Mayam 8

Mayam 8

அனுஸ்ரீ கேட்டு இருந்த ஒரு வாரம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே மீதமிருந்தது.

ராதாவும், முத்துராமனும் அவளது முடிவு தெரியும் வரை அங்கேயே இருப்பதாக கூறி விட அதை கேட்டு தெய்வநாயகி சந்தோஷம் கொண்டாரோ இல்லையோ அனுஸ்ரீ பெரிதும் மகிழ்ந்து போனாள்.

இத்தனை நாட்கள் இரு வெவ்வேறு துருவங்களாக இருந்து வந்தவர்கள் இப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் தன் திருமணத்தை பற்றி எண்ணி தங்கள் பிரச்சினைகளை எல்லாம் மறந்து இருப்பதைப் பார்த்து அந்த பிள்ளையுள்ளம் மகிழ்ச்சி அடையாமல் இருந்தால் தான் அதிசயம்.

தோட்டத்தில் வேலை செய்யும் நேரத்தில் எல்லாம் அடிக்கடி அனுஸ்ரீ தன் தாயையும், தந்தையையும் பார்த்து கொண்டு நிற்பாள்.

ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் போது அவர்கள் இருவரது பார்வையும் ஒருவரை ஒருவர் ஏக்கத்துடன் தழுவி செல்வது அவளது கண்களுக்கு படாமல் இல்லை.

மனதில் ஆசையும், காதலும் இருந்தும் ஒருவருக்கொருவர் வீண் பிடிவாதமாக இருப்பதைக் கண்டு கொண்டவள் அவர்கள் மன எண்ணத்தை அவர்கள் இருவருக்கும் புரிய வைத்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால் அதை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் அவளுக்கு தெரியவில்லை.

அன்றும் வழக்கம் போல தோட்டத்தில் களைகளை எல்லாம் அனுஸ்ரீ அகற்றி கொண்டு இருக்க தெய்வநாயகியோ மரங்களுக்கு நீர் பாய்ச்சி கொண்டு நின்றார்.

“அனும்மா!”

“சொல்லுங்க பாட்டி”

“நீ கேட்ட ஒரு வாரம் முடிய இன்னும் இரண்டு நாள் தான் டா இருக்கு”

“தெரியும் பாட்டி”

“என்னம்மா இவ்வளவு சாதாரணமாக சொல்லுற? அவங்களுக்கு ஒரு முடிவு சொல்ல வேணாமா?”

“அது பற்றி உங்க கிட்ட ராத்திரி பேசலாம்னு நினைச்சேன் இப்போ நீங்களே கேட்டுடீங்க”

“அப்படியா! நீ முடிவு எடுத்துட்டியா அனும்மா?” கையில் இருந்த தண்ணீர் பாத்திரத்தை தரையில் வைத்தவர் தன் கைகளை துடைத்து கொண்டே அனுஸ்ரீயின் எதிரில் வந்து புற்தரையில் அமர்ந்து கொண்டார்.

“நீ என் கிட்ட என் நம்பிக்கையை பொய்யாக்காமல் முடிவு எடுப்பேன்னு தானே சொன்ன?”
தெய்வநாயகி கண்களில் ஆவலைத் தேக்கி வைத்து கேட்க

புன்னகையோடு அவரைப் பார்த்து தலை அசைத்தவள்
“ஆமா பாட்டி அன்னைக்கு அப்படி தான் சொன்னேன் இனியும் அப்படி தான் சொல்லுவேன் உங்க நம்பிக்கை ஒரு நாளும் பொய்யாகாது” என்று கூற அவரோ குழப்பமாக அவளைப் பார்த்தார்.

“நீ என்ன தான் ம்மா சொல்ல வர்ற?”

“நான் கல்யாணம் பண்ணிக்குறேன் பாட்டி உங்களுக்காக உங்க சந்தோஷத்திற்காக” அவளது ஆரம்ப வசனத்தை கேட்டு முகம் மலர்ந்து போனவர் இறுதியாக சொன்ன வார்த்தைகளை கேட்டதுமே முகம் வாடிப் போனவர்.

