Magizhampoo-Manam17A

மகிழம்பூ மனம்

மனம்-17 A(நிறைவு பதிவு)

 

யுகேந்திரன், தன் தாயைத் தஞ்சமடைந்திருந்தான்.

தனது தவறை உணராதவன், தாயின் மேல் பழிபோட்டான்.

“நீங்கதான அவளை கோவிலுக்கு கூட்டிட்டுபோயி கழுத்துல கிடந்ததை கழட்டிப் போட ஐடியா தந்தது”, ஆரம்பமும் புரியாமல் முடிவும் தெரியாமல் சற்றே விழித்தவர், மகனின் வார்த்தையில் ஒருவாராக யூகித்துக் கொண்டார்.

யூகத்தில் புன்னகையோடு மகனை எதிர்கொண்டிருந்தார் அம்பிகா.

“… அதேமாதிரி, அடுத்து எப்ப என்ன செய்யனும்னு நீங்கதான என்னைக் கூப்பிட்டு சொல்லியிருக்கனும்?”, என்று தாயிடம் குறைபாடியவனின் குறைந்த குரலும் அருகிலிருந்த முருகானந்தத்தின் செவியை எட்டியிருந்தது.

“சரி இப்ப என்ன? ஒரு நல்ல நாள் பாத்து தாலியை வாங்கி அந்தப் புள்ள கழுத்துல கட்டிற வேண்டியதுதான!”, என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர்

“அம்பி, அந்த காலண்டர எடுத்துட்டு வாம்மா!”, என்க, அதில் வளர்பிறையில் வரக்கூடிய சுபமுகூர்த்த நாளை குறிக்க வேண்டி எடுத்து வரக் கூறினார் முருகானந்தம்.

அம்பிகா கணவர் கேட்டதை எடுக்க எழ, அதற்குள் தாயைத் தடுத்து, தானே சென்று எடுத்து வந்து தந்தையிடம் கொடுத்திருந்தான் யுகேந்திரன்.

தன்னவள் கேட்ட வார்த்தையின் வேகத்தில், வேகமாக வந்தவன், வந்த வேலையை வேகமாகவே செய்தான்.

யுகி நீண்ட நாட்களாகவே எதற்கும் தன்னைத் தேடிவராதவன், யாழினியின் பாய்ச்சலால் தன்னிடம் வந்து கத்துவதை உணர்ந்தே இருந்தார் அம்பிகா.  ஆனாலும் எதையும் வெளிக்காட்டவில்லை.

தாயின் அறிவுரையின்படி ஒரு நல்ல நாளில் சென்று தாலியை வாங்கியிருந்தான்.

கோவிலைத் தேர்ந்தெடுத்து, வளர்பிறை திதியில் வரக்கூடிய சுபமுகூர்த்த நாளில், பெரியவர்கள் முன்னிலையில் யாழினியின் கழுத்தில், தாலி கட்டியிருந்தான் யுகேந்திரன்.

யுகத்தையே வெற்றி கொண்டதாக உள்ளம் மகிழ்ந்திருந்தான் யுகேந்திரன்.

உள்ளம் கவர்ந்தவளோ, ‘உனக்கு அவ்வளவு சீனே இல்லை’, என்பது போல இயல்பாக இருந்தாள்.

பெரியவர்களுக்கும் மனதில் நிம்மதி வந்திருந்தது.

முதலில் மாமியார், மாமனாரிடம் ஆசி பெற வந்தவர்களை வாழ்த்திய அம்பிகா,

மருமகளிடம், “தாலிங்கறது அந்தஸ்தோட அடையாளமாதான் இன்னிக்கு போயிருச்சு.  ஆனாலும் அதை மதித்து நடக்கறவங்களுக்கு உரிய நியாயம் செய்யும்!

“சிரஞ்சீவியா இருப்பா”, என்று மகனை வாழ்த்தியவர், “தீர்க்க சுமங்கலியா நீடூடி இரும்மா!”, என்று மருமகளை வாழ்த்தியிருந்தார்.

அத்தோடு, “அம்மா, அப்பாகிட்டயும் நல்ல நேரம் முடியறதுக்குள்ள ஆசிர்வாதம் வாங்கிக்கம்மா”, என்று கூறியிருந்தார்.

சரிதா, ராஜேஷ் இருவரும் தனது மகளை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

குழந்தைகள் இருவரும், தனது பெற்றோரின் திருமணத்தை, அதாவது தாலி கட்டும் வைபவத்தை அலைபேசியில் படமெடுத்து மகிழ்ந்திருந்தனர்.

தேவாவிற்குமே மனதின் பாரம் நீங்கி இலேசானது போல உணர்ந்தான்.

தனது தவறுகளைக் கரைக்க, தகுந்த நேரத்தையும், வாய்ப்பையும் அந்த இறைவன் தனக்கு தரவேண்டும் என ஆழ்ந்த வேண்டுதலை இறைவனது சந்நிதியில் வைத்திருந்தான் தேவா.

////////////////

கல்வியியல் கல்லூரியில் தேர்வுகள் துவங்கிவிடவே, யாழினியால் எங்கும் செல்ல முடியவில்லை.

உணவிற்காகக் கூட மனைவியைத் தொந்திரவு செய்வதை விரும்பாத யுகேந்திரன், கடந்து போன ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பிள்ளைகளை அம்பிகாவின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தான்.

மனைவிக்கு தேர்வுகள் முடியும்வரை தன்னாலான வரை உதவியாக இருந்தான்.

தொடர்ச்சியாக தேர்வுகளை எழுதி முடித்து தனது இளநிலை கல்வியியல் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தாள் பெண்.

‘அப்பாடா’ என தேர்வுகளை எழுதி முடித்து வீடு திரும்பியவளுக்கு,  தேவா, சம்யுக்தாவின் திருமண விடயம் பாதியில் நிற்பது நினைவில் வர, முகம் யோசனையில்  வாடியது.

மனைவியின் முகத்தை வாசிப்பதையே வாடிக்கையாக்கி இருந்தவன், வாடலைக் கண்டு கொண்டான்.

“என்னடா, ஏன் ஒரு மாதிரியா இருக்க? எக்ஸாம் ஈஸியா இல்லையா?”, கவலைக் குரலில் கேட்டான்.

“ம்.. அதெல்லாம் ஈஸிதான்… படிச்சு எழுதறதுதான அபிப்பா. அதெல்லாம் பக்காவா பண்ணிட்டேன்”, என்றவளின் குரலில் ஏதோ குறை உணர்ந்தான்.

“வேறன்ன உன் மண்டையக் குழப்பற விசயம்?”, விடயம் அறியாவிட்டால் இவன் குழம்பிவிடுவான் என்பதால் மனைவியின் வாயால் அறிய விழைந்தான். 

“இந்த மனுசங்களை படிச்சி, அவங்களுக்கு ஒரு நல்லது செய்யறதுக்குள்ள என் ஆவியவே பாத்திருவேன் போல!”, என்று அங்கலாய்த்துப் பேசியவளை

“எதுக்கு எல்லாத்தையும் உன் தலைக்குள்ள ஏத்திக்கிற?  நடக்கனும்னு இருக்கிறது நடக்கும்னு ஈஸியா விடு”, என்று இலகுவாகக் கூறினான்.

“வாழ்க்கை எப்பவுமே ஈஸி கிடையாது வாத்தி சார்… வாழத் தெரிஞ்சவனுக்குதான் அது ஈஸி, தெரியாதவனுக்கு அது பாசி”, என நிறுத்தியவள் “அது வெறும் பாசியில்ல… பயங்கரமான பாசி… அதைப் பாத்தாலே பரலோகந்தான்”, என்றவளை புரியாமல் பார்த்தான் யுகேந்திரன்.

“வழுக்கிவிட்டுரும்னு சொன்னேன்”, எனச் சொல்லி தன்னை சிந்தனைக்குள் சிக்க வைத்தவளை, தன் கைவளைவில் சிக்க வைத்திருந்தான் யுகேந்திரன்.

“ஊருல உள்ள பிரச்சனைய தீக்கனு இப்டி ஓடுறியே, என் பிரச்சனைய கண்டுக்கவே மாட்டிங்கறேயே யாயு!”, என்று அணைப்பிற்குள் இருந்தவளை நோக்கிக் கேட்டவனை

“பிளாக்ல இருக்கிற பிரச்சனை தீக்கற அளவுக்கு இன்னும் நான் வளரல வாத்தி சார்!  நாளாகட்டும்…!”, என்று மிகவும் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு, துடுக்குத் தனமாக கூறினாள்.

“இது உனக்கே, ரொம்ப ஓவராத் தெரியலை!”, என வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டவனை, ஒரு பக்கமாக யுகியின் அணைப்பிற்குள் நின்றிருந்தபடியே மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தபடியே

“ஓவரா… எனக்கு ஓபராவைத் (பிரௌசர்) தவிர வேற ஒன்னுமே தெரியாது.  நீங்க வேற கிண்டல் பேசாதிங்க வாத்தி சார்”, என குறையாத தீவிரத்துடன் கூறினாள்.

“ரொம்பப் பண்ணாதடீ”, என்ற வார்த்தையோடு, அணைப்பிலிருந்தவளை தனது நெடுநாளைய ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் முற்றுகையிட்டவனைக் கண்டவள், “காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி ஏனிப்படி…”, என்று பேசத் துவங்கிய பெண்ணின் இதழை தன் இதழ் கொண்டு சிறை செய்திருந்தான் யுகேந்திரன்.

சிறைப் பணியில் சிறகடித்திருந்த மனதோடு தன்னை மீட்டுக் கொண்டிருந்தவன், மனைவியின் இறுதி வார்த்தையில் வந்து நின்றான்.

“இதுதான் சாக்குன்னு ஆடு மாடு இன்னும் என்னவெல்லாம் புருசன சொல்லுவ! ம்… புருசனுக்கு மரியாதையெல்லாம் ரொம்ப பலமா தர யாயு!”, என்று மனைவியை மீண்டும் வம்புக்கு இழுத்தவனை

“என்ன மாதிரி மரியாதைய எங்கிட்ட எதிர்பாக்கறீங்கனு, தெளிவா மட்டும் சொல்லுங்க…! மைண்ட்லயே நோட் பண்ணிக்கறேன்.

அப்புறம் பாருங்க…!

நாங்குடுக்கிற மரியாதைய!”, என்று சிரித்தபடியே கூறினாள் பெண்.

“இதுவரை நீ குடுக்கறதே போதுண்டீ…!

நா ஒன்னு கேக்க, நீ வில்லங்கமா எதாவது செய்வ!”, என்று மனைவியை இதுவரைப் படித்திருந்தவன் பாங்காகக் கூறினான்.

“சரி சரி…! நம்மப் பத்தி நைட் டிஸ்கஸ் பண்ணுவோம்! இப்ப விசயத்துக்கு வாங்க…! அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்போம்!”, என தேவா, சம்யுக்தா பற்றிய விடயத்தில் மீண்டும் வந்து நின்றிருந்தாள் யாழினி.

“ரிலாக்ஸ் பண்ணிட்டு அப்புறம் பாக்க வேண்டியதுதான யாயு”, என யுகேந்திரன் ஈடுபாடில்லாமல் கேட்க

“ரிலாக்ஸூனு உக்காந்தா ரோலக்ஸ் கம்பெனி மாதிரி எப்டி முன்னுக்கு வரது”, என்று எதிர்கேள்வி கேட்டாள்.

“அதுக்கும், இதுக்கும் என்னடீ சம்பந்தம்?”, உண்மையிலேயே புரியாமல்தான் கேட்டான்.

“நேரம் மட்டுந்தான்!”, என்று கூலாக கூறிவிட்டு, கணவனிடமிருந்து அகன்றவளை,

’எல்லாம் என் நேரம்’, என தலையில் அடித்துக் கொண்டு பாவமாகப் பார்த்திருந்தான் யுகேந்திரன்.

//////////////

அம்பிகாவும், தேவாவிடம் தனது எண்ணமான சம்முவை தேவாவிற்கு பேச இருப்பதைக் கூறிவிட எண்ணியிருந்தார். 

திருமணப் பேச்சு என ஆரம்பித்தவுடன் பிள்ளையார்பட்டி ஹீரோ போல மரத்தடிக்கு போக முடியாமல், வீட்டு சோபாவிலேயே போய் அமர்ந்திருந்தான் தேவா.

என்ன பேச எனப் புரியாமல் இருந்த அம்பிகாவிடம், அமைதியாக இருக்கும்படி செய்கை காட்டிய முருகானந்தம், தொண்டையைச் செறுமிக் கொண்டு மகனிடம் பேசத் துவங்கினார்.

“என்னப்பா…! இப்டியே காலத்தை தள்ளிரலாம்னு நினைக்கிறியா?”

“ஏன்! இப்டியே இருக்கிறதுக்கு என்ன?”, தற்போதைய வாழ்வே சிறப்பாகப் போகிறதே என்றிருந்தான் தேவா.

“இல்லை…! எங்க காலத்துக்குப் பின்ன யாரை அண்டி இருப்ப?”, துருவினார்.

“நான் என்ன சின்னப் புள்ளையாப்பா?”

“நல்லா யோசனை பண்ணு, எங்க காலம் முடியும் முன்னே எதாவது செய்துட்டா நல்லது.  இல்லைனா நீயா தனியா என்ன செய்வ?”

ஆனாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என நின்றிருந்தான் தேவா.

“வேண்டாம்பா!  இப்டியே எங்காலத்தை கழிச்சிருவேன்!”, என்றவனை என்ன சொல்லி வழிக்குக் கொண்டு வருவது எனப் புரியாமல் விழித்த அம்பிகா, இப்டியே பேசிக் கொண்டிருந்தால் எதுவும் கதைக்கு ஆகாது என்ற முடிவோடு, தெளிவாகவே பேசினார்.

தங்களது காலம்வரை தேவாவோடு இருந்து பார்த்துக் கொள்ளுவோம்.  அதன்பிறகு தனியாளாக என்ன செய்ய முடியும்?  எதற்கெடுத்தாலும் யுகேந்திரனை எதிர்பார்த்திருப்பது அத்தனை நல்ல விடமாகப் படவில்லை என்று பட்டென விடயத்தைக் கூறியிருந்தார் அம்பிகா.

தாயின் வார்த்தையில் நிதானித்தவன், தனக்கான நேரத்தை ஒதுக்கி, யோசித்தான்.

தனது உடல் குறைபாட்டிற்கு தனது கவனமின்மையும், பொறுப்பில்லாத தன்மையும் காரணம் என்பது மனதில் வந்து போனது.

இதுவே தனக்கு என குடும்பம் இருந்தால் அத்தகைய மனப்பான்மை வருவது குறைவு என்பதை உணர்ந்தான்.

இறுதியில், தனது தாயிடம் வந்து ‘உங்கள் விருப்பம்போலச் செய்யுங்க’, என்றிருந்தான்.

“பொண்ணு யாருன்னு கேக்கலையே தம்பி”, அம்பிகா

“வேற யாரு க்யூல நிக்கிறா! எனக்குப் பொண்ணு தரேன்னு..!. எல்லாம் சம்முவத்தான கேப்பீங்க?”, என்று தாயைத் திணறச் செய்தவன், இடத்தைவிட்டு அகன்றிருந்தான்.

யுகேந்திரன் வீட்டு பிறந்தநாள் விழாவிலேயே ஓரளவு கணித்துவிட்டான் தேவா.  எல்லாம் ‘இந்த வாலு யாழு பண்ற வேலை!’ என்று.

தேவாவிற்குமே, யாழினி சில நேரங்களில் மிகுந்த மரியாதை தரக்கூடிய வகையில் முதிர்ச்சியாகவும், சில நேரங்களில் பிடிவாதக் குழந்தையாகவும் நடந்து கொள்வதாக எண்ணினான்.

தேவாவின் பேச்சைக் கேட்டவருக்கோ, தனது நிலையை நன்கு அலசி ஆராய்ந்து நிதானமாக மகன் இருப்பதாகவே அம்பிகாவிற்குத் தோன்றியது.

அதன்பிறகு ஒரு வார இறுதி நாளில் சம்யுக்தாவிற்கு அழைத்து, அவளின் வீட்டிற்கு வருவதாகக் கூறிவிட்டு யாழினி மற்றும் அம்பிகா இருவரும் கிளம்பியிருந்தனர்.

சம்யுக்தாவிடம் எப்படி ஆரம்பிப்பது என்று முதலில் தயங்கியபடி இருந்தார் அம்பிகா.  ஆனால் யாழினி தயங்காது துவங்கியிருந்தாள்.

தங்களுக்கு சம்யுக்தா, தேவாவின் காதல் விடயம் தெரியும் என்பதில் துவங்கி தற்போது, சம்முவிற்கு தேவாவைத் திருமணம் செய்யச் சம்மதமா எனக் கேட்டிருந்தாள் பெண்.

பிள்ளையோடு இருப்பதால் திருமணம் வரை வருவார்கள் என நினைத்திராத சம்யுக்தா சற்றே தடுமாறினாள்.

இதை எதிர்பார்த்திராத சம்மு, தனக்கு யுஹ்தேவ் எனும் பிடிமானத்தோடு வாழப் பழகிவிட்டதால், திருமணம் அவசியமில்லை என்ற முடிவோடு வாழ்வதாகவும், தன்னால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாமைக்கு வருந்துவதாகவும் கூறியிருந்தாள் பெண்.

‘கல்லைக் கண்டா, நாயைக் காணோம்.  நாயைக் கண்டா கல்லைக் காணோம்’, என்பதுபோல தேவாவின் வாழ்வில் நடப்பதை எண்ணி, தனக்குள் வருந்திக் கொண்டார் அம்பிகா.

‘அந்தப் பையலை சம்மதிக்க வச்சா, இந்தப் புள்ளை ஒத்து வரமாட்டுதே’, என நினைத்தவர், இறுதியாக வழக்கமான முயற்சியை மேற்கொண்டார்.

பெரியவராக, நிதர்சனங்களை எடுத்துப் பேசிய அம்பிகா, ‘ஒரு காலம் வரைதான் பிள்ளைங்க பாப்பாங்கம்மா.  அதுக்குப்பின்ன அவங்க குடும்பம்னு வாழ ஆரம்பிச்சுருவாங்க.

அப்போ தனிமை ரொம்பக் கொடுமையா இருக்கும்.  இதுவே ஒரு குடும்பமா இருந்தா ஆதரவா உணருவோம்.

உனக்கு இன்னும் சின்ன வயசுதான்.  அதனால இதைப் பத்தி நல்லா யோசிச்சு சொல்லு’ என்று கூறிவிட்டு கிளம்பியிருந்தார்.

இரண்டு வாரங்கள் கழித்து, அவளாகவே வந்து கோவிலில் சந்தித்துப் பேசிய சம்மு, “அப்டி உங்க மகனைக் கல்யாணம் பண்ணிட்டாலும் பேரன், பேத்தின்னு நீங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இருந்தா, நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்கறேன்மா.  ஆனா அதுக்கு முன்ன உங்க பையனுக்கு, யுஹ்தேவ்வையும் என்னையும் சேத்து ஏத்துக்கச் சம்மதமானு கேட்டுச் சொல்லுங்க!”, என விடைபெற்றிருந்தாள் பெண்.

////////////////

திருமணம் என்பதே இருவரின் எதிர்கால வாழ்விற்கான பிடிமானம் வேண்டி, தங்களது நிறைவான வாழ்க்கையின் பிரதிபலனான குழந்தைகள் தானே.

பேரன் பேத்தின்னு என்னை எதிர்பாக்கக்கூடாதுன்னு அந்தப் புள்ள சொல்லுதேன்னு யாழினியிடம் புலம்பியிருந்தார் அம்பிகா.

