LogicIllaMagic5

LogicIllaMagic5

மேஜிக் 5

அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த ஜெகந்நாதன் தன் மகன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்றிருப்பதைக் கண்டு திகைத்து நின்றார் என்றால், நிரஞ்சனோ அவரை அங்கு சற்றும் எதிர்பாராததால் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

இதற்கிடையில் நந்தனாவோ சாதாரண ஃபார்மல் உடையில், டாக்டர் கோட்டின்றி, ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்து நின்ற அவரைக் கண்டு நிரஞ்சனிடம் குசுகுசு வென ரகசியம் பேசும் குரலில்

“சார் ! உங்களைப் பார்க்கப் பேஷண்ட் வந்திருக்கிறார் போல இருக்கு. நான் வெளியிலே வெயிட் பண்றேன்” என்று வெள்ளந்தியாய் சொன்னாள்.

இது எதுவும் காதில் விழாதது போல அதிர்ச்சியிலிருந்தவனோ திக்கித்திணறி “அ…அப் …நான்…இவ…” மென்று விழுங்க

மகனைச் சுட்டெரிப்பது போல முறைத்த ஜெகந்நாதன் சட்டென்று முகத்திலிருந்த கடுமையை மாற்றிக்கொண்டு, நந்தனாவை நோக்கி “நீ தான் என் பையன் விரும்புற பொண்ணு நந்தனாவா?” பார்க்கக் கம்பீரமாக இருந்தாலும் கனிவான குரலில் அவர் கேட்க

நந்தனாவோ ‘ஆமாம்….இல்லை’ என்று தலையை மேலும், கீழும், வலதும், இடதுமாய் எல்லாப்புறமும் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல அசைத்தவாறே, மிரட்சியுடன் நிரஞ்சனை பார்க்க.

அவனோ புருவத்தை உயர்த்தி கண்ணால் எதோ ஜாடை காட்ட, குடு குடுவென ஓட்டமும் நடையாய் சென்ற நந்தனா பொத்தென அவர் காலில் விழ,

‘அடிப்பாவி!’ நிரஞ்சன் கண்கள் விரிய உறைந்து நின்றான்!

செய்வதறியாது நிரஞ்சன் தந்தையின் முகத்தைப் பார்க்க, அதே நொடி அவரோ அவனைக் கூர்ந்து பார்த்தார். அதில் ஏதோ உணர்ந்தது போல் ஓடிச்சென்று அவனும் நந்தனாவின் அருகில் தந்தையின் காலில் விழுந்தான்.

அவர் வாழ்த்தியப்பின், நிரஞ்சன் நந்தனாவை முறைத்தபடியே எழுந்தான்.

‘இன்னும் எதுக்குடா முறைக்குறே?’ மனதில் முணுமுணுத்தபடி எழுந்த நந்தனா, உள்ளே எதோ தோன்ற,

“நன்றி மாமா!” அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அவள் கொஞ்சலாய் சொல்ல ஏனோ அதில் குளிர்ந்து போனாற்போல் “நல்ல பெண்ணா இருக்கியே மா ! என்ன படிக்கிறே? நீ ஸ்டுடென்ட்ன்னு வைஷாலி சொன்னா” பாசமாய் அவர் கேட்டதுதான் தாமதம்.

“நான்…” என்று துவங்கியவள் கல்லூரி படிப்பு துவங்கி குலம், கோத்திரம், குடும்பம் என்று தன் சரித்திரத்தையே ஒப்புவிக்க

அதில் ஏகத்திற்கும் கனிந்தார் விஷ்ணு.

நிரஞ்சனோ இமைக்க மறந்து இருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘எதோ சுயசரிதை கேட்ட மாதிரி இவளோ விளக்கம் சொல்லனுமா? என்ன படிக்கிறேன்னு தானே கேட்டார் ! இன்டெர்வியூ எடுக்கிறமாதிரி எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு லூசு, லொட லொட்டை !’

