உயிர் தேடல் நீயடி 21

காலையில் வழக்கம் போல நிறுவனம் செல்ல தயாராகி விபீஸ்வர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அறையை விட்டு வெளியே வரவும் அவனிடம் தயங்கி வந்து நின்றாள் ஜனனி.

“ஹேய் குட் மார்னிங் ஜெனி” விபீஸ்வர் முகத்தில் இயல்பான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

“குட் மார்னிங்” என்று சிறு குரலாய் சொன்னவள், தன் கைப்பையில் இருந்த கருப்பு கயிறை எடுத்து அவன் கையில் கட்டினாள்.

“என்ன ஜெனி இது?” விபீஸ்வர் மறுக்க, “இது மந்திரிச்ச கயிறு, இதை கைல கட்டிக்கிட்டா துஷ்ட சக்தி எதுவும் நம்மகிட்ட நெருங்காதாம், இதோ நானும் கட்டியிருக்கேன் பாரு” என்று தன் கையை காட்ட, பால்நிற மூங்கிலாய் நீண்டிருந்த அவளின் மென்கரத்தில் கட்டியிருந்த கருமை நிற கயிறு தனியாக தெரிந்தது.

“ஷிட் நீ‌ எப்ப இதையெல்லாம் நம்ப ஆரம்பிச்ச?” என்றவன் தன் கையிலிருந்த கயிற்றை கழற்றி தூர வீசினான்.

“ஏன் விபி இப்படி பண்ற, உன் நல்லதுகாக தானே, இதெல்லாம் செய்றேன்” ஜனனி கவலையாக பேச,

“புதுசா‌ கருப்பு கயிறு விக்கிற பிஸ்னஸ்‌ ஏதாவது ஸ்டார்ட் பண்ணி இருக்காரா உன் அப்பா? அதான் என்னை வச்சு டிரையல் பார்க்கிறயா” விபீஸ்வர் சற்று கடுப்பாகவே கேட்டான்.

“விளையாடாத விபி, உன் பக்கத்துல தான் நான் அந்த காவ்யா உருவத்தை பார்த்தேன் ப்ராமிஸ்ஸா… அதால உனக்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு பயமா இருக்கு” ஜனனி சற்று நடுக்கமாகவே சொல்ல,

“அப்படி நீ சொல்றது ஒருவேளை உண்மையா இருந்தா கூட அதுக்கு நீ பயப்பட தேவையில்ல, என் காவ்யாவோட நிழல்கூட என்னை காயப்படுத்தாது” என்று உறுதியாக சொன்னவன் தன் சக்கர நாற்காலியோடு நகர்ந்து சென்றான். ஜனனியும் ஒருவித பயம் கலந்த பரிதவிப்போடு அவனோடு சென்றாள்.

அலுவலகத்தில் விபீஸ்வர் தனது வழக்கமான வேலைகளை கவனிக்க, ரங்கராஜன் அவன் உத்தரவுபடி மற்ற வேலைகளை செய்து வந்தார்.

ஜனனி இன்று விபீஸ்வரின் பார்வையில் இருந்து விலகாமல், அவனுக்கு தேவையான உதவிகளை செய்தபடி அங்கேயே அமர்ந்து இருந்தாள். எதிலிருந்தோ அவனை பாதுக்காக்க வேண்டும் என்ற உளைச்சல் அவளுக்குள்.

மதிய வேளைக்கு பிறகு, எந்தவித அனுமதியும் இன்றி அவன் கேபினுக்குள் புயலென நுழைந்தாள் வர்ஷினி. “என்ன தான் பிரச்சனை விபி உனக்கு? உன்ன பார்க்க, உன்கூட பேச எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்ல, பின்ன ஏன் என்னை டிஸ்டர்ப் பண்ற?” அவளின் கேள்வியும் கோபமாக வந்தது.

அப்போது அங்கே விபீஸ்வர், ஜனனி, ரங்கராஜன் தவிர மேலும் இரு பணியாளர்களும் இருந்தனர்.
விபியின் பார்வையில் எல்லோரும் கூண்டோடு வெளியேற, ஜனனி மட்டும் தயங்கியபடியே நகர்ந்தாள்.

“வர்ஷினி… நான் உன்ன தனியா சந்திக்கணும்னு கேட்டேன், இப்படி வந்து எல்லார் முன்னையும் கத்த சொல்லல” விபி இறுக்கமாக சொல்லிவிட்டு தன் எதிரே இருக்கையை காட்டினான்.

