Ninaivalai

நினைவலைகள்…

நீ பார்த்த பார்வையில்
பற்றிக்கொண்ட
தீக்குச்சி நான்…!
எரிந்துகொண்டே இருப்பேன்
மீண்டும் நீ வந்து
அணைக்கும் வரை…!

சக்கரத்தைச் சுழற்றியது போல காலம் நகர்ந்தாலும், ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் சர்க்கரை நாட்களே!

என் மூச்சு முட்டும் அளவிற்கு தன் காதலால் திணறடிக்கிறாள் என்னவள். திணறித்தான் போகிறேன் சில நேரங்களில்!

அவள் பார்வைகள் முழுதும் என்னைச் சுற்றியே! அவள் எண்ணங்கள் அனைத்தும் என்னைப் பற்றியே! அவள் தேடல்கள் எல்லாம் என்னைத் தொற்றியே! நாள்தோறும் கர்வம் கொண்டேன் அவள் காதலைப் பெற்றதற்கு.

என் ஒற்றை பார்வையும் பொக்கிஷம்தான் அவளுக்கு. என் ஒற்றை வார்த்தையும் வேதம்தான் அவளுக்கு. என் ஒற்றை புன்னகையில் உயிர் நிறைந்து போவாள். என் கண்ணசைவு போதும் அவளுக்கு என் மனதைப் படிக்க…!

எங்களுக்குத் தனிமை கிடைக்கும் போதெல்லாம் அவளை சிக்மகளூர் அழைத்துச் செல்வது என் வழக்கம். நேரம் போவதே தெரியாமல் கால் நோகும்வரை நடந்து இயற்கையை ரசிப்பது எனக்கும் அவளுக்கும் மிகப்பிடிக்கும்.

சென்ற வாரம் ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றதைக் கொண்டாட மலைமுகட்டின் உச்சிக்குதான் அழைத்துச் சென்றிருந்தேன். எங்களை விடாமல் உரசிச் செல்லும் மேகங்களும் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல வழிந்த அருவியையும் பார்க்கத் தெவிட்டவில்லை.

புல்வெளியில் கால்நீட்டி அமர்ந்து, என் தோள்மீது சாய்ந்தபடி வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாள் என்னவள். என்னவளின் குரலோடு போட்டி போட்ட அருவியின் சலசலப்பைச் சபித்தபடி நான்.

எங்கள் மோகனத்தைக் கலைக்கவென்றே வந்த மழை. நனைந்துவிடாமல் மறைத்து நின்ற பாறைச் சரிவு அடைக்கலம் கொடுக்க, குளிரில் நடுங்கியபடி மழையை ரசித்தவளை ரசிக்கத் தொடங்கியது என் பார்வை. பார்வை உளியின் பரிபாஷை கண்டு பாவையும் சிலையானாள்.

என் கண்ணசைவில் மனம் சாய்ந்து, பார்வை ஸ்பரிசத்தில் சுயம் மறந்து பெண்மை தவிக்க, என் மார்பில் சாய்ந்தவளை வளைத்தது என் கரங்கள்.

வார்த்தைகளற்ற பொழுதுகள், மனதின் நேசம் கண்ணில் மின்ன, வெட்கப் போர்வை கொண்டு முகம் மறைத்தவளை, என் விரல் தீண்டா ஸ்பரிசங்கள் உள்ளம் தொட்டு உயிரைத் தாக்க, மேலும் என்னுள் ஆழப் புதைந்தவளை இறுக்கிக் கொண்டேன்.

கடக்கும் நொடிகளில் எனக்குள் கரைந்த அவளைத் தேடிக் கண்டெடுக்க முடியாமல், உயிரில் கலந்து உணர்வுகளின் உச்சத்தில் நிற்பது எனக்கும் புதிதுதான்.

உடல்கள் இணைவது மட்டுமா கலவி…? உள்ளங்கள் ஒன்றிணைவதும் கலவிதானே! நொடிகளோ… நிமிடங்களோ… யுகயுகமாய் வாழ்ந்த உணர்வு இருவருக்கும்.

