Nan Un Adimaiyadi–Epi 14

Nan Un Adimaiyadi–Epi 14

அத்தியாயம் 14

எனக்கென்னானது

மனம் தடுமாறுது

விழி உனைத் தேடித்தான் ஓடுது (தவமங்கை)

 

“வாங்க, வாங்க! என்ன வாசல்ல நிக்கறீங்க! கம்மின்” என சிரித்த முகமாக ராஜேஸ்வரியை வரவேற்றாள் தவமங்கை.

“எப்படி இருக்க மங்கை? உனக்கு காலுல அடின்னு ஆத்தா சொன்னாங்க! எனக்கு இன்னிகுத்தான் வர முடிஞ்சது! சாரிடா”

“எதுக்கு சாரிலாம்! ஆத்தா குடுத்த பத்திய சாப்பாடு, மசாஜ் எல்லாம் சேர்ந்து கைக்காயம், காலு சுளுக்கு எல்லாம் ஓடியே போச்சு! காயம் நல்லா காஞ்சிருச்சு! ஐம் பெர்பெக்ட்லி ஆல்ரைட். உங்க ஆத்தா தான் கட்டாயப்படுத்தி உட்கார வச்சிருக்காங்க! இல்லைனா ஸ்கூலுக்கு கிளம்பிருப்பேன்” என சிரித்த முகமாக சொன்னாள்.

மங்கையின் அறையின் உள்ளே நுழைந்த ராஜேஸ்வரி கையில் இருந்த பானங்கள் மற்றும் பலகாரம் அடங்கிய தட்டை மேசை மேல் வைத்தாள். பின் ஒரு டம்ளரை மங்கையிடம் கொடுத்து விட்டு அடுத்ததை எடுத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள்.

“குட்டிஸ் எங்க? வரலியா?”

“வந்துருக்காங்க! அவங்க மாமன பார்த்ததும் பாஞ்சு அவன் கிட்ட ஓடிருச்சுங்க” என சொல்லியவள், மேசையில் வைத்திருந்த மெது வடையை மங்கைக்கும் கொடுத்து தானும் எடுத்துக் கொண்டாள்.

வெளியே பிள்ளைகளின் கூச்சலும், காளையின் சிரிப்பும் இவர்கள் ரூம் வரை கேட்டது. இருவரும் மசாலா டீயை மெல்லப் பருகியபடி வடையையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரம் தான் கதவின் அருகே வந்து நின்றாள் அதிதி. மகளைப் பார்த்ததும், டம்ளரை கீழே வைத்து விட்டு அவளைப் போய் தூக்கிக் கொண்டாள் ராஜேஸ்வரி.

“ஹலோ ஆண்ட்டி” என வெட்கத்துடன் சிரித்தாள் சின்னவள்.

“ஹலோ பேபிம்மா” என மங்கையும் புன்னகைத்தாள்.

மகளை மடியில் அமர்த்திக் கொண்டு, வடையை மெல்ல பிய்த்து ஊட்டினாள் ராஜேஸ்வரி. வாய் பாட்டுக்கு மங்கையிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கவனம் முழுக்க மகளிடம் இருந்தது அவளுக்கு. தாய் மகள் நெருக்கத்தை ஆசையாகப் பார்த்திருந்தாள் மங்கை.

“அதிதி அம்மா செல்லமா அப்பா செல்லமா?” என கேட்டாள் இவள்.

“ரெண்டும்” என சிரித்தாள் குட்டி.

“பொழச்சிக்குவம்மா நீ!” என்றாள் மங்கை.

“இவ அப்பா செல்லம் தான்! குளிக்க, சாப்பிட, பாட்டுப் பாடி தூங்க வைக்க மட்டும் நான் வேணும்! மத்த நேரம்லாம் அப்பா கூட தான் சுத்துவா! அவர் வீட்டுல இருந்துட்டா மேடத்தைக் கையில புடிக்க முடியாது! நான் ஒரு வார்த்தை திட்டிட்டா, என்னமோ அடி வெளுத்து விட்ட மாதிரி கத்தி கதறி ஆர்ப்பாட்டம் செஞ்சிடுவா! கேடி” என மகளின் சேட்டையை பற்றி சொன்னவள் முகத்திலும் பெருமையே இருந்தது.

