Mayam 18

Mayam 18

ரிஷி அதிர்ச்சியாக தன் கன்னத்தில் கை வைத்த வண்ணம் அனுஸ்ரீயை பார்க்க அவளோ கோபத்துடன் அவனை முறைத்து பார்த்து கொண்டு நின்றாள்.

“வாய் இருந்தால் என்ன வேணா பேசுவீங்களா நீங்க?” அனுஸ்ரீயின் கேள்விக்கு பதில் சொல்ல கூட முடியாமல் நின்று கொண்டிருந்தவனுக்கு
அவள் தன்னை அடித்தாள் என்பதை இன்னமும் நம்ப முடியவில்லை.

உடை மாற்றுவதாக அனுஸ்ரீயிடம் சொல்லி விட்டு வந்தவன் உடைகளை எடுக்க தன் கப்போர்டை திறக்க அந்த கப்போர்ட் அருகில் இருந்த சில பெட்டிகள் தவறுதலாக கீழே விழுந்தது.

ஏற்கனவே பல யோசனையோடு நின்று கொண்டிருந்தவன் அந்த பெட்டிகள் விழவும்
“இது வேற!” என்று சலித்து கொண்டே அவற்றை தூக்க அதில் ஒரு சிறு பெட்டியில் இருந்து புகைப்படங்களும், காகிதங்களும் நழுவி வீழ்ந்தது.

‘என்ன இது?’ யோசனையோடு அந்த புகைப்படங்களைப் பார்த்தவனுக்கோ பன்மடங்கு அதிர்ச்சி வந்து சேர்ந்தது.

“என்னோட போட்டோஸ் இங்க எப்படி?” குழப்பத்தோடு குனிந்து பார்த்தவன் அவை எல்லாம் அனுஸ்ரீயின் வீட்டில் இருந்து கொண்டு வந்த பெட்டிகள் என்பதை பார்த்ததுமே ஒரு கணம் ஆடிப் போனான்.

‘ஆபிஸில் வைத்து பார்த்தது மட்டும் தான் என்றல்லவா அவள் தன்னிடம் கூறினாள்? அப்படி இருக்க இந்த புகைப்படங்கள்?’ தன் ஒட்டுமொத்த அதிர்ச்சியும் கோபமாக உருமாற
அவளை கோபமாக அழைத்தான் ரிஷி.

கோபத்தில் தன்னை மறந்து அவன் பேச அவளது கரங்களோ அவன் கன்னங்களை பதம் பார்த்து இருந்தது.

‘அனு என்னை அடித்தாளா? இது நிஜமாகவே நடக்குதா? இல்லை எனக்கு இப்படி தோணுதா?’ மனதிற்குள் தனக்குத்தானே அவன் கேட்டுக் கொண்டு நிற்க

“இதோ பாருங்க ரிஷி என் மேல தப்பு இருக்கு தான் இல்லைன்னு இல்லை அந்த ஒரே காரணத்துக்காக தான் நீங்க கோபமாக பேசும் போது நான் பதில் பேசாமல் இருந்தேன் ஆனா அதற்காக என்னை பற்றி தேவையில்லாமல் நீங்க பேசுனா அதை எல்லாம் என்னால கேட்டுட்டு இருக்க முடியாது அந்த ஆத்மிகாவோடு என்னை ஒப்பிட்டு பேச உங்களுக்கு எப்படி மனசு வந்தது ரிஷி? கேவலம் பணத்திற்காக நான் உங்களை” அதற்கு மேல் பேச முடியாமல் அனுஸ்ரீ தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

தன் காலின் அருகில் விழுந்து கிடந்த அவனது புகைப்படங்களை எல்லாம் தன் கையில் எடுத்துக் கொண்டவள்
“இந்த போட்டோ எல்லாம் எதற்காகனு கேட்டீங்க தானே? சொல்றேன் இந்த போட்டோஸ் அந்த பெட்டிக்குள்ள இருக்கும் லெட்டர் எல்லாம் உங்களுக்காக நான் பண்ணது உங்க மேல வைத்த கண்மூடித்தனமான காதலால் நான் பண்ணது”

