Magizhampoo-Manam17(B)

மகிழம்பூ மனம்

மனம்-17 B (நிறைவு பதிவு)

 

அலைபேசியில் சம்முவைத் தொடர்பு கொண்டவன், வரக்கூடிய எதாவது நாளில் தனக்கு நேரம் ஒதுக்கித் தருமாறும், பேச வேண்டும் என்று கூறி முன் அனுமதி வாங்கினான்.

பெண்ணும் அதற்குச் சம்மதித்து, இருவரும் தங்களுக்கு ஏதுவான வேளையில் சந்தித்துக் கொண்டனர்.

“அம்மா சொன்னாங்க”, என்று ஆரம்பித்தவனை எதிரில் அமர்ந்து பார்த்திருந்தவள்,

“…”, அமைதியாக அவன் பேசட்டும் எனக் காத்திருந்தாள்.

“எனக்கு கல்யாணம் அப்டிங்கற எண்ணம் வரவே இல்லை.  அம்மா, அப்பாவோட வற்புறுத்தல், வரக்கூடிய வயோதிகம், தனிமை இதை எல்லாம் யோசிச்சுத்தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.

உனக்கு நம்ம கல்யாணம் பத்தி எதாவது எங்கிட்ட பேசணுமா?” என சம்முவைப் பார்த்திருந்தான்.

யாழினியிடம் பகிர்ந்திருந்ததை மீண்டும் தேவாவிடம் பேசியவள்

“என் அபிப்ராயம் இதுதான்.  உங்களுக்கு ஓகேனா எனக்கும் ஓகே”, என சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ட்டீபிக்காக தொடர் சிகிச்சை மேற்கொண்டு தற்போது முழுமையாக குணமாகியிருந்தான் தேவா.

சம்முவின் எண்ணத்தைப் போலவே தேவாவும் எண்ணியிருக்க, இருவருமே மனமொத்து யுஹ்தேவ் எனும் குழந்தையோடு, தங்களது வாழ்வை இனிதே துவங்க முடிவு செய்திருந்தனர்.

ஆனாலும், ஒரு வேண்டுதலை சம்முவிடம் முன்வைத்திருந்தான் தேவா.

பெண்ணும் எந்த எதிர்ப்பும், மறுப்பும் சொல்லாமல் முகம் மாறாமல் மனமாற சரியென்றிருந்தாள்.

///////////////

பெரியவர்களின் வழிகாட்டலோடு, பதிவுத் திருமணம் செய்து கொண்டனர், தேவேந்திரன் மற்றும் சம்யுக்தா இருவரும்.

குழந்தைகள் மூவரும் இனி ஒரு குடும்பமாக வாழப் போவதில் மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்பட்டனர்.

அம்பிகா, முருகானந்தம் இருவருமே தங்களது பொறுப்பு கைகூடியதாக மனம் நிறைந்திருந்தனர்.

தேவேந்திரனது ஃபிளாட்டிற்கே சம்யுக்தா, யுஹ்தேவ் இருவரும் வந்திருக்க, முருகானந்தம், அம்பிகா இருவரும் யுகேந்திரன் வீட்டிற்கு இடம்பெயர்ந்திருந்தனர்.

சம்யுக்தா எவ்வளவோ கூறியும் அம்பிகா அங்கிருக்க மறுத்திருந்தார்.

யுஹ்தேவ்வும் அபி மற்றும் தியாவுடன் இருப்பதாகக் கூறி பெரியவர்களுடன் கிளம்பியிருந்தான்.

சம்மு எவ்வளவோ தடுத்தும் அடம்பிடித்தவனை யாழினியும், “இன்னிக்கு ஒரு நாள் தான, விடுங்கப்பா”, என்று உடன் அழைத்துச் சென்றிருந்தாள்.

“அங்க ரெண்டொரு நாள் இருந்துட்டு, திரும்பவும் இங்க வந்திருவோம்மா!”, என்று மருமகளிடம் சமாளித்திருந்தார் அம்பிகா.

முதலில் மனம் முரண்ட, யுஹ்தேவ்வை ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்த உள்ளம், நாளடைவில் மாறத் துவங்கியிருந்தது அம்பிகாவிற்கு.

