Oviyam 3

ஒரு மாதம் கடந்திருந்தது.சந்திரமோகன் வீட்டுக் கதவைத் தட்ட கற்பகம் தான் திறந்தார். அந்த நேரத்தில் சந்திரமோகனை அவர் அங்கே எதிர்பார்க்கவில்லை என்று அவர் முகமே சொன்னது

.”அடடே! அண்ணா வாங்க வாங்க. என்ன இந்த நேரத்துல? ஹாஸ்பிடல் வந்தாலே இந்த நேரத்துல உங்களைப் பார்க்க முடியாது. நீங்க என்னடான்னா வீடு தேடி வந்திருக்கீங்க?” ஆச்சரியமாக கற்பகம் ஆர்ப்பரிக்க ஒரு புன்னகையோடு வந்து உட்கார்ந்தார் சந்திரமோகன்.

“கற்பகம்… வீட்டுல யாரும்மா இருக்காங்க?””யாருமே இல்லையேண்ணா.  நீங்க ஒரு ஃபோன் போட்டுட்டு வந்திருந்தா அத்தனை பேரும் இருந்திருப்பாங்க.”

“அதால தான் ஃபோனைப் போடாம வந்ததே. நீ இப்படி வந்து உக்காரும்மா. நான் உங்கூடத்தான் பேசணும்.” சந்திரமோகனின் பேச்சில் கற்பகம் ஆச்சரியப்பட்டுப் போனார்.

“சொல்லுங்கண்ணா. ஏதாவது பிரச்சனையா?””பிரச்சனையெல்லாம் இல்லைம்மா. நம்ம செழியனுக்கு ஒரு வரன் கொண்டு வந்திருக்கேன்.”

“அப்படியா!” சந்திரமோகன் முழுதாக முடிக்கவில்லை. கற்பகத்தின் வாயெல்லாம் பல்லாகிப் போனது.”கொஞ்சம் பொறு கற்பகம். நான் சொல்லப் போறதை முழுசாக் கேட்டுட்டு அதுக்கப்புறமா முடிவு பண்ணு.”

“சொல்லுங்கண்ணா. நீங்க என்ன ஏப்பை சாப்பையானதையா கொண்டு வந்திருப்பீங்க?”

“நீ சொல்லுறதும் ஒரு வகையில சரிதாம்மா. பொண்ணு நம்ம ஹாஸ்பிடல்ல தான் வேலை பார்க்குது.‌ மாதவின்னு பெயர்.”

“டாக்டராண்ணா?”

“நர்ஸா வேலை பார்க்குது. டாக்டராகுற எல்லாத் தகுதியும் இருந்தும் பொருளாதாரம் இடம் குடுக்கலை.”

“அப்படீன்னா…”

“ஆஹா…ஹா… நீ நினைக்குற மாதிரி ஒன்னுக்கும் வக்கத்தவங்க கிடையாது. அப்பா பேங்க்ல வேலை பார்க்குறாரு. பொண்ணுக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் தான். அந்தப் பையன் டாக்டருக்குத்தான் படிக்கிறான்.”

“ஓ…”

“மிடில் கிளாஸ் பொண்ணு. உங்களோட ஒப்பிடும் போது ஒன்னுமில்லைத்தான். ஆனாலும்…”

“எனக்குப் புரியுதுண்ணா. அந்தப் பொண்ணு மேலயும் குடும்பத்து மேலயும் எவ்வளவு நல்லபிப்பிராயம் இருந்திருந்தா இந்தப் பேச்சை வீடு வரைக்கும் கொண்டு வந்திருப்பீங்க.”

“இது உண்மையான வார்த்தை கற்பகம். நம்ம கோகுலுக்கு அந்தப் பொண்ணைப் பார்க்கலாமான்னு ஒரு எண்ணம் இருந்துச்சு. ஆனா பொண்ணு கோகுலை விட ஒரு வயசு பெரியவ.”

“ஓ…”

“அப்பவும் சாரதாக்கிட்டக் கேட்டேன். ஏம்மா? நம்ம பையனுக்கு அந்தப் பொண்ணைப் பார்க்கலாமான்னு. ஆனா சாரதா அதுக்குச் சம்மதிக்கல்லை கற்பகம்.”

“அதுவும் சரிதானேண்ணா. ஒரு வயசு மூத்தவன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் அண்ணி எப்படிச் சம்மதிப்பாங்க?”

“நீ என்ன சொல்லுற கற்பகம்?”

