“இந்த விஷயம் இத்தனை நாளாக என் மனதில் இருந்தது இப்போ உங்க கிட்ட மட்டும் சொல்லுறேன் வேற யாருக்கும் சொல்ல வேண்டாம் மாமா ப்ளீஸ்” இரு கரம் கூப்பி அவனை பார்த்து கெஞ்சலாக கூறியவள் சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு தன் மனதிற்குள் அத்தனை நாளாக மறைத்து வைத்திருந்த விடயங்களை எல்லாம் கூறத் தொடங்கினாள்.
“அக்கா உங்களை விரும்பிய விஷயம் எனக்கு தெரியும் மாமா ஆனா அவங்க எங்கே உங்களை பார்த்தாங்க? எப்படி உங்களுக்குள்ள பழக்கம்? எதனால அக்கா தனியா வந்தாங்க? எதுவும் எனக்கு தெரியாது அவங்க ரூமை ஒரு தடவை சுத்தம் பண்ணும் போது தான் உங்க போட்டோவை அக்கா ரூமில் பார்த்தேன் அது வரை அக்கா மனதில் நீங்க இருக்கும் விஷயம் எனக்கு தெரியாது நீங்க யாரு என்னன்னு கூட எனக்கு தெரியாது அப்படி இருக்கும் போது தான் காலேஜில் என் கூட படிக்குற பசங்க உங்க போட்டோவை வைத்து உங்க நிச்சயதார்த்தம் நின்னு போனது பற்றி பேசிட்டு இருந்தாங்க அப்போ தான் நீங்க யாரு, என்ன எல்லாம் எனக்கு தெரிய வந்தது
அவங்க கிட்ட பேசி உங்களை பற்றி தகவல் எடுத்து உங்க கூட நேரில் பேச நிறைய தடவை முயற்சி பண்ணேன் ஆனா என்னால முடியல எப்போவும் உங்களை சுற்றி உங்க ப்ரண்ட்ஸ் இருந்தாங்க அதனால உங்க ப்ரண்ட்ஸ் மூலமாக உங்களை பற்றி தெரிஞ்சுக்கலாம்னு நிறைய பேர் கிட்ட நான் போய் பேசுனேன்”
“இது அனுவுக்கு தெரியுமா?”
“அய்யய்யோ! இல்லை அக்காவுக்கு இது எதுவுமே தெரியாது எல்லாம் நான் தான் பண்ணேன்”
“என் ப்ரண்ட்ஸை எல்லாம் அனுவோட சேர்ந்து தான் மீட் பண்ணியா?”
“இல்லை இல்லை மாமா ஒரே ஒரு தடவை தான் அக்கா கூட என் கூட வந்து இருந்தாங்க அவங்க வேற வேலையாக இங்க வந்து இருக்கும் போது நான் உங்க பிரண்ட் ஒருத்தரை பார்க்க போனேன் அக்கா கிட்ட என் கூட வராதீங்கனும் சொல்ல முடியல நான் எதற்காக அவங்களை பார்க்க போனேன்னும் சொல்ல முடியல என் சீனியர் அவங்கன்னு சொல்லி தான் அக்காவை கூட்டிட்டு போனேன் அப்போவும் அக்காவை கொஞ்சம் நிற்க சொல்லிட்டு தான் அவசர அவசரமாக போய் அவங்க கிட்ட உங்களை பற்றி கேட்டேன் அதற்கு அப்புறமாக தான் உங்க அக்காவை அவங்க ஹாஸ்பிடலில் போய் நான் சந்தித்தேன்”
“அக்காவையா?” அடுத்து அடுத்து புதிய விடயங்களை எல்லாம் கேட்டு அதிர்ச்சியாக நின்ற ரிஷியைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தாள் தாமரை.
