Maya17

மாயநதிச்சுழல்

சுழல்-17

இதுவரை:

மதிமாறனின் முகம் இன்னமும் செம்மை பூத்திருந்தது. இதற்கு மேலும் பேசாது இருத்தல் கூடாது என நினைத்த அமுதா,”சுரபி அவளைப் பத்தி, என்னைப் பத்தி, எங்க குடும்பம் பத்தியோ சொல்லாம இருக்க பெரிய காரணம் இருக்கு. அதும் முக்கியமா உங்ககிட்ட சொல்லாம மறைக்கறதுக்கு…காரணம் உங்க வேலை” என அமுதா சொல்லி நிறுத்த, கண்களில் ஆர்வமாக மதிமாறன் அமுதாவை ஏறிட்டான். இவனிடம் சொல்லலாமா வேண்டாமா என சில கணங்கள் அமுதா தயங்குவது தெரிந்தது. மனதை திடப்படுத்திக் கொண்டவள், அமைதியான ஆழ்ந்த குரலில் பேசத் துவங்கினாள்.

இனி:

“நான் இப்போ சொல்லப் போறதை எந்த ஜட்ஜ்மெண்ட்டும் இல்லாம நீங்க புரிஞ்சுக்கணும். உங்ககிட்ட இதை சொல்லணும்னு அவசியம் இல்லை தான். ஆனா, சுரபியோட மனநிலை எனக்கு நல்லாவே தெரியும். என்னைக்கு நீங்க பிரலோஸ் பண்ணீங்களோ அப்பவே அவ உங்ககூட ஒரு வாழ்க்கையை கற்பனை பண்ணிக்க ஆரம்பிச்சுட்டா…ஆனா அது பொய்ன்னு நீங்க சொன்னப்போ வெளிய இயல்பா இருக்க முயற்சி செய்யறா. மேபி, இது ரொம்ப சில்லியா இருக்கலாம்…ப்ரபோஸ் பண்ண உடனே வாழ்க்கை பத்தி கற்பனை பண்ணுவாங்களா யாரவதுன்னு கூட நீங்க நினைக்கலாம்…”என அமுதா பேசிக் கொண்டிருக்க மதிமாறன் இடைபுகுந்தான்.

“ப்ளீஸ்….நான் பண்ண தப்பு அது. நான் ஃபீல் பண்ணாத நாளும் இல்லை, அதை நினைச்சு…இன்ஃபாக்ட் சுரபிகிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணப்போ எனக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. என் சுயநலம் மட்டும் தான் பிரதானமா இருந்துச்சு…ஆனா, அவகிட்ட விளையாட்டுக்கு சொன்னேன்னு பேசினதுக்கு அப்பறம், என்னால என் வேலைகளை பழையமாதிரி செய்ய முடியல…  எங்க திரும்பினாலும் உங்க தங்கையோட பிம்பம் தான் பார்த்தேன்…இதை அவகிட்ட சொல்ல தைரியம் இல்லாம இல்லை…ஆனா, முத தடவை பண்ண தப்பை மறுபடியும் செய்யக்கூடாதுன்னு முடிவெடுத்தேன்…அவ மனசில நல்ல அபிப்பிராயத்தை உண்டாகி அப்பறமா என் மனசை புரியவைக்கணும்னு நினைச்சேன்…இன்ஃபாக்ட் உங்களை மீட் பண்ணி பேசலாம்னு கூட யோசிச்சிருக்கேன்”என மதிமாறன் நிதானமான குரலில் சொல்லி முடித்தான்.

அமுதாவிடம் இதற்கு எந்த பதிலும் இல்லை. நிர்மலமான ஒரு பார்வையை மதிமாறன் மீது சிந்தியவள், “இதைப் பத்தி நாம பேச இன்னொரு சமயம் கிடைக்கும்…அதுக்கு முன்னாடி உங்களுக்கு சுரபி பத்தி தெரிய வேண்டாமா? அதாவது எங்க ஃபேமிலி பத்தி?”

“சொல்லுங்க…”

“சுபிக்கு இந்த உலகத்தில இருக்கற ஒரே சொந்தம் நான் மட்டும் தான். எனக்கும் அப்படித்தான். சுபியைவிட்டா வேற யாரும் இல்லை…எங்களோட வட்டம் ரொம்ப ரொம்ப சின்னது, நான், சுரபி, ஆஸ்ரமம், ஃபாதர் மரியதாஸ். அப்பறம் எங்களோட வளர்ந்த அலெக்ஸ்…அவ்வளோ தான்..“

“ஆஸ்ரமம்னா, நீங்க… ரெண்டு பேரும் ஆர்ஃபன்ஸா….?” என்று மெல்ல மதிமாறன் கேட்க, அமுதா வெறுமையான புன்னகை ஒன்றை சிந்தினாள்.

