m12

மகிழம்பூ மனம்

மனம்-12

 

அலைபேசியில் எத்துனை முறை அழைத்தும் கண்டுகொள்ளாதவளை, இறுதி வாய்ப்பாக, அவளது பீஜியில், நேரில் சந்திக்க எண்ணினான்.

தங்கியிருந்த ரூமை வகேட் செய்துவிட்டு, எடுத்து வந்திருந்த தனது முக்கிய ஆவணங்கள் மற்றும் இதர பொருட்களை கையோடு எடுத்துக் கொண்டு, ஒரு முடிவோடு, கிளம்பியிருந்தான் தேவா.

விசிட்டர் என்றவுடன், இவனை எதிர்பார்த்தவள் போல, உடனே வந்தவளைப் பார்த்து, “சம்மு, ப்ளீஸ்”, என்ற தேவாவின் பேச்சைக் கேட்டு, முறைத்தவள், அதற்குமேல் அங்கு நின்று பிறருக்கு சீனாக விரும்பாமல்,

“ஃபைவ் மினிட்ஸ்ல வரேன்”, என்று உள்ளே போனவள்

ஐந்து நிமிடங்களுக்குப்பின், “வெளியே எங்காது போகலாம்!”, என்று அவனையே டேக்ஸி எடுக்கச் சொல்லி, உடன் கிளம்பியிருந்தாள்.

வழக்கமான முகமல்லாது,  இறுகிய இரும்பின் கடினத்தோடு வந்தவளை பார்த்தவனுக்கு, நம்பிக்கை துளியும் இல்லாதபோதும், கடைசி முயற்சியாக, முயன்று பார்க்க, மனம் தூண்டியது.

/////

விபரம் அறியும்முன் தந்தையையும், அதன்பின் தாயையும் பறிகொடுத்தவளை, சுற்றமும், நட்பும் நடத்திய பாங்கு, சொல்லி மாளாது.

ஆனாலும், உறவுகளை மதிக்கிறாள்.

உறவுகளில் ஒவ்வொன்றும் எட்டு திசையைப் போலவே இருந்தது.  அதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

தன்னைப் பெண்பிள்ளை என்பதால் பாரமாக எண்ணினாலும், பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்து ஒதுங்கிக் கொண்டவர்களை, என்றுமே மறக்கமாட்டாள்.

ஆனால் இந்த முட்டாள் தேவா, நல்ல உறவுகள் அனைத்தையும், தூக்கியெறிந்து விட்டு, தனக்காக வந்திருந்தாலும், அதை ஏற்க, அவளின் நல்ல மனம் இசையவில்லை.

யாழினியை எண்ணியே மிகவும் வருந்தினாள்.  அந்தப் பெண்ணின் நிலை, தற்போது என்னவாக இருக்கும் என்று நினைக்கும்போதே, மனம் ரணமாக உணர்ந்தாள்.

அவள் நினைத்தது ஒன்றுதான்.  தேவாவின் மனைவியான யாழினிக்கு, தன்னால் வாழ்வு கெடுவதை விரும்பாததால் மட்டுமே தேவாவை நிராகரித்திருந்தாள்.

அவளின் நிராகரிப்பு, யாழினியின் வாழ்வை மீட்டுத்தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், மனம் முழுக்க வியாபித்து இருந்தவனை, இதயத்தில் வலியோடு, விரட்ட துணிந்திருந்தாள்.

ஆனால், அது தேவாவின் விடயத்தில் பொய்த்துப் போகும் என்பதை அப்போதே அறிந்திருந்தால், அவள் எந்த மாதிரியான மாற்று முடிவை எடுத்திருப்பாள் என்பதை அவளின் யூகத்திற்கு விட்டுவிடுவோம்.

//////

தேவாவுடன் கிளம்பிய சம்மு, அடுத்த பதினைந்து நிமிட பயணத்திற்குப்பின் ஹோட்டலின்முன் இறங்கியிருந்தார்கள்.

உள்ளே சென்று, சற்று ஒதுங்கிய டேபிளில் அமருமாறு செய்கை செய்தாள்.

இருவரும் எதிரெதிரே அமரப்போக, விடயம் மிகவும் தணிந்த குரலில் பேசவேண்டியிருப்பதால், தேவாவின் அருகிலேயே, பெண் எழுந்து வந்தமர்ந்தாள்.

டேபிளை நோக்கி வந்த சர்வர், ஆர்டர் எடுக்க, “காஃபீ மட்டும் போதும்”, என்றுவிட்டு அமைதி காத்தவளைப் பார்த்தபடியே, தனக்கு வேண்டியதை ஆர்டர் செய்தான்.