“நான் எங்க அனு அக்காவை பற்றி எல்லாம் அர்ச்சனா அக்கா கிட்ட சொன்னேன் அனு அக்கா உங்களை விரும்பிய விஷயத்தை பற்றியும் சொன்னேன் அதற்கு அவங்க கொஞ்சம் யோசித்து பதில் சொல்லுறேன்னு சொன்னாங்க அதற்கு அப்புறமாக ஒரு இரண்டு வாரம் கழித்து அவங்க எனக்கு போன் பண்ணி கல்யாணம் பேச வரலாமான்னு கேட்டாங்க எனக்கு அந்த நிமிஷம் வானத்தில் பறக்குற மாதிரி இருந்தது அக்கா ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கப் போகுதுன்னு சந்தோஷமாக இருந்தேன் ஆனாலும் நான் தான் இதெல்லாம் பண்ணேன்னு அக்காவுக்கு தெரிய வேண்டாம்னு நினைத்து உங்க அக்கா, மாமாவோட பேசி ஒரு சாதாரணமான கல்யாண விஷயம் பேசுற மாதிரி தான் இதை பண்ணோம்”
“அப்போ எங்க வீட்டில் எல்லோரும் சேர்ந்து தான் இப்படி பண்ணாங்களா?”
“இல்லை இல்லை அர்ச்சனா அக்கா, மாமாவுக்கு மட்டும் தான் இது தெரியும்”
“எதற்கும் இப்படி பண்ண தாமரை? ஆரம்பத்தில் என் கிட்ட சொல்லிட்டே இதை எல்லாம் செய்து இருக்கலாம் இல்லையா?”
“நான் உங்க கிட்ட இதை எல்லாம் மறைக்கணும்னு பண்ணல மாமா அக்காவுக்கு தெரிய வேண்டாம்னு தான் நான் இப்படி பண்ணேன் இந்த விஷயத்தை அவங்க கிட்ட ஆரம்பத்தில் சொல்லி இருந்தா நிச்சயமாக அவங்க இந்த கல்யாணம் பண்ண சம்மதித்து இருக்க மாட்டாங்க ஏன்னா அக்காவுக்கு அந்தளவிற்கு காதல் மேலயும் கல்யாணம் மேலயும் பயம் அவங்க ஆசைப்பட்ட எதுவும் நடக்காதுனு அவங்களுக்கு பயம் அது உண்மை இல்லை எப்படியாவது அவங்க ஆசைப்பட்டது நடக்கும்னு அவங்களுக்கு உணர வைக்கணும்னு தான் இயல்பாக நடக்குற மாதிரி இதை எல்லாம் பண்ணோம் அவங்க சந்தோஷமாக இருப்பாங்கன்னு தான் இப்படி பண்ணேன் வேற யாரையும் ஏமாற்றணும்னு நான் இப்படி எல்லா பண்ணல மாமா” கண்கள் கலங்க கூறிய தாமரையைப் பார்த்து ரிஷிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“எனக்கு என்ன சொல்றதுனே தெரியல தாமரை கூடப் பிறந்த தங்கச்சி கூட இவ்வளவு பண்ணுவாங்களான்னு எனக்கு தெரியாது ஆனா நீ அனுக்காக ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து பண்ணி இருக்க”
“கூடப் பிறந்தால் தான் தங்கச்சின்னு இல்லை மாமா அவங்க எனக்கு எப்போதும் அக்கா தான் நாங்க கொஞ்சம் வசதி குறைந்தவங்கன்னு ஊருக்குள்ள யாரும் எங்க கூட அவ்வளவு பேச மாட்டாங்க ஆனா அக்கா, பாட்டி, அம்மா, அப்பா எல்லாம் என்னையும் அவங்க வீட்டில் ஒருத்தியா இப்போ வரைக்கும் பார்க்குறாங்க அதற்கு நன்றி கடனாக என்ன பண்ணுறதுனு எனக்கு தெரியாது ஆனா இந்த விஷயம் என் அக்காவுக்கு சந்தோஷம் தரும்னு நான் பண்ணது” தாமரை கூறியவற்றை எல்லாம் கேட்டு அசந்து போய் நின்றான் ரிஷி.
‘என்ன மாதிரியான பாசம் இது?’ அதை நினைத்து பார்க்கும் போதே அவன் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது.
