மாடிவீடு – 20
அன்புவிடம் பேசிச்செல்லும் அமுதனை யோசனைப் பொங்கப் பார்த்திருந்தார் ஆலமரத்தான்.
‘எப்படி இவன் வந்தான்? நாந்தேன் டாட்டருட்ட சொல்லிட்டு வந்தேனே? இவனை இங்க விட்டுட்டு, அங்க அவன் என்ன பண்ணிட்டு இருக்கான்’ யோசித்தவர்,
‘அன்பு இங்க அமுதன் கிட்ட பேசிக்கிட்டு இருக்கா? அப்போ அழகு நான் கொண்டு வந்த மாப்பிள்ளை பற்றி அவகிட்ட சொல்லலியா?’ எதுக்கும் அழகை பார்த்து பேசிட்டு ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்’ எண்ணியவர் வீட்டை நோக்கி சென்றார்.
அங்கும், இங்கும் உறுமலுடன் நடந்துக்கொண்டிருந்தார் ஆலமரத்தான்.
நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் தமிழ்.
‘அப்பா என்ன எண்ணிக்கொண்டிருக்கிறார்’ என்று அவளுக்கு தெரியவில்லை.
‘ஏதாவது செய்யவேண்டும்’ எண்ணியப்படியே தன் அறையில் அமர்ந்திருந்து ஆலமரத்தானை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்த ஆலமரத்தான், யோசனை வந்தவராக அழகை கையோடு அழைத்து வரும்படி சமயல்காரனை அனுப்பினார்.
அமுதன் கூறியவற்றை தன் அண்ணனிடம் கூறிக் கொண்டிருந்தாள் அன்பு.
சமையல்காரர் வரவும், அவரை நோக்கி வந்தவனை கையோடு அழைத்து போனார் சமையல்காரர்.
“ஐயா!”
“ஐயா! வரச் சொன்னீகளாமே?” மெதுவாக வினவினான்.
அழகு பணிவாக கைகளைக் கட்டியபடி அவரையே பார்த்து நின்றான்.
“சாப்ட்டியா அழகு?”
“ஆச்சுங்க ஐயா?”
“ம்ம்… அன்பு என்ன சொல்லுது? அதுக்கிட்ட பேசினியா? அன்பு எப்படி இருக்குது?”
அன்பு பேரைக் கேட்டவும் கொஞ்சமாய் பயம் வந்தது அழகுவுக்கு,
ஆனால், இப்பொழுது அன்புவை விசாரிக்கவுமே தெரிந்துவிட்டது, ஏதோ பயங்கரமாய் நடக்கப்போகிறது.
“ஐயா, அன்பு சின்ன பொண்ணு, அது தெரியாம ஏதோ பண்ணுது மன்னிச்சுபோடுங்க?” விஷயம் விபரீதமாய் போகும் முன் அணை போட எண்ணினான்.
எல்லாம் காலாகாலத்துல சரியா நடத்திப்போடணும் அழகு. கையைமீறிப் போனா, நாம ஒன்னும் செய்யமுடியாது”
“நீங்க சொல்லுறதும் சரிதானுங்க”
“அப்புறம் என்ன? இன்னும் அமைதியா இருந்தா எப்படி, மாப்பிள்ளைப் பையனைப் பத்தி அன்புகிட்ட பேசினியா? அது என்ன சொல்லுது?”
“அன்பு கல்யாணம் வேண்டாம்னு சொல்லுது”
“அட! எந்த புள்ளத்தேன் கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்லும், நாமத்தேன் சரியா நடத்திப்போடணும்… இங்காரு அழகு நான் உன் நல்லதுக்குதேன் சொல்லுதேன். அந்த பையனுக்கு முடிச்சிப்போடு, இல்லீனா சொல்லு வேற பாக்கலாம்?”
அவரின் பேச்சு சாதுரியத்தை கண்டபடி அதிர்ந்து நின்றிருந்தாள் தமிழ்.
ஒற்றை கரம் நீட்டி தடுத்தவர்,
நாளைன்னைக்கு உன் சாதிலையே ஒருத்தன் என் சொக்கார் பொண்ணை கேட்டு வருவான் இப்படி எல்லாரும் வர நான் அனுமதிக்கமாட்டேன் அழகு.