“நான் ஒரு தரம் ஹாஸ்பிடல் வந்து பொண்ணைப் பார்க்கட்டுமாண்ணா?”

“தாராளமா வாம்மா. எனக்கென்னன்னா நம்ம செழியனோட கோபத்துக்கு இது மாதிரிப் பொறுமையான பொண்ணுதான் சரியா வரும்னு தோணுது.”

“அதைச் சொல்லுங்க. இந்த வீட்டுல பையன் மட்டுமா கோபப்படுறான்? பொண்ணும் தான் கோபப்படுது. அப்பாவோட குணம் ரெண்டுக்கும் அப்படியே வந்திருக்கு.”

“அப்போ வர்ற மருமகள் என்னோட தங்கச்சியைப் போல இருக்கட்டுமே.” சந்திரமோகன் சொல்லப் புன்னகைத்தார் கற்பகம்.

“எவ்வளவு ஆசையாக் காத்துக்கிட்டு இருக்கேன் தெரியுமாண்ணா? செழியனுக்குன்னு ஒரு பொண்ணு வரணும். என்னோட பேரக் குழந்தைங்களைக் கொஞ்சணும். இப்படி என்னெல்லாமோ ஆசை இருக்கு.”

“இங்கப்பாரும்மா கற்பகம். மாதவியைச் செழியனுக்கு இப்போ நல்லாவே தெரியும். அவனைச் சமாளிக்கிறது என்னோட பொறுப்பு. ஆனா… கருணாதான் என்ன சொல்லுவான்னு… தெரியலை.”

“அதை நான் சமாளிக்கிறேன் அண்ணா. முதல்ல நான் பொண்ணைப் பார்க்கிறேன். அதுக்கப்புறமா என்ன பண்ணுறதுன்னு யோசிப்போம்.”

“சரிம்மா… எப்போ ஹாஸ்பிடல் வர்றேன்னு சொல்லு. அன்னைக்கு மாதவிக்கு எத்தனை மணிக்கு டியூட்டின்னு விவரம் சொல்லுறேன்… சரியா?””சரிண்ணா.”

“அப்போ நான் கிளம்புறேம்மா.”

“சரிண்ணா”. 

***

அந்த ப்ளாக் ஆடி கொஞ்சம் வேகமாகவே ஹாஸ்பிடல் வாசலில் வந்து நின்றது. காரை ஒழுங்காகப் பார்க் பண்ணாத இளஞ்செழியன் அதன் கீயை அங்கு நின்றிருந்த கார் பார்கிங் ஊழியரிடம் கொடுத்துவிட்டு விரைந்து உள்ளே வந்தான்.

நேரம் இரவு பத்தைத் தாண்டி இருந்தது. அப்போது தான் தூங்கியவனை யாரோ எழுப்பி இருக்கிறார்கள் என்று அவன் முகத்தைப் பார்த்தாலே புரிந்தது.நேரே ரிசப்ஷன் வந்தான் செழியன்.

அன்று மேனகா தான் ட்யூட்டியில் இருந்தாள். இரவு நன்றாக ஏறி இருந்ததால் அந்த ஹாஸ்பிடல் வளாகத்தில் அமானுஷ்ய அமைதி ஒன்று பரவி இருந்தது.

“மிஸஸ்.மேனகா… இன்னைக்கு நைட் டியூட்டி யாரெல்லாம் பார்க்குறாங்க?”

“இதோ பார்க்கிறேன் டாக்டர்.” அவள் லெட்ஜரைப் புரட்டிக் கொண்டிருக்க அத்தனை பொறுமை செழியனுக்கு இருக்கவில்லை.

“மாதவி இருக்காங்களா?” என்றான் அவசரமாக.

“இருக்காங்க டாக்டர்.”

“குட்… அவங்களைத் தியேட்டருக்கு உடனே வரச் சொல்லிட்டு அவங்க வார்டுக்கு வேற யாரையாவது போடுங்க.”

‘ஏன்? நீங்க மாதவியோட உக்கார்ந்து படம் பார்க்கப் போறீங்களா?’ மேனகாவிற்கு இப்படித்தான் கேட்கவேண்டும் போல வார்த்தைகள் நாக்கு நுனி வரை வந்தது. அடக்கிக் கொண்டாள்.

“ஒரு பேஷன்ட்டை இப்போ கொண்டு வருவாங்க. பெயர் கார்த்திகேயன். ஃபோர்மாலிட்டீஸை அப்புறமா நீங்க பார்த்துக்கோங்க. ஆனா பேஷன்ட்டை நேரா தியேட்டருக்கு அனுப்புங்க.”

