Ponnunjal21

Ponnunjal21

ஊஞ்சல் – 21

 

உன்னை பிடிக்கவில்லை

என்பதால் அல்ல…

உன் உண்மை காதலுக்கு

நான் தகுதியானவள் இல்லை

என்பதால் தான்

விலகிச் செல்கிறேன்…

இருந்தும் நீ சிறிது

முகம் திருப்பினாலும்

உயிரில் உடைகிறேன்…

 

பொம்மியிடம் பொய் உரைக்க வேண்டாம் என்று சொன்ன விஸ்வேந்தர், அன்றிலிருந்து அலைபேசியில் அழைக்கவில்லை.

தான்பேசிய பேச்சில் நிஜமாகக் கோபம் கொண்டானோ? என்று மனதோடு தவித்த பொம்மி, அவளாக அழைத்தாலும் இவன் பேசவில்லை.

வார விடுமுறையில் ஊருக்கு வருபவன் வழமையாய் வீட்டிற்கே வந்து, இவளிடம் வம்பு வளர்ப்பான். இந்த முறை அப்படி வந்தும் இவளைக் காண வரவில்லை.

மனம் முழுவதும் விஸ்வாவின் எண்ணக் குவியல்களே அலங்கரிக்க, அசலாட்சியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தங்கையுடன் விஸ்வாவைக் காண அவன் வீட்டிற்கு சென்றாள் பொம்மி.

வந்தவர்களை புருவம் ஏற்றி பார்த்தவன், “வா அஜு…” என்று வரவேற்று விட்டு, “அம்மா… உன் மருமக வந்திருக்கா!” தன்தாய் வாணியிடம் செய்தியை கடத்தினான்.

எப்பொழுதும் பொம்மியை பார்த்தவுடன் மேலிருந்து கீழாக பார்வையால் வலம் வருபவன், இந்த முறை அவளைப் பார்ப்பதை தவிர்க்கவும் பொம்மிக்கு உள்ளுக்குள் சுருக்கென தைத்துக் கொண்டது.

தான் அணிந்து வந்த ஆடைதான் பொருத்தமாக இல்லையோ என்று ஒருமுறை அவளது அனார்கலியை குனிந்து பார்த்துக் கொண்டவள்,

‘அம்மா பேச்சு கேட்டு புடவை கட்டி இருக்கணுமோ?’ மனதோடு புலம்பிக் கொண்டாள். அதை கட்டிக்கொள்ள ஒரு மாமாங்கம் இவள் மெனக்கெட வேண்டுமே? இந்த ரகசியத்தை எங்கே போய் சொல்ல…

மருமகளை வரவேற்ற வாணியும் அவளை நலம் விசாரித்து விட்டு, ஊர் விவகாரங்களை பேச ஆரம்பித்து விட்டார். ஒரே ஊரில் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருவது வழக்கம்.

தன்னை தவிர்த்து மிடுக்காக அஜூவிடம் பேசிக் கொண்டிருந்தவன் வெளியே செல்கிறேன் என்று கிளம்பி வந்திட, அடுத்தவர் முன் ‘உன்னுடன் பேச வந்திருக்கிறேன்’ என்று பொம்மியால் சொல்லவும் முடியவில்லை

“பொம்மிய கூட்டிட்டு போ விச்சுகண்ணா… உன்னை பாக்கதானே வந்திருக்கா?” என வாணி கட்டளையிட, அந்த வார்த்தையில் பொம்மிக்கு அப்படி ஒரு நிம்மதி.

‘உங்க அளவுக்கு, உங்க கண்ணா என்னை எப்ப புரிஞ்சுப்பானோ? தெரியல ஆண்ட்டி!” மனதோடு நினைத்துக் கொண்டு அவன் முகம் பார்க்க,

“டவுன் வரைக்கும் போறேன், வர்றதுக்கு லேட்டாகும்மா” அவளைப் பார்க்காமலேயே விஸ்வா பேசிட,

“அஜுவ கொண்டு போய் விடுறது என் பொறுப்பு… நீங்க போயிட்டு வாங்க!” என்றவர், இவர்களை அனுப்பி வைத்தார்.

