Madhumadhi bharath’s KNK 19

அத்தியாயம் 19

விடிந்தும் இருள் பிரியாத அந்த நேரத்தில் ஓசையின்றி திரும்பி எதிரில் படுத்து இருந்தவனைப் பார்த்தாள்.சீராக ஏறி இறங்கிய அவனின் நெஞ்சு ஆழ்ந்த உறக்கத்தை பறைசாற்ற மெல்ல எழுந்தாள் பொழிலரசி.அவனிடம் இருந்து தப்பி விடும் வேகத்தில் அந்த இடத்தை விட்டு வேகமாக நகர முயன்றவளை காட்டிக் கொடுத்தது அவளின் கால் கொலுசு. சத்தம் எழுப்பி தன்னை காட்டிக் கொடுத்த கொலுசுகளை கோபமாக முறைத்து விட்டு நிமிரும் முன் தெளிவான பார்வையுடன் விக்ரமாதித்யன் எழுந்து உட்கார்ந்து இருந்தான்.

 

“இந்த நேரத்தில் எங்கே போற பொழில்”கை கால்களை அசைத்து சோம்பல் முறித்தவாறே கேட்டான்.

 

“ம் சாகப் போறேன் போதுமா?”சத்தம் எழுப்பிய கொலுசுகளின் மேலிருந்த கோபம் வார்த்தைகளாக வெளிவந்தது.

 

“பொழில்” என்று பாய்ந்து வந்து அவளைக் கட்டிக் கொண்டவன் அவளை இறுக்கமாக தன்னுள் புதைத்துக் கொண்டான்.அவனது அகன்ற மார்பில் சாய்ந்து இருந்தவளுக்கு லப் டப் என்று துடிக்கும் இதயத்தின் ஓசை டமாரத்தின் ஒலியை போல அதிர்ந்து கேட்டது.அவன் உடலில் ஓடிய மெல்லிய நடுக்கத்தை அவள் உடலும் சேர்ந்தே உணர்ந்தது.

‘எதற்காக இத்தனை தவிப்பும்,துடிப்பும் சாகப் போகிறேன் என்று சொன்னதற்காகவா? என் மேல் இத்தனை அன்பு இருக்கிறதா உனக்கு?’ ஏக்கத்தோடு நிமிர்ந்து அவனை பார்க்க அவளிடம் அசைவை உணர்ந்தாலும் அவன் கண்களை திறக்கவில்லை.

 

இறுக மூடி இருந்த அவன் கண்களில் தெரிந்த அலைப்புறுதல் அந்த இருட்டிலும் அவள் கண்களில் இருந்து தப்பவில்லை.ஆனால் அதற்கு காரணம் என்ன என்பது தான் அவளுக்கு புரியாத புதிராக இருந்தது.அவன் வருத்தப்படுவதை காண சகியாமல்,ஆதரவாக அவனின் முதுகை வருட நினைத்தவளின் கைகள் அப்படியே அந்தரத்தில் நின்றது.

 

‘என்ன செய்கிறேன் நான்…அவன் வருத்தப்பட்டால் படட்டுமே…எனக்கு என்ன வந்தது’ என்று கோபமாக தலையை சிலுப்பியவள் அவனின் அணைப்பில் இருந்து சட்டென விலகி நின்றாள்.

 

“உங்களின் இந்த நடிப்பினால் இனியும் என்னை ஏமாற்ற முடியாது”

“சரி நீ நம்ப வேண்டாம்”இலகுவாக விட்டுக் கொடுத்தான்.

 

இதற்கு என்ன மறுமொழி சொல்வது என்று யோசித்தவள் மெல்ல அவனுக்கு எதிர்புறம் நடக்கத் தொடங்கினாள்.

 

“எங்கே போற பொழில்” மீண்டும் அதே கேள்வியுடன் வழி மறித்து நின்றான்  ஆதித்யன்.