“காதலா?” ரிஷி அதிர்ச்சியாக அவளை பார்க்க

“ஆமா காதல் தான் நீங்க வேற ஒரு பொண்ணை விரும்புறது தெரிந்தும் நான் உங்களை விரும்புனேன் அது தான் நான் பண்ண பெரிய தப்பு

புத்திக்கு புரிந்தது இந்த ஆசை சரி இல்லைன்னு ஆனா மனசு அதற்கு புரியலயே! உங்க ஆபிஸில் இருந்த அந்த ஒரு வாரம் நான் அந்தளவிற்கு சந்தோஷமாக இருந்தேன் ஏதோ ஒரு பெரிய வரம் எனக்கு கிடைத்த மாதிரி

ஆனா உங்க நிச்சயதார்த்தம் பற்றி செய்தியை கேட்டதற்கு பிறகு தான் கடைசியாக என் மனசுக்கு புரிந்தது இந்த காதல் நடக்காதுனு நான் ஆசை வைத்த எதுவும் நடக்காதுனு எனக்கு தெரியும் அது தான் அந்த ஊரே வேணாம்னு இங்கே வந்தேன் அதற்கிடையே உங்களை பற்றி ஒரு தகவல் கூட எனக்கு கிடைக்கல உங்களுக்கு கல்யாணம் நடந்து இருக்கும்னு தான் நினைத்து இருந்தேன்

ஆனா மறுபடியும் கடவுள் உங்களை என் கிட்ட கொண்டு வந்தாரு அதை இன்னும் என்னால நம்ப முடியல அந்த நிமிஷம் நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் தெரியுமா? எனக்கு இவ்வளவு அதிர்ஷ்டம் இருக்குமான்னு எனக்கே ஆச்சரியமாக இருந்தது ஆனா இப்போ தான் எனக்கு புரியுது அவர் எனக்கு சந்தோஷத்தை ஒரு நாளும் தரப்போறது இல்லை” கண்கள் கலங்க அவனை பார்த்து தன் மனதிற்குள் இருந்த உணர்வுகள் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தவள் தன் கையில் இருந்த புகைப்படங்களை எல்லாம் அந்த பெட்டிக்குள் போட்டு பூட்டி விட்டு அவனை நிமிர்ந்தும் பாராமல் கட்டிலில் ஒரு ஓரமாக சென்று படுத்து கொண்டாள்.

ரிஷிக்கோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

அனுஸ்ரீயின் மனதில் இத்தனை விடயங்கள் இருக்கக்கூடும் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு புதுப்புது விடயங்களை அவனிடம் ஒரே நாளில் கூறினால் அவன் எப்படி அத்தனை விடயங்களையும் உள் வாங்கிக் கொள்வது?

அனுஸ்ரீ எல்லா விடயங்களையும் கூறி விட்டாள் ஆனால் விக்னேஷ் கூறிய விடயங்களை பற்றி அவள் கூறவில்லை.

அப்படி என்றால் அனுஸ்ரீ உண்மையாகவே அந்த சம்பவத்தில் பங்களிக்கவில்லையா? இல்லை தன்னிடம் வேண்டுமென்றே மறைக்கிறாளா? என்ற கேள்வி இப்போது அவன் மனதில் எழ ஆரம்பித்தது.

பால்கனியில் வந்து நின்றவன் உடனே தன் போனை எடுத்து விக்னேஷிற்கு அழைப்பை மேற்கொள்ள மறுபுறம் தூக்க கலக்கத்தில் தன் போனை எடுத்து காதில் வைத்தவன் கேலியாக சிரித்துக் கொண்டே
“என்னடா இந்த நடு ராத்திரியில் போன் பண்ணி இருக்க? இன்னைக்கு உனக்கு ரொம்ப முக்கியமான நைட் டா” என்று கூறவும்

பல்லை கடித்து கொண்டு தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டவன்
“இன்னைக்கு ரிசப்சன் ஹாலில் வைத்து நீ என் கிட்ட சொன்ன தானே? அனுஸ்ரீ என்னை பற்றி நம்ம பிரண்ட்ஸ் அன்ட் உன் கிட்ட விசாரித்தான்னு உண்மையாகவே அப்படியா அனுஸ்ரீ பண்ணா?” முயன்று இயல்பாக பேசுவது போல கேட்க மறுமுனையில் இருந்தவனோ சத்தமாக சிரிக்க தொடங்கினான்.