ஆனாலும், அபி, தியாவிற்கு தந்த இடத்தை யுஹ்தேவிற்குத் தரமுடியாமல் தவித்தார்.

இதைப் பார்த்திருந்த முருகானந்தம், “எல்லாம் நாளாக ஆக சரியாகிரும்.  இதுக்குப்போயி எதற்கு மனசை வருத்திக்கற!”, என்றிருந்தார்.

முருகானந்தம் மூன்று பிள்ளைகளையும் ஒரே மாதிரியாக நடத்தும் பக்குவம் பெற்றிருந்தார்.

அம்பிகாவிற்கு அந்தப் பக்குவம் சற்றுக் குறைவாக இருந்ததால் முதலில் சற்றுத் திணறினார்.

—-

காதல் இருந்தது, இன்னும் இருக்கிறது, இனிமேலும் இருக்கும்.

காதல் இம்மியளவும் கம்மியாகவில்லை, இருவருக்கும்.

நிதானம், நீல வானமளவிற்கு வந்திருந்தது.

ஆனால் பருவ வயதில் உண்டாகும் உடலின் அவஸ்தை தற்போது இருவருக்குமே சற்று சமன்பட்டிருந்ததால், இலகுவாகவே ஒருவரையொருவர் தனிமையில் எதிர்கொண்டிருந்தனர்.

புரிதல் இருவருக்குள்ளும் இமாலய அளவிற்கு இருக்க, தனிமையோடு வாழ்ந்திருந்தவர்கள், தாம்பத்திய வாழ்க்கையை எதிர்பார்ப்பில்லாமல் எதிர்கொண்டனர்.

இருவரின் அண்மையில் அளவில்லாமல் பழங்கதை பேசினார்கள்.

உறக்கத்தை மறந்து உல்லாசமாகப் பேசினர்.

மனம் நிறைந்திருக்க, மகிழ்ச்சி அங்கு குடிவந்திருந்தது.

மட்டற்ற மாணிக்கமான யாழினியைப் பற்றி இருவருமே ஆச்சர்யப்பட்டனர்.  அதிசயத்தனர்.

தங்களுக்காக யாழினி மேற்கொண்ட ஒவ்வொன்றையும் நினைத்து, யாழினி மீது இருவருக்குமே பிரபஞ்சம் அளவிற்கு மரியாதையும், அன்பும் உண்டாகியிருந்தது.

பதினைந்து ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தவர்களுக்கு உண்டாகும் அன்னியோன்யம், பிரிந்திருந்த இருவருக்கும் இடையே இயல்பாக இருந்தது.

தேவா, சம்மு, இருவரது காதலின் வயது அத்துணை ஆண்டுகளாகியிருந்தது.

உடல்கள் பிரிந்து நெடுந்தூரத்தில் வாழ்ந்திருந்தாலும், இனிமையும், புரிதலும், உணர்தலும் இருவருக்கிடையே இருந்ததால் சஞ்சலம் ஏதுமின்றி வாழ்வைத் துவங்கியிருந்தனர்.

///////////////

யாழினியும் மகிழ்ச்சியோடு மனம் நிறைந்த குதூகலத்தோடும் நிறைவாகக் காணப்பட்டாள்.

மனைவியின் மகிழ்ச்சியில் யுகேந்திரனும் நிம்மதியாக உணர்ந்தான்.

பெரும்பாலும், யுகேந்திரன் வீட்டில் அபி, தியாவுடன் இருப்பதையே யுஹ்தேவ் விரும்பினான்.

அபி, தியாவுடன் இருப்பதற்காகவே வளர்த்த தாயை விட்டு, யாழினியிடம் நன்கு ஒட்டிக் கொண்டான்.

யாழினி, யுகேந்திரன் இருவருமே தனது பிள்ளைகளைப் போலவே யுஹ்தேவையும் கவனித்துக் கொண்டனர்.

அனைத்து பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வந்ததை எண்ணி, சரிதா, ராஜேஷ் தம்பதியினரும் மகிழ்ந்திருந்தனர்.