டொயோட்டாவில் போகும் வழியெங்கும் பசுமை விரவிக் கிடக்க, “எல்லா வயல்லயும் நீ சொன்ன புராசஸ்லதான் சாகுபடி நடந்துட்டு இருக்கு போல?” தானாக பேச்சை ஆரம்பித்தான் விஸ்வா.

“ஆமா விஸ்வா, மேக்ஸிமம் கவர் பண்ணியாச்சு. இனி விளைச்சல் அதிகமாக்க ஸ்டெப்ஸ் எடுக்கனும்” என்று தன்தொழில் பெருமையை விழி விரித்துக் கூறினாள்.

“என்ன விஷயம் பொம்மி? மகாராணி என்னை பாக்க வந்திருக்கீங்க?” உணர்ச்சி துடைத்த குரலில் விஸ்வா கேட்க,

“அது… சாரி விஸ்வா! அன்னைக்கு ரொம்ப பேசிட்டேன். மைண்ட் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகியிருந்ததா… என்ன பேசினேன்னு நானே கவனிக்கல…” அமைதியாக பேசிட,

“நீ அப்படி பேசாம இருந்தாதான் நான் ஆச்சரியப்படனும். நாலு வார்த்தை அதிகமா பேசிட்ட, அவ்வளவு தானே?”

“பின்னே எதுக்கு ஃபோன் பண்ணல நீ?”

“பொறுப்பான ஆபீசரா இருக்கச் சொன்னத ஃபாலோ பண்றேன்” இயல்பாய் சொன்னான்.

“அகைன் சாரி விஸ்வா! நான் வேணும்னு சொல்லல… இனி இப்படி பேசுறத குறைச்சுக்க பாக்குறேன்”

“இனி பேசவேண்டாம் பொம்மி, எப்ப உனக்கு சரினு படுதோ அப்ப நீயே வீட்டுல நாள் குறிக்க சொல்லு… கல்யாணம் முடிஞ்ச கையோட மாற்றல் வாங்கிட்டு வரேன். அதுவரைக்கும் கொஞ்சநாள் பேசாம இருப்போம்” காரினை செலுத்திக்கொண்டே அவள் முகம் பார்க்காமல் விஸ்வா பேசிக்கொண்டே போக, அவனது பேச்சில் பத்மி விடைபெற்று பொம்மியும் வந்திருக்க, இவள் மனம் பெரிதும் தடுமாறிப் போனது.

“ஏன்? ஏன்ரா இப்படி சொல்ற? அதான் சாரி சொல்லிட்டேனே! நானா உன்னை புரிஞ்சுட்டு வர்றதுங்கிறது நடக்காது விஸ்வா” தவிப்போடு சொல்ல,

“ஏன் நடக்காது? அவ்ளோ கூச்ச சுபாவத்தோடயா உன்ன வளர்த்திருக்காங்க?”

“அப்படியெல்லாம் கிடையாது. எனக்கான முழுச்சுதந்திரமும் எங்க வீட்டுல குடுத்திருக்காங்க… எங்க நாணா, அவர் பொறுப்புல, என்னை எடுத்துக்கலன்னா இவ்ளோ தைரியமா உன் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க மாட்டேன்” தந்தையை பற்றிச் சொன்னவளின் முகம் சிரிப்பில் மலர்ந்தது.

“நாணாவா, தன்னோட கடமைய சரியா செஞ்சுருக்கார். இதுல என்ன அதிசயம் பொம்மி?”