“ஸ்டாப் இட் விக்கி! ஒழுங்காக கேட்டதற்கு பதில் சொல்லு!” அதட்டலாக ஒலித்த ரிஷியின் குரலில் தன் சிரிப்பை விட்டவன்

“இதை கேட்கவா இந்த ராத்திரியில் போன் பண்ண?” என்று விட்டு

“அனுஸ்ரீயும், இன்னொரு பொண்ணும் தான்டா வந்தாங்க அனுஸ்ரீ கொஞ்சம் தள்ளி நின்னாங்க கூட வந்த பொண்ணு தான் உன்னை பற்றி துருவித்துருவி விசாரித்தா மே பி அனுஸ்ரீயோட பிரண்ட்டா கூட அந்த பொண்ணு இருக்கலாம்” என்று கூற ரிஷியோ பதில் எதுவும் பேசாமல் போனை கட் செய்தான்.

“அனு எங்கேயும் போய் யாரு கிட்டயும் என்னை பற்றி கேட்கலனு தானே சொன்னா! ஆனா விக்கி அனுவும் கூட வந்ததாக தானே சொல்றான் அப்போ யாரு சொல்றது உண்மை? அவகிட்டயே கேட்கலாம்” என்று எண்ணிக் கொண்டு முன்னால் செல்ல போனவன் ஒரு கணம் தயங்கி நின்றான்.

‘இப்போது நான் சென்று பேசுவது சரியா?’ ரிஷியின் மனம் கேள்வி எழுப்ப

‘நான் அவசரப்பட்டு அவரை அடித்து இருக்க கூடாதோ? இல்லை இல்லை தப்பு பண்ணது அவங்க தான் தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டது அவர் தப்பு இவ்வளவு பண்ணிட்டு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் இருக்காரே!’ மறுபுறம் அனுஸ்ரீயின் மனம் அவனை வறுத்தெடுத்தது கொண்டிருந்தது.

‘என் அப்பா, அம்மா சண்டையை தீர்க்க அத்தனை வழி யோசிக்க தெரிந்தவருக்கு தன் பிரச்சனையை தீர்க்க வழி இல்லை பெரியவங்க சும்மாவா சொன்னாங்க அடுத்த வீட்டில் பிரச்சினை நடந்தா ஆயிரம் வழி சொல்ல தெரிந்த நமக்கு நம்ம வீட்டில் அதே பிரச்சினை நடக்கும் போது ஒரு வழியும் தோணாதுனு உபதேசம் எல்லாம் ஊருக்கு தான் நமக்கு இல்லை!’ மனதிற்குள் பொருமிய படி அனுஸ்ரீ உறங்குவது போல கண்களை மூடிக் கொண்டு இருக்க ரிஷியோ அவளிடம் சென்று பேசுவதா? வேண்டாமா? என்று யோசித்து கொண்டு நின்றான்.

அவளிடம் பேசுவதில் அவனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

மறுபடியும் ஏதாவது தவறுதலாக கூறி மறுபடியும் தன் கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சி பறக்க வேண்டி வருமோ என்ற ஒரு அச்சமே அவனைப் பேச விடாமல் தடுத்தது.

கோபத்துடன் பேசினால் எந்த ஒரு சரியான முடிவும் எடுக்க முடியாது அதனால் காலையில் அவளது கோபமும், தன் கோபமும் சற்று தணிந்த பிறகு பேசலாம் என்று எண்ணிக் கொண்டவன் அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

இருவரும் வெவ்வேறு மன சிந்தனைகளில் உழன்று கொண்டிருக்க இருவருக்கும் இன்பமாக, ரம்மியமாக கழிய வேண்டிய அந்த முதல் இரவோ தூங்கா இரவாக மாறிப் போனது.

அதிகாலை நேரம் ஆகியும் இருவர் கண்களிலும் ஒரு சொட்டு தூக்கம் நெருங்கவில்லை.

சிறிது நேரம் கட்டிலில் உருண்டு புரண்டு படுத்து பார்த்தவள் சூரிய வெளிச்சம் தன் மேல் படவும், பறவைகளின் ஒலி கேட்கவும் இதற்கு மேலும் தூக்கம் தன்னை நெருங்காது என்பதை உணர்ந்தவளாக கட்டிலில் இருந்து இறங்கி நின்றாள்.