“என்கூட தனியா என்ன பேச்சு உனக்கு? பொண்டாட்டி இல்லன்னு ஆனதும் செகண்ட் மேரேஜ்க்கு ஆஃபர் பண்ண போறியா?” வர்ஷினி காட்டமாகவே குரலுயர்த்தி கேட்டு வைத்தாள்.

“ஹே செம ஐடியாவா இருக்கே! உனக்கு ஓகேனா நோ அப்ஜக்ஷன்ஸ்” என்று விபீஸ்வர் குறும்பாய் கண்சிமிட்ட, இவள் ஆவேசமாய், “யூ… யூ…” அவனை ஆத்திரமாய் திட்ட கெட்ட வார்த்தைகளை தேடினாள்.

“ஹே கூல் பேபி… எனக்கு உன் ஹெல்ப் வேணும் அவ்ளோ தான்” விபீஸ்வர் விளையாட்டை விடுத்து அவளிடம் உதவி கோற,

“என்ன ஹெல்ப்?” என்று வர்ஷினி அவன் முன் சற்று குழப்பத்துடனே அமர்ந்தாள்.

“நாற்பது நாளாச்சு காவ்யாவ நான் பிரிஞ்சு… பட் இப்ப வரைக்கும் அந்த ஆக்ஸிடென்ட்க்கு யார் காரணம்னு என்னால கண்டுபிடிக்க முடியல” விபீஸ்வர் நெற்றி தேய்த்தபடி சொல்ல,

“அது ஆக்ஸிடென்ட் தானே! இல்ல வேற மாதிரி சந்தேகபடுறியா?” வர்ஷினி இப்போது பொறுமையாகவே வினவினாள்.

“நிச்சயமா அது ஆக்ஸிடென்ட் இல்ல, யாரோ வேணும்னு எங்களை தாக்கி இருக்காங்க!”

“வாட்? பாவம் காவ்யாவ கொலை செய்ற அளவுக்கு யாரு எதிரிங்க இருக்காங்க?”

“அது அவளுக்கான டார்கெட் மட்டும் இல்ல, எனக்கானதும் கூட, அதுல காவ்யா…” அந்த நொடி கண்முன் வந்து போக, தலையை அழுத்தக் கோதிக்கொண்டு வேதனையை சமாளிக்க முயன்றான். வர்ஷினி அதிர்ச்சியில் பேச்சின்றி மௌனமானாள்.

“எவ்வளவு யோசிச்சும் என்னால அந்த காரை அடையாளபடுத்த முடியல… ஆக்ஸிடென்ட் ஸ்பாட் ஸிட்டி விட்டு தள்ளி இருக்கறதால, சிசிடிவிலயும் பதிவாகல… ரவி டீம் ஒருபக்கம் தேடிட்டு இருக்காங்க, போலிஸ் ஒருபக்கம் விசாரிச்சிட்டு இருக்காங்க பட் இதுவரை எதுவும் தெரியல” விபீஸ்வர் தன் இயலாமையால் மேசையில் குத்தினான்.

“உங்களை கொலை பண்ற அளவுக்கு யாருக்கு மோட்டிவ் இருக்கும்! உன்னோட வியாபார எதிரிங்க யாராவது?”

“ப்ச் என்னோட போட்டியிட்டு ஜெயிக்கணும்னு நினைக்கிற எதிரிங்க தான் இருக்காங்க, என்னை கொல்றதால அவங்களுக்கு பெருசா எந்த லாபமும் கிடையாது”

“உங்க ஃபேமிலி சைட்ல?”

“எங்க ரிலேடிவ்ஸ் எல்லாரையும் கவர் பண்ணி அலசினதுல அவங்க யாரும் சம்பந்தபட சான்ஸ் இல்லன்னு தான் ரிப்போர்ட் வந்திருக்கு, ரவி கிட்ட இருந்து”

“அப்படின்னா, உன் கேர்ள் ஃப்ரண்ஸ்? முன்ன இருந்த ரிலேஷன்ஷிப்? அப்படி யாராவது நீ ஏமாத்தினதா ஆத்திரப்பட்டு செய்து இருக்கலாம் இல்ல”

“மே பி, பட் என்னோட பழகின நிறைய கேர்ள்ஸ்க்கு ஜஸ்ட் என்ஜாயிங் மட்டும் தான் லைஃப் ஸ்டைல்… அதுல ஒருசிலர் தான் என்மேல ரொம்ப இன்ட்ரஸ்ட்டட்டா இருந்தாங்க”

“ஓ யாரெல்லாம்?”