அவரது முக மாற்றத்தை பார்த்து கவலை கொண்ட அனுஸ்ரீ
“என்னாச்சு பாட்டி?” என அவர் தோள் மேல் கை வைத்து வினவ

“நீ உன் சந்தோஷத்திற்காக தான் இந்த கல்யாணம் பண்ணிக்கணுமே தவிர எனக்காக உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லைனே விடு நான் கட்டாயப்படுத்தல” என்றவாறே அங்கிருந்து எழுந்து கொள்ள போக அவசரமாக அவர் கை பிடித்து அவரை எழுந்து கொள்ள விடாமல் செய்தவள் சிறிது நேரம் அமைதியாக அவரது முகத்தை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

“எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு இல்லை பாட்டி எனக்கு அவரைப் பிடிச்சு இருக்கு தான் ஆனா” என்றவளது பார்வையோ வாசலில் எதிரெதிரே நடந்து வந்து கொண்டிருந்த தன் தாய், தந்தையின் முகத்தில் நிலை குத்தி நின்றது.

அவளது பார்வை சென்ற திசையை பார்த்தே அவளது மன எண்ணத்தை கண்டு கொண்ட தெய்வநாயகி
“உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சு இருக்கு தானே? அது போதும் மீதி எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று கூறவும் அப்போதும் சிறிது தயக்கத்துடன் தன் பாட்டியின் முகத்தை நோக்கினாள் அனுஸ்ரீ.

“இன்னொரு விஷயமும் இருக்கு பாட்டி”

“என்ன விஷயம்?”

“எனக்கு இந்த கிராமத்தை விட்டு போக முடியாது நான் இங்கேயே தான் இருக்கணும்னு ஆசைப்படுறேன் என்னால சிட்டியில் திரும்பவும் இருக்க முடியாது” தெய்வநாயகியின் சேலை முந்தானையை கையில் வைத்து சுருட்டிய படி தயங்கி தயங்கி அனுஸ்ரீ கூறவும் அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்தார் தெய்வநாயகி.

“ஏன் பாட்டி சிரிக்குறீங்க?”

“அன்னைக்கு பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளையோட அக்கா சொன்ன விஷயத்தை நீ அப்போ கவனிக்கலயா?”

“என்ன? என்…என்ன சொன்னாங்க?”

“மாப்பிள்ளைக்கு நம்ம ஊர் ரொம்ப பிடிச்சு போச்சாம் ஒரு வேளை எல்லாம் சரியாக முடிந்து இந்த கல்யாணமும் நடந்து அதற்கு அப்புறமும் நீ இந்த ஊரில் தான் இருக்கணும்னு ஆசைப்பட்டா அவருக்கும் அதுக்கு சம்மதமாம்”

“நிஜமாவா பாட்டி?”

“நிஜமா தான் டா மாப்பிள்ளையோட அம்மா இருக்காங்களே அவங்க தாத்தா, பாட்டி இந்த ஊர் தானாம் அவங்க பரம்பரை வீடு ஒண்ணும் இங்க இருக்காம் ஒரு வேளை இந்த கல்யாணம் நடந்தால் அங்கே தான் இருக்க வரும் போல” தெய்வநாயகி சொன்னவற்றை எல்லாம் கேட்டு அனுஸ்ரீ சிறிது நேரம் யோசித்து கொண்டு இருந்தாள்.

“ஆனாலும் பாட்டி”

“இந்த ஆனா ஆவன்னா எல்லாம் வேணாம் வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுனு பதில் சொல்லு”

“அது வந்து…”

“வாழ்க்கையில் சில விஷயம் கிடைக்கும் சில விஷயம் கிடைக்காது உனக்கு எப்படியோ அந்த கடவுள் இப்படி கொண்டு வந்து சேர்த்து இருக்கார் இன்னும் இரண்டு நாள் இருக்கு நல்லா யோசித்து பதில் சொல்லு” என்று விட்டு தெய்வநாயகி எழுந்து வீட்டிற்குள் சென்று விட அனுஸ்ரீயோ யோசனையோடு சிறிது நேரம் அந்த தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள்.

“என்ன அனுக்கா எந்த நாட்டை கைப்பற்ற இவ்வளவு தீவிரமாக யோசிக்குறீங்க?” தாமரையின் கேள்வியில் நிமிர்ந்து அவளை பார்த்தவள்

“அடி போடி!” என்றவாறே அங்கிருந்த ஓங்கி வளர்ந்த மாமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டாள்.