அவள் நின்ற இடத்தில் இருந்து சற்றே தள்ளி கதிரையில் கண் மூடி அமர்ந்திருந்த ரிஷியை ஒரு நொடி அவள் ஏக்கத்துடன் பார்த்து கொண்டு நின்றாள்.

‘உங்களால் எப்படி ரிஷி என்னை தப்பாக நினைக்க முடிந்தது?’ அவன் முன்னால் நின்று அவன் சட்டை காலரை பற்றி உலுக்கி சத்தமாக அவனிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும் போல அவளுக்கு தோன்றவே உடனே மெல்ல நடை போட்டு அவன் முன்னால் அவள் வந்து நின்றாள்.

ரிஷி கண்களை மூடி அமர்ந்திருந்தாலும் அவனுக்கு தன் முன்னால் அனுஸ்ரீ வந்து நின்றது தெரியாமல் இல்லை.

இப்போதே இரவு நடந்த விடயங்களை எல்லாம் அவளிடம் தெளிவாக பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவன் தன் கண்களை திறக்க போக அந்த நேரம் பார்த்து அனுஸ்ரீயின் போனும் அடித்தது.

‘இந்த நேரத்தில் யாரு?’ யோசனையோடு அனுஸ்ரீ தன் போனை எடுத்து பார்க்க தெய்வநாயகியிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.

அவரது பெயரை பார்த்ததுமே மற்ற விடயங்கள் எல்லோரும் பின்னோக்கி செல்ல
“ஹலோ பாட்டி!” சந்தோஷ ஆரவாரத்துடன் போனை அட்டன்ட் செய்து காதில் வைத்தாள் அனுஸ்ரீ.

“அனும்மா தூங்குற உன்னை தொந்தரவு பண்ணிட்டேனா?” தெய்வநாயகி சற்றே சங்கடமாக கேட்க

“அய்யோ! பாட்டி அதெல்லாம் எதுவும் இல்லை நான் முழிச்சுட்டு தான் இருக்கேன் இன்னும் சொல்லப்போனால் நைட் பூராவும் தூங்கவே இல்லை தூக்கமே இல்லை” இயல்பாக அனுஸ்ரீ கூறி கொண்டு செல்ல

மறுமுனையில் அவரோ அதை வேறு விதமாக புரிந்து கொண்டு புன்னகையோடு “என்ன அனும்மா இதெல்லாம் இப்படியே சொல்லுவியா?” என சற்று கண்டிப்புடன் கேட்கவும்

அவளோ
“இதில் என்ன இருக்கு பாட்டி?” என்று குழப்பமாக கேட்டாள்.

“அவ சின்ன பொண்ணுனு சொன்னீங்களேம்மா! அங்கே பாருங்க இதில் எல்லாம் அவ நல்ல விவரமாக தான் இருப்பா” ராதா சிரித்துக் கொண்டே தெய்வநாயகியிடம் கூற மறுமுனையில் இருந்த அனுஸ்ரீக்கும் அது நன்றாகவே கேட்டது.

‘என்ன சொல்லுறாங்க இவங்க?’ அவர்கள் பேசுவதன் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழப்பமடைந்து போய் நின்றவள் அப்போது தான் தான் அவர்களிடம் என்ன கூறினோம் என்று யோசித்து பார்க்க தொடங்கினாள்.

‘நைட் பூராவும் தூங்கலனு தானே சொன்னேன்’ என சிறிது நேரம் யோசித்து பார்த்தவள்

‘அய்யோ! அதற்கு அப்படி ஒரு அர்த்தமும் இருக்குமோ?’ முகம் சிவக்க தன் தலையில் தட்டி கொண்டே பதில் பேச முடியாமல் தயக்கத்துடன் நின்றாள்.

