அனுஸ்ரீ மற்றும் ரிஷி ஆகாஷின் திருமணத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருந்த நிலையில் உறவினர்களும், நண்பர்களும் புடைசூழ நாயகி இல்லம் முழுவதுமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

பெரியவர்கள் ஒரு புறம் பழங்கதை பேசி தங்கள் நினைவுகளை பரிமாறிக் கொண்டிருக்க மறுபுறம் இளையோர் வட்டம் கேலியூடும், கிண்டலூடும் தங்கள் நேரத்தை செலவழித்து கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட வசந்தபுரமே திருமணத்திற்கான அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்தது.

ஏற்கனவே பூந்தோட்டம் போல காட்சி அளிக்கும் நாயகி இல்லம் இப்போது வாயில் காவலன் போன்ற வாழை மரத்தோடு, மாவிலை தோரணங்களும், வண்ண வண்ண பூக்களின் தோரணங்களும் ஒன்று சேர ஒரு அழகிய நந்தவனமாய் காட்சி அளித்தது.

விடிந்தால் அனுஸ்ரீ மற்றும் ரிஷி ஆகாஷின் திருமணம் என்று இருக்க அனுஸ்ரீயின் நண்பர்கள் எல்லோரும் அவளை சூழ்ந்து கொண்டு அவளை ஒரு வழி செய்து கொண்டிருந்தனர்.

அவள் வெட்கப்பட்டு கொண்டே அவர்களது ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் சொல்ல அந்த இடமே சிரிப்பு சத்தத்தில் நிறைந்து போய் இருந்தது.

சந்தோஷமும், மன நிறைவும் சூழ தங்கள் வீட்டை பார்த்து கொண்டிருந்த தெய்வநாயகியின் மனமோ பல வருடங்களுக்கு முன்னர் நடந்த ராதாவின் திருமண நிகழ்வையும் ஒரு முறை எண்ணி பார்த்து கொண்டது.

அன்றும் இவ்வாறு தான் சொந்தங்களும், நட்பூக்களும் ஒன்று கூடி சந்தோஷமாக இருந்தனர்.

அதோடு ராதா மற்றும் முத்துராமனை எல்லோரும் மனதார வாழ்த்தி விட்டும் தான் சென்றனர்.

அப்படி இருந்தும் அவர்களது வாழ்க்கை இன்று வாலறுந்த காத்தாடியாக ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

அது போல இந்த திருமணத்திலும் எந்த மனக் கசப்புகளும் வந்து விடக்கூடாது என்று அந்த பெரியவர் உள்ளம் தினமும் வேண்டாத தெய்வங்கள் இல்லை.

தெய்வநாயகியின் வேண்டுதல்கள் பழிக்குமா? இல்லையா? அந்த கடவுளுக்கே வெளிச்சம்!

“அனு இன்னும் நீ தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்க? காலையில் நேரத்திற்கு கோவிலுக்கு போகணும்னு சொன்னேன் இல்லையா?” ராதா கையில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அனுஸ்ரீ தன் நண்பர்களோடு பேசிக் கொண்டு இருந்த அந்த அறையின் ஒரு ஓரமாக அடுக்கி வைத்து கொண்டே கேட்கவும்

அவரை பார்த்து புன்னகத்து கொண்டவள்
“இன்னும் ஒரு பத்து, பதினைந்து நிமிஷம் பேசிட்டு தூங்க போறேன்ம்மா” என்று கூறவும்

“சரி சரி ரொம்ப நேரம் எல்லோரும் தூங்காமல் இருக்காதீங்க காலையில் ஏழு மணிக்கு முதல் எல்லோரும் கோவிலுக்கு போகணும்” சற்று கண்டிப்போடு கூறி விட்டு ராதா சென்று விட அனுஸ்ரீயும் சிறிது நேரத்தில் தன் நண்பர்களோடு பேச்சை முடித்து விட்டு தன் அறையை நோக்கி சென்றாள்.

