Rainbow Kanavugal-12

12

அஜயும் மதுவும் திருமண சடங்குகள் முடிந்து மணடபத்திலிருந்து மணகோலத்தில் வீட்டிற்கு திரும்ப, ஆரத்தி எடுத்து அனன்யா மணமக்களை வரவேற்றாள்.

அவர்கள் நுழைந்த மாத்திரத்தில் அவர்களோடு சேர்ந்து அனைவருமே அந்த பங்களாவின் தரைதளத்தின் வலதுபுறத்தில் அமைந்திருந்த அறைக்குள் பிரவேசிக்க, அங்கே மருத்துவ நெடி வீசியது.

“அம்மா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிப்போம் மது” என்று அஜய் சொல்ல, “ஹம்ம்” என்று அவளும் அவனும் படுக்கையில் கிடந்த அவர் பாதங்களை தொட்டு வணங்கினர்.

ரேவதி – அஜயின் அம்மா. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக படுக்கையில் கிடக்கிறார். உணர்வுகளில்லா ஆழ்ந்த உறக்க நிலை என்று சொன்னால் சரியாக இருக்கும். மெடிக்கல் டெர்ம்ஸில் சொன்னால் கோமா!  நினைவு இழக்கும் நிலை!

அஜயின் விழிகளில் ஈரம் கசிய அது அவன் அம்மா ரேவதியின் பாதங்களில் பட்டு தெறித்தது. “அஜய் ஆழாதீங்க… நம்ம இப்பதான் ரொம்ப நம்பிக்கையா இருக்கணும்…” என்றவள் அவன் முகம் பார்த்து,

“நீங்க பார்த்துக்கிட்டே இருங்க… இனிமே நான் கொடுக்க போற தொந்தரவு தாங்க முடியாம ரேவே எழுந்து உட்காரங்களா இல்லையான்னு” என்று சொன்னதும் எல்லோரும் சிரித்துவிட்டனர். அந்த அறையை சூழ்ந்திருந்த இறுக்கமான சூழ்நிலை இளகியது.

அப்போது நந்தினி பின்னிருந்து மகளின் காதை திருகியவர், “அத்தைன்னு சொல்லாம பேர் சொல்ற” என்று கண்டிக்க,

“விடும்மா… அப்படி கூப்பிட்டாதான் அத்தைக்கு பிடிக்கும்” என்றாள். மீண்டும் சிரிப்பொலி அந்த அறையை நிறைத்தது.

பாஸ்கரன் நெகிழ்ச்சியோடு மதுவை பார்த்து, “இதுக்குதான் மது நீ நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னு நான் ஆசைப்பட்டதே” என்று சொல்ல, தாமு நந்தினி முகத்தில் பெருமிதமான புன்னகை படர்ந்தது.

அதன் பின் அவர்கள் எல்லோரும் அந்த அறையை விட்டு வெளியே வர நந்தினி மட்டும் அங்கேயே தேங்கி நின்றார்.

“நீங்க சீக்கிரம் முழிச்சிக்கணும் க்கா… நானும் அவரும் கஷ்டப்பட்ட காலத்தில நீங்கதான் ஒரு சகோதிரியா கூட இருந்து நான் கேட்காமலே எனக்கு நிறைய உதவி செஞ்சீங்க… உங்க உதவியை எல்லாம் என்னால எந்த காலத்திலையும் மறக்கவே முடியாது… இப்போ உங்களை இப்படி படுத்த படுக்கையா பார்க்க எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு” என்று அவர் கண்ணீர் பெருக சொல்ல பின்னே வந்து நின்ற தாமு,

“கவலைப்படாதே நந்து… சீக்கிரம் சரியாயிடுவாங்க” என்று ஆறுதல் கூறினார்.

“கடவுள் ஏன் நல்லவங்களுக்கு மட்டும் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிறாரோ?” என்று நந்தினி ஆதங்கப்பட்டு கொண்டே தன் கண்ணீரை துடைத்து கொண்டார்.