மனதிற்குள் நந்தனாவை அர்ச்சித்தவன் மெல்லத் தந்தையைப் பார்க்க, அதுவரை நந்தனாவை கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தவர் இவன் பக்கம் திரும்பும் பொழுதுமட்டும் அந்தப் பார்வையில் கனிவு காணாமல் போய்க் காட்டேறி குடிகொண்டது.

‘சும்மா போன சாத்தானைச் சண்டைக்கு இழுத்துவிட்டாளே! என்னடா இது ? சரி சமாளிடா…சமாளி!‘

“அப்பா! நான் பேபி பத்தி உங்ககிட்ட…” ஆரம்பித்தவன் நந்தனாவை தந்தையிடமே பேபியென்று குறிப்பிட்டதை உணர்ந்து கண்களை இருக்க மூடி நெற்றியைத் தடவிக்கொள்ள

அதே “பேபி” என்ற வார்த்தையில் ஜெகந்நாதனும் நந்தனாவும் திகைக்க

‘ அட லூசே உங்கப்பாகிட்ட என்னடா பேபி வேண்டிக்கிடக்கு!’

நிரஞ்சனை ஏகத்துக்கும் முறைத்துவைத்தாள் நந்தனா.

ஜெகந்நாதனோ எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாத குரலில் நிரஞ்சனை பார்த்து

“நான் வீட்டுக்குக் கிளம்பறேன். நீ நந்தனாவை அவங்க வீட்டுல விட்டுட்டு வா”

நந்தனாவை பார்த்து மெல்லிய புன்னகையுடன் “வரேன் மா!“ என்றவர் மீண்டும் நிரஞ்சனை முறைத்துவிட்டு இருவர் பதிலுக்கும் காத்திராது விறுவிறுவெனச் சென்றுவிட்டார்.

நிரஞ்சனும் நந்தனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக சிலநொடிகள் நின்றிருக்க.

நந்தனா மெல்லத் தயங்கியபடி “சா…ர்! “ என்று அழைக்க

நிரஞ்சன் கொலைவெறியுடன் அவளைப் பார்த்த பார்வையில் அதிர்ந்தவள் தலைகுனிந்து மௌனமானாள்.

‘எப்போ பார்த்தாலும் என்ன முறைப்பு? டுபுக்கு’ அவனை வெய்தவாரே முகம் சுருக்க

அந்த அறையே அதிரும் குரலில் “வா! “ என்றவன் கடுகடுவென முன்னே நடக்க அவளும் பின்தொடர்ந்தாள்.‘முறைக்க வேண்டியது நான். இவன் எதுக்கு இத்தனை ஸீன் போடறான்?’ கண்களை உருட்டியவள் அமைதியாக அவனை பின் தொடர்ந்து,

‘கொஞ்சம் மெதுவா நடந்தா என்ன? எந்த ரயிலை பிடிக்க இந்த ஓட்டம்? கால பாரு நீளமா பக்கத்துக்கு ஊருவரைக்கும்! டேய்… இருடா ஓடமுடியல…’ குடுகுடுவென ஓட்டமும் நடையுமாக அவன் வேகத்திற்கு நடக்க முடியாமல் திணறியபடி சென்றாள்.

நிரஞ்சனின் காரில் ஏறியபின் சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தவள்

மெல்ல மெல்ல அவள் “சா…ர்!” ராகத்துடன் அழைக்க

நிரஞ்சனோ கோவமாய் “சும்மா இரு ! வாய திறந்தே அவளோதான் ! “ என்று எரிந்து விழுந்தான்.

கொஞ்சமும் பயம் இல்லாமல் அவனைப் பார்த்தவளோ “சரி சார்! “ என்று பள்ளிக்கூட பிள்ளைபோல வாயில் விரல் வைத்துக்கொண்டாள்.

அதை ஓரக் கண்ணில் பார்த்தவன் முகத்தில் தன்னையும் மீறி இழையோடிய புன்னகையை மறைக்க, மெனக்கெட்டு முகத்தில் கடுமையை இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டான்.

கார் சாலையில் சீரான வேகத்தில் போய்க்கொண்டிருக்க,அவள் மெல்லிய குரலில் “சார்!”