“ஜெனி! ரிது! மௌசி! இவங்க மூணு பேரும் ரிலேஷன்ஷிப்ப மேரேஜ் லெவலுக்கு கொண்டு போகணும்னு ரொம்ப பிரஷர் பண்ணாங்க, பட் அப்பெல்லாம் எனக்கு ஐடியா இல்ல”

“இந்த மூணுல ஏதாவது ஒரு பிசாச கட்டி தொலைக்க வேண்டியது தான, இப்ப காவ்யா லைஃப் ஆவது சேவ் ஆகி இருக்கும் இல்ல” வர்ஷினி ஆதங்கமாக கேட்டு விட்டாள்.

“கவி என் மனசுல வந்த பிறகு வேற பொண்ணுங்களை வேற மாதிரி என்னால பார்க்க முடியல… அவளை எதுக்காகவும் விட்டு பிரியவும் எனக்கு மனசு வரல…!”

“இப்ப விதியே அவளை உன்கிட்ட இருந்து பிரிச்சிடுச்சு இல்ல?”

“விதியோ, இயற்கையோ, எதாலையும் என் கவியை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது! பிரிக்கவும் விட மாட்டேன்!” விபீஸ்வரின் கைமுஷ்டிகள் இறுகி கண்கள் சிவக்க கூறியவனை, வர்ஷினி அமைதிப்படுத்த முயன்றாள்.

“ரிலாக்ஸ் விபி, ஒருசில விசயங்களை நம்மால மாத்தவே முடியாது, ஏத்துக்க தான் வேணும்” அவன் கைகளை தட்டி கொடுத்தாள் ஆறுதலாய்.

“என்னால மாத்த முடியும்! எனக்கும் கவிக்கும் நடுவுல வர்ற எதையும்! யாரையும்! நான் விட்டு வைக்க மாட்டேன்…” விபீஸ்வர் பித்தேறியவனைப் போல அடித்து சொன்னான்.

“உண்மையை ஏத்துக்க விபி, காவ்யா இப்ப உயிரோட இல்ல…” வர்ஷினி கலங்கி மொழிய,

“நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்! அவளை எப்படியும் திரும்ப கொண்டு வருவேன்! இல்ல அவ போற இடத்துக்கே நானும் போயிடுவேன்!” என்று சொன்னவனின் சிவந்த கண்களில் அத்தனை அழுத்தமும் உறுதியும் இருந்தது.

“ஆர் யூ ஆல் ரைட் விபி?” வர்ஷினி அவனருகே எழுந்து சென்று தண்ணீர் எடுத்து அவனை பருக செய்ய, விபீஸ்வர் கண்களை அழுத்த மூடி திறந்து தன்னை அமைதிபடுத்திக் கொள்ள முயன்றான்.

எதட்சியாக அங்கே கண்ணாடி தடுப்பிற்கு பின்புறம் சென்று வந்த வர்ஷினியின் பார்வையில் கேள்வி தொற்றிக் கொண்டது.

“அவ எதுக்கு நம்ம இப்படி நோட்டம் விட்டுட்டு இருக்கா?” இவளின் கேள்வியில் விபீஸ்வரின் பார்வை அங்கே திரும்பியது. கண்ணாடி தடுப்பிற்கு அப்பால் பொறாமையும் ஆத்திரமும் போட்டி போட ஜனனியின் பார்வை இவர்களிடம்‌ பதிந்து இருந்தது.

“ஜெனி எப்பவும் இப்படித்தான், என் விசயத்துல ரொம்ப பொஸஸிவ்வா பிஹேவ் பண்ணுவா…” விபீஸ்வர் இயல்பாக சொல்ல, “இவமேல டவுட் இருந்தும் ஏன் இவகூடவே சுத்திட்டு கிடக்குற? இழுத்து ரெண்டு அறை விட்டா உண்மைய எல்லாம் கக்கிட போறா” வர்ஷினி ஆத்திரமாக பேசினாள்.

“சந்தேகம் மட்டும் தான இருக்கு, சரியான ஆதாரம் எதுவும் சிக்கலையே வர்ஷினி” என்று கை விரித்தவன், “அந்த ஆக்ஸிடென்ட் ஆன டைம்ல ஜெனி அவங்க அம்மாவோட ஷாப்பிங்மால்ல இருந்திருக்கா! அதே டைம்ல ரிது நியூ மாடல் செலக்ஷன்ல மும்பைல இருந்திருக்கா! மௌசி கொடைக்கானல்ல நியூ பாய்ஃபிரண்டோட டேட்டிங்கல இருந்திருக்கா!” அவன் தந்த விளக்கத்தில் வர்ஷினி வாய் பிளந்தாள்.

“இவ்வளோ டீப்பா அலசி இருக்கீங்களா?”

