LogicIllaaMagic13

மேஜிக் 13

 

நிரஞ்சன் முந்திக்கொண்டு பேசத் துவங்கினான்

“அம்மா இவங்கள முதல்ல பார்த்தபோது நானே நந்துவோட அக்காவா இருக்குமோனு கூட நெனச்சேன். எங்கேயோ ஒரு ஜாடை இருக்குல்ல?”

“ஆமா நீ சொன்னா அப்புறம் தான் கவனிக்கிறேன்” தலையசைத்து மைதிலி, “நந்தனா பார்க்க ரொம்ப சின்னா பெண்ணா தெரியர்த்தால தான் நானும் இவளை நந்தனான்னு நெனச்சுட்டேன்”

நந்தனாவை புன்னகையுடன் பார்த்தவர் “தப்பா எடுத்துக்காதே கண்ணா. சாரி மா ! ”

வயதில் பெரியவராய் இருந்தும் கொஞ்சமும் தயக்கமின்றி நந்தனாவிடம் இப்படிச் சொல்ல, பதறிய நந்தனா என்ன சொல்வதென்றே புரியாமல் “பெரியவங்க ஏன் இப்படி… பரவால்ல ஆண்டி! ”

அவன் பேசும்விதம் ஏனோ சட்டெனப் பிடித்தது அவளை மைதிலிக்கு. “வா மா, இங்க வந்து என் பக்கத்தில் உட்கார்” வாஞ்சையுடன் அழைத்தார். மெல்ல மெல்லப் பேசத் துவங்கிய பெண்கள் அனைவரும் நன்றாகச் சிறிது பேச ஆரம்பித்தனர்.

‘என்னங்கடா நான் ஒருத்தன் இருக்குறத மறந்து இவங்க பாட்டுக்குப் பேசிட்டு இருக்காங்க? சரி இல்லையே. இவ எதான உளறிவைக்க போறா!’ நிரஞ்சனின் மனதில் நம்பியார் போல் எண்ணம் ஓட

“மா பசிக்குது என்ன டின்னெர்?” மைதிலியை பார்த்துப் பாவமான முகத்துடன் கேட்க

மைதிலியோ புன்னகையுடன் “சாரி கண்ணா ! இன்னிக்கி நானும் நிவியும் லீவ் டா. நீ எதான சமைக்குறதுன்னா எங்க எல்லாருக்கும் சேர்த்து சமைச்சிடு, இல்லாட்டி ஆர்டர் பண்ணிடு” சொன்னவர் அவன் பதிலுக்குக் காத்திராமல் மீண்டும் பேசத் துவங்க, நந்தனாவிற்கு நிரஞ்சனை பார்க்கப் பாவமாக இருந்தது

‘அடப்பாவமே! பசின்னு சொல்றான், நீயே சமச்சுக்கோன்னு சொல்ராங்க! ஆஹா டெர்ரர் தான் போல என் போலி மாமியார்’

“என்னமா அவனையே சமைச்சுக்க சொல்றேன்னு பாக்கறியா?” அவள் மனதைப் பிடித்தாற்போல் மைதிலி கேட்க, திகைத்துவிட்டாள் நந்தனா.

‘ஆஹா! நெனச்சதை விட இவங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கே. பாத்து நந்து பாத்து நடந்துக்க’

“அது…”என்ன சொல்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்தவள், “பாவம் அவருக்கு ஏதானா சாப்பிட…”

பாலமாகச் சிரித்த நிவேதா “அம்மா பார், இனி நாம இவனைக் கொடுமை படுத்த முடியாது போல இருக்கே ! இவனுக்கு ஆதரவுக்கு ஆள் ரெடி பண்ணி வச்சிருக்கான்” அண்ணனைப் பார்த்தபடியே அன்னையிடம் சொல்ல

‘ஆஹா ஓவராதான் போறோமோ?’

‘இல்லையா பின்ன ? உனக்கேன் இவ்வளவு அக்கறை? அம்மாவுக்கும் தங்கைக்கும் இல்லாத அக்கறை?’

