VNE 25
VNE 25
அத்தியாயம் 25
மஹா வீட்டிற்கு வந்து சேர்ந்து சிலபல மணி நேரங்கள் கடந்திருந்தது.
விஜி கார்த்தியிடம் பத்திரங்களை ஒப்படைத்துவிட்டு உடனே கிளம்பியிருந்தான், பேசியில் அழைப்பதாக கூறிவிட்டு. போகும் போதும் மகாவை பார்த்தபடியே தான் போனான். அவனது மனதுக்குள் சந்தேக விதை விழுந்திருந்தது. முன்னர் இருந்த மஹாவிற்கும் ஷ்யாமுக்கும் ஆகவே ஆகாது என்பதை இவன் நன்றாகவே அறிவான். ஆனால் கிளம்பும் போது மஹா கூறிய ‘மிஸ் யூ’ வும் ஷ்யாமுடைய புன்னகையும் விஜியின் மனதுக்குள் குழப்பத்தை விதைத்திருந்தன. குழப்பத்தை மட்டும் விதைக்கவில்லை, அவனது மனதுக்குள் புயலடிக்க செய்திருந்தது அந்த ‘மிஸ் யூ’
மகாவை போன்ற பெண் ஷ்யாமை எப்படி மிஸ் செய்ய முடியும் என்பதுதான் அவனது குழப்பம். இருவருக்குமிடையில் இருந்த பிணக்கு சரி செய்யப்பட்டு விட்டதா? இல்லையென்றால் அதற்கும் மேலா?
அதிலும் ஷ்யாமுடைய ‘மகாலக்ஷ்மி’ என்ற அந்த அழைப்பில் விஜய் உணர்ந்தது வேறு. அவனுடைய குரலில் தென்பட்ட விவரிக்க இயலாத சொந்தமும், தனக்கு மட்டுமே உரித்தானவர்களிடையே காட்டும் நெருக்கமும் அந்த ‘மகாலக்ஷ்மி’ உணர்த்தியது. அதனோடு கூடிய அந்த புன்னகை?
ஷ்யாமை பற்றி முழுவதுமாக அறிந்தவனால் அந்த புன்னகையை ஜீரணிக்க முடியவில்லை. அது எப்போதும் போல உதட்டில் ஒட்டி வைக்கப்பட்ட புன்னகையல்ல. அவனது உள்ளிருந்து சிந்திய புன்னகை என்பதை நொடியில் உணர்ந்து கொண்டவனுக்கு தன்னையும் அறியாமல் வியர்த்தது.
இரவு தன்னோடு இருந்தவளின் பெயரைக் கூட நினைவு வைத்துக் கொள்ளாதவன் ஷ்யாம். அது போன்ற பெண்களிடம் சின்ன புன்னகைக்கு கூடத்தான் பஞ்சமாக இருக்கும். அதிகமாக சிரித்துவிட்டால் அவர்களது எதிர்பார்ப்பு அதிகமாகும் என்பவன் அவன்!
அவனா புன்னகைத்தது?
யோசிக்கும் போதே தலை வலி மண்டையை பிளந்தது. உடன் வந்த மகாவை ரசிக்கும் மனநிலை போய்விட்டிருந்தது. வீட்டில் விட்டவுடன் கார்த்திக்கிடம் டாக்குமென்ட்களை கொடுத்தவன், மகாவை பார்த்தபடியே கிளம்பியிருந்தான்.
அவளது முகத்திலிருந்து எதையாவது கண்டுபிடிக்க முடிகிறதா என்ற பார்வை மட்டுமே!
அவனை பொறுத்தமட்டில் மஹா அவனது பொக்கிஷம்!
மனதுக்குள் பூட்டி வைத்து அழகு பார்க்கப்படும் பொக்கிஷம்.
அந்த பொக்கிஷத்தை எப்படியெல்லாமோ தாங்க வேண்டும், ஆராதிக்க வேண்டும் என்று அவன் அத்தனை நாட்களாக நினைத்திருக்க, திடீரென ஷ்யாம் ஒரே நொடியில் அத்தனையையும் கலைத்து விட்டதாக பிரமை அவனுக்கு!
இந்த நான்கு நாட்களாக அவனுடன் இருந்திருந்தால் கூட அவனுக்கு கவலையில்லை. ஆனால் மிஸ் யூ சொல்லுமளவு அவன் மகாவின் மனதுக்குள் நுழைவதென்றால்? அவனால் தாள முடியவில்லை. மனம் வலித்தது.
அதே வலியோடு கிளம்பியும் சென்றுவிட்டான்.
மகாதான் அழுதவர்களுக்கு ஆறுதல் சொல்லி களைத்து போயிருந்தாள். அவள் உறுதியான பேச்சையும் தெளிவான முகத்தையும் பார்த்தபின் தான் பெரியவர்கள் அனைவரும் நிம்மதியடைந்ததும் கூட!
அவளை கண்டதில் முருகானந்தம் பரவசமடைய, கார்த்திக்கு கண்களில் நீர் நிறைந்தது!
“இப்படி யெல்லாம் ஆகும்ன்னு நினைக்கலடா குட்டி… ரொம்ப கஷ்டப்பட்டியா?” கண்களில் நீரை தேக்கிக் கொண்டு கேட்ட தந்தையை ஆதரவாக பற்றிக் கொண்டவள்,
“ப்பா… இட்ஸ் ஓகே ப்பா… உங்க எல்லாரையும் தான் மிஸ் பண்ணேன்… அதை தவிர வேற ஒண்ணுமே இல்ல…”
தன்னெஞ்சறிய அவள் பொய் கூற விரும்பவில்லை. கடந்து சென்ற நான்கு நாட்களை வாழ்க்கையின் கடைசி மூச்சு வரை மறக்க முடியாதபடிக்கு செய்திருந்தானே ஷ்யாம். அதை மறுக்க முடியுமா?