அவனோ “ம்ம்” அதுகூட கோவமாகத்தான் வெளிப்பட்டது

நந்தனாவோ “என் வீடு எங்க இருக்குன்னு தெரிய வேணாமா? நீங்க பாட்டுக்குப் போறீங்க?” என்று நக்கலாய் கேட்க

“நீ சொல்ல வேண்டியது தானே? ஏன் கம்முன்னு இருந்தே? வாயில என்ன கொழுக்கட்டையா? ” அவளையே அவன் சாட

அவனை ஏகத்திற்கும் முறைத்தவளோ “நீங்கதானே சும்மா இருக்க சொன்னீங்க?” அவள் அவனையே பதிலுக்குச் சாடினாள்.

‘பெரிய புத்திசாலின்னு நினைப்பு!’

“சரி உங்க வீட்டு அட்ரஸ் சொல்லு. எந்த ஏரியா?”

அவனிடம் தன் வீட்டு விலாசத்தைச் சொன்னவள் சிறிய அமைதிக்குப் பின்

“சார்…” என்றிழுக்க

“ம்ம்…”

“வீடுவரைக்கும் வரீங்க…”

“அதுக்கு?”

“அப்படியே எங்க வீட்டுல உண்மையை சொல்லிடீங்கன்னா…” உதட்டைக் கடித்துக்கொண்டாள்.

அவள் பக்கம் வெருட்டெனத் திரும்பியவன்“ இப்போ அதுவா முக்கியம்?” என்று முறைக்க

‘ வேற எதுடா முக்கியம்? என்ன கேள்வி இது கேனத்தனமா?’ மனதில் பொங்கியவள், ‘நமக்கு வேலையாகணும் அதுவரை பொறுமை நந்து…பொறுமை’ கோவத்தை வெளிக்காட்டாது

“எப்படியும் நீங்க வீட்டுக்கு வந்தா யாருன்னு கேட்கமாட்டாங்களா என்ன? நான் இப்போ ஒன்னு சொல்லி…பின்னாடி ஒன்னு சொல்லி… நடுவுல அத்தை எதான சொல்லி…அதைச் சமாளிக்க நாம வேற ஒன்னை சொல்லி…” என்று அடுக்கிக் கொண்டே போக

உப்ப்ப் என்று சத்தமாக வாயால் மூச்சை விட்டவன் “எத்தனை சொல்லி?” கடுகடுக்க

“அதுக்கு நீங்க பேசாமல் உண்மையைச் சொல்லி….” அவள் முடிக்கும் முன்பே காரை வேகமாய் சாலையோரம் நிறுத்தினான்.

“பேபி ப்ளீஸ்! புரிஞ்சுக்கோ! இன்னிக்கி நீ என்ன செஞ்சுவச்சுருக்கேன்னு கொஞ்சமான ஐடியா இருக்கா? “

“எதுக்கு என்னை பேபி பேபின்னு கூப்பிடுறீங்க ? நந்தனான்னு இல்லை நந்துனு கூப்பிடுங்க! “ கடுகடுத்தாள்.

“இப்போ இது ரொம்ப முக்கியமா?” அவன் பொறுமை இழக்க

“இல்லையா பின்ன ?”

“நந்து என்னதான் உன் பிரச்சனை?”

“பேபி சொல்லாதீங்க சார் ! “

“……”

“இதோ பார் பேபி…சாரி! நந்து…ச்சே ! “ ஏனோ வெறுப்பாய் திரும்பிக் கொண்டவன் மெளனமாகச் சாலையை வெறித்து அமைதியானான்.

“சார் என்னனு சொல்லுங்க!”

“…”

“சார்…”

கண்களை இருக்க மூடியவன் கடுப்புடன் “என்னத்த சொல்லணும் ?”

‘எதையோ சொல்ல வந்தியே அதை சொல்லித்தொலை!’ என்று சொல்லவந்தவள் “நீங்க எதையோ சொல்ல வந்தீங்களே அதை…” தணிந்த குரலில் சொல்ல

அவள் புறம் திரும்பியவன் “லுக் நந்து, நீ இன்னிக்கி செஞ்சது ரொம்ப தப்பு !”