அதன் பின் மணமக்களுக்கு பாலும் பழமும் தரும் சடங்குகள் எல்லாம் முடிய அஜய் தன் பேசியை எடுத்து கொண்டு விலகி தோட்டத்திற்கு சென்றவன் ஏதோ முக்கியமான உரையாடலில் ஈடுபட்டிருந்தான்.

அப்போது பாஸ்கரன் மதுவிடம் திரும்பி, “நீ கொஞ்ச நேரம் ரூம்ல போய் ரெஸ்ட் எடுத்துக்கமா” என்று அவளை மேலே அனுப்பி வைத்தார். அஜய் அறைக்குள் தயக்கத்தோடு நுழைந்தவளுக்கு அத்தனை நேரம் முகத்தில் ஒட்டி கொண்டிருந்த புன்னகை மறைந்தது. அந்த திருமணத்திற்கு மனதார சம்மதம் சொன்னாலும் அது இத்தனை அவசரமாக நடந்து முடியுமென்று அவள் எதிர்பார்க்கவில்லை.

சற்று முன்பு திடமாக அதேநேரம் சூட்டிகையாக பேசிய மதுவா இது என்று வியக்குமளவுக்கு முற்றிலுமாக அவள் வேறு பரிமாணத்திற்கு மாறியிருந்தாள்.

புது மணபெண்ணிற்கே உரித்தான சௌந்தரியம் மதுவின் தோற்றத்தில் இருந்ததே ஒழிய அதற்கான சந்தோஷம் அவள் முகத்தில் துளியும் இல்லை.

அறையிலிருந்த ஆளுயுயர கண்ணாடி அவள் பிம்பத்தோடு சேர்த்து தவிப்பிலிருந்த அவள் மனதையும் பிரதிபலித்தது. கல்யாண பட்டுடுத்தி தங்க ஆபரணங்களெல்லாம் பூட்டி ஒப்பனைகளோடு அழுகு பதுமையென நின்றிருந்த அந்த மது அவளுக்கு ரொம்பவும் புதிது. ஆச்சரியமாக நின்று அவளின் பிம்பத்தை அவளே பார்த்து கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட மூன்று நாட்களாக அவளுக்கு தனிமையே கிட்டவில்லை. பந்தக்கால் அமைத்து காலையும் மாலையும் நலங்கு வைத்து, தோழிகள் சூழ அவர்கள் கிண்டல் கேலிகளோடு அவளின் திருமண நிகழ்வு ஒரு விழாவை போல கோலாகலமாக அதேநேரம் அவள் பிரமித்து போகுமளவுக்கு அத்தனை பிரமாண்டமாக அரங்கேறியது.

சபை நிறைந்து மனம் நிறைந்து வாழ்த்தொலியிலும் மங்கள இசையிலும் அந்த மண்டபமே நிறைந்து தளும்பியது.  திருமணமானதற்கான அத்தாட்சியாக தழை தழைய தொங்கி கொண்டிருந்த அந்த மஞ்சள் தாலியும் அஜய் அவள் நெற்றிவகுட்டில் இட்டுவிட்ட அந்த குங்குமமும் அவளின் அழகுக்கு அழகு சேர்த்திருந்தது.

இருப்பினும் அதை பார்க்கும் போது எதையோ இழந்த உணர்வும் பரிதவிப்பும் அவளை சூழ, தன் மனஉணர்வுகளை சமனப்படுத்தி கொள்ள இப்படியொரு தனிமை கிட்டாதா என்றவள் மனம் ஏங்கி தவித்தது.

அதுவும் ஒரே மாதத்தில் தன் வாழ்க்கையை தலைகீழாக மாறி போகும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லையே. விதி எப்போது எப்படி நம் வாழ்க்கையை புரட்டி போடும் என்பதை எவன் ஒருவனாலும் கணிக்க முடியாது. மது மட்டும் அதில் விதிவிலக்கா என்ன?

மீண்டும் அஜய் அவள் வாழ்வில் நுழைந்தது தற்செயல் அல்ல. விதியின் விளையாட்டுதான். அவன் காதலை பற்றி யோசித்தாலே ஒருவிதமான பயஉணர்வு பற்றி கொள்கிறது அவளுக்கு!

அஜய் தன் உயிரை மாய்த்து கொள்வேன் என்ற சொன்னதோடு அன்றைய அதிர்ச்சிகள் முடியவில்லை. அஜய் அனன்யாவின் அம்மா ரேவதி கோமா நிலையில் கிட்டதட்ட ஒருவருடமாக இருந்து வரும் செய்தியை புறப்படும் தருவாயில் சொன்ன பாஸ்கரன், “இந்த விஷயத்தை முதலையே சொன்னா உங்களோட சந்தோஷம் ஆரம்பத்திலேயே பறிபோயிடும்னுதான் நானும் அஜயும் இதை பத்தி சொல்லல” மதுவோடு சேர்த்து தாமுவும் நந்தினியும் கலங்கி நின்றனர்.

சுயநினைவின்றி வெறும் உடலாக கிடந்த ரேவதியின் நிலையை பார்த்து அதிர்ந்தனர்.

“மது இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா முதல சந்தோஷபடுற ஆளு ரேவதிதான்” என்று சொன்ன போது தாமு நந்தினியால் எதுவுமே பேச முடியவில்லை.

“உன் பொண்ணு மது மட்டும் என் வீட்டுக்கு வந்தா இந்த வீட்டோட கெட்ட காலமெல்லாம் சரியாகி ரேவதிக்கும் சுயநினைவு வந்திரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று பாஸ்கரன் திடமாக சொன்ன அதேநேரம் நண்பன் கைகளை பற்றி கொண்டு அதையே ஒரு வரமாகவும் கேட்டார்.

அதற்கு மேல் தன் நண்பன் பேச்சை மறுக்க இயலாமல், “கண்டிப்பா பாஸ்… என் பொண்ணுதான் உனக்கு மருமக” என்று அவரும் வாக்கு கொடுத்தார். இமைக்கும் நொடிகளில் எல்லாம் முடிந்து போனது.

மறுத்து பேச எந்தவழியும் இல்லை. எப்போதும் தன் தன் பெற்றோரிடம் மது தன் எண்ணங்களை ஒளிவு மறைவின்றி பேசிவிடுவாள். ஆனால் இப்போதிருக்கும் அவள் மனநிலையை அவர்களிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

சந்தோஷத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் கண்ணீரை ரொம்பவும் நெருக்கமானவர்களிடம் மட்டுமே காட்ட முடியும். சரவணனிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அவள் மனம் வருந்தி அழ, அவன் அதிர்ந்துதான் போனான்.

மதுவிற்கு அழ கூட தெரியுமா? அத்தனை சீக்கிரத்தில் அவள் உடைந்து போகிறவள் கிடையாதே!

ஆனால் சரவணனை தவிர வேற யார் அந்த இடத்தில்  இருந்தாலும் அவளை தேற்றியிருக்க முடியாது.

“நீ அஜயை விரும்புற மது… அதுதான் உன்னை பலவீனமாக மாத்தி இருக்கு… நீயே நினைச்சாலும் இந்த கல்யாணத்தை உன்னால வேண்டாம்னு சொல்ல முடியாது” என்று அவள் மனதை அவளுக்கே தன் செய்கை மொழியால் புரிய வைத்தவன்,

“இந்தளவு அன்பும் காதலும் கிடைக்க குடுத்து வைச்சிக்கணும்… நீ எங்க போனலும் நீ நீயா இருப்ப… கவலைபாடாதே” என்று நம்பிக்கை மொழி பேசிய அவன் விழிகள் அஜயை திருமணம் செய்து கொள்ளும் முடிவை அவளை மனதார ஏற்கவும் வைத்தது.

ஆனால் அதன் பிறகு நடந்த விஷயங்கள்தான் இந்த திருமணத்தை அஜய் இத்தனை சீக்கிரமாக ஏற்பாடு செய்து முடிக்க காரணம்.

****

பாலியில் தொந்தரவின் காரணமாக பள்ளி சிறுமி தற்கொலைக்கு முயன்ற அந்த வழக்கிலிருந்து மது எந்த சூழ்நிலையிலும் பின்வாங்குவதாக இல்லை. அவள் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அரசிய்லவதியின் மகனை சரியாக சிக்க வைத்திருந்தாள். அவள் சேகரித்து தந்த ஆதாரங்களே அவனுக்கு தண்டனை வாங்கி தர போதுமானது.