“ம்ஹும் இன்னும் டீப்பா, என்னோட, காவ்யாவோட ஃபேமிலி மெம்பர்ஸ், ஃப்ரண்ஸ், ரிலேடிவ்ஸ், கொலிக்ஸ்… அப்புறம் காவ்யா காலேஜ் படிக்கும் போது ரெண்டு ப்ரோப்போஸ் வந்திருக்கு அந்த பசங்க! ரிக்கி, மாணிக்கம் ஃபேமிலி, என்னோட கேர்ள் ஃப்ரண்ஸ், பிஸ்னஸ் பார்டனர்ஸ், எதிரிங்க, வீட்டு வேலைகாரங்க உட்பட…!”

விபீஸ்வர் வரிசையாக சொல்ல, வர்ஷினிக்கு தலை லேசாக கிறுகிறுக்க தான் செய்தது. “நாற்பது நாள்ல இவ்வளவு விசாரிச்சும் உங்களால குற்றவாளியை நெருங்க முடியலையா?” அவள் திகைப்பாக கேட்க, விபீஸ்வர் ஆழ்ந்த பெருமூச்சோடு இல்லையென்று தலையசைத்தான்.

“சரி, இதுல நான் உனக்கு என்ன உதவி செய்ய முடியும்?” வர்ஷினி சந்தேகமாக கேள்வி தொடுக்க, “நான் சொல்ற ஒருத்தர்கிட்ட நீ போய் பேசணும்! அவங்களையும் பேச வைக்கணும்!” விபீஸ்வர் பதில் புதிராய் வந்தது.

“யாரது?”

“இது கொஞ்சம் சீக்ரேட், நீ அவங்களை சந்திக்கறதுக்கு முன்ன இந்த தகவல் எல்லாம் உனக்கு வந்து சேரும்”

“நடந்த விபத்து பத்தின ஏதாவது உண்மை அவங்களுக்கு தெரிஞ்சு இருக்குமா?”

“இருக்கலாம்! நேத்து உன்ன பார்த்துல இருந்து உன்னால அவங்களை பேச வைக்க முடியும்னு எனக்கு தோணுது, இதனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது நீ தைரியமா செய்யலாம்”

“ம்ம் கண்டிப்பா செய்றேன், உனக்காக இல்ல காவ்யாவுக்காக” என்று வர்ஷினி எழுந்து கொள்ள, அவள் பதிலில் விபீஸ்வர் இதமாய் முகம் மலர்ந்தான்.

“ஒன் மோர் திங் கவி… சாரி வர்ஷினி, இப்ப நாம பேசுன விசயம் எதுவும் வெளிய லீக் ஆக கூடாது. பீ கேர்புல்” என்றான் ஆழ்ந்த குரலில்.

“கிட்டத்தட்ட அரைமணி நேரமா உன்கிட்ட என்ன பேசினன்னு யாராவது கேட்டா நான் என்ன பதில் சொல்ல?” வர்ஷினி சலிப்பைக் காட்ட,

“சிம்பிள், உனக்கு நான் செகண்ட் மேரேஜ்க்கு ஆஃபர் பண்ணேன்னு சொல்லு” என்று விபீஸ்வர் குறும்பாய் கண்சிமிட்ட, “இடியட்” என்று அவனை திட்டிக் கொண்டே நகர்ந்து விட்டாள்.

இப்போது விபீஸ்வரின் விரிந்த சிரிப்பில் அவன் முகம் இன்னும் அழகாய் மலர்ந்தது.

வயிற்றெரிச்சலோடு அவனை முறைத்தபடி உள்ளே வந்த ஜனனி, “ஆஃபிஸ் டைம்ல அவகூட என்ன இவ்வளோ நேரம் பேச்சு உனக்கு?” அவளின் கேள்வியும் கூட காட்டமாக வந்து விழுந்தது.

அதற்கும் சிறு புன்னகையை தந்து விட்டு விபி தன் வேலையை கவனிக்கலானான். ஆனால் ஜனனிக்கு தான் இருப்பு கொள்ளவில்லை. மனம் ஏதேதோ எண்ணி அலைப்பாய்ந்தது.

#

சிவா கோவிலுக்கு வெளியே தன் பைக்கோடு காத்து நின்றான். அவன் பார்வை உயர்ந்த கோபுரத்தின் மீது பதிந்து இருக்க, தூரமாகவே அவனை பார்த்துவிட்டு அருகில் வந்தாள் தாரணி.

