MagizhampooManam-15

மகிழம்பூ மனம்

மனம்-15

யுகேந்திரனின் சீரிய முயற்சியால், யாழினி தற்போது கல்வியியல் கல்லூரிக்குச் செல்லத் துவங்கியிருந்தாள்.

யுகேந்திரனுக்கு சற்று வீட்டுப் பொறுப்புகள் கூடியிருந்தது.  ஆனாலும் நிம்மதியான சூழலை வசப்படுத்திக் கொண்டதாக ஆசுவாசம் அடைந்திருந்தான்.

தேவாவின் ஃபிளாட்டிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல நேரம் கிட்டாததால், வாரமொருமுறை அம்பிகா மற்றும் முருகானந்தம் இருவரும், இங்கு வந்து குழந்தைகளைப் பார்த்துச் செல்கின்றனர்.

தேவா இங்கு வர யோசிப்பதால், அவர்களால் யுகேந்திரன் வீட்டில் வந்து தங்க முடியாத சூழல்!  யுகேந்திரனும், ஒரு பேச்சுக்காகக்கூட, தமையனை இதுவரை வீட்டிற்கு அழைக்கவில்லை.

வீட்டு வேலைகள், கல்வி இரண்டும் யாழினியை இன்னும் இழுத்துக் கொண்டிருந்தது.  எதையும் யோசிக்க நேரமில்லாமல் ஓடினாள்.

மாலை சற்று தாமதமாக வீடு திரும்பும் யாழினிக்கு, அவளது கல்வி சார்ந்த பணிகள் இருப்பதை உணர்ந்திருந்த யுகேந்திரன், இயன்றவரை வீட்டு வேலைகளில் கைகொடுத்தான்.

இரவு உணவுக்கான பணிகளை முடித்து, பதினோரு மணி வரை கல்வி சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துபவளை, எந்தவிதத்திலும் குழந்தைகள் தொந்திரவு செய்யாமல் அவனே பார்த்துக் கொண்டான். 

“ம்மா… என்னோட புக்கை காணோம்”, என வரும் மகளை, தானே எதிர்கொண்டு உதவினான்.

அத்தோடு நின்றுவிடக்கூடியவள் அல்லவே தியா.  தியாவின் அனைத்து அடங்களையும் தான் ஒருவனாகவே நின்று சமாளித்தான்.

அபியைப் பொறுத்தவரை மிகவும் பொறுப்பான பிள்ளையாக இருந்ததால், இருவருக்குமே அவனை இட்டு எந்த தொந்திரவும் இருப்பதில்லை.

பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், “அப்பா, இதை எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க!”, என்றோ, “ப்பா… இந்த சம்மை சொல்லிக் கொடுங்க!”, என்றோ தந்தையையே அணுகினான் மகன்.

மனம் மனைவியோடுடனான தனிமையை விரும்பினாலும், ஓய்வில்லாமல் ஓடுபவளை தொந்திரவு செய்தால், அன்பும் கருணையும் கிட்டாது என்பதை அறிந்திருந்தான். 

சுடுசொல்லும், பாராமுகமும் மட்டுமே மிஞ்சும் என கடந்துபோன தினங்களைக் கொண்டு புரிந்துகொண்டவன், சமத்தான புத்திசாலியாக இருக்கப் பழகிக் கொண்டான்.

முதலில் சற்று சினந்து கொண்டவனை, அழைத்து அமைதியாக எடுத்துச் சொல்லியிருந்தாள் பெண்.

———————–

நான்கு மாதங்களுக்கு முன்பொருநாள் காலையில், ‘யாயு!’ என கோபமாக அழைத்தவனின் குரல்கேட்டு, வேகமாக வந்து கணவனை எதிர்கொண்டிருந்தாள் பெண்.

ஓடிவந்ததில் பெண்ணுக்கு இளைத்தது.

கையில் ஒரு ஏஃபோர் கவரை வைத்துக் கொண்டு, கத்தியவனை என்னவோ ஏதோவென்று ஓடி வந்து பார்த்தவளுக்கு, ‘ச்சேய்…! இதுக்குத்தான் கோவணத்துல இடி விழுந்த மாதிரி கத்துனாரா இந்த வாத்தி!  நானும் என்னவோ, ஏதோனு பதறிட்டேன்!” என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு

“எதுக்குங்க இப்டி கத்துனீங்க?”, என்று ஒன்னும் புரியாதவளைப் போன்று கேட்டவளை

“தெரியாத மாதிரி நடிக்காதடீ, இதெல்லாம் உனக்குத் தேவையா?”, என கையில் இருந்த கவரைத் தூக்கிக் கேட்டான்.

