நான் சொன்னேனே! உங்களுடைய தாத்தாவின் தாத்தா பெயரும் பரஞ்சோதி தானே! ஒரு முறை அத்தை என்னிடம் சொன்னார்கள்.” என நினைவு படுத்தினாள் ரதி.

“ஆமாம் ரதி.” என்றவன் ,

“என்ன நீங்களும் நானும் ரத்த சம்பத்தமா! இது உங்களுக்கு எப்படி வழிகாட்டும்?” இத்தனை ஆண்டுகளாக அவர் உயிரோடு இருக்கிறார் என்பதே அவனுக்கு பெரிய அதிசயமாக இருந்தது.

“நான் திருமணம் முடித்த பின் என்னுடைய குரு எனக்கு ஞானத்தை நல்கினார். குடும்பத்தை விட்டு நான் வெளியே வந்து தவம் செய்த பலன் ஈசன் அருளால் இந்த லிங்கத்தைப் பெற்றேன். அதை ஒன்பது தலைமுறைகள் பூஜை செய்த பலனோடு வைத்து மீண்டும் தவம் செய்தால் ,  மூன்று  இடங்களில் ஈசன் தோன்றுவார். அந்த இடங்களில் கோவில் அமைத்தால் உலகம் தீய சக்திகளில் இருந்து காப்பாற்றப் படும். இல்லையேல் இருள் சூழ்ந்த உலகமாகி, மக்கள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள ஆயத்தமாகிவிடுவர்.

இது நான் சித்த ஞானம் அடைந்த பின்னர்  எனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. அதை நிறைவேற்ற என் ஒன்பதாவது சந்ததியான நீ எனக்கு உதவ வேண்டும்” இருவரையும் பார்த்து சித்தர் சொல்ல,

எதைப் பற்றியும் யோசிக்காமல் பாகிரதி சரி என்றாள்.  இதனால் பல பிரச்சனைகள் வரும் என்று வர்மாவிற்குப் புரிந்தே இருந்தது. அறியாமல் வாக்குக் கொடுத்த பாகிரதியைப் பார்க்க,

அவளும் கண்ணால் ஜாடை காட்டி சம்மதம் சொல்லச் சொல்ல,

மனைவியின் மனம் கோணாமல் நடக்கும் கணவனான அவனும் சம்மதித்தான்.

“உன்னுடைய ஆராய்ச்சியும் நிச்சயம் வெற்றி பெரும். அதற்கும் இந்த லிங்கம் உனக்கு உதவும்” மறைமுகாக அவர் சொல்ல,

வர்மாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அவனது ஆராய்ச்சிக்காக வர்மா எதையும் செய்வான் என்று தெரிந்த ரதி அவசரமாக,

“ எனக்கு ஒரு நிபந்தனை!”  சித்தரைப்  பார்த்துக் கேட்க,

“நீ கேட்கப் போவது எனக்குத் தெரியும் அம்மா. ஒரு நாளும் உன் கணவரை விட்டு நீ பிரிய மாட்டாய்.” சிரித்துக் கொண்டு சொல்ல,

“ ஒவ்வொரு ஜென்மத்திலும் நான் இவரை விட்டுப் பிரியக் கூடாது. இவரே என் கணவராக நான் அடைய வேண்டும்.” அவரை மண்டியிட்டு வணங்கி வேண்டிக் கொள்ள,

ரதிக்கு தன் மேல் இருக்கும் இந்த அன்பைக் கண்டு வர்மா நெகிழ்ந்து போனான்.

இதன் பிறகு வாழ்வில் அவர்களுக்குத் துன்பத்தை தவிர வேறில்லை என்பதை அறியாத அவர்கள் சித்தர் கொடுத்த வாக்கை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தனர்.

உலகில் சில நல்லது நடக்க, நல்லவர் சிலர் துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி.

“இந்திரா  நான் சில நாட்கள் கூடு விட்டு கூடு பாய்ந்து வேறு வேறு இடங்களுக்குச் சென்று தவம் செய்ய வேண்டி வரும். அப்போது என் உடலை நீ தான் பாதுகாக்க வேண்டும். தீய சக்தி கண்ணுக்குத் தெரியாமல் தான் இருக்கும். அதனால் நான் சென்ற பிறகு உன் நண்பனின் உதவியோடு நீ என் உடலை பத்திரமாக வைத்துக் கொண்டிரு.

நான் திரும்பி வந்த பிறகு உனக்கான வேலைகளைச் சொல்கிறேன்.

இந்த விஷயம் நம்மைத் தவிர உன் நண்பனுக்கு மட்டுமே நீ சொல்லலாம்.” என்றவர் அவன் செய்ய வேண்டிய சில வேலைகளையும் சொன்னார்.

அவனிடம் இருந்த ஸ்படிக லிங்கத்தை எடுத்துக் கொண்டு, அவன் பூஜை செய்ய வேறு ஒரு லிங்கத்தை அவனிடம் கொடுத்துச் சென்றார்.

மறுநாள் சேனாவிடம் நடந்ததைச் சொல்ல, சேனா தன் மனதில் அவரை வணங்கினான். அவனுக்கும் சில வேண்டுதல்கள் இருந்தது சித்தரிடம் கேட்க…

 

திருவாசகம்:

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.

தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே.