நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரத்தில் அர்ச்சனா விக்னேஷ் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.அதனால் அனைவரும் பரபரப்பாக திருமண ஏற்பாடுகளில் இறங்கி விட்டனர்.சைதன்யாவும் தன்னால் முடிந்ததை இழுத்து போட்டுக் கொண்டு செய்தாள்.ஆனால் முடிந்தவரை மார்கஸ் கண்ணில் படாமல் இருந்தாள்.
அன்று நிச்சயதார்த்த தின இரவு அவர்கள் ஊர் முறையில் நன்றி கூற வேண்டும் என்று கூறிய மார்கஸ் நாணத்தில் சிவந்து செம்பாவையாக நின்றிருந்த சைதன்யாவின் இதழ்களை நோக்கி குனிந்த போது எங்கிருந்தோ அர்ச்சனாவின் குரல் சைதன்யாவை அழைத்ததும் தங்களை மறந்திருந்த இருவரும் திடுக்கிட்டு விலகினர்.
அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு புள்ளிமானாய் அங்கிருந்து ஓடி விட்டாள் சைதன்யா.அதன்மேல் அவன் கண்ணில் படாமல் வெகு ஜாக்கிரதையாக இருந்தாள் அவள்.ஆனால் அன்று புடவைக் கடை மற்றும் நகைக்கடைக்கு செல்வதாக இருந்ததால் அன்று தன் கண்ணாமூச்சி ஆட்டம் நடக்காது என்று படபடப்பானாள் சைதன்யா.ஆனால் அவள் உள்மனதிற்கு தான் அவனை நினைத்து அல்ல தன்னை நினைத்தே பயப்படுகிறோம் என்று புரிந்தது.தன் மனம் அந்த இணையில்லா ஆணழகனிடம் சென்று விட்டது என்று நன்றாகத் தெரிந்தது அவளுக்கு.
ஆனால் தன் ஆசை நிறைவேறுமா? பிறப்பு வாழ்க்கைமுறை எல்லாமே இருவருக்கும் வேறு வேறாக இருந்தது.மார்கஸுமே கண்ணால் பேசினான் நெருங்க முயன்றான் என்ற காரணத்தால் அவனுக்கும் காதல் என்று எப்படி நினைப்பது?சகஜமாக பழகுவது அவர்கள் ஊர் வழக்கமாக இருந்து அதை தவறாகப் புரிந்துக் கொண்டு சைதன்யா தன் மனதில் காதலை வளர்ப்பதா?ஏனோ அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.
தான் நேராக புடவைக் கடைக்கு வருவதாக அர்ச்சனாவிடம் கூறியிருந்ததால் காலை பத்து மணி அளவில் தன் ஆக்டிவாவில் அர்ச்சனா கூறிய பிரபல துணிக்கடை வாயிலில் நிறுத்தியவள் அந்த ஐந்து மாடி கட்டத்தின் உள்ளே நுழைந்தாள்.
திருமணப் புடவைகள் இருப்பது ஐந்தாவது மாடியில்.மின்தாங்கி மூலம் ஐந்தாவது மாடியை அவள் அடைந்த போது அர்ச்சனாவின் சொந்தம் விக்னேஷின் சொந்தம் என அங்கு சுமார் முப்பது பேர் இருந்தனர்.அத்தனை கூட்டத்தில் சைதன்யாவின் கண்கள் தன்னவனைத் தேடித் தோற்றது.அவன் அங்கு இருக்கும் அடையாளமே இல்லை.அவன் எப்படி எதிர்க்கொள்வது என்ற பயம் சென்று அவன் வரவில்லை என்ற ஏமாற்றம் சூழ்ந்தது அவள் இதயத்தில்.
மிகவும் சிரமப்பட்டு முகத்தை சகஜமாக்கிக் கொண்டவள் இவளைக் கண்டு கை ஆட்டி அழைத்த அர்ச்சனாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“ஏன்டி இவ்ளோ லேட்?”என்றாள் அர்ச்சனா புடவையை பார்வையிட்டபடி.
“ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்டி…அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு”
“சரி சரி வேலையை பாப்போம்… மொத்தம் பத்து புடவை கிராண்டா எடுக்கனுமாம்…மீதியெல்லாம் ஃபேன்சி டைப்…நா இரண்டு மூணு செலக்ட் பண்ணேன்… நீயும் பாரு… உனக்கும் புடிச்சத எடுத்துக்க….”
“உனக்கு ஃபர்ஸ்ட் பாக்கலாம்… அப்புறம் மத்ததெல்லாம்…”என்று தன் முன்னிருந்த புடவைகளை ஆராய்ந்தாலும் கண்கள் நொடிக்கொரு முறை அந்த தளத்தைச் சுற்றி வந்தது.
இரண்டு மூன்று முறை அழைத்தும் சைதன்யாவிடமிருந்து பதில் வராததால் நிமிர்ந்துப் பார்த்த அர்ச்சனா தோழியின் கவனம் புடவை மேல் இல்லை என்பதைக் கண்டுக் கொண்டாள்.அவள் தோளில் பட்டென தட்டியவள்,
“ஏய் யாரடி தேட்ற?”என்றாள்.
அவள் கேள்வியில் திடுக்கிட்டு விழித்த சைதன்யா சட்டென சுதாரித்தவள்,
“நா யாரடி தேடப் போறேன்…அந்த சைட் வேற டிசைன்ஸ் இருக்குமோன்னு பாத்தேன்…”என்றவள் புடவையில் கவனமானாள்.
அவள் பதில் முழு பொய் என்பதை அறிந்தாள் அர்ச்சனா.ஆனால் அவளாக கூறும்வரை அவளிடமிருந்து எதையும் வரவழைக்க முடியாது என்பது அவள் உயிர் தோழியான அவளுக்கு தெரிந்ததே.அதனால் அவளும் அதை விடுத்து புடவை தேர்ந்தெடுப்பைத் தொடர்ந்தாள்.
அப்போது அவர்கள் பின்னிருந்து,
“அர்ச்சனா சிஸ்!விக்கி உங்கள மென்ஸ் செக்சனுக்கு கூப்பிட்றார்…சின்ன ஹெல்ப் வேணுமாம்”
என்று மார்கஸின் கம்பீரக் குரல் கேட்டது.உயிர் வரைத் தீண்டும் அந்த குரலில் சைதன்யாவின் முகம் கதிரவனைக் கண்ட கமலமாக மலர்ந்தது.ஆனால் அதை அவன் காணாமல் மறைக்க நிமிர்ந்துப் பாராமல் இருந்தாள் அவள்.
இவ்வளவு நேரம் ஒளிக்குன்றி இருந்த தோழியின் முகம் மார்கஸின் குரல் கேட்ட மாத்திரத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பாக மாறிய விந்தையை ஆச்சரியமாக பார்த்தாள் அர்ச்சனா.
மறுபுறம் லேசாக பார்வையைத் திருப்பியப் போது மார்கஸும் சைதன்யாவை விழிங்கிவிடுபவன் போல பார்ப்பதை கண்டவள் இருவருக்கும் நடுவில் காதல் பூ மலர்ந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தாள்.இருவரும் பொருத்தமான ஜோடி என்பதில் அவளுக்கு எள்ளளவும் ஐயமில்லை.ஆனால் இருவரையும் பார்த்தால் காதலை பறிமாறிக் கொண்டவர்கள் போலத் தோன்றவில்லை.இதை விக்னேஷிடம் கூறி ஏதாவது செய்ய வேண்டும் என்று தீர்மானத்துக் கொண்டாள்.
“சைத்து!நீ செலக்ட் பண்ணிக்கிட்டு இரு…நா போயி என்னன்னு கேட்டுட்டு வரேன்”என்றபடி இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்று விட்டாள்.அவள் அகலவே காத்திருந்தவன் போல சைதன்யாவின் அருகிலிருந்த சேரில் அமர்ந்தவன்,
“என்ன ஹைட் அண்ட் சீக் விளையாட்டெல்லாம் பலமா இருக்கே?!!ம்… இருக்கட்டும்”என்று கண்ணால் சிரித்தவன் அங்கிருந்து எழுந்துச் சென்று விட்டான்.அவன் சென்ற திசையை இமைக்க மறந்துப் பார்த்திருந்தாள் அவள்.
இதை மறைவிலிருந்து பார்த்திருந்த அர்ச்சனா விக்னேஷிடம் அதை கூற விரைந்தாள்.