யுஹ்தேவ்வை அதன்பிறகு நன்றாக கவனிக்க இயலாமல் போகலாம் என்பது காரணமாக இருக்கும் என எண்ணி, காரணத்தை துணிந்தே நேரில் சென்று சம்முவிடம் கேட்டிருந்தாள் யாழினி.

////////////

நீண்ட நேரம் அமைதியாக இருந்தவளோ, பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டபடி

“ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பம் யாழினி”

“எனக்கு சில நியாயமான எதிர்பார்ப்புகள் இருந்தது.

அதுல முதலாவது, என்னோட திருமணம் மற்றும் அடுத்தடுத்து இரண்டு வருட இடைவெளியில இரண்டு குழந்தைகள் அப்டிங்கறதை என்னோட முப்பது வயதிற்குள்ள நிறைவேற்றிக்கனும்னு ஆசை.

இரண்டாவது, என் பேரண்ட் ரொம்ப இளவயதிலேயே இறந்துட்டதால, அவங்க எதிர்பார்த்த வாழ்க்கைய, என் வாழ்நாள்ல நான் வாழணும்னு ஆசை

மூன்றாவதா, தனியாவே பெரும்பாலும் இருந்த நான் நல்ல கூட்டுக் குடும்பமா இருக்கிற வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு போகணும்னு ஆசை”, பெருமூச்சை வெளியிட்டவள் மீண்டும் கூறத் துவங்கினாள்.

“ஆனா, நான் நினைச்சது எதுவுமே நடக்கல.  தேவாவைத் தவிர வேற யாரையும் மனசு ஏத்துக்கலை.  அதனால தனியாவே இருக்கலாம்னு டிசைட் பண்ணி வாழ ஆரம்பிச்சேன்”, எனத் துவங்கியவள்

ஒனிடா தனது வாழ்வில் வந்தது, ஒனிடா குழந்தைப் பேறுக்கு பிறகு மீளா இடத்திற்குச் சென்றது, குழந்தையை வெளியில் விட விரும்பாது தானே வளர்க்கத் துவங்கியது என எதையும் மறைக்காமல் கூறினாள் பெண்.

“… இப்ப எனக்கு தர்ட்டி ஃபைவ் பிளஸ்”, சம்மு

“இப்பல்லாம் எழுபது வயசில கூட குழந்தை பெத்துக்கறாங்களே!”, யாழினி

“அது பெருமைக்கு செய்யலாம்.  தனிநபரோட ஆசைக்கு செய்யலாம்.  நிறைய பிராபர்ட்டி வச்சிட்டு என்ன செய்யறதுனு தெரியாதவங்க செய்யலாம். 

ஆனா அது அந்தக் குழந்தையோட எதிர்காலத்துக்கு சரி வருமா?  அதனோட நலன் எப்டி இருக்குங்கறது ரொம்ப முக்கியமில்லையா?

சரியா அப்டினு எங்கிட்ட கேட்டா… அது தப்புன்னுதான் சொல்லுவேன்”, சம்மு

“அது எப்டி தப்புனு சொல்ல முடியும்?”

“அது அவங்களோட தனிப்பட்ட விருப்பந்தான் யாழினி.  அதப்பத்தி நான் ஒப்பினியன் சொல்லக் கூடாதுதான்.  பட், என்னைப் பத்தின சுயஅலசல்ல ஒரு முடிவுக்கு வந்து வரையறைக்குட்பட்டு வாழ நான் நினைக்கலாம் இல்லையா?”

“ம்…”, என ஆமோதித்து தலையசைத்தாள் யாழினி. 

“பருவத்தே பயிர் செய்யுனு ஒரு பழமொழி நம்ம பக்கம் உண்டில்லையா?  காலத்துல சரியா செய்தா அறுவடையில நல்ல பலன் எப்படியோ அப்டித்தான் குழந்தை விசயத்துலயும்…

நம்ம ஆசைக்காக காலங்கடந்து பிள்ளைய பெத்துக்கலாம்.  ஆனா அந்தக் குழந்தை நல்ல ஆரோக்யமா, நல்ல புரிதலோட, நல்ல ஞானத்தோட, எல்லா நிலையிலயும் பெஸ்ட்டா இல்லைனாலும், சமுதாயத்தில் ஒரு நல்ல மனுசனா நடக்கிற பக்குவம் கொண்ட குழந்தையா இருக்கனுமில்லையா?