வீட்டிலுள்ள யாருடைய அறிவுரையும் அவள் கேட்பதாக இல்லை. அந்த வழக்கை நடத்துவதில் அவள் பிடிவாதமாக இருந்தாள்.

அன்று அவள் அது விஷயமாக நீதிமன்றம் சென்ற போது அஜய் அவளை பார்க்க அங்கே வந்திருந்தான்.

“இங்கே ஏன் வந்தீங்க அஜய்?”

“என்னவோ? உன்னை பார்க்கணும் போல இருந்துது”

“அதுக்கு இங்கேயா?”

“நீ எங்க இருப்பியோ அங்கேதானே வர முடியும்”

“எதாச்சும் முக்கியமா பேசணுமா?”

“ம்ம்ம்” என்றவன் அவளிடம் எதையோ சொல்ல தயங்க,

“நீ கிளம்பு அஜய்… நான் வேணா அப்புறமா வீட்டுக்கு வரேன்… பேசலாம்… அப்படியே அத்தையை பார்த்த மாதிரி இருக்கும்” என்றவள் சொல்லிவிட்டு திரும்பி செல்ல பார்க்க அவள் கரத்தை பிடித்து தடுத்தான் அவன்.

“என்ன அஜய்?” என்றவள் கேள்வியாக அவனை பார்க்க,

“எனக்கு நீ இந்த கேசை எடுத்து நடத்துறது சரியா படல” என்றவன் சொன்ன நொடி

“என் ப்ரோபஷன்ல யார் தலையிட்டாலும் எனக்கு பிடிக்காது” என்றவள் தீர்ககமாக சொல்லிவிட்டு அவன் பிடியிலிருந்து தன் கரத்தை உதறி கொண்டு அவள் செல்ல எத்தனிக்கும் போது ஒரு துப்பாக்கி குண்டு அஜய் சாய்ந்து நின்றிருந்த கார் கண்ணாடியில் பட்டு அதன் கண்ணாடி துகள்கள் சிதறியது.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் அது மதுவின் இதயத்தை துளைக்க வந்த குண்டு. இருவருமே அந்த காட்சியை பார்த்து அதிர்ந்து நிற்க, மது என்னவென்று புரியாமல் திரும்பி பார்த்தாள்.

அதற்குள் அடுத்த குண்டு அவளை நோக்கி பாய்ந்துவர  அஜய் அவளை அணைத்து பிடித்து கொண்டான். அந்த குண்டு அவன் இடது கரத்தில் துளைத்து ரத்தம் பீறிட்டது.

நீதிமன்ற வளாகத்திலுள்ளவர்கள் பயத்தில் கூக்குரலட்டு ஓடினர்.

“அஜய்” என்றவள் அதிரும் போது அவன் தனக்கு காயம்பட்டதையும் பொருட்படுத்தாமல் அவளை காருக்குள் தள்ளிவிட்டு குருதியில் நனைந்த அந்த கையோடு காரை இயக்கினான்.

“அஜய் உன் கையில ரத்தமா கொட்டுது” என்றவள் சொன்னதை அவன் காதில் வாங்கவேயில்லை. அவளை காப்பாற்ற வேண்டுமென்பதே அவனின் பிரதான நோக்கமாக இருந்தது.

அந்த இடத்தை விட்டு மருத்துவமனை வந்து சேரும் வரை பல்லை கடித்து கொண்டு தன் வலியை பொறுத்தபடி காரை இயக்கினான்.

“ஐயோ! அஜய்” என்றவள் அவன் கரத்தில் வழிந்த ரத்தத்தை கண்டு பதறி துடித்தாள்.

அவன் மருத்துவமனை வந்து சேர்ந்த பின்னர் அவனுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவள் மனம் தவிப்பில் ஆழ்ந்தது.

