Nan Un Adimayadi–EPI 21

அத்தியாயம் 21

உறவை மனது வளர்க்குதே

உயிரை அறுத்து எடுக்குதே

கண்ணில் காதல் விதைக்குதே

கடைசியில் உசுரை கொல்லுதே (முத்துக்காளை)

 

சனிக்கிழமை சோம்பலாக விடிய, அந்த வீட்டின் மகாராணி துயில் களைய காலை மணி எட்டானது. எழும் போதே சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைத்தது. இரவு படுக்க போகும் முன்னே அடை தோசை சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகிறது என்பது போல குறிப்புக் காட்டிப் பேசி இருந்தாள் காமாட்சியிடம். கண்டிப்பாக அதுதான் இன்று காலை உணவாக இருக்கும் என்பது அண்ட்ரட் பர்சண்ட் கன்பர்ம் தவமங்கைக்கு. தன் விரல் நுனியில் அவர்கள் மூவரையும் ஆட்டி வைக்கும் களிப்பில் ஆனந்தமாக எழுந்தாள் அவள்.

“வாரம் முழுக்க கத்தி கத்தி உழைக்கிற புள்ள நீ! சனி, ஞாயிறு காலையிலயாச்சும் ஆற அமர மெதுவா எழுந்துவாத்தா!” என சொல்லி இருந்தார் காமாட்சி. ஆனாலும் அவளுக்கு படுக்கையில் அதற்கு மேல் படுத்திருக்க முடியவில்லை.

பக்கத்தில் கிடந்த காளையின் போர்வையை எடுத்து மடித்தவள், அதை அப்படியே தன் மூக்கில் வைத்து அழுத்திக் கொண்டாள். காளையின் மணம் நாசியை நிறைக்க குப்பென புது ரத்தம் ஊறியது போல உடம்பு உற்சாகமானது. புன்னகையுடன் அதை அவன் தலையணை மேல் வைத்து விட்டு, தனது போர்வையையும் மடித்து வைத்து விட்டு ஹம் செய்தபடியே குளிக்கப் போனாள்.

அவள் எழுந்து பாத்ரூம் பக்கம் போவதைப் பார்த்த காமாட்சி,

“இங்க வந்து தலைக்கு எண்ணெய் வச்சிட்டுப் போத்தா!” என அழைத்தார்.

அடுப்படியில் இருந்த மணக்கட்டையில் அவளை அமர்த்தி, லேசாக சூடு செய்திருந்த நல்லெண்ணெயை மங்கையின் தலையில் பரக்கத் தேய்த்து விட்டார். அவர் தேய்க்க, அந்த ரிதத்துக்கேற்ப அப்படியும் இப்படியும் அசைந்தவளை,

“ஒழுங்க ஒரு எடத்துல ஒக்கார மாட்ட?” என கடிந்துக் கொண்டவர்,

“சீயக்காய் வச்சிருக்கேன், தலைக்கு தேய்ச்சுக் குளி! போத்தா” என சொன்னார்.

“ஹ்ம்ம்ம்…இன்னும் கொஞ்சம் நேரம் அப்படியே தேய்ச்சுட்டே இருங்க ஆத்தா! சுகமா இருக்கு”

“ஹ்க்கும்! ஒன் புருஷன் கிட்ட போய் கேளு! வெட்டிப்பய நாள் முழுக்க கூட ஒன் தலைக்குள்ள புதையல் எடுத்துக்கிட்டு ஒக்காந்துருப்பான்! எனக்கு வேலை கிடக்குடியாத்தா” என நொடித்துக் கொண்டாலும் மருமகளுக்கு இதமாக தலை மசாஜ் செய்ய தவறவில்லை அவர்.

அதன் பிறகு பல் விளக்கி குளித்து விட்டு வந்தவள், காளையின் குரல் கேட்க அது வந்த திசைக்கு நடந்தாள்.

