NPG-19

கீதாஞ்சலி – 19

தமிழ் நாடு – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள சிம்மவரம் என்ற ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது ராகுலுடைய வாகனம். சிம்மவரம் ஜீவாவின் சொந்த ஊர்.

ராகுலின் கைகளில் பறந்து கொண்டிருந்தது அந்தக் கார். அவ்வளவு வேகம். எப்பொழுதும் ராகுல் வேகத்தை விரும்புபவன் தான். அவன் வேகத்திற்கு அவனுடையே ‘கோர்வெட்’ சாட்சி.

ஆனால் எவ்வளவு வேகம் இருந்தாலும் அதில் ஒரு கவனம் இருக்கும். தாளம் தப்பாத நிதானம் இருக்கும். இப்படிக் கண்மூடித்தனமாக என்றுமே வாகனத்தை விரட்டியதில்லை ராகுல்ரவிவர்மன்.

இன்றைய அவனுடைய வேகத்திற்குக் காரணம் அவனுடைய குட்டி தேவதை நிரஞ்ஜலா. காரின் வேகத்திலேயே அவன் இதயமும் மத்தளம் கொட்டிக் கொண்டிருந்தது.

 வக்கீல் நோட்டீஸ் குறித்த விபரம் அறிந்தவுடன் முதலில் பேசித் தீர்க்கவே முடிவு செய்தான் ராகுல். ருத்ரமூர்த்தியும் கூட ஒரு வழக்கறிஞராக இருந்து அதைத் தான் வலியுறுத்தினார். முதலில் தங்களிடம் பணம் வாங்கிய அந்த ஜீவாவின் சித்தப்பாவைத் தான் தேடிப் பிடித்தான் கௌஷிக் அலைபேசி மூலமாக.

அந்த மனிதரிடம் தான் இப்பிரச்சனையைத் தீர்க்க முதலில் வழி கேட்கப்பட்டது. அவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றுத் தெரிந்து கொள்ளலாம் என்று ருத்ரமூர்த்தி வினவியதால் வந்த எண்ணம் அது. அந்த மனிதரோ,

“அண்ணனுக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சு போச்சுங்க. நானே எங்க, நான் உங்க கிட்ட கை நீட்டிக் காசு வாங்குனதுத் தெரிஞ்சிடுமோன்னு பயத்துலேயே சுத்திக்கிட்டு இருக்கேன்.” என்றார்.

“அப்போ, வாங்கின காசைத் திருப்பித் தரப் போறீங்களா?” நக்கலாகக் கேட்டான் கௌஷிக். போன் லௌட் ஸ்பீக்கர் மோடில் இருந்ததால் ராகுல், அமிர்தா, கௌஷிக், ருத்ரமூர்த்தி நால்வருமே அவர் பேசுவதைக் கேட்டு கொண்டுதான் இருந்தார்கள்.

“ஷ் கௌஷிக், நீ சும்மா இரு” என்று கௌஷிக்கை அடக்கிய ராகுல்,

“நிலா பாவம், சின்னக் குழந்தை. அவளுக்கு அமிர்தாவையும் எங்களையும் தவிர வேற யாரையும் தெரியாது. திடுதிப்புன்னு வந்து நான் தான் தாத்தா, நான் வளர்த்துக்குறேன்னு சொன்னா குழந்தை என்ன பண்ணுவா பாவம். அவளைப் பொறுத்த வரை அவர் புது மனுஷன் தானே? ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” தன்னிலை மறந்து அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் மெல்லிசைக்காரன்.

“ஏற்கனவே நான் உங்களுக்குப் பணம் குடுத்திருக்கேன். அது பத்தலையா? இன்னும் நீங்க எவ்வளவு கேட்டாலும் நான் குடுக்கத் தயாரா இருக்கேன். நீங்கக் கொஞ்சம் உங்க அண்ணன்கிட்டப் பேசிப் பாருங்க” அமிர்தாவின் மறுப்பையும் முறைப்பையும் கூடக் கண்டு கொள்ளாமல் அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“நீங்க எத்தனைக் கோடி கொட்டிக் குடுத்தாலும் அதை அனுபவிக்க நான் உயிரோட இருக்கணுமில்ல? ஆளை விடுங்க சாமி. நீங்களாச்சு எங்க அண்ணனாச்சு. நீங்களே நேரடியா பேசிக்கோங்க. இதுக்கும் மேல எனக்கு போன் எல்லாம் பண்ணாதீங்க.” என்று ஈவு இரக்கமின்றிக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தும் விட்டார்.

“ஒன்னா ரெண்டா முழுசா பத்து கோடி வாங்கிட்டு எப்படிப் பேசுறான் பார்த்தியா? இவனை எல்லாம்…” பற்களைக் கடித்துக் கொண்டு மீண்டும் கௌஷிக் அவருக்கு அழைப்பெடுக்கப் பார்க்க,

“விடு கௌஷிக். இனிமே நீ எத்தனை தடவை கூப்பிட்டாலும் அந்தாளு போன் எடுக்க மாட்டான். நாம அந்த ஜீவாவோட அப்பாகிட்டயே பேசிடுவோம்.” ராகுல் சொல்ல,

“ஹ்ம்ம் ஆனா அவர் காண்டெக்ட் நம்பர்…” என்று கௌஷிக் யோசனையோடு அந்த வக்கீல் நோட்டீசைப் பார்த்தான்.

“நான் பேசலாம்னு சொன்னது போன்ல இல்ல, நேர்ல. நானே போறேன். அதுவும் இப்பவே கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டுக் கையோடு கிளம்பியும் விட்டான் ராகுல்.

“ராகுல், இப்பத் தானே ய்யா ஒரு கண்டத்துல இருந்துத் தப்பி வந்திருக்க. மறுபடியும் ஆபத்தைத் தேடிப் போறேங்குறியே? நீ இன்னும் பயணக் களைப்புத் தீரத் தூங்க கூட இல்லையே? அதுக்குள்ள எதுக்குப்பா அங்க போகணும்? எதுவா இருந்தாலும் நாம கோர்ட்ல வைச்சே பார்த்துக்கலாம்ப்பா” என்று சத்யவதி புலம்புவதையோ அமிர்தாவின் கெஞ்சலையோ எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை ராகுல்.

அவன் மனம் முழுக்க குழந்தை நிலாவைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தது. என்ன ஆனாலும் சரி, உயிரே போனாலும் நிலாவை அவர்களிடம் தரவே மாட்டேன் என்று மனதோடு உறுபோட்டுக் கொண்டே இருந்தான்.

ராகுல் கிளம்பவும் கௌஷிக்கும் உடன் கிளம்பினான். அவ்வளவு தூரம் ராகுலைத் தனியே அனுப்பி வைக்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. 

“கல்யாணத் தேதியைப் பக்கத்துல வைச்சுக்கிட்டு இவ்வளவு தூரம் போகக் கூடாதுப்பா” என்ற அனைவரின் கருத்தையும் கௌஷிக்கும் காது கொடுத்துக் கேட்கவில்லை. 

நண்பர்கள் இருவரும் ஒரே பிடிவாதமாக நின்றுக் கிளம்பிவிட்டார்கள். ட்ரைவரைக் கூடத் தவிர்த்து விட்டுத் தானே காரைக் கிளப்பினான் ராகுல்ரவிவர்மன். கார் வீட்டிலிருந்து கிளம்பிய வேகத்திலேயே அவனுடைய ரௌத்திரம் தெரிந்தது.

இப்பொழுது நண்பர்கள் இருவரும் சிம்மவரத்திற்குள் நுழைந்திருந்தார்கள். உடனடியாக ஜீவாவின் தந்தையைத் தொடர்பு கொள்ள முதலில் அவர்களுடைய ரைஸ் மில்லில் வந்து பார்த்துக் கொள்ளுமாறு சொல்லப்பட்டது.

ரைஸ்மில்லைச் சென்றடைய, “ஐயா இங்க இல்லையே. கரும்புக் காட்டுக்குப் போயிட்டாங்க” என்று பதில் வந்தது.

கரும்புக் காட்டுக்கும் சென்று பார்க்க, “வயக்காட்டுல இருப்பாங்க” என்று பதில் வந்தது. 

வயக்காட்டிலிருந்துத் தென்னந்தோப்புக்கும் அதன் பிறகு மாந்தோப்புக்கும் அலைக்கழிக்கப்பட்டுப் பின்  கோடொவுனுக்கு செல்லுமாறுக் கூறப்பட்டது.  

இப்படியே அந்த ஊரையே முழுக்க சுற்றி வந்த பிறகு, “ஐயா உங்களை வீட்ல வந்துப் பார்க்க சொன்னாங்க.” என்று ஒருவன் இவர்களைத் தேடி வந்து அழைத்துச் சென்றான்.

“என்னடா இது பார்க்குறதுக்கே இப்படி அலைய விடுறாங்க” களைத்துப் போனான் கௌஷிக்.

“வேணும்னு தான் பண்றாங்க. அலைக்கழிச்ச மாதிரியும் ஆச்சு. பார்த்தியா இந்த ஊர்ல நான் தான் பெரிய ஆள்னு காமிச்ச மாதிரியும் ஆச்சு. அதுக்குத்தான் இவ்வளவும்.

இவங்களோட அந்த ஐயாவுக்கு, அதான்… ஜீவாவோட அப்பாவுக்கு நாம வந்திருக்குற விஷயம் எப்பவோ தெரிஞ்சிருக்கு.  அவர் உத்தரவு படிதான் இதெல்லாம் நடக்குதுன்னு நினைக்கிறேன். பார்ப்போம். வீட்லயாவதுப் பார்க்க முடியுதான்னு..” ஒரு பெருமூச்சுடன் காரை ஜீவாவின் வீட்டை நோக்கிச் செலுத்தினான் ராகுல்.

அதற்கு மேலும் அவர்களை அலைக்கழிக்காமல் வீட்டில் வைத்து அவர்களை அமர்த்தலாக எதிர்கொண்டார் ஜீவாவின் தந்தை மலையமான் சக்கரவர்த்தி ……..

பேரில் கூட ஜாதியைச் சேர்த்து வைத்திருந்தார்.

“தம்பி ரெண்டு பேரும் யாரு? என்ன விஷயமா என்னைப் பார்க்க இம்புட்டுத் தொலைவு வந்திருக்கீக?” தெரியாததைப் போலவே வினவினார்.

வீட்டிற்குள் வந்தவர்களை அமரவும் விடாமல் கேள்வியைத் தொடுத்திருந்தார்.

“சார் அந்த வக்கீல் நோட்டீஸ் விஷயமா..” கௌஷிக் ஆரம்பிக்கும் போதே கை நீட்டிக் தடுத்துவிட்டு,

“சுத்த கூறு கெட்ட பயலுகளா இருப்பீய போல. முதல்ல நீங்க யாரு இன்னாருன்னு சொல்லுங்க. அப்புறம் விஷயத்துக்கு வாங்க” நக்கல் தெறித்தது அவர் குரலில்.

இப்பொழுது ராகுலே தொடர்ந்தான். “ஐயா என் பேரு ராகுல்ரவிவர்மன். இசையமைப்பாளரா இருக்கேன்.”

“ஓ… கூத்தாடிக் கூட்டமா” ராகுல் இழுத்து வைத்தப் பொறுமையுடன் பேசிக் கொண்டிருக்க அந்த மனிதரோ அதை விரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தார்.

“நான் கூத்தாடிக் கூட்டமா இல்லையாங்குறதைப் பத்திப் பேச நான் இங்க வரலை. நான் பேச வந்தது உங்கப் பேத்தி நிரஞ்ஜலாவைப் பத்தி.” ராகுல் சொல்ல,

பதட்டமாகக் காதை நீவி விட்டு கொண்டே, “என்ன சொன்னீங்க?” என்று கேட்டார் அந்தப் பெரிய மனிதர்.

“உங்கப் பையன் ஜீவாவோட குழந்தையைப் பத்திப் பேச வந்திருக்கேன்னு சொன்னேன்.” உரக்கக் கூறினான் ராகுல்.

“இந்தா இப்ப சொல்லிப்புட்டீங்கல்ல, உங்க புள்ள ஜீவாவோட பிள்ளைன்னு. கேட்கும் போதே ஏதோ அசிங்கத்தை மிதிச்ச மாதிரி அருவருப்பா இருக்கு” சொல்லிவிட்டு முகத்தையும் வேறு சுளித்துக் கொண்டார்.

“ஆமா ஜீவா என் மகன் தான். என்னோட வாரிசு. என்னோட சாதி. ஆனா அவன் வாரிசு என் சாதி இல்லையே. இருந்திருந்து இப்படி ஒரு ஒழுக்கம் கெட்ட புள்ளையை இல்ல பெத்து வளர்த்து வைச்சிருக்கேன்.

அதான், என் பரம்பரையே என்னோட முடிஞ்சாலும் பரவாயில்ல என் சாதிக்கு ஒரு இழுக்கு வந்துடக் கூடாதுன்னு, மொத்தமா கருவறுத்துட்டு வாங்கடான்னு ஆளை அனுப்பி வைச்சா மிச்சம் வைச்சுட்டு வந்திருக்கானுங்க. இனி யாரை நம்பியும் பிரயோசனமில்ல, நானே காரியத்துல இறங்கலாம்னு அந்த வக்கீல் நோட்டீஸ்சை அனுப்பி வைச்சேன்.”

“நீங்க இப்பப் பேசுறதுக்கும் அந்த நோட்டீஸ்ல இருக்குறதுக்கும் சம்பந்தமே இல்லையே.” ராகுல் கேட்க,

“யார்றா இவன்? பின்ன உண்மையைச் சொல்லியா வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடியும்?” நக்கல் சிரிப்போடு அவர் சொல்லக் கூட இருந்த கூட்டம் கைக் கொட்டிச் சிரித்தது.

“இவ்வளவு வெறுப்பு இருக்குறவர் எதுக்குக் குழந்தையைக் கேட்குறீங்க?” புரியவில்லை ராகுலுக்கு.

“அதுவா, எங்க ஊர்ல தண்ணிப் பஞ்சம் சாஸ்தி. அங்கங்க தண்ணிக்கோஸ்ரம் போர்வெல் போட்றுவானுங்க. ஆனா தண்ணீ வரலைன்னா அதை மூட மாட்டானுங்க. இப்ப என்னடான்னா அந்தக் குழி எல்லாம் காவு கேட்குது. அதுக்குத்தான் அந்த வக்கீல் நோட்டீஸ்சு. இப்பப் புரிஞ்சுதா?” சொல்லும் பொழுதே கொடூரமாக மாறியிருந்தது அவர் முகம்.

அவர் சொல்லி முடித்தது தான் தாமதம் ராகுல் பாய்ந்து சென்று அவர் சட்டையைப் பிடித்துவிட்டான். அந்த மனிதரின் அடிப்பொடிகள் எல்லாம் ராகுல் மீது பாய அந்த இடமே ரணகளமாகிப் போனது. ஒருவழியாக ராகுலிடமிருந்து அந்த மனிதரை பிரித்தெடுத்துக் காப்பாற்றிவிட்டு ராகுலைப் பின்னுக்கு இழுத்து வந்தான் கௌஷிக்.

“சேச்சே.. நீயெல்லாம் ஒரு மனுஷனா? சின்னக் குழந்தைய்யா அவ. அவளைப் போய் போர்வெல் குழிக்குள்ள…

யாரோ ஊர் பேர்  தெரியாதவங்கக் குழந்தை தவறி விழுந்துட்டாலே  மனசெல்லாம் பதறிப் போயிடும். நீ என்னடான்னா உன் சொந்தப்…” கௌஷிக்கின் பிடியிலிருந்து திமிறிக் கொண்டே கத்தினாலும் மறுபடியும் அந்த வார்த்தையைச் சொல்ல ராகுல் பிரியப்படவில்லை.

பின், கௌஷிக்கின் பிடியிலிருந்துத் தன்னை விடுவித்துக் கொண்டவன் நெற்றியை ஒற்றைக் கையால் அழுந்தப் பற்றிக் கொண்டு கண் மூடி நின்றுத் தன்னைக் கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டான். இப்பொழுது நிதானமாக ஆனால் பொட்டில் அடித்தாற் போல் பேச்சு வந்தது ராகுலிடமிருந்து. மரியாதையான அழைப்புகளை எல்லாம் கை விட்டிருந்தான்.

“நீ உன் அம்மா கையால சாப்பிட்டு எத்தனை வருஷம் இருக்கும்? இப்ப அப்படிச் சாப்புடணும்னு என்னைக்காவதுத் தோனியிருக்கா உனக்கு?

தோனும் கண்டிப்பா தோனும். பொண்டாட்டி புள்ள ரெண்டு பேருமே இல்லாம தனி மரமா நிக்கிறீல்ல. அப்போ கண்டிப்பா அம்மா நினைப்பு வரும்.

உனக்கு ஒன்னு தெரியுமா? நான் தினம் தினம் என் அம்மா கையால சாப்பிடுறேன். எப்படித் தெரியுமா? தினமும் ராத்திரி என் மக தான் எனக்கு சாப்பாடு போடுவா. ஊட்டி விடுவா. வெறும் வெள்ளை சாதம் கூட என் மக கை பட்டதும் அமிர்தமா மாறிப் போயிடும்ய்யா.” சொல்லும் பொழுதே மகளின் நினைவில் முகம் மலர்ந்து போனது.

“ஆமா… தலைவலி, காய்ச்சல் வந்தா என்ன பண்ணுவ? இந்தத் தடித் தாண்டவராயனுங்க பிடிச்சு விடுவானுகளோ?” சுத்தி நின்ற ஆட்களைக் காட்டிப் பேசியவன் ஒரு ஏளனச் சிரிப்போடு,

“இன்னும் ஜாஸ்தியா தான் வலிக்கும். ஆனா எனக்குச் சின்ன தலைவலின்னாலும் என் மக பதறிப் போயிடுவா. அவ குட்டிக் கையால நெத்தியைத் தடவி விடுவா பாரு, இந்த ஆயுசுக்கும் இனி தலைவலியே வராதுன்னு தோனும்.

இதெல்லாம் அனுபவிக்க ஒரு குடுப்பினை வேணும்.” சட்டையின் கைப்பகுதியை முழங்கை வரை மடித்து விட்டு கொண்டவன் தீவிரமான முகபாவத்தோடுத் தொடர்ந்தான்.

“நான் பண்ணத் தப்பு என்ன தெரியுமா? முதல் தப்பு, உன்னையும் ஒரு மனுஷனா நினைச்சது. ரெண்டாவது பெரிய தப்பு என் பொண்ணை, என்னோட தேவதையை, உன் பேத்தின்னு சொன்னது. சொன்ன வாயை டெட்டால் ஊத்திக் கழுவணும்.

இப்ப சொல்றேன், நல்லா கேட்டுக்கோ. நிலா என் பொண்ணு. என் கூடத்தான் இருப்பா. அவளை ஒரு நாள் இல்ல, ஒரு நிமிஷம், ஏன் ஒரு நொடி கூட உன் கிட்ட விட மாட்டேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.

அது கோர்ட் கேஸ்சா இருந்தாலும் சரி, இல்ல மோதிப் பார்க்குறதா இருந்தாலும் சரி. ரெண்டுக்கும் நான் ரெடி.

கோர்ட் கேஸ்னா எத்தனை கோடி வேணும்னாலும் நான் செலவு பண்ணத் தயார். நீ பத்து வருஷத்துல சம்பாரிக்குறதை நான் ரெண்டே படத்துல சம்பாரிச்சிடுவேன்.

இல்ல, ஆளுங்களை விட்டு அடிக்கப் போறியா? தாராளமா அனுப்பி வை. நான் நாளைக்கு வரை இங்க தான் இருப்பேன். இந்த ஊருக்குப் பக்கத்துல இருக்குற டவுன்ல தான் ரூம் போட்டு தங்கி இருப்பேன். உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ.”

சொல்லிவிட்டு விறுவிறுவென்று கௌஷிக்கையும் அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டான் ராகுல்.

புயலடித்து ஓய்ந்ததைப் போல் இருந்தது. சிம்மவரத்திற்குள் நுழைந்து சிம்மமெனக் கர்ஜித்துவிட்டுப் போயிருந்தான் மெல்லிசைக்காரன். மலையமான் சக்கரவர்த்தி பொத்தென்று இருக்கையில் சரிந்து அமர்ந்து விட, அவர் உத்தரவிற்காக அவர் முகத்தைப் பார்த்தபடி சுற்றி நின்றது அவரது சாதி.

*************

சிம்மவரத்தை ஒட்டியுள்ள ஒரு சிறு நகரத்தில் நண்பர்கள் இருவரும் அறை எடுத்துத் தங்கி இருந்தார்கள். ராகுலுக்குக் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருந்தது. ருத்ரமூர்த்தியிடம் பேசியதில்,

“கோர்ட்ல அவங்க பக்கம் தீர்ப்பாக வாய்ப்புக் கொஞ்சம் ஜாஸ்தி ராகுல் தம்பி. இதை உடைக்கணும்னா அமிர்தா சொன்ன அந்தக் கார் ஆக்சிடென்ட் இவர் பண்ணினது தான்னு ப்ரூவ் பண்ணனும்.

ஆனா, அது அவ்வளவுச் சுலபமில்லை. ஆக்சிடென்ட் நடந்த ஊரு, இவங்க ஊருன்னு மாத்தி மாத்தி அலைய விடுவாங்க. 

கோர்ட்டைப் பொறுத்த வரை ஒன்னு வேணா பண்ணலாம். கேஸ் இப்போதைக்கு முடிக்க முடியாம இழுத்தடிக்கலாம். அதுக்குள்ள நிலாவுக்குக் கொஞ்சம் விவரம் வந்துட்டா அவளை வைச்சு அங்க போக விருப்பமில்லைன்னு சொல்ல வைக்கலாம்” என்றுத் தெளிவாகச் சொல்லி இருந்தார்.

எனவே அந்த விபத்துக் குறித்து ஏதேனும் தகவல் திரட்ட முடியுமா என்று காவல் துறையிடம் விசாரிக்க வேண்டி இருந்தது. அதற்காகத் தான் ராகுல் அங்குத் தங்குவதாக முடிவு செய்தது. 

ஓரளவுக்குத் தான் வசதி இருந்தது அந்த ஹோட்டல் அறையில். நண்பன் இங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதுக் கொஞ்சம் பதைபதைப்பாக இருந்தது கௌஷிக்கிற்கு.

“இப்ப எதுக்குடா நீ இங்க தங்கப் போறதா சொல்லிட்டு வந்த?” அறைக்குள் குறுக்க மறுக்க நடந்து கொண்டே ராகுலிடம் வினவினான் கௌஷிக்.

அங்கிருந்த சோஃபாவில் வசதியாக அமர்ந்து கொண்டு கை நீட்டிச் சோம்பல் முறித்தபடி, “பின்ன நைட்டோட நைட்டா திரும்ப ட்ரைவ் பண்ணச் சொல்றியா?” என்றான் ராகுல்.

“உனக்கு முடியலைன்னா நான் ட்ரைவ் பண்ணிட்டுப் போறேன். இதுக்கு எதுக்கு இங்க தங்கணும்? எனக்கென்னவோ நாம இங்க இருக்குற சமயம் இவனுங்க ஊர்ல எதுவும் பண்ணிடுவாங்களோன்னு தோனுது டா.”

“அங்க எல்லாம் இவனுங்களால ஒரு மண்ணும் பண்ண முடியாது. நீ குட்டிப் போட்ட பூனை மாதிரி நடந்துக்கிட்டே இருக்காம வந்துப் படு. எப்ப எவன் அரிவாளோட வருவானோ? அதுக்குள்ள நாம கொஞ்சம் தூங்கி முழிச்சுக்கலாம்.”

“அது சரி… என்னவோ நைட் டிபன் சாப்பிடக் கூப்பிடுவாங்க, அதுக்குள்ள ஒரு குட்டித் தூக்கம் போடலாங்குற மாதிரி சொல்ற?”

கௌஷிக் வினவ முதலில் ஒரு அட்டகாசமானச் சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது ராகுலிடமிருந்து.

“டென்ஷன் ஆகாத. டி.ஐ.ஜி கிட்டப் பேசுறதுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருக்கேன். எப்படியும் கொஞ்ச நேரத்துல கால் பண்ணுவாங்க. அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு யோசிப்போம்.”

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, “என்னைப் பார்த்ததும் நிலா விஷயத்தைப் பத்தி ஏன் என்கிட்ட சொல்லலை கௌஷிக். நீ அப்பவே சொல்லி இருந்தா நாம நேரா இங்கேயே வந்திருக்கலாமே?”

“இதுக்குத்தான் சொல்லலை. நீ உடனே இங்க வரணும்னு குதிப்ப. அதான் வீட்டுக்குப் போனதும் சொல்லிக்கலாம்னு நினைச்சேன். அது இல்லாம எனக்கு இன்னோரு பயம் வேற.”

“என்ன பயம் டா?”

“இல்ல, ஏற்கனவே அமிர்தா விஷயத்துல நீ ரொம்பக் குழம்பிப் போயிருந்த. இப்போ அமிர்தாவுக்குக் கல்யாணம் ஆகலைங்குற விஷயம் தெரிஞ்சா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோன்னு…” முடிக்காமல் நிறுத்தினான் கௌஷிக்.

“அந்த ஸ்டேஜ் எல்லாம் தாண்டியாச்சு டா. இப்போ அமிர்தாவே நோ சொன்னாலும் டீன் ஏஜ் பையன் மாதிரி அவ பின்னாடியே கையில ஒரு ரோஜா பூவோட சுத்த நான் ரெடி.” மந்தகாசப் புன்னகையுடன் சொன்னான் ராகுல்ரவிவர்மன்.

“இது எப்பயிருந்து?”

“அதைத் தான் டா நானும் யோசிக்கிறேன். தெரிய மாட்டேங்குது. ஆனா அமிர்தா இல்லாம நான் இல்லை. இது மட்டும் நல்லாவே தெரியுது.”

“அது நல்லா தெரியுதில்ல? அது போதும் எனக்கு.” சொல்லியபடியே ராகுலைக் கட்டிக் கொண்டான் கௌஷிக்.

பிறகு நண்பர்கள் இருவரும் ஏதேதோ கதையளந்தபடியே படுக்கையில் படுத்திருக்க, சிறிது நேரத்திலேயே கௌஷிக் தூங்கிப் போனான். ராகுலும் கண் மூடிக் கிடந்தான் அமிர்தாவை நினைத்தபடி. அன்று காலையில் நடந்தவை அனைத்தும் அவன் மனக்கண் முன் விரிந்தது.

குளிருக்கு இதமாக நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கும் பொழுது யாராவதுப் போர்வையைப் பிடுங்கிக் கொண்டால் வருமே ஒரு கோபம், அத்தகைய உணர்வில் தான் கண் விழித்துப் பார்த்தான் ராகுல்ரவிவர்மன்.

இத்தனை நேரமும் இவனுள் வாகாக சுருண்டு கொண்டிருந்தவள் தூக்கத்தில் சற்றுத் தள்ளி மறுபுறம் திரும்பிப் படுத்திருந்தாள். அமிர்தா தள்ளிப் போகவும் தான் இதுவரை இருந்த சுகம் பறிபோன உணர்வில் ராகுலுக்கு விழிப்பு வந்திருந்தது.

ராகுலைப் பார்த்த மாத்திரத்தில் நிலா பற்றியக் கவலையும் கூட சற்று மறந்து போயிருந்தது அமிர்தாவிற்கு. அவளுடைய ரவி நல்லபடியாகத் திரும்ப வந்துவிட்டாலே போதும். இந்தப் பிரச்சனைகளை எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்பது அவளின் அபார நம்பிக்கை. 

மூன்று நாட்களாக இமை மூடாத காரணமா அல்லது நேற்று நடந்த இனிய கூடலினால் வந்த அயர்ச்சியா எதுவோ ஒன்றுப் பெண்ணைத் தாக்க தன்னை மறந்துத் துயில் கொண்டிருந்தாள்.

மீண்டும் அவளைப் பின்னோடு கட்டிக் கொண்டான் ராகுல். இவன் அணைப்பை உணர்ந்தவள் மீண்டும் இவன் புறம் திரும்பி தூக்கத்திலேயே ‘ரவி’ என்றழைத்து மார்போடு ஒண்டிக் கொண்டாள்.

“வர்ஷூ” காசினியின் காதலெல்லாம் குரலில் கொண்டு வந்துக் காதோடு மெல்ல அழைத்தான் ராகுல்.

“ஹ்ம்ம்” வெறும் ஹூங்காரம் மட்டுமே பதிலாக வந்தது.

“மணி என்ன தெரியுமா?”

“ம்ஹூம்” இப்பொழுது அவன் நெஞ்சிலேயே முகத்தைப் பிரட்டினாள்.

“மணி எட்டாச்சு” இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டே காது கடித்தான் ராகுல்.

“எட்டா” அடித்துப் பிடித்து அமிர்தா எழுந்தமர,

“ஹேய் ரிலாக்ஸ்… எதுக்கு இவ்வளவு அவசரம்?”

“ஐயோ ரவி, நான் இப்போ கீழே போகலைன்னா தீப்தி என்னைக் கிண்டல் பண்ணியே ஒரு வழி ஆக்கிடுவா. பசங்க வேற தேடுவாங்க ரவி.”

“சரி, போகலாம். ஆனா அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அமிர்தா.”

என்னவென்பதைப் போல விழி உயர்த்திப் பார்த்தாள் அமிர்தா.

“ஹையோ இந்தக் கண்ணு இருக்கே…” சொல்லிவிட்டு அடக்க மாட்டாமல் அவள் கண்களில் முத்தம் வைத்தான். அமிர்தா வெட்கப்பட்டுத் தலை கவிழ அவளை இழுத்துத் தன் மீது போட்டுக் கொண்டான்.

“மனுஷனைப் பேச விடுறியா நீ?”

“நான் என்ன பண்ணேன்?” அமிர்தா சிணுங்கலாக வினவ,

“ஏன் நேத்து பண்ணலை? அதெப்படி எப்படி?” அவளைப் போலவே கையை நீட்டித் தூக்கச் சொல்வது போல செய்து காட்ட, இன்னும் கொஞ்சம் அவன் மார்போடுப் புதைந்து கொண்டாள் அமிர்தா.

“வர்ஷூ, நான் ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே?”

“ம்ஹூம்” மறுப்பாகத் தலை அசைத்தாள்.

“நிலா… நம்ம நிலா குட்டி உன் குழந்தை இல்லையா?” தயங்கித் தயங்கித் தான் கேட்க முடிந்தது ராகுலுக்கு.

“உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இதுக்கு மேலயும் தெரியாம இருக்குமின்னு நினைக்குறியா?” அவர்கள் இருந்த கோலத்தைச் சுட்டிக் காட்டி வினவினான் ராகுல்.

“நித்யாவோட குழந்தை” தலையைக் கவிழ்ந்து கொண்டே பதிலளித்தாள்.

“இதை ஏன் டா இத்தனை நாளா சொல்லலை?”

“நான் மறைக்க நினைக்கலை ரவி. ஆனா கண்டிப்பா மறக்க நினைக்கிறேன். நிலா வேற யாரோட குழந்தையும் கிடையாது. அவ நம்ம குழந்தை. நம்ம பொண்ணு. இல்லையா ரவி?” கேட்கும் போதே கண் கலங்கிப் போனது அமிர்தாவிற்கு.

“நான் நிலாவைத் தூக்கிக்கிட்டு நம்ம ஊருக்கு வந்தப்போ எல்லாரும் என்ன்னமோ பேசினாங்க. ஆனா யாருமே நிலா யாரோட குழந்தைன்னு கேட்கவே இல்லை தெரியுமா? நிலாவோட அப்பா யாரு? அவ முறைதவறிப் பிறந்த குழந்தையா? இப்படித்தான் அவங்க சந்தேகமெல்லாம் இருந்துச்சே தவிர நிலா என் குழந்தையா அப்படிங்குறதுல யாருக்கும் எந்த சந்தேகமும் வரலை. எனக்கும் யாருக்கும் விளக்கம் சொல்லப் பிடிக்கலை.