கவரில் இருந்த பெயரைப் பார்த்தவளுக்கு சந்தோசம் வந்திருந்தது,  ‘இவ்வளவு விரைவிலா? நல்ல வேளை சீக்கிரமா அனுப்பிட்டாங்க’ என யோசித்தாலும் அதைப் புறம்தள்ளியவள்,

கணவனை எதிர்கொண்டு, “ஏன் தேவையில்லாததுன்னு சாயந்திரம் வந்து பேசித் தீக்கலாம்.  இப்போ கோவிலுக்கு நேரமாச்சு! கோவில்ல நடைசாத்திட்டா அப்புறம் நான் மெனக்கெட்டு கிளம்பினதே வேஸ்டா போயிரும்! வாங்க…!”, என கணவனை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள் பெண்.

முந்தைய நாளின் சமரசத்திற்குப்பின், தான் பணிக்குச் செல்லும் வழியில் மனைவியை கோவிலில் விட்டுச் செல்லக் காத்திருந்தவனுடன் கிளம்பிச் சென்றாள்.

கோவிலில் இறங்கிக் கொண்டு, “எதையும் போட்டு ரொம்பக் குழப்பாம போயிட்டு வாங்க!”, என்று நிதானமாகக் கணவனிடம் கூறியவள், தான்வந்த வேலையை முடித்துக் கொண்டு நடந்தே வீட்டிற்குச் சென்றுவிடுவதாக கணவனை அனுப்பியிருந்தாள்.

பிளாக்கிற்கு சென்றவனுக்கு மனம் ஆறவில்லை. ஆனாலும் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி, ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

மாலை வீடு திரும்பியவுடனே மனைவியிடம், “இப்பவாவது  சொல்லு!”, என்று சிறுபிள்ளைபோல பணி முடிந்ததும் வந்து அடமாக தன்முன் நின்றிருந்தவனைப் பார்த்தவளுக்கு சிரிப்பு மட்டுமே வந்தது.

“என்ன சொல்ல?”, புன்னகையோடு கேட்டவளைப் புரியாமல் பார்த்தான்.

“இது உனக்குத் தேவையா?”, காலையில் வந்திருந்த பல்கலைக்கழக முத்திரை பதித்த கவரின் முகவரியில் இருந்த தேவேந்திரன் என்கிற பெயரைப் பார்த்தவனுக்கு, இன்னும் கோபம் மிச்சமிருந்தது.

“ஏன் தேவையில்லைனு சொல்லுங்க!”, கணவனின் கோபத்தை கண்டு கொள்ளாமல் வினவினாள்.

“அவன் என்ன பச்ச பிள்ளையா? அவனுக்கு வேண்டியதை அவம்பாத்துக்க மாட்டானா?”, தேவா தனக்கு மூத்தவன், படித்தவன், ஓரளவிற்கு உலக ஞானம் பெற்றவன் என்கிற எண்ணம் மட்டுமே யுகேந்திரனுக்கு இருந்தது. 

அதற்குமேல், தன்னவள் தனக்காக மட்டுமே எதையும் செய்ய வேண்டும் என்கிற கண்மண் தெரியாத உடைமைப் பற்றும் அவ்வாறு யுகேந்திரனைப் பேசச் செய்திருந்தது.

உண்மையில் தேவேந்திரனின் தற்போதைய நிலையை அவன் அனுமானிக்கவில்லை.  அறிந்துகொள்ளவும்  முயலவில்லை என்பதுதான் உண்மையும்கூட.

யோசித்திருந்தால் புரிந்திருக்கக் கூடியதுதான்.  அத்துணை சுலபமாக அமர்ந்து யோசிக்கும் பொறுமை அவனிடம் இல்லாமல் போயிருந்தது.

குழப்பத்துடன் இருந்ததே அதற்கான முக்கிய காரணம்.

“அவரே அதை ஒழுங்காப் பாத்துட்டிருந்தா, எதுக்கு பரதேசியா பத்து வருசம் திரிஞ்சிருக்கப் போறாரு?”, என்றவளை புரியாமல் “என்ன? பரதேசியா திரிஞ்சானா?, என கேட்டிருந்தான்.

கணவனுக்கு டீயைப் போட்டுக் கையில் கொடுத்தவாறே, தேவா மருத்துவமனையில் இருக்கும்போது, தான் வற்புறுத்திக் கேட்டதால், தேவா கூறியதை யுகியிடம் கூற ஆரம்பித்தாள் யாழினி.

அமைதியாக கேட்டவனுக்கோ சங்கடம் அவன் சங்கை நெறிப்பதுபோல இருந்தது.

‘எதுக்கு இப்டி போயி கஷ்டப்பட்டிருக்கான்.  படிச்சவங் கணக்காவே நடந்துக்கலையே! இவனைப் பத்தி மட்டுமே யோசிச்சு நடுத்தெருவுக்கு வந்திருக்கான்.  பெத்தவங்களை ஒரு நிமிசமாவது யோசிச்சிருந்தா இப்டி நடந்திருக்காது’, என தனக்குள் எண்ணியவாறு, மனைவி கூறுவதை கேட்டிருந்தான்.

ஒருவழியாக அனைத்தையும் கூறி முடித்திருந்தாள்.