சம்முவின் அருகாமையினால், மனம் குளிர்ந்தவன், சர்வர் அகன்றவுடன்,

“ஒரு அஞ்சு நிமிசம் எனக்கு டைம் கொடு சம்மு,  நான் பேசிக்கிறேன்”, என்று தேவா கேட்க

“சாரி! என்னோட, எந்த முடிவையும் நான் மாத்திக்கிறதா இல்லை தேவா! என்னை நீங்க காம்பரமைஸ் பண்ணனும்னா இப்டியே நான் கிளம்பறேன்”, என அவனைத் திரும்பியும் பாராது, பேசியவளை வருத்தத்தோடு பார்த்திருந்தான்.

தேவா பேச வாயைத் திறக்கும்முன், 

“அப்போ ஏன்டி, ஏம்பின்ன வந்தேன்னு நீங்க கேக்க வரது எனக்கு புரியுது!”, அவளாகவே யூகித்து பேசத் துவங்கினாள்.

“வேற வழி!”

“காலச் சுத்துன பாம்பு மாதிரி, விட்டு விலகாம இருக்கிற, உங்களை விலக்க, இவ்வளவு தூரம் வரவேண்டியதாப் போச்சு!”

அவளின் வார்த்தையில் வலி தெரிந்தோ! 

அதை உணரும் நிலையில் நிச்சயமாக தேவா இல்லை.

“அங்க இருந்தே பேசிருக்கலாம்.  போறவன் வாரவன் எல்லாம், பாம்பை, எங்கிட்ட இருந்து விலக்குறேன்னு, சாக்கு சொல்லிட்டு, அதவிட்டே, கொத்த விட்டு, என்னைக் கொன்றுவானுங்கனுதான், இங்க கிளம்பி வந்தேன்!”, சம்மு அசால்டாக தேவாவை பாம்பாக்கி, அவன் மனதை பழுதாக்கியிருந்தாள்.

“நான் உன் காலைச் சுத்தின பாம்புன்னா நினைக்கிறே சம்மு!”, உயிர்போகும் வலியுடன் கேட்டவனை,

உயிரற்ற பார்வை பார்த்தவள், “பாம்பா, பழுதான்னு பட்டிமன்றம் நடத்தற நிலையில நான் இல்லை. இனியும் பேச்சை வளர்க்க நான் விரும்பலை தேவா”

“அப்போ, என்னைய வேணானு சொல்லிட்டு, நீ என்ன செய்யப் போறே சம்மு?”, அவனுக்கு அவளது எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் காரணமாகவே கேட்டான்.

“அது எதுக்கு இனி உங்களுக்கு?, உங்க பாதை வேற, இனி இதைப் பற்றியெல்லாம் நீங்க தெரிஞ்சிட்டு என்ன செய்யப் போறீங்க!”, கத்தரித்துப் பேசினாள்.

காதல் அங்கு சத்தமில்லாமல் கதறியது.

காதலித்த இரு உள்ளங்களும் கலங்கித் தவித்தன.

சம்யுக்தாவை இழக்கப்போவதை எண்ணி தேவா கலங்கினான்.

தேவா எதையும் மறைக்க விரும்பாமல், சம்முவின் முன்னே கலங்கியிருந்தான்.

சம்யுக்தாவும் கலங்கி, மனதிற்குள் கதறியிருந்தாள்.

வெளியில், தான் கலங்கியதைக் காட்டாமல், கல்லுக் குண்டுபோல, தேவாவின் அருகிலேயே அசையாது அமர்ந்திருந்தாள்.

“நீங்க பேசினதெல்லாம் நான் பொறுமையாவே கேட்டாச்சு. 

இனி நமக்குள்ள பேச எதுவும் இல்லை. 

இன்னொரு முறை என்னைப் பார்க்க வராதீங்க!

அதுக்குமேல மீறி வந்தா, ஹராஸ்மென்ட்னு போலீஸ்ல நான் கம்ப்ளைண்ட் பண்ணிருவேன்!

இது உங்களை மிரட்டவோ, இல்லை பயமுறுத்தவோ சொல்லலை!

எனக்குப் பிடிக்கலைங்கறதால, உண்மையை  சொல்றேன்!”, என்று வேறு முகம் காட்டியவளை, அதற்குமேல் நெருங்கும் துணிவில்லாமல்,

“சாரி…”, என்று குனிந்து அமர்ந்தவன், நிமிரும்முன்,

“எந்த சூழல்லயும் உங்களை இனி நான் சந்திக்கப் பிரியப்படலை தேவா! 