“மாமா அக்கா எங்கே போய் இருப்பாங்க?” தாமரையின் கவலையான குரலில் தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவன்
“அனு எங்கேயும் போய் இருக்க மாட்டா இங்க தான் இருப்பா நீ கவலைப்படாமல் உள்ளே போய் இரு நான் அனு கிடைத்ததும் உனக்கு தகவல் சொல்லுறேன்” என்றவன் மீண்டும் தன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
‘தன் முன் கோபத்தாலும், அவசரத்தினாலும் எவ்வளவு பெரிய பிரச்சினையை உருவாக்கி இருக்கிறேன்’ என்ற எண்ணத்தோடு ரிஷியின் கைகள் காரை ஓட்டி கொண்டு இருக்க அவன் கண்களோ அனுஸ்ரீ எங்கேயாவது தெரிகின்றாளா என்று வலை வீசி தேடி கொண்டு இருந்தது.
மனமும், கைகளும் சோர்ந்து போக தன் காரை நிறுத்தியவன் காரிலிருந்து இறங்கி நின்றான்.
“தேவி நீ எங்கே இருக்க?” கண்களை மூடி ரிஷி யோசித்து கொண்டு நின்ற வேளை சட்டென்று ஏதோ நினைவு வரவும் வேகமாக தன் பின்னால் திரும்பி பார்த்தான்.
அன்று அனுஸ்ரீயை அவளது பெற்றோருடன் சந்தித்த அந்த மாந்தோப்பு அது.
ஏற்கனவே அவன் அனுஸ்ரீயை இங்கே வந்து தேடி பார்த்து இருந்தாலும் இன்னும் ஒரு முறை சென்று பார்க்க சொல்லி மனம் உந்த மீண்டும் அந்த தோப்பிற்குள் நுழைந்தான்.
எங்கேயாவது தன் மனதை ஆக்கிரமித்து கொண்டவள் இருக்கிறாளா என்று தேடி பார்த்து கொண்டு வந்தவன் அங்கே தன் கை வளைவில் முதன்முதலாக அனுஸ்ரீ மயங்கி நின்ற அதே மரத்தடியில் அவள் இப்போதும் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து கால்கள் பின்ன தடுமாறி நின்றான்.
கிட்டத்தட்ட நான்கு, ஐந்து மணி நேரத்திற்கு மேலாக தான் பட்ட தவிப்பையும், கவலையையும் எண்ணி அவன் கண்கள் அவனையும் அறியாமல் கலங்கியது.
மெல்ல எட்டி நடை போட்டு அவள் அருகில் வந்து நின்றவன்
“அ..அனு!” குரல் தடுமாற அவளை அழைக்க தன் அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு போய்
திரும்பி பார்த்தவள் முழுமையாக சோர்ந்து போய் நின்ற ரிஷியைப் பார்த்து அதிர்ச்சியாக தன் விழி விரித்தாள்.
அவனது கலைந்து போன கேசமும்,ஓய்ந்து போன தோற்றமும் அனுஸ்ரீ இது வரை அவனிடம் காணாதது.
“ரிஷி!” அனுஸ்ரீ அவனது வரவை நம்ப முடியாமல் வியந்து போய் நிற்க அவனோ ஒரு தாவலில் அவளை தன்னுள் இறுக அணைத்துக் கொண்டான்.
“ரிஷி என்ன ஆச்சு?” தவிப்போடு அவள் வினவ அவனோ பதிலேதும் பேசாமல் மேலும் மேலும் அவளை தனக்குள் புதைத்து கொள்வது போல அணைத்துக் கொண்டான்.
ஒரு கட்டத்தில் மூச்சு விட முடியாமல் தவித்து போனவள்
“ரிஷி!” என்றவாறே கோபமாக அவனை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்தினாள்.
“என்ன ஆச்சு உங்களுக்கு?” அனுஸ்ரீயின் கேள்விக்கு கண்கள் கலங்க அவளை நிமிர்ந்து பார்த்தவன்
“ஏன்டி என்னை இப்படி தவிக்க விட்ட? உன்னை காணாமல் ஒவ்வொரு நிமிஷமும் எவ்வளவு தவிச்சு போனேன் தெரியுமா?” என்று கேட்க அவளோ பதில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.