“என்னாச்சு அக்கா? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டவாறே அவள் முன்னால் தாமரை சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள

புன்னகையோடு அவளை பார்த்தவள்
“எனக்கு ஒரு பிரச்சினைனு சொன்னா முதல் ஆளாக நீ தான் வந்து நிற்குற” என்று கூறவும்

“அதெல்லாம் அப்படி தான்க்கா ஊருக்குள்ள யாருக்கு பிரச்சினை வந்தாலும் இந்த தாமரை வந்து நிற்பா அது வழக்கம் தானே?” என்ற தாமரை இல்லாத தன் சட்டை காலரை உயர்த்தி விட்டு கொண்டாள்.

“சரி அதெல்லாம் போகட்டும்க்கா எப்போ உங்களுக்கு டும் டும் டும்?”

“அது தான் யோசனையாக இருக்கு தாமரை எல்லாம் எனக்கு நல்லதாக தான் நடக்குது ஆனாலும் மனசில் ஏதோ ஒரு பயம்”

“அய்யோ! அக்கா! இன்னும் சின்ன குழந்தை மாதிரி நீங்க பயப்படலாமா? நம்ம பாட்டியோட மொத்த தோட்டத்தையும் ஒத்த ஆளா நின்னு சமாளிக்குற ஆளு நீங்க ஒரே ஒரு ஆளு அவரை சமாளிக்க மாட்டீங்களா?”

“நீ வேற காமெடி பண்ணாமல் போறியா?”

“சரி நான் காமெடி பண்ணல உங்களுக்கு மாப்பிள்ளையை பிடிச்சு இருக்கு தானே?”

‘அவரைப் பிடிக்காமல் இருக்குமா?’ அனுஸ்ரீ தன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்ள

“என்ன சொன்னீங்க அக்கா?” என்று கேட்டாள் தாமரை.

“ஆஹ்! அதெல்லாம் பிடித்து தான் இருக்கு”

“அப்புறம் என்ன மேட்டர் ஓவர் நான் பாட்டி கிட்ட போய் நிச்சயதார்த்தத்திற்கு நாள் பார்க்க சொல்லுறேன் நீங்க மாப்பிள்ளையோட டூயட் பாட ஸ்டார்ட் பண்ணுங்க” என்று விட்டு தாமரை

“பாட்டி! பாட்டி! அக்கா ஓகே சொல்லிட்டாங்க” என்றவாறே சத்தமிட்டு கொண்டு வீட்டிற்குள் நுழைந்து கொள்ள

அதை பார்த்து கொண்டு இருந்த அனுஸ்ரீயோ
“இவ ஏன் இவ்வளவு ஆர்வத்துடன் இருக்கா? எல்லாம் அவசரமாக நடக்குது எனக்கு என்னவோ சரியாக தோணலயே” என நினைத்த அதேநேரம் அவள் வயிற்றில் ஒரு பயப் பந்து உருளுவது போல இருந்தது.

ரிஷியை அவளுக்கு பிடித்து இருந்தாலும் திருமணம் பற்றிய ஒரு ஐயம் மாத்திரம் அவள் மனதில் இருந்து அகலவில்லை.

அவன் வேறொரு பெண்ணை விரும்புவதைத் தெரிந்தும் ஆரம்பத்தில் அவனை அவள் விரும்பியது ஒரு புறம் மனதில் குற்றவுணர்வாக பதிந்து இருக்க அதை அவனிடம் சொல்லாமல் இருப்பதும் இன்னும் அவளை குற்றவாளி போல உணரச் செய்து கொண்டே இருந்தது.

அந்த பயத்தை ரிஷி ஆகாஷ் இல்லாமல் செய்வானா? இல்லையா? என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

அனுஸ்ரீயின் சம்மதம் கிடைத்து விட மளமளவென்று நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் தெய்வநாயகி கவனிக்க தொடங்கி இருக்க மறுபுறம்
சென்னையில் பத்மினியோ சந்தோஷத்தில் தன் வீட்டையே இரண்டாக்கி கொண்டிருந்தார்.