 

“ம்ச்…குளிக்கப் போறேன் போதுமா?”எரிச்சல் இன்னும் மிச்சமிருந்தது அவள் குரலில்.

 

“அதுக்கு எதுக்கு அங்கே போற…இதோ கிணற்றில் இருந்தே தண்ணீர் இறைச்சு குளிக்கலாமே…”

 

“எனக்கு பம்பு செட்டில் குளிக்கணும் போல இருக்கு.அதான் அங்கே போறேன்.போதுமா விளக்கம்?”

 

“சரி வா நானும் வர்றேன்…”

 

“என்னதுதுதுது? நான் குளிக்கப் போகும் போது நீங்க எதுக்கு அங்கே வரீங்க?”

 

சும்மா தான் பொழில்…நான் இந்த மாதிரி இடத்தை எல்லாம் பார்த்தது இல்லையே…சும்மா பார்க்கத்தான்…நீ குளிச்சதும் நானும் அப்படியே குளிச்சு முடிச்சுடுவேன் இல்லையா?”என்று அதற்கு ஒரு காரணமும் சொன்னான்.

 

அவனை நம்பாத பார்வை பார்த்தவள் உள்ளே போய் மாத்து துணி எடுத்துட்டு போகலாம்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று இருவருக்கும் மாற்றுடை எடுத்துக் கொண்டு இருவரும் வீட்டின் கொல்லைப் புறம் நடக்கத் தொடங்கினர்.இருவரும் ஒருவரிடம் ஒருவர் பேசிக் கொள்ளவில்லை.பொழிலரசி ‘அவனிடம் பேசுவதா’ என்று வீம்புடன் இருக்க,ஆதித்யனோ ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தான்.

 

சற்று தூரத்தில் தெரிந்த பம்பு செட்டை அவனுக்கு கண்களால் காட்டியவள் அவனுடைய துணிகளை அவனிடம் திணித்து விட்டு ‘அங்கேயே நில்’ என்று பார்வையால் எச்சரித்து விட்டு மோட்டார் அறைக்கு சென்றாள் பொழிலரசி.

 

கட்டி இருந்த புடவையை களைந்துவிட்டு தோள் வரை பாவாடையை இறுக கட்டியவள் மோட்டாரை ஆன் செய்து விட்டு வெளியே வந்தாள்.சற்று தூரத்தில் தனக்கு முதுகு காட்டி நின்று கொண்டு இருந்த கணவன் தெரிந்ததாலோ என்னவோ அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.அவன் திரும்புவதற்குள் வேகமாக தண்ணீரால் நிரம்பி வழிந்து கொண்டு இருந்த தொட்டிக்குள் இறங்கி விட்டாள் பொழிலரசி.

 

விடியற்காலை நேரம் பம்புசெட்டில் இருந்து வந்த சில்லென்ற தண்ணீர் மேனியை தழுவியதும் உடலில் இருந்த இறுக்கம் அனைத்தும் தளர்ந்து போனது அவளுக்கு.தொட்டியை விட்டு வெளியே வரவே மனமின்றி மூழ்கி மூழ்கி குளித்து விளையாடிக் கொண்டு இருந்தாள்.சூரியன் உதிக்கும் நேரம் வந்த பிறகும் கூட அவளுக்கு அதை விட்டு வெளியே வரவே மனமில்லை.எத்தனை ஆண்டுகள் ஆயிற்று இந்த சுகத்தை அனுபவித்து.மீனாக மாறி துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்தாள் அவள் அருமைக் கணவன் அங்கே வரும் வரை.

 

“இன்னும் எவ்வளவு நேரம் தான் நீ குளிப்பதையே நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பது?” என்ற கேள்வியோடு அங்கே வந்து நின்ற கணவனின் வரவை அவள் விரும்பவில்லை என்பது அவளின் சுளித்த புருவங்கள் சொல்லாமல் சொல்லியது.தன் உடல் முழுவதையும் தொட்டிக்குள் மறைத்துக் கொண்டு கோபமாக திரும்பி அவனை முறைத்தாள்.