‘மூடு ! நீ பராசக்தி டைலாக்கை சொல்றதை நிறுத்து. எதோ பாவம் ஒருத்தன் பசியில இருக்கான். அதான்…சும்மா மூடிட்டு இரு’

தனக்குள்ளே பேசிக்கொண்டு மௌனமானாள் நந்தனா.

நிரஞ்சனின் மனமோ அன்னையின் பதிலில் திகைத்திருந்தாலும் நந்தனா தனக்காகப் பரிந்து பேசியது அவனுக்குப் புதிதான சொல்லத் தெரியாத உணர்வைத் தந்தது.

“சரி சரி நானே சமைக்கிறேன். நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து இருந்தாலே என்னைக் கவனிக்கிறது கஷ்டம். இதில் கூட்டணி வேற, ஒரு குளி போட்டுட்டு வரேன்” என்றபடி நகர

காஞ்சனாவோ “நிரஞ்சன் நாங்க கெளம்பறோம், நேரம் ஆச்சுன்னா அண்ணா அப்புறம் கோபப்படுவார்.”

கச்சனாவின் கையைப் பற்றிக்கொண்ட மைதிலி “முதல் தரம் வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம கிளம்பினா மனசுக்கு வருத்தமா இருக்கும். ஏதாவது கொஞ்சமா சாப்பிட்டுக் கிளம்புங்களேன்”

“கண்டிப்பா இன்னொரு நாள் சாப்பிடுற மாதிரி வரோம். நீங்க கேட்டதே மனசுக்கு நிறைவா இருக்கு. நேரமாச்சு அண்ணிகிட்ட மட்டும்தான் சொல்லிருக்கேன். அண்ணா என்ன சொல்வாரோ தெரியலை அதான் …” காஞ்சனா தயங்க

“நான் வேணா மாமா கிட்ட பேசவா அத்தை?” காஞ்சனாவிடம் சொன்னபடி கைப்பேசியை எடுத்தான் நிரஞ்சன்.

“கண்டிப்பா இன்னொரு நாள் வரோம். உங்க கையால சமாசத்தைச் சாப்பிடவே.”

“நீயாவது சொல்லேன் பேபி” என்றபடி நிரஞ்சன் நந்தனாவை பார்க்க, நந்தனாவோ எதுவும் சொல்லாமல் மாறி மாறி இருவரையும் பார்த்திருந்தாள். ‘ஓவராதான் பொழியிறாங்க அன்பை. தாங்க முடியலை டா ஆண்டவா’

“சரி இன்னிக்கி நீங்க சொல்றதை கேட்கறேன் ஆனா அடுத்த முறை வரும்போது கண்டிப்பா சாப்பிடுற மாதிரி வரணும் !” நிரஞ்சன் புன்னகையுடன் காஞ்சனாவிடம் அன்பு கட்டளையை வைத்தான்.

மைதிலியும் நிவேதாவும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டனர்.

நந்தனாவும் காஞ்சனாவும் விடைபெற, நிரஞ்சன் ஓடிச்சென்று நந்தனாவிடம் “ வீட்டுக்கு போனதும் ஒரு மெஸேஜ் பண்ணு பேபி” அக்கறையாகச் சொன்னான்.

காஞ்சனா வெட்க புன்னகையுடன் “உங்க பேபியை பத்திரமா வீடு கொண்டுபோய் சேக்குறது என் பொறுப்பு சரியா” புன்னகையுடன் தன் இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தாள்.

‘ஆண்டவா காஞ்சுமா நீ ஏன் இப்படி வெட்க படுறே? இவனே பீலா விட்டுணு இருக்கான். நான் ஒழுங்கா வீடு சேர்ந்தா தான் அய்யாக்கு அழுகுணி ஆட்டமாட ஆளிருக்கும். என்னைத்தவிர இவனுக்கு வேற லூசு பீசு சிக்காதே!’ சிரித்துக்கொண்டவள் நிரஞ்சனை பார்த்துப் புன்னகையுடன்

“கண்டிப்பா மெஸேஜ் பண்றேன்” என்றபடி ஏறி அமர்ந்தாள்.