“அனு கையில் மருதாணி வைச்சுட்டியா?” என்றவாறே நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் படியேறி செல்ல போன அனுஸ்ரீயின் முன்னால் வந்து நிற்கவும்

புன்னகையோடு அவரை நிமிர்ந்து
பார்த்தவள்
“அதெல்லாம் எப்பவோ வைச்சுட்டாங்க சித்தி” என்றவாறே தன் கைகள் இரண்டையும் அவரின் புறமாக காட்டினாள்.

மருதாணி இலையை நன்றாக அரைத்து அதை அவள் கையில் டிசைனாக போட்டு இருக்க அவளது வெண்ணிற கையில் அந்த மருதாணி சிவப்பு நன்றாகவே ஊறிப் போய் இருந்தது.

“மருதாணி வைக்குறது முக்கியம் இல்லை அனும்மா அது எந்தளவுக்கு சிவப்பாக இருக்குங்குறது தான் முக்கியம்”

“அதெல்லாம் நல்லாவே சிவந்து போச்சு சித்தி நீங்க அக்காவோட முழங்கையில் பாருங்க ஒரு சின்ன மருதாணி துளி தவறுதலாக பட்டதற்கே செக்கச்செவல்னு சிவந்து போய் இருக்கு” அந்த நடுத்தர வயதுப் பெண்மணியின் கேள்விக்கு பதில் சொன்னவாறே அவரின் முன்னால் அனுஸ்ரீயின் அருகில் வந்து நின்றாள் தாமரை.

“அப்படியா?” ஆச்சரியமாக அனுஸ்ரீயின் கையை பிடித்து பார்த்தவர்

“அட ஆமா! நல்லா செக்கச்செவேல்னு தான் இருக்கு அப்போ அனுவோட வருங்கால புருஷன் ரொம்ப பாசம் தான் வைத்து இருக்கார் போலவே?” சற்று கேலி கலந்த தொனியில் கேட்க அந்த மருதாணி சிவப்பையும் தாண்டிய சிவப்பாக அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.

“சித்தி நீங்க இப்படி பேசி பேசியே அக்காவை மொத்தமாக சிவக்க வைச்சுட்டீங்க இங்க பாருங்க அக்கா மொத்தமாக மருதாணி பூசிய மாதிரி சிவந்து போயிட்டாங்க அப்புறம் நாளைக்கு கல்யாண மண்டபத்தில் எல்லோரும் அக்கா, மாமா லவ்ஸ் பத்தி தான் பேசப் போறாங்க” அனுஸ்ரீயின் கன்னத்தை பிடித்து ஆட்டியவாறே தாமரை கூறவும்

“போடி வாயாடி!” என அவள் கைகளை தட்டி விட்டவள் வெட்கத்தோடு புன்னகைத்து கொண்டே தன் அறைக்குள் ஓடிச்சென்று நுழைந்து கொண்டாள்.

அறைக்குள் வந்து நின்ற அனுஸ்ரீயின் மனமோ படபடவென அடித்துக் கொண்டது.

தன் மருதாணி போடப்பட்டிருந்த இரு கைகளையும் உயர்த்தி பார்த்தவள் ஒரு வித மோன நிலையில் தன் கட்டிலில் வந்து வீழ்ந்தாள்.

‘எல்லாம் கனவு மாதிரி இருக்கு! இப்போ தான் ரிஷி பொண்ணு பார்க்க வந்துட்டுப் போன மாதிரி இருக்கு ஆனா அதற்குள்ள கல்யாண நாளும் வந்தாச்சு நான் நினைக்காதது எல்லாம் தானாக நடக்குது இது தான் விதியா? ஐ திங்க் ஐ யம் சோ லக்கி!’
புன்னகையோடு அனுஸ்ரீ தன் மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க அவளுக்கு அப்போது தெரியவில்லை அவள் பார்க்க வேண்டிய, கடக்க வேண்டிய சோதனைகள் இன்னும் இருக்கிறது என்பது.

அதேநேரம் மறுபுறம் ரிஷியின் வீட்டிலோ பல வித சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று ரிஷியை ஒரு வழி செய்து விட்டு இருந்தனர் அவனது வீட்டினர்.

திருமணத்திற்கு இடைப்பட்ட இந்த நாட்களில் அவர்கள் இருவருக்கும் தங்கள் போனில் காலை எழுந்ததும் குட் மார்னிங் என்றும் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் குட் நைட் என்றும் சொல்வதற்கு தான் நேரம் கிடைத்தது.

அத்தனை தூரம் அவர்களை பேச விடாமல் செய்து இருந்தது நேரமும், விதியும்.


ரிஷி ஆகாஷ் மற்றும் அனுஸ்ரீயின் திருமணத்திற்கான நாள் இனிதாகப் புலர்ந்தது.

காலை நேரத்து செங்கதிரவன் தன் ஒளியை வானெங்கிலும் பரவ விட்டு கொண்டே மெல்ல மெல்ல வானில் உயர்ந்து கொண்டு இருக்க அனுஸ்ரீயோ தன் அறையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

“அனும்மா! அனு கதவைத் திறம்மா” தெய்வநாயகி அவளது அறைக் கதவை தட்டி அவளை விடாமல் அழைத்து கொண்டே இருக்க மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தவள் தன் கண்களை கசக்கி கொண்டே துயில் கலைந்து எழுந்து அமர்ந்தாள்.

கண்களை மூடி கடவுளை வேண்டிக் கொண்டவள் பின் எழுந்து சென்று தன் அறைக் கதவைத் திறக்க அவளை சற்று கண்டிப்புடன் பார்த்த தெய்வநாயகி
“அனும்மா! என்னம்மா இது? மணி ஆறாகப் போகுது இப்போ தான் எழுந்து வர்ற?” என்று கேட்கவும்

“நைட் தூங்க லேட் ஆச்சு பாட்டி அது தான் அசந்து தூங்கிட்டேன்” என்று கூற அவரோ அவளை முறைத்து பார்த்தார்.

“கோபம் வேண்டாம் பாட்டி பத்தே நிமிடத்தில் நான் ரெடி ஆகிடுவேன் நீங்க போங்க நான் போய் ரெடி ஆகிட்டு வர்றேன்” என்றவாறே மீண்டும் அனுஸ்ரீ தன்னறைக்குள் திரும்ப போக

அவள் கை பிடித்து தடுத்த தெய்வநாயகி
“நீ ஒண்ணும் பண்ண வேணாம் காலையில் மஞ்சள், சந்தனம் பூசி மஞ்சள் நீரால் குளிக்குறது தான் நல்லது கீழே வெளியில் எல்லாம் செஞ்சு வைத்து உனக்காக காத்துட்டு இருக்கோம் வா போகலாம்” என்று கூற

“என்ன?” அதிர்ச்சியாக விழிகள் விரித்து அவரைப் பார்த்தவள்

“அய்யோ பாட்டி! அதெல்லாம் வேண்டாம் நான் இங்கேயே குளிக்குறேனே ப்ளீஸ் பாட்டி” சற்று கூச்சத்தோடு கூறவும் மறுப்பாக தலை அசைத்த தெய்வநாயகி அவளை விடாமல் அந்த இடத்திற்கு கை பிடித்து அழைத்து கொண்டு சென்றார்.

மறுபுறம் ரிஷியின் வீட்டிலோ பத்மினி அழாத குறையாக அவனது அறையில் நின்று அவனை தூக்கத்தில் இருந்து எழுப்ப பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டு நின்றார்.

“டேய் ரிஷி! இன்னைக்கு உனக்கு கல்யாணம் டா அதற்கு கூட நேரத்துக்கு எழும்பாமல் இப்படி தூங்கிட்டு இருக்கியேடா! டேய் ரிஷி! எழுந்திருடா!” பத்மினி பேசியது எதுவுமோ அவன் செவிகளுக்கு எட்டவில்லை அந்தளவிற்கு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் ரிஷி.

“டேய் தடியா! ஒரு மணிநேரமா காட்டு கத்து கத்துறேன் கொஞ்சமாவது அசையுறானு பாரு! டேய் ரிஷி! எழுந்திரு! எழுந்திருடா! கொஞ்சம் கூட காதே கேட்காத மாதிரி படுத்து இருக்கான் எருமை மாட்டுக்கு மேல மழை பெய்யுற மாதிரி! டேய் ரிஷி! டேய்!” தன் பொறுமை எல்லாம் காற்றோடு காற்றாகிப் போய் இருக்க கோபத்தோடு ரிஷியை ஒரு வழியாக அடித்து எழுப்பிக் கொண்டு நின்றார் பத்மினி.

“ப்ச்! என்னம்மா இந்த மிட் நைட்ல போய் எழுப்புற?” சலித்து கொண்டே ரிஷி கேட்கவும்

அவனது தலையில் செல்லமாக தட்டியவர்
“ஏன் சொல்ல மாட்ட? காலையில் இதற்கு முதல் ஆறு மணிக்கு எழுந்து இருந்தால் தானே தெரியும்? சூரியன் எப்படி இருக்கும்னு ஆச்சும் தெரியுமா?” என்று கேட்கவும்

“அம்மா!” என்றவாறே அவரை நிமிர்ந்து பார்த்தான் ரிஷி.

புன்னகையோடு அவனைப் பார்த்தவர்
“பின்ன என்னடா? இது உனக்கு மிட் நைட்டா? போய் சீக்கிரமாக ரெடி ஆகிட்டு வா முன்னாடியே சொல்லி இருந்தேன் தானே இன்னைக்கு எட்டு மணிக்கு முஹூர்த்தம் ஆறு மணிக்கே கோவிலுக்கு போகணும்னு” என்ற கூற

“ஆமா ஆமா சொன்னீங்க சொன்னீங்க” என்றவாறே கட்டிலில் இருந்து கீழிறங்கி நின்றவன்

“ரிசப்சன் மட்டும் ஈவ்னிங் டைம் வைப்பாங்க கல்யாணம் மட்டும் காலங்கார்த்தாலேயே வைக்கணுமா?” என்று முணுமுணுத்துக் கொண்டே குளியலறையை நோக்கி நடந்து சென்றான்.

“என்ன அங்கே முணுமுணுப்பு?” சற்று சத்தமாக பத்மினி கேட்கவும்

“இதோ ரெடி ஆகிட்டேன்ம்மா” என்றவாறே தன் காலை தரையில் உதைத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் ரிஷி ஆகாஷ்.

சிரித்துக் கொண்டே தன் மகனை பார்த்து கொண்டு நின்ற பத்மினி
“இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கான் கடவுளே! என் பையனுக்கு இனி எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கோப்பா” என மனதிற்குள் வேண்டிக் கொண்டு நிற்க

கடவுளோ
“இனி பிரச்சினை எல்லாம் உன் பையனால் தானே!” என்றெண்ணி புன்னகத்து கொண்டார்.

கீழே ஹாலில் கோவிலுக்கு கொண்டு செல்வதற்கான பொருட்களை எல்லாம் ரிஷியின் வீட்டினர் தயார் படுத்திக் கொண்டு இருக்க வெண்ணிற பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து கம்பீரமாக படியிறங்கி நடந்து வந்த தன் மகனை பார்த்து கண் கலங்கி நின்றார் பத்மினி.

எத்தனை வருடங்களாக இந்த தருணத்தை காண அவர் தவியாக தவித்து இருப்பார்.

தன் நெடு நாள் ஆசை நிறைவேறப் போகும் சந்தோஷத்துடன் பத்மினி நின்று கொண்டிருக்க ரிஷி புன்னகையோடு அவரருகில் வரவும் அவரோ பாசத்துடன் அவனது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தார்.

“அம்மா நோ செண்டிமெண்ட்” புன்னகையோடு அவர் கைகளை அர்ச்சனா ஆதரவாக அழுத்தி கொடுக்க பதிலுக்கு அவரைப் பார்த்து புன்னகத்து கொண்டவர்

“இது ஆனந்த கண்ணீர் வேற டிப்பார்ட்மெண்ட்” என்றவாறே தன் கண்களை துடைத்து விட்டு கொண்டார்.

“சரி சரி இப்படியே பேசிட்டே இருந்தால் நேரம் போயிட்டே இருக்கும் சீக்கிரம் கிளம்புங்க கோவிலுக்கு போய் மீதியை பேசிக்கலாம்” சுந்தரமூர்த்தி எல்லோரையும் விரைவுபடுத்த அவரைப் பார்த்து சரியென்று தலை அசைத்தவர்கள் கோவிலை நோக்கி செல்ல தயாராகினர்.

ரிஷியின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் வசந்தபுரம் பிள்ளையார் கோவிலை நோக்கி புறப்பட்டுச் செல்ல மறுபுறம் நாயகி இல்லத்தில் அனுஸ்ரீயை திருமணத்திற்காக அலங்கரித்து கொண்டு இருந்தனர்.

பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறம் கலந்த பட்டு சேலை அணிந்து மிதமான ஒப்பனையோடு தங்க ஆபரணங்களின் ஜொலிப்பும் ஒன்று சேர நண்பர்களோடு சிரித்துப் பேசி கொண்டே நடந்து வந்த தன் பேத்தியை மனம் குளிர பார்த்து கொண்டு நின்றார் தெய்வநாயகி.

இப்போது தான் ரோஜா குவியல் போல அனுஸ்ரீயை தன் கையில் ஏந்தியது போல இருந்தது அவருக்கு.

அதற்குள் இருபத்தைந்து வருடங்கள் போய் விட்டது என்பதை நினைக்கும் போதே அவருக்கு அத்தனை மலைப்பாக இருந்தது.

“என்ன பாட்டி யோசனை எல்லாம் பலமாக இருக்கு?” அனுஸ்ரீயின் கேள்வியில் அவரைப் பார்த்து புன்னகத்து கொண்டவர்

“ஒண்ணும் இல்லை டா அனும்மா உன்னை இப்போ தான் சின்ன குழந்தையாக கையில் தூக்குன மாதிரி இருக்கு அதற்குள்ள இருபத்தைந்து வருஷம் போயிடுச்சேனு நினைத்தேன்” என்று கூறவும்

“பாட்டி!” என்றவாறே புன்னகையோடு அவரை அணைத்துக் கொண்டாள் அனுஸ்ரீ.

“பாட்டி பேத்தி பாசம் முடிந்தால் கோவிலுக்கு போகலாமா? அப்புறம் மாப்பிள்ளை பொண்ணைத் தேடி இங்கே வந்துடப் போறாங்க” ராதா புன்னகையோடு அவர்கள் முன்னால் வந்து நிற்க

“அம்மா!” என்றவாறே அவரை பார்த்து வெட்கத்தோடு புன்னகைத்து கொண்டவள் தெய்வநாயகியின் தோளில் மேலும் வாகாக சாய்ந்து கொண்டாள்.

“சரி ராதா எல்லாம் ரெடி கிளம்பலாமா?” முகத்தில் பூத்திருந்த வியர்வை துளிகளை துடைத்து விட்டபடியே முத்துராமன் அந்த இடத்திற்கு வந்து சேர

அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவர்
“நாங்களும் ரெடி தான் வாங்க கிளம்பலாம்” என்றவாறே அவரை பார்த்து புன்னகத்து கொண்டார்.

“சரி வாங்க கிளம்பலாம்” தெய்வநாயகி அனுஸ்ரீயின் கை பிடித்து அழைத்து கொண்டு முன்னே செல்ல ராதா மற்றும் முத்துராமன் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.

அன்று இறுதியாக தோட்டத்தில் வைத்து பேசியதன் பிறகு ராதா மற்றும் முத்துராமன் இருவருக்கும் இடையில் ஒரு சுமுகமான நிலையே நிலவி வந்தது.

ஒருவரை ஒருவர் பார்த்து இயல்பாக புன்னகத்து கொள்வதும் உதவி தேவைப்படும் நேரங்களில் உதவிக் கொள்வதும் என்று ஒரு இனிய உறவு அவர்கள் இடையில் வளர்ந்து கொண்டு இருந்தது.

இத்தனை நாட்களாக அனுஸ்ரீ எதை மனதளவில் ஏங்கி கொண்டு இருந்தாளோ அது இப்போது இனிதே அவளது பெற்றோருக்கு இடையில் உருவாகி இருந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தோஷமான மனநிலையில் கோவிலுக்கு வந்து சேர ரிஷி ஆகாஷ் தன்னளவளின் வருகைக்காக ஆவலுடன் கோவில் சந்நிதானத்தில் காத்து நின்றான்.

“பொண்ணு வீட்டுக்காரங்க வந்துட்டாங்க” ரிஷியை கடந்து சென்ற நபர் ஒருவர் கூறி செல்ல ஆவலுடன் அனுஸ்ரீ வரும் வழியை பார்த்து கொண்டு நின்றான் அவன்.

மஞ்சள் பூசி இருந்த அவள் தேகத்தில் காலை கதிரவனின் ஒளி பட்டு தெறிக்க தங்க ஆபரணங்களின் ஜொலிப்பும் ஒன்று சேர அந்த பட்டு சேலை நிறம் அவளுக்கு வாகாகப் பொருந்த தங்க சிலையென நடந்து வந்த தன் மனம் கவர்ந்தவளை விழி விரித்து ஆசையாக பார்த்து கொண்டு நின்றான் ரிஷி ஆகாஷ்.

“டேய்! இன்னும் கொஞ்ச நேரத்தில் அனுஸ்ரீயை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் போறாங்க கொஞ்சம் கண்ணை சிமிட்டிடாவது பாருடா” சந்துரு ரிஷியின் காதில் கூறவும்

சமாளிப்பது போல அவனைப் பார்த்து புன்னகத்து கொண்டவன்
“நான் என் வேலையை பார்க்குறேன் உனக்கு என்னடா? ஏன் நீயும் வேணும்னா உனக்கு ஏற்ற ஜோடியை பார்த்துக்கோ” என்று விட்டு மீண்டும் அனுஸ்ரீயை பார்க்கும் தன் படலத்தை தொடர்ந்தான்.

சந்துருவோ தன் மனதிற்குள்
‘ எனக்கு ஏற்ற ஆளா?’ யோசனையோடு சுற்றிலும் திரும்பி பார்க்க அவனது பார்வையோ தாமரையின் முகத்தில் வந்து நிலை குத்தி நின்றது.

பார்ப்பதற்கு சிறு பெண் போல இருந்தாலும் அவளது பேச்சும், சிரிப்பும் அங்கிருந்த எல்லோரையும் திரும்பி பார்க்க செய்தது என்னவோ உண்மைதான்.

ஆரஞ்சு வர்ண பட்டு சேலை அணிந்து அதே நிறத்தில் ஜிமிக்கி ஒற்றை பின்னலிட்ட கூந்தலில் மல்லிகை சரம் என நடந்து வந்தவளை சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்றான் சந்துரு.