 

“உங்களுக்கு இங்கே என்ன வேலை?உங்களை அங்கே தானே நிற்க சொன்னேன்?”

 

“எவ்வளவு நேரம் தான் குளிப்ப…வெயிட் பண்ணி வெயிட் பண்ணி எனக்கு கால் வலியே வந்துடுச்சு…அதான் நான் கிளம்பி வந்துட்டேன்….ம் சீக்கிரம் எழுந்து மேலே வா…நானும் குளிச்சு ரெடி ஆகணும் இல்ல”அவசரப் படுத்தினான் ஆதித்யன்.

‘ஈர உடையோடு இவனின் முன்னே எப்படி வெளியே வருவதாம்?’என்று தனக்குள் முனகியவள் வெளியே வீராப்பாக பேசினாள்.

 

“எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் குளிக்கணும்…நீங்க போங்க இங்கேயிருந்து”

 

“உனக்கு இன்னும் கொஞ்ச நேரம் குளிக்கணும் அவ்வளவு தானே…அதுக்கு எதுக்கு நான் வெளியே போகணும்…” என்றவன் நொடியில் உடைகளை களைந்து விட்டு அவள் கண்களில் இருந்த தவிப்பை கண்டும் காணாதவன் போல ஒரே பாய்ச்சலில் தொட்டிக்குள் குதித்து விட்டான்.

 

“ஐயோ” என்று அவளின் அலறல் கேட்டு சாவதானமாக வெளியே வந்தவன் “ஏன் இப்படி கத்தி ஓவரா  சீன் போடுற” அமர்த்தலாக கேட்டான் விக்ரமாதித்யன்.

 

“உங்களை யார் இப்போ உள்ளே வர சொன்னது?”

 

“நீ குளிக்கும் லட்சணத்தை பார்த்தால் இப்போதைக்கு குளித்து முடிக்க மாட்டாய் போல இருக்கிறதே…அது தான் நானும் இறங்கி விட்டேன்…என்னுடைய எண்ணம் குளிப்பது மட்டும் தான்.ஆனால் உனக்கு வேறு ஏதோ எண்ணமிருப்பது போல தெரியுதே?”கண்களில் கேலியை படர விட்ட படியே சுவாரசியமாக அவளை பார்வையிட்டான்.

 

“ஒரு மண்ணும் இல்லை” என்று கோபமாக வெடித்தவள் அந்த தொட்டிக்குள் இருந்து அவனை எப்படி சீக்கிரம் வெளியேறுவது என்று தீவிரமாக சிந்திக்க தொடங்கினாள்.ஆனால் வழிதான் ஒன்றும் தெரியவில்லை அவளுக்கு.அதற்கு காரணம் ஆதித்யன் தான்.அவ்வளவு ரசித்து விளையாடிக் கொண்டு இருந்தான்.அவனின் மகிழ்ச்சியை கெடுக்க மனமில்லாமல் அவனின் செய்கைகளை கண்டும் காணாதவள் போல இருந்தாள்.

 

விக்ரமாதித்யனுக்கு இந்த அனுபவம் புதிது.பைவ் ஸ்டார் ஹோட்டலில் பாத் டப்பில் குளிக்கும் போது ஏற்படாத மகிழ்ச்சி இதில் ஏற்பட்டது அவனுக்கு.திறந்த வெளி,கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென மரங்களின் அணிவகுப்பு,தலைக்கு மேலே வானம்.அடைத்து வைத்து குளிக்க சொல்வது போல இல்லாமல் திறந்தவெளியில் தன்னை சுற்றி இருந்த ரம்யமான சூழலை ரசித்து கொண்டு இருந்தான்.