அவளையே முதல் முறை பார்ப்பதைப் போல் பார்த்திருந்தான் நிரஞ்சன். பக்கத்தில் நின்றால் தன் மார்பளவு மட்டுமே வரும் உயரம், முதுகுவரை நீண்ட முடி அதில் கொஞ்சம் முடியைச் சிறிய கிளிப்பில் அடக்கி இருக்க, அதையும் மீறி முகத்தில் தவழும் சில முடி கற்றைகள், அதை அவ்வப்போது காதோரம் ஒதுக்கிக்கொள்ளும் சிறிய விரல்கள்,

மாநிறமென்றாலும் ஒப்பனை எதுவுமின்றி துடைத்துவைத்தார் போல் இருக்கும் களையான முகம், சின்னப் பிறை நெற்றியில் மிகச் சிறிய அரக்கு நிற போட்டு, தன்னை பார்க்கும் பொழுதுமட்டும் இன்னும் விரிவதைப் போலத் தோன்றும் கருவிழிகள். ஏனோ அதனுள்ளே ஈர்க்கப் படுவது போன்ற உணர்வு வரத் தலையைக் கோதிக்கொண்டு மெல்லத் தலையசைத்து மெளனமாக இருக்க நினைத்தவன் தன்னையும் மீறி “டாடா பேபி” என்று கையை அசைத்தபடி உளறிவைத்தான்.

“டாடா” என்று சொல்லித் திரும்பிக் கொண்டவள் ‘ அடேய் ரொம்ப பிசிர் தட்டாமல் நடிக்கிறே டா டேய்!’ சாலையை வெறித்தபடி புன்னகைத்துக் கொண்டாள்.

அவர்களை வழி அனுப்பிவைத்து வீடு திரும்பிய நிரஞ்சனை அணைக்கட்டி நின்றனர் அவன் அன்னையும் தங்கையும்

“அம்மா! நம்ம போலி சாமியாரா இது? பேபியாம்…அத்தையாம்…” நிவேதா நிரஞ்சனை பார்த்துக் கிண்டலான குரலில் அன்னையிடம் சொல்ல

மைதிலியோ “அதானே நிவி! மாமாகிட்ட பேசுறானாம்! என்னிக்காவது ஒரு நாள் வைஷாலி அப்பாவை மாமான்னு கூப்பிட்டு இருப்பானா? சமைச்சு தரேன்னு சொல்லி இருப்பானா” மகனைத் துளைப்பதைப் போலப் பார்த்துச் சொல்ல

‘ஆஹா ரவுண்டு காட்றாங்கடா. பார்த்துச் சூதானமா நடந்துக்கோ டா’

“அம்மா உனக்குப் பிடிச்ச வத்தல் குழம்பு சுட்ட அப்பளம் சமைத்துச் சுடச் சுட கொண்டு வரேன். நீயும் போடா செல்லம்” அன்னையையும் தங்கையையும் பார்த்து இளித்தவரே நகர,

“டேய் அப்படியே நில்லு ! பேச்சை மாத்தி ஓடுறத பாரு. எங்க கிட்ட ஒருவார்த்தை சொன்னியா உன் பேபி பத்தி?” நிவேதா அவனை வம்பிழுத்தாள்.

“ஹே தயவுசெய்து நீவேற எடுத்துக் கொடுக்காதே என் செல்லம்ல. உனக்கு பிடிச்ச நூடில்ஸ் செஞ்சுதாறேன்” மெல்லிய குரலில் கண்களைச் சுருக்கி தங்கையை ரகசியமாய் கெஞ்சினான்.