“ஆனாலும் என்னால தானே இப்படி ஆச்சு…” விடாமல் கண்கலங்கி கொண்டிருந்தவரை இலகுவாக்கும் பொருட்டு,
“நானே பைரவி கிட்ட இருந்து தப்பிச்சு நாலு நாள் எஞ்சாய் பண்ணிட்டு வந்திருக்கேன்… நீங்க என்னன்னா இப்படி வயலின் வாசிக்கறீங்களே ப்பா…” தந்தையிடம் ரகசிய குரலில் பேசுவது போல சற்று சப்தமாகவே கூறி தாயை வம்பிழுக்க, பைரவியின் முகத்தில் குறும்புன்னகை!
“வாலு… விட்டா எக்ஸ்கர்ஷன் போயிட்டு வந்தேன்னு சொல்லுவா ம்மா…” கார்த்திக் முகம் முழுக்க பரவிய புன்னகையோடு அவளை வாரினான்.
“எஸ் பிரதர்… யூ வார் ரைட்…” என்று கண்ணடிக்க,
“கழுதை… என்ன லொள்ளு பாரு…” என்று அவளது காதை திருகியவன், அப்போதுதான் நிம்மதியாக புன்னகைத்தான். நான்கு நாட்களாக அவன் அனுபவித்த துன்பம், அவன் மட்டுமே அறிந்தது அல்லவா!
அவள் தமையனை புன்னகை பூக்க பார்த்திருந்தாள். அவளும் அறிவாளே, கார்த்திக் பட்ட பாட்டை!
“ஆனா நம்ம லட்டு தைரியம் கொடுக்கலைன்னா நான் என்னவாகி இருப்பேன்னே தெரியலப்பா… நாம தான் சின்ன குட்டின்னு நினைக்கறோம்… ஆனா எவ்வளவு தைர்யமா இருந்தா தெரியுமா, எனக்கும் தைரியம் சொல்லிட்டு…” என்றவன், தங்கையை தோளோடு அணைத்துக் கொண்டான். அவனது கண்களிலும் கண்ணீர் கோடுகள்!
அவனது கண்ணீரை கண்டவர்களால் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
மீண்டும் இன்னொரு சீசனை ஆரம்பித்து விடுவார்களோ என்று அவசரமாக,
“ண்ணா… போதும் ண்ணா போதும்… இன்னொரு தடவை எல்லாரும் அழ ஆரம்பிச்சு, இந்த வீடே மூழ்க ஆரம்பிச்சு, நானும் மூழ்கி, நீயும் மூழ்கி… தேவையா?” என்று சிரிக்காமல் கூற,
“அட பிசாசே…” என்றவன், அவளது தோளை இறுக்கிக் கட்டிக் கொண்டான், தனது குட்டித் தங்கையை இனி தொலைத்து விட மாட்டேன் என்று கூறுவது போல!
“ண்ணா… பணத்தை செட்டில் பண்ணிட்டதா சொன்னாங்களே, என்ன பண்ண?”அவனது தோளில் சாய்ந்தபடியே மகா கேட்டாள். ஷ்யாமிடம் கேட்டதற்கு தான் அந்த ஆணியை தான் பார்த்து கொள்வதாக கூறி அவளது வாயை அடைத்திருந்தான்.
அவளது முகத்தை பார்க்காமல், தந்தையை ஆழ்ந்து பார்த்தவனின் முகத்தில் அவ்வளவு துயரம். “தியேட்டரை கொடுத்தாச்சு மஹா…” என்றவனுக்கு குரல் கம்மியது. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு நிம்மதி. எது போனாலும் தங்கை இருக்கிறாளே!
“ச்சு… போகட்டும் கார்த்திண்ணா… விடு… இந்த பிரச்சனைல இருந்து வெளிய வந்தா போதும்…” என்றவள், “யார்ண்ணா வாங்கினது?” என்று கேட்க,
“ஏதோ மெடிக்கல் காலேஜ் கட்றாங்களாம்… ஃபுல் பேமென்ட் பண்ணிட்டாங்க… ஆனா இன்னும் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணல பாப்பா…”
நிமிர்ந்தவள் யோசனையாக தனது தமையனை பார்த்தாள்.
“ஏனாம்?”
“அவங்க சேர்மேன் அவுட் ஆஃப் ஸ்டேஷனாம்…”
“அப்புறம் எப்படி ஃபுல் பேமென்ட் பண்ணாங்க?” என்று மகா கேட்ட கேள்விக்கு பதில் கூற தெரியாமல் விழித்தான் கார்த்திக். அப்போதுதான் அவனுக்குமே அந்த கேள்வி தோன்றியது.
“தெரியலையே லட்டு… முதல்ல ட்ரை பண்ண இடத்தில எல்லாம் முடியாதுன்னு சொன்னாங்க… இவங்க இவங்களாவே வந்து பேசி முடிச்சு உடனே பேமென்ட்டும் பண்ணிட்டு போய்ட்டாங்க… நமக்கு தான் பணத்தேவை உடனே இருக்கே… உடனே வாங்கிட்டேன்டா…” என்றவனை இன்னமும் குழப்ப விரும்பவில்லை.
ஆனால் இது அப்படியே விட்டுவிடும் விஷயமாகவும் தோன்றவில்லை. கார்த்திக்கும் அதை தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் தங்கை இப்போதுதான் மிகப்பெரிய நெருப்பாற்றை கடந்து வந்திருக்கிறாள் என்பதை நினைவில் கொண்டவன், அதற்கும் மேல் பேசாமல் விட்டுவிட்டான்.
“ரேட் குறைச்சு குடுத்தியா?”
“இல்லையே பாப்பா… நான் கேட்ட ரேட்டை மறுவார்த்தை பேசாம ஒத்துகிட்டாங்க…” என்றவனுக்கும் புருவம் ஏறி இறங்கியது.
இருவரின் பேச்சையும் பார்த்துக் கொண்டிருந்த முருகானந்தம்,
“அட பசங்களா… கொடுத்தது வாங்கினது எல்லாம் முடிஞ்சு போச்சு… இந்த பேச்சை விடுங்க…” என்றவர் கார்த்தியின் புறம் திரும்பி, “புள்ளை சாப்பிடட்டும்… விடு கார்த்தி…” என்றார்.