அந்த ஆழம் குறைவான தொட்டிக்குள் விக்ரமாதித்யன் என்னென்னவோ செய்தான்.மூச்சு பிடித்து உள்ளேயே சம்மணமிட்டு அமர்ந்து கொண்டான்.அவளின் முன்புறம் மூழ்கி பின்புறமாக எழுந்து சத்தமாக கத்தி அவளை பயமுறுத்தினான்.அவளின் மேல் அவன் விரல் நகம் கூட படவில்லை.ஆனாலும் அரசிக்கு வெளியே இருக்கும் நீரின் குளுமையையும் தாண்டி உள்ளுக்குள் அனலடித்தது.

 

உடல் முழுக்க நீரால் நனைந்து இருக்க கணவனோடு ஒற்றை தொட்டியில் குளியல் செய்யும் எந்த புதுப் பெண்ணின் மனமும் கொஞ்சம் சஞ்சலம் அடையத் தானே செய்யும்.அவளுக்கும் அது தான் நடந்தது.ஹார்மோன்கள் அதன் வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருந்தது.ஒரு கட்டத்திற்கு மேல் நிமிர்ந்து அவனை பார்க்காமல் கைகளை மார்புக்குகுறுக்காக கட்டிக் கொண்டவள் பார்வையை தழைத்துக் கொண்டாள்.

 

நேரம் ஆக ஆக அவளின் உடல் நடுங்கத் தொடங்கியது .என்ன தான் ஆரோக்கியமான உடலாக இருந்தாலும்,இப்படி வெகுநேரம் தண்ணீருக்குள் மூழ்கி இருந்தால் என்ன ஆகும்? அவள் மேனியில் முதலில் லேசானதொரு நடுக்கம்.அந்த நடுக்கத்தையும் மீறி அவனெதிரில் ஈர உடையில் செல்ல அவளது மனம் விரும்பவில்லை.

 

‘இவன் எதிரில் ஈர உடையில் செல்வதா? அதை அவன் ரசிப்பதா? நிச்சயம் நடக்காது’என்று எண்ணியவள் அவன் அங்கிருந்து கிளம்பும் வரை தண்ணீருக்குள்ளேயே இருக்க முடிவு செய்தாள்.

பற்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கும் பொழுது கண்கள் சொருக எப்பொழுது வேண்டுமானால் மயங்கி விழலாம் என்ற நிலையில் தான்  அவளை கவனித்தான் விக்ரமாதித்யன்.

 

“பொழில்….”என்று பாய்ந்து வந்தவன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு தொட்டியை விட்டு வெளியே வந்தான்.

 

மோட்டார் ரூமில் அவளை கிடத்தியவன் அவளின் கை கால்களை சூடு பறக்க தேய்த்து விட்டான்.அப்பொழுதும் அவளின் குளிர் நிற்கும் வழி இல்லாததால் சில நொடிகள் தயங்கி நின்றவனின் கைகள் நடுக்கம் எடுத்தது.ஒரு பெருமூச்சு விட்டு தன்னை தானே சமாதானம் செய்து கொண்டவன் ஒரு முடிவுடன் மறுநொடி அவளின் உடைகளை வேகமாக களைந்து விட்டு எடுத்து வந்து இருந்த மாற்றுடையால் அவளுக்கு போர்த்தி விட்டான்.

 

அதற்குப் பிறகும் கூட அவளின் நடுக்கம் குறைந்தபாடில்லை.அவளை அங்கே தனியே விட்டு செல்ல மனமில்லாமல் கைகளில் ஏந்திக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

 

அவனின் நடையில் இருந்த பதட்டத்தையும்,பயத்தில் முரசாக ஒலிக்கத் தொடங்கிய அவனின் இதயத் துடிப்பை உணர்ந்தாலும் அவனை தடுக்கவோ,சமாதானம் செய்யவோ அரசியால் முடியவில்லை.உடலில் தோன்றிய நடுக்கம் மேலும் அவனிடம் ஒண்டிக் கொள்ள சொல்ல கைகளை மாலையாக்கி அவன் கழுத்தில் போட்டு முகத்தை அவன் கழுத்தில் புதைத்துக் கொண்டாள்.