“ம்ம்மாம்மே ம்ம்மாம்மே ம்மாமாமேமே ம்ம்மாம்மே” என செண்பகமே செண்பகமே பாட்டை மாட்டு பாஷையில் பாடிக் கொண்டே கொட்டகையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தான் காளை. அதைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது இவளுக்கு. சிரிப்பு சத்தத்தில் திரும்பி பார்த்தான் காளை. முகம் மலர,

“வாங்க ம்மாம்மா! அதுக்குள்ள எழுந்துட்டீங்களா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாம்ல!” என கேட்டான்.

“இன்னும் தூங்கிட்டா முழிச்சிருக்கற டைம் கொறைஞ்சிடுமே! முன்னலாம் எழுந்து என்னத்த கிழிக்கப் போறோம்னு தூங்கியே நேரத்தை ஓட்டுவேன்! இப்போ என்னை சுத்தி இத்தனைப் பேர் இருக்கீங்க! ரொம்ப தூங்கிட்டா உங்க கூடலாம் ஸ்பேண்ட் பண்ணற டைம் கம்மியாகிடுமே!”

யோசனையுடன் அவள் முகத்தைப் பார்த்தான் காளை. அடிக்கடி இப்படி ஒன்று இரண்டு வாக்கியங்கள் அவள் முந்தைய வாழ்க்கையைப் பற்றி வரும். இன்னும் அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என ஆவலாக இவன் கேட்டால், பட்டென முறுக்கிக் கொள்வாள்.

“ஏன்? என்னைப் பத்தி என்ன தெரியனும்? நான் தவமங்கை டாட்டர் ஆஃப் அஜய்குமார். டீச்சர் வேலை செய்யறேன். ஏற்கனவே கல்யாணம் நிச்சயம் ஆகி நின்னுப் போச்சு! இப்போ நான் தவமங்கை முத்துக்காளை. இதெல்லாம் உங்களுக்குத் தெரியும் தானே? இதுக்கும் மேல என்ன தெரியனும்? எங்கப்பாவுக்கு எவ்ளோ சொத்துபத்து இருக்குன்னு தெரியனுமோ? இப்படி பஞ்சாயத்துல கல்யாணம் பண்ணிட்டோமே, வரதட்சணை சீர் செனத்தி இல்லாம வெறும் கையோட வந்திருக்காளேன்னு காலம் கடந்து வருத்தமா இருக்கா காளை சார்! அதான் அதையும் இதையும் கேட்டு என்னை துரத்தி விட திட்டம் போடறீங்களா?” என கோபமாக படபடப்பாள்.

முகம் சிவந்து போய் கண்களில் கண்ணீர் முட்டிக் கொள்ளும் மங்கைக்கு. உதட்டைக் கடித்து அழுகையை நிறுத்தப் போராடுபவளை கண்டதும் உருகியே போய்விடும் காளைக்கு. அவள் போ போ என தள்ள தள்ள விடாது அணைத்துக் கொள்வான். அதற்கு மேல் அவளைப் பற்றி எதையும் கேட்க எங்கே வாய் வரும் அவனுக்கு.

அவன் தாடையைப் பற்றியவள்,

“பால் கறக்க சொல்லித் தரேன்னு சொன்னீங்களே?” என ஞாபகப்படுத்தினாள்.

வீட்டில் இருக்கும் நேரங்களில் அவன் பின்னாலேயே சுற்றிக் கொண்டு இருப்பவள், அவன் பால் கறக்கும் வேளைகளில் தூரம் இருந்தே பார்த்திருப்பாள். மாடுகளை நெருங்க பயந்தவளை இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கி இருந்தான் காளை. சாணி வாசனையில் முகம் சுளிக்காது, கொசு கடிப்பதையும் பொருட்படுத்தாது இதுதான் என் புகுந்த வீடு, இவன் தான் என் கணவன் என பொருந்திப் போனவளை நினைத்து நினைத்து நெஞ்சம் விம்மிப் போகும் காளைக்கு.

அவள் எழும் முன்பே, மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு, கன்று பால் குடித்த கையோடு பால் கறந்து முடித்திருந்தான் காளை.

“இன்னிக்கு பால் கறந்தாச்சே டீச்சர்! சும்மா எப்படி செய்யனும்னு மட்டும் காட்டித் தரவா?”