மருத்துவர் அவன் கையிலிருந்து குண்டை நீக்கிவிட்டு கட்டுகள் போட்ட பின்னர், “பயப்படுற அளவுக்கு எதுவும் இல்ல” என்று சொல்லும் வரை அவள் உயிர் அவளிடம் இல்லை. அவன் காதலின் ஆழத்தையும் வீரியத்தையும் எடுத்து சொல்ல இதற்கு மேல் ஓர் விஷயம் வேண்டுமா?

‘நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலன்னா ஐ ல் கில் மை செல்ப்’ என்ற அஜயின் கூற்றுதான் அவள் காதில் தொடர்ந்து ஒலித்து கொண்டேயிருந்தது.

மருத்துவர் சிகிச்சை முடித்து வெளியே வரவும் அவள் கண்ணீரோடு உள்ளே செல்ல, அவன் திடமாகவே அமர்ந்திருந்தான்.

“சாரி அஜய்… என்னாலதான் உனக்கு இப்படி” என்றவள் அவன் அருகாமையில் நின்று கண்ணீர் விட, “ப்ளீஸ் மது… நீ  அழறதை என்னால பார்க்க முடியாது… எனக்கு ஒன்னும் இல்ல… ஐம் ஓகே” என்றான் சாதாரணமாக!

அவள் தன் கண்ணீரை துடைத்து கொண்ட போதும் அவள் முகம் வாடியிருந்தது. அவள் கரத்தை தன் கரத்திற்குள் சேர்த்து கொண்டவன், “இப்பயாச்சும் நான் சொல்றதை கேளு மது… இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் உனக்கு வேண்டாம்… விட்டுடு” என்றான்.

“அப்போ யாரும் தப்பை தட்டி கேட்கவே கூடாதா?” என்று அவள் சீற்றமாக அதேநேரம் வேதனையாக வினவ,

“தட்டி கேட்டா இங்க எல்லாம் மாறிடுமா… கோர்ட்லயே உன்னை கொலை பண்ண முயற்சி செஞ்சிருக்காங்கன்னா இந்த நாட்டிலயா நீதி நியாயமெல்லாம் ஜெயிக்கும்னு நீ நினைக்கிற” என்று உறுதியாக கேட்டான். அவள் பதிலேதும் பேசாமல் மௌனமாக நிற்க,

“உனக்கு கஷ்ட்பபடுறவங்களுக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணனும்னா சொல்லு… அதுக்கு நம்மலே ஒரு ட்ரஸ்ட் ஏற்பாடு பண்ணி செய்வோம்… ஆனா உனக்கு இந்த பிரச்சனையெல்லாம் வேண்டாம்… என்னை கேட்டா இந்த வக்கீல் தொழிலே உனக்கு வேண்டாம் மது” என்று சொன்ன நொடி,

“அஜய்” என்று அதிரந்தபடி தன் கரத்தை அவன் கரத்திலிருந்து விலக்கி கொண்டாள்.

“மது நான் சொல்றதை புரிஞ்சிக்க”

“சாரி அஜய் அது மட்டும் என்னால முடியாது”

“என் கையில பட்டிருந்த குண்டு… என் நெஞ்சில பட்டு நான் செத்து போயிருந்தா என்ன பண்ணியிருப்ப?”  அஜயின் இந்த கேள்வியில் அதிர்ந்தவள்,

“ஏன் இப்படி எல்லா விஷயத்திலயும் இமோஷன்லா பேசி என்னை கார்னர் பண்ணி பார்க்குற அஜய்” என்றாள் மது!

“நான் உன்னை கார்னர் பண்ண பார்க்கல… உன் நல்லதுக்குதான் சொல்றேன்?”

“வேற என்ன வேணா சொல்லு அஜய்… நான் கேட்கிறேன்… ஆனா இது மட்டும் முடியாது”

சில நொடிகள் மௌனமாக அவளை பார்த்திருந்தவன், “சரி மது… அப்படின்னா இந்த மாசமே நம்ம கல்யாணம் நடக்கணும்” என்றான் முடிவாக!