“அனாதைகளா பிறக்கலை…அனாதைகளா ஆக்கப்பட்டோம்…”

“புரியலை”

“சொல்லறேன்…நடுவில குறுக்கிடாம கேளுங்க….”என்று மொழிந்த அமுதா, குத்திட்ட பார்வையுடன் மெல்ல பேசத் துவங்கினாள்.

“ எங்களுக்கும் அப்பா, அம்மா, வீடு, உறவுக்காரங்க, நண்பர்கள்ன்னு எல்லாமே இருந்தது. ரொம்ப சந்தோஷமாத்தான் வாழ்ந்தோம். ஐ.மீன், அப்படி சந்தோஷமா வாழ்ந்தோம்னு நினைக்கறேன். ஏன்னா அதெல்லாம் இப்போ எனக்கு கொஞ்சம் கூட நியாபகம் இல்லை… அந்த ஊரை விட்டு சுரபியோட நான் வெளிய வர்றப்போ எனக்கு ஐஞ்சு வயசு தான். சுரபிக்கு மூனு இருக்கும்…எனக்கும் தெளிவா நிறைய விஷயங்கள் நினைவில்லைன்னாலும் அந்த நாள் ராத்திரி மட்டும், கனவு மாதிரி கொஞ்சம் மனசில இருக்கு.”

“நான், அம்மா, சுபி மூனு பேரும் ரூம்ல படுத்திருக்கோம். வெளியே சத்தம் கேட்டு என்னன்னு பார்க்கப் போன அப்பா, பக்கத்துவீட்டு மாமாவையும், அவர் பிள்ளைகள் ரெண்டு பேர்த்தையும் வீட்டுக்குள்ள கூட்டிவந்தார். படபடன்னு எங்களை தட்டி எழுப்பினார். மாமாவோட மனைவியும் சமீபத்தில தான் இறந்தாங்க. மாமாவும் அப்பாவும் பேசிகிட்டது எனக்கு புரியலை. ஆனா ஏதோ விபரீதம்னு மட்டும் தெரியுது. அப்பா பேசினதைக் கேட்டு அம்மா பயந்து போய் என்னையும் சுபியையும் கட்டிகிட்டாங்க…என் கையில ஒரு சின்ன துணிப்பை குடுத்து, வீட்டோட பின்பக்கத்துக்கு என்னையும் சுபியையும் அப்பாவும் அம்மாவும் கூட்டிட்டுப் போனாங்க. அந்த மாமா மட்டும் வீட்டில தங்கிக்க, அவரோட பிள்ளைகளும் எங்க கூட வந்தாங்க..”

“இருட்டில நிறைய தூரம் நடந்தோம். சுபியை அம்மா தூக்கிகிட்டாங்க… “நீ பெரியவ அமுதா, சுபியை நல்லா பார்த்துக்கணும், பயப்படக்கூடாது. தைரியமா இருக்கணும்ன்னு வழி நெடுக அம்மா எங்கிட்ட சொல்லிகிட்டே வந்தாங்க…எனக்கு எதுவும் புரியலைன்னாலும் அமைதியா கேட்டுகிட்டேன். ஒரு ஃபர்லாங்க் தூரம் நடந்தா எங்க வீட்டில இருந்து கடலுக்கு போற, சின்ன வாய்க்கால் ஒன்னு வரும். அதுல மழை இல்லாத நாட்கள்ல இடுப்பளவுக்கு தண்ணி போகும். நிறைய தடவை நாங்க குளிச்சு விளையாடுவோம். ஆனா, இன்னைக்கு அந்த வாய்க்காலைப் பார்க்க பயமா இருந்துச்சு. ரெண்டு பக்க கரையையும் அள்ளிகிட்டு தண்ணீர் தழும்ப போயிட்டு இருந்துச்சு…”