“அனும்மா என்னடா அமைதியாக இருக்க?” தெய்வநாயகியின் கேள்வியில்

“ஒண்ணு…ஒண்ணும் இல்லையே” தன் தயக்கத்தை மறைத்து அவள் பதில் சொல்ல

மறுபுறம் புன்னகத்து கொண்டவர்
“நான் பேச வந்த விஷயத்தை விட்டு வேற ஏதோ பேசிட்டு இருக்கேன் பாரு அனும்மா இன்னைக்கு மாப்பிள்ளையும், நீயும் நம்ம வீட்டுக்கு வாங்க சரியா? மறு வீட்டு விருந்து எல்லாம் பண்ண தேவையில்லைனு சொல்லி இருந்தாங்க தான் ஆனாலும் ஒரு நாள் நீங்க இங்க வந்து இருந்துட்டுப் போங்க சரியா?” என்று கூறவும்

அனுஸ்ரீயோ தயக்கத்துடன் ரிஷியை ஒரு தடவை திரும்பி பார்த்து விட்டு
“சரி பாட்டி வர்றேன்” என்று கூறினாள்.

அதன் பிறகு சிறிது நேரம் தங்கள் வீட்டினருடன் பேசி விட்டு தன் போனை வைத்தவள் ரிஷியின் முன்னால் தயக்கத்துடன் வந்து நின்றாள்.

ரிஷி அவள் போன் பேசி கொண்டு இருக்கும் போதே தன் கண்களை திறந்து இருந்தான்.

அவளது ஒவ்வொரு செய்கைகளையும் அமைதியாக பார்த்து கொண்டு இருந்தவன் இப்போது அவள் தன் முன்னால் வந்து நிற்கவும் கேள்வியாக அவளை பார்த்துக் கொண்டே எழுந்து நின்றான்.

“பாட்டி போன் பண்ணி இருந்தாங்க”

“ம்ம்ம்ம் தெரிஞ்சுச்சு என்ன விஷயம்?”

“மறு வீட்டு சடங்கை செய்யலனாலும் இன்னைக்கு ஒரு நாள் அங்கே வந்து இருந்துட்டு போக சொன்னாங்க”

“சரி அனும்மா அப்புறம் நான்…”

“அவங்களுக்கு நம்ம சண்டை தெரிய வேணாம்”

“சரிதான் அனு நான் என்ன…”

“இப்போ தான் அம்மா, அப்பா ஒண்ணு சேர்ந்து இருக்காங்க அது தான்”

“அது சரி அனு நான் என்ன சொல்ல வர்றேன்னா…”

“எனக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் நீங்க பேசுனதை எல்லாம் மறக்க” அவன் பதிலை எதிர்பாராமல் அவனை கடந்து சென்றவள் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவன் தன்னிடம் பேச வருவதைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும் அப்படி இருந்தும் அவள் அவனை தவிர்க்க காரணம் எங்கே மறுபடியும் வாக்குவாதம் பெரிதாகி விடுமோ என்ற அச்சம்.

அதோடு நேற்று அவன் இறுதியாக சொன்ன வார்த்தைகள் அவளை இன்னமும் மனதளவில் வதைத்து கொண்டிருந்தது.

அதை அவ்வளவு எளிதாக அவளால் மறக்க முடியவில்லை மறக்க முடியுமா என்று கூட தெரியவில்லை.

இப்படி ஏதாவது பிரச்சனைகள் வந்து விடக்கூடும் என்ற அச்சத்தில் தானே அவள் திருமணமே வேண்டாம் என்று இருந்தாள்.

ஆனால் சுற்றி இருந்தவர்களும் சாதகமாக நடந்த சில சம்பவங்களும் அல்லவா அவள் மனதை மாற்றி இருந்தது.

இப்போது மீண்டும் அந்த வேண்டாத எண்ணம் அவள் மனதில் தலை தூக்க அவள் கண்களோ நிற்காமல் கண்ணீரை வடித்தது.

ஏற்கனவே மனதளவில் திருமணத்தை எண்ணி அச்சம் கொண்டு இருந்தவள் இப்போது நடந்த சம்பவத்திற்கு பிறகு முற்றாக அந்த அச்ச உணர்வில் சிக்கி தவித்து கொண்டு இருந்தாள்.

மறுபுறம் ரிஷியோ கோபத்துடன் தன் கையை சுவற்றில் ஓங்கி குத்தி கொண்டான்.

“கொஞ்சம் கூட நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட கேட்காமல் பேசிட்டு போறா! என்ன தான் நினைத்து இருக்கா அவ மனசுல? ஒரு வேளை அவ தப்பு பண்ணி அதை மறைக்க தான் இப்படி பண்ணுறாளா?” கோபத்துடன் குறுக்கும் நெடுக்கும் அவன் நடந்து கொண்டிருக்க அவன் மனமோ அனுஸ்ரீ எதையோ தன்னிடம் மறைக்கிறாள் போலும் என்று எண்ணி தப்பு கணக்கு போட்டு கொண்டிருந்தது.

இதற்கு தீர்வு என்ன? அனுஸ்ரீயின் மனம் மும்முரமாக யோசிக்க
“எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து விடலாம்” தங்கள் நிச்சயதார்த்த நிகழ்வின் போது ரிஷி கூறியதை எண்ணி பெருமூச்சு விட்டு கொண்டவள் தன் கண்களை துடைத்து கொண்டு தங்கள் வீடு நோக்கி செல்ல தயாராக தொடங்கினாள்.

முகத்தில் வரவழைத்து கொண்ட புன்னகையோடு அனுஸ்ரீ தங்கள் வீட்டில் வலம் வந்து கொண்டிருந்தது ரிஷிக்கு புரியாமல் இல்லை.

எப்படியாவது அவளுடன் இந்த பிரச்சினையை பற்றி இன்றைக்குள் பேசி தீர்த்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் அதற்கு சரியான நேரத்தை எதிர்பார்த்து அவளுடன் இணைந்து நாயகி இல்லத்தை நோக்கி புறப்பட்டான்.

தங்கள் வீட்டினரைப் பார்த்ததுமே உற்சாகம் பொங்க அனுஸ்ரீ அவர்களுடன் கதை பேச தொடங்கி விட ரிஷியும் அவர்களுடன் ஐக்கியமாகி கொண்டான்.

தாமரை எப்போதும் போல அனுஸ்ரீயோடு கலகலப்பாக பேசி கொண்டு இருந்தாலும் அனுஸ்ரீ முகத்தில் தெரிந்த ஒரு வித்தியாசமான உணர்வு அவள் கண்களுக்கு எட்டாமல் இல்லை.

“அக்கா நான் ஒண்ணு கேட்கவா?” தாமரையின் கேள்வியில் தன் கையில் இருந்த பழத்தை காட்டி

“என்ன இந்த பழம் வேணுமா?” என்று அவள் கேட்க

“அக்கா!” என்று சிணுங்கியவள்

மெல்ல அவளருகில் வந்து
“ஏதாவது பிரச்சினையா அக்கா?” என்று கேட்டாள்.

‘அய்யோ! இவள் எப்படி எனக்கு பிரச்சினைனா கண்டு பிடிக்குறாளோ தெரியலயே! நோ அனு நோ முகத்தை சாதாரணமாக வைத்துக்கோ’ என தனக்குள்ளேயே கூறி கொண்டவள்

புன்னகையோடு அவளின் புறம் திரும்பி
“எனக்கு என்ன பிரச்சினை? நான் நார்மலாக தான் இருக்கேன் அது என்ன எனக்கு எப்போதும் பிரச்சினையாக தான் இருக்குற மாதிரி கேட்குற?” கேள்வியாக அவளை பார்க்க

“அய்யோ! அப்படி இல்லை அக்கா உங்க முகம் கவலையாக இருக்கிற மாதிரி இருந்தது அது தான் ஸாரி க்கா” என்று விட்டு தாமரை அங்கிருந்து சென்று விட

அவளோ
“ஹப்பாடா!” என்றவாறே தன் கண்களை மூடித் திறந்தாள்.

‘நம்ம பிரச்சினை யாருக்கும் தெரியக்கூடாது முதலில் ரிஷி கிட்ட பேசணும் இந்த பிரச்சினையை இதோடு விட்டுடலாம்’ என்று எண்ணிக் கொண்டு அனுஸ்ரீ ரிஷியைத் தேட அவனோ அங்கு இருக்கவில்லை.

‘எங்கே போயிட்டாங்க?’ யோசனையோடு அவனைத் தேடி கொண்டு வந்தவள் தோட்டத்தில் அவன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அவன் முன்னால் வந்து நின்றாள்.