“சரிடா நீ போ… ஆனா அவங்க வந்தவுடனே ரெஜிஸ்ட்ரேஷன் வெச்சுக்கலாம்ன்னு சொன்னாங்க பாப்பா… அப்ப மட்டும் நீயும் வந்து கையெழுத்து போட்டுடு…”
“ம்ம்ம்… சரிண்ணா…” என்றவளுக்கு எங்கோ இடறிக் கொண்டுதான் இருந்தது.
யோசனையோடு வந்தவளை பைரவி இழுத்து பின்கட்டில் அமர வைத்து தலைக்கு எண்ணெய் வைத்து, உடலுக்கும் தேய்த்து விட தொடங்கினார். கிருஷ்ணம்மாள் கிணற்றடிக்கு அருகிலிருந்த அந்த விறகடுப்பை அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டிருந்தார். வேலை செய்பவர்கள் செய்தாலும் இருவருக்குமே தங்கள் கையால் செய்ய வேண்டியதை செய்தால் தான் திருப்தி!
“பைரவி… முடியை பிச்சு எடுக்காதே… வலிக்குது…” முகத்தை சுளித்துக் கொண்டு கூறியவளின் மண்டையில் நங்கென்று ஒரு கொட்டு விழுந்தது.
பைரவி தான் கொட்டியிருந்தார்.
எப்போதும் சிணுங்கும் மகாவுக்கு அந்த கொட்டு இப்போது பிடித்திருந்தது. தனியாக இருந்த இந்த நான்கு நாட்களிலேயே தாயின் இந்த வன்மையான அன்பை தேடியது நினைவுக்கு வந்தது.
“அம்மா உன்னை திட்டிட்டே இருந்தாலும் அவ தான் பாப்பா ரொம்ப அழுதா… ரொம்ப தவிச்சு போய்ட்டா குட்டி…” கிருஷ்ணம்மாள் சொல்லும் போதே அவரது கண்களில் கண்ணீர்.
ஓரக்கண்ணில் தலை தேய்த்து விட்டுக் கொண்டிருந்த பைரவியை பார்க்க, அவரது முகம் இன்னமும் தெளியவில்லை. முகமும் கண்களும் சிவந்து கண்ணீரை பொழிய காத்திருந்தது.
“ம்மா… நீ அழுதியா?” ஆச்சரியமாக கேட்டவளுக்கு இன்னொரு கொட்டுத்தான் பரிசாக கிடைத்தது.
“ஒழுங்கா அடங்கி உக்காருடி கிழவி… பேச வந்துட்டா… புள்ளைய காணோம்னா ஜிலுஜிலுன்னா இருக்கும்? அதுவும் அவ்வளவு மோசமானவனாம் அவன்…” என்று அவர் மூக்கை உறிஞ்ச,
“எவன்?” சீகைக்காய் கண்களுக்குள் செல்லாமலிருக்க கண்ணை மூடியிருந்தவள் ஒற்றை கண்ணை திறந்து பார்த்து கேட்க,
“அதான் நாதன் அண்ணா பையன்…” என்று கூறும் போதே அவ்வளவு கடுப்பு அவரது குரலில்! முதலில் புரியாத பார்வை பார்த்தவள்,
“யாரைம்மா சொல்ற?”
“அதான்டி அந்த வெளங்காவெட்டி ஷ்யாம்…” என்று கடுப்படிக்கவும், ஜெர்க்கானாள். பதிலேதும் கூறாமல் மெளனமாக தலையை பைரவியிடம் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தவளுக்கு பைரவிக்கு அவன் மேல் இருந்த கோபம் புரிந்தது. அந்த கோபம் இனம் புரியாத வலியை கொடுத்தாலும், அவளால் அதை மறுக்க முடியவில்லை. அவளது மௌனத்தை கண்ட பைரவி,
“ஏன் மஹா? நீ யாரோ ஒரு பொண்ணு கூடத்தான் இருந்ததா அண்ணன் சொன்னான்…” என்று இடைவெளி விட்டவர், கேட்க சங்கடமாக தயங்கிக் கொண்டே, “அப்படித்தான?” என்று கேட்க, அவள் என்ன சொல்வாள்?
அன்னை கேட்க வருவது புரிந்தது. புரியாததற்கு அவளொன்றும் குழந்தையில்லை. ஆனால் ஷ்யாம் அப்படிப்பட்டவன் இல்லையே. அதை அவள் அறிவாள். கடைசியாக அவனது மனதை திறந்து காட்டியதும் கூட அவளுக்கு ஏதோவொரு வகையில் பிடித்துதான் இருந்தது, அவனை ஏற்க முடியாது என்பதை தவிர! அவனது நட்பை விட முடியவில்லை, அவனை விட்டுவிட முடியவில்லை என்பதுதான் அவளது உண்மை நிலை. அவனது பெயர் மிக மோசமாக கெட்டிருக்கிறது என்பதை இவள் அறிவாள். ஆனால் அதை தன் தாயின் வார்த்தைகளில் கேட்கும் போது நெஞ்சம் வலித்தது.
உண்மையை சொல்லவும் மனம் வரவில்லை. சொல்லாமலிருக்கவும் முடியவில்லை. குற்ற உணர்வு மனதை அழுத்தியது.
“ம்ம்ம்…” என்று ஹீனமாக அவள் முனக, பைரவிக்கு ஏதோவொரு ஆறுதல்.
“நாதன் அண்ணா பையன் இப்படி இருப்பான்னு எங்களால கற்பனை கூட பண்ணி பாக்க முடியலடி…” என்றவருக்கு ஆற்றாமை! அவரால் ஆத்மனாதனின் மகனை பேசவும் முடியவில்லை. பேசாமலிருக்கவும் முடியவில்லை.
“அது யார்ம்மா?”