மெல்லிய பெருமூச்சு எழ,

“நீங்க யாரு செல்லம் ராஜிக்கா? ஆத்தா செல்லமா அப்பா செல்லமா?” என கேட்டாள் மங்கை.

மெல்லிய புன்னகை எட்டிப் பார்க்க,

“நான் என் தம்பி செல்லம்” என்றாள் ராஜேஸ்வரி.

“இதென்ன புதுசா இருக்கு? எல்லாரும் அம்மா இல்லைனா அப்பா செல்லம்னு சொல்லுவாங்க! நீங்க தம்பி செல்லம்னு சொல்றீங்க” என கேட்டாள் இவள்.

சுடி துப்பட்டாவால் மகளின் வாயைத் துடைத்து விட்ட ராஜேஸ்வரி,

“அதிம்மா! பாட்டி கிட்ட பூஸ்ட் வாங்கி குடிங்க போங்க” என மடியில் இருந்து இறக்கி வெளியே அனுப்பி விட்டாள். பின் மங்கையை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“ஆரம்ப காலகட்டத்துல நாங்க ரொம்ப ஏழ்மையில இருந்தோம் மங்கை. ஆத்தாவுக்கு குடும்ப சொத்தா நிலம் இருந்துச்சு. பாடுபட்டு விவசாயம் பாத்தாங்க அதுல. கல்யாணம் பண்ணி வச்சிட்டு பதினைஞ்சு வயசுல இருந்த எங்க மாமாவ ஆத்தா கையில புடுச்சு குடுத்துட்டு போய் சேர்ந்துட்டாம்ங்களாம் தாத்தாவும் பாட்டியும். மாமாவ படிக்க வைக்கனும், பெரிய ஆளாக்கனும்னு இவங்க ரெண்டு பேரும் புள்ள குட்டிப் பெத்துக்கல. கஸ்ட ஜீவனம்ல இருந்தும் மாமாவ நல்லா படிக்க வச்சாங்க. அவரு பட்டணத்துக்குப் போய் வேலைப் பார்த்து கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு. அப்புறம் தான் நான் பொறந்தனாம். அப்புறம் நிலத்த வித்துக் குடு தொழில் பண்ணப் போறேன்னு மாமா வந்து நிக்க, பெரிய சண்டை ஆயிடுச்சாம். தாய் மாதிரி சோறு போடற பூமிய விக்க சொல்லறியான்னு பேச்சு முத்தி சண்டையாகி உறவும் பிரிஞ்சுப் போச்சு! மாமா கோர்ட்டுல கேசு போடவும் நிலத்துல விவசாயம் பாக்க முடியல. தினக்கூலிக்கு, வேற நிலத்துக்கு வேலைக்குப் போனாங்க ரெண்டு பேரும். அப்போத்தான் எங்க காளை பொறந்தான்” சொல்லும் போதே ராஜேஸ்வரியின் முகத்தில் புன்னகை.

“அவர் பொறந்ததும் கிரகங்கள் நிலை மாறி கஸ்டம் எல்லாம் பனியா மறைஞ்சு போச்சா?” என ராஜேஸ்வரியின் புன்னகை முகத்தைப் பார்த்துக் கேட்டாள் மங்கை.

“அட நீ வேற! அதுக்கு முன்ன அரை வயிறு சாப்பிட்டு இருந்த நாங்க, அவன் பொறந்ததும் கால் வயித்து சோத்துக்கே சிங்கியடிச்சோம்னா பார்த்துக்கோ” என அவள் பாவனையுடன் சொல்ல இவளுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. அவளுடன் ராஜேஸ்வரியும் சேர்ந்து சிரித்தாள். தன்னைத்தான் டேமேஜ் செய்கிறார்கள் இருவரும் என அறியாத காளை தன் மருமகனுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