“இனி உன்னை நான் எப்போதும் இழக்க மாட்டேன் தேவி!” மீண்டும் அனுஸ்ரீயை ரிஷி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள அவளோ குழப்பமாக அவன் அணைப்பில் இருந்து திமிறி விலகி நின்றாள்.
ஓடையில் நீர் பாயும் ஓசை மாத்திரம் பெரும் சத்தமாக அந்த இடத்தில் கேட்டு கொண்டு இருக்க ரிஷி மற்றும் அனுஸ்ரீ ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்.
அவனது தோற்றத்தில் தெரிந்த மாறுபாடே அவன் தன்னைத் தேடி எந்தளவிற்கு அலைந்து திரிந்து இருப்பான் என்பதை அனுஸ்ரீக்கு நன்கு உணர்த்தியது.
திருமணம் நடந்து முடிந்த பின்னர் ஒரு நாள் கூட ரிஷி அவளிடம் சரியாக பேசவில்லை.
அதையும் தாண்டி அவன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாலும் அதில் பல தயக்கமும், தடுமாற்றமும் நிறைந்து இருக்கும்.
இப்படி ஒருவரை ஒருவர் எதிர் கொள்ள துணிவின்றி இருப்பதை விட ஒரு சில நாட்கள் தனிமையில் இருந்து இந்த பிரச்சினையை பற்றி சிந்தித்து முடிவு எடுத்தால் என்ன என்று ஒரு எண்ணம் அவளுக்கு தோன்றவுமே அந்த மடலில் தன் மனப் பாரத்தை எல்லாம் அவள் கொட்டித் தீர்த்தாள்.
ஏதோ ஒரு வேகத்தில் வீட்டை பூட்டி விட்டு வெளியேறி வந்தவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
தான் செய்தது சரியா? தவறா? எனப் பலமுறை தனக்குத்தானே கேட்டு கொண்டவள் நடையின் வேகமோ மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.
‘நானும் ரிஷி மாதிரி அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டேனா?’ மனதிற்குள் ஒரு முறை கேட்டு கொண்டவள் சட்டென்று அந்த இடத்திலேயே நின்றாள்.
‘அனு நீ தப்பு மேல தப்பு பண்ணுற அவர் தான் கோபத்தில் அவசரப்பட்டு உன்னை தப்பாக புரிந்து கொண்டு இருக்கிறார் என்றால் நீயும் அதே மாதிரி பண்ணலாமா? அவரோட குழப்பம் தேவையில்லாதது என்பதை நீ தானே அவருக்கு புரிய வைக்க வேண்டும் மனம் விட்டு பேசினால் எந்த பிரச்சினையும் சரியாகும் என்று அம்மா சொன்னது உனக்கு மறந்து போச்சா?
அத்தனை வருட பிரச்சினை அதுவே இல்லாமல் போய் இருக்கும் போது இந்த பிரச்சினையை தீர்க்க முடியாதா? எல்லாவற்றையும் ரிஷியோடு மனம் விட்டு பேசு அனு அவர் கேட்காவிட்டாலும் உன் தரப்பு விடயங்களை எல்லாம் சொல்லி விடு அது தான் சரி’ அவள் மனம் அவளுக்கு சரியான ஒரு வழியை சொல்ல அதை ஏற்றுக் கொண்டு திரும்பி வீட்டுக்கு செல்ல போனவள் தங்கள் தோட்டத்தை பார்த்ததும் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு செல்லலாம் என்று எண்ணிக் கொண்டு அங்கே சென்று அமர்ந்து கொண்டாள்.
‘எப்படியும் ரிஷி வர இரவாகி விடும் அதற்குள் வீட்டிற்கு சென்று விடலாம் அந்த கடிதத்தையும் எடுத்து விடலாம்’ என்ற எண்ணத்தோடு தான் அவள் தோட்டத்தில் சென்று அமர்ந்தது.
ஆனால் அங்கு அமர்ந்த பின்னர் அந்த இயற்கை சூழல் அவளை தனக்குள் இழுத்து கொள்ள அவளோ சுற்றம் மறந்து போய் அமர்ந்து இருந்தாள்.