“நம்ம சொந்தம் தான்… உங்க அப்பாவுக்கும் நல்ல ப்ரெண்டு… எல்லாம் அப்போ… ஆனா அவன் இப்படி பண்ணுவானா?” பைரவிக்கு குரல் தொண்டையை அடைத்தது.
அவள் மெளனமாக அன்னை கூறுவதை கேட்டபடியிருந்தாள்.
இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டியிருக்குமோ?
“அவன் சரியான பொறுக்கியாம் மஹா…”
“ம்ம்ம்…” அவரது அந்த வார்த்தையில் அவளது கண்கள் கலங்க துவங்கியிருந்தது. தெரிந்தது தான். அவனது வார்த்தைகளாலேயே அறியப் பெற்றதுதான். ஆனால் அந்த வார்த்தையை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. உள்ளுக்குள் வெகுவாக காயப்பட்டுப் போனாள்.
‘ஷ்யாம் நீ கொஞ்சம் நல்லவனா இருந்திருக்க கூடாதா?’
எரிந்து கொண்டிருந்த விறகை வெளியே இழுத்து விட்டார் கிருஷ்ணம்மாள். தீ அணைந்து கணப்பாகி இருந்தது.
அண்டாவில் அளவான சூட்டிலிருந்த நீரை தலையோடு ஊற்றினார் பைரவி. மகாவின் கன்னத்தில் வழிந்த கண்ணீர் நீரோடு கலந்தது.
அவனுக்கான கண்ணீர் தான். அவன் எப்படியும் அழ வைப்பேன் என்றான் தான். ஆனால் அவனுக்காகவே, அவனாலேயே இப்படி கண்ணீரை சிந்த நேரிடும் என்று கண்டிருந்தாளா என்ன?
அவசரமாக தன் முன் இருந்த நீரை எடுத்து முகத்தோடு சேர்த்து ஊற்றிக் கொண்டாள். உள்ளத்து வெம்மை குறையுமா? குறைவது போல தெரியவில்லை.
“அவன் உன்னை கஸ்டடி எடுத்தான்னு தெரிஞ்சவுடனே யாருக்குமே உயிரே இல்லடி…” விடாமல் பேசிகொண்டிருந்த பைரவியை ஆழ்ந்து பார்த்தாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா… நீ முதல்ல எனக்கு தண்ணிய ஊத்தி விடு. அப்புறமா அத்தனை கதையும் பேசு…” வேடிக்கையாக சொல்வது போல தாயின் பேச்சை இப்போது வேண்டுமானால் நிறுத்த முடியும். ஆனால் எப்போதுமே முடியுமா என்ன?
“இப்பதான்டி போன உயிர் வந்திருக்கு… அந்த நாயை திட்டி கொஞ்சம் ஆத்திக்க கூட விட மாட்டியா?” அவளது தலைக்கு நீரை ஊற்றியபடியே ஷ்யாமை திட்ட,
“ம்மா…” கிட்டத்தட்ட கத்தினாள். ஷ்யாமை ‘நாய்’ என்று அன்னை விளித்ததில் அவளது உடல் கிட்டத்தட்ட நடுங்கவே தொடங்கியிருந்தது.
“என்னாச்சு பாப்பா?” கிருஷ்ணம்மாள் பதறியபடி அருகே வர, பைரவி என்னவென புரியாமல் கையில் குவளையோடு அவளை பார்த்தார்.
எதுவும் பேசாமல் மெளனமாக அந்த முக்காலியில் அமர்ந்திருந்தாள். உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தது. எப்படியிருந்தாலும் இவர்கள் பாதிக்கப்பட்டவர்கள், பேசத்தான் செய்வார்கள் என்பது அறிந்திருந்தது தான். ஆனால் அதை எதிர்கொள்ள அவளால் முடியவில்லை.
“பாப்பா… தண்ணி ரொம்ப சூடா இருக்கா?” புரியாமல் கிருஷ்ணம்மாள் மீண்டும் கேட்டார்.
“ஆமா ஆத்தா… சுட்ருச்சு…” என்று இறங்கிய குரலில் கூறியவளை பாசமாக பார்த்தவர், மருமகளைப் பார்த்து,
“பார்த்து ஊத்து பைரவி… பாவம் பாப்பா…” என்று கூற, பைரவி நீரை தொட்டுப் பார்த்தார். அது இளம் சூட்டில் தான் இருந்தது.
அவளுக்கு சுட்டது வேறு… அவள் சொன்னது வேறு!
வேறெதுவும் பேசாமல் குளித்து விட்டு வந்தவளுக்கு
“ஊர் கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு…” என்று ஆரம்பித்து அத்தனை கண்களும் பட்டு போக வேண்டுமென சுத்தி போட்ட கிருஷ்ணம்மாளின் அடாவடியை பார்த்த போது மனம் லேசாகி, அவர்களோடு ஒன்றியது.
கிருஷ்ணம்மாளை காணும் போதே மகாவுக்கு மனம் கனத்தது. எத்தனை எத்தனை வேண்டுதல்கள்… எத்தனை பரிகார பூஜைகள். அத்தனையும் அவரது பேத்தி ஒருத்திக்காக மட்டுமே.
பைரவியும் குறைச்சல் இல்லை. அவர் பங்குக்கு ஒரு லிஸ்ட் நீட்டியிருந்தார். அவர் வேண்டியிருந்த கோவில்களின் வரிசையை பார்த்த போது மகாவுக்கு தலை சுற்றியது.
“ம்ம்மா… பேசாம நான் அப்படியே ஓடி போயிருக்கலாம்… இத்தனை கோவிலுக்கும் சுத்தி முடிச்சுட்டு வர்றதுன்னா நான் கிழவியாகிடுவேன்…” என்று இவள் சிணுங்க,
“பரவால்லடி சின்ன கிழவி… ஒரு தடவை சுத்திட்டு வர்றதுல ஒன்னும் குறைஞ்சு போய்ட மாட்ட… உன்னை விட்டுட்டு நாங்க பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்…” என்று எப்போதும் போல கூறிக்கொண்டு வந்தவர், “மறுஜென்மம் எடுத்து இருக்கோம் மஹா… பாட்டியெல்லாம் செத்து பொழைச்சுருக்காங்க…” என்று தழுதழுத்தவரை அணைத்துகொண்டவள்,
“மாமியார் கூட சமாதானமாகிட்ட போல இருக்கு…” என்று கண்ணடிக்க, ‘அடிங்க’ என்று கையோங்கியவர், “நிஜமா பாவம்டி… ரெண்டு நாளா சோறு தண்ணி இறங்கல… மயக்கம் போட்டு விழுந்தவங்க தான்… இப்ப நீ வந்தவுடனே தான் அவங்க முகத்துல சிரிப்பே தெரியுது மஹா…” என்றவர் அழுது விட, இவள் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தாள்.
“என்ன ஸ்வீட்டி இப்படி பொசுக்கு பொசுக்குன்னு அழற? உன்னை நாலு நாளா வம்பிழுக்காம எனக்கு தூக்கமே வரலை தெரியுமா?” என்று தாயின் கன்னத்தை பிடித்துக் கொஞ்ச,
“கழுதை குட்டி… ஓடிரு…” என்று கூறும் போதே தாயின் கன்னத்தை முத்தமிடுவது போல வந்து நறுக்கென கடித்து வைத்து விட்டு ஓட, பைரவி கன்னத்தை பிடித்துக் கொண்டார்.
“பிசாசே… வந்தவுடனே உன் வேலைய காட்ட ஆரம்பிச்சுட்ட பார்த்தியா…” என்று கத்த,
“வேற என்ன பண்றது ஸ்வீட்டி? நாக்கு செத்து போய் வந்துருக்கேன்… உன்னோட கன்னம் தான் டேஸ்ட்டா இருக்கு…” என்று பதிலுக்கு கத்தினாள் மஹா.
“வர்றேன் இரு… தோசை கரண்டில ரெண்டு இழுப்பு இழுத்தான் அடங்குவடி மகாராணி…”
“ஆரம்பிச்சாச்சா உங்க அட்டூழியத்தை…” என்று முருகானந்தம் டைனிங் டேபிளுக்கு வர, பின்னாலேயே கார்த்திக்கும் வந்தான். காலை முதல் யாருமே உண்டிருக்கவில்லை. முதலில் பெண்ணை பார்க்க வேண்டுமே என்ற ஆற்றாமை. கண்ட பிறகு அவளை கண்ட மகிழ்ச்சி.
தட்டில் தாளமிட்டபடி அமர்ந்திருந்த தங்கையுடன் அமர்ந்து கொண்டான் கார்த்திக்.
அவசரமாக வீட்டினுள்ளே, “மகா…” என்று குரல் கொடுத்தபடி நுழைந்தாள் பிருந்தா!
அண்ணன் தங்கை இருவரின் முகத்திலும் தவுசன்ட் வாட்ஸ் வெளிச்சம். கார்த்திக் அதை சிரமப்பட்டு மறைத்துக் கொள்ள, மகா எழுந்து பிருந்தாவை நோக்கி, “ஏய் பார்த்து…” என்று கார்த்திக் கூறும் போதே ஓடினாள்.
“ஏன் எருமை எனக்கு ஒரு வார்த்தை போன் பண்ண மாட்ட?” இடுப்பில் கை வைத்தபடி முறைத்த தோழியை பார்த்து சிரித்தாள்.
“ஆமா விருந்தாடிட்டு வந்துருக்கேன்… உனக்கு போன் பண்ணி வர சொல்றதுக்கு?!” என்று மீண்டும் சிரித்தவளுக்கு அப்போதுதான் தன்னுடைய செல்பேசி எங்கே என்ற கேள்வி தோன்றியது.
ஷ்யாமிடம் அல்லவா இருந்தது. அவன் திருப்பி தரவே இல்லையே!
அந்த யோசனையெல்லாம் ஒரு சில நொடிகள் தான்!
அருகில் வந்தவள், “எப்படி இருக்க செல்லோ? கஷ்டமா இருந்துதா?” மகாவின் இடுப்பை வளைத்து பிடித்துக் கொண்டு கேட்க,
“கஷ்டமா? ஏன்டி எல்லாருமே இப்படியே நினைக்கிறீங்க? அதெல்லாம் ஒண்ணுமே இல்ல பிருந்தாகுட்டி… எல்லாரையும் மிஸ் பண்ணேன் அவ்வளவுதான்…” என்று அவளது கன்னத்தை கிள்ளியபடியே மகா கூற, “ஸ்ஸ்ஸ்… எருமை… வந்தவுடனே உன் வேலைய காட்ற பாத்தியா?!” என்று தலையில் நங்கென்று கொட்ட,
“அதை சொல்லு பிருந்தா… என்கிட்டவும் அப்படித்தான்… நறுக்குன்னு ஒரு கடி கடிச்சு வெச்சுட்டு தான் வேற வேலையே பார்த்தா…” என்று சிரித்துக் கொண்டே சொன்ன தாயை வியப்பாய் பார்த்தாள்.
பைரவி அவ்வளவு சுளுவாக பிருந்தாவிடம் பேசுபவர் இல்லை. அதென்னவோ அப்படியொரு இறுக்கம் இருந்தது அவருக்கு!
இப்போது வெகு சாதாரணமாக பெண்ணை கிண்டல் செய்து அவளிடம் கூறுமளவு மாற்றம், நான்கு நாட்களிலா?
ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் மறுப்பக்கம் சந்தோஷமாக இருந்தது.
பைரவியையும் பிருந்தாவையும் மாற்றி மாற்றி பார்த்தவளுக்கு சிரிப்பு பொங்கியது. ‘என்னய்யா? என்ன நடக்குது இங்க?’ என்று பிருந்தாவிடம் புருவத்தை ஏற்றி இறக்க, அவள் உதட்டை வளைத்து சிரித்தாள், ‘எனக்கொன்னும் சம்பந்தம் இல்லப்பா’ என்பது போல தோளை குலுக்கி!
“சரி இப்ப மட்டும் எப்படி தெரிஞ்சுகிட்ட? டிவில நியூஸ் ஸ்க்ரோல் ஓடுச்சா?” என்று கிண்டலாக மகா சிரிக்க,
“அவங்க சொன்னாங்க பாப்பு…” சற்று வெட்கத்தோடு கூறியவளை தள்ளி நிறுத்தி மேலும் கீழுமாக பார்த்தாள்.
“எவங்கடி?” என்றவளின் குரலில் அவ்வளவு ஆச்சரியம்!
“அதான் உங்க அண்ணன்…” என்றவளின் குரல் குழையோ குழையென குழைந்திருக்க, முகம் செக்க சிவந்த வானமாகியிருந்தது.
“ஹேய் பிருந்தாகுட்டி… யூ வார் ப்ளஷிங்…” என்றவள், திரும்பி தன் அண்ணனை பார்க்க, கார்த்திக் அவளை பார்க்காமல் வேறு புறம் பார்த்தான். அவனது முகமும் விகசித்துக் கொண்டிருந்தது.
“அடப்பாவிகளா… நான் இல்லாத நாலு நாள்ல எத்தனை வேலை பார்த்து இருக்க?” வியப்பில் வாயை பிளந்தபடி இவளிடம் கிசுகிசுக்க,
“ஏய் கொஞ்சினது போதும் மகா… பிருந்தாவையும் சாப்பிட உட்கார வை…” என்று பைரவி அழைக்க,
“போம்மா போ… உன் மாமியார் கூப்பிடறாங்க…” என்று அதே சிரிப்போடு பிருந்தாவிடம் கிசுகிசுத்தாள் மகா!
“ஏய் ஓட்டாதடி ப்ளீஸ்…” பிருந்தா கெஞ்ச, மகா நிமிர்ந்து நின்று கெத்தாக,
“அது நம்ம மூடை பொறுத்தது அண்ணியாரே…” என்று சிறிய குரலில் அவளுக்கு மட்டுமாக கேட்குமாறு கூற, அவளது முகம் இன்னமும் சிவந்து செங்கொழுந்தாகியது.
“ச்சீ போடி பக்கி…” அவளது தோளில் அடித்துவிட்டு டைனிங் டேபிள் நோக்கிப் போனாள், கவனமாக கார்த்திக்கை பாராமல்!
பெரியவர்களின் முன் எப்படி இருந்தாலும் காட்டிக் கொண்டதில்லையே. அது இப்போதும் தொடர, அவளை ஓரக்கண்ணில் பார்த்த கார்த்திக்கின் மனம் அவளது ஒற்றை பார்வையை யாசித்தது.
இருவரின் நாடகத்தை பார்த்த மகாவுக்குதான் நெஞ்சில் வலி வரும் போல இருந்தது.
“ம்ம்மா…” என்று இடப்புறத்தை பிடித்துக் கொண்டு கார்த்திக்கின் அருகில் அமர்ந்தவளை அனைவருமே பதட்டத்தோடு பார்த்தனர்.
“டேய் என்னடா குட்டி…” என்று பதறியபடி கேட்ட தந்தையை பார்த்தவள், வலிப்பது போன்ற பாவனையை முகத்தில் ஏந்தி,
“ப்பா லைட்டா ஹார்ட் பெயினாகுதுப்பா…” என்று இடப்புறத்தை பிடித்தவாறே கூற,
“ஹாஸ்பிடல் போலாமாடா குட்டி?” என்று அவர் அவசரமாக எழுந்தார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா… அம்மாவோட சிக்கன் பிரியாணியை ஒரு பிடி பிடிச்சா எல்லாம் சரியா போகும்…” என்று சிரிக்காமல் சொல்ல, அவள் ஓட்டுவதை புரிந்து கொண்ட கார்த்திக், சிரித்துக் கொண்டே ‘லொக் லொக்’ என்று இருமி காட்டினான்.
பதிலுக்கு இவளும் இரும, நடுவில் மாட்டிக் கொண்டது பிருந்தாதான்!
அவஸ்தையாக நெளிந்தபடி அமர்ந்திருந்தவள், பைரவி கொண்டு வந்த பாத்திரங்களை அவசரமாக வாங்கி பரிமாற ஆரம்பித்தாள்.
“கப் ஐஸ்… கோன் ஐஸ்… குச்சி ஐஸ்…” என்று கிண்டலாக மகா ஆரம்பிக்க,
“ஏன் பாப்பா ஐஸ் விக்கிற?” கார்த்திக் சிரித்தபடியே கேட்க,
“விக்கல ப்ரோ… வைக்கிறேன்…” என்று அவளது கிண்டல்களை தொடர, கார்த்திக்கின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“அடடா… அண்ணா நீ அவளுக்கு மேல ப்ளஷ் பண்ற…” என்று அவனிடம் குனிந்து கிசுகிசுக்க,
“குட்டி… ப்ளீஸ்… ரொம்ப ஓட்டாத அப்பா வேற இருக்காங்க…” என்று பதிலுக்கு அவனும் கெஞ்சினான்.
“அப்படீங்கறே… ஓகே… ஆனா அதுக்கும் டீல் போடணுமே…” என்று இவள் யோசிக்க,
“சரி என்ன வேணும்? சொல்லு…” என்று குனிந்தபடியே கிசுகிசுத்தான், பிருந்தாவை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டு!
“ம்ம்ம்… எனக்கு…” என்று யோசித்தவள், இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு, “ரொம்பல்லாம் வேண்டாம் ப்ரோ… ஐபாகோல ஐஸ்க்ரீம் அன்ட் தியேட்டர்ல ஒரு படம்… அம்புட்டுத்தான்…” என்று கண்ணடிக்க,
“டன்…” என்று கார்த்திக் கட்டை விரலை உயர்த்திக் காட்டியவன், குரலை தழைத்துக் கொண்டு, “ஒரே கண்டிஷன்…” என்று கூற, அவள் புருவத்தை உயர்த்தி, “என்ன ப்ரோ?” என்று கேட்க, “அவளையும் கூட்டிட்டு வருவ தானே?” என்று சிரிப்போடு கேட்டான்.