“பொறந்தப்பவே கருகருன்னுதான் இருப்பான் காளை! அப்படியே எங்கப்பா ஜாடை. அப்போவே பெரிய குரலு அவனுக்கு! ராத்திரி அழுதான்னா, நாலு வீட்டுக்குக் கேக்கும்! நான் தான் அவன வளத்தேன்! ஆத்தாவும் அப்பாவும் வேலை வேலைன்னு கிடப்பாங்க! அக்கா, அக்கான்னு என் பின்னாலேயே சுத்துவான்! மூனு வயசுக்கு மேல அவன இடுப்புல தூக்கி வைக்க முடியாது! அவ்ளோ பாரமா இருப்பான். மூச்சு வாங்கிடும் எனக்கு! முக்காவாசி நேரம் நாங்க ரெண்டு பேர்தானே இருப்போம் வீட்டுல, அதனால எங்களுக்குள்ள ரொம்பவே அந்நியோன்யம். ஒரு கட்டத்துக்கு மேல நான் அவனப் பார்க்கறது போய் அவன் என்னைப் பார்த்துக்க ஆரம்பிச்சான். ஸ்கூல் ஸ்டார்ட் பண்ணப்பவே நல்லா திடகாத்திரமா பெரிய பையன் மாதிரி இருப்பான். என்னை அவன் தான் சைக்கிள்ல உட்கார வச்சு ஸ்கூலுக்கு ஏத்திட்டுப் போவான். ஒரு கட்டத்துல அவன் அண்ணனாவும் நான் தங்கச்சியாவும் மாறிட்டோம்! உருவத்துல மட்டும் இல்ல, உணர்வுலயும்! பெத்தவங்க கஸ்டம் பார்த்து ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு ஒரே அடம். இத்தனைக்கும் நல்லா படிப்பான் மங்கை! மனக்கணக்கு அப்படித்தான் போடுவான்.”

ஒரு பெருமூச்சு விட்டவள் மீண்டும் தொடர்ந்தாள்.

“நான் அப்படிதான் அழுதேன், படிப்பு முக்கியம்டா காளைன்னு! நீ படிச்சா போதுங்க்கா! பொண்ணுங்களுக்குத்தான் படிப்பு முக்கியம். நாளைய சந்ததி முட்டாளா இல்லாம இருக்கனும்னா பொண்ணுங்க படிச்சிருக்கனும். நீ கவலைப்படாத, என் புள்ளைக்குட்டிங்க முட்டாளா இருக்காம இருக்க நான் படிச்சப் பொண்ண கட்டிக்கிறேன்னு என் வாய அடைச்சிட்டான். நம்ம கிராமத்துல தான் படிக்க வசதி இல்லையே. டவுன் ஸ்கூலுல சேர்த்துட்டாங்க என்னை. இடைநிலைப்பள்ளில ஆரம்பிச்சு, காலேஜ் வரைக்கும் எனக்கு ஹாஸ்டல் தான். வாரா வாரம் சாப்பாடு மூட்டையைக் கட்டிக்கிட்டு என்னைப் பார்க்க வந்துடுவான். எனக்காக பார்த்து பார்த்து எல்லாம் செஞ்சான், செய்றான், இன்னும் செய்வான். இப்போ சொல்லு மங்கை, ஆத்தா அப்பாவ விட அவன் தானே எனக்கு செல்லமா இருக்க முடியும்” என புன்னகையுடன் சொன்னாள் ராஜேஸ்வரி.

“கண்டிப்பா ராஜிக்கா”

“காதலிச்சப்போ என் வீட்டுக்காரரு இப்படி கேரக்டர்னு எனக்குத் தெரியலடா மங்கை. காதல் கண்ண மறைச்சிடுச்சு. இவரு என் மேல உயிர வச்சிருந்தாலும், நான் உயிரா நினைக்கற என் தம்பிய இளக்காரமா பார்க்கறத என்னாலத் தாங்கிக்கவே முடியல. ஒரு தடவை, போடா நீயும் உன் காதலும்னு கோச்சிக்கிட்டு இங்க வந்துட்டேன். இவன் இருக்கானே, என்னைப் பேசியே கரைச்சு கொண்டு போய் அவர் கிட்டயே விட்டுட்டான். கல்யாணம் ஆகிட்டா புருஷந்தான் எல்லாமாம்! ஆத்தா அப்பனே ரெண்டாம்பட்சமா இருக்கும் போது தம்பி கம்பின்னு உன் வாழ்க்கையைக் கெடுத்துக்காதக்கான்னு ஒரே அட்வைஸ். உன்னை எதாச்சும் சொல்றாரா, கை நீட்டறாரா அப்போ என் கிட்ட சொல்லு, கைய முறிச்சுப்புடறேன். ஆனா தம்பி கிட்ட பேசலன்னு சண்டைப் போட்டுட்டு வர வேலைலாம் வேணான்னு காதுல ரத்தம் வர வச்சிட்டான்! நான் கோச்சிக்கிட்டுப் போனதுல அவருக்கும் பயம் வந்துடுச்சு! அதுல இருந்து ஒன்னு ரெண்டு வார்த்தைப் பேசுவாரு இவன் கிட்ட! ஆனா என் புள்ளைங்களுக்கும் எனக்கும் இவன் தான் எல்லாமே” முடிக்கும் போது குரல் கரகரத்தது அவளுக்கு.