“இங்க எதுக்கும்மா வந்திருக்கோம்….குளிக்கவான்னு?”நான் கேட்டேன்.அம்மா பதில் சொல்லலை. ஆனா நிறைய அழுதாங்க. நாங்க அந்த வாய்க்கால் கிட்ட வளர்ந்திருந்த பெரிய மரங்களுக்கு இடையில கொஞ்ச நேரம் காத்திருந்தோம். மழை வேற தூர ஆரம்பிச்சிருச்சு. எவ்வளவு நேரம் நின்னோம்னு தெரியாது. கொஞ்ச நேரத்தில் கடல் திசையில இருந்து ஒரு சின்ன தோனி வந்துச்சு…அதுல ஏற்கனவே கொஞ்ச பேர் இருந்தாங்க…அம்மா மாதிரி ரெண்டு முனு பேர், அப்பறம் சில குழந்தைகளும் இருந்தாங்க…அப்பா அந்த தோனி பக்கத்தில வரவும், என்னையும் சுபியையும் ஏற்றிவிட்டார். மாமாவோட பிள்ளைகளும் ஏறிகிட்டாங்க. அம்மாவை “போ, போய் ஏறுன்னு”சொல்லிகிட்டே இருந்தாங்க..அம்மா கேட்கலை. உங்களை விட்டு எங்கையும் போகலைன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருந்தாங்க…”

“படகுக்காரன் நேரமாச்சு, நேரமாச்சுன்னு அவசரப்படுத்தினான். அப்பா என்னையும் சுபியையும் கண்ல கண்ணீர் மல்க, கட்டி பிடிச்சு முத்தம் வச்சாரு..”எங்க இருந்தாலும் நீங்க நல்லா இருக்கணும் பிள்ளைகளா…நாங்க எப்பவும் உங்க கூடவே இருப்போம்னு”அப்பா சொன்னது, அம்மாவும் அப்பாவும் அழுத்துன்னு எல்லாமே கண்ணுகுள்ள நிறைஞ்சிருக்கு. அப்பறமா அந்த தோனி மெதுவா மூனு நாள் பிரயாணம் பண்ணி எல்லையை அடைஞ்சிது.

கலவையான எண்ணகளுடன் அமர்ந்திருந்தவன், கடைசியாக அந்தக் கேள்வியைக் கேட்டான்.

“ஏந்த ஊர்ல இருந்து தோனில வந்தீங்க.”

“கிளிநொச்சி மாவட்டம்..”

“கிளிநொச்சி….அப்போ சிலோன்…தமிழ் ஈழம்…” என அடுத்து என்ன சொல்வது என தடுமாறிய மதிமாறன் அமைதியாகிவிட, அமுதா தலையை மட்டும் அசைத்தாள்.

“நாங்க சிலோன் அகதிங்க…” என்று சொல்லிய அமுதாவின் கண்களில் அதுகாரும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் துளிகள், மெல்ல கன்னத்தில் வழிந்தது. அதுவும் ஒரு சில நொடிகளே. சட்டென தன்னை சமன்படுத்திக் கொண்டவள், தொண்டையை செருமிக் கொண்டு மீண்டும் பேசத் துவங்கினாள்.

படகில இருந்த எல்லாருமே கன்னியாகுமரி போகலாம்னு பேசிகிட்டாங்க. ஆனா படகுக்காரன் சம்மதிக்கவேயில்லை. போலீஸ் சுட்டுரும், திரும்ப ஊருக்கு அனுப்பிடுவாங்கன்னு பயப்படுத்தினான். நாகப்பட்டினம் பக்கம் ஒரு சின்ன வாய்கால் வழியா நிலத்தில இறக்கிவிட்டுட்டுப் போயிட்டான். தோனியில வந்தவங்க ஆளுக்கு ஒரு திசையா பிரிஞ்சி போயிட்டாங்க. நானும் சுபியும், தோனியில வந்த ஒரு அம்மாவோட பிள்ளைகள் கூட சேர்ந்து நாகப்பட்டினத்தில கொஞ்ச நாள் தங்கினோம். அப்பறம் அந்த அம்மா என்ன ஆனாங்கன்னு தெரியலை. ஒரு சர்ச் கிட்ட நடத்து போனப்போ, சுரபி மயங்கிப் போயிட்டா. எனக்கும் என்ன செய்யன்னு தெரியாம, அந்த மாதா கோவில்ல உதவிகேட்டேன். கொஞ்ச நாள் அங்க இருந்தோம்.”