“அடப்பாவி அண்ணா…” என்று வாய் மேல் கையை வைத்துக் கொண்டாள் மகா!
வெட்கத்தோடு சிரித்தவனை பார்த்து விளையாட்டாக முறைத்தவள், “அடேய் உடன்பிறப்பே… இது எனக்கு விரிச்ச வளையா தெரியலையே…” என்று கலாய்க்க,
“எஸ் குட்டி..” என்று அவளது தலையில் தட்டியவனை பார்த்த பைரவி,
“பசங்களா… பேசாம சாப்பிடனுமாக்கும்…” என்றவர், பிருந்தாவின் புறம் திரும்பி, “என்னடா நீயும் உட்கார்ந்து சாப்பிடாம? இங்க கொடு… நான் பரிமாறறேன்…” என்று கையிலிருந்த கரண்டியை வாங்கவும்,
“அண்ணியார் செம ஃபார்ம்ல இருக்கா… மாமியாரை கவுத்துட்டா…” அண்ணனிடம் கிசுகிசுக்க,
“நானே கவுந்துட்டேன்… பாவம் அவ மாமியார் எம்மாத்திரம்…” என்று பதிலுக்கு கிண்டலாக கூற, மகா அவளையும் மீறி, “ஓஓஹோஓஓ…” என்று பிருந்தாவை பார்வையிட்டபடியே கலாய்க்க, அத்தனையையும் பார்வையிட்டபடியே உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார் முருகானந்தம்.
எதுவோ இருக்கிறது என்று புரிந்தாலும் என்னவென தெரியவில்லை. பூனைக்குட்டி அதுவாக வெளியே வரட்டும் என்று நினைத்துக் கொண்டார். மனைவியிடமும் கண்ணை காட்டி விட்டார். அவரும் அதை புரிந்து கொண்டு லேசான சிரிப்போடு பரிமாறிக்கொண்டிருக்க, இது புரியாத இளையவர்கள் அவர்களுக்குள்ளாக பேசி சிரித்துக் கொண்டே உணவுண்டு கொண்டிருந்தனர்.
கார்த்திக்கின் செல்பேசி அழைத்தது!
எடுத்து பார்த்தவனுக்கு அந்த எண் யாருடையது என்று தெரியவில்லை.
‘ம்ம்ம்… டபுள் சிக்ஸ் ட்ரிப்பில் சிக்ஸ்ஸா… ஏதோ விஐபி நம்பர் மாதிரி இருக்கே… யாரா இருக்கும்?’ என்று யோசித்தவன், ஆன் செய்து, “ஹலோ…” என்றவாறு காதுக்கு கொடுத்தான்.
“கார்த்திக்?”
“எஸ்… நீங்க?”
“ஷ்யாம் ஹியர்…”
தனது காதுகள் கேட்டது என்னவென முதலில் கார்த்திக்கு புரியவில்லை.
“யார்?”
“ஷ்யாம்… ஷ்யாமள பிரசாத்…” என்று மீண்டும் கூற, அதிர்ந்து அந்த செல்பேசியை பார்த்தான். ஒரு நேரத்தில் இவனோடு ஒரு நிமிடம் பேச முடியாதா என்று தவித்தது நினைவுக்கு வந்தது. கூடவே அத்தனை கசப்புகளும்!
இப்போது என்ன பேசுவது என்று புரியாவிட்டாலும், அவனது கோபங்களை கைவிட முடியவில்லை. அதோடு எதற்காக இப்போது இந்த அழைப்பு? மீண்டும் ஏதாவது பிரச்சனையா?
“சொல்லுங்க ஷ்யாம் சார்!” என்ற இவனின் பதிலில் மகா விசுக்கென்று நிமிர்ந்து பார்க்க, அத்தனை பேரும் அதிர்ந்து பார்த்தார்கள்.
“மஹா கிட்ட போனை கொடுங்க கார்த்திக்…” மிக நேரடியான உத்தரவு. மீற முடியாத அழுத்தமான குரல். ஆனால் எதற்கு மகாவிடம் கொடுக்க வேண்டும், கேள்வி தோன்றினாலும் பதில் பேசாமல், தங்கையை கேள்வியாய் பார்த்தபடி பேசியை அவளிடம் கொடுக்க, தயக்கமாக வாங்கியவள், யாரையும் நிமிர்ந்து பாராமல்,
“சொல்லுடா…” என்று பழக்க தோஷத்தில் கூறிவிட, கார்த்திக் இன்னமும் அதிர்ந்து பார்த்தான். அவனை காட்டிலும் அதிர்ந்தது முருகானந்தமும் பைரவியும்.
“ஏன்… போய்ட்டா ‘சேஃப்’ ன்னு ஒரு மெசேஜ் அனுப்ப மாட்டியா?” அவனது குரலில் கோபம் தெறித்தது. குடும்பத்தை கண்டவுடன் தனக்கு ஒரு மெசேஜை கூட அனுப்ப முடியாதா என்ற கோபம்.
தன்னை சுற்றி வெகு அமைதியாக இருந்த சூழல் அவளுக்குள் குளிரை பரப்பியது. இந்த நேரத்தில் இவன் அழைத்திருக்க வேண்டுமா என்று தோன்றியதோடு, தன்னிடம் தான் செல்பேசியே இல்லையே, அதை அவன் கொடுக்கவே இல்லையே என்ற எரிச்சலோடும்,
“என்ட்ட போன் இல்லன்னு உனக்கு தெரியாதுல்ல…” என்று மகா பல்லைக் கடிக்க, அவனுக்கும் அப்போதுதான் அது நினைவுக்கு வந்தது.