அவள் தட்டுதடுமாறி அவன் சொன்னதை ஏற்க முடியாமல், “அதெப்படி முடியும் அஜய்… வீட்டுல எல்லாம் கேட்க வேண்டாமா… அதுவும் இல்லாம் உன் கையில அடிப்பட்டிருக்கும் போது” என்று அவள் காரணங்கள் சொல்ல,

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் மது… நீ சம்மதம் மட்டும் சொல்லு போதும்” என்றான்.

“நீ எந்த பக்கம் வந்தாலும் என்னை கார்னர் பண்ற”

“நான் கார்னர் பண்ணல… நம்ம கல்யாணம் சீக்கிரம் நடக்கணும்னுதானே கேட்கிறேன்”

அவன் கேட்பதற்கு பின்னிருக்கும் சூட்சமம் என்னவென்று அவளால் சரியாக விளங்கி கொள்ள முடியவில்லை.

ஆனால் ஒன்று. தன் வேலையை எப்படி நிராகரிக்க முடியாதோ அப்படி அஜயின் காதலையும் அவளால் இனி மறுதலிக்க முடியாத இக்கட்டான நிலையில் நின்றிருந்தாள். அவனுக்கு சரியென்று சொல்வதை தவிர அவளுக்கு வேறு  வழியும் இருக்கவில்லை.

அதற்கு பின் துரிதமாக திருமண ஏற்பாடுகள் நடந்து, அவன் எண்ணம் போல அவர்கள் திருமணமும் முடிந்துவிட்டது. ஆனால் இப்போது யோசித்து பார்த்தால் அவன் ஒரு மாதத்தில் இந்த திருமணத்தை நடத்த சம்மதம் கேட்டதற்கு பின்னணியில் அவன் தன்னை மொத்தமாக முடக்க எண்ணுகிறானோ என்ற பயம் எழுந்தது.

அஜயின் பிடிவாதம்தான் எல்லா இடத்திலும் ஜெயிக்கிறது. அதற்கேற்றார் போல் சூழ்நிலைகளும் அவனுக்கு சாதகமாகவே அமைந்தன.

அப்போது அறைகதவு தட்டும் ஓசை கேட்டு தன் சிந்தனைகளிலிருந்து மீண்டவள் கதவை திறக்க, அஜய் உள்ளே வந்தான். அவன் அந்த நொடி பொழுதில் கதவையும் தாளிட்டுவிட்டு, அவளை பார்வையாலேயே வருடினான்.

அவள் அவன் பார்வையின் பொருளறிந்து விலக முற்பட அவன் சாமர்த்தியமாக அவளை நெருங்கி வந்து அவளை இழுத்து தன் கைவளைக்குள் நிறுத்தி கொண்டான்.

“என்னை மட்டும் தனியா கீழே விட்டுட்டு வந்துட்ட” என்றவன் கிறக்கமாக அவள் விழிகளை பார்க்க,

“என்ன அஜய் இது? விடு” என்றவள் தவிப்புற, இன்னும் இறுக்கமாக தன் மார்போடு அவளை பிணைத்து கொண்டான்.

“அஜய் என்ன பண்ற நீ?” என்றவள் அவன் கரத்திலிருந்த வெளியே வர முயல, அவளிடம் அவன் கரங்கள் அத்துமீற தொடங்கிய நொடி அவள் பேச வார்த்தைகளற்று நின்றாள்.

அவனோ அவளை அணைத்தபடியே, “அழகு தேவதை மாதிரி உன்னை பக்கத்துல நிற்க வைச்சிட்டு நான் நேத்தில இருந்து பட்டப்பாடு எனக்கு மட்டும்தான்டி தெரியும்… இப்படி ஒரு சந்தர்ப்பம் எப்போ கிடைக்கும்னு காத்திட்டு இருந்தேன் தெரியுமா?” என்றவன் பார்வை அவளை அங்கம் அங்கமாக தழுவ அவன் இதழ்கள் அவள் உதட்டை நோக்கி இறங்கி வரவும்,

“அஜய்“ என்று அவள் சுதாரித்து கொண்டு அவன் உதட்டை தன் கரம் கொண்டு மூடியிருந்தாள்.

“ஏ மது” என்றவன் ஏமாற்றமும் எரிச்சலும் கொள்ள,

“இப்ப என்னை விட போறீயா இல்லையா?” என்றவள் முகம் கோபமாக மாறியது. ஆனால் அவன் பிடி கொஞ்சம் கூட தளரவில்லை.