ஒரு பதட்டத்தோடு சொல்லிவிட்டுப் போனவனை நிமிர்ந்து பார்த்தாள் மேனகா. ஏதோ அவசரம் என்று நன்றாகவே புரிந்தது. அவன் லிஃப்ட்டைப் பிடித்துத் தியேட்டருக்குப் போவதற்கு முன்பாக மாதவிக்குத் தகவல் பறந்திருந்தது. இளஞ்செழியன் தியேட்டருக்கு அணிய வேண்டிய ஆடைகளைக் கையில் வைத்துக்கொண்டு தியேட்டர் வாசலில் நின்றிருந்தாள் பெண்.

“தான்க் யூ சிஸ்டர்.” ஒரு புன்னகையோடு சொன்னவன் தியேட்டருக்குள் செல்வதற்கு முன்பு தான் செய்ய வேண்டிய சுத்திகரிப்பு வேலைகளுக்காக அப்பால் சென்றான்.

“சிஸ்டர்!” போனவன் திரும்பி நின்று அழைக்கவும் மாதவி அருகில் வந்தாள்.

“யெஸ் டாக்டர்?”

“பேஷன்ட் நேம் கார்த்திகேயன். வந்த உடனே நேரா தியேட்டருக்குக் கொண்டுவரச் சொல்லி இருக்கேன். ப்ரெஷரைச் செக் பண்ணிட்டு ஒரு‌ ‘ஈ.ஸி.ஜி’ எடுத்திடுங்க.”

“ஓகே டாக்டர்.”

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா வேலைகள் நடக்கட்டும். ஈ.ஸி.ஜி ரிப்போர்ட் பார்த்துட்டு உடனேயே ‘ஆன்ஜியோப்ளாஸ்ட்டி’ பண்ணுறோம்.”

“ஓகே டாக்டர்.”

“சீக்கிரமா ‘ஸ்டென்ட்’ ரெடி பண்ணுங்க.” 

“ஓகே டாக்டர்.” ஆணைகளின் வேகத்திற்குப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள் மாதவி.சந்திரமோகனின் ஹாஸ்பிடலில் அனைத்து வசதிகளும் இருந்ததால் அவன் சொன்ன வேலைகள் தாமதமாவதற்கு வாய்ப்புகளே இல்லை. நகர்ந்து போன மாதவியை மீண்டும் நிறுத்தியது செழியனின் குரல்.

“சிஸ்டர்!””யெஸ் டாக்டர்.”

“வரப்போற பேஷன்ட் எனக்கு ரொம்ப வேண்டியவங்க. என் ஃபாமிலியில யாராவது வந்தா எப்படி ட்ரீட் பண்ணுவீங்களோ அதை விட பெட்டர் சர்வீஸை உங்கக் கிட்ட இருந்து எதிர்பார்க்குறேன்.” அவன் பேச்சில் மாதவி புன்னகைத்தாள்.

“ஓ… மாதவிக்கிட்ட இந்த வார்த்தைகளைச் சொல்லத் தேவையில்லையோ?” இப்போது பதிலையும் அவனே சொன்னான்.அப்போதும் பதிலாக ஒரு புன்னகையையே தந்தவள் போய்விட்டாள்.

அவன் அணியவேண்டிய இள நீலநிற ஆடைகள் அவள் கையிலேயே அப்போதும் இருந்தது.சற்று நேரத்திலெல்லாம் சம்பந்தப்பட்ட பேஷன்ட் வந்து விட மாதவி பிஸியாகிப் போனாள்.

செழியனும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்து சேர்ந்து விட்டான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் பேஷன்ட் கண்கலங்கினார்.

“இளஞ்செழியா!””ஒன்னுமில்லை ஐயா. டைமுக்கு வந்து சேர்ந்துட்டீங்க. ஒன்னும் ப்ராப்ளம் இல்லை. எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க.”

“நீ இருக்கும் போது எனக்கென்னைய்யா பயம். அவதான் வெளியே பயந்துக்கிட்டே நிக்குறா.”

“அம்மாக்கிட்டயும் இப்போப் பேசிட்டுத்தான் வர்றேன் ஐயா. கொஞ்ச நேரம்தான். அதுக்கப்புறமா ரூமுக்கு மாத்திடறேன் சரியா?”

“இளங்கோ பேசினானா?”