“விரக்தியோட தான் இப்பவும் இருக்கிறாரு!  உடம்பில ட்டிபி, லோ பிரஷர்னு அடுத்தடுத்து நோயி என்ட்ரி குடுத்திட்டு இருக்கு!  ஆனா கியூர் ஆகி நாலு மனுசங்க மாதிரி நாமளும் நல்லா வாழனும், அப்டிங்கற எண்ணம் இருக்கிற மாதிரியே தெரியலை! 

ஏனோதானோன்னு ‘யாருக்கு வந்த விதியோ, கோழிக்கு வந்த கொள்ளை(நோய்)க் கேடோனு’ எனக்கென்னனு இருக்கிறாரு!

பிடிப்பில்லாம இருக்கிறவறை இப்டியே விட்டா, எல்லாத்துக்குமேதான் கஷ்டம்.

அத்தை நேரத்துக்கு பாத்து பாத்து எல்லாம் கவனிக்கிறாங்க.  இல்லைனா இன்னும் பழையபடிதான் இருப்பாருபோல. 

பசிங்கற உணர்வையே மறந்த மாதிரி இருக்கிறாரு.  மாத்திரை எடுக்கணும்னு அத்தை வற்புறுத்தித்தான் சாப்பிட வைக்கிறாங்க.

ஆளு இன்னும் இருக்காருங்கறகுக்கான எந்த எவிடென்சும் இப்ப அவர்கைல இல்லை. இந்த தள்ளாத வயசுலயும் மாமாதான் அதையெல்லாம் வாங்க அலையறாங்க.  இவரு எதைப் பத்தியும் கவலைப்பட்டதாவும் தெரியல.  இனியும் கவலைப்படுவாறாங்கிறதும் சந்தேகந்தான்.

விட்டேத்தியா, வீட்டு விட்டத்தைப் பாத்திட்டே இருக்கிறாரு மனுசன்.

அத்தைக்கும் வயசாகறது.  அங்க போயிருக்கும் போது நான் எதாவது போயி கவனிச்சா, “எதுக்கு இங்க வர, கிளம்புன்னு”, ஒரே பிடிவாதமா என்னைத் தள்ளி நிறுத்தறதுலயேதான் குறியா இருக்காரு.

அவரு நம்ம நல்லதுக்கு அப்டி சொல்லுறாருனு புரியுது.  ஆனாலும் கண்ணு முன்ன ஒரு மனுசன், கொஞ்சம் கொஞ்சமா ஒன்னுமில்லாம போறதை பாக்கற கல்லுமனசு எங்கிட்ட இல்லை.

உங்க அம்மா, அப்பா காலம்வரை அவங்க பாப்பாங்க.  அதுக்குபின்ன அவரை யாரு பாத்துப்பா! 

நாம பாப்போமுன்னாலும், எந்தளவுக்கு ரிஸ்க் எடுப்போம்.

இதுவே அவரு வேலைக்குனு போக ஆரம்பிச்சா, இவருக்காக இல்லைனாலும், வேலைக்கு போற இடத்தில வரக்கூடிய பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியாம, ஒரு ஒழுங்குக்கு வந்திருவாரில்ல!

ஆனா அப்டி வேலைக்குப் போறதுலயும் ஒரு சிக்கல்!

சர்ட்டிபிகேட்ஸ் எதுவும் இப்ப அவருகிட்ட இல்லை.  அதான் ஒரே யோசனையா இருந்தது.

அப்பத்தான் அங்க அவரோட பழைய திங்க்ஸ் எல்லாம் எடுத்து அடுக்கும்போது, இரண்டு செட் ஜெராக்ஸ் ரொம்ப ஃபேடான நிலையில பாத்தேன்.  அதை மாமாகிட்ட சொல்லிட்டுதான் எடுத்துட்டு வந்தேன். அதை வச்சு டூப்ளிகேட்கு அப்ளை பண்ணேன்.

எனக்கு தெரிஞ்ச பிரெண்ட் ஒருத்தவங்க, அந்த யுனிவர்சிட்டி ரெஜிஸ்டரர்கு நல்ல க்ளோஸ்.  அவங்கள வச்சு மாமாகிட்ட கொஞ்சம் பணம் வாங்கிக் கொடுத்ததால, சீக்கிரமா அனுப்பிட்டாங்கபோல!

இப்ப சொல்லுங்க.  நான் செய்தது தப்பா?”, கூறிமுடித்தவள், வினாவோடு நிறுத்தி, கணவனை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, பிள்ளைகளோடு சென்று ஐக்கியமாகியிருந்தாள்.

தான் முன்நின்று செய்திருக்க வேண்டியதை, அவளாகவே முன்வந்து செய்திருக்கிறாள்.  யாழினியைக் குறை சொல்ல யுகேந்திரனால் எப்படி இயலும்!

தான், தனது என்றில்லாமல், தனது சுற்றமும் நன்றாக இருக்கவேண்டும் என்கிற நினைப்போடு செய்தவளை, தனது தமையனின் எதிர்கால வாழ்வு வளப்பட வேண்டிச் செய்தவளை, அதற்குமேல் எதுவும் பேச மனம் நினைக்கவில்லை.