//////////////

கல்வியியல் கல்லூரி முடிவுகள் வந்தது.  நல்ல மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவள் முகத்தில் சந்தோசம் இல்லாமல் வாடித் தெரிந்ததை கண்டு யுகேந்திரன் என்னவென பதறிக் கேட்டான்.

“எனக்கு திரும்பவும் போரடிக்குது”, எனத் துவங்கிய மனைவியை

“இனியும் நான் தாங்க மாட்டேன்டீ யாயு! 

இதுக்குமேல உம்பின்னாடியே உன்னை காலேஜ்கு அனுப்பிட்டு, நீ எப்ப வருவ? உனக்கு இன்னிக்கு என்ன புராஜெக்ட், என்ன நோட்டு வாங்க, புக்கு வாங்கனு நான் திரிய முடியாது. 

புள்ளைகளும் பெரிசாகிட்டாங்க.  நீ வேலைக்குப் போனாலும், படிச்சாலும், நாங்க மூனு பேருந்தான் ரொம்பக் கஷ்டப்படுவோம்!

இப்ப இன்னும் கூடுதலா உம்மகன் யுஹ்தேவும் கஷ்டப்படுவான்!

அதனால இனி எங்களையும், வீட்டையும் மட்டுமே பாத்துக்க கூடாதா?”, என அழுகாத குறையாக பேசிய கணவனைக் கண்டவள்.

“அப்போ எனக்கு பொழுதுபோக ஒரு வழி சொல்லுங்க!”, என்று கேட்டாள்.

“ஒரே வழி… ஸ்போக்கன் கிளாஸ், இல்லைனா, டுடோரியல் கிளாஸ் மாதிரி எதாவது எடுக்க ஏற்பாடு பண்றேன்”, என்று மனைவியை மடைமாற்றியிருந்தான்.

யாழினியிடம் கூறியதுபோலவே, சில மாத இடைவெளியில் வீட்டின் அருகிலேயே வகுப்புகள் எடுக்க ஏதுவான இடம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான் யுகேந்திரன்.

மூவரையும் அனுப்பிவிட்டு, அவர்கள் சென்ற பிறகு, தனது பணியைத் தொடங்குவாள் பெண்.

மூவரும் வீடு திரும்புவதற்குள் வீட்டிற்கு வருமாறு பார்த்துக் கொண்டாள்.

நாள் இன்பமாகவே நகர்ந்தது.

விடுமுறை நாட்களில் இரு குடும்பங்களும் இணைந்து கொண்டாடியது.

வீட்டிற்குள் வேண்டியதை குழந்தைகள் மூவரும் யாழினியிடம் கேட்டு, பெற்றுக் கொள்ளப் பழகியிருந்தன. 

வெளியில் எங்காவது செல்ல வேண்டும் என்றால் மூவருமே சம்மு அம்மா என சம்யுக்தாவை நாடினார்கள்.

குழந்தைகள் மூவரும் எந்தப் பாரபட்சமும் இல்லாமல், பாசமான சூழலில் வளரத் துவங்கினர்.

தேவா முன்பை விட இலகுவாக பேசத் துவங்கியிருந்தான்.

பெரியவர்கள் இருவரும், மகன்கள் வீட்டில் மாறி மாறி இருந்து கொண்டார்கள்.

////////////

புத்தாண்டு நாள் அன்று.

“கிளம்பிட்டியா தேவ்”, தேவா

“கிளம்பிக்கிட்டே இருக்கேன் டாட்”, தேவ்

“நான் வண்டிய எடுக்கறதுக்குள்ள இரண்டு பேரும் கீழ வரணும்”, என்றபடி தாய், தந்தை இருவரையும் அழைத்துக் கொண்டு தனது காரை எடுக்க விரைந்தான் தேவா.

சம்முவின் திருமணப் பரிசு அது.  தேவா எவ்வளவோ மறுத்தும் பெண் பிடிவாதமாக வாங்கியிருந்தாள்.

காதலித்தபோது விளையாட்டாக பேசியிருந்ததை, கல்யாணம் முடிந்தபின் பெண் நிறைவேற்றியிருந்தாள்.

குடும்பமாக யுகேந்திரன் வீடு நோக்கிக் கிளம்பியிருந்தனர்.