“பேசினான். நீங்க இப்போக் கொஞ்சம் அமைதியா இருங்க ஐயா. நான் எல்லாத்தையும் அப்புறமாச் சொல்லுறேன்.” அந்த மனிதரை அமைதிப்படுத்திய செழியன் தனக்கான ஹாஸ்பிடல் ஆடைகளை உடுத்தியிருந்த ஆடைகளுக்கு மேலாக அணிய ஆரம்பித்தான்.அவன் அணிந்து முடிய முதுகுப்புறமாகப் போட வேண்டிய முடிச்சுகளை அவனுக்குப் போட்டு விட்டாள் மாதவி.

“சிஸ்டர் ரிப்போர்ட்?” அவன் கேட்கும் முன்பாகவே ‘ஈ.ஸி.ஜி’ ரிப்போர்ட்டைக் கொடுத்தாள் மாதவி. வாங்கிப் பார்த்தவன் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கி விட்டான். ரிப்போர்ட் அத்தனை திருப்தியாக இல்லை என்று அவன் முகமே சொன்னது.

‘பி.ஸி.ஐ’ என்பது சர்ஜரி இல்லை என்பதால் நோயாளி பார்த்துக் கொண்டிருக்கும்போதே அனைத்து வேலைகளும் நடைபெற்றன.’ஸ்டென்ட்’ எனப்படும் மிக மெல்லிய குழாய் ஒன்று நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்பட்டு இருதயத்திற்கு ரத்தம் விநியோகிக்கும் முக்கிய குழாய் ஒன்று வரை கொண்டு செல்லப்பட்டது. 

இளஞ்செழியன் மானிட்டரில் அனைத்தையும் நோயாளிக்கு விவரித்துக் கொண்டே தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். உள்ளே செலுத்தப்பட்டது ஸ்டென்ட் அங்கேயே நிலையாக நிறுத்தப்பட்டு ரத்தக் குழாயிலிருந்த சுருக்கம் நிவர்த்தி பண்ணப்பட்டது.கார்த்திகேயனின் ரத்தக் குழாய் ஒன்று என்பது விகிதம் அடைப்புக்கு உள்ளாகி இருந்தது. அவர்கள் வசிக்கும் ஏரியாவிலிருந்த ஹாஸ்பிடலில் இதை நிவர்த்தி பண்ணும் வசதிகள் இல்லாததால் நேராக இங்கேயே வரும்படி சொல்லிவிட்டான் செழியன்.

கொஞ்ச நேரம் நிலைமையைத் தன் கண்காணிப்பில் வைத்திருந்த செழியன் எல்லாம் செவ்வனே முடிந்தபிறகு மீண்டும் ஒரு ‘ஈ.ஸி.ஜி’ எடுத்துப் பார்த்தான். இப்போது ரிப்போர்ட் திருப்தியாக இருக்கவும் அந்தக் கார்த்திகேயனைப் பார்த்துச் சிரித்தான்.

“இப்போ எல்லாம் ஓகே ஐயா.‌ இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு மாத்திடுவாங்க. அம்மா உங்க கூடவே இருக்கலாம். இளங்கோ கூப்பிட்டா எங்கூடப் பேசச் சொல்லுங்க.”

“சரி இளஞ்செழியா.”

“நான் நைட்டுக்கு இங்கேயே தான் தங்குவேன். உங்களை இடைக்கிடையே வந்து பார்த்துக்கிறேன். சரியா?”

“சரிப்பா. ஒன்னும் பிரச்சனை இல்லை. நீ போய் ரெஸ்ட் எடு. உன்னை ஒழுங்காத் தூங்க விடாம நாங்கத் தொல்லை பண்ணிட்டோம்.”

“அப்படியெல்லாம் இல்லை ஐயா. உங்களுக்குப் பண்ணாம வேற யாருக்குப் பண்ணப் போறேன். நீங்கத் தைரியமா இருங்க. நான் கிளம்பட்டுமா?”

“சரிப்பா.”

“இவங்க பெயர் மாதவி. இன்னைக்கு நைட் டியூட்டி பார்க்குறாங்க. உங்களுக்கு என்னத் தேவைன்னாலும் இவங்களைக் கூப்பிடுங்க. இவங்க உங்க பக்கத்துல இருந்தா நான் இருந்த மாதிரித்தான்.”

“சரிப்பா.” கார்த்திகேயன் புன்னகைக்கவும் இளஞ்செழியன் டாக்டர்களுக்கான அறைக்கு வந்துவிட்டான்.