மாறாக மனம் குளிர்ந்திருந்தது.  இப்படி ஒரு வாழ்க்கைத் துணையை தனக்கு நல்கிய இறைவனுக்கு முதலில் நன்றி கூறினான்.

உறங்கச் செல்லுமுன் கணவனிடம், “இங்க பாருங்களேன்!”, என்றபடி வந்தவளை,

‘பாத்துட்டே தான் இருக்கேன், சுத்தியிருக்கறவங்களோட தேவை என்னனு தெரிஞ்சிக்கற அளவுக்கு என் தேவைகளை புரிஞ்சிக்க மாட்டீங்கறயே!’

“இதுல இருக்கிற பொண்ணை அன்னிக்கு கோவில்ல வச்சுப் பாத்தேங்க”, என்று குரலில் குதூகலத்தோடு ஒரு நிறமாறத் துவங்கிய புகைப்படத்தைக் கையில் கொடுத்தாள்.

‘அன்னிக்கு கோவில்ல வச்சிப் பாத்தப்ப எனக்கு சட்டுன்னு பிடிபடலை! எங்கோ பாத்தவங்க, தெரிஞ்சவங்கன்னு ரெண்டு நாளா மண்டையக் குடைஞ்சா அப்புறந்தான் தெரிஞ்சது! இந்த போட்டோவுல இருக்கிறதுதான் அவங்கன்னு!’ என்று வளவளத்தபடி நின்றவள் கொடுத்ததை வாங்கியிருந்தான்.

‘பொண்ணா?  யாருக்கு?’, என்ற கேள்வியோடு வாங்கிப் பார்த்தவனுக்கு, பெண்ணோடு நின்றிருந்த தேவாவை மட்டுமே தெரிந்தது.  அருகில் இருந்த பெண், அழகாகவே இருந்தாள்.

“இதை எங்கிருந்து எடுத்த?”, என்ற குரலில் நிச்சயமாக ஆர்வம் இல்லை.

“ஃபிளாட்லதாங்க!”, என்றவள்

இதை எதற்கு தனது கையில் கொண்டுவந்து கொடுத்தாள் மனைவி, என்ற நினைப்போடு கேள்வியாக மனைவியை நோக்கியிருந்தவனிடம், “அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்கச் சொல்லியிருக்கேங்க!”, என்றவளை

‘எப்படி? யாரிடம்?’ என நோக்கினான் யுகேந்திரன்.

“அது என் காலேஜ்மேட்டோட பிரதர்கு தெரிஞ்ச டிடெக்டிவ்ல சொல்லி வச்சிருக்கேங்க”, என்றவளை

‘பாத்திரத்தை விளக்கிட்டு பத்திரமா வீட்டுல இருக்குதுன்னு பாத்தா, துப்பு துலக்கிட்டு தில்லா தெரியுறா! இப்டியே விட்டா லேடி பில்லா ரேஞ்சுக்கு மாறிருவா போலயே!’ என புரியாமலேயே மனைவியைப் பார்த்தான்.

“இன்னும் இரண்டு வாரம் நான் தினசரி அந்தக் கோவிலுக்கு, பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பின கையோட போறதா இருக்கேன்”, முடிவாகச் சொன்னாள்.

“அப்ப கோவிலுக்கு நீ சாமி கும்பிடப் போகலையா?”, என மனதிற்குள் நினைத்தவாறு இருந்தவனின் வாயில் வார்த்தைகள் வெளிவந்திருக்க,

“அதுக்காகவும்தான்!”, என்றாள்.

“லைட்டா பேசி பாக்கலாம்னு ஒரு எண்ணம்.  முதல்ல பேசிப் பழகிட்டு அப்புறம் என்ன செய்யலாம்னு ஒரு முடிவுக்கு வரலாம்னு இருக்கேன். எப்டி என் ஐடியா?” என்றவளை இமைக்க மறந்து பார்த்தான்.

“வேலைக்கு போனா தேவா சரியாகிருவான்னு சொன்ன சரி.  இது எதுக்கு இப்ப? என்று இழுத்தவனை

“அவருக்குன்னு ஒரு மனுஷி வந்திட்டா, இன்னும் மனுசனுக்கு வாழனும்னு ஒரு உந்துதல் வரும்ல!  எதுக்குடா வாழறோம்னு இருக்கிறவரை, வாழணும்கிற மாதிரியான மனநிலைக்கு கொண்டுவர நம்மாலான முயற்சி”, என்று கண்ணைச் சிமிட்டிச் சிரித்தவளை

‘சைலண்டா பாவமா, வீட்டுக்குள்ளயே அடைஞ்சிகிடக்காளேனு நினைச்சிட்டு நான் இருந்தா, பவர்ஃபுல் பிளானோட பயங்கர ஆக்டிவ்வா இருக்காளே!  இம்புட்டுத்தானா?  இல்லை நாம பாக்கவேண்டியது இன்னமும் இருக்கானு தெரியலையே?’, என யோசனையோடு மனைவியை பார்த்தபடியே அமர்ந்திருந்தவனை

“என்னங்க… நான் சொல்றது”, என்று யாழினி கேட்க, மறுத்து எதுவும் பேசத் தோன்றாமல் தலையாட்டினான்.