இந்தளவுக்கு நான் பேசத் தூண்டினது, உங்க நடவடிக்கைகள் தாங்கறதை புரிஞ்சிப்பீங்கனு நினைக்கிறேன். 

என்னை என் பாதையில ஸ்மூத்தா நடக்க விடுங்க, ப்ளீஸ்!”, என்றவள் அங்கிருந்து புயலெனக் கிளம்பியிருந்தாள்.

எழுந்து செல்பவளை, விரக்திப் புன்னகையோடு, ஏக்கம் நிறைந்த கண்களோடு இமைக்காமல் நோக்கியிருந்தான்.

சம்யுக்தாவிற்குள் இருந்த காதல், அவளைக் காட்டிக் கொடுத்துவிடும்முன், இடத்தை விட்டு, அகன்றிருந்தாள்.

எல்லாம் போனதாகவே தேவாவிற்குத் தோன்றியது.

விரக்தியின் விளம்பில் வந்து நின்றிருந்தான் தேவா.

சர்வர் கொண்டு வந்து வைத்த எதையும் தொட மனதில்லாமல், அரைமணித் தியாலம் அப்படியே அமர்ந்திருந்தான்.

பிறகு, பேமெண்ட் செட்டில் செய்துவிட்டு ஒரு முடிவோடு கிளம்பி நேராக, ரயில் நிலையம் வந்திருந்தான்.

————————-

தேவாவிற்கு இது வரை தோன்றாத, யோசிக்காத விடயங்கள் அனைத்தும் கண்முன் வந்து போனது.

சம்யுக்தாவின் அதிரடி முடிவுகளை எதிர்பார்த்திராதவன் உண்மையில் அரண்டிருந்தான்.

பல கனவுகளோடு, வந்தவன், கனவுகளோடு தன்னையும் சிதைத்துக் கொள்ளத் தயாராகியிருந்தான்.

தற்கொலை செய்யும் அளவிற்கு மனதில் துணிவில்லாததால் அதைப் பற்றி எண்ணவே இல்லை.

அமைதியும், அன்பும், கருணையும் உருவானவளையே, மாற்றிய தனது மடத்தனத்தை எண்ணி, மாய்ந்து போனான்.

பங்களூர் வந்தது முதல், சம்மு தற்போது பேசிச் சென்றது வரை, ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தான்.

சம்மு கேட்கும் வரை, யோசித்திராதவன், யாழினி எனும் பெண்ணைப் பற்றி முதன் முதலாக யோசித்தான்.

திருமணமாகி ஏறத்தாழ இரண்டரை மாதங்கள், மனைவி என்ற உறவில் இருந்தவளை, நிராகரித்துவிட்டு வந்ததால், உண்டாகும் அவளின் நிலைபற்றி நினைத்துப் பார்த்தான்.

தான் செய்த செயலால் உண்டாகும் விபரீதங்களை அறியாத சூழலில் வளர்ந்தவன் அல்லவே.

உண்மை சுட, உயிர் வெறுத்தான்.

எந்த மாதிரியான ஒரு சுயநலம் எனக்குள், என்று மனம் அரற்றினான்.

தான் எழுதி வைத்த மூன்று வரி கடிதம் நினைவில் வந்து அவனை இம்சை செய்தது.

குற்ற உணர்வு ஒரு புறம் குதறி எடுத்தது.

செய்த நம்பிக்கை துரோகம், சாட்டையால் அடித்தது போன்ற வேதனையைத் தந்தது.

தனது செயலின் வீரியம் உணர்ந்து, தலைசுற்ற அப்படியே அமர்ந்திருந்தான்.

பெற்றவர்களை நினைத்து வருந்தினான்.  தனக்காக எல்லாம் பார்த்து, பார்த்து செய்து, வளர்த்தவர்களை இதுவரை கருத்தில் கொள்ளாத, தன்னை எண்ணி வெட்கப்பட்டான்.

ஒரு கனம், தனது குடும்பத்தைப் பற்றி சிந்திக்காதவனை, சம்யுக்தாவின் பேச்சுகள் செய்த மாயம்… நடப்பிற்கு கொண்டு வந்து, நாட்டாமை போல கேள்விக் கணைகளைத் தொடுத்திருந்தது.

யாழினியின் பெற்றோரை நினைத்தவுடன்… எழுந்த உணர்வு சென்னை செல்லும் தன் எண்ணத்தையே கைவிடச் சொன்னது.

மறுவீடு போன்ற நிகழ்விற்கு சென்றிருந்தபோது, யாழினியின் பெற்றோர், உறவினர்கள் நடந்து கொண்ட முறைமை கண்முன் வந்து போனது. 