ரிஷி வேகத்துடனும், அவசரத்துடனும் ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டு சென்றதால் என்னவோ அனுஸ்ரீ அந்த மரத்தடியில் அமர்ந்து இருந்தது அவன் கண்களுக்கு புலப்படவில்லை.
இப்போது தானும் அவசரப்பட்டு தவறு செய்து விட்டோமே என்ற எண்ணத்தோடு அனுஸ்ரீ அவனைப் பார்த்து கொண்டு நிற்க தன் கோபத்தால் இவள் எத்தனை கஷ்டங்களை எதிர் கொண்டு நிற்கிறாள் என்ற கவலையுடன் ரிஷியும் அவளை பார்த்து கொண்டு நின்றான்.
“ரிஷி நான்…”
“வேண்டாம் அனு” அவள் வாய் மேல் தன் விரல் வைத்து மறுப்பாக தலை அசைத்தவன்
“நீ எந்த தப்பும் பண்ணல அனு எல்லாம் பண்ணது நான் ஆனா தண்டனை உனக்கு” என்று கூற அவளோ குழப்பமாக அவனை பார்த்தாள்.
“நீ ஆரம்பித்தில் உண்மையை மறைத்தேன்னு சொல்லி நான் கோபப்பட்டது உண்மை தான் நீ என்னை பின் தொடர்ந்து வந்து என்னை பற்றி தகவல் எடுத்து அதை என் கிட்ட மறைச்சேன்னு தான் நான் இருந்தேன் ஆனா அப்போ எனக்கு புரியல அப்படி என்னை ஏமாற்ற நினைக்குறவ தன் வாழ்க்கையை எதற்காக பணயம் வைக்கணும்? எல்லா வசதிகளும் இருந்தும் இந்த கிராமத்தில் தான் இருப்பேன்னு எதற்காக சொல்லணும்? இது எதுவும் எனக்கு அப்போ புரியல ஆனா இப்போ புரியுது”
ரிஷியின் கூற்றில் அவன் மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து தன்னை பற்றி உண்மையை உணர்ந்து கொண்டான் என்று புரிந்து கொண்டவள் அவன் எல்லாவற்றையும் கூறி முடிக்கட்டும் என்று நினைத்து கொண்டு அமைதியாக நின்றாள்.
“நான் என்னோட கோபத்தினால் எவ்வளவு விடயங்களை இழக்க பார்த்தேன்னு இப்போ புரியுது அனு என் சந்தோஷம், கவலை, கண்ணீர், பயம் எல்லாமே நீ தான்! அதை இந்த நான்கு, ஐந்து மணி நேரத் தேடல் எனக்கு உணர்த்தி விட்டது உன் மேல எப்போ எனக்கு காதல் வந்ததுனு தெரியாது ஆனா காதல் இருக்கு அது தான் நிஜம் ஆரம்பத்தில் நீ என்னை பற்றி விசாரித்த விடயத்தை என் கிட்ட சொல்லலனு தான் என் கோபம் எல்லாம் ஆனா இப்போ அந்த கோபம் எல்லாம் எனக்கு எதுவும் இல்லை நீ எனக்கு மறுபடியும் கிடைத்தால் போதும்னு மட்டும் தான் தோணுச்சு தாமரை உண்மையை சொல்லி இருக்காவிட்டாலும் என் மனநிலை இப்படி தான் இருந்து இருக்கும்”
“தாமரை உண்மையை சொன்னாளா? என்ன உண்மை?” குழப்பமாக ரிஷியைப் பார்த்து அனுஸ்ரீ கேட்க
தன் நாக்கை கடித்து கொண்டு தன் தலையில் தட்டி கொண்டவன்
“உண்மையா? என்ன உண்மை? நான் உண்மைனா சொன்னேன்?”
‘அய்யய்யோ! இப்போ எப்படி சமாளிப்பது?’ அவசரமாக என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்து விட்டு
“நீ தோட்டத்தில் இருப்பேன்னு சொன்னா இல்லையா? அந்த உண்மை” என்று கூறவும் அனுஸ்ரீயோ அவனை நம்பாமல் கூர்மையாக பார்த்து கொண்டு நின்றாள்.