“அதுக்குதான் சாரி சொன்னேன்ல ?”

“நீ தெரிஞ்சுதான் பேசுறியா? இதை மொதல்ல சொல்லு. நீ அவர் கால்ல எதுக்கு விழுந்தே?” கேட்டவனின் முகம் கோவத்தில் குங்குமமாய்ச் சிவக்க

“நீங்க எதுக்கு கண் ஜாடை காட்டினீங்க?” எல்லாம் உன் தப்பு என்ற குற்றம்சாட்டுவது  போல கேட்டாள்.

‘உனக்குப் புரியாதுன்னு எனக்குப் புரிச்சுக்க அறிவில்லை காட்டி தொலைச்சேன்! ‘ பதில் சொல்லாமல் சாலையை மீண்டும் வெறித்தான்.

“சார் ! “

“ம்ம்”

“சரி சார்! வாங்க மொதல்ல உங்க அப்பாவை பார்க்கப் போகலாம் ! “ அவள் சர்வ சாதாரணமாகச் சொல்ல, அதிர்ந்து திரும்பியவன்

“ஒடச்சதெல்லாம் பத்தாதா ? “ கோவம் குறையாமல் கேட்க

“சினிமா பாக்க மாட்டேன்னு சொன்னீங்க?”

“அதுக்கென்ன?”

“இல்ல வடிவேலு டைலாக் சொல்றீங்க? “ சந்தேகமாகக் கேட்க

‘பொறுமை பொறுமை’ தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்

“இது இப்போ தெரிஞ்சே ஆகணுமா ?” நிரஞ்சன் கொலைவெறியுடன் கேட்க, மிரண்டவளோ

“இல்ல…வடிவேலு டயலாக் எப்படி தெரியும்னு சொல்ல வேணாம், பரவால்லை !” அவசர அவசரமாகக் கையை வேண்டாமென்று ஆட்டியபடி அவள் சொல்ல

“கடவுளே!” தலையைப் பிடித்துக்கொண்டவன் “உனக்குக் கொஞ்சமும் சீரியசா இருக்கத் தெரியாதா பேபி?” கடிந்துகொண்டான்

“பேபி சொல்லாதீங்க சொன்னேன்ல!”

“நந்து…” கத்தியே விட்டவன் “ப்ளீஸ் நந்து! எப்படியோ கூப்டுட்டு போறேன் விடேன்… நீ வைஷாலிகிட்ட உளறி வச்சதையே நான் எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலை. போதாத குறைக்கு அப்பாக்கு வேற தெரிஞ்சு போச்சு“ என்று சாலையை வெறித்தவன் தொடர்ந்தான்

“நானே வீட்டுக்குப் போனா எல்லாரையும் எப்படி சமாளிக்கிறதுன்னு ஏற்கனவே குழப்பத்துல இருக்கேன்! நீ வேற இப்போ…”

இடையில் நந்தனாவின் தொலைபேசி ஒலிக்க “சார் ஒரு நிமிஷம்! “ என்றவள் அழைப்பை ஏற்க

“சொல்லுமா! “

“ம்ம்ம் பிரெண்டை பார்க்கப் போனேன். அதான் லேட் ஆச்சு. இன்னும் 5 , 10 நிமிஷத்துல வந்துருவேன் மா! “

“அதான் வந்துருவேன்னு சொல்றேன்ல? வை” அழைப்பை அவள் துண்டிக்கும் முன்பே நிரஞ்சன் காரை மீண்டும் செலுத்தத் துவங்கினான்.

சிறு அமைதிக்குப் பின் “சார்…”

“ம்ம்”

“போர் அடிக்குது! “

தான் கேட்பதை நம்பமுடியாமல் அவள் புறம் ஒரு நொடி திரும்பியவன் ‘ எப்படித்தான் இவளால் இப்படி இருக்க முடியுது? எவ்ளோ பிரச்சனை கெடக்கு, இதுல போர் அடிக்குதாமே!’ ஏதும் பேசாது வாகனத்தை ஒட்டிக்கொண்டிருந்தான்.