எல்லாருக்கும் பிடித்த வகையில் துணிமணிகள் தேர்ந்தெடுத்த பின் அங்கிருந்து வெளியேறிய போது ஷோகேஸுக்காக பொம்மை ஒன்றுக்கு அணிவித்திருந்த மயில் கழுத்து வண்ணப் புடவை சைதன்யாவின் கருத்தை வெகுவாக கவர்ந்து விட்டது.பொதுவாக அவளுக்கு புடவை நகை என்பதில் அவ்வளவு ஆர்வம் என்பதெல்லாம் இல்லை.உடுத்தும் உடைக்கு ஏற்றார்போல் காது கழுத்து கைகளில் மெல்லிய நகைகள் அலங்கரிக்கும்.
ஆனால் அன்று ஏனோ அந்த புடவையின் அழகு அவளுள் ஆசையை உண்டாக்கி விட்டது.லேசான புன்னகையோடு அதன் அருகே சென்று விலை சீட்டைப் பார்த்தவளின் முகம் வருத்தத்தில் கூம்பி விட்டது.சாமானியர்கள் எட்ட முடியா உயரத்தில் இருந்தது அதன் விலை.அவளால் முடியாது என்றில்லை.தந்தைக்கு ஒரு போன் செய்தால் போதும் செல்ல மகளின் ஆசையை உடனே நிறைவேற்றி விடுவார்.ஆனால் அவளுக்கே ஒரு புடவையை அவ்வளவு விலைக் கொடுத்து வாங்க சிறிதும் இஷ்டமில்லை.அதை தான் பார்க்கவேயில்லை என்று மனதிற்கு ஆணையிட்டவள் முன்னே சென்றுவிட்டிருந்த தோழியோடு சேர்ந்துக் கொண்டாள்.ஆனால் அவள் அந்த புடவையை ஆசைப் பொங்க பார்த்ததையும் பின் வேண்டாம் என சென்றதையும் இரு மயக்கும் விழிகள் பார்த்ததை அவள் அறியவில்லை.
அடுத்து நகைக் கடையை முற்றுக்கையிட்டனர் அவர்கள்.தாலி மெட்டி முதலியவைகளை பெரியவர்கள் தேர்ந்தெடுக்க ஃபேன்ஸி நகைகளை தோழிகள் இருவரும் அலசி ஆராய்ந்து வாங்கினர்.
“ஏய் சைத்து!நீ ஏதாவது வாங்கிக்கடி..”
“எனக்கு எதுக்குடி…முதல்லயே ஒரு வண்டி வாங்கி வச்சிருக்காங்க… வேண்டாம்னாலும் கேக்கல…ஒவ்வொன்னும் ஒரு டன் கனம்…நகைன்னா லைட்டா போட்ருக்கறதே தெரியாம இருக்கனும்… எனக்கு அதுதான் பிடிக்கும்”
“நீ ஒரு விசித்திர பிறவிடி”என்று தோழியை பெருமையாகப் பார்த்தாள் அர்ச்சனா.
சிறிது நேரம் விக்னேஷோடு அமர்ந்திருந்த மார்கஸ் பின்னர் மெல்ல அங்கிருந்து அகன்று கடையைச் சுற்றி வந்தான்.அங்கே ஓரிடத்தில் பெண்கள் இருவர் தங்கள் நகைகளைப் பெற்றுக் கொண்டு நகரவும் அந்த காலி இடத்தில் அமர்ந்தவன் எதிரே தெரிந்த நகையை விசித்திரமாகப் பார்த்தான்.ஓரளவு இந்தியா நகைகளை அவன் அறிந்தே இருந்தான்.ஆனாலும் இது என்னவென்று புரியவில்லை.ஆனால் மெல்லியதான அந்த அழகிய நகையை தன்னவளுக்காக வாங்கியே ஆக வேண்டுமென்று தோன்றிவிட்டது அவனுக்கு.என்ன வேண்டும் என்று கேட்ட கடை சிப்பந்தியிடம்,
“இது என்ன ஜ்வல்லரி?”என்று கேட்டான்.