 

அதையெல்லாம் உணரும் மனநிலையில் விக்ரமாதித்யன் கொஞ்சமும் இல்லை.அவன் மனம் முழுக்க கொதித்துக் கொண்டு இருந்தது.

 

‘அப்படி என்னடி உனக்கு என் மேல் கோபம்? உன்னை நீயே தண்டித்துக் கொள்ளும் அளவுக்கு…யார் நான் உன் கணவன் தானே? என்னை விட்டு விலகி இருப்பதற்காக இப்படி உடலில் ஏற்பட்ட குளிரையும் பொருட்படுத்தாமல் இப்படி தண்ணீருக்குள் இருந்து தொலைத்து இருக்கிறாயே…நான் மட்டும் கவனிக்காமல் போய் இருந்தால்…’அவனின் நெஞ்சம் நடுங்கியது.

 

படுக்கையில் கிடத்தியவன் வீட்டில் தைலத்தை தேடி எடுத்து அவளின் உள்ளங்காலில் சூடு பறக்க தேய்த்து விட்டான்.வாசலில் சுசிலாவின் குரல் கேட்க , அவளின் மேல் இன்னும் இரண்டு போர்வைகளை போர்த்தி விட்டு வெளியே வந்தான்.

 

“காபி கொண்டு வந்து இருக்கேன் தம்பி.குளிச்சு முடிச்சுட்டீங்க போல…ஒரு பத்து நிமிஷம் இருங்க டிபன் தயாராகிடும்.இன்னைக்கு காலை சாப்பாடு எங்க வீட்டுல தான்.அதுக்குள்ள அவளை குளிச்சு தயாராக சொல்லிடுங்க…நல்ல நேரம் பதினோரு மணிக்கு.அப்போ வந்து உங்களை அழைச்சுக்கிட்டு போறோம் பாலும் பழமும் சாப்பிட” படபடவென்று பேசிக் கொண்டே போனவரை இடை மறித்து பேசினான் விக்ரமாதித்யன்.

 

“அவள் வர லேட்டாகும்…காலை சாப்பாட்டை இங்கே அனுப்பி விடுங்கள்.நாங்கள் சாப்பிட்டுக் கொள்கிறோம்”

 

“ஏன்? மகாராணி இன்னுமா தூங்குறா…கல்யாணம் ஆகிடுச்சு.இன்னும் என்ன பொறுப்பில்லாதத் தனம் நகருங்க தம்பி…அவளை என்னன்னு கேட்கிறேன்.”அவர் உள்ளே நுழைய முற்பட வாசலை மறித்துக் கொண்டு நின்றான் விக்ரமாதித்யன்.

 

“அவ இன்னும் டிரஸ் மாத்தலை… இப்போ உள்ளே போக வேணாம்.நைட் வேற சரியா தூங்கலை.அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.நாங்க கொஞ்சம் மெதுவாத் தான் வர முடியும்”

 

“சரி தம்பி” என்று அவனுடைய முகம் பார்க்காமல் முணுமுணுப்பாக சொல்லிவிட்டு விருட்டென அங்கிருந்து வெளியேறி விட்டார் சுசீலா.

 

அறைக்குள் அமர்ந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த பொழிலரசிக்கு வந்த குளிர் தலை தெறிக்க ஓடி இருந்தது.ஆதித்யன் தவறாக ஒன்றும் சொல்லவில்லை தான்.உண்மையைத் தான் சொன்னான்.ஆனால் அதை சுசீலா எப்படி எடுத்துக் கொண்டு இருப்பார்.புதிதாக திருமணம் ஆனவர்கள் இப்படி சொன்னால் கேட்பவர்களின் மனம் எந்த திக்கில் பயணிக்கும் என்று தெரியாதா இவனுக்கு.அவர்கள் இவனுடைய பேச்சை எந்த விதத்தில் அர்த்தம் செய்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கும் பொழுது வெட்கம் அவளை பிடிங்கித் தின்றது.