தன் கையில் இருந்த வளையல்களை காட்டி தன் அருகில் இருந்தவர்களுக்கு ஏதோ கூறிய வண்ணம் அவள் நடந்து வர அவன் மனசாட்சியோ
‘டேய் சந்துரு! என்னடா பண்ணுற?’ என்று கேள்வி எழுப்ப அவசரமாக தன் தலையை உலுக்கி தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவன் புன்னகையோடு தன் தலையை அழுந்த கோதிக் கொண்டே தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் திருமணத்திற்கான சடங்குகள் எல்லாம் ஆரம்பித்து விட ரிஷி மற்றும் அனுஸ்ரீ அந்த சடங்குகளை எல்லாம் இனிதே செய்து கொண்டு இருந்தனர்.

அனுஸ்ரீயின் பார்வை அடிக்கடி தன் பெற்றோரின் புறம் திரும்பி செல்வதைப் பார்த்து கொண்டு நின்ற தெய்வநாயகியின் மனம் அவரையும் அறியாமல் அவரை ராதா மற்றும் முத்துராமனின் திருமண வாழ்வை நோக்கி இழுத்து சென்றது.

“சேச்சே! அப்படி எல்லாம் ஆகாது” தனக்கு தானே அவர் ஆறுதல் கூறி கொண்டு இருந்தாலும் அவர் மனம் ஏனோ பதட்டம் கொள்ளாமல் இல்லை.

அனுஸ்ரீயும் அந்த நேரத்தில் அதே மனநிலையில் தான் இருந்து கொண்டிருந்தாள்.

என்னதான் ரிஷியுடனான வாழ்க்கையை எண்ணி அவள் மனம் ஒரு புறம் சந்தோஷம் கொண்டு இருந்தாலும் மறுபுறம் அந்த வாழ்க்கையை எண்ணி அவள் மனம் அச்சம் கொள்ளாமல் இல்லை.

பதட்டத்துடன் அவள் அமர்ந்திருக்க அவள் பதட்டத்தை உணர்ந்தாற் போல அவள் கைகளை ஆதரவாக பற்றி கொள்ள அவள் கேள்வியாக அவனை திரும்பி பார்த்தாள்.

ரிஷி அவளைப் பார்த்து புன்னகை செய்தவாறே
“நோ டென்ஷன்” என்று கண் சிமிட்டி கூற பதிலுக்கு அவனை பார்த்து புன்னகை செய்தவள் தன் பதட்டத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் மறைத்து கொண்டாள்.

அய்யர் கொடுத்த தாலியை வாங்கி கொண்ட ரிஷி புன்னகையோடு அனுஸ்ரீயின் கழுத்தில் கட்ட உறவினர்களும், நண்பர்களும் அர்ச்சதை தூவி வாழ்த்த அந்த நொடி முதல் அனுஸ்ரீ ரிஷியின் அனுஸ்ரீ ஆகிப் போனாள்.

“இனி எல்லாம் உனக்காக!” ரிஷி அனுஸ்ரீயின் காதில் கூற புன்னகையோடு அவள் அவனை நிமிர்ந்து பார்த்த நொடி அவள் கையை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து கொண்டான் ரிஷி.

எல்லோர் மனமும், முகமும் சந்தோஷத்தில் நிறைந்து போய் இருக்க அனுஸ்ரீயின் மனம் மாத்திரம் ஒரு வித பதட்டத்துடன் இருந்து கொண்டு இருந்தது.

தன் முகத்தை என்ன தான் அவள் இயல்பாக வைத்து கொண்டு இருக்க முயற்சி செய்தாலும் எப்போதோ ஆரம்பித்த அந்த பய உணர்வு இப்போது அவள் முன்னால் பூதாகரமாக வியாபித்து நின்றது.

‘இல்லை நான் பயப்படுற மாதிரிஎதுவும் ஆகாது’ பலவாறாக சமாதானப்படுத்தி தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அனுஸ்ரீ நினைத்து கொண்டு இருக்க அவள் சந்திக்க காத்திருக்கும் நிகழ்வுகளோ அவள் நிலையை எண்ணி பரிதாபம் கொண்டது…….

error: Content is protected !!