சரி என அவள் தலையாட்ட, பசுவின் பக்கம் அழைத்துப் போனான் அவளை.

“இதுதான் பசுவோட மடி. இதுதான் பால் காம்பு! இத இப்படி புடிச்சு, இப்படி கறப்பாங்க” என செயல் முறையாக அவள் கையைப் பிடித்து தொட்டு தொட்டுக் காட்டினான் காளை.

கன்றுக்குட்டி ம்ம்மா என அவர்கள் அருகே வந்து காளையை உரசியது.

“இப்போதானடா பால் குடிச்ச! அதுக்குள்ள என்ன மறுபடியும் உரசியாகுது? கெட்டப்பையன்டா நீ! போ போ போய் அம்மாட்ட பால் குடி” என கன்றுக்குட்டியைத் தடவி கொஞ்சிவிட்டு பசுவிடம் விட்டான் காளை.

தாய் மடியை முட்டி முட்டி கன்று பால் அருந்துவதை வைத்தக் கண் வாங்காது பார்த்தாள் மங்கை. மாடுகளை ஆசையாக பார்த்திருக்கும் தன் மங்கையை ஆசையாய் பார்த்திருந்தான் காளை.

“நம்ம புள்ளைக்கு நான் தாய்ப்பால் தான் குடுப்பேன் காளை. மாட்டுப்பால், பவுடர் பால் எல்லாம் குடுக்கவே மாட்டேன். தோ இப்படி அணைச்சுப் புடிச்சு, கன்னத்தை மெதுவா வருடி, தலையை கோதி குடுத்து ஆசையாய் பால் குடுப்பேன்! அழறப்பலாம் சலிச்சுக்காம குடுப்பேன்!”

கண்களில் கனவு மின்ன அவள் நிற்க, தன்னவளின் முகத்தில் தெரிந்த பரவசத்தில் மயங்கிப் போனான் மன்னன். மங்கையின் மணிவயிற்றில் தன் உயிரணுவை கருவாய் தாங்கி நிற்கும் பிம்பம் கற்பனையாய் நெஞ்சில் விரிய சிலிர்த்துப் போனான் காளையவன். மெல்ல அவளை நெருங்கி பின்னிருந்து அணைத்து உள்ளங்கையை அவள் வயிற்றில் பதித்துக் கொண்டான் காளை. இன்னும் பின்னால் நகர்ந்து அவன் மேல் சாய்ந்துக் கொண்டவள்,

“ஏன் காளை, நான் அம்மாவாகி நமக்கு ஒரு பொண்ணு வந்துட்டா, நீங்க யார ரொம்ப பாசமா பார்ப்பீங்க? என்னையா நம்ம பொண்ணையா?” என கேட்டாள் அவள்.

சட்டென சுதாரித்தான் காளை. இதே பழைய காளையாக இருந்திருந்தால் மனதில் தோன்றியதை பட்டென சொல்லி இருப்பான். அவன் தான் மங்கையின் அடிமை காளையாயிற்றே! தன்னவள் மகிழும்படி ஒரு பதிலை சொல்ல நினைத்தவனுக்கு, நேற்று பார்த்த நம்ம வீட்டுப் பிள்ளை பட சீன் உதவிக்கு வந்தது.

‘அந்த மயிலாஞ்சி பாட்டுக்கு முன்ன ஹீரோயினி பொண்ணு என்ன சொல்லிச்சு நம்ம சிவா தம்பிய பார்த்து? அவங்க அம்மாவ மாதிரி பார்த்துக்கற புருஷன விட பொறக்கப் போற பொண்ணு மாதிரி பார்த்துக்குற புருஷனதான் புடிக்கும்னு சொன்னுச்சி! அதுக்கு என்ன அர்த்தம்டா காளை டேய்? ஹ்ம்ம்.. பெத்த பொண்ண மாதிரி கட்டன பொண்டாட்டியையும் அன்பா அரவணைச்சுப் பார்த்துக்கனும்னு தானே! இப்ப பாரு நம்ம பெர்பாமன்சே!’ என மனதில் பட்டிமன்றம் நடத்தி முடித்தவன் மங்கையிடம்,

“சத்தியமா உங்களைத்தான் பாசமா பார்த்துப்பேன் டீச்சர்! அதுக்குப் பிறகுதான் என் மக” என சொன்னான்.