 

கதவை சாத்தி விட்டு கையில் காபி கப்புடன் வந்தவனை பார்த்தவள் முறைத்துக் கொண்டே பேசத் தொடங்கினாள்.

 

“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்படியா சொல்லி வைப்பாங்க”

 

“எப்படி?”மெதுவாக கேட்டுக் கொண்டே அவளுக்கு அருகில் அமர்ந்தவன் தான் ஒரு காபி டம்ளரை எடுத்துக் கொண்டு அவளுக்கும் ஒன்றை நீட்டினான்.

 

“அவங்க என்ன நினைப்பாங்க…”குரல் உள்ளே போய் விட்டது பொழிலரசிக்கு.

 

“என்ன நினைத்தால் எனக்கென்ன? அவங்களை கொஞ்சம் விட்டு இருந்தா இந்த கோலத்தில் உன்னை பார்த்து இருப்பாங்க பரவாயில்லையா?”ஆழ்ந்த குரலில் கேட்டான் விக்ரமாதித்யன்.

‘எந்த கோலத்தில்?’ குனிந்து தன்னை தானே பார்த்துக் கொண்டவள் அரண்டு தான் போனாள்.தன்னை மூடி இருந்த போர்வைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டவள் அனல் தெறிக்கும் பார்வை ஒன்றை அவன் புறம் திருப்பினாள்.

 

“எவ்வளவு தைரியம் இருந்து இருந்தா இப்படி செய்வீங்க?”

 

“ஏய்…கொஞ்சம் அடங்குடி…என்னை பொறுத்தவரை குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தவளுக்கு என்ன முதலுதவி செய்யணுமோ அதை தான் செய்து இருக்கேன்.தேவை இல்லாம பேசி என்னை கிளப்பி விடாதே சொல்லிட்டேன்”மிரட்டலாக பேசியவனின் பேச்சில் பொழிலரசி கோபம் அதிகரிக்கத் தான் செய்தது.

 

“தப்பு செஞ்சுட்டு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு பேசுற திமிரும்,தெனாவட்டும் உன்கிட்ட தான் நான் பார்க்கிறேன்”

 

“தேங்க்ஸ் அ லாட்” (thanks a lot)பணிவாக தலை குனிந்து ஏற்றுக் கொண்டவனின் செய்கையை அவளின் கோபத்தை தூண்ட கையில் இருந்த காபி டம்ளரை அவன் மேல் ஊற்ற அவள் முயற்சிக்க இமைக்கும் பொழுதில் அதிலிருந்து நகரந்தான் விக்ரமாதித்யன்.

 

“என்னடி என் அருமை பொண்டாட்டி இதுலயும் தோத்துட்ட போல…”ஆதித்யன் இதை கேட்டது என்னவோ அவளை சீண்டுவதற்காகத் தான்.ஆனால் பொழிலரசியின் உள்ளம் அதனால் காயம் பட்டதென்னவோ நிஜம்.

 

“ஆமா தோத்து தான் போறேன்.அதுவும் உன்கிட்ட…ஆனா கடைசி வரை இப்படி உன்னை ஜெயிக்க விட்டுக் கிட்டே இருக்க மாட்டேன்.கண்டிப்பா ஒரு நாள் நான் உன்னை ஜெயிப்பேன்.அப்படி ஜெயிக்கிற வரை ஓய மாட்டேன்”சபதம் எடுப்பது போல சொன்னவளை கண்களால் கூர்மையாக அளவிட்டான் விக்ரமாதித்யன்.

 

“வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்” என்று உணர்ச்சி அற்ற குரலில் கூறி விட்டு உடைகளை மாற்றி தயாரானான்.அவள் அந்த அறைக்குள் இருப்பதையே பொருட்படுத்தாமல் அவன் உடை மாற்றி முடிக்க பொழிலரசி தான்,பார்வையை உயர்த்த முடியாமல் தவித்துப் போனாள்.