“தம்பி எனக்கு பசியே இல்லை. நீ மொதல்ல பதிலை சொல்லுற வழியை பாரு” நிவேதா இடுப்பில் கைவைத்துக்கொண்டு மிரட்ட

மைதிலி சோஃபாவில் சோகமாய் அமர்ந்துவிட்டார். அதைத் தாங்காமல் ஓடிச்சென்று அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவர் கையைப் பற்றிக்கொண்டு,

“அம்மா என்ன நீ? நான் வேணும்னே பண்ணலை. கண்டிப்பா அப்பா உன்கிட்ட அன்னிக்கே சொல்லி இருப்பார்ன்னு தெரியும். சில காரணத்தால நான் உன்கிட்ட அப்புறமா நந்துவை பத்தி சொல்லலாம்னு நெனச்சேன். என்னை மன்னிச்சுடு மா”

மகனின் தலையைக் கோதியபடி “கோவம்னு இல்லைடா கண்ணா. எங்ககிட்ட சொல்ல தோணலையேன்னு வருத்தம்தான். உன் விருப்பத்துக்கு மாறா நாங்க எதுவும் செய்ய மாட்டோம் ஆனா வைஷுவை நெனச்சா மனசு கேட்க மாட்டேங்கர்து டா. பாவம் எவ்ளோ ஆசையா இருப்பா. எப்படி அவகிட்ட நாங்க பேசப்போறோம்னு தெரியலை” சொன்னவரின் குரல் கரகரத்தது.

“அம்மா…”

“இல்லப்பா நிச்சயம் பண்ணதுக்கு அப்புறம் கல்யாணம் வேணாம்னு சொன்னா அந்த பொண்ணு மனசு எவ்ளோ கஷ்டப்படும் தெரியுமா?”

“நாம என்ன ஊரை கூட்டியா நிச்சயதார்த்தம் பண்ணோம்? ஜஸ்ட் பெரியவங்க பேசி, நாம நாலு பேர் அவங்க மூணு பேருன்னு தட்டை மாத்திக்கிட்டோம். அவளோதானே?”

“நீ சொல்றது படியே இருந்தாலும் அந்த பொண்ணு மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டு இருப்பாளே அதுக்கென்ன பதில் சொல்லுவோம்?”

“அந்த கவலையே உனக்கு வேண்டாம்! நான் வைஷுகிட்ட சொல்லிட்டேன் அவளுக்கு ஒரு வருத்தமும் இல்லையாம்.” புன்னகையுடன் சொன்ன நிரஞ்சன் தொடர்ந்தான்

“அவளும் என்னை மாதிரிதான் பெரியவங்களுக்கா க கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லி இருக்கா”

நம்பமுடியாமல் மகனைப் பார்த்தவர் “என்னப்பா சொல்றே? நீங்க ரெண்டுபேரும் மனசார சம்மதிக்கலயா?”

“ஆமாம்மா! நாங்க உங்களுக்காகத்தான் கல்யாணத்துக்கு ஓக்கே சொன்னோம்! கல்யாணத்துக்கு அப்புறமா தானா அட்ஜஸ்ட் ஆகிக்கலாம்னு…”

“நிறுத்துடா!” மைதிலியின் முகத்தில் ஆதங்கம் மறைந்து கோவம் வந்தது அதுவரை மகனின் தலையைக் கோதிக்கொண்டிருந்தவர் கையை விருட்டென இழுத்துக்கொண்டார்.

“மத்தவங்களுக்காக பார்த்து முடிவெடுக்கக் கல்யாணம் என்ன விளையாட்டா? ஒரு வேளை கல்யாணத்துக்கு பிறகும் ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காமல் போயிருந்தா? ரெண்டுபேர் வாழ்க்கையும் தானே அங்கே பாழாகியிருக்கும்? விருப்பம் இல்லைன்னு அப்போவே என்கிட்டே ஏன் சொல்லலை?” மகனைக் கடிந்துகொண்டார்

“நான் அப்பாகிட்ட சொன்னேன் ஆனா அவர் வாக்கு கொடுத்த பிறகு எப்படி…அதான்…”

“அவர் வரட்டும் பேசிக்கிறேன்! யாருக்கும் என்கிட்ட சொல்லணும்னு தோணலைல” கோவமும் வருத்தமுமாக முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

‘ஆஹா வாள் போய் கத்தி வந்ததே!’
“அம்மா அப்படி இல்லை…அப்பாகிட்ட கொஞ்சம் தான் மறுத்தேன் அன்றைக்கே சம்மதம் சொல்லிட்டேன் அதான் அப்பா உன்கிட்ட சொல்லிருக்க மாட்டார்.” தன்னால் பெற்றோர்களுக்குள் ஏதாவது மனஸ்தாபம் வந்துவிடுமோ என்ற பதற்றம் அவனுக்கு.