தேவேந்திரனும், சம்யுக்தாவும் கையில் இரண்டு விசாப்பருடன் யுகேந்திரன் வீட்டிற்குள் வந்தனர்.

இருவரின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து மனம் நிறைந்தாள் யாழினி.  ‘எவ்வளவு சந்தோசமா இருக்காரு இந்த தேவா மாமா.  இவரா இஞ்சித் தின்னக் குரங்காட்டம் நாம பாத்த ஆளு’ என ஒரு கனம் மலைத்திருந்தாள்.

இனிமையும், மகிழ்ச்சியும் மனிதனை மேலும் அழகாக்கி, முகவசியத்தைக் கூட்டுகிறது.

வந்தவர்களை உபசரித்துக் கவனித்தவளை அழைத்து, யுகேந்திரனோடு வரப் பணித்தாள் சம்யுக்தா.

வெள்ளித் தாம்பாலத்தில், பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டுச் சேலை, குழந்தைகளுக்கு ஆடை, அத்தோடு அதன்மேல் உறையிடப்பட்ட கவர் ஒன்று என அனைத்தையும் அதில் வைத்து, யுகேந்திரன் யாழினியை வாங்கிக் கொள்ள அழைத்தனர், தேவாவும், சம்முவும்.

அவர்களின் செயலில் புரியாமல் விழித்தவளை, “வாங்க யாழினி, இதை முதல்ல வந்து வாங்கிக்கங்க!”, என்று சம்மு அழைக்க

கணவனைப் பார்த்தவள், “வாங்க உங்களையுந்தான் கூப்பிடறாங்க!” என்று யாழினி கணவனை அழைத்தாள்

மறுக்கத் துவங்கிய இருவரையும், தேவா முதன் முறையாக, “ரெண்டு பேரும் எங்களுக்காக எவ்வளவோ நல்லது செய்திருக்கீங்க.  அந்த ஒரு மகிழ்ச்சியைப் பகிர்ந்திக்க ஆசைப்பட்டதால எங்களால முடிஞ்சத செய்யறோம்.  மறுக்காம வாங்கிக்கங்க!”, என்று பேசியிருந்தான் தேவா.

“எதையும் எதிர்பார்த்து நாங்க செய்யலை.  எங்க கடமையைத்தான் இதுவரை செஞ்சோம்”, என்ற யாழினியின் பேச்சைக் கேட்டவன்

“அது உன் பெருந்தன்மையக் காட்டுதும்மா.  உன்னிலையில் இருந்த எந்தப்பெண்ணும் இப்டி நடந்துக்க மாட்டா. 

எங்க வீட்டுக்கு வந்த அஷ்டலெக்ஷமியோட அம்சம் நீ. 

இது நாங்க பிரியப்பட்டு குடுக்கிற சின்ன காணிக்கை, இதை நீ வாங்கிக்கிட்டா எங்க ரெண்டுபேரு மனசும் சந்தோசப்படும்”, என்று பெண் மறுக்க இயலாத வகையில் பேசியவனைக் கண்டவள், அதற்குமேல் மறுத்துப் பேசவில்லை.

யுகேந்திரனோ, “எந்தக் குறையுமில்லாமத்தான் இருக்கோம்.  ஒரு வாழ்த்துச் சொன்னா போதாதா தேவா?  அதுக்கு எதுக்கு இவ்வளவு வாங்கியெடுத்திட்டு வந்திருக்கீங்க?”, என்று தன்மனக் குறையை வெளியிட்டான்.

“ஒரு மூத்த மகனா நான் இருந்து செய்ய வேண்டியதை, நீ இன்னிக்கு வர இந்தக் குடும்பத்துக்காக செய்திட்டு வர.  உனக்கு செய்யறதில எனக்கு சந்தோசந்தான் யுகி”, என்று தம்பியை அடக்கினான் தேவா.

சீரின் தன்மை கண்டு, சந்தேகம் கொண்ட யாழினி வெள்ளித் தட்டில் துணிகளின் மீது இருந்த கவரின் மேல் கவனம் செல்லவே, என்ன அதனுள் இருக்கிறது என இருவரின் முன்பே எடுத்துப் பிரித்திருந்தாள்.