மெதுவாக அவனை நோக்கி நெருங்கினார்,
சரி… உனக்காக, நீ கேட்டதுக்காக இன்னும் ரெண்டு நாளு கூட்டித்தாரேன்… அன்புவை ஒரு நல்ல முடிவெடுக்க சொல்லு…
என்னை மீறி ஏதாவது நடந்தது, நடத்திக்காட்டனும்னு நீ நினைச்ச அடுத்த திங்கக்கிழமை உன் சாதிசன குடிசை ஒன்னும் இருக்காது, அதில் உன் தங்கச்சியும் இருக்கமாட்டா. நான் சொல்லுறது புரியும்னு நினைக்கிறேன். போ போய் உன் தங்கச்சியை ஒரு நல்ல முடிவெடுக்கசொல்லு”
ஒவ்வொரு வார்தைகளும் நிறுத்தி நிதானமாக நெருப்பு துண்டங்களாக அழகு மேல் தெறித்தன.
‘தன் ஐயாவா இது? தன் மேல் உயிரையே வைத்திருக்கும் ஐயாவா?’ அழகு அப்படியே அதிர்ந்துப் போனான்.
நா உலர்ந்தது,
கண்கள் நிலைகுத்தி வேரோடின,
‘அன்பு இருக்கமாட்டாளா? நான் தோளிலும் மாரிலும் போட்டு வளர்த்த என் குழந்தை இருக்கமாட்டாளா?’ அவனால் தாங்கமுடியவில்லை.
அசையாத கால்களை இறுக்கி பிடித்து திரும்பி நடந்தான்.
வீட்டில் வேலை செய்பவர்கள் ‘என்ன செய்யப்போகிறாய்’ என அவனை பரிதாபமாய் பார்த்ததுப் போல் இருந்தது.
கண்களில் நீர் வடிந்துக் கொண்டிருந்தது.
ஆலமரத்தான் பேசிய அத்தனையும் தனக்கு பேசியதாய் தெரிந்தது. அப்படி என்றால், என் விஷயம் தெரிந்தால் அழகு உயிருடன் இருக்க மாட்டானா?
வேண்டாம் என் அழகு உயிருடன் இருக்க வேண்டும்,
அவன் உயிருடன் இருக்க வேண்டும் என்றால், எனக்கு இந்த காதல்…
காதல்?
காதல் வேண்டும், அழகு வேண்டும் இந்த சமூகம் வேண்டாம்.
மனிதனின் மனத்தை அறியமுடியாத இந்த சமூகம் எனக்கு வேண்டாம்,
‘இந்த சமூகத்தில்தான் உன் அப்பா இருக்கிறார் தமிழ், அவரை விட்டு உன்னால் வரமுடியுமா?’ மனம் கேள்வி எழுப்பியது.
‘அப்பா’
‘அப்பா’ என்ற அந்த மூன்று எழுத்தில் அவளின் காதல் என்னும் மூன்றெழுத்தும் உயிர் என்னும் மூன்றெழுத்தும் அடங்கி இருந்தது.
யாரை விட? யாரை சேர்க்க? தவித்துப் போனாள் தமிழ்.
****************************************
அழகிடம் பேசிவிட்டு நேராக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் ஆலமரத்தான்.
“என்ன பண்ணிட்டு இருக்க நீ? நான் என்ன சொன்னேன் நீ என்ன பண்ணிருக்க?”
“அது வந்து,”
“நீ வரவும் வேணாம், போகவும் வேணாம், அவனை எழும்ப விடாதேன்னு தான சொல்லிட்டு போனேன்? எனக்கு முன்னுக்க அவன் அங்க வந்து நிக்குதான். இதேன் நீ வேலைபாக்குற லட்சணமா?”
“நான் சொல்லுறதையும் கொஞ்சம் கேளுங்களேன், நான் பாக்கும் வரை ரெண்டு பேரும் எழும்பவே இல்லை. எழுந்த பிறகுதேன், டோஸ் குடுக்கணும்னு இருந்தேன். சின்ன கேஸ் வந்ததுல நான் வெளிய வந்துட்டேன், அதுக்குள்ள அந்த பய எழுந்து வெளிய போயிருக்கான், நான் என்ன பண்ணட்டும்?”
“சரி… சரி… இப்போ அவனுங்க எங்க?”
“அவன் வந்ததும் மயக்க ஊசி போட்டாச்சு, ரெண்டு நாளுக்கு போட்டிருக்கேன், அடுத்து எழுந்ததும் அடுத்த டோஸ் போடுறேன், ஒரு வாராதுக்கு நீங்க சொன்ன போல வெளிய வரமாட்டாங்க, என்னை நம்புங்க”
“சரி… சரி… எதுக்கும் என் ஆள் ஒருத்தனை இங்க விட்டுட்டு போறேன், கவனமா பாத்துக்கோங்க” கூறியவர் மேலும் சில பணத்தை அவர் கையில் திணித்து சென்றார்.