ஒரு காஃபி குடித்தால் நன்றாக இருக்கும் போல இருந்தது. ஆனால் அதைக் கூடச் செய்ய முடியாமல் சோர்வாக இருக்கவும் அப்படியே நாற்காலியில் சாய்ந்தான் செழியன். கை தானாக ‘யூ ட்யூப்’ ஐத் தட்டிவிட்டது. 

‘பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்… உனக்காக வேண்டும்…’ பாடல் ஒலித்துக்கொண்டிருக்க இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் காலைத்தூக்கி சொகுசாக வைத்துக் கொண்டான்.

இனிமையான இசை இதமாக வருடிச் சென்றது.கண்களை மூடிக் கொண்டவனின் நாசி காஃபியின் வாசனையை உணரவும் கண்களைத் திறந்தான் செழியன்.

எதிரே கையில் காஃபியோடு மாதவி நின்றிருந்தாள். உதட்டில் புன்னகை உறைந்திருந்தது.

“சிஸ்டர்!” ஆச்சரியமாக அவன் அவளைப் பார்க்கவும் காஃபியை நீட்டியது பெண்.

“ரொம்பத் தாங்ஸ். நான் கேக்கவே இல்லையே!”

“உங்க முகத்துல அவ்வளவு சோர்வு தெரிஞ்சுது டாக்டர். அதான் கொண்டு வந்தேன்.”

“உங்களுக்கு?”

“இப்போதான் சாப்பிட்டேன் டாக்டர்.” ரூமை விட்டு வெறியேறப் போன பெண்ணை நிறுத்தியது செழியனின் குரல்.

“மாதவி!”

“சொல்லுங்க டாக்டர்.”

“ஏதாவது வேலை இருக்கா என்ன?””இப்போதைக்கு இல்லை டாக்டர்.”

“அப்போ இப்படி உட்காரலாமே.” செழியனின் குரலில் புன்னகைத்தவள் அங்கிருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தாள்.

“ஐயா என்ன பண்ணுறாங்க?”

“அவங்க வீட்டுக்கார அம்மாவோட ஜாலியாப் பேசிக்கிட்டு இருக்காங்க.” அந்தப் பதிலில் செழியன் வாய்விட்டுச் சிரித்தான்.

“ஐயாவும் அம்மாவும் எப்பவும் இப்படித்தான் மாதவி. அவங்க வாழுற அழகை, அன்னியோன்யத்தைப் பார்த்தா நமக்கும் ஆசை வரும்.”

“சொந்தக்காரங்களா டாக்டர்?”

“இல்லை மாதவி. ஐயா என்னோட பழைய ஹெட் மாஸ்டர். அப்பாவுக்கு நல்ல பழக்கம். இன்னைக்கு வரைக்கும் அந்த நட்புத் தொடருது.”

“அவங்களுக்குப் பசங்க யாரும்…”

“ஒரு பையன் இருக்கான். கைனோகோலோஜிஸ்ட். ஆனா இந்தியால இல்லை. மலேஷியால வர்க் பண்ணுறான்.”

“ஓ… அவங்களுக்குத் தெரியுமா? அப்பாக்கு இப்படின்னு?”

“ம்… தெரியும் மாதவி. ட்யூட்டி முடிஞ்சு இன்னைக்கு வீட்டுக்குப் போகும் போதே ஏழு மணியாச்சு. சாப்பிட்டுட்டு அப்போதான் தூக்கினேன். கால் பண்ணுறான்… மலேஷியால இருந்து.”

“நல்ல வேளை, ஃபோன் ஆன்ல இருந்திருக்கு.” இது மாதவி.”இல்லை மாதவி… நான் எப்பவுமே ஃபோனை ஆஃப் பண்ண மாட்டேன். ஏன்… சைலன்ட்ல கூடப் போடமாட்டேன்.”

“ஓ…”

“பையன் அலறுறான். நான் வெலவெலத்துப் போனேன்.” அபிநயத்தோடு செழியன் சொல்லவும் மாதவி சிரித்தாள்.

“என்னதான் பெரிய டாக்டர்னாலும் அவரோட அப்பா எங்கிறப்போ ஒரு பயம் இருக்கும்தானே டாக்டர்?”

“கண்டிப்பா…” 

“டைம் ஆச்சு டாக்டர். வார்ட்ல இருக்கிற பேஷன்ட்ஸுக்கு மெடிசின் குடுக்கணும்.” அவள் சொல்லவும் செழியனின் தலை தானாக ஆடியது. அவன் அனுமதியோடே வார்டுக்குப் போனாள் மாதவி.