தன்னையே நம்பி… இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்த மகளை, தனக்கு திருமணம் செய்து கொடுத்த உத்தமர்களை எண்ணி, தற்போது மனம் வதைத்தது.

அவர்களின் முன்னால் எப்படி என்னால் இயல்பாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு அவனால் பதிலளிக்க முடியாமல்… அமர்ந்தே இருந்தான். 

நேரம் ஆமை வேகத்தில் சென்றாலும், எதையும் உணரும் நிலையில் அவனில்லை.

டிக்கெட் ஏதும் எடுக்கத் தோன்றாமல்… பிளாட்பார்மின் நம்பரைக் கூட கவனிக்காமல்.. அவன் அவனையே சற்று மறக்கத் துவங்கியிருக்க,  பலவிதமானவர்கள் பல மொழிகளில் பேசியபடியும், சிரித்தபடியும், அமைதியாகவும், கடந்து சென்ற வண்ணமிருந்தனர்.

இரண்டு மணி தியாலத்திற்கு மேல்… அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்திருந்தான்.  பசித்தாலும் அதை உணரும் நிலையில் இல்லை அவன்.

சிறிது நேரத்திற்கு ஒரு முறை, ட்ரெயின் வந்து நிற்பதும், கிளம்புவதுமாக இருந்தது.  கருத்தில் எதுவும் வராமல் மனம் கருத்திருந்தான்.

எதையும் கவனிக்காமல் தனது குடும்பம், மனைவி, காதலி, எதிர்காலம் இதைப் பற்றியே சிந்தித்தபடியே அமர்ந்திருந்தான்.

அறிவு தனது சுயத்தை தொலைத்திருந்தது. 

கவுண்டரில் சென்று டிக்கட்டை வாங்கினான்.  என்ன கூறி, டிக்கெட்டை வாங்கினான் என்பது கூட மனம் உணரவில்லை.

மனம் எங்கோ பயணிக்க, அங்கு நின்றிருந்த ட்ரெயினில் ஏறி அமர்ந்து கண்களை மூடியிருந்தான்.

கடந்த தினங்களை எண்ணிப் பார்த்தவனுக்கு, இன்றைய நாளின் வீரியம் எதனால் என்பது தெளிவாகப் புரிந்தது.

தனது தயக்கமே, தனது வாழ்விற்கு முதல் எதிரி என்பதை தாமதமாக உணர்ந்தவன், யாரையும் குறையாக எண்ணவில்லை.

தனது முடிவினை எண்ணி தனக்குள் வருந்தியவன், வந்திருந்த விரக்தியில், தேசாந்திரம் போகும் எண்ணத்திற்கு முடிவில் வந்திருந்தான்.

படித்த பட்டம் மறந்து போனது!

பண்பாடு மறந்து போனது!

பண்பு மறந்து போனது!

மனம் மரத்து, உணர்வுகள் மரிக்க, உலகம் உணரத் தவறினான்.

உலகம் இயக்கம் பெற்றிருக்க, உணர்வற்றவர்களை அது உணவாக்கிக் கொள்ளும் நிதர்சனம் புரிய மறந்திருந்தான்.

கையில் கொண்டு வந்திருந்தவற்றை, காபந்து செய்ய மறந்தான்!

அறிவை மழுங்கடைத்திருந்த கவலையால், எதையும் கவனிக்காமல், களைப்பால், அசந்திருந்தான்.

எப்போது, எந்த சூழலில் உறங்கினான் என்கிற உணர்வில்லாமல் உறங்கியவனை, தட்டி எழுப்பியவர்கள், சீட் அவர்களது என்க, உறக்க கலக்கத்தோடு, கையில் அகப்பட்டதை எடுத்துக் கொண்டு, அடுத்த பெட்டிக்கு நகர்ந்தான்.

இரண்டு நாட்கள், ஒரே வண்டியின் பல பெட்டிகளில் உறங்கியே பெரும்பான்மையான நேரத்தைக் கடந்திருந்தான்.

இரயில் வண்டி தான் துவங்கிய பயணத்தை நிறைவு செய்து, ஓய்வுக்காக நின்றிருந்தது.

அழுக்கு தெரியவில்லை, அசிங்கம் புரியவில்லை.  மனம் முழுக்க, தவறவிட்ட வாழ்க்கை மட்டுமே இருந்தது.

உறக்கத்திலும், அதே நினைவுகள்.

பெரும்பாலும் உறங்கினான்.

உறக்கம் தடைபடும் அளவிற்கு, அடித்து யாரோ எழுப்பும் உணர்வின் கண்திறந்து பார்க்க, எதிரில் நின்ற ரயில்வே ஊழியர்களை, புரியாமல் பார்த்தான்.