“மயி.. கட்டி மலையை இழுத்துப் பாப்போம்.  வந்தா மலை.. போனா தலைக்கு மேலே உள்ளதுன்னு, நான் ஒரு முடிவோட இதை ஆரம்பிச்சிருக்கேன்”

‘முடி வளந்திரும்கற தைரியத்தில இன்னும் என்னவெல்லாம் பிளான் போடுவடீ!’ என எண்ணியபடி பேசாமல் இருந்தவன்,

“… இதுல உங்களுக்கும் நிறைய வேலை வச்சிருக்கேன்”, என்றவளை

இறுதியாக சொன்ன மனைவியின் வார்த்தையைக் கேட்டு, ‘அடிப்பாவி எனக்கும் வேலையா?’, என்பது போல அப்பாவியாகப் பாத்திருந்தான்.

‘இவளை இப்டியே வீட்டில விட்டா, பொழுதுபோகலைன்னு வீட்டோட இவ நிப்பாட்டமாட்டா!’ என்ற எண்ணம் யுகிக்குத் தோன்ற, அடுத்த வந்த நாட்களில் அங்கிங்கு அலைந்து திரிந்து, மனைவியை ஒரு வழியாக கல்வியியல் கல்லூரியில் சேர்த்திருந்தான்.

அதற்குள் சம்முவிடம் இலகுவாக பேசி பழகியிருந்தாள், யாழினி.

அதையும் வந்து கணவனிடம் கூறியவளை ஆச்சர்யமாக மட்டுமே பார்க்க முடிந்தது யுகேந்திரனால்.

‘ஜெட் வேகந்தான்!’ என மனைவியைக் கடந்திருந்தான்.

////////////

ஓரிரு வார்த்தைகள் என்றாலும், ஒருவரையொருவர் மற்றவர் வருகையை எதிர்நோக்கும் அளவிற்கு சம்மு, யாழினி இருவரும் பழக்கத்தில் முன்னேறியிருந்தனர்.

குடும்பத்தைப் பற்றி எதுவும் கேட்கவுமில்லை.  தங்களைப் பற்றி பெரிய அளவில் பரிமாறிக் கொள்ளவுமில்லை.  ஆனாலும் ஒரு பிடிப்பு இருவருக்கும் இடையே வந்திருந்தது.

பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் கோவிலுக்கு வரும் வழக்கம், சம்முவிற்கு இருப்பதைத் தெரிந்து கொண்டவள், கணவனிடம் அதற்கும் ஒரு பிளானை கூறியிருந்தாள்.

வெள்ளியன்று தேவாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றுவருமாறு யுகேந்திரனை காலையிலேயே அனுப்பியிருந்தாள்.

முன்புபோல் அல்லாமல், அவ்வப்போது தேவாவுடன் சற்றுநேரம் அமர்ந்து பேசுவதை தற்போது வாடிக்கையாக்கியிருந்தான், யுகேந்திரன்.

முதலில் கூண்டை விட்டு வெளியே வரத் தயங்கியவன், பிறது இலகுவாகியிருந்தான்.

தாயின் கவனிப்பில் சற்று தேறியிருந்தான் தேவா.  பார்த்தவுடன் கண்டுபிடிக்க இயலும் நிலைக்கு இன்னும் வரவில்லை.  அதற்கு இன்னும் நாளாகும்.

எதேச்சையாக சந்திக்கும்படி இருக்குமாறு ஐடியா கூறி அனுப்பிய மனைவியை நொந்தபடியே, தேவாவுடன் கோவிலுக்கு வந்திருந்தான்.

முதல் வாரம் எந்த மாற்றத்தையும் காணாமல், ஏமாற்றமடைந்திருந்தாள் யாழினி.

அடுத்து வந்த வாரத்தில், தரிசனம் முடித்து திரும்பும்போது தேவாவின் முகத்தில் வந்திருந்த மாற்றமே கூறியது. அவன் தன்னவளைப் பார்த்துவிட்டான் என்று.

அடுத்த வாரம் வியாழன்று மாலையில் தேவாவே யுகேந்திரனை அழைத்திருந்தான்.  அடுத்த நாள் காலையில் கோவிலுக்கு போகலாமா எனக்கேட்டு.

விசயத்தை யூகித்தவள், சந்தோசத்தில் கணவனை அணைத்து, உம்மா தந்திருப்பாள்.  பிள்ளைகள் அருகில் இருக்கவே தன்னை நிதானப்படுத்தியிருந்தாள்.

மனைவியில் குதூகலத்தைக் கண்டவனுக்கு, அதே குதூகலம் ஒட்டிக் கொண்டிருந்தது.

“உங்க அண்ணன் அந்தப் பொண்ணைப் பாத்துட்டாரு.  அதுதான் வாண்டடா வந்து வண்டியில ஏறுறாப்புல!”, என்றவளைப் பார்த்து சிரித்தபடியே அகன்றிருந்தான்.