“ஸ்ஸ்ஸ்… சாரி மகா… மறந்துட்டேன்… இப்ப உனக்கு உடனே வேணுமா? யார்கிட்டயாவது கொடுத்து விடட்டா?”
“ரொம்ப அர்ஜன்ட் இல்ல… நிதானமா வாங்கிக்கறேன்…” என்றவள், நினைவு வந்தவளாக, “நீ அப்பாகிட்ட பேசினியா?” என்று கேட்டாள். அத்தனை முறை அழைத்திருந்தாரே, அவர்களுக்கும் தவிப்பிருக்காதா என்ற எண்ணத்தில் தான் அவள் கேட்டது!
“இல்ல… இப்ப பேசினா மாத்து வாங்குவேன்… ஹைதராபாத் போனதுக்கு அப்புறம் பார்க்கலாம்…” என்று சிறு சிரிப்போடு கூற,
“அவர் பாவம் ஷ்யாம்…” என்றவள், சற்று இடைவெளி விட்டு, “உனக்குத்தான் அந்த ஃபீலிங்க்சே கிடையாதே…” என்று கடுப்பாக குற்றம் சாட்டியவளின் தொனியை ரசித்தவன்,
“இன்னும் பிப்டீன் டேஸ் ஆகும் டார்லிங்… எனக்கு இங்க வேலை இருக்கு… முடிச்சுட்டு போய் மொத்தமா சமாதானம் பேசிக்கலாம்…” என்றவன், “அதை விடு… அங்க எதுவும் ப்ராப்ளம் இல்லையே?” என்று கேட்க,
“ம்ஹூம்… இதுவரைக்கும் இல்ல…” பிரியாணியை உண்டபடியே இவள் பதில் பேச,
“இனிமே வரும்ன்னு சொல்றியா?” கிண்டல் தொனியில் அவன் கேட்க,
“அதான் நீ கால் பண்ணிட்டியே… வரலாம்… வராமலும் இருக்கலாம்…” என்று குறுஞ்சிரிப்போடு இவள் கூற, ஷ்யாம் வாய்விட்டு சிரித்தான்.
“சாப்ட்டுட்டு இருக்க போல…”
“ம்ம்ம்… சிக்கன் பிரியாணி அன்ட் வஞ்சிர மீன் வறுவல்… பைரவி கையால… சொர்க்கம்னா இதுதான்… ஐ ம் எஞ்சாயிங்…” இவள் அனுபவித்து கூற, ஷ்யாம் வாய்விட்டு சிரித்தான்.
“தீனி பண்டாரம்… இப்படியே முழுங்கு… இன்னும் டபுள் த சைஸ் தான் ஆவ…”
“சோ வாட்… நமக்கு முக்கியம் சோறு… டாட்” என்று கூறியவள், “நீ என்ன பண்ற? சாப்ட்டியா?” என்று கேட்க,
“ம்ம்… இனிமே தான்… ஒரு பிசினஸ் லன்ச்… பார்க் ஷெரட்டன்ல… போயிட்டு இருக்கேன்…”
“முடிச்சுட்டு போய் தூங்கு…”
“உத்தரவு மகாராணி…” என்றவன், “உன் போனை கொடுத்து அனுப்பறேன்…” என்று விட்டு, சற்று இடைவெளி விட்டு, “புது போன் வாங்கி அனுப்பட்டா மஹா?” அவளது ஒப்புதலை எதிர்பார்த்து காத்திருந்தான்.
“ம்ஹூம்… வேணாம்…” நிர்தாட்சனியமாக மறுத்தாள். அந்த பேசியை வைத்து அவன் பேசியதனைத்தையும் அவள் மறக்கவே இல்லை. ஒவ்வொன்றும் பசுமரத்தாணியாக பதிந்து இருந்தது.
“ஓகே டா… டேக் கேர்…” என்றவன், “ஐம் வெய்டிங் மஹா…” என்று முடிக்க, அது எதற்காக என்று தெரிந்தாலும், காட்டிக் கொள்ளாமல்,
“வேஸ்ட் ஆஃப் டைம் சுவாமிஜி…” மஹா சிரித்தபடியே கூற,
“பக்தையே… யாம் எதையும் வேஸ்ட் செய்வதே இல்லை… சிறு துரும்பும் பல் குத்த உதவும்… அதிலும் தாங்கள் பெரும்ம்ம்ம் துரும்பு வேறு…” ஷ்யாம் கலாய் மோடுக்கு மாற,
“வேண்டாம்…” என்று பல்லைக் கடித்தவள், அருகில் உள்ளவர்களை கருத்தில் கொண்டு ‘அடக்கு… அடக்கு’ என்று தன்னை தானே அடக்கிக் கொண்டாள். அவளது அவஸ்தையை உணர்ந்தவன், சிரித்துக் கொண்டே
“கண்டிப்பா ஒரு நாள், எனக்கு போன் வாங்கி தான்னு சொல்லத்தான் போறடி…” அவ்வளவு உறுதியாக கூறியவனின் தொனியை ரசித்தாள். இவனுக்கு தான் எவ்வளவு மனவுறுதி!
“அப்படியா…” என்று கிண்டலாக இழுத்தவள், “பாக்கலாம்…” என்று சிரித்து விட்டு போனை சுவிட்ச் ஆஃப் செய்தாள்.
அதே சிரிப்போடு நிமிர்ந்து பார்த்தவள், அதிர்ந்தாள்.
அன்னை, தந்தை, தமையன், தோழி என அனைவரின் முகத்திலும் ரவுத்திரம், ஆற்றாமை, கசப்பு என கொட்டிக் கிடக்க, அனைவரையும் கேள்வியாய் பார்த்தாள்.
“அவன் கிட்ட இவ்வளவு நேரம் என்ன பேச்சு பாப்பா?” கார்த்திக்கின் ரவுத்திரத்தை கண்டு உள்ளுக்குள் குளிர் பிறந்தது.
அதிர்ச்சி தாளாமல் தமையனை பார்த்தாள்!