எங்கே இருக்கிறேன்?

அவர்கள் பேசும் மொழி ஏனோ அவனுக்குப் புரியவில்லை.

ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி புரிந்தவனுக்கு, அவர்கள் பேசுவது விளங்கவில்லை என்பதைவிட, அதைக் கவனிக்கும் நிலையில் அவனில்லை.

எழுந்தவன் உடமைகளைத்தேட எதுவும் அங்கில்லை.

பதறவில்லை. மரித்த மனம், தேவைகளை மறந்து போயிருந்தது.  இனி மரிக்க ஒன்றுமில்லாததால், எதுவும் தோன்றாமல் இறங்கியிருந்தான்.

வந்த இடம் வாரணாசி என்பதைக்கூட மனம் யோசிக்க முடியாமல் இருந்தான்.

பணமிருக்கும் வரை வேண்டியதை வாங்கி உண்டான்.

மற்ற நேரங்களில் எங்காவது அமர்ந்து மனிதர்களை மட்டுமே வாசிக்க முயன்றான்.

வருடங்கள் கடந்தது.

தேகம் தேயத் துவங்கியிருந்தது.

வேளைக்கு உணவு என்றில்லாமல், நாளுக்கொரு முறை உணவு என்றானது.

நோய்கள் புதிது புதிதாக அவனது உடலுக்குள் இடம்பெயர்ந்து, தனது ஆளுகையை நிலைநாட்டத் துவங்கியது.

நாள், கிழமை தெரியவில்லை.  இரண்டு வருடங்களைக் கடந்தவனுக்கு, ஏனோ உடலே பாரமாகத் தோன்றத் துவங்கியிருந்தது.

உபாதைகளோட கிடந்தவனை இரக்கமிக்கவர்கள், அங்கிருந்த பொது மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

மருந்துகள் கொடுத்ததை, அங்கிருக்கும் வரை உண்டான்.

உணவைத் தேடி ஓடும் எண்ணமே இல்லாததால், உழைப்பையே மறந்து போயிருந்தான்.

சரீரம், அதன் ரீங்காரத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்தது.

நாளுக்கு, நாள் அதிகமான களைப்பை உணர்ந்தவன், ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் கழிந்ததைக் கூட உணரவில்லை.

ஏனோ, மனம் பெற்றோரைக் காண ஏங்கியது.

இத்தனை வருடங்கள் தோன்றாத உணர்வது, தேவைகள் துவங்கியது. முடிவெடுத்தான்.

பாரமான உடலோடு, பல இடங்களில் வேலை வேண்டி நின்றான்.

அவனது தோற்றம் கண்டே பணிக்கு எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள் என்பதை உணர்ந்தவன், முதலில் தன்னை திருத்தம் செய்தான்.

ஆள் பாதி, ஆடை பாதி என்பதை உணர்ந்தவனுக்கு, கையில் இருந்த சொற்ப பணத்தில் இலகுவான உடையை வாங்கியிருந்தான்.

இரக்கம் கொண்டவர்களல்லர் அவர்கள். குறைவான ஊதியத்தில் பணியாற்றத் தேவையான நபர்களை நாடுபவர்களிடம் நயந்து, பணியில் சேர்ந்திருந்தான்.

பாத்திரங்கள் கழுவுவது, இடத்தைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளை, நாள் முழுவதும் செய்து, தன்னால் இயன்றதை ஈட்டினான்.

உணவை தேடாதவனுக்கு, அவர்களாகவே நேரத்திற்கு உண்ணக் கொடுத்தார்கள்.

சற்றே உடல் தேறினான். ஈட்டல் அவனை சற்றே மீட்டிருந்தது. 

உடைகளில் பெரியளவு கவனம் இல்லாதபோதும், கிழிசல்கள் இல்லாததாக அணியத் துவங்கியிருந்தான்.

வருடம் கடந்திருந்தது. ஆனாலும், உடலின் நிலை அவனது உயிருக்கு உத்தரவாதம் தர மறுத்தது.

சாகும்முன் ஒரு முறை பெற்றவர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம், சருகுகளில் பிடித்த தீயாக வளர, கையில் இருந்த பணத்தோடு, சொல்லிக் கொண்டு கிளம்பியிருந்தான்.

மூன்று நாட்களில் சென்னையைத் தொட்டவனுக்கு, சென்னையின் மாற்றங்களைக் கண்டு, விழிவிரித்தான்.

பத்து ஆண்டுகளில், பத்து மில்லியன் மாற்றங்களோடு, வரவேற்றது சென்னை.