சில நேரங்களில் மூத்தவர்கள்போல முதிர்ச்சியாகவும், சில நேரங்களில் அன்னைபோல அன்பாகவும், சில நேரங்களில் தோள் கொடுக்கும் தோழியாகவும், சில நேரங்களில் கொஞ்சலோடு, சிறுபிள்ளைபோல வம்புக்கு நிற்கும் குழந்தையாகவும், சில நேரங்களில் கோபத்தோடு பத்திரகாளியாகவும், சில நேரங்களில் பணிவிடைகள் செய்யும் தாதியாகவும், அந்தரங்க நேரங்களில் தாசியாகவும், பலமுகம் காட்டும் தன்னவளை நினைத்தவனுக்கு மனம் நிறைந்திருந்தது.

அடுத்தநாளும் தேவாவை கோவிலுக்கு அழைத்துச் சென்றவன்,  அண்ணனுக்கு தனிமை கொடுத்துவிட்டு, வேலையிருப்பதாகவும், சாமி கும்பிட்டுவிட்டு அழைத்தால் வந்து கூட்டிச் செல்வதாகவும் கூறி வாயிலிலேயே இறக்கி விட்டுவிட்டு கிளம்பியிருந்தான்.

அதற்குமேல் தேவாவின் சமத்து என்றுவிட்டாள், யாழினி.

////////////

கல்லூரி செல்லத் துவங்கியவளுக்கு, மாமியாரும், கணவனும் ஒத்தாசையாக இருக்கவே, குடும்பத்தை ஓரளவு கவனித்துக் கொள்ள முடிந்தது.

கணவனிடம் அவ்வப்போது, சிறுபிள்ளைபோல வந்து, “நாளைக்கு கண்டிப்பா காலேஜ் போகணுமா?  ஒரே ஒரு நாள் மட்டும் லீவெடுத்துக்கறேனே?”, என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்பவளைப் பார்ப்பவனுக்குமே வருத்தமாக இருக்கும்.

எதையோ யோசித்து, இவளை துன்புறுத்தி விட்டோமோ என்று தனக்குள் வருந்திக் கொள்வான்.  ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “மட்டம் போடறதுலயே குறியா இருக்கியே, இன்னும் சின்னப்புள்ளையா நீ!”, என்று சீண்டுவான்.

“மட்டம் போட்டேன், பட்டம் விட்டேன்னு எதாவது சொல்லாதீங்க.  வீடு கிடக்கிற கிடையப் பாத்து அப்டிக் கேட்டேன்”, என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கோபமாக அகன்றுவிடுவாள்.

கல்லூரி செல்லத் துவங்குவதற்கு முன்புவரை, நேர்த்தியாக வீட்டை வைத்துக் கொண்டவளால், எவ்வளவு முயன்றும் தற்போது அவ்வளவு நன்றாக பராமரிக்க முடியவில்லை.

“வீட்டைப் பாத்தாலே அசிங்கமா இருக்கு!  துடைச்சி விட்டே வாரமாச்சு!”, என்று புலம்புவளை, அள்ளி அணைத்துத் தேற்றுவான்.  இன்னும் ஒன்றரை வருசம்தான!”, என்று

“அதுக்குள்ள மினி முனிசிபாலிட்டி வேஸ்ட் டிஸ்போசபிள் பிளேசா வீடு மாறப்போகுது! அப்பவும் ஸ்பென்சர் பிளாசால ஷாப்பிங் போறமாதிரியே குப்பைப்குள்ளயே கூலாயிருங்க!”, என்ற தலையில் அடித்தபடியே தன்னவனைவிட்டு கோபமாக விலகினாள்.

“அப்ப வீட்டு வேலைக்கு ஆள் போடு!”, என்று கூறினால்,

‘யாருக்கு வேணும் உங்க இத்துப்போன ஐடியா… எல்லாம் இந்த யாழினியே எல்லாத்தையும் பாத்துப்பா!’, என அடுத்து மிகவும் சின்சியராக அவளது பணிகளில் கவனம் செலுத்தி, தன்னவனைத் தூரமாக தள்ளி நிறுத்துவாள்.

வருடமே கடந்திருந்தது.

தேவாவின் வாழ்க்கையில் தற்போதுதான் முன்னேற்றம் சற்று வந்திருந்தது.

மாதத்திற்கொரு முறை, எதேச்சையாக சந்திப்பதுபோல சம்முவை கோவிலில் சென்று சந்திப்பதை வழக்கமாக்கியிருந்தாள் யாழினி.

எத்துனை பணிகள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட எதிலுருந்தும் பின்வாங்க எண்ணாத குணம் யாழினியிடம் இருந்தது.

“இப்ப இது ரொம்பத் தேவை”, என்று முகத்தைத் திருப்பும் கணவனிடம், “எடுத்த வேலைய கரெக்டா முடிக்கணுங்க.  பாதியில விடறதுக்கா நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்”, என்று கணவனின் வாயை மூடவைப்பாள்.