“ராஜிக்கா,

‘உன் கூடவே பொறக்கனும்

உன் கூடவே பொறக்கனும்

உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே’ பாட்டு மட்டும்தான் மிஸ்ஸிங். மத்தப்படி உங்க ரெண்டு பேரயும் வச்சு நம்ம வீட்டுப் புள்ள பார்ட் 2 எடுக்கலாம்” என கேலி செய்து நிலைமையை சகஜமாக்கினாள் மங்கை.

“கிண்டலா பண்ணற எங்கள!” என கேட்டப்படியே மங்கையின் தலையில் வலிக்காமல் கொட்டினாள் ராஜேஸ்வரி.

“ஏத்தா! உன்னைப் பார்க்க கார்க்கார வாத்தியாரு வந்துருக்காரு” என குரல் கொடுத்தார் காமாட்சி.

“விசிட்டர் வந்துருக்காங்க போல! வா, நான் ஹெல்ப் பண்ணறேன்” என அவள் எழ உதவினாள் ராஜேஸ்வரி. வீட்டின் முற்றம் வரை மெல்ல ராஜேஸ்வரியைப் பிடித்துக் கொண்டே நடந்தாள் மங்கை.

மறைதான் வந்திருந்தான் அவளைப் பார்க்க. ராஜேஸ்வரி கூடவே இருந்ததால் சட்டை மாற்றவோ, முகத்தை சீர் செய்யவோ முயலவில்லை இவள். வந்திருப்பவன் தனக்கு ஸ்பேஷல் போல என ராஜேஸ்வரி நினைத்து விடுவாளோ எனும் தயக்கம்தான் காரணம்.

அவன் முன்னே வீட்டுத் தோற்றத்தில் போய் நிற்க, வைத்தக் கண் எடுக்காமல் அவளது கலைந்துப் போன முடியையும், தூங்கி எழுந்ததில் லேசாக சிவந்திருந்த கண்களையும், முட்டி வரை பாவாடை அணிந்திருந்ததால் அது காட்டிய வாழைத்தண்டு கால்களையும், டீசர்ட் போட்டிருந்ததால் துருத்தி தெரிந்த முன் அழகையும் அவன் ரசித்துப் பார்க்க, இவளுக்குத்தான் கடுப்பாகிப் போனது.

‘எத்தனைப் பேர காதலிச்சு கலட்டி விட்டிருக்கான்! அப்பவும் என்னமோ காணதத கண்ட மாதிரி பார்க்கறான் பாரேன்! மூஞ்சியும் இவன் முகரையும்’ என நொந்தவள்,

“வாங்க” என மெல்ல சொன்னாள்.

அவள் நிற்பதைப் பார்த்து எங்கிருந்துதான் வந்தானோ, மங்கை அமர ப்ளாஸ்டிக் நாற்காலியை எடுத்துப் போட்டிருந்தான் காளை. மறைக்கும் ஒன்றை எடுத்துப் போட்டவன், அதிதியைத் தூக்கிக் கொண்டு கிணற்றடிக்குப் போய்விட்டான்.

ஏற்கனவே அவளை காரில் பிக்கப் ட்ராப் செய்திருப்பதால் காமாட்சிக்கு மறைச்செல்வனைத் தெரிந்திருந்தது.

“வாப்பா!” என சொல்லிவிட்டு அவர் அடுப்படிக்கு சென்றுவிட்டார். ராஜேஸ்வரி ஒரு டம்ளரில் அவனுக்குக் காபி கொடுத்து விட்டு அவளும் கிணற்றடிக்குப் போய் விட்டாள்

“எப்படி இருக்க தவா?”