பயணத்தின் முடிவில், அன்னையின் மடியில் படுத்தால் உண்டாகும் நிறைவான உணர்வை உணர்ந்தான் தேவா.

——————-

தனக்கு நேர்ந்ததைக் கூறியவன், அதற்குமேல் எதுவுமில்லை என படுத்திருந்தான்.

மகனின் பத்து ஆண்டுகளைப் பற்றிக் கேட்ட அம்பிகா, முதலில் பதறினார், போகப்போக அழுது கரைந்தார், இறுதியில் துடித்திருந்தார்.

யாழினிக்கு கோபம் மட்டுமே வந்தது.

‘என்ன மனுசன் இவன்?’, என்று மட்டுமே அவளுக்கு எண்ணத் தோன்றியது.

ஆனாலும், தேவாவை விமர்சிக்க வேண்டிய, எந்த அவசியமும் தனக்கில்லை என்பதை உணர்ந்தவள், தலையில் அடித்துக் கொள்ளத் துடித்த கையை அடக்கிக் கொண்டாள்.

அதற்குமேல் தான் அங்கிருந்தால் ஏதாவது, துடுக்குத்தனமாக பேசிவிடுவோம் என எண்ணியவள், உடனே சொல்லிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.

//////////////

இரண்டு நாட்களில் தேவாவை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்கள்.

முருகானந்தம், அதற்கு முன்பே, யுகேந்திரனை தனியாக அழைத்து, வேறு வீடு பார்க்கும்படி கூறியிருந்தார்.

மறுத்தவனை, முறைத்து, “சொல்றதைக் கேளு யுகேந்திரா”, என்றவர்

“தேவாவோட நாங்க இங்க இருந்துக்குவோம், நீ, உன் குடும்பத்தோட வேற வீடு பாத்துட்டுப் போயிரு!”, என்று மிகவும் கராறாகவே கூறியிருந்தார்.

அம்பிகா, தேவா பகிர்ந்த பழைய கதையை, கணவருடன் பகிர்ந்து, தன்னைத் தேற்றிக் கொண்டிருந்தார்.

“நல்லா வளத்தோம்னு நாம நினைச்சோம்.  ஆனா வளக்கத் தெரியாம வளத்திருக்கோம்னு நினைக்கும்போது, மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு!”, என்பதோடு, அதற்குமேல் மகனைப் பற்றி எதுவும் வாயைத் திறக்கவில்லை முருகானந்தம்.

————–

யுகேந்திரனின் மெத்தனப் போக்கை கவனித்துப் பார்த்திருந்தவர், யாழினி, யுகேந்திரன் இருவரையும் ஒருசேர அழைத்து, மீண்டும் பேசினார்.

“என்ன யுகேந்திரா, வீடு பாத்தாச்சா?”

“பாத்துட்டே இருக்கேன்பா, ஒன்னும் அமையல!”, என்று தன் தவறை மறைத்திருந்தான்.

“புருசன், பொண்டாட்டிக்குள்ள… ஆயிரம் மனக்கசப்புகள் வரலாம், போகலாம்.  ஆனா, அது, அந்த வீட்டில இருக்கிற நண்டு, சிண்டுல இருந்து, பெரியவங்களோட கவனத்துக் போகாத அளவுக்கு நடந்துக்கணும் யுகேந்திரா!”, என்று மகனைப் பார்த்துக்கூற

“…”, எதுவும் பேசாமல் நின்றிருந்தான்.

“தேவா தன்னோட குழப்பமான மனசால… தெளிவான சிந்தனை இல்லாம, எதையும் சரியான நேரத்தில் செய்யாம, அவனும் குழம்பி, மத்தவங்களையும் குழப்பிறான்!

விட்டுட்டு ஓடுறது பேரு வாழ்க்கை இல்லைனு, புரியாதவனா இருந்தான்!

விழிப்புநிலையில, பிறருக்கு தீங்கு செய்யாம, பிறருக்குன்னு மட்டுமில்ல! நமக்குமே அதன் தாக்கம் இல்லாமல், முக்காலத்திலயும் நன்மை தரக்கூடிய செயலை யாரொருத்தன் செய்தாலும் அவனுக்கு புண்ணியம் கிடைக்கும்.

படிச்சு டிகிரி வாங்கினா மட்டும் போதாது! 

எதையும் பகுத்தறியக் கூடிய, பண்பு நமக்கு வேணும்.

நல்ல உத்தியோகம் மட்டுமே புருசலட்சணம் இல்லை.

வீட்டில, இருக்கிற மனைவி, மக்களுக்கு, பாதுகாப்பு, அவங்களோட அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்றது, அவங்க மன உணர்வுகளை மதிச்சு நடந்துகிறது!