“நீ சொல்றது சரிதான் விஸ்வா! நானும் அவரோட எதிர்பார்ப்ப பொய்யாக்கமா என்னால முடிஞ்ச அளவுக்கு ஏணியில ஏறியிருக்கேன். என்னை பெத்தவர் எப்படி இருப்பார்னு கேட்டா எனக்கு தெரியாது. என்னோட நினைவுல சுத்தமா அவர் இல்ல…

இந்த ஊருக்கு வரும் போது நானும் அம்மாவும் ரொம்ப பலவீனமா இருந்ததாவும் நான் யாரையும் பக்கத்துல சேர்க்காம அழுதிட்டு இருப்பேன்னும் சிலநேரம் அவ்வா(பாட்டி) சொல்வாங்க…

ஆனா, என்னோட பத்து வயசு வரை, உப்பு முட்டை தூக்கிட்டு போன என்னோட சீனிப்பா கிடைக்க நான் குடுத்து வச்சுருக்கணும். அவர் இல்லாம என்னால வெளியுலகம் பார்த்திருக்க முடியாது. என்னோட எல்லா முயற்சியும் அவரில்லாம முழுமை அடைஞ்சதில்ல.” தன் தந்தையைப் பற்றிய பெருமையில் அத்தனை பூரிப்பு பொம்மிக்கு.

“நாணாவ பத்தி பேசும்போது முகம் ப்ரைட் ஆகுறத பார்றா” என்ற விஸ்வாவின் கேலியில், செல்லமாய் முறுக்கிக் கொண்டே தொடர்ந்தவள்.

“என் வளர்ச்சியோட ஒவ்வொரு கட்டத்துலயும் சின்னையா இல்லன்னா சக்சஸ் ஆகியிருக்காது. நீ இதை செய்யலன்னா உனக்கான அடையாளம் இல்லாமயே போயிரும்னு சொல்லியே, என்னை ஸ்கூல்ல இருந்து இவ்ளோ தூரம் வரைக்கும் கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கான்.

இன்னமும் அவனை பார்த்தா எனக்கு பொறாமைதான் வரும். எப்படி இவனால மட்டும் எல்லார் மேலேயும் அன்பா, கேரிங்கா இருக்க முடியுதுனு நிறைய யோசிச்சிருக்கேன். ஆனா இதெல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது விஸ்வா” சகோதரனின் அன்பில் உள்ளம் நெகிழ்ந்தாள்.

“ஏன் பொம்மி? நீயும் பாசமா தானே இருக்க?”

“அவங்க குடுத்ததுக்குதான் பதில் சொல்லிட்டு இருக்கேன். நான் இன்னும் அவங்களுக்கு ஒண்ணுமே செய்யல விஸ்வா” என்றவளுக்கு தன் சிறுவயது நினைவு வந்துவிட, உணர்ச்சி துடைத்த குரலில்,

“எங்கம்மாவ ரொம்பவே கஷ்டபடுத்தி இருக்கேன், எனக்கு விவரம் தெரிஞ்சு பனிரெண்டு வயசு வரை மருந்து குடுத்துருக்காங்க… ஏன் எதுக்குனு நான் கேட்டாலும் இதுவரை அவங்க சொன்னதில்ல… நான் ஹெல்த்தியா வளரணும்னு நாணா என்னை சமாதானப்படுத்தி மருந்து குடுப்பார். இங்கே வந்த பிறகுதான், எங்கம்மாவோட சிரிப்புலயும் ஒரு உயிர்ப்பு வந்ததுனு நான் நிச்சயமா சொல்வேன். வெளியே பார்க்கதான் ரொம்ப தைரியசாலியா தெரியுறேன் விஸ்வா… உள்ளுக்குள்ள நான் ரொம்ப கோழை” தன் நிதர்சனத்தை அவனுக்கு உணரவைத்தாள்.

“எதுக்கு இதையெல்லாம் சொல்ற பொம்மி?”