அது மட்டுமில்லாம நிலாவோட எதிர்காலத்துக்கும் இது தான் நல்லதுன்னு தோணுச்சு. அதான் அதை அப்படியே மெயின்டெயின் பண்ணிக்கிட்டேன். எனக்கு நிலா, நிலாவுக்கு நான் இப்படியே தான் எங்க வாழ்க்கை முழுக்க வாழப் போறோம்ன்னு நினைச்சேன்.

எங்க அம்மா அப்பா ஏதோ பெரிய புண்ணியம் பண்ணி இருக்கணும். அதான் எங்க வாழ்க்கையில நீங்களும் சந்தோஷும் வந்தீங்க.”

“நீ அப்படி நினைக்குற. ஆனா எனக்கு… அட்லீஸ்ட் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சத்யாம்மா சொல்லும் போதாவது சொல்லி இருக்கலாமில்ல?”

“சொல்லி இருந்தா?”

“நானே உனக்கு ஏத்த மாதிரி வேற வாழ்க்கையை அமைச்சுக் குடுத்திருப்பேன் இல்ல?”

“இன்னோரு தடவை இப்படிப் பேசுங்க நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவளின் விரலைப் பிடித்து அதற்கொரு முத்தம் வைத்தவன்,

“நான் ஏற்கனவே கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையோட இருந்தவன். என்னைப் போய் கல்யாணம் பண்றோமேன்னு உனக்குக் கொஞ்சம் கூடக் கஷ்டமா இல்லையா?”

“நீங்க இப்படிப் பேசுறது தான் ரவி, கஷ்டமா இருக்கு. நீங்க எப்படி இருந்தாலும் சரி எனக்கு என் ரவி தான் வேணும். நீங்க எப்படி இருந்தாலும்…” எப்படி இருந்தாலும் என்பதை மீண்டுமொரு முறை அழுத்திச் சொல்லி அவன் முகம் பார்த்தாள்.

“எல்லா பொண்ணுங்களுக்குமே தன் புருஷன் தொடுற முதல் பொண்ணு நாமளா தான் இருக்கணும்னு ஒரு ஆசை இருக்கும் இல்லையா? அந்த ஆசை உனக்கும் இருந்திருக்கும் இல்ல?”

“அந்த ஆசை எல்லாருக்கும் இருக்கும் தான். ஏன் பொண்ணுங்களுக்கு மட்டுமா? பசங்களும் அந்த நம்பிக்கையில தானே கல்யாணம் பண்றாங்க? எல்லரோட ஆசையும் நிறைவேறிடுதா என்ன? இப்போ முக்கால்வாசிப் பேரு அந்த ஆசை நிறைவேறிட்டதா பொய்யா நம்பிக்கிட்டு தானே வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு அந்தப் பொய்யான ஆசையை விட ரொம்ப முக்கியம் நம்பிக்கை.

நீங்க எனக்கு அந்த நம்பிக்கையைக் குடுத்தீங்க. ஆசையா நம்பிக்கையான்னு வரும் போது எனக்கு நம்பிக்கை தான் ரவி பெருசா தெரியுது.”

“நீ என்மேல வைச்ச நம்பிக்கையை ஆயுசுக்கும் நான் காப்பத்துவேன் வர்ஷூ.” உணர்ச்சிவசப்பட்டுப் பேசியவன் கோழி தன் குஞ்சுகளை அடைகாத்துக் கொள்வதைப் போல் தன்னோடு அவளை சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“இப்போ நிலாவுக்குப் பெரிய ஆபத்து வந்திருக்கு. இப்பவும் நான் உங்களைத் தான், உங்களை மட்டும் தான் நம்புறேன் ரவி” என்று சொல்லித் தான் அந்த வக்கீல் நோட்டீஸ்சையே ராகுலிடம் எடுத்து நீட்டியிருந்தாள் அமிர்தா.

இப்பொழுது நினைக்கும் பொழுதும் உடம்பெல்லாம் புல்லரித்தாற் போல் இருந்தது. ராகுல் அமிர்தாவின் நினைவிலேயே மூழ்கி இருக்க காவல் நிலையத்திலிருந்து இன்ஸ்பெக்டர் அவனை அலைப்பேசியில் அழைத்துப் பேசினார். ஆனால் அவர் கூறிய விஷயம் நல்லதா கெட்டதா என்றுப் பகுத்தறியத்தான் முடியவில்லை ராகுலால்.