MayaNadhi Suzhal 15

MayaNadhi Suzhal 15

மாயநதிச்சுழல்

சுழல்-15

இதுவரை:

“டைமாச்சு மதி…”என சுரபி மொழிய, பில் தொகையை கொடுத்தபின், இருவரும் உணவகத்தை விட்டு வெளியே வந்து வண்டியின் அருகில் நின்றனர். “ஹெல்மெட் போடு”என மதிமாறன் சொல்லிக் கொண்டிருக்க, அப்போது தான் சுரபி அந்தக் காட்சியைக் கண்டாள். சிரித்துக் கொண்டிருந்த அவளது முகம், நொடி நேரத்தில் வெளிரி, முகத்தில் இருந்து ரத்தமெல்லாம் வடிந்துவிட்டதைப் போல் மாறிவிட்டது.

இனி:

மகாபலிபுரம் செல்லும் சாலையில் எப்போதும் வேகமாகவே வண்டிகள் சீறிப்பாயும். அதிலும் வாகன நெறிசல் குறைந்துவிட்டிருக்கும் இரவு பொழுதில் 100 அல்லது 120 வேகத்தில் கடந்து செல்லும் வண்டிகளே அதிகம். சுரபியும் மதிமாறனும் நின்றிருந்த ரோட்டின் மறுபக்கம் அதே போல் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது ஒரு கார். அதனை முந்தும் எண்ணத்துடன் வேகமாக வலது பக்கம் ரோட்டில் ஏறி வந்தது ஒரு சரக்கு லாரி.

இரண்டு வண்டிகளும் சீரான வேகத்தில் வந்து கொண்டிருக்க, ரோட்டின் மத்தியில் திடீரென முளைத்தது அந்தக் குழந்தை. மீறிபோனால் இரண்டு அல்லது மூன்று வயதிருக்கலாம். பிறந்தது முதலே எண்ணை காணாத செம்பரட்டைக் கேசம், முகம் முழுக்க புழுதி அழுக்கு, நீல நிறத்தில் ஒரு அரை நிஜார் என ரோட்டின் ஓரத்தில் வசிக்கும் விளிம்புநிலை மக்களின் பிரதிபலிப்பாக அழுதபடிக்கு நின்றுகொண்டிருந்தது.

லாரியும், காரும் அதே வேகத்தில் வந்து கொண்டிருக்க, பத்தடி தூரத்தில் நின்றிருந்த குழந்தையை அப்போதே கவனித்தனர் ஓட்டுனர்கள். வண்டி ஓடிக் கொண்டிருந்த வேகத்திற்கு, லாரி ஓட்டுனர் பலம் கொண்ட மட்டும் ப்ரேக்கை அடித்தார். இருப்பினும் 80களில் வந்து கொண்டிருந்த லாரியின் வேகமோ, 100களைத் தொட்டிருந்த காரின் வேகமோ சட்டென குறையவில்லை. முடிந்த மட்டிலும் ஹார்ன் ஒலி எழுப்பி குழந்தையை அவ்விடம் விட்டு நகரச் செய்ய முயன்றார். குழந்தை ஹார்ன் சத்தத்தில் மிரண்டு இன்னும் அதிகமாக அழத்துவங்கியபடிக்கு ரோட்டிலேயே அமர்ந்துகொண்டது.

சுரபியும் மதிமாறனும் “ஹே ஹே….ஸ்டாப் ஸ்டாப்…”என்று கத்திக் கொண்டு மறுபக்கம் ரோட்டில் இருந்து வேகமாக மையப்பகுதியின் டிவைடரை அடையும் முன்னர