“ஐம் ஃபைன்”

“ஸ்கூலுக்கு வரலியேன்னு ஃபோன் போட்டேன் நீ எடுக்கவேயில்ல! அஜய் மாமா சொன்னாரு உனக்கு உடம்பு முடியலன்னு. கோல்டோ, பீவரோ இருக்கும்னு நெனைச்சுட்டேன் நான். சரி, ஒரு எட்டுப் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தா, இந்த ஓல்ட் ஊமன் தான் சொன்னாங்க உனக்கு அடிப்பட்டுருக்குன்னு. ஸ்கூட்டில இருந்து விழுந்து அடிபட்டுருக்குன்னு ஒரு வார்த்தை எனக்கு சொல்லனும்னு உனக்குத் தோணல இல்ல! வா தவா, ஹாஸ்பிட்டல் போய் காட்டிட்டு வந்துடலாம்”

“அவங்கள ஓல்ட் ஊமன்னு சொல்லாதீங்க! ஷீ இஸ் வெரி டியர் டூ மீ”

“ம்ப்ச்! இது ரொம்ப முக்கியமா இப்போ! உன்னோட ஹேல்த்த பத்தி பேசிட்டு இருக்கேன் நான்”

“ஐம் ஆல்ரைட்! ஹாஸ்பிட்டல்லாம் தேவையில்ல மிஸ்டர் மறை.”

“தவா! மிஸ்டர்னு சொல்லி என்னைத் தள்ளி வைக்காதே! உன்னை நெருங்க எனக்கு ஒரு சான்ஸ் குடும்மா!” என சொன்னவன் அவள் வலது கையைத் தன் கைக்குள் எடுத்துக் கொண்டான். சட்டென கையை இழுத்துக் கொண்டாள் மங்கை.

தமக்கையுடன் பேசிக் கொண்டிருந்தாலும் காளையால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. முன்பு மங்கையை மறை இறக்கி ஏற்றுவதே பிடிக்காமல் தான் அவள் ஸ்கூட்டி பற்றி கேட்டதும், கடைக்காரரிடம் அவசரமாக வேண்டும் என கேட்டு அதற்கு கூலியாக மங்கைக்குத் தெரியாமல் எக்ஸ்ட்ரா பணமும் கட்டி சீக்கிரமாய் வண்டி எடுத்துக் கொடுத்தான்.

டிப்டாப்பாய் இருந்ததோடு, நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த மறையை பார்க்க பார்க்க இவனுக்கு உள்ளுக்குள் எதுவோ பொசுங்கியது.

காளை அமர்ந்திருந்த இடத்தில் இருந்து பார்த்தால் வீட்டின் முற்றம் நன்றாகவே தெரியும். மறை மங்கை கையைப் பிடித்ததும் இங்கே இவனுக்கு ரத்த அழுத்தம் எகிறியது.

‘டீச்சரப்பா சொன்ன மாதிரி அழகாவும் இருக்கான், அறிவாவும் இருக்கான் இந்த வாத்தி! ஆனா ஒழுக்கம் என்னா விலைன்னு கேப்பான் போல இருக்கே! நானும் மொதப் புடிச்சுப் பார்க்கறேன், டீச்சர் கால பார்த்து காக்கா தண்ணில நெனைஞ்ச மாதிரி சிலித்துக்கறான்! கையைப் பார்த்து கரு நாகம் மாதிரி புஸ்சு புஸ்சுன்னு நாக்க நீட்டறான்! ஒதட்டப் பார்த்து ஓனாண் மாதிரி மொகத்துல கலர் காட்டுறான்! முடியப் பார்த்து முள்ளம்பன்னி மாதிரி விடைச்சுக்கிட்டு நிக்கறான்! மொத்தத்துல கரண்ட் அடிச்ச காண்டா மிருகம் கணக்கா லுக்கு விட்டுட்டு இருக்கான்! இவன்லாம் படிச்ச பண்பான வாத்தி! அடச்சை!’ என மனதில் மறையைத் தாளித்தவன் எழுந்து அவர்களை நோக்கிப் போனான்.

“உங்களுக்கு பேசிக் மேனர்ஸ்னா என்னன்னு தெரியாதா? இது கிராமம். நட்ட நடு ஹால்ல இப்படித்தான் கையைப் புடிச்சுட்டு நிப்பீங்களா?” என படபடவென பேசினாள் மங்கை.