உறவும் உணர்வும் இருந்தாலும் உரிமையில்லையே லேசான குற்றவுணர்வு எனக்குள். அவள் சுண்டு விரலைத் தீண்டுவதானாலும் இனி உரிமையோடு மட்டுமே… உறுதிபடுத்திக் கொண்டேன் என்னுள். தாமதிக்காமல் அவளை உரிமையோடு என்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவை அப்போதுதான் எடுத்தேன்.

அதற்குத் தோதாய் தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு என்று என்னை ஊருக்கு வரச் சொன்னவர்கள், என் திருமண விஷயத்தை எடுக்க, அவனிடம் நான் பேசிக் கொள்கிறேன் என்று ஆச்சிதான் துணை நின்றார் எனக்கு.

உண்டு உறங்கி ஓய்வுக்குப் பின் ஆச்சியின் அறைக்குதான் சென்றேன். அமர்ந்திருந்த ஆச்சியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்ள, மெல்ல வருடியவர்… “உன் மனசுல என்ன இருக்கு ராசா? என்கிட்ட சொல்லுய்யா. நீ எதையோ மனசுல வச்சு மருகுறது எனக்குத் தெரியுதுய்யா.”

மெல்ல வாய் திறந்தேன், “ஏன் ஆச்சி, ரொம்ப வயசு வித்தியாசத்துல கல்யாணம் பண்ணக் கூடாதா?” புரியாமல் குழப்பமாய் பார்த்தவரிடம்,

“பத்து வருஷ வித்தியாசத்துல.”
ஏதோ புரிந்தும் புரியாத நிலை அவருக்கு. “ஏன் பண்ணக்கூடாது? எனக்கும் உன் தாத்தனுக்கும் 13 வயசு வித்தியாசம். உன் பெரியம்மா பெரியப்பாவுக்கு 9 வருச வித்தியாசம். நாங்கலாம் நல்லா குடும்பம் பண்ணல?”

துள்ளி எழுந்தவன், “நிஜமாவா ஆச்சி?” கவலையெல்லாம் அகன்றது போல இருந்தது எனக்கு.
“நிசம்தான்யா. உன் மனசுல யாரோ இருக்கான்னு தெரியுது. யாரு ராசா அந்தப் பொண்ணு?”

“பூரணி” மயிலிறகைத் தொடுவது போல மென்மையாய் வந்தது அவள் பெயர்.

“யாரு? மாதவி உறவுக்காரப் புள்ளையா? அந்தப் புள்ளைக்கும் விருப்பமாய்யா?”

“ஆமாம் ஆச்சி. ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் உயிரையே வச்சிருக்கோம். நீங்கதான் பேசி அப்பாகிட்டயும் பெரியப்பாகிட்டயும் சம்மதம் வாங்கித் தரனும்.”
அதன்பின் மளமளவென காரியங்கள் நடந்தன. ஒற்றை ஆளாய் நின்ற ஆச்சியுடன் என் மாமன்களும் அக்காள்களும் சேர்ந்து கொள்ள, பெரியவர்களைச் சம்மதிக்க வைப்பது எளிதானது.

பூரணியின் வீட்டில் பெண்கேட்டு எளிமையாக நிச்சயம் மட்டும் முடித்து விடுவது. பின்னர் பூரணி படிப்பை முடித்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தாமதிக்காமல் வினோத்துக்கும் மாதவிக்கும் தகவலைச் சொல்லிவிட்டு அனைவரும் பெண் கேட்க திருவண்ணாமலை கிளம்பினோம்.

இளையவர்கள் அனைவருக்குமே இந்தச் செய்தி கொண்டாட்டமாய் இருக்க, தயங்கிய பெரியவர்களைப் பேசிச் சரிகட்டினார் ஆச்சி.

“வயசுல மூத்தவங்கள கல்யாணம் பண்ணாதான் விட்டுக்குடுத்து குடும்பம் நடத்துவாங்க.