அவன் அணைப்பில் இருந்து திமிறி வெளியானவள்,

“இன்னிக்கு டவுனுக்கு போகனும் நான்! என்னைக் கூட்டிட்டுப் போங்க” என் சிடுசிடுத்துவிட்டு,

“எப்பா பாரு பொண்டாட்டி பொண்டாட்டின்னு. சிம்பு பாட்டு படிக்கற மாதிரி நான் தாங்கமாட்டேன் தூங்கமாட்டேன் நீ இல்லாட்டி கேஸ் இதுங்கலாம். அதுக்கு எதுக்குப் புள்ளைய பெத்துக்கனும்! பொண்டாட்டியையே புள்ளையா பார்த்துக்க வேண்டிதானே” என முனகியப்படியே போய் விட்டாள்.

“இப்ப நான் என்னத்த தப்பா சொல்லிட்டேன்னு டீச்சர் மொனகிக் கிட்டே போறாங்க! எல்லா பொண்ணும் கேக்க விருப்பப்படறத தானே சொன்னேன்? என்னடா இந்த காளைக்கு வந்த சோதனை! இப்படி தப்பு தப்பா சொல்லிக் குடுக்கற இந்த சிவா தம்பி மட்டும் நம்மூர் பக்கம் வரட்டும், அப்புறம் இருக்கு கச்சேரி!” என புலம்பியபடியே வேலைகளைப் பார்க்கப் போனான் காளை.

ஆற அமர செய்யும் எண்ணெய் குளியலைக் கூட அரக்கப் பறக்க முடித்தவன், ஜம்மென பவுடர் போட்டு வாசமாக கிளம்பி வந்தான். எண்ணெய் குளியலின் போது தூரமாய் உட்கார்ந்து வேறு வேலை செய்வது போல தன்னை சைட்டடிக்கும் மனைவி இன்று கண்ணிலே படாதது கூட அந்த அவசரக் குளியலுக்கு காரணம். அவன் வந்ததும் தான் சாப்பிட அமர்ந்தாள் மங்கை. சனி ஞாயிறு காலை உணவை மட்டும் இருவரும் சேர்ந்து சாப்பிடுவதைக் கட்டாயமாக்கி இருந்தாள் அவள். இவன் மீது ஏதோ கோபம் இருந்தும் பழக்கத்தைக் கைவிடாமல் காத்திருந்தாள். முகத்தைத் தூக்கி வைத்திருப்பவளுக்கு அவரமாக அவளுக்குப் பிடித்த விதத்தில் காபி கலந்து வந்தவன், நெருங்கி அவள் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

இருவருக்கும் சூடான அடை தோசையை கொண்டு வந்து தட்டில் இட்டார் காமாட்சி. இவளுக்கு சட்னியை பரிமாறியவர் மகன் தட்டில் கோழி குழம்பை அள்ளி ஊற்றினார். இவள் கொஞ்சம் கொஞ்சமாக தோசையைப் பிய்த்து சட்னியில் தேய்த்து மெதுவாக சாப்பிட, அவனோ தோசையை  குழம்பில் ஊற வைத்து குளிப்பாட்டி, குழைத்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான்.

அவனை ஓரப்பார்வையாய் பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை. அவள் பார்வையைக் கவனித்து,

“என்ன வேணும் டீச்சர்?” என கேட்டான் காளை.

“ஆ!!!” என குருவியாய் வாயைத் திறந்தாள் மங்கை.

தட்டையும் தன் கையையும் மாறி மாறி பார்த்தவன்,

“இன்னொரு தட்டுல தோசை போட்டு ஊட்டவா டீச்சர்?” என கேட்டான்.