“நான் சின்ன வயுசல எவ்வளவு முத்தம் கேட்டாலும் கொடுப்ப… இப்ப மட்டும் ஏன் டி முரண்டு பிடிக்கிற” என்றவன் முகம் கடுகடுக்க,

“அது சின்ன வயசுன்னு நீயே சொல்லிட்ட இல்ல… அதுவுமில்லாம அப்போ நான் எதாச்சும் கேட்பேன்… நீ செஞ்சி கொடுப்ப… நான் முத்தம் கொடுப்பேன்” என்றவள் சொல்லி கொண்டே அவன் கரத்திற்குள் அவஸ்தையாக நெளிந்தாள்.

“இப்ப கேளுடி…. நீ என்ன கேட்டாலும் அது இந்த உலகத்தில எந்த மூலையில இருந்தாலும் நான் உனக்காக எடுத்துட்டு வந்து தருவேன்”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நீ என்னை விட்டாலே போதும்”

“சரி நீ முத்தம் கொடு… நான் விட்டுடுறேன்” என்றவன் அவள் உயரத்திற்கு இறங்கிவர,

அவள் வேகமாக அவன் கன்னத்தை திருப்பி பிடித்து தம் இதழ்களை பதித்தாள்.

“சீ… இது என்னடி சின்ன புள்ளைத்தனமா நீயும் நானும் இப்போ வளர்த்துட்டோம்… முக்கியமா புருஷன் பொண்டாட்டியாகிட்டோம்” என்றவன் கரம் மேலும் மேலும் அவளை தன் உடலோடு கட்டியிழுக்க,

“அஜய்” என்றவள் அதிரும் போது அவன் உதடு அவள் இதழ்களை தழுவியிருந்தது.

இருவருக்குமான முதல் காதல் முத்தம். விழிகள் நான்கும் மூடி கொள்ள உயிருக்குள் உணர்வுகள் விழித்து கொண்டு அவர்களை காதல் நிலையின் அடுத்த நிலையான மோக நிலைக்குள் இழுத்து சென்றது.

காற்றை கூட இடையில் புகவிடாத அஜயின் அணைப்பிற்குள் அவள் திண்டாடித்தான் போனாள். வெகு நாளைய காத்திருப்பிற்கு பின் அவன் காதலுக்காக கிடைத்த அந்த முதல் முத்தத்தை முழுவதுமாக அவன் அனுபவித்து திளைத்து முழ்கியிருந்தான்.

அவளை மூச்சுக்காக திணற வைத்த அந்த முத்தம் அவனை காதல் வெறியனாக மாற்றியிருந்தது.

அப்போது பார்த்து சிவ பூஜையில் கரடியாக, “டே அஜய்” என்று அனன்யா கதவை படபடவென தட்ட, இருவருமே நொடி நேரத்தில் விலகி நின்றனர்.

அஜய் முகத்தில் அத்தனை கடுப்பு. மதுவிற்கோ உலகமே மறந்த நிலை. ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டு கொள்ள, “அஜய் கதவை திறடா” என்று அனன்யா நிறுத்தாமல் தட்ட,

அவனும் கதவை திறந்துவிட்டான். அவள் அருணை தோள் மீது கிடத்தியபடி நின்றிருக்க, அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“என்னடி வேணும் உனக்கு?” என்றவன் படுகோபமாக கேட்க, “அதில்லடா… பாப்பா” என்று சொல்லி கொண்டே அவன் முகத்தை பார்த்தவள் கொல்லென்று சிரித்துவிட்டாள்.

அஜய் மேலும் கடுப்பாகி, “இப்ப எதுக்குடி சிரிக்கிற?” என்றவன் கேட்கவும், “நீ எப்போத்தில இருந்து லிப்ஸ்டிக் போட ஆரம்பிச்ச” என்று கேட்ட நொடி தன் தவற்றை உணர்ந்து அவசரமாக கை குட்டை எடுத்து உதட்டை துடைத்து கொண்டே மது முகத்தை பார்க்க, அவளுக்கும் அந்த நொடி சிரிப்பு வந்துவிட்டது.