இதுக்கெல்லாம் பேருதான் புருசலட்சணம்!

கட்டி இரண்டு மாசத்துல, கண்டுக்காம, காதலுதான் பெரிசுன்னு காவாலிப் பய கணக்கா விட்டுட்டுப் போனவனுக்கு என்ன லட்சணம் இருக்க முடியும்?

வேறென்ன… மிருகலட்சணந்தான்!

மிருகத்தோட கூட மனுசன கம்பேர் பண்ண முடியாத அளவு, மனுசங்க அரக்க குணமா மாறிட்டு வராங்க.

நாயை விட உங்கண்ணன் கேவலமானவன்தான்.

அதுக்குகூட நன்றியுணர்வுன்னு ஒன்னு இருக்கும்.  அதுகூட அவனுக்கு கிடையாது.

ரயில்ல கூடப் பயணம் பண்ணும்போது அறிமுகமானவன மாதிரி… கல்யாணம் அப்பிடிங்கற பந்தத்துல இந்தப் புள்ளைய சந்திச்சான்.

அவனோட இடம் வந்ததா நினைச்சு, யாழினியோட வாழ்க்கைல இருந்து விலகி… ட்ரையின விட்டு இறங்கிப் போயிட்டான்..!

அப்படி எனக்கென்னனு விட்டுட்டுப் போனவன்… எப்டி யாழினிகிட்ட இனி உரிமை பாராட்ட முடியும்?”, என்று நீண்ட விளக்கத்தோடு நிதானமாகவே பேசியவர், இறுதியில் யுகேந்திரனைப் பார்த்து, கேள்வியை முன்வைத்திருந்தார் முருகானந்தம்.

தந்தையிடம் எதுவும் பேசாமல், அமைதியாக நின்றிருந்த மகனை ஏறிட்டவர்,

“தாயிக்கு பிள்ளைகள் எத்தனை இருக்குதுங்கறதை பற்றி இங்க பேசக்கூடாது.

ஒரு பிள்ளைக்கு ரெண்டு பெற்ற தாய் இருக்க முடியாதுங்கறது எப்படி உண்மையோ, அப்டித்தான் ஒரு பெண்ணுக்கு ஒருத்தவன் மட்டுமே கணவனாக, காபந்து பண்றவனாக இருக்க முடியும்!

காபந்து பண்ணாதவனை, தாலி கட்டியிருந்தாலும் புருசனா அந்தப் பொண்ணு ஏத்துக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம்.

அன்னிக்கு பஞ்சாயத்துல எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு, முறையா விவாகரத்து செய்துதான், யாழினிய உங்கைல ஒப்படைச்சோம்.

இப்டி நடக்கும்னு யாருக்கும் தெரியாது!

ஆனா, உனக்கு இப்ப என்ன பிரச்சனையின்னு சொன்னாதான் எங்களுக்குப் புரியும்.

பிரச்சனையை எதிர்கொண்டு, அதை சரிசெய்யாம, அதுக்கு பயந்துட்டு தெரிஞ்சா, அது ஓடுறவனைத் தொறத்துற நாய் மாதிரி, உன்னை விரட்டத்தான் செய்யும்.

அந்தப் புள்ளை கழுத்துல இருக்கிற தாலி, தேவா கட்டினதுன்னு நீ நினைச்சா, அதுக்கும் விளக்கம் சொல்லுறேன்.

தாலிய அன்னிக்கு கழட்டாம விட்டதுக்கு காரணம், ஒரு அமங்கலமான செயலைச் செய்தா, சின்னப்புள்ளையான யாழினி மனசு புண்படும்.  

அதோட மகன் உயிரோட இருக்கிறானா இல்லையான்னே தெரியாம தேடிட்டு, அல்லாடிகிட்டிருந்த எங்க மனசுலயும் இருந்த சங்கடம் காரணமா அப்ப அதைக் கழட்டல!

தாலிங்கறது… எதுக்காக உருவாக்கப்பட்டதுன்னு தெரியுமா உனக்கு?

“…”, இல்லையெனத் தலையாட்டிவனைப் பார்த்தவர்,

அதையும் நானே சொல்றேன்.

“பொண்ணுக்கு எதிர்பாரா தனிமையான சூழல்ல,  வேற்று ஆண்கள் மூலமா வரக்கூடிய, பாதுகாப்பில்லாத செயல்களில் இருந்து, அவங்களை தற்காத்துக் கொள்ள வேண்டி, கழுத்துல கட்டப்பட்டது தான் தாலி.