***

அன்று மாதவிக்கு விடுமுறை நாள். கொஞ்சம் தாமதமாகவே எழுந்தவள் குளித்து முடித்து நல்ல மஞ்சள் நிறத்தில் அழகான பூக்கள் போட்ட ஒரு பார்டர் சேலையை உடுத்திக் கொண்டாள்.கோவிலுக்குப் போய் நெடுநாட்கள் ஆகியிருந்தது. அதனால் இன்று கண்டிப்பாகக் கோவிலுக்குப் போகவேண்டும் என்று அம்மா ஆணையே போட்டிருந்தார்.தலையை நன்கு உலர்த்தித் தளர்வாகப் பின்னல் போட்டவள் அதில் பூவை வைத்துக் கொண்டாள்.

“மாதவீ…”

 “வர்றேன்மா… ரெடியாகிட்டேன்.” அவள் ரூமிலிருந்து குரல் கொடுத்தபடியே ஒரு மெரூன் கலர் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக் கொண்டான்.

“உன்னோட ஃபோன் அடிக்குது பாரு.”

“இதோ வர்றேன்.” சத்தமாகச் சொன்னவள் ஹாலுக்குப் போனாள்.

இரவு அருண் அவள் ஃபோனை வைத்துக்கொண்டு கேம் விளையாடி இருந்தான். இவளிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அவளும் அதை மறந்து படுக்கைக்குப் போயிருந்தாள்.மாதவி ஃபோனை எடுத்துப் பார்த்தாள். காஞ்சனா தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.

‘இவ எதுக்கு இந்நேரம் கூப்பிடுறா!’ எண்ணமிட்டபடியே ஃபோனைக் காதுக்குக் கொடுத்தாள் மாதவி

.”அக்கா!” மாதவி ஹலோ சொல்லும் முன்பே காஞ்சனாவின் குரல் பீறிட்டுக் கொண்டு வந்தது.

“சொல்லு காஞ்சனா… என்ன இந்த நேரத்துல?”

“அக்கா… சீக்கிரமா ஒரு ஆட்டோப் புடிச்சு காலேஜுக்கு வாங்கக்கா.‌ இங்க சின்னதா ஒரு பிரச்சனை.”

“என்ன சொல்லுற காஞ்சனா? அருணுக்கு என்ன ஆச்சு?” மாதவிக்குத் தன் இருதயம் துடிப்பது துல்லியமாகக் கேட்டது.

“அருணுக்கு எதுவும் ஆகலை. வேண்டாத வம்பை இழுத்து வெச்சிருக்கான். போலீஸ் கேஸ் ஆகிடுமோன்னு பயமா இருக்கு.

“”என்ன காஞ்சனா சொல்லுறே?” விட்டால் அழுது விடுவாள் போல இருந்தது மாதவியின் குரல்.

“அக்கா… ஆன்ட்டிக்கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சிட்டு சீக்கிரமாக் காலேஜுக்கு வாங்க. லைன்லயே இருங்க. நான் உங்களுக்கு நடந்ததைச் சொல்றேன். ஆனா வீட்டுல வச்சு எதுவும் பேசாதீங்கக்கா.”

“யாரு மாதவி ஃபோன்ல? என்னாச்சு? நீ ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அமுதவல்லி குறுக்கிட்டார்.

“அம்மா… காஞ்சனா தான் பேசுறா.”

“என்னவாம்? காலேஜுக்குப் போகலையா அவ?”

“காலேஜுல இருந்துதாம்மா பேசுறா. ஒரு பொண்ணுக்குக் கொஞ்சம் உடம்பு முடியலையாம். ஹாஸ்பிடல் வரைக்கும் போகணும் போல. அதான் என்னைக் கூப்பிடுறா.”

“இதென்ன கூத்து! அதுக்கெதுக்கு உன்னைக் கூப்பிடுறா? அவளே என்னன்னு பார்க்கவேண்டியது தானே? அங்க இல்லாத ஹாஸ்பிடலா?”

“அவளைத் தாண்டின விஷயங்கிறதால தானே என்னைக் கூப்பிடுறா. நான் போய்ட்டுச் சீக்கிரமா வந்திடுறேன்.”

“என்னமோ போ! சாயங்காலமாவது கோவிலுக்குப் போகணும். சீக்கிரமா வந்திடு. உன்னைக் கண்டா அந்தப் பொண்ணுங்க படத்துக்குப் போகலாம்… மாலுக்குப் போகலாம்னு ஆரம்பிப்பாளுங்க.”