முதலில் தயங்கிய சம்மு, பிறகு மேலேட்டமாக யாழினியிடம் தன்னைப்பற்றி மட்டும் பகிர்ந்திருந்தாள்.

தேவா கூறியதைத் தவிர, ஒரு வார்த்தைகூட அதிகமாக தன்னைப் பற்றி பகிர்ந்து கொள்ளாதவளை நினைத்து, ‘விவரமான, விழிப்பான புள்ளயதான் இருக்கு’, என அகன்றிருந்தாள் யாழினி.

சம்மு பகிர்ந்து கொண்டதிலிருந்து தான் அறிந்து கொண்டதை யுகேந்திரனிடம் மறக்காமல் பகிர்ந்து கொண்டாள் யாழினி.

“இது ரெண்டும் தேற மாதிரி தெரியல துரை.  பேசாம நாமளே இடையில புகுந்து எதாவது நல்லது செஞ்சாத்தான் நடக்கும்போல.  இல்லைனா இன்னொரு மாமாங்கம் ஆகிரும்”, என்று அலுத்துச் சலித்தவளை

‘என்ன அடுத்துச் செய்யச் சொல்லப் போறாளோ?’ என அவதியாகப் பார்த்திருந்தான் யுகேந்திரன்.

///////////////////

வாரயிறுதி நாளில், அம்பிகா, முருகானந்தத்தைப் பார்த்துப் பேசியவள், விடயத்தைப் பகிர்ந்திருந்தாள்.

தேவா தற்போது அவனது பழைய கம்பெனியில் பணியைத் தொடர்ந்திருந்தான்.

முருகானந்தம் வாயிலாக தான் வாங்கியிருந்த சான்றிதழ்களை தேவாவிடம் கொடுக்குமாறு கணவனைப் பணித்தவள், அடுத்தடுத்து ஒவ்வொரு நிகழ்விலும், தூண்டுகோலாக இருந்தாள்.

தேவா பணிக்குச் செல்லத் துவங்கியபோது, கம்பெனியில் இருந்த பழைய ஊழியர்கள் யாருமே இது தேவா என்று நம்ப மறுத்திருந்தனர்.  அத்தகைய பெரும் மாற்றத்துடன் வந்து நின்றவனை, அதிர்ச்சியாகவும், இவனால் இனி பணி செய்ய முடியுமா? என நம்பிக்கையற்றும் பார்த்திருந்தனர்.

முதல் இரண்டு மாதங்கள் சற்று தொய்வாகத் தொடர்ந்தவன், படிப்படியாக புதிய உத்வேகத்துடன் பணியில் ஈடுபடத் துவங்கியிருந்தான்.

சம்முவைச் சந்தித்து, முதலில் பேச மறுத்தவளை பேசச் செய்வதற்குள், மேலும் இரண்டு வாரங்கள் தேவாவிற்கு கடந்திருந்தது.

ஓரளவிற்கு விடயம் பகிர்ந்தவனைக் கண்டு மனம் உடைந்திருந்தாள் பெண்.

‘இப்படியொரு முடிவை நீங்க எடுப்பீங்கனு நான் நினைக்கலை. நான் மறுத்தா நீங்க உங்க வயிஃப் கூட லைஃப் நல்லா லீட் பண்ணுவிங்கனு நினைச்சேன்’ என்று கூறியவளிடம், தனது தம்பியை மணந்து கொண்ட அப்பெண் தற்போது இரு குழந்தைகளோடு சந்தோசமாக இருப்பதாகக் கூறியபின்புதான், இலகுவாக பேசத் துவங்கி இருந்தாள் சம்மு.

ஒருவழியாக தேவாவிடம் இயல்பாக பேசத் துவங்கியிருந்தவளை, திருமணம் பற்றிப் பேசும் எண்ணமெல்லாம் தேவாவிற்கு ஏனோ தோன்றவில்லை.

வறண்டிருந்த பாலைவனத்தில், வசந்தமாக மீண்டும் தனது வாழ்வில் சந்தித்த சம்முவை வாரமொருமுறை கோவிலில் காண்பதே போதுமென்றிருந்தான் போலும்.

“ஆறு மாசமா ஒரு முன்னேற்றமும் இல்லாம இருக்காங்க”, என யாழினிதான் யுகேந்திரனிடம் புலம்பித் தீர்த்திருந்தாள்.

“உன்னளவுக்கு எல்லாரும் ஃபாஸ்டா இருப்பாங்களா யாயு”, என்று கேட்டுவிட்டு முறைப்பை வாங்கிக் கொண்டான் யுகேந்திரன்.

ஆனாலும் பெண் விடவில்லை.  “அப்டி எதுல நாங்க ஃபாஸ்டா இருந்தோமுனு கொஞ்சம் இப்டிக்கா லிஸ்ட் அனுப்புங்க வாத்தி”, என்று வாயை அடைத்திருந்தாள் பெண்.