“இல்லை…அனு அது…அப்படி தான்” அவள் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அவன் தடுமாற்றத்துடன் பதில் கூற தன் இரு கைகளையும் கட்டி கொண்டு அவனையே பார்த்து கொண்டு நின்றாள் அனுஸ்ரீ.
“சரி சொல்லுறேன்” அதற்கு மேல் சமாளிப்பது சாத்தியமில்லை என்று தோன்றவே தாமரை கூறிய எல்லாவற்றையும் ரிஷி அவளிடம் கூறினான்.
அவன் சொன்ன ஒவ்வொரு விடயங்களையும் கேட்டு அதிர்ச்சியாக நின்றவள் இறுதியில் கண்கள் கண்ணீரை வடிக்க தன் முகத்தை மூடிக் கொண்டு அப்படியே சரிந்து அமர்ந்தாள்.
“அனு!” ரிஷி பதட்டத்துடன் அவளருகில் வந்து முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு அவள் கைகளை விலக்க
அவன் மார்போடு ஒன்றிக் கொண்டு மேலும் கண்ணீர் வடித்தவள்
“தா…தாமரை இந்தளவிற்கு என் மே..மேல அன்பு வைத்து இருப்பான்னு நா…நான் நினைத்து கூட பார்க்கல ரிஷி! என் சந்தோஷத்திற்காக! இவ்…இவ்வளவு…” அதற்கு மேல் பேச முடியாமல் விம்ம அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன் அவள் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தான்.
“அழாதே அனும்மா! எல்லாம் காரணமாக தான் நடந்து இருக்கும் இப்போ இப்படி ஒரு மனக் குழப்பம் நமக்குள்ள வரலேனா தாமரை உன் மேல வைத்து இருக்கும் பாசம் உனக்கு தெரிந்து இருக்காதே! அந்த வகையில் இதுவும் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்க”
“………”
“ஆனாலும் ஆரம்பத்திலேயே நாம இரண்டு பேரும் கொஞ்சம் மனம் விட்டு பேசி இருக்கலாம் இந்த ஒரு வாரம் மனக் கஷ்டத்தோடு இருந்து இருக்கத் தேவையில்லை என் மேல தான் தப்பு ஐ யம் ஸாரி அனு”
“இல்லை ரிஷி நானும் அன்னைக்கு சரியாக உங்க பேச்சுக்கு காது கொடுக்கல நானும் உங்களுக்கு மேல கோபப்பட்டு பேசிட்டேன் பேசி இருந்தாலும் பரவாயில்லை அடிக்க வேற செஞ்சுட்டேன் கோபம் வந்தால் என்ன பண்ணுறதுனே தெரியாமல் நடந்துக்கிறேன் அடிச்சதுக்கு ஸாரி”
“பரவாயில்லை அனு நீ அன்னைக்கு அந்த அடி தரலேனா எனக்கு இப்போ இந்தளவிற்கு பொறுமை வந்து இருக்காதே!”
“என்ன சொல்றீங்க? எனக்கு புரியலயே!” அனுஸ்ரீ குழப்பமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஆமா நீ அடிச்சதற்கு அப்புறம் தான் நான் என்ன பேசணும்னு கொஞ்சம் யோசித்து பேசுறேன் ஏன்னா மறுபடியும் கண் முன்னாடி மின்மினிப்பூச்சி பறக்க கூடாது இல்லையா?” சிரித்துக் கொண்டே ரிஷி கூறவும் அவன் தோளில் தட்டியவள் மெல்ல எழுந்து நின்றாள்.