அதற்குள் அவர்களை நெருங்கி இருந்த காளை கண்டது மங்கையின் கடுகடு முகத்தைத்தான். மங்கைக்கும் அவன் செய்கைப் பிடிக்கவில்லை என சட்டென புரிந்துக் கொண்டவன், அவர்கள் இருந்த இடத்துக்கு சற்று தள்ளி தரையில் சப்பளங்கால் போட்டு அமர்ந்து கொண்டான். பின்,

“சார்” என அழைத்தான்.

அவனைத் திரும்பிப் பார்த்த மறை,

“வாட்?” என கடுப்பை முகத்தில் காட்டாமல் கேட்டான்.

“நீங்க என்ன பாடம் சார் எடுக்கறீங்க?” என கேட்டான் காளை.

“ஏன் கேக்கறீங்க? எனக்கு முதியோர் கல்வி எடுக்கலாம் டைம் இல்லீங்க” என இடக்காக பதிலளித்தான் மறைச்செல்வன். அதாவது காளைக்கு பாடம் எடுக்க இஸ்டமில்லையாம். காளையை முதியோர் லிஸ்டில் சேர்த்திருக்கிறானாம்.

“இவர் மேத்ஸ் எடுக்கறாரு காளை” என அவனுக்கு பதில் அளித்தாள் மங்கை.

“மேத்ஸ்னா கணக்குத்தானே டீச்சர்?”

“ஹ்ம்ம், ஆமா”

“அப்போ நான் ஒரு கணக்கு கேள்வி கேக்கறேன்! முடிஞ்சா பதில் சொல்லுங்க பார்ப்போம்” என நேராகவே மறையைப் பார்த்து சவாலாக கேட்டான் காளை.

“சில்லி! நூறு கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவேன்! கமான், கேளு மேன்” என தெனாவெட்டாக கேட்டான் மறை.

அதற்குள் அருணும் அதிதியும் உள்ளே வந்து காளையின் இரு தொடைகளிலும் அமர்ந்துக் கொண்டார்கள். பிள்ளைகளைப் பார்த்து புன்னகைத்தாள் மங்கை.

காமாட்சி, கிணற்றடிக்குப் போய்விட்டார் அப்பொழுதுதான் உள்ளே வந்த மச்சக்காளைக்குக் காபி கொடுக்க. பெற்றவர்களோடு ராஜேஸ்வரியும் அங்கேயே பேசிக் கொண்டிருந்தாள்.

“ஒரு ஊருல..”

“கணக்கு கேளு மேன்! இது என்ன கதை சொல்லுற?”

“கதையில தான் கணக்கு வருது சார்”

“ஓஹோ! சரி சொல்லு”

“ஒரு ஊருல ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்களாம்”

“ஹ்ம்ம்” என மறையோடு பிள்ளைகளும் ஹ்ம்ம் கொட்டினர்.

“பாட்டி மொத்தம் பத்து வடை சுட்டாங்களாம்”

“சரி” என மங்கையும் இணைந்துக் கொண்டாள்.

“அதுல ஒரு வடைய காக்கா தூக்கிட்டுப் போயிருச்சாம்! இப்போ மீதி எத்தனை வடை இருக்கும் சார்?”

“இதென்னா பச்சைப்புள்ளைங்க கிட்ட கேக்கற கேள்வியெல்லாம் தி கிரேட் மேத்ஸ் டீச்சர் மறைச்செல்வன் கிட்ட கேக்கற? நான்சென்ஸ்! மீதி ஒம்பது வடை இருக்கும் மேன்”

“இல்லையே”

“இல்லையா? அது எப்படி?”

அதற்கு அதிதி பதில் தந்தாள்.

“மீதி எட்டு வடை இருக்கும்! ஏன்னா இன்னொரு வடைய தாத்தா சாப்டாங்க”

“இல்லல்ல! மீதி ஏழு வடை இருக்கும். பாட்டியும் ஒன்னு சாப்டுட்டாங்க” என அருண் சொன்னான்.

“இல்லடா அருணு! மீதி ஆறு வடை இருக்கும். அவங்க பேத்தியும் ஒன்னு சாப்பிட்டுட்டா” என காமாட்சி சொல்லியபடியே உள்ளே வந்தார்.