சந்தேக பார்வையை அவன்மீது வீசியவர் “இந்த நந்தனா பொண்ணு, அவளையாவது நிஜமா பிடிச்சிருக்கா? இல்லை…”

‘ஆஹா! எப்படி மா நேரா பாயின்டை பிடிக்கிறே?’

“அம்மா!” என்று நிரஞ்சன் பதறிவிட்டான்.

“பார்க்க ரொம்ப சின்ன பெண்ணா மட்டுமில்லாம நல்ல பொண்ணா வேற தெரியுறா. உன் விளையாட்டெல்லாம் அவ கிட்ட வச்சுக்காதே சொல்லிட்டேன்.” மகனைக் கண்டித்து விட்டு “கொஞ்சம் இரு நானே சமைக்கிறேன்” என்றவர் சமையலறைக்குச் சென்றார்.

அவரைப் பின் தொடர்ந்த நிவேதா “டேய் இந்த நந்துவை கயட்டி விடப் பார்த்தே உனக்கு மொதோ எதிரி நான்தான்டா சொல்லிட்டேன்” சொன்னவள் அவனிடம் அடிவாங்காமல் தப்பித்து தன் அறைக்கு ஓடி விட்டாள்.

‘அடிப்பாவி பேபி! ஒரே நாளில் அம்மா நிவி ரெண்டு பேரையும் வளச்சுபோட்டுட்டியே!’ நம்பமுடியாமல் தலையைச் சிலுப்பிக் கொண்டவன் குளிக்கச் சென்றான்.

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நந்தனாவின் மனமோ இவன தவிர அவன் வீட்டில் எல்லாரும் நல்லவங்களாத்தான் இருப்பாங்க போல இருக்கு.’

‘என்ன நல்லவங்க ? நீயே சமச்சுக்கோங்கன்னு சொல்லிட்டாங்களே பாவம் சாப்டனோ இல்லையோ’ அவள் என்ன ஓட்டத்தைக் கலைத்தது காஞ்சனா அடித்த சடன் பிரேக்!

“என்னாச்சு…” கண்கள் விரிய உறைந்தாள் நந்தனா “ராம் …” குரலே வெளி வரவில்லை

கிட்டத்தட்ட நந்தனாவின் வீடிருக்கும் தெருவுக்குள் நுழைந்திருந்தனர். பைக்கை காஞ்சனாவின் ஸ்கூட்டியை வழிமறித்து நிறுத்தியிருந்தான் ஸ்ரீராம்.

‘இவனுக்கு பைக்கை வாங்கி கொடுத்த அப்பாவை சொல்லணும். ஆ ஊ ன்னா குறுக்கால வந்து நிக்குறதே வேலையா போச்சு!’

அண்ணனை முறைத்தபடி “என்னடா ?” எரிந்து விழுந்தாள்

“நான் உன்கிட்ட பேச வரலை! காஞ்சு நீ பண்ணது கொஞ்சமும் சரியே இல்லை” தங்கையைக் கடிந்து கொண்டவன் காஞ்சனாவை முறைக்க

“அசோ சாரி டியர்! அது இனிக்கா ? நான் மறந்து போயிட்டேன்!” காஞ்சனா அசடு வழிய

“நான் என்னன்னே சொல்லலை அதுக்குள்ள நீயா எப்படி சமாதானம் சொன்னே ?” ஒற்றை புருவம் உயர்த்தி காஞ்சனாவை மிரட்ட

நாக்கை கடித்துக்கொண்டு காஞ்சனாவோ “அது உன்னைப் பார்த்த அப்பறம் தான் டியர் ஞாபகமே வந்தது…”