அனுஸ்ரீ அங்கே வருவாள் என்று எதிர்பார்க்காத ரிஷி அவளை ஆச்சரியமாக பார்க்க தன் கைகளையே சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்றவள்
“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கூறினாள்.

“சொல்லு தேவி” அவனது தேவி என்ற அழைப்பை கேட்டதுமே அவளது மனம் படபடவென அடித்துக் கொள்ள தொடங்கியது.

எவ்வளவு நேரமாயிற்று அவன் உதடுகள் அவளை தேவி என்று அழைத்து மனதிற்குள் அதை நினைத்து புன்னகத்து கொண்டவள் வெளியே விறைப்பாக நின்று கொண்டு அவனை ஏறிட்டு பார்த்தாள்.

ரிஷியும் அதேநேரம் அந்த பிரச்சினையை பற்றி பேசி தீர்த்து விட வேண்டும் என்ற முடிவோடு தான் அங்கு நின்று கொண்டிருந்தான்.

அவனது மனமோ ஒரு நிலையில் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தது.

அனுஸ்ரீயின் மேல் காதல் கொண்ட மனதோ அவள் சொல்வதை முழுமையாக ஏற்றுக் கொள்ள சொல்லி அவனை தூண்ட இன்னொரு புறம் கோபத்தில் தவிக்கும் மனதோ தன்னை ஏற்கனவே சந்தித்ததை மறைத்தவள் இந்த விடயத்தையும் மறைக்க செய்வாள் என அவனை முற்றிலும் குழப்பி விட்டு கொண்டு இருந்தது.

“நேற்று நைட் நடந்த பிரச்சினையை பற்றி கொஞ்சம் பேசணும்” அனுஸ்ரீ தயக்கத்துடன் தன் பேச்சை ஆரம்பித்தாள்.

“நானும் அதை பற்றி தான் யோசித்துட்டு இருந்தேன் சொல்லு என்ன விஷயம்?”

“நீங்க நேற்று அப்படி பேசி இருக்க கூடாது ரிஷி”

“எப்படி?”

“அது தான் பணத்திற்காக நான்…அது தப்பு ரிஷி அது தான் நான் உங்களை கோபத்தில் அடிச்சுட்டேன்”

“ஓஹ்! அப்போ நீ எந்த தப்பும் பண்ணல ரைட்?”

“தப்பா? என்ன தப்பு? ஓஹ்! போட்டோஸை சொல்லுறீங்களா? அது தப்பு தான் ஐ யம் ஸாரி மற்றபடி நீங்க சொன்ன எதுவும் நான் பண்ணல” இரு மனதாக இருந்த அவன் மனம் இப்போது முழுமையாக கோபம் கொண்ட மனமாகி மாறி மறுபடியும் அவள் அந்த விடயத்தை தன்னிடம் மறைக்கிறாள் என்று எண்ணி மெல்ல மெல்ல தன் கோபத்தை தலை தூக்க ஆரம்பித்தது.

“நான் எதுவும் பண்ணல! நான் எதுவும் பண்ணல! நான் எதுவும் பண்ணல! திரும்ப திரும்ப பொய் சொன்னா அது உண்மையாகாது அனுஸ்ரீ” ரிஷி கோபமாக சத்தமிட அவனது தேவி என்ற அழைப்பு இப்போது அனுஸ்ரீயாக மாறி இருந்தது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

“அப்போ இப்போ கூட நீங்க என்னை நம்பல அப்படி தானே?” அனுஸ்ரீ குரல் கம்ம அவனை பார்க்க

அவனோ
“நீ ஏற்கனவே ஒரு விஷயத்தை மறைத்து இருக்க அதே மாதிரி இதையும் மறைக்கலனு என்ன நிச்சயம்? நீ உண்மையை சொல்லுற வரை என்னால எதையும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது எந்த விடயத்தை நம்புவதுனும் எனக்கு புரியல” என்று விட்டு அங்கிருந்து சென்று விட அவளோ தன் நிலையை எண்ணி அழுவதா? இல்லை தான் இத்தனை நாட்களாக பயந்தது போலவே தன் வாழ்க்கை மாறி விட்டதே என்பதை எண்ணி கவலை கொள்வதா என்று புரியாமல் நின்று கொண்டிருந்தாள்…..

error: Content is protected !!