“அப்பறம், அங்க இருந்த ஃபாதர் ஒருத்தர் மூலமா, சர்ச்சோட டிரஸ்ட்ல நடக்கற அனாதை இல்லத்தில சேர்ந்தோம். அங்கிருந்தே படிச்சோம்…” என சட்டென கதையை முடித்துக் கொண்ட அமுதாவின் கண்கள் நிறைய கலங்கியிருந்தன. நல்லவேளையாக மதிமாறன் பயந்தது போல் அமுதா உணர்ச்சிவசப்பட்டு அழுகவில்லை. ஆழ்ந்த சிந்தனையுடன் தன் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சுரபியைப் பற்றியும், அமுதாவைப் பற்றியும் தெரிந்து கொண்டிருந்தவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. சற்று முன்னர் அமுதாவின் மீது உருவாகியிருந்த சிறிய காழ்ப்பு உணர்ச்சி முற்றிலும் மறைந்துவிட்டிருந்தது. ஒற்றை ஆளாய் தானும் வளர்ந்து, தங்கையையும் வளர்ந்தி, இன்று சொல்லிக் கொள்ளும் நிலைமையில் நிற்கின்றனர் என்றால் அதற்குப் பின் எத்தனை கண்ணீரையும் சவால்களையும் சந்தித்திருப்பர் என  மதிமாறனால் உணர முடிந்தது.

“அந்த ஊர் பேர் கூட எனக்கு நியாபகம் இல்லை. நாகப்பட்டினத்தில சர்ச் ரெக்கார்டில இருக்கற செய்தி. அதுல இருந்து தான் அம்மா பேர் உஷாராணி, அப்பா பேர் மகேந்திரன்னு பார்த்து தெரிஞ்சுகிட்டோம். மத்தவங்க மாதிரி நாங்களும் அகதிகள் முகாமுக்குப் போக வேண்டிய ஆளுங்க தான். ஆனா அன்னைக்கு சுரபி மயங்கிட்டதால நான் அவளை அந்த தேவாலயத்துக்குள்ள தூக்கிட்டுப் போனேன். ஒரு வாரம் அங்க இருந்தோம். அப்பறம் அந்த ஃபாதர் என்னையும் சுபியையும் திரும்ப முகாம்ல சேர்த்துவிட நினைச்சார். ஆனா அவருக்கு திடீர்ன்னு ஹார்ட் அட்டாக் மாதிரி வந்துடுச்சு. நாங்க முகாமுக்குப் போறதும் தள்ளிப் போச்சு.”

“சில மாசம் கழிச்சு அங்க என்னையும், சுபியையும் கூட்டிட்டுப் போனார். எங்க கூட வந்தவங்க என்ன ஆனாங்கன்னு தெரியலை. முகாம்ல அவங்க இல்லை. கொஞ்ச பேர்த்தை திருப்பி அனுப்பிட்டதாவும் பேசிகிட்டாங்க..அங்க முகாம்ல வேலை செஞ்ச ஒரு ஆள், ஃபாதர்கிட்ட,”நீங்களே இதுகளை கூட்டிட்டுப் போய் ஆஸ்ரமத்தில வச்சுக்கோங்க ஃபாதர். இங்க இருக்கற ஆளுங்களுக்கே சாப்பாடு பத்தரதில்லை…புதுசா வந்தா திரும்ப ஊருக்குக்கு தான் அனுப்பறேம். அங்க போனா இதுக பிழைக்குமோ என்னவோ..தெய்வாதீனமா இவ்வளவு நாள் பார்த்துகிட்டீங்க…இனிமேயும் ஆஸ்ரமத்தில பல அனாதைகளோட இதுகளும் இருக்கட்டுமே”ன்னு போற போக்கில சொல்லிட்டுப் போனான். அந்த ஃபாதருக்கும் இது யேசுவோட கிருபையோன்னு தோணிருச்சு..

“இந்த பிள்ளைகளை திரும்ப முகாமுக்கு அனுப்பறதில ஏசுவுக்கு விருப்பம் இல்லைன்னு நம்பினார். எங்களை ஆஸ்ரமத்தில சேர்த்துகிட்டார். அங்கையே வளந்தோம், படிச்சோம். படிச்சு முடிச்ச கையோட அலெக்ஸ் மூலமா மேற்படிப்பு படிக்க முடிஞ்சது. அலெக்ஸ் என்னை விட மூனு வயசு பெரியவன். அவனும் எங்களை மாதிரி தான். அனாதை. என்ன, கொஞ்சம் திக்கி பேசுவான். அதனால ஆஸ்ரமத்தில மத்த பிள்ளைகள் அவனை கொஞ்சம் ஒதுக்கி வப்பாங்க. அதானாலையே அவன் எங்களோட ரொம்ப பழகுவான். நான், சுரபி, அலெக்ஸ் மூனு பேரும் தான் எப்பவுமே ஒன்னா இருப்போம். அலெக்ஸ் ஆஸ்ரமத்தில இருந்து முன்னாடியே வெளிய போயிட்டான். ஆனாலும் நான் படிக்க உதவி பண்ணான். இதோ இன்னைக்கு இந்த நிமிஷம் வரைக்கும், எனக்கும் சுரபிக்கும் ஒரு துணையா இருந்து பார்த்துக்கறான்.”