தன் செல்ல மகனது திருமணம் எந்த பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்து விட வேண்டும் என்ற அச்சம் மனதில் ஒரு புறம் இருந்தாலும் அடுத்து அடுத்து வந்து குவிந்த நிச்சயதார்த்த வேலைகள் எல்லாம் அவர் அச்சத்தை சற்று பின் தள்ளி இருந்தது.

அடுத்த நாள் அனுஸ்ரீ மற்றும் ரிஷி ஆகாஷின் நிச்சயதார்த்த நாள் என்றும் இல்லாதவாறு ஒரு புத்துணர்ச்சியான சந்தோஷமான நாளாக எல்லோருக்கும் விடிந்தது.

ரிஷியின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஏற்கனவே வசந்தபுரம் கிராமத்தில் அவர்களது பரம்பரை வீட்டிற்கு நிச்சயதார்த்தத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வந்து சேர்ந்து இருந்தனர்.

அங்கேயே இருந்து அவர்கள் எல்லோரும் தயாராகி கொண்டு இருக்க மறுபுறம் நாயகி இல்லத்தில் தெய்வநாயகி படபடப்போடும், பதட்டத்துடனும் வேலைகளை எல்லாம் மேற்பார்வை செய்து கொண்டு நின்றார்.

ராதா ஒரு புறம் முத்துராமன் ஒரு புறம் என இருவரும் ஆளுக்கொரு பக்கம் நின்று வேலை செய்து கொண்டு இருந்தாலும் அவர்கள் இருவரது மனங்களுமே முழுமையாக அந்த இடத்தில் இல்லை.

நிச்சயதார்த்த அலங்காரங்கள் எல்லாவற்றையும் பார்க்கும் போது அவர்கள் இருவரது மனமும் தங்கள் இளமைக்காலத்தை நோக்கி அவர்கள் அனுமதி இல்லாமலேயே அவர்களை இழுத்து சென்று இருந்தது.

யாரும் பார்க்காத வேளைகளில் ஒருவரை ஒருவர் ஏக்கத்துடன் பார்த்து கொண்டே தங்கள் வேலைகளை கவனித்து கொண்டிருக்க மறுபுறம் அனுஸ்ரீயோ மனம் நிறைந்த பதட்டத்துடன் தயாராகி கொண்டு இருந்தாள்.

என்னதான் பலவாறாக தன் மனதை அவள் சமாதானப்படுத்தி வைத்து இருந்தாலும் அந்த அச்ச உணர்வு மாத்திரம் அவளை விட்டு செல்ல மாட்டேன் எனப் பிடிவாதமாக அவள் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து இருந்தது.

சிறிது நேரத்தில் ரிஷியின் குடும்பத்தினர் நாயகி இல்லத்திற்கு வந்து சேர்ந்து விட நிச்சயதார்த்த நிகழ்வுகள் எல்லாம் இனிதே ஆரம்பமானது.

இள ஊதா நிற சர்ட், கடும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து முடியை ஜெல் இட்டு வாரி தனது அக்மார்க் புன்னகையோடு ரிஷி அமர்ந்து இருக்க அவனது அருகில் சந்துரு மற்றும் மணிமாறன் அமர்ந்து அவனை கேலி செய்து கொண்டு அமர்ந்திருந்தனர்.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே தாமரையும், அனுஸ்ரீயின் தோழியுமான ராஜியும் சேர்ந்து அவளை அந்த இடத்திற்கு அழைத்து கொண்டு வந்தனர்.

நீலப்பச்சை நிறத்தில் இளஞ்சிவப்பு நிற அகலமான பார்டர் பிடிக்கப்பட்டு இருந்த பட்டு சேலை அதே இளஞ்சிவப்பு நிறத்தில் ப்ளவுஸ் அணிந்து எளிமையான தங்க ஆபரணங்களோடு இலேசான ஒப்பனையோடு நடந்து வந்த அனுஸ்ரீ அங்கு இருந்த அனைவருக்கும் பொதுவாக வணக்கம் வைத்து விட்டு அமர்ந்து கொண்டாள்.

அனுஸ்ரீ வந்து அமர்ந்த நொடி முதல் ரிஷியின் பார்வை அவளையே சுற்றி சுற்றி வந்தது.

அவ்வப்போது அவளது பார்வை அவனின் மேல் பட்டு திரும்பினாலும் முழுமையாக ஒரு நொடி கூட அவள் கண்கள் அவன் மேல் நிற்கவில்லை.