ஏகத்துக்கும் கடுப்பான ஸ்ரீராமோ “நீ சொல்ற பொய்யை நம்ப நான் ஒன்னும் உன் இளிச்சவாய் அண்ணன்கள் இல்லை. நான் ஸ்ரீராம்! ” ஹெல்மெட்டை கழற்றி பைக்கின் பெட்ரோல் டேங்கின் மீது வைத்தான்

“நீ டேட்டிங் போக ஹோட்டல்ல டேபிள் புக் பண்ணிவச்சு , அவரை அங்க கரெக்ட் டைம்க்கு போக சொல்லி வம்பு பண்ணித் துரத்தி விட்டா, நீ என்ன பண்ணே ? அங்க அவரை தேவுடு காக்க வச்சுப்புட்டு, இந்த பிசாசை கூட்டிகிட்டு ஊர் சுத்துறே !”

“சாரி டா நெஜம்மா மறந்துட்டேன்” காஞ்சனா மீண்டும் கெஞ்ச

“புழுகு மூட்டை ! கல்யாணம் வேணாம்னு அவங்களை படுத்தவேண்டியது. லவ் மேரேஜ் தான் பண்ணிப்பேன்னு என்கிட்டே உடான்ஸ் விட வேண்டியது.

சரி அதையாவது ஒழுங்கா செஞ்சியா? பையனைத் தேடிதான்னு என்னை சுத்தல்ல விட்ட.தேடி தேடி நீ சொன்னமாதிரி ஒரு ஆளைத் தேடிக் கண்டு பிடிச்சு மீட் பண்ண ஏற்பாடு செஞ்சா… போ போ இனி உனக்கு இந்த வேலை நான் பார்க்கமாட்டேன்.”

“என் செல்லம் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது” மூக்கை சுருக்கி காஞ்சனா கொஞ்ச,

“வேணாம் செம்ம காண்டுல இருக்கேன். மரியாதையா இப்படியே ஓடிரு ! “ கோவமாய் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான் ஸ்ரீராம்.

“தேவையா டார்லிங் உனக்கு ? இவன் கிட்டவா பையன் தேடித்தரச் சொன்ன ? அவனை மாதிரியே சரியான சிடுமூஞ்சியா தேடித்தருவான் பரவால்லயா? லவ் லாம் நீயா பீல் பண்ணனும். இப்படி பிராக்சி போடக் கூடாது” காஞ்சனாவின் காதில் கிசுகிசுத்தாள் நந்தனா

“ஹே வாலு! உன் நிரஞ்சன் மாதிரி ஜம்முன்னு ஒருத்தன் வரட்டும் அப்போ நானே துரத்தித் துரத்தி லவ் பண்ணிக்கிறேன் இப்போ ஆளை விடு” சிரித்தபடி புறப்பட்டாள் காஞ்சனா.

‘உன் நிரஞ்சன்’ என்று காஞ்சனா சொன்ன நொடி முதல் ஏனோ தனக்குள்ளே மனம் லேசாகிப் பறப்பதைப் போல உணர்ந்து புன்னகைத்துக்கொண்டாள்.

‘ போதும் போதும் ! அவன் கல்யாணமே வேணாம்னு சொல்றான். அவன், ராம் எல்லாம் ஒரே இனம். நீ பாட்டுக்கு அவன் மேல காதல்ல விழுந்து வைக்காதே அப்பறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை ! ‘ மனம் எச்சரிக்கை செய்ய ‘ நான் சும்மா சைட் அடிக்கிறேன் வேற ஒன்னும் இல்லை’ சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை காஞ்சனா சரஸ்வதியிடம் சொல்லிக்கொண்டிருக்க ஸ்ரீராம் கோபமாய் நந்தனாவிடம்

“ஹே என்னடி இது? வீட்டுக்கே போயிருக்கே?”