எப்பொழுதும் காமாட்சியிடம் தான் உணவு ஊட்ட சொல்லிக் கேட்பாள் மங்கை. ராஜீ வந்திருந்த போது கோவித்துக் கொண்டு அவள் படுத்து விட, அப்பொழுது ஊட்டியது தான் முதலும் கடைசியும். அன்றே ஊட்டும் முன் கொரோனா கிருமியைக் கொல்ல கைக் கழுவுவது போல தேய்த்து தேய்த்து கையை கழுவி இருந்தான்.

அவன் கையையும் அவள் வாயையும் மாறி மாறி பார்க்க, பிடிவாதமாக வாயைத் திறந்தபடியே அமர்ந்திருந்தாள் அவன் ராட்சசி. வேறு வழி இல்லாமல் குழைத்து வைத்திருந்த தோசையை கொஞ்சமாக அள்ளி அவளுக்கு ஊட்டி விட்டான் காளை.

“ஆ காட்டுங்க!” என சொல்லி இவளும் அவனுக்கு ஊட்டி விட்டாள்.

“இப்படியே ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் பார்த்துகிட்டும், ஊட்டிக்கிட்டும் இருந்தா எப்போ டவுனுக்குப் போயிட்டு எப்போ வீட்டுக்கு வரது? சீக்கிரம் கெளம்புங்க!” என அடுத்த தோசையை இருவர் தட்டிலும் வைத்த காமாட்சி குரல் கொடுத்தார்.

“காளை டேய்! டவுனுல எனக்கு அல்வா வாங்கிட்டு வாடா! சாப்பிட்டு ரொம்ப நாள் ஆவுது” என குரல் கொடுத்தப்படியே வந்தார் மச்சக்காளை.

“ஆமா, ஒங்கொப்பா அமைதி படை சத்தியராஜீ அல்லுவா கேக்கறாரு, வாங்கிட்டு வந்து குடு! பல்லு கொட்டிப் போனா கிழவா, திங்கறதுக்கு ஒனக்கு எதுக்கு அல்லுவா? இல்ல எதுக்குங்கறேன்?” என மகனிடம் ஆரம்பித்து கணவரில் முடித்தார் காமாட்சி.

எவ்வளவு அடக்கியும் முடியாமல், பக்கென சிரித்து விட்டாள் தவமங்கை. ஊட்டி விட்டாலும் முகத்தில் மலர்ச்சி இல்லாமல் உட்கார்ந்திருந்த மங்கை சிரித்து விடவும், இவனுக்கும் முகம் மலர்ந்து போனது.

“ஏன்டா டேய்! ஒங்காத்தா என்னை கண்ட மேனிக்கு டேமேஜீ பண்ணுறா! ஒரு வார்த்தை எனக்கு பரிஞ்சு பேசாம ஒனக்கு என்னடா சிரிப்பு வேண்டி கெடக்கு! ஜிகு ஜிகுன்னு ஓடுது ரயிலு வண்டி, அரை பேக்கட்டு அல்வா கேட்டது குத்தமாடி?” என மகனில் ஆரம்பித்து மனைவியிடம் முடித்தார் மச்சக்காளை.

பெரியவர்கள் இருவரும் தங்கள் காலை நேரத்து போரை ஆரம்பிக்க, சின்னவர்கள் இருவரும் சிரிப்புடன் டவுனுக்கு கிளம்பினார்கள்.

பைக்கில் ஏறி அமர்ந்தவள்,

“காளை, மேடு பள்ளம் பார்த்து மெதுவா ஓட்டுங்க!” என சொல்லியபடி அவன் முதுகில் ஒட்டிக் கொண்டாள்.

டவுனை அடைந்ததும், ஒரு லிஸ்டை காளையின் கையில் கொடுத்தவள்,

“இதெல்லாம் வாங்கிட்டு எனக்கு போன் செய்ங்க, நான் எங்கிருக்கேன்னு சொல்றேன்!” என அவனை கழட்டி விட பார்த்தாள் மங்கை.

“இல்ல டீச்சர், ஒன்னாவே போகலாமே”

அவனை முறைத்தவள்,

“நான் பர்சனலா சிலது வாங்கனும் காளை! சொன்னா புரிஞ்சுக்கங்க, நான் பத்திரமா இருப்பேன்” என சொல்லி, அவன் தடுப்பதற்குள் மடமடவென நடந்து விட்டாள்.