சிறுபிள்ளையத் தாங்கி வச்சிக்குவாங்க. குத்தம் குறையிருந்தாலும் பெருசு பண்ணாத மனசு இருக்கும்.

அந்த காலத்துல எல்லாம் வயசா பார்த்தாங்க? என் பேரனுக்கு உங்க புள்ளைய ரொம்ப பிடிச்சுப் போச்சு அந்தப் புள்ளைக்கும் அவனை பிடிச்சுப் போச்சு. கல்யாணம் பண்ணா கண்ணுல வச்சு தாங்கிப்பான். தயங்காம கட்டிக் குடுங்க.”

ஆச்சி போட்டபோடில் அனைவரும் ஒத்துக் கொண்டாலும் பூரணியின் அம்மா மட்டும், “அவ ரொம்ப சின்ன பொண்ணு. இப்பதான் படிக்கிறா. அதுக்குள்ள கல்யாணம்னு நாங்க யோசிக்கவே இல்லை.”

“அவ படிக்கட்டும் ஆன்ட்டி. மேல என்ன படிக்க விரும்புறாளோ அதை நானே கண்டிப்பா படிக்க வைப்பேன். அவ படிப்பு முடிந்ததும் கல்யாணம் வச்சுக்கலாம். நான் காத்திருப்பேன்.”
அதன்பிறகு என்னை மறுத்துப் பேச எதுவுமில்லை அவர்களுக்கு.

எல்லோருக்கும் ஒரு மனதாகப் பிடித்துப் போக, நிச்சயம் நடத்த நாள் குறித்தனர். குடும்பம் மொத்தமும் குதூகலித்த தருணங்கள் அவை.
பூரணியிடம் சொல்கிறோம் என்றவர்களைத் தடுத்துவிட்டேன்.

நானே நேரடியாக அவளது முகத்தைப் பார்த்து சொல்ல வேண்டும் அதைக்கேட்டு கண்களும் முகமும் ஒருசேர ஜொலிப்பதைப் பார்க்க வேண்டும் எனக்கு.

தாத்தாவைப் பார்க்கப் போகிறேன் என்று மட்டுமே சொல்லியிருந்தேன் அவளுக்கு. திருமணச் செய்தி தெரியாது. இந்த செய்தியைக் கேட்டு அகமும் முகமும் மலரச் சிரிப்பவளை இதயத்தில் சிறை செய்துகொள்ள வேண்டும்.

தாமதிக்காமல் அங்கிருந்தே பெங்களூரு கிளம்பிவிட்டேன். வழக்கம் போல காவிரிக் கலவரமாம். ஓசூர் பார்டரில் நிறுத்தி வைத்து என் பொறுமையை சோதிக்கின்றனர்.

ஐந்து மணிநேரமாக காத்திருக்கிறேன்.
நேற்றே அவளிடம் இன்று வந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தேன். எனக்காகக் காத்திருப்பாள் என்னவள்.

அலைபேசியிலும் பிடிக்க முடியவில்லை. நேரமாக ஆகத் தவிப்பாய் இருக்கிறது. திருமணம் முடிவான செய்தியைக் கேட்டதும் துள்ளிக் குதிப்பவளைப் பார்க்க மனம் ஏங்குகிறது.

சூரியனைக் கண்ட மலராய் அவள் முகம் விரிவதைப் பார்க்க வேண்டும். ‘என் இரண்டு வருடத் தவம் முடிவுக்கு வந்தது பெண்ணே! இனி உன் உள்ளும் புறமும் எனக்கு மட்டுமே உரிமை பெண்ணே!’ என்று உரக்கச் சொல்லித் தழுவிக் கொள்ள வேண்டும் அவளை.

இதோ பேருந்துகள் புறப்படத் தயாராகி விட்டன. இன்னும் சில மணி நேரங்கள்தான். என்னவள் முகத்தை தரிசித்து விடுவேன்.

திருமணச் செய்தியைக் கேட்டதும் என்னவள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியைப் பதிவு செய்கிறேன்! காகிதங்களே! காத்திருங்கள்…

அலை ஓய்ந்தது…
.

error: Content is protected !!