அதில் சம்மு வாங்கி, திருமணத்திற்கு முன்புவரைத் தங்கியிருந்த பிளாட்டை யுகேந்திரன் யாழினியின் பேருக்கு மாற்றியிருந்தனர், சம்முவும், தேவேந்திரனும்.

யுகி, யாழினி எவ்வளவோ மறுத்தும் இருவரும் ஒரே பிடியில் இருந்து, தங்களது செயலை செயல்படுத்தியிருந்தனர்.

தேவாவின் விருப்பத்தின் பேரில் சம்மு இதை மனமுவந்து செய்திருக்கிறாள்.

தேவாவின் வேண்டுதலான, புதிய பிளாட் ஒன்றை யுகேந்திரன், யாழினி குடும்பத்திற்கு வாங்கித் தர எண்ணுவதாகவும், அதற்கு மனைவியின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதாக மட்டுமே சம்யுக்தாவிடம் கூறியிருந்தான்.

சம்யுக்தா புதியதாக வாங்குதாகக் கூறியதை மறுத்திருந்தாள்.  தான் வசித்த பிளாட் தற்போது சும்மா பூட்டிக் கிடப்பதால் அதையே அவர்களுக்கு கொடுத்துவிடலாம் என தனது முடிவில் நின்றிருந்தாள்.

தேவாவிற்கும் அது நியாயமாகத் தோன்றியதால் அவ்வாறே செய்திருந்தார்கள்.

பெரியவர்களும், தேவா மற்றும் சம்முவின் செயலைப் பாராட்டினர்.

மறுக்காமல் பிளாட்டில் குடியேறுமாறு பெரியவர்கள் வற்புறுத்த, வேறு வழியில்லாமல் யுகேந்திரன், யாழினியின் குடும்பம் அங்கு குடியேறியது.

பால் காய்ச்சும் விழாவினை சம்முவும், தேவாவும் முன்னின்று செய்தனர்.

திருமணத்திற்கு முன்பு தேவா முன்வைத்த வேண்டுதல் அனைத்தையும், தன் மனமுவந்து செய்திருந்தாள் சம்யுக்தா.

யாழினி எனும் பெண் தங்களது குடும்பத்தில் இல்லாமல் போயிருந்தால், இவை எதுவும் சாத்தியாமாயிருக்காது என்பது சத்தியம் என்பதை உணர்ந்திருந்தார்கள், தேவா மற்றும் சம்மு இருவரும்.

இருவரும் மனதால், உடல், பொருள் அனைத்தாலும் ஒன்றுபட்டு சீரிய சிந்தனையோடு யுஹ்தேவ் எனும் மகனோடு வாழத் துவங்கியிருந்தனர்.

//////////

இரு குடும்பமும் மகிழ்ச்சியான ஈடில்லா வாழ்க்கையை, ஒருவருக்கொருவர் ஒத்து, உதவி வாழ்ந்தனர்.

யுகேந்திரன், யாழினியின் வாழ்க்கை… பெண்ணவளின் மகிழம்பூ போன்ற மனதால், இனிமையும், மகிழ்ச்சியும் நிரம்பியதாகவே இருந்தது.

மகிழம்பூவின் நறுமணம் தரும் இதத்தை, யாழினி தனது நற்பண்புகளால் குடும்பத்தினர் அனைவருக்கும் வஞ்சகம் இன்றி வாரிவாரிக் கொடுத்திருந்தாள்.

புதிய இடத்திற்கு வந்த ஒரு மாதத்திற்குள், மஞ்சள் சரட்டில் தாலி அணிந்திருந்தவளுக்கு தாலிச்செயினை வாங்கி வந்திருந்தான் யுகேந்திரன்.

தனது நிறைவான வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் யாழினிக்கு எதாவது நிறைவாகச் செய்ய எண்ணி, முடிவாக செயினோடு வந்திருந்தான்.

கணவனின் செயலைப் பார்த்தவள், “ஆளாளுக்கு என்னை தனியா பிரிச்சு பாக்கறாங்கன்னா, நீங்களும் என்னை அப்டித்தான் நினைக்கிறீங்களா?”, என கண்ணில் நீருடன் கேட்டவளைக் கண்டு பதறியிருந்தான்.