“ச்சே! டீச்சர் கூட கைக்கோர்த்து கடை தெருவுலாம் சுத்தனும்னு ஆசையா வந்தனே! இப்படி விட்டுட்டுப் போயிட்டாங்களே” என சத்தமாகவே முனகினான் காளை.

“உன் கூட இப்படி பப்ளிக்ல ஒன்னா நடந்து போக தவாவுக்கு என்ன பைத்தியமா? நீங்க ரெண்டு பேரும் ஒன்னா நடந்தா காண்டாமிருகமும் வெள்ளை கன்னுக்குட்டியும் போறது மாதிரில இருக்கும். அதான் கழட்டி விட்டுட்டா!” என கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தான் காளை.

அங்கே நின்றிருந்தான் மறை.

“கை நல்லா போச்சா சார்?” என நக்கலாக கேட்டான் காளை.

இவ்வளவு பேர் இருக்கும் பொது இடத்தில் காளை கையை நீட்ட மாட்டான் எனும் தைரியத்திலும், அன்று கை எலும்பை உடைத்து ஒரு மாதம் சாப்பிடவும் கழுவவும் ஒரே கையைப் பயன்படத்த விட்டவன் எனும் கோபத்திலும் வார்த்தைகளை நஞ்சாய் கொட்டினான் மறை.

வீட்டில் இருக்க கடுப்பாய் இருந்ததால், டவுனுக்கு வந்தாலாவது நான்கு சுடி, ஐந்து சேலைகளை சைட்டடிக்கலாம் எனும் எண்ணத்தில் வந்திருந்தான் மறை. அவன் கண்ணில் மங்கையின் பின்புற தோற்றம் மட்டும் தெரிய, வாட் எ பியூட்டி என மெய்மறந்து பார்த்திருந்தவன், அவள் திரும்பவும் தான் மங்கை என்பதையே அறிந்தான். கைவிட்டுப் போன தங்கம், கரிக்கட்டையை உரசிக் கொண்டு நின்றதில் புசுபுசுவென கோபம் ஏறியது அவனுக்கு.

“என் கைக்கு என்ன, நல்லாத்தான் இருக்கு! ஆனா தவா தலை எழுத்துத்தான் நல்லா இல்ல! என் கிட்ட இருந்து தப்பிக்க, போயும் போயும் உன்னைக் கட்டிக்கிட்டாளேன்னு நெனைக்கறப்போ என் நெஞ்சுல ரத்தமே வழியுது” என பிட்டைப் போட்டான் மறை.

“வீணா கதை பேசிட்டு இருக்க எனக்கு டைம் இல்ல சார்! என் பொண்டாட்டி பொருளெல்லாம் வாங்கிட்டு வா, சேர்ந்து சுத்தலாம்னு சொல்லிருக்கா! நான் வேலைய முடிக்கனும்! கொஞ்சம் நகருங்க”

அவன் பேசியது காதிலே விழாத மாதிரி பேசினான் காளை.

“அது சரி! இன்னும் அவளுக்கு வேலைக்காரனா தான் இருக்கியா? வீட்டுக்காரனா ஆக விட்டாளா இல்லையா?”

பொசுபொசுவென கோபம் பொங்கியது காளைக்கு. அடக்கிக் கொண்டு சாதரணமாக நின்றான். என்ன சொல்லியும் முகத்தில் எதையும் காட்டாமல் நின்ற காளையைக் குத்திக் கிழிக்க வேண்டும் எனும் வெறியே வந்தது மறைக்கு.