அது என்னன்னா, மானபங்கப்படாம, உயிரை மாய்ச்சுக்கறதுக்கு, வாயிக்கு எட்டற தூரத்தில, குப்பிக்குள்ள விசம் வச்சு, கழுத்துல தொங்கவிட்ட கயிறுதான் பிற்பாடு தாலின்னு சொல்லிட்டாங்க

அதுக்கு பொட்டுத்தாலின்னு பேரு.  அதுல சயனைட் மாதிரியான விசத்தை வச்சுத்தான் முன்னாட்கள்ல தாலி கட்டிருக்காங்க. 

நாளடைவில, புருசன் பொண்டாட்டி பிரச்சனையினாக்கூட இந்த பொண்ணுங்க, தாலியில இருந்ததை எடுத்து, வாயில வச்சு செத்ததைப் பாத்து,  அதை தடை செய்துட்டாங்க.

இப்பல்லாம், சயனைடுக்கு பதிலா, அரக்கு வச்சி அந்தப் பொட்டுத் தாலி கட்டுறாங்க.

எல்லா இடங்கள்லையும் இந்த வழக்கம் கிடையாது.  மிருக குணம் மிகுந்த மனுசனுங்க நிறைஞ்ச பகுதியில இந்த வழக்கம் இருந்திருக்கு.

பாதுகாப்பிற்காக ஏற்படுத்தினதை, இப்போ வேற மாதிரி கொண்டு போயிட்டோம்.

அதனால… தாலி எதுக்காக, ஏன் அப்டிங்கறதே தெரியாதவன் கட்டினது, இன்னும் புடிச்சிட்டு வாழ்க்கைய வீணாக்காம, வாழற வழிய பாருங்க!

எதாவது ஒரு நல்ல நாள்ல, கோயில் உண்டியல்ல யாழினி கழுத்தில இருக்கிறதை கழட்டிப் போடச் சொல்லிரலாம்,

அப்புறம் ஆறு மாசங்கழிச்சு, உன் விருப்பப்படி, நீயே உன் பொண்டாட்டிக்கு தாலி வாங்கிக் கட்டு!”, என்று மகனிடம் கூறியவர்,

யாழினியைப் பார்த்து, “யுகேந்திரன், அப்போ எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, உன்னைய ஏத்துக்கிட்டவன்மா!  ஏதோ மனக்குழப்பத்தில இருக்கான். எல்லாம் போகப்போக சரியாகிரும்.

அதனால… யாழினி…. நீ குழம்பாம, கொஞ்சம் பொறுமையா இரு!

குடிசீக்கிரம் எல்லாம் சரியாகிரும். 

யுகேந்திரனக் கூட்டிட்டி… நீயும் புள்ளைங்களும் வேற வீட்டுக்கு போறதுக்கு, சீக்கிரம் ஏற்பாடு பண்றேன்!

எதயும் போட்டு மனசக் குழப்பாம வாழப் பாருங்க!

தேவா வரும் முன்ன, எப்டி சந்தோசமா இருந்தீங்களோ அப்டியே இருங்க!

இது தேவா வாங்கின வீடு…! அதனால அவன் இங்க தங்கிக்கட்டும்.  இதுல அவனோட நாங்க ரெண்டு பேரும் தங்கிக்கறோம்.

அப்பப்போ அங்கயும் வந்து போறோம்.  குழந்தைகளை பத்திரமா பாத்துக்கங்க…!

இப்ப… இங்க நடக்கிற விசயத்தினால… புள்ளைங்கள கவனிக்காம இருந்துறாதீங்க…!

குழந்தைங்க முகமே சரியில்ல, அவங்கள நல்லா கவனிங்க…!”, என்று பொதுவாகப் பேசி அனுப்பியிருந்தார் முருகானந்தம்.

“ஒரே இடத்துல இருந்தா இந்த சங்கடம் இன்னும் தொடரும்!”, என்றபடியே மகனை நோக்கியவர், “யுகேந்திரா! சீக்கிரமா வேற வீடு பாருப்பா! கொஞ்சம் தூரமாவே பாரு!  அதான் எல்லாருக்கும் நல்லது!”, என இருவரையும் வைத்துக் கொண்டே கூறியிருந்தார், முருகானந்தம்.

////////////////

யுகேந்திரன், வேறு வீடு செல்லும் எண்ணமில்லாமல் இருப்பதை உணர்ந்தவள், யாழினியே களம் இறங்கி, வீடு தேடத் துவங்கியிருந்தாள்.

 

தனிக்குடித்தனம் தகைந்ததா?

யாழினி, யுகேந்திரன் வாழ்வு மீண்டதா?

அடுத்த அத்தியாயத்தில்…