“சார்”

“சொல்லு”

“ரேடியோ போடுங்களேன் ப்ளீஸ்…”

ஏதும் சொல்லாது பிளேயரை ஆன் செய்தான். ஆங்கிலத்தில் எதோ ஒலிக்கத் துவங்கியது. என்னவென்று கூர்ந்து கவனித்தாள், எதோ மருவ சம்மந்தப்பட்ட உரை என்பது மட்டும் புரிந்தது.

“என்ன இது?” தயங்கியபடி அவள் கேட்க

“ஆடியோ புக்(ஒலி வடிவிலான புத்தகம்)”

“புக் படிக்க மாட்டிங்களா ? படிச்சா தானே நாம கற்பனை பண்ணி கதைக்குள்ள பயணிக்க முடியும்?” சந்தேகமாய் கேட்க

“கதையா? அம்மா தாயே அதெல்லாம் படிக்க என்னக்கு நேரமில்லை! இது மெடிக்கல் ஆடியோ புக் வண்டில போகும்போது கேட்பேன்” என்றவன் தானாகவே அதை மாற்றி ரேடியோவை ஆன் செய்தான்

♪ நீ அழகா பத்த வைக்கிற பதற வைக்கிறியே
இது முறைதானா… (அப்படிப் போடு போடு…) ♪

பாடல் ஒலிக்க

நந்தனாவோ ‘நமக்குன்னு எழுதுறாங்க போல இருக்கே! இவன் பத்தவச்சுட்டு என்னை சள்ளுபுள்ளுன்னு எரிஞ்சு விழறான்!’

அவள் யோசித்து முடிக்கும் முன்பே அவன் அலைவரிசையை மாற்றி இருந்தான்

“அந்தப் பாட்டு பிடிக்கலையா சார்?”

“இப்போ அதை கேட்க மூடில்லை…” ஒவ்வொரு அலைவரிசையாய் மாற்றியவன் எதுவும் பிடிக்காமல், வேறு சிடியை ப்ளே செய்தான்.

♪ என்னை விட்டு ஓடிப்போக
முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர்
இனி தெரியுமா …தெரியுமா

என்னை விட்டு ஓடிப்போக
முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர்
இனி தெரியுமா …தெரியுமா ♪

பாடல்வரிகள் மெல்லத் துவங்க, திகைத்த நந்தனா ‘அடப்பாவி வேணும்னே போடறானோ? என்னடா சொல்ல வரே?’

நிரஞ்சனோ வெறுத்தே விட்டான் “சுத்தம்…இதுவும் சதி பண்ணுதே ஆண்டவா!”

அடுத்த பாடலுக்கு மாற்ற

♪ ஒண்ணுமே புரியலே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது…♪

வெடுக்கென்று ஆஃப் செய்துவிட்டு “சாரி கொஞ்சம் தலைவலி அதான்…” சொன்னவாறே காரை சற்று வேகமாக ஓட்ட துவங்கினான்.

“பரவால்லை சார்” என்றுமட்டும் சொல்லிவிட்டு சாலையை வேடிக்கை பார்த்தபடி இருந்த நந்தனாவின் மனமோ

‘ பாவம் என்னால தான் தலைவலி போல இருக்கு. அவன் கல்யாணம் பண்ணிக்கபோற பொண்ணுக்கிட்டயே உளறி வச்சுருக்கேன்… நான் சரியான லூசு தான் போல இருக்கு’ மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டாள்.

‘இதுல இவன் அப்பாக்கு வேற தெரிஞ்சுபோச்சு. இன்னிக்கி நம்ம வீட்டுல உண்மையை சொல்லிட்டு, நாளைக்கு இவன் வீட்டுக்கே போய் எல்லாத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்கணும்! ‘ மனதில் முடிவெடுத்துக்கொண்டாள்.