“என்னால இவங்களயெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு, திடீர்னு வந்த உன்ன உயரத்துல தூக்கி வைக்க முடியாது. உன்னை பத்தின நினைப்பு வந்தாலும் எனக்குள்ள, நீ பெரிய பாதிப்ப ஏற்படுத்தல விஸ்வா… நீ, என்னை விரும்புறன்னு என்னால கர்வப்பட முடிஞ்சாலும் என்னோட மனசு என் வீட்டையும் என் குடும்பத்தையும் சுத்திதான் வரும். உனக்காகனு என்னால தனியா யோசிக்க முடியலரா! ஏதோ ஒரு ஹெசிடேஷன், எனக்கு தடையா இருக்கு” பொம்மியின் உணர்ச்சிமிகுந்த பேச்சில், வம்பிழுப்பவனும் வாயடைத்து போனான்.

“எதையும் பக்கத்தில இருந்து பார்த்தா, ஏத்துக்குற மனப்பக்குவம் தன்னால வரும்னு சொல்வாங்க… அதனாலதான் கல்யாணம் பண்ணிட்டு, உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாம்னு நான் நினைச்சேன். என்னோட நெலம இதுதான். தப்பா நினைக்காதே விஸ்வா… நான் இப்படிதான்” ஆழ்ந்தகுரலில் தன் நிலையை அவனுக்கு உணர்த்திட,

“நானும் இப்படித்தான் பொம்மி! என்னோட முடிவிலேயும் மாற்றமில்ல” தோள்குலுக்கி தன்சீண்டலை தொடங்கினான்.

“நெனச்சேன்ரா! உனக்கெல்லாம் சீரியஸ் மோட் சரிவாரது…” பொம்மி பல்லைக் கடிக்க,

“இப்போ உன்கிட்ட யாரு ஃபிளாஷ் பேக் கேட்டா? எனக்கு இந்த பொம்மி வேணும், அதுக்கு என்ன செய்யனுமோ அத நான் செஞ்சுட்டு போறேன்! நீ ஏன் இடையில வந்து சிம்பதி கிரியேட் பண்ற ஸ்பைசி?” வழக்கம்போல் வார்த்தைகள் சதிராடத் தொடங்கின.

“உன்னை திருத்த முடியாதுரா! இப்படியே சண்டை போட்டுட்டேதான் இருக்கப் போறோம். கல்யாணம் நடக்கப் போறதில்ல…”

“ஓ… அப்படி ஒன்னும் நடக்க வாய்ப்பிருக்கோ?”

“எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு விஸ்வா… இன்னும் கொஞ்சநாள்ல எப்போ கல்யாணம்னு கேக்க ஆரம்பிச்சு, நீ சொல்ற காரணத்த, எங்க நாணா ஏத்துப்பார்னு எனக்கு நம்பிக்கை இல்லரா”

“நான் பிடி குடுத்து பேசலன்னா, என்னை விட்டு வேறு ஒருத்தரை மாப்பிள்ளையா பாக்க கூட உங்கநாணா முடிவேடுப்பாரா? அதுக்கு நீயும் ஒத்துப்பியா?” சீண்டல் மறைந்து கோபம் எட்டிப் பார்த்தது விஸ்வாவின் குரலில்.

“இந்த ஏட்டிக்குப் போட்டி பேச்சுதான் பேசவேணாம்னு சொல்றேன். புரிய மாட்டேங்குதே உனக்கு?” சலிப்போடு சொல்ல,

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு! நீ வேற அலையன்ஸ்கு ஓகே சொல்வியா?” கடுப்பாக கேட்டான்.

“இப்படி கேள்வி கேட்டா உன்னைத் தேடி பத்மாக்ஷினி வரமாட்டா… பத்ரகாளி தான் வருவா!” அவனது கேள்வியை சற்றும் விரும்பாதவளின் உள்ளம் உச்சகட்ட கொதிநிலையை அடைந்தது.

தான் இவனிடம் விளக்கியது என்ன? அதை புரிந்து கொள்ளாமல், அர்த்தமற்ற கேள்வியை கேட்டுக் கொண்டிருப்பவனைக் கண்டு மனம் குமைந்து போனவள், முற்றிலும் அவனுடன் பேசுவதை தவிர்த்து விட்டு, மௌனச் சாமியாரிணி ஆகிப் போனாள் பொம்மி.