“அடிப்போடி! மீதி அஞ்சுதான் இருக்கும்! ஏன்னா அவங்க பேரன் இன்னொன்ன சாப்டுட்டான்” என மச்சக்காளையும் கூடவே வந்தார்.

“போங்கப்பா! மீதி நாலுதான் இருக்கும்.. ஏன்னா தாத்தாவோட ஸ்டெப்னி ஒன்னு சாப்டுட்டாங்க”

“ஸ்டெப்னினா என்னம்மா?” என குழந்தைகள் கேட்க, திருதிருவென விழித்த ராஜேஸ்வரி

“ஸ்டெப்னினா வந்து…தாத்தாவோட லேடி ப்ரேண்ட்” என சமாளித்தாள்.

குடும்பமாடா இது என மறைச்செல்வன் இவர்களை எல்லாம் ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருக்க,

“மீதி மூனுதான் இருக்கும் ராஜிக்கா! ஏன்னா இன்னொரு வடைய மறுபடியும் தாத்தா சாப்டுட்டாரு” என சொல்லி தவமங்கையும் அவர்கள் குடும்பத்துடன் இணைந்துக் கொண்டாள்.

“கரேக்டு டீச்சர்!” என சொன்ன காளை,

“போங்க சார்! இவ்ளோ சுலபமான கேள்விக்கே பதில் தெரில. நீங்க எப்டித்தான் புள்ளைங்களுக்குப் பாடம் எடுக்கறீங்களோ” என சிரிப்புடன் முடிக்க, அவனோடு சேர்ந்து அவன் குடும்பமே சிரித்தது.

‘அடப்பாவிங்களா! வடைய வச்சு என் டோட்டல் இமேஜ டேமேஜ் பண்ணிட்டீங்களே! இத்தனைக்கும் அது மெது வடையா பருப்பு வடையான்னு கூட சொல்லல!’ என மனதில் முனகியப்படியே வாய் விட்டு சிரிக்கும் மங்கையை கடுப்புடன் பார்த்திருந்தான் மறைச்செல்வன்.

தங்கள் காளையை மட்டம் தட்ட முயன்றவனை குடும்பமே கலாய்த்து, கிளம்பும் முன் வடையையும் கொடுத்து உபசரித்துத்தான் அனுப்பியது.

மறை கிளம்பியவுடன், எல்லோரும் இரவு உணவுக்காய் அடுப்படி நோக்கிப் போக, அங்கேயெ தயங்கியபடி நின்ற காளையை,

“காளை” என அழைத்தாள் மங்கை.

“டீச்சர்” என அருகில் வந்தான் அவன்.

“காலு மரத்துப் போன மாதிரி இருக்கு! என்னை தூக்கி விடறீங்களா?” என கேட்டப்படி தன் வலது கையை அவன் முன்னே நீட்டினாள். (ஏன் வலது கைன்னு சொல்லுங்க பார்ப்போம்) ஒரு கையில் அதிதியைத் தூக்கி இருந்தவன், இன்னொரு கையால் அவள் வலது கையைப் பிடித்து அவளை மெல்லத் தூக்கி நிறுத்தினான்.

“ஆத்தாவ கூப்டவா டீச்சர்?” என அவள் கையைப் பிடித்தப்படியே கேட்டான் அவன்.

“இல்ல பரவாயில்ல! இப்போ எல்லாம் சரியாப்போச்சு” என எல்லாம் எனும் வார்த்தையை அழுத்தி சொன்னவள், பெரிதாகப் புன்னகைத்தாள். பின் மெல்ல நடந்து அடுப்படிக்கு அவர்களோடு இரவுணவு உண்ண சென்று விட்டாள்.

தனது கையை பரவசமாகப் பார்த்து நின்றவனை,

“என்ன மாமா?” என கேட்டாள் அதிதி.

“ஒன்னும் இல்லடா” என சொன்னவன் மெல்லிய குரலில்

“கை கை கை கை வைக்கிறா!!!” என பாடிக் கொண்டே மற்றவர்களுடன் இணைந்துக் கொண்டான்.

தூக்க சொல்லி கைக் கொடுத்தவள், இனி அடிக்கப் போகும் புயல் மழைக்கு காக்க சொல்லி கரம் கொடுப்பாளா?????

 

(அடி பணிவான்….)

error: Content is protected !!