அனுஸ்ரீ எழுந்து கொள்ளவும் தானும் எழுந்து நின்று கொண்ட ரிஷி அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டு
“அனு இனி உன் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வராதுனு சொன்ன நானே உனக்கு ஒரு பெரிய பிரச்சினையாக வந்து இருந்துட்டேன் இனி இப்படி உன் கூட பிரச்சினை வராதுனு என்னால சொல்ல முடியாது அப்படி சொன்னா அது நிச்சயமாக உண்மையாக இருக்காது
பிரச்சினை வரலாம் நாளைக்கோ, ஒரு மாதம் கழித்தோ, ஒரு வருஷம் கழித்தோ ஏன் அடுத்த நிமிஷம் கூட வரலாம் ஆனா எந்த நேரத்தில் பிரச்சினை வந்தாலும் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே! இது நான் உனக்கு மட்டுமே சொல்லல உனக்கு சொல்ற மாதிரி எனக்கு நானே சொல்லிக்கிறேன்
என் முன் கோபத்தை என்னால இல்லாமல் செய்ய முடியுமானு எனக்கு தெரியல ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லுறேன் நான் அப்படி ஒரு வேளை கோபப்பட்டு பேசிட்டேன்னா அதை மனதில் வைத்துக் கொள்ளாதே அனு அது எல்லாம் இங்க இருந்து வர்ற வார்த்தைகள்” என்று தன் வாயை சுட்டி காட்டியவன்
“இங்கே இருந்து இல்லை” என்று தன் நெஞ்சை சுட்டி காட்டினான்.
“ரிஷி!” கண்கள் கலங்க அவனை பார்த்து கொண்டு நின்றவள் தன் மனதில் இருந்த கவலை எல்லாம் சற்று நீங்கினாற் போல உணர்ந்தாள்.
ஏற்கனவே அவன் மேல் காதல் கொண்ட மனது எத்தனை நேரத்திற்கு தான் தன் பிடிவாதத்தை இழுத்து பிடித்து வைத்து இருக்கும்.
அவனது ஓய்ந்து போன தோற்றத்தை பார்த்தே ஏற்கனவே சற்று மனது இளகி நின்றவள் இப்போது முழுமையாக தன் மனம் மாறி நின்றாள்.
பிரச்சினைகள் வரும் போது கணவன், மனைவி இருவரும் விட்டு கொடுக்காமல் நீ சரியா? நான் சரியா? என்று வாதாடுவதை விட யாராவது ஒருவர் விட்டு கொடுத்து போனால் என்ன நடந்து விடும் பிரச்சினை தான் இல்லாமல் போகும் அந்த விட்டு கொடுக்கும் பண்பை தானே எடுத்துக் கொள்ளலாம் என மனதிற்குள் முடிவெடுத்து கொண்டாள் அனுஸ்ரீ.
“நீங்க இந்தளவிற்கு மாறிப் போவீங்கன்னு நான் நினைத்து கூட பார்க்கல” சூழ்நிலையை சகஜமாக மாற்ற புன்னகையோடு அனுஸ்ரீ அவனைப் பார்த்து கூற
பதிலுக்கு அவளை பார்த்து புன்னகத்து கொண்டவன்
“எல்லாம் இந்த கை செய்த மாயம்” என்றவாறே தன் கன்னத்தை தடவி விட்டு கொண்டு கூறவும்
“ரிஷி!” என்ற சிணுங்கலோடு அவன் மேல் சாய்ந்து கொண்டாள் அனுஸ்ரீ.
“காதலோ கல்யாணமோ பிரச்சினை இல்லாமல் இருக்காது அப்படி வர்ற ஒவ்வொரு பிரச்சினையும் தான் நம்மை சுற்றி இருக்கும் நம்மளோட உண்மை நிலையை நமக்கு சொல்லி தர்ற விடயங்கள் அதை நான் நல்லாவே உணர்ந்துட்டேன் ரிஷி” மனம் இலேசானது போல உணர்ந்தவள் புன்னகையோடு அவன் மார்பில் சாய்ந்தவாறே அவனை பார்த்து கூற
அவள் நெற்றியில் தன் இதழ் பதித்தவன்
“நீ சொல்றது நூறு சதவீதம் உண்மை தான் அனு பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை அந்த பிரச்சினையை எல்லாம் கடந்து போறது தான் வாழ்க்கை!