பத்து வருசத்துக்க முன்ன இருந்த ஆரோக்யம் இப்ப நிச்சயமா எனக்கு இல்லை.

என்னால இப்ப ஒரு ஆரோக்யமான குழந்தைக்கு தாயாக முடியும்னு ஸ்யூரா சொல்ல முடியாதில்லையா.

சமுதாயம் நமக்கு என்ன செய்ததுனு கேக்கற நாம சமுதாயத்துக்கு  செய்யற மிகப்பெரிய  உதவிதான் இப்ப நான் சொல்றது”, சொல்லி முடித்தவளை வினோதமாக பார்த்தாள் யாழினி.

யாழினியின் பார்வையைக் கண்டவள், “நம்ம குழந்தைக்கும் சமுதாயத்துக்கும் என்ன சம்பந்தம்னு தோணுதா?”, என்று சம்மு கேட்க

ஆம் தலையாட்டினாள் யாழினி.

“குழந்தை வருங்கால சமுதாயத்தோட ஒரு அங்கம்தான.

ரொம்ப லேட்டா பிறக்கிற குழந்தைகளுக்கு நிறைய உளவியல் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் வருதுனு ஒரு ஸ்டாடிஸ்டிக்ஸ் ரிப்போர்ட் சொல்லுது.

அந்தக் குழந்தைனால பெத்தவங்களுக்கு மட்டுமல்லாம இந்த சொசைட்டிக்கும் கஷ்டம்தான.

அறிவில் சிறந்த, ஆற்றல் மிகுந்த ஆரோக்யமான குழந்தையை என்னால இனிக் கொடுக்க இயலாது.  அதனாலதான் இனிக் குழந்தையைப் பற்றி நான் யோசிக்க முடியாதுன்னு தெளிவா சொல்லிட்டேன்.

இது என்னோட விருப்பந்தான்.  இதை மத்தவங்ககிட்ட நான் திணிக்க முடியாது.

அதனால தேவாவுக்கும் இதுல உடன்பாடுன்னா மேற்கொண்டு பாக்கலாம்”, என்றவளை ஆச்சர்யம் ததும்பும் வகையில் பார்த்திருந்தாள் யாழினி.

“எப்டி இப்டியெல்லாம் யோசிக்கறீங்க?”, யாழினி

“தனிமையில இருந்து நிறைய வாசிச்சு இப்டி ஆகிட்டேன்போல”, என சிரித்தாள் சம்மு.

“ம்… அப்புறம் எனக்கு இன்னொரு டவுட்… நீங்க வளந்தது கிறிஸ்டியன் ஆர்பனேஜ்லதான… அப்டியிருக்க எப்டி கோவிலுக்கு ரெகுலரா வரீங்க”, என தனது தயக்கத்தை தள்ளிவைத்து கேள்வியை முன்வைத்திருந்தாள் யாழினி.

“அது… எங்க அம்மா வழிப் பாட்டியோட கொஞ்சநாள் நான் இருந்ததால அப்டியிருக்கேன்.  ரொம்பச் சிறு வயதிலயே மனசுல ஆழப் பதிஞ்ச விசயம்.

வாய்ப்பில்லாதப்போ மனசுக்குள்ளயே வேண்டிப்பேன்.  ரொம்ப ஏக்கமா இருக்கும்.

வேலைக்குனு வெளிய வந்ததுக்குப் பின்ன கோவிலுக்கு போக ஆரம்பச்சது… அப்டியே இதுநாள் வரை தொடருது”, என சிரித்தவாறே சம்மு கூறினாள்.

மேலும் சற்று நேரம் பேசியிருந்துவிட்டு கிளம்பியிருந்தாள் யாழினி.

தனது சந்தேகங்களை யாழினி மூலம் அறிந்தவர், விடயத்தை தேவாவுடன் பகிர்ந்து கொண்டார் அம்பிகா.

///////////////