தன்னவளைத் தேற்றி, ஏன் இப்படி ஒரு எண்ணம் உனக்கு வந்தது எனக் கேட்டவனிடம், “வேற என்ன? உங்க அண்ணா செய்தாருன்னா அவங்களை நான் ஒன்னும் சொல்ல முடியாது.  ஆனா நீங்க எப்டி என்னை தனியா பிரிச்சு நினைக்கலாம்”, எனக் அழும் குரலில் கேட்டவளை

தன்னோடு அணைத்துத் தேற்றியவன்,

“பிரிச்சு எங்கடீ நினைச்சேன்.  புடிச்சதால உனக்கு வாங்கிட்டு வந்தேன்”, என்று விளக்கியிருந்தான்.

“ஒரு குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருத்தவங்களும் நல்லா இருந்தாதான நாமளும் நல்லாயிருக்க முடியும்.  அதைத்தான நான் செய்தேன்”, என்றவளிடம்

“என் அன்பைக் காட்ட எனக்கு வழி தெரியல யாயு.  நீயும் இதுவரை எங்கிட்ட இதுவேணும், அது வேணும்னு கேட்டதில்லை. 

யோசிச்சேன்… சரி கையில இருந்த அரியர் பணம் செலவாகிறதுக்கு முன்ன உருப்படியா எதாவது செய்வோம்னு நினைச்சு செயினை செஞ்சு வாங்கிட்டு வந்தா… நிக்க வச்சி கேள்வி கேட்டிருந்தா கூட மனசு ஆறி இருந்திருக்கும்.  பிரிச்சிட்டேன்னுலாம் பெரிய பேச்சு பேசுற போடீ”, என்று மனைவியை அன்பாகவே கடிந்திருந்தான்.

“எல்லாம் செஞ்சேன். செஞ்சேன்னா.  எங்க இருந்து செஞ்சேன்.  எல்லாம் உங்க அன்பாலயும், ஆதரவாலயும் செய்ய முடிஞ்சது.

உங்க ஒத்துழைப்பு இல்லாம என்னால குண்டூசியக் கூட நகத்த முடியாது. 

இந்த அழகுல தனியாளா நான் இதை எதையும் நினைச்சுக்கூட பாத்திருக்க முடியாது. 

நீங்க இதைச் செய்யக் கூடாதுன்னா எப்டி என்னால எதையும் செய்திருக்க முடியும்.  அதனால எல்லாமே உங்களை வச்சுத்தான் செய்தேன்.

என்னோட தைரியம், துணிச்சல், பிடிவாதம், பற்றுதல் எல்லாமே நீங்க மட்டுந்தான்.

எனக்கு அது நல்லாவே புரியுது.  உங்களுக்கும் அது புரியலையான்னு ஒரு வேதனைல அப்டி கேட்டுட்டேன் அபிப்பா”, என்று தன்விளக்கம் கொடுத்திருந்தாள் யாழினி.

கோபமாக நின்றிருந்தவனின் கைவளைவில் தானாகவே முன்வந்து கைதியாகியிருந்தாள் பெண்.

எதிர்பார்த்திராத வேளையில் தான் மார்போடு முகம் புதைத்தவளைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றான் யுகேந்திரன்.

யாழினி எனும் கைதியின் முற்றுகையால் யுகியின் கதி என்ன? என்பதை உங்களின் யூகங்களுக்கு விட்டு விட்டேன்.

தான், தனது என்கிற பற்று இல்லாதவர்கள் உயர்வான சிந்தனையோடே இருப்பார்கள் என்பதுபோல, இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, தங்களால் இயன்ற உதவியை முடிந்தவரை பிறருக்குச் செய்து மகிழ்வாக வாழ்ந்திருந்தனர்.

யாழினி…! தன் மகிழம்பூ மனதால்…! மட்டற்றவளாக தனது பண்பால் உயர்ந்திருந்தாள்!!!  மகிழம்பூ மரத்தின் வேராக யுகேந்திரன் திகழ்ந்தான்.

 

மகிழம்பூ மனத்தவர்களை நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்!!!

————–