அவளின் பேச்சற்ற நிலையை தகர்த்தெறிந்து, மீண்டும் பேசவைத்தவன் தன் சீண்டலை தொடர்ந்திட, சமாதானம் என்ற பேச்சிற்கே வழியில்லாமல் வீடுவரை கொண்டு வந்து விட்டான். காரிலிருந்து இறங்கியவளை வீதியில் நிற்க வைத்துக் கொண்டே,

“பொம்மி ஒரு நிமிஷம் உன் கைய குடு” என்றவனின் குரலில் இலகுத்தன்மை திரும்பியிருந்தது.

“எதுக்கு விஸ்வா?” ம்ஹும்… நீ ஏதோ தப்பா யோசிக்கிற? மாட்டேன்” சந்தேகமா பேச,

“கை குடுத்தா கரைஞ்சு போகமாட்ட, குடு!” என்று அவள் இரண்டு கைகளை தன் கைகளுக்குள் இழுத்து வைத்துக் கொண்டவன்,

“கண்ண முடிக்கோ பொம்மி… நான் சொல்றதுக்கு எஸ் சொல்லிட்டே வா”

“எதுக்கு கண்ணு மூட சொல்ற? கேவலமா எதாவது செஞ்சு வைக்கப் போறியா? என்னதான் சிட்டியா டெவலப் ஆனாலும் இது கிராமம் விஸ்வா. ரவுண்டு கட்டி மானத்த வாங்கிடுவாங்க” என்று பல்லைக் கடிக்க,

“நான் மட்டும் இது நியூயார்க் சிட்டின்னா சொன்னேன்? நீ நெனைக்கிறத செய்ய எனக்கு கார் போதும். இந்த வெட்ட வெளியில நானும் ஷோ காமிக்க விரும்பல. எதிர்பேச்சு பேசாம கண்ணை மூடு” என்றவனின் உத்தரவில் கண்ணை மூடினாள் பொம்மி.

அவள் கைகளை தன் கைகளை ஏந்திக் கொண்டவன்,

“இது ஜஸ்ட் ஒரு எலக்ட்ரோ மொமெண்ட்… ஃபீல் பண்ணு பொம்மி! ஸ்டார்ட்… இப்போ உன் முன்னாடி விஸ்வேந்தர்னு ஒரு சின்ன பையன் வர்றான்.”

“விஸ்வா, நீ சின்ன பையனா?” என்றவளும் சகஜமாக பேச ஆரம்பித்தாள்.

“ஷ்ஷு… எஸ் சொல்லு”

“ம்ம்… எஸ்”

“அவனை ஒரு குட்டி பொண்ணு விச்சுகண்ணான்னு கொஞ்சிக் கொஞ்சி கூப்பிட்டா”

“எஸ்… பட் நான் சாதாரணமாதான் கூப்பிட்டேன்”

“நோ மோர் வோர்ட்ஸ்… அவ எனக்காக தனியா சிலம்பம் கிளாஸ் எடுக்குறா”

“எஸ்…”

“அவங்க நாணா, எனக்கு பிசிக்கல் பிட்னஸ் பத்தி சொல்லும்போது, அவளும் கூடவே இருந்து என்கரேஜ் பண்ணினா”

“எஸ் விஸ்வா…” பதில் சொல்லும்போதே அவளுக்கு புன்னகை பூத்தது.

“அப்ப, நாணா சொல்றத ஃபாலோ பண்ணினா நீ சூப்பர்கண்ணா ஆகிடுவேன்னு என்னை கேலி பேசினா” சொன்னவனின் பேச்சில் புன்முறுவல் தெறிக்க,

“ஆமாரா விச்சு” என பதிலுக்கு மென்முறுவலில் பதில் அளித்தாள்.