“ஆரம்பத்துல, எனக்கு நெறைய கேர்ள்ப்ரேண்ட்ஸ் இருக்கு! அவங்கள எல்லாம் எப்படி கழட்டி விட்டேன்னு பெருமையா இவ கிட்ட ஷேர் பண்ணிட்டேன். அப்போ எனக்கு என்ன தெரியும் இவ மேல லவ்வுல விழுவேன்னு. பொண்ணுங்களுக்கு உண்மைய பேசற பசங்கள விட, பொய்யாய் இருக்கறவனுங்கள தானே புடிக்குது! என் கேரெக்டரே தப்புன்னு முடிவுக்கு வந்து, கல்யாணத்த நிறுத்த அவ யூஸ் பண்ணிக்கிட்ட ஆளுதான் நீ! அவங்க அப்பா வேற, நான் சொன்ன ஆள கல்யாணம் பண்ணிக்க மங்கை ப்ராமிஸ் பண்ணிருக்கான்னு என் கிட்டயே சொன்னாரு. அந்த பஞ்சாயத்து மட்டும் எங்களுக்கு நடுவுல வந்திருக்கல, சத்தியமா என்னைத்தான் கட்டியிருப்பா தவா! என் ஒழுக்கத்த சந்தேகப்பட்டு பஞ்சாயத்த சாக்கா வச்சு என்னைக் கழட்டி விட்டுட்டு உன்னைப் போய் கட்டிக்கிட்டா! ப்ளடி கிராமம், ப்ளடி பஞ்சாயத்து!”

அவள் ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கி பஞ்சாயத்தில் பேசியவன், இப்போது கதை திரைக்கதையை மாற்றி காளையை கோபப்படுத்த முயன்றான். அஜய் பார்த்த மாப்பிள்ளை இவன் தான் என காளைக்கு ஏற்கனவே அஜய் மூலமாகவே தெரியுமாதலால், வயிற்றெரிச்சலில் பேசுகிறான் என புரிந்துதான் இருந்தது. ஆனாலும் மங்கை தன்னை பயன்படுத்திக் கொண்டாள் என அவன் பேசியது கோபத்தைக் கொடுத்தது. கடந்த காலம் எப்படியோ, இத்தனை நாட்களில் அவள் அன்பில் நனைந்து, பாசத்தில் குளிர் காய்கிறானே! காதல் இல்லாமலா அவள் உரிமை எடுத்துக் கொள்கிறாள் எனும் அளவுக்கு தெளிவாய் தான் இருந்தான் காளை.

“பேசியாச்சா? நான் கெளம்பறேன்”

என்ன சொல்லியும் அவனை சலனப்படுத்த முடியாமல் போன கோபத்தில்,

“கல்யாணத்துக்கு முன்னமே உன்னைக் கட்டிப்புடிச்சு கெடந்த அவ ஒரு பஜாரி! அவள கட்டிக்கிட்ட நீ ஒரு பொறம்போக்கு! எப்படியோ அந்த ஒழுக்கம் கெட்டவகிட்ட இருந்து என்னைக் காப்பாத்தன கடவுளுக்கு பெரிய தேங்க்யூ நோட் அனுப்பனும்பா” என நக்கலாய் சொன்னான் மறை.

“என் கை உங்க மூக்க ஷேக் ஹேண்ட் பண்ணனுமாம் மறை சார்! பண்ணிக்கவா?” என கேட்ட காளை மறை என்ன ஏது என உணர்வந்தற்குள் ஓங்கி அவன் மூக்கை குத்தி இருந்தான். ரத்தம் பொலபொலவென கொட்டியது மறைக்கு. அதோடு நில்லாமல், ஏற்கனவே எலும்பை உடைத்திருந்த கையை மீண்டும் பிடித்து முறுக்கி, படக்கென சத்தம் கேட்கவும் தான் விட்டான். வலியில் துடித்துப் போய் விட்டான் மறை.

“என்ன பத்தி என்ன வேணா பேசு சார்! பேசாம கேட்டுக்குவேன்! என் பொண்டாட்டிய பத்தி ஒத்த வார்த்தை தப்பா வந்தாலும், நான் பொறுத்துக்க மாட்டேன்! இந்த வாய் தானே, என் மனைவிய பஜாரின்னு சொன்னுச்சு” என கேட்டு வாயிலேயே ஒரு குத்து விட்டான். பொல பொலவென பற்கள் வெளியே கொட்டியது. தடுமாறி கீழே விழுந்த மறையை எழுப்பி கைத்தாங்கலாக பிடித்து ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துப் போனான் காளை.