“இல்லைம்மா… சீக்கிரமா வந்திடுறேன்.” அவசர அவசரமாக வெளியே வந்தவள் ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிக் கொண்டாள்.

“சொல்லு காஞ்சனா… என்ன ஆச்சு?”

“அக்கா! அருண் அந்தப் பொண்ணைக் கைநீட்டி அறைஞ்சுட்டான்.”

“என்ன! எந்தப் பொண்ணை?”

“அதுதான்கா… அந்த ஜூனியர் பொண்ணு.”

“அட ஆண்டவா! இவனுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? ஏன் இப்படிப் பண்ணினான்?”

“இவன் எப்பப் பார்த்தாலும் சும்மா அந்தப் பொண்ணைக் கலாட்டா பண்ணிட்டே இருப்பான். அந்தப் பொண்ணுக்கு இன்னைக்குக் கோபம் வந்திடுச்சு போல.‌ உங்களைப் பத்தி ஏதோ தப்பாச் சொல்லி இருக்கா. அது இவன் காதுல விழுந்திடுச்சு. சட்டுன்னு கையை நீட்டிட்டான்.”

“ஐயையோ! பெரிய இடத்துப் பொண்ணா அது?”

“அப்படித்தான் தெரியுதுக்கா. அந்தப் பொண்ணு சட்டுன்னு அவங்க வீட்டுக்குக் கால் பண்ணிடுச்சு. எனக்கு என்னப் பண்ணுறதுன்னு தெரியலைக்கா.”

“முல்லை எங்க?”

“இப்பவும் இந்த மடப்பய எகிறிக்கிட்டுத்தான் நிக்குறான். முல்லையும் விஷாலும் தான் அவனைப் புடிச்சு வச்சிருக்காங்க.”

“சரி ஃபோனை வைம்மா. நான் இதோ வந்துட்டேன்.” ஃபோனை வைத்த மாதவி தலையைப் பிடித்துக் கொண்டாள்.”அண்ணா கொஞ்சம் சீக்கிரமாப் போங்க.”

“சரிம்மா.” ஆட்டோக்காரனை விரட்டிய படியே காலேஜை வந்து சேர்ந்திருந்தாள் மாதவி. ஆனால்… அவளுக்கு முன்பாகவே அந்த ப்ளாக் ஆடி அங்கு நின்றிருந்தது.

நல்லவேளையாக காலேஜ் மேலிடம் வரை யாரும் தகவல் சொல்லி இருக்கவில்லை.‌ ஆனால்… அந்த இடத்தில் மாதவியைக் கண்டபோது இளஞ்செழியன் திகைத்துப் போனான். அதை அவன் முகம் அப்பட்டமாகக் காட்டியது.

“மாதவி!” செழியன் திகைத்தான் என்றால் அதற்குக் குறையாத திகைப்பை மாதவியின் வதனமும் காட்டியது.

“டாக்டர்!” மாதவி திகைத்து நிற்க இப்போது அருணின் குரல் காற்றைக் கிழித்தது.

“மாதவி! நீ எதுக்கு இப்போ இங்க வந்த?” எதிராளியாக நின்று கொண்டிருந்த பையனின் குரல் மாதவியை அதட்டவும் செழியனின் நெற்றி சுருங்கியது. கேள்வியாகப் பெண்ணைப் பார்த்தான்.

“என்னோட… தம்பி.” தயங்கியபடி வந்த குரலில் முஷ்டியைக் காற்றில் வீசினான் செழியன்.

“ஷிட்…” அவன் வார்த்தை இதுவாகத்தான் இருந்தது.”அர்ச்சனா… போய்க் கார்ல ஏறு.”

“இல்லைண்ணா… நீங்கப் போலீசைக் கூப்பிடுங்க. என்னன்னு தான் பார்த்துடலாம்.” தான் சொன்னதைச் செய்யாமல் பிடிவாதமாக நின்ற தங்கையை ஒரு பார்வை பார்த்தான் செழியன். வாயை மூடிக்கொண்டு காரில் ஏறிக் கொண்டது பெண்.

“டாக்டர்… அருண் பண்ணினது தப்புத் தான்… மகா தவறு. அதுக்கு நான் உங்க கால்ல விழுந்து வேணும்னாலும் மன்னிப்புக் கேக்குறேன். போலீஸ் வரைக்கும் போயிடாதீங்க டாக்டர். இது என் தம்பியோட எதிர்காலம். எங்கக் குடும்பத்தோடக் கனவு… ப்ளீஸ் டாக்டர்.” மாதவி கையெடுத்துக் கும்பிட்ட படி கெஞ்சவும் அருணின் ஆவேசம் அதிகமானது. 

தன்னை இழுத்துப் பிடித்திருந்த விஷாலையும் முல்லைலையும் உதறியவன் மாதவியின் அருகில் விரைந்து வந்தான். மாதவியின் கூப்பியிருந்த கரங்களை அருணின் கைகள் அடித்துவிட்டது.

“உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா மாதவி! அந்தத் திமிர் பிடிச்சவ உன்னை என்னப் பேசினா தெரியுமா?”

“வாயை மூடு அருண்!” மாதவிக்கும் இவ்வளவு கோபம் வருமா என்று செழியன் ஆச்சரியமாகப் பார்த்திருந்தான். ஆனால் அருண் அடங்கவில்லை.

“மிஞ்சி மிஞ்சிப் போனா இவங்களால என்னப் பண்ண முடியும்? என்னை ஒரு டாக்டர் ஆகாமப் பண்ணமுடியும். அதுக்காக… நீ கண்டவங்கக் கிட்டயும் கெஞ்சிக்கிட்டு நிப்பியா? முதல்ல வீட்டுக்குப் போ மாதவி.” இப்போது இளஞ்செழியனுக்கும் லேசாகக் கோபம் வந்தது. மாதவியைப் பார்த்த மாத்திரத்தில் தணிந்திருந்த அவன் கோபம் மீண்டும் அருணின் வார்த்தைகளில் எட்டிப் பார்த்தது.

அருணை நெருங்கி வந்தான் பெரியவன். நெருக்கம் என்றால்… மிகவும் நெருக்கம். அருணின் மூக்கு நுனியை செழியனின் மூக்கு உரசி நின்றது. இளஞ்செழியனின் வாய் மட்டும் லேசாக முணுமுணுத்தது.

“என்னோட தங்கை மேலயே கையை வச்சிருக்கிற. உங்கக்கா மேல நான் கையை வெக்கட்டுமா?” செழியன் சொல்லி முடிக்கும் முன்பாக அவன் ஷர்ட்டைக் கொத்தாகப் பிடித்திருந்தான் அருண்.

“வச்சுப் பாருடா கையை. அந்தக் கையை வெட்டிட்டு ஜெயிலுக்குப் போறேன்.” அருண் குமுறவும் நண்பர்கள் அவனைப் பிடித்து அப்பால் இழுத்தார்கள். மாதவி கூட அருணை செழியனிடமிருந்து பிடித்து இழுத்தாள். அவள் கண்கள் இப்போது கண்ணீரைக் கொட்டத் தொடங்கி இருந்தது.

“அருண்! என்னடா பண்ணுற?” மாதவியின் கைகள் தம்பியை இப்போது தாறுமாறாக அடிக்க ஆரம்பித்திருந்தது.”மாதவி நீ வீட்டுக்குப் போ. நான் இன்னைக்கு இவங்களை ஒரு கை பார்க்காம விடப்போறதில்லை. என்னோட எதிர்காலத்தை விட எனக்கு எங்கக்கா முக்கியம்டா!” வார்த்தைகள் மரியாதையைத் தொலைத்திருந்தன. 

“விஷால்… உன்னைக் கெஞ்சிக் கேக்குறேன். இவனை எங்கேயாவது கூட்டிட்டுப் போ.” காதுகள் இரண்டையும் கைகளால் பொத்தியபடி குலுங்கி அழுதாள் மாதவி.இத்தனை நடந்த போதும் செழியன் கல்லுப் போல நின்றிருந்தான்.

பாக்கெட்டில் கைகள் இரண்டையும் விட்டுக்கொண்டு அசையாமல் நின்றிருந்தான். அருண் அவன் ஷர்ட்டைப் பிடித்தபோதும் அவன் நிதானம் இழக்கவில்லை.

“டாக்டர்!” மாதவியின் கண்ணீர் முகத்தை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தான் இளஞ்செழியன்.

“வீட்டுக்குப் போங்க மாதவி. இங்க நடந்ததை இதோட மறந்திருங்க.” அப்போதும் நிதானமாகவே சொன்னவன் அருணை ஒரு பார்வை பார்த்துவிட்டு, காரில் ஏறிப் போய்விட்டான்.

மாதவி மட்டுமல்ல… அங்கு நின்றிருந்த அனைவருமே ஒரு கணம் திகைத்துப் போனார்கள்.