“ஆனா நீங்க, ஐமீன், சுபி என்னைப் பார்த்து பயந்து போனதுக்கு காரணம்?” என கேட்காமல் மதிமாற்ன தயங்க,

“உங்களைப் பார்த்து நானும் சுரபியும் முதல்ல பயப்பட்டோம்னா அதுக்கு காரணம் எங்களோட பூர்வீகம். நியாயப்படி நாங்க அகதிகள். முறையான எந்த சர்ட்டிஃபிகேட்சும் இல்லை. அதனால சின்ன வயசில இருந்தே போலீஸ்னா ஒரு பயம். எங்க திரும்ப ஊருக்கு அனுப்பி வச்சிருவாங்களோன்னு..இன்னைக்கு என்னடான்னா ஒரு போலீஸ்கிட்டையே என் கதையை தைரியமா சொல்லிட்டு இருக்கேன்..அதுலையும் சாதாரண போலீஸ் இல்லை, ஏ.சி.பி” என்று கூறி மெல்ல சிரித்தாள்.

“ஓ, இப்போ உங்க ஃப்ரெண்ட் அலெக்ஸ் எங்க இருக்கார்? என்ன செய்யறார்?”

“அலெக்ஸ்சும் இங்க பெங்களூர்ல தான் வர்க் பண்ணறான். இப்போ ஒரு ப்ராஜெக்ட் விஷயமா யு.எஸ் போயிருக்கான். ரெண்டு வருஷம் கழிச்சுதான் திரும்பவருவான்…”

“ஓ” என்று மட்டும் மொழிந்த மதிமாறனுக்கு வார்த்தைகள் எப்போதோ விடைபெற்று சென்றுவிட்டன. என்ன பேசவேண்டும்? ஏதாவது கேட்கவேண்டுமா என சில நொடிகள் மனம் பரிதவித்துப் போனது. அதிலும், சுரபியிடம் “காதலிக்கிறேன்”என்று தான் கூறியது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

தனக்கும் ஒரு வாழ்க்கை கிட்டப் போகிறது. கணவன், குடும்பம் என மற்றவர் போல் இயல்பான அமைதியான எதிர்காலம் காத்திருக்கிறது என எண்ணி மகிழ்ந்து போயிருப்பாள் இல்லையா. இது தெரியாமல் எத்தகைய தவறை செய்துவிட்டேன் என மனதிற்குள் தன்னை கருவிக் கொண்டவன், அருகில் அமர்ந்திருந்த அமுதாவின் முகத்தை நீண்ட நேரம் கழித்து ஏறிட்டான். கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீர் காய்ந்து போயிருக்க, நாற்காலியின் கைப்பிடியில் தலையை சாய்த்திருந்தவள், அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.

அவ்விடம் விட்டு எழுந்த மதிமாறன், மெல்ல நடந்து மீண்டும் ஐ.சி.யூவின் வாசலை எட்டியிருந்தான். அவனுக்கு உடனே சுரபியைக் காண வேண்டும் என பேராவல் உண்டானது. செவிலியரிடம் அனுமதி பெற்று, உள்ளே சென்றவன், திரையை விலக்கி அமைதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சுரபியின் முகத்தை ஏறிட்டான்.

“என்ன ஆனாலும் இனிமே உன் கண்ணில இருந்து ஒரு துளி கண்ணீர் சிந்த நான் விடமாட்டேன். இது, நான் உயிரா மதிக்கற என் போலீஸ் வேலை மேல ஆணை. நீ இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் நான் பிராயசித்தம் செய்யற மாதிரி ஒரு வாழ்க்கையை உனக்குத் தருவேன் சுபி…”என சலைன் ஏறிக் கொண்டிருந்த வலது கையை விடுத்து, இறுக்கமாக மூடியிருந்த இடது கையைப் பற்றி கொண்டு மெங்குரலில் மொழிந்தான்.

சுரபியிடம் எந்த சலனமும் இல்லை. ஆனால் அவள் தலை மேல் கீங் கீங் என்று சத்தம் செய்து கொண்டிருந்த கருவி, ஒரு நொடி நின்று, பின் பலமாக துடிக்கத் துவங்கியது. சுரபியின் இதயத்திற்கு தான் கூறியது புரிந்து போன மகிழ்ச்சியில், சுரபியின் நெற்றியில் மெல்லமாக இதழ்களைப் பதித்தவன், சில நொடி நின்று அவளின் முகத்தை உள்வாங்கிக் கொண்டு அவ்விடம் விட்டுச் சென்றான்.