அதற்கு அவர் கூறிய பதிலை மனதில் பதித்தவன்,
“இது எங்க போட்ற ஜ்வல்லரி?”என்ற கேள்விக்கு கிடைத்த பதிலில் அவன் கண்கள் சாஸராக விரிந்தது,
‘வெரி டேன்ஜரஸ் ப்ளேஸ்’என்று குறும்பாக எண்ணியவன்
“பேக் பண்ணுங்க”என்று கூறியவனின் இதழ்கள் மயக்கும் புன்னகையைச் சிந்தியது.
எல்லா பர்சேஸும் முடிந்த போது மதியம் மணி இரண்டு ஆகியிருந்தது.உணவிற்கு ஹோட்டலுக்கு செல்வதாக முடிவானது.ஹோட்டல் உள்ளே நுழையும் முன் வீட்டிலிருந்து அழைப்பு வரவே நின்று சிறிது நேரம் பேசிய சைதன்யா உள்ளே நுழைந்த போது அங்கே மார்கஸின் அருகில் தவிர வேறு எங்கும் உட்கார இடமில்லை.
இப்போது என்ன செய்வது என தயங்கி நின்ற சைதன்யாவை,
“சைத்து!அங்க என்னடி பண்ற?வந்து உட்காரு… இன்னும் என்னால காக்க முடியாது…மணி என்னாச்சு?”
“இல்ல அது வந்து…”
“இல்லையும் இல்ல நொல்லையும் இல்ல…நீ மார்கஸ் ஏதாவது நினைச்சுக்குவாரு தயங்குறியா? அப்படியெல்லாம் அவர் ஒண்ணும் நினைக்க மாட்டார்…இல்லையா மிஸ்டர் மார்கஸ்…?என் பிரண்ட் உங்க பக்கத்துல உட்கார்ந்தா உங்களுக்கு ஒண்ணும் அப்ஜக்ஷன் இல்லையே?”
“நோ நோ இட்ஸ் மை ப்ளஷர்”என்றான் ஹஸ்கி குரலில் சைதன்யாவைப் பார்த்தபடி.அவன் பார்வையும் குரலும் அவளை நாணத்தில் சிவக்க செய்தது.மெதுவாக புதுப்பெண் போல் தயங்கி தயங்கி வந்தவள் அவனருகே அமர்ந்தாள்.
புதுவகை உணவு வகைகளை கலகலப்பாக பேசிச் சிரித்தபடி உண்டனர்.அர்ச்சனா தன் கண்டுப்பிடிப்பை விக்னேஷிடம் கூறியிருந்ததால் அவனுக்கும் தங்கள் எதிரில் அமர்ந்திருந்த இருவரின் காதல் ஜாடைகள் தெளிவாக விளங்கியது.தெரிந்ததா என கண்களால் வினவிய தன் வருங்கால மனைவிக்கு ஆமென கண்களாலேயே பதிலளித்தான் அவன்.அவனுக்கும் இருவரின் ஜோடி பொருத்தம் மிகவும் அருமையானது என்று தோன்றியது.
அவர்கள் நால்வருமே வெறும் சிற்றுண்டி வகைகளையே ஆர்டர் செய்திருந்ததால் அது முடியவும் அவரவருக்கு பிடித்த ஜூஸை ஆர்டர் செய்தனர்.
தனக்கு மிகவும் பிடித்த மாதுளம் ரசத்தை பருகியபடி ஓரக்கண்ணால் மார்கஸ் அருந்தும் ஆப்பிள் ஜூஸை பார்த்தாள் சைதன்யா.அப்போது விக்னேஷின் நண்பன் ஒருவன் தூரத்திலிருந்து அழைக்கவே தன் வருங்கால மனைவியை அவனுக்கு அறிமுகப்படுத்த அர்ச்சனாவையும் அழைத்துச் சென்று விட்டான் விக்னேஷ்.அவர்கள் போவதை தலைத் திருப்பிப் பார்த்த சைதன்யா தான் கீழே வைத்த ஜூஸை பாராமலே எடுத்துக் குடித்தவள் அது ஆப்பிள் ஜூஸாக மாறியிருந்ததை அறிந்து திடுக்கிட்டாள்.
இது எப்படி மாறியது என அவள் பார்த்த போது அவளின் மாதுளம் ஜூஸை அமுதத்தை பருகுபவன் போல் கண்கள் சொருக குடித்துக் கொண்டிருந்தான் அந்த மாயக்கள்வன் மார்கஸ்.