/////////////

யாழினி, அம்பிகா இருவரும் இணைந்தே கோவிலுக்கு சென்று சம்முவைப் பார்த்தனர்.  அம்பிகாவிடம் விடயம் பகிர்ந்தவுடன் அவரே முன்வந்து கிளம்பியிருந்தார்.

சம்முவிடம் இது எங்க மாமியார் என்ற அறிமுகம் செய்து வைத்திட, வணக்கம் கூறி மரியாதையாக சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தாள் பெண்.

அதேநேரம் கோவிலுக்கு வந்திருந்த தேவாவுடன் தனித்துப் பேச, கண்களால் ஜாடை பேசியவளைக் கண்டு கொண்ட அம்பிகா, அத்தோடு விடைபெற்றிருந்தார்.

அம்பிகாவுடன், யாழினி, சம்மு மூவரையும் பார்த்த தேவாவோ குழம்பியிருந்தான்.

யாழினிக்கும், அம்மாவிற்கும் சம்முவை ஏற்கனவே எப்படித் தெரியும்? என யோசித்தபடியே அங்கிருந்து அகன்றிருந்தான்.

விடைபெற்று வந்து தேவாவைத் தேடிய சம்முவிற்கோ பெருத்த ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

‘அதுக்குள்ள கிளம்பிட்டாரா?  வேலைக்கு நேரமாச்சுன்னு கிளம்பிட்டாரு போல’ என நினைத்தவள் அவளும் கிளம்பியிருந்தாள்.

தேவாவின் பங்களூர் சந்திப்பிற்குப்பின் இரண்டொரு மாதங்களில், வேறோரு கம்பெனியில் சேர்ந்திருந்தாள் பெண்.

எந்தச் சூழலிலும் மீண்டும் தேவாவை சந்திப்பதைத் தவிர்க்கவே அப்போது அவ்வாறு செய்திருந்தாள் சம்மு.

சம்மு சென்னைக்கு வந்ததை ஆச்சர்யமாகக் கேட்டவனிடம், எதையும் மறைக்கும் எண்ணமின்றி, கடந்த ஆண்டு வரை பங்களூரில் பணிபுரிந்தவள், இதற்குமுன் சென்னைக்கு வந்த இடமாறுதலை இரண்டுமுறை தவிர்த்ததால், மூன்றாவது முறையாக வந்த இடமாறுதலை தவிர்க்க முடியாமல், இந்தமுறை இங்கு வந்துவிட்டதாகக் கூறியிருந்தாள்.

நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கிறது.  பழையவற்றை, தற்போது பேசினாலே இருவருக்கும், வருத்தமோ, துயரமோ இல்லாமல், ஏனோ சிரிப்பு வருகிறது.

ஒருகாலத்தில் வருந்தத்தக்கதாக அமைந்த விடயம், கடந்தபிறகு விகடத்திற்குரியதாக மாறுவது காலத்தின் கோலமோ!

——————

அடுத்த வாரம் சம்முவிடம், வீட்டிற்கு அழைப்போமா எனக் கேட்ட யாழினியின் யோசனைக்கு, அம்பிகா சரியென்றிருந்தார்.

தியாவின் பிறந்த நாள் வருவதால், அதைக் காரணமாக்கி அழைக்கலாம் என முடிவு செய்திருந்தார்கள்.

////////

மகளின் பிறந்தநாள் விழாவில் பங்கு கொள்ள அழைப்பு விடுத்தாள் யாழினி.  மறுக்காமல், வருவதாக உறுதி கூறி, முகவரியையும் அறிந்து கொண்டிருந்தாள் சம்மு.

தியாவின் பிறந்தநாளும் வந்தது.  மாலை வேளையில் சம்முவின் வருகைக்காக எதிர்பார்த்திருந்தனர், யாழினி மற்றும் அம்பிகா இருவரும்.

ஏழு வயது மதிக்கத்தக்க ஆண்குழந்தையுடன் விழாவிற்கு வந்தவளை நிச்சயமாக அந்த நிலையில் பெரியவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

தேவாவும் அண்டமளவிற்கு அதிர்ச்சி வாங்கியிருந்தான்.

சம்யுக்தாவும் அங்கு தேவாவை எதிர்பார்த்திருக்கவில்லை.

விழா முடியும்வரை இயல்பாக இருந்துவிட்டு கிளம்பியவளிடம் எதுவும் பேசாமல், இன்முகத்தோடு உபசரித்து அனுப்பியிருந்தனர்.

ஆனால் அன்றைய மனதின் கேள்விகளுக்கு, யாழினி, அம்பிகா, தேவா மூவரும் உறக்கத்தை தொலைத்திருந்தனர்.

‘யுஹ்தேவ்’ என அழைக்கப்பட்ட சம்முவின் மகனைப் பற்றிய சிந்தனையோடே, தேவா விழித்திருந்தான்.

 

சம்யுக்தாவின் வாழ்வில் நடந்தது என்ன?

சம்யுக்தாவுடனான தேவாவின் எதிர்காலம் தகையுமா?

 

அடுத்த அத்தியாயத்தில்…