 

“ஒரு பொண்ணு இங்கே இருக்கிறேன்னு கொஞ்சமாவது நினைப்பு இருக்கா பார்” கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்தாள்.

 

“எதுக்கு வம்பு? அப்புறம் நீ டிரஸ் மாத்தும் போது என்னை வெளியே போக சொல்லுவ…அதான்.இப்போ நீயும் இங்கேயே என் கண் முன்னாடியே மாத்து” குறுஞ்சிரிப்போடு கண்களை சிமிட்டியவனின் குரலில் விஷமம் வழிந்தோடியது.

“என்னுடைய உணர்ச்சிகளை தூண்டி விட்டு அதில் நீங்கள் குளிர் காய்ந்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சு.உங்களோட இந்த வீண் பேச்சில் இனியும் நான் ஏமாற மாட்டேன்.”மரத்த குரலில் சொன்னாள் பொழிலரசி.

 

“உன்னை என்னுடைய கைப்பிடியில் வச்சு இருக்கணும்னு நான் நினைச்சு இருந்தா அதுக்கு எத்தனையோ வழி இருக்கு பொழில்…வெறுமனே உணர்ச்சிகளை தூண்டி விடறது மட்டும் தான் வழியா என்ன?இதை விட்டா ஆயிரம் வழி இருக்கு.அதில் ஏதாவது ஒண்ணை செஞ்சுட்டு போறேன்” என்று அசால்ட்டாக கூறியவன் தோள்களை குலுக்கி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

 

‘இவன் என்ன சொல்கிறான்…இது இல்லைனா ஆயிரம் வழியா? அப்படி என்ன செய்யப் போகிறான்? யாவன் சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளவே எனக்கு தனி மூளை தேவைப்படும் போல இருக்கிறதே’ என்று நொந்து கொண்டவள் மெல்ல எழுந்து அறைக்கதவை தாளிட்டு விட்டு கொண்டு வந்து இருந்த உடைகளில் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டாள்.

 

வீட்டை விட்டு யார் கண்ணிலும் படாமல் வெளியேறும் அவசரத்தில் தனக்கு தேவையான எந்த பொருட்களையும் அவள் எடுத்துக் கொண்டு வராவிட்டாலும் தனக்கும் சேர்த்து உடைகளை எடுத்துக் கொண்டு வந்த கணவனின் செய்கையை பாராட்டுவதா இல்லை என்னை தோற்கடிக்கத் தானே இதை செய்தான் என்று வருந்துவதா?’ என்று புரியாமல் மௌனமாக கிளம்பினாள் பொழிலரசி.

 

இளம் மஞ்சள் நிறத்தில் ஊதா நிற பூக்கள் மின்ன தங்க சரிகையிட்ட டிசைனர் புடவையை அழகுற கட்டியவள்கண்ணாடியில் தன்னை சரிபார்த்து நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துக் கொண்டாள்.இந்த குங்குமம் நான் வைப்பதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? எல்லாப் பெண்களும் கணவன் தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து அல்லவா குங்குமம் வைத்துக் கொள்வார்கள்.நான் அப்படியா நினைக்கிறேன்’ என்று கசப்புடன் எண்ணிக் கொண்டவளின் கவனம் கலைந்தது வாசலில் கேட்ட கயலின் குரலால்.

 

சற்று முன்னர் சுசீலாவிடம் பேசியதை போல இவளிடம் எதையாவது பேசிவிடுவானோ என்ற பதட்டத்தில் தலையை கூட பின்னாமல் வேகமாக ஓடி வந்தாள் பொழிலரசி.அங்கே அவள் கண்ட காட்சியில் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

 

விக்ரமாதித்யன் அங்கிருந்த சேரில் கால் மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்து இருக்க,அவனுக்கு எதிரில் வியர்த்து விறுவிறுத்துப் போய் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு பேச முடியாமல் திணறுவதை போல நின்று கொண்டு கையை பிசைந்து கொண்டு இருந்தாள் கயல்.

 

காதலாகும்…

 

Comments Here