“காலேஜ் லீவ் அப்போ என்னை வம்பிழுத்தே, என்னை சிலம்பம் ஆட கூப்பிடுவாளே அந்த சின்ன பொண்ண பாக்குறியா?”

“எஸ் விச்சு” அவள் கண்களை மூடிக்கொண்டே பதில்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அந்த தேவதை பொண்ணு, அந்த பையனை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தா… அவனால அந்த உணர்வை புரிஞ்சுக்க முடியல! அவ விச்சுகண்ணான்னு கூப்பிடுறத கேக்கவே அவ பின்னாடியே சுத்தினான். அவளுக்கு அது தெரியாது” என்றவனின் குரலில் சற்றே உணர்ச்சி கூடியிருந்தது.

“விஸ்வா?” கேள்வியாய் புருவம் நெறித்தவளிடம்,

“அவள புடவையில பார்த்த பிறகுதான் அவமேல கிறுக்கு பிடிச்சு விழுந்துட்டதா நினைச்சான். ஆனா அது உண்மை இல்ல… அவளோட அன்பு முழுசா வேணும்னு, அவனோட ஒவ்வொரு அணுவும் எப்பவோ ஆட்டம் போட ஆரம்பிச்சது, அவனுக்கே கொஞ்சம் லேட்டாதான் புரிஞ்சது. அவ தன்னோட அன்பால அவனை முழுமையா ஆக்கிரமிச்சுட்டா…”

“விஸ்வா ரொம்ப பேசுற நீ?” என்று கண்ணைத் திறந்து விட்டாள் பொம்மி.

“அவனுக்கே தெரியாம இருந்த காதல் உணர்வ அவளே தட்டி எழுப்பிட்டு, சிலிர்த்துகிட்டா… அதே உணர்வ அவளுக்கு புரியவைக்கும் போது, அவன விட்டு விலகிப் போறா… அவனுக்கு, அவளோட அன்பு கிடைச்சா போதும். விச்சுகண்ணான்னு அவ கூப்பிட்டாலே, அவன் மனசு அவ காலடியில விழுந்துரும்” என்றவன் அவள் கைகளை மேலும் இறுக்கிக் கொண்டான்.

“போதும் விச்சு… கைய விடு, நான் போறேன்” முரண்டுபிடித்தாள் பொம்மி.

“இன்னைக்கு உன் கனவுல அந்த சின்ன பையன் வந்தா, அந்த தேவதையையும் அவன்கூட அனுப்பி வை பொம்மி… இல்ல, நான் வந்தா என்கூட நீயும் வா! டூயட் பாட கூப்பிடல, கனவுலயாவது மனசு திறந்து பேசுவோமே!

அப்பாவோட பாசத்தையும் அண்ணனோட அக்கறையையும் என்னோட வம்பான பாசத்துல குடுக்க முயற்சி பண்றேன். குடும்பத்துல உள்ளவங்கள தவிர்த்து வேற யாரும் உன்மேல பாசம் வைக்க கூடாதா பொம்மி?” அவளை பரிவாய் பார்த்துக்கொண்டே தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி முடித்தான்.

அவனது பாவமான பாவனைகளில் தன்உள்ளம் அவனிடத்தில் வீழ்ந்ததைப் போன்ற கற்பனை தோன்ற, நொடிநேரத்தில் தன்னை சமன் செய்துகொண்டாள். எப்பொழுதும் போல் தன்நிலையில் இருந்து பின்வாங்காமல்,

“எனக்கு கனவே வராது விஸ்வா! எனக்கு மனசும் இல்ல” என்று தனது முரட்டுப் பிடிவாதத்தை காட்டிவிட்டு, அவனிடம் இருந்து தன்கையை உதறிக்கொண்டு வேகமாக வீட்டிற்குள் சென்று மறைந்தாள்.

இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி

இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி

கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி

கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி பெண்ணே

இல்லை நின்று கொல்லடி கண்ணே

எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்

என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்

என்ன சொல்லப் போகிறாய்…

error: Content is protected !!