அவளது அந்த வெட்கத்தைப் பார்த்து ரசித்து கொண்டு இருந்தவன் கண்களில் அவளது அந்த வெட்கத்தை தாண்டியும் ஒரு பதட்டம் இருந்தது தென்படாமல் இல்லை.

அய்யர் நிச்சயதார்த்தப் பத்திரிகை வாசிக்க தொடங்கும் போதே சுற்றிலும் ஒரு முறை நோட்டம் விட்டவன் தன் அருகில் இருந்த சந்துருவின் காதில் ஏதோ கூறவும் ஆச்சரியமாக அவனை திரும்பி பார்த்தவன் சரியென்று தலை அசைத்து விட்டு அங்கிருந்து எழுந்து சென்றான்.

அனுஸ்ரீ தலை குனிந்து அமர்ந்து இருந்தாலும் சந்துருவின் காதில் ரிஷி ஏதோ கூறியது அதை கேட்ட பின் சந்துரு எழுந்து சென்றது என எல்லாம் அவள் கண்களுக்கு நன்கு புலப்படவே செய்தது.

அய்யர் பத்திரிகை வாசித்து கொண்டு இருக்கும் போது முத்துராமனோடு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த சந்துரு ரிஷியைப் பார்த்து தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட அவனும் புன்னகையோடு தன் விரலை உயர்த்தி காட்டினான்.

“என்ன பண்ணுறாங்க இவங்க?” யோசனையோடு அனுஸ்ரீ அவன் முகம் நிமிர்ந்து பார்க்க அவனோ புன்னகையோடு சுற்றிலும் நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அய்யர் நிச்சயதார்த்தப் பத்திரிகையை வாசித்து முடித்த பின்னர் தாம்பூலத் தட்டை இரு பெற்றோர்களையும் மாற்றி கொள்ள சொல்ல முத்துராமனும், ராதாவும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்து கொண்டு நின்றனர்.

அப்போது தான் முத்துராமனிற்கு தன்னை ஏன் ரிஷி அந்த இடத்திற்கு வரச்சொல்லி சொன்னான் என்பதும் புரிந்தது.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தர்ம சங்கடத்தோடு பார்த்து கொண்டு நிற்க
“அத்தை, மாமா வாங்க வந்து தட்டை மாற்றிக்கோங்க” என்று ரிஷி கூறவும் அதற்கு மேலும் அப்படியே நின்று அத்தனை பேர் முன்னிலையில் வீண் பிரச்சினையை நல்ல நேரத்தில் உருவாக்க வேண்டாம் என்று எண்ணிக் கொண்டு முத்துராமனும், ராதாவும் அமைதியாக வந்து தாம்பூலத் தட்டை சுவாமிநாதன், பத்மினியோடு மாற்றிக் கொண்டனர்.

ஆரம்பித்தில் இருந்தே ரிஷியின் நடவடிக்கைகளை பார்த்து கொண்டு இருந்தவள் அவனது இந்த செய்கையைப் பார்த்ததும் வியப்பில் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள்.

இந்த இருபத்தைந்து வருடங்களில் எப்போதும் அவர்களது இந்த சண்டையை மட்டுமே பார்த்து வந்தவளுக்கு அவர்களது இந்த மௌனமான நடவடிக்கைகள் மிகவும் புதியது.

இந்த திருமணப் பேச்சு தொடங்கிய நாள் முதல் இன்று வரை தன் தாய், தந்தையிடம் தெரிந்த மாற்றங்களை எல்லாம் ஒரு முறை எண்ணிக் கொண்டவள்
“பாட்டி சொன்னது போல இந்த திருமணத்தில் தான் இவங்க பிரச்சினைக்கும் வழி இருக்குமோ?” என யோசித்து கொண்டு இருக்கும் போதே

“அனும்மா எழுந்து மோதிரம் மாற்றிக்கோடா” என்று தெய்வநாயகி கூறவும் அவர் குரல் கேட்டு தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவள் அவரை பார்த்து சரியென்று தலை அசைத்து விட்டு புன்னகையோடு எழுந்து நின்றாள்.