பாரேன் கடைசியில் என்னையும் நீ தத்துவம் பேச வைச்சுட்ட” அவளை பார்த்து கண் சிமிட்டிக் கூற
“உங்களை!” என்று அவன் மார்பில் குத்தியவள் மீண்டும் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.
சிறிது நேரம் அவளை அணைத்துக் கொண்டே நின்றவன் ஏதோ நினைவு வந்தவனாக
“அய்யய்யோ!” எனப் பதட்டத்துடன் கூற
“என்னாச்சு ரிஷி?” அனுஸ்ரீயும்
பதட்டத்துடன் அவனை பார்த்து கேட்டாள்.
“தாமரைகிட்ட தகவல் சொல்றதா சொல்லிட்டு வந்தேன் உன்னை பார்த்ததும் சந்தோஷத்தில் அதை மறந்தே போயிட்டேன்” ரிஷி தன் தலையில் கை வைத்து கொண்டு கூறவும்
“இவ்வளவு தானா? வாங்க நம்ம நேரிலேயே போய் அவளை பார்த்துட்டு வந்துடலாம்” புன்னகையோடு கூறி விட்டு அனுஸ்ரீ அவனிடம் இருந்து விலகி முன்னால் நடக்கப் போக அவனோ அவள் கை பிடித்து தடுத்தான்.
கேள்வியாக அவன் அவனை பார்க்க
“இன்னைக்கு நீ எங்கேயும் போக முடியாது என்னை கொஞ்ச நேரம் தவிக்க விட்ட இல்லையா? அதனால இன்னைக்கு நாள் முழுவதும் நான் உன்னை ஒரு செக்கன் கூட விலக மாட்டேன்” என்றவாறே அவளை நெருங்கி வந்து
“தாமரைக்கு ஒரு மெசேஜ் போட்டுட்டா விஷயம் முடிந்தது” என்று விட்டு தன் போனை எடுத்துக் கொள்ள அவளோ வெட்கப் புன்னகையோடு அவனைப் பார்த்து கொண்டு நின்றாள்.
“ஓகே டன்” தன் போனை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டு கொண்டவன் அனுஸ்ரீயை பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்தினான்.
அவள் வெட்கத்தோடு தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்ள தன் ஒரு விரல் கொண்டு அவள் கன்னத்தை தன் புறமாக திருப்பியவன் அவள் நெற்றியில் தன் இதழ் பதித்தான்.
பழைய நினைவுகளில் ரிஷி ஒரு கணம் தயங்கி நிற்க அவனது தயக்கத்தைப் போக்குவது போல அவனை இறுக அணைத்துக் கொண்டாள் அனுஸ்ரீ.
அவளது அந்த ஒரு அணைப்பே அவன் தயக்கத்தை தகர்த்தெறிய அவள் தாடையை பற்றி அவள் முகம் நிமிர்த்தியவன் அவள் கண்களை சிறு நேரம் பார்த்து கொண்டு நின்றான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகத்தை தன் விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டவன் பார்வையோ அவள் இதழ்கள் மேல் வந்து நின்றது.
“தேவி! வித் யுவர் பர்மிஷன்?” அவன் பார்வை கேள்வியாக அவள் இதழ்கள் மேல் நிலை குத்தி நிற்க அவள் கன்னங்களோ சூழ இருந்த அந்தி வானத்தின் சிவப்பை தத்தெடுத்து கொண்டது.
அந்த வெட்கமே அவள் சம்மதத்தை அவனுக்கு சொல்ல அவள் இதழ்கள் அவன் இதழ்கள் வசமானது.
அந்தி மாலை வானம் அவர்களை பார்த்து வெட்கம் கொண்டு சிவந்து போக ரிஷியின் காதல் எனும் மாயம் அனுஸ்ரீயையும், அனுஸ்ரீயின் காதல் எனும் மாயம் ரிஷியையும் சூழ்ந்து கொண்டது.
அவர்கள் இருவரும் தங்கள் மாயக் காதலில் மூழ்கிப் போய் இருக்க இனி என்றும் அவர்கள் வாழ்வில் சந்தோஷமே நிறைந்து இருக்கும்.
……..முற்றும்……….