அவள் வீடிருக்கும் தெருவுக்குள் நுழைந்ததை கூடக் கவனியாமல் யோசனையாய் இருந்தவள் நிரஞ்சனின் அழைப்பில் சுய நினைவிற்குவர

“எந்த வீடு?”

“கடைசியில் இடதுபக்கம் இருக்கிற வீடு…” அந்தத் தெருவில் கடைசியாய் இருக்கும் தன் வீட்டை அவனுக்குக் காட்டினாள்.

“தேங்க்ஸ்! “ என்று அவள் கார் கதவைத் திறக்கவும் அவள் அண்ணன் ஸ்ரீராம் தன் பைக்கில் வரவும் சரியாக இருந்தது.

தங்கை யாருடனோ காரில் வந்து இறங்குவது முதல் முறை என்பதனால் மின்னல் வேகத்தில் காரை இடைமறித்துத் தன் வாகனத்தை நிறுத்தி, நிரஞ்சனை துளைப்பதைப் போலப் பார்தவினின் பார்வை இப்பொழுது தங்கையின் மீது விழ, அவளைக் கொன்றுவிடுவது போல முறைதான்.

“அண்ணா….” மெல்லிய குரலில் நந்து அழைக்க

மறுநொடி நிரஞ்சன் காரைவிட்டு இறங்கிக் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீராமின் முன்பு புன்னகையுடன் நின்றான்.

பைக்கிலிருந்து இறங்கியவன் இருவரையும் மாறி மாறிப் பார்க்க, நிரஞ்சனோ “ஹாய் நான் நிரஞ்சன்! “ புன்னகை மாறாமல் கைகுலுக்கக் கையை நீட்ட

சந்தேக புன்னகையுடன் ஸ்ரீராமும் கை குலுக்கினான்.

“ராம்…ஸ்ரீராம்”

“அண்ணா இவர்…” நந்தனா துவங்கும் பொழுதே

“நந்து வந்துட்டியா?” என்ற குரலில் முவரும் நந்தனாவின் வீடு வாயிலை நோக்கித் திரும்ப, நந்தனாவும் நிரஞ்சனும் உறைந்தனர்.

“ஹாய் காஞ்சு டார்லிங்! எப்போ வந்தே?” ஸ்ரீராம் வண்டியை லாக் செய்தபடியே தங்கள் அத்தை காஞ்சனாவை நோக்கிப் புன்னகைத்தபடி நடக்க, நந்தனாவும் நிரஞ்சனும் ஒருவரை ஒருவர் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டனர்.

“நான் மத்தியானமே வந்துட்டேன் டா” என்றவாறு வந்தவரின் பார்வை நிரஞ்சனின் மீது விழ, மறுநொடியே அவர் முகமெங்கும் புன்னகை படர

“ஹாய்! எப்படி இருக்கீங்க ?”

“ நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க அத்தை?” கேட்டவாறே காஞ்சனாவை நோக்கி வேகமாக நடந்தான் நிரஞ்சன்.

‘சுத்தம்! இது ஒண்ணுதான் குறை இன்னிக்கு!’ செய்வதறியாது நந்தனா நிரஞ்சனை பின் தொடர, அவளை முறைத்தவாறே அவளைத் தாண்டிச் சென்றான் ஸ்ரீராம்.

வீட்டிற்குள் நுழைய நிரஞ்சன் யோசிக்க

“தயங்காம உள்ள வாங்க! வெல்கம் !” காஞ்சனா அவனை உற்ச்சாகமாய் வரவேற்றார்.

யாரை தன் தங்கை இப்படி வரவேற்கிறாள் என்று பார்க்க

எழுந்து வந்த நந்தனாவின் அப்பா கண்ணனை பின் தொடர்ந்து வந்தார் அவள் அம்மா சரஸ்வதி.

நிரஞ்சனை கண்ட கண்ணனோ கண்கள் விரிய “டாக்டர்! நீங்க எப்படி இங்க?வாங்க வாங்க உள்ள வாங்க பிளீஸ்…”

அவரை கண்ட நிரஞ்சனும் சற்று அதிர்ந்து தான் போனான்.

error: Content is protected !!