ரிஷி அவளது வெண்பஞ்சு போன்ற கையை பற்றி அதில் சிவப்பு கற்கள் இதய வடிவில் பதிக்கப்பட்டிருந்த மோதிரத்தை மாட்டி விட அவனது ஸ்பரிஷத்தில் அனுஸ்ரீயின் முகம் சற்று சிவந்து போனது.

இப்பொழுது ரிஷி அவளின் புறமாக தன் கையை நீட்ட அதைப் பட்டும் படாமலும் மென்மையாக பிடித்து கொண்டவள் அதே மென்மையோடு அவன் விரலில் மோதிரத்தை மாட்டி விட்டாள்.

இருவரும் மோதிரத்தை மாற்றிக் கொண்ட பின்னர் இருவரது நட்பு வட்டாரங்களும் அவர்களோடு இணைந்து செல்பி, குருப் போட்டோ எடுக்கவென அவர்களை சூழ்ந்து கொள்ள மனம் குளிர தன் பேத்தியின் நிச்சயதார்த்தத்தைப் பார்த்து கொண்டு நின்ற தெய்வநாயகி புன்னகையோடு பத்மினியின் அருகில் வந்து அவர் தோள் தொட்டார்.

தன் தோள் மேல் பட்ட ஸ்பரிசத்தில் திரும்பி பார்த்த பத்மினி அங்கே நின்ற தெய்வநாயகியைப் பார்த்து புன்னகையோடு
“எல்லாம் நல்ல படியாக முடிஞ்சுடுச்சு இல்ல” என்று கேட்க

அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவர்
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல சம்பந்தி என் பொண்ணும், மாப்பிள்ளையும் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செஞ்சாலும் காலையில் விடிந்து எழும்பினதில் இருந்து இந்த சடங்குகளை எல்லாம் யோசித்து எனக்கு அவ்வளவு கவலையாக இருந்தது நல்ல நாள் அதுவுமா எங்கே மறுபடியும் இரண்டு பேரும்
சண்டை போட்டுடப் போறாங்களோனு கவலையாக இருந்தேன் ஆனா எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த நிச்சயதார்த்தத்தை நான் நினைத்த மாதிரியே நடத்தி வைச்சுட்டீங்க ரொம்ப நன்றி” என்று இரு கரம் கூப்பி கூறவும் அவசரமாக அவர் கை பிடித்து தடுத்த பத்மினி வேண்டாம் என்று தலை அசைத்தார்.

“நீங்க வயதில் பெரியவங்க இதெல்லாம் வேண்டாம்” என்றவர்

புன்னகையோடு ரிஷியின் புறம் கை காட்டி
“எல்லாம் ரிஷி பண்ணது அவன் கொஞ்சம் முன் கோபக்காரன் தான் ஆனா பாசம் நிறையவே இருக்கு அனுவை பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே அவன் கேட்டான் அனுவோட அம்மாவும், அப்பாவும் எதனால் டிவோர்ஸ் பண்ணாங்கனு? ஏதோ மனஸ்தாபமாக இருக்கும்னு நான் சொல்லவும் அவன் சொன்னான் அனுவோட அம்மாவும், அப்பாவும் மனம் ஒத்து பிரிந்த மாதிரி இல்லை ஏதோ அவசரப்பட்டு இந்த முடிவு எடுத்த மாதிரி தான் இருக்கு அவங்க மறுபடியும் சேரணும்னு தான் எனக்கு ஆசை அனுவும் அதைத் தான் ஆசைப்படுறா போல இருக்குன்னு சொன்னான்” என்று கூறவும் அவர் சொன்ன வார்த்தைகளை கேட்டு தெய்வநாயகி ஆச்சரியமாக ரிஷியை திரும்பி பார்த்தார்.

“இப்படி ஒரு பையன் என் பேத்திக்கு கணவனாக கிடைக்க அவ ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும்” என்றவாறே தெய்வநாயகி பத்மினியுடன் பேசிக் கொண்டு நிற்க தெய்வநாயகியுடன் பேசுவதற்காக அவரைத் தேடி வந்த அனுஸ்ரீயோ அவர்கள் பேசிய எல்லாவற்றையும் கேட்டு வியப்பாக ரிஷியைப் பார்த்து கொண்டு நின்றாள்….

error: Content is protected !!