“டேய் நான் வேணும்னே போன மாதிரி? அத்தைதான் நிவேதா கூப்பிட்ட உடனே கிளம்பினா”

“சும்மா காஞ்சுக்குட்டி மேல பழி போடாதே”

“நல்லதுக்கே காலமில்லை. உண்மையைச் சொன்னா நம்பமாட்டேன்னு வம்பு பண்ண என்ன செய்ய ?” என்றவள் “ஐயோ ! மறந்துட்டேன்” என்று அலறியபடி கைப்பேசியைத் தேட

“என்னத்த மறந்தே?” ஸ்ரீராம் கேட்க, அவனுக்குப் பதிலளிக்காமல் அவசரமாகத் தான் பத்திரமாக வந்து சேர்ந்ததை நிரஞ்சனுக்கு மெசேஜ் செய்தாள்.

“என்ன அவனுக்கு மெசேஜ் பண்ண மறந்தியோ?” முறைத்தபடி கேட்ட ஸ்ரீராம் “காலகாலத்துல ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகம காஞ்சு படுத்துறா, இது என்னடான்னா தம்மாத்தூண்டு இருந்துகிட்டு லவ்வாம் லவ். கலிகாலம்! “ மூணு முணுத்துக் கொண்டே டிவியை ஆன் செய்தான்.

சமையலறையில் மேடையில் அமர்ந்தபடி தோசை உண்டுகொண்டிருந்த காஞ்சனா “நிரஞ்சன் அம்மா எவளோ பாசமா பேசுறாங்க தெரியுமா ? அவன் தங்கை, நிவேதா, கொள்ளை அழகு தெரியுமா? அவளோ பெரிய பணக்கார பொண்ணு ஆனா கொஞ்சமும் பந்தாவே இல்லை. அவங்க எலலாருமே அவளோ பாசமா இருக்காங்க. நம்ம நந்தக்குட்டி ரொம்ப லக்கி” காலை ஆட்டிக்கொண்டே கணக்கில்லா தோசைகளைக் கபளீகரம் செய்துகொண்டிருந்தாள்.

சரஸ்வதி கொஞ்சம் தயக்கத்துடன் “சொன்ன கோச்சுக்காதேடா ! நாம இன்னும் அந்தப் பையனுக்கு சம்மதம் சொல்லலை. அப்படியே சொன்னாலும் முறைப்படி இன்னும் பேசலை. அதுக்குள்ள இப்படி அவங்க வீட்டுக்குப் போறது நல்லா இல்லைடா…சட்டினி போடவா?”

“போதும் வயிறு ரொம்பி போச்சு. உடம்பு முடியாம இருந்ததா சொன்னதால தான்…”

“பரவாயில்லை அதுனாலதான் நானும் நீ கேட்டப்போ சரின்னு சொன்னேன். உன் அண்ணன் கிட்ட நீ தான் சொல்லணும் சொல்லிட்டேன். நீ இன்னிக்கி இங்கேயே படுத்துக்கோ ரொம்ப லேட் ஆகுது தனியா போக வேண்டாம்.”

“நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. சீக்ரம் நிரஞ்சனுக்கு ஓகே சொல்லுற வழியைப் பாருங்க. நாமளா சல்லடை போட்டுச் சலிச்சாலும் இப்படியொரு பையனோ குடும்பமோ கிடைக்கிறது கஷ்டம்” குதித்து இறங்கி தட்டைச் சுத்தம் செய்து வைத்தாள் காஞ்சனா.

“அவளுக்கு இன்னும் வயசிருக்கு உன் கல்யாணத்தைப் பத்தி ஒரு நல்ல முடிவெடு காஞ்சனாம்மா”

“அதெல்லாம் எனக்குன்னு ஒருத்தன் இருப்பான், அவன் வரும்போது நானே ஓகே சொல்றேன்” அண்ணியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி கொஞ்சியபடி “இப்போ ஆளை விடுங்க! நான் போய் ஆர்டர் கொடுத்த துணியெல்லாம் ரெடியான்னு பார்க்கணும்.” என்றுவிட்டு நந்தனாவின் அறைக்குச் சென்றாள்.