கீழே விழுந்து விட்டான் என மறையை அட்மிட் செய்தவன் வெளியேறும் போது, தன்னைப் பார்த்து என்னமோ தவறு செய்தவன் போல ஓடும் சூரியின் தந்தை மாரிமுத்துவை கண்டுக் கொண்டான்.

“யோவ் மாரி! என்னைப் பார்த்து ஏன்யா ஓடுற? நில்லுய்யா!” என பின்னால் ஓடினான் காளை.

அன்று இரவு, அறைக்கு வந்த மங்கையையே கண் எடுக்காமல் பார்த்திருந்தான் காளை. அவள் முகத்தில் என்றும் இல்லாத பொலிவு! கன்னம் மினுமினுவென மின்னியது. சந்தோசமாக ஏதோ பாட்டை ஹம் செய்தபடி ட்ரேசிங் டேபிளின் அருகே நின்று, அப்படியும் இப்படியும் தன் உடலை திருப்பிப் பார்த்தாள். அவளையே கவனித்தப்படி அமைதியாக அமர்ந்திருந்த காளையிடம்,

“காளை, நான் உடம்பு வச்சிருக்கனா?” என ஆசையாக கேட்டாள்.

அமைதியாகவே அவளைப் பார்த்திருந்தான் அவன்.

“கேக்கறேன் தானே?” குரல் குழைந்து வந்தது.

எழுந்து அவள் அருகே வந்தவன்,

“மறையை கல்யாணம் பண்றதுல இருந்து தப்பிக்க என்னை பாவிச்சுக்கிட்டீங்களா டீச்சர்?” என சோகமான குரலில் கேட்டான்.

நெற்றியை சுருக்கியவள்,

“என்ன உளறல் இது?” என கேட்டாள்.

“சொல்லுங்க டீச்சர்! மாரிமுத்துக்கு காசு குடுத்து பஞ்சாயத்த கூட்ட சொன்னது நீங்களா?”

அவன் கேள்வியில் வெடவெடவென வந்தது அவளுக்கு.

“ப்ளீஸ் காளை! இப்படிலாம் கூறுகெட்டத்தனமா உளறாதீங்க”

“மாரிமுத்து மகன் சூரி அடிப்பட்டுக் கிடக்க, அவனுக்கு மெடிக்கல் செலவ நான் பார்த்துக்கறேன். பஞ்சாயத்த நீங்க கூட்டுங்கன்னு டீலிங் போட்டது யாரு டீச்சர்? சொல்லுங்க டீச்சர் சொல்லுங்க!” குரல் கமற தொண்டையடைக்க கேட்டான் காளை.

மெல்ல தள்ளாடியவளை, தன் மேல் சாய்த்துக் கொண்டவன், கண்ணீர் குரலில்,

“ஏன் டீச்சர்? ஏன்?” என கதறினான்.

அவனை இறுக அணைத்துக் கொண்டு,

“ஏன்னா ஐ லவ் யூ! நான் உன்னைப் பைத்தியமா காதலிக்கறேன்” என வெறிக் கொண்டவள் போல கத்தினாள் தவமங்கை.

இந்த சம்பவம் நடந்த மூன்றாவது நாள், காலை மணி நான்குக்கு அழைப்பு மணி விடாமல் அடிக்க, கண்ணை கசக்கியவாறு கதவைத் திறந்தார் அஜய்.

அங்கே கசங்கிய சட்டை, வாராத தலை, சிவந்த கண்கள் என சோகமே உருவாய் நின்றிருந்தான் காளை. அஜயைக் கண்டதும் அவர் கையை இறுகப் பற்றிக் கொண்டவன்,

“டீச்சரப்பா! என் அம்மும்மாவ என் கிட்ட குடுத்துருங்க! அவ இல்லாம என்னால இருக்க முடியாது! செத்துப் போயிருவேன் நான்! தயவு பண்ணி என் அம்மும்மாவ என் கிட்ட குடுங்க, குடுங்க, குடுங்க” என கதற ஆரம்பித்தான்.

 

(அடி பணிவான்….)