அவன் தோளை தட்டியவள், “என்ன சிற்ப கலையில ரசனை வந்திருக்கு போல உனக்கு, கோபுரத்தை அப்படி வெறிச்சிட்டு நிக்கிற சிவா” என்று கேலி போல பேச,

பெருமூச்செறிந்தவன், “காவ்யா அக்காக்கு கோபுர சிரற்பங்களை ரசிக்கறதுனா அவ்வளோ பிடிக்கும், கோயிலுக்கு வந்தா சாமியை பேருக்கு கும்பிட்டு, தூண்ல இருக்க சிற்பங்களை தான் ரசிச்சு நின்னு பார்த்திட்டு இருப்பா, நான் கூட எப்பவும் கேலி செய்வேன்…” என்று சொல்ல அவன் குரல் துக்கத்தில் கரகரத்தது.

தாரணி ஆறுதலாய் சிவாவின் கைகயை பற்றிக் கொண்டாள். “சிவா பிளீஸ்…” வேறென்ன ஆறுதல் கூறுவது என்றும் அந்த கல்லூரி பெண்ணுக்கு தெரியவில்லை.

சிவா வசிக்கும் கட்டிடத்தில் தான் தாரணி குடும்பமும் வசித்து வருகிறது. அந்த விதத்தில் பழகிய இவர்களின் நட்பு இப்போது‌ காதலில் வந்து நிற்கிறது.

காவ்யா இழப்பிலிருந்து உடைந்து போயிருப்பவனை தேற்றும் வழியறியாது தாரணியும் கலங்கி நின்றாள்.

“காவ்யா அக்கா உயிரோட இருந்திருக்கலாம் சிவா” தாரணியின் கண்கள் கலங்கின. காவ்யிவிடம் இவள் பேசி, பழகிய நினைவில்.

“நம்ம காதலை காவ்யா கிட்ட சொல்லி சம்மதம் வாங்கணும்னு அவ்வளவு ஆச பட்டேன் தாரணி, கடைசி வரைக்கும் சொல்ல முடியாமலே போச்சு” என்று வருத்தம் மேலிட்டது சிவாவின் குரலில்.

சற்று நேரம் இருவருக்கிடையே அமைதி நிலவ, ஏதோ நினைவு வர தாரணி பேச்சைத் தொடர்ந்தாள்.

“சிவா… உன்ன மாதிரி தானே உங்க மாமாவும் காவ்யா அக்கா இழப்புல உடைஞ்சு போயிருப்பாரு, ஒரு தடவை அவரை நேர்ல பார்க்கலாம் இல்ல” தாரணி யோசனை சொல்ல,

“எனக்கும் விபி மாமாவ பார்த்து பேசணும்னு எண்ணம் தான், அம்மாவுக்காக தான் அமைதியா இருக்கேன்”

“ஆக்ஸிடென்ட் ஆனது ரெண்டு பேருக்கும் தான, ஏன் அவரை மட்டும் கொலைகாரன்னு அத்தை சொல்றாங்க? எனக்கு புரியல” என்று குழம்பி நின்றவளின் வெள்ளந்தி முகத்தை கவனித்த சிவாவின் பார்வை மென்மையானது.

அவள் தலையில் கைவைத்து அசைத்தவன், “உன் குட்டி மூளையில பெரிய விசயத்தை எல்லாம் யோசிச்சு குழப்பிக்காத… எனக்கு ஆறுதல் சொல்றேன் பேர்வழின்னு நீ அழுகாச்சி காவியம் பாடுற… உன்ன எல்லாம் கட்டிகிட்டு நான்…” என்று சகஜ நிலைக்கு வந்து அவன் கேலி பேச, தாரணி சிறுபெண்ணாய் மாறி சிணுங்கி நின்றாள்.

“சரி சரி முகத்தை சுருக்காத காண சகிக்கல… விபி மாமவ நான் போய் பார்த்து பேசிட்டு வரேன், சரியா” என்க, அவள் சந்தோசமாய் தலையாட்டினாள்.

அவளின் வெகுளி தனத்தில் மயங்கியவனாய் சிவாவும் தாரணியை ஏற்றிக் கொண்டு வண்டியில் ஊர்ந்தான். ஆம், இப்போதெல்லாம் அவன் கைகளில் வண்டி பறப்பதில்லை. மிதவேகத்தையும் வேகம் காட்டும் முள் தாண்டுவதில்லை.

அதிவேகம் ஆபத்தென்று அனுபவம் அவனுக்கு முறையாக பாடம் கற்றுக் கொடுத்து இருந்தது. அது நினைவில் இருக்கும் மட்டும் சிவாவும் தன் வேகத்தை விவேகமாக கையாண்டு வருவான்.

#

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!