‘உன்னை அப்புறம் வைச்சுக்கிறேன்’ என்றவன் ஒற்றை விரலை அசைத்து மிரட்டி விட்டு சகோதிரியின் புறம் திரும்ப,

“என்ன நடந்திருக்கும்னு புரியுது… நடத்துங்க நடத்துங்க” என்றாள் அவள்.

“நீ எதுக்கு கதவை தட்டின… அதை முதல சொல்லு”

“அது குழந்தையை பார்த்துக்கிறியா… சுரேஷ் மண்டபத்தில இருந்து இன்னும் வரல… நான் கொஞ்சம் வெளியே போகணும்” என்றதும் அஜய் சீற்றமானான்.

அவன் திட்டலாம் என்று வாயெடுப்பதற்குள், “நீங்க கொடுங்க அனு… நான் பார்த்துக்கிறேன்” என்று மது வேகமாக சென்று அருணை வாங்கி கொண்டாள்.

“தேங்க்ஸ்” என்று அனன்யா அந்த நொடியே அங்கிருந்து பறந்துவிட்டாள்.

“அவ குழந்தைய கூட அவளால பார்த்துக்க முடியாதாம்மா… அப்படியென்ன அவளுக்கு கழற்ற வேலை” என்று அஜய் பொங்கி கொண்டிருக்க,

“விடு அஜய் பரவாயில்ல” என்று மது அருணை மடியில் வைத்து விளையாட்டு காட்டி கொண்டிருந்தாள்.

“அவளுக்கு சுரேஷ்னு ஒரு அடிமை சிக்கின மாதிரி நீயும் அவள் சொல்றதை செஞ்சிகிட்டு அவளுக்கு அடிமையா மாறிடாதே” என்று அஜய் கண்டிப்போடு சொல்ல,

“என்ன பேசுற அஜய்? அடிமை அது இதுன்னு… நம்மெல்லாம் ஒரே குடும்பம்… ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையை இருக்கிறதுக்கு பேர் அடிமைத்தனமா?” என்றவள் கேட்டு அவனை அழுத்தமாக பார்த்தாள்.

“உனக்கு தெரியாது மது… இவ எல்லாம் இடத்தை கொடுத்தா மடத்தை பிடிக்கிற ஆளு… இவகிட்ட நீ கொஞ்சம் லிமிட்டாவே இரு” என்று அஜய் சொன்னதை நம்ப முடியாமல் அதிர்ந்து பார்த்தவள்,

“என்ன அஜய் இப்படி பேசுற? அனன்யா உனக்கு சிஸ்டர்” என்று அவள் சொன்னதுதான் தாமதம்.

“உனக்கு அவளை பத்தி தெரியாது மது… இன்னைக்கு அம்மா இந்த நிலைமையில இருக்க அவதான் காரணம்” என்று சொன்ன அடுத்த நொடி அஜய் தன் உதட்டை கடித்து கொண்டான்.

“என்ன அஜய் சொன்ன?” மது குழப்பமாக அவன் முகம் பார்க்க,

“அது ஒன்னும் இல்ல… அவ லவ் மேரேஜ் பண்ணிகிட்டதுல அம்மாவுக்கு கொஞ்சம் வருத்தம்… அதனாலதான்” என்று அவன் சொன்ன காரணம் எதையோ பூசி மொழுகுவதில் போல் தோன்றியது.

அவனை அவள் ஆழ்ந்து பார்க்க அவள் பார்வையை எதிர்கொள்ளாமல் வேகமாக அந்த அறையை விட்டு அவன் வெளியேறிவிட்டான்.

அப்போது “ங்கே ங்கே” என்று தன் மழலை மொழியால் அவளிடம் தன் பிஞ்சு கைகளை அசைத்து பேசி கொண்டிருந்த அருண் அவள் எண்ணத்தை திசை திருப்பியிருந்தான். அவளும் அஜய் பேசியதை குறித்து அப்போது பெரிதாக பொருட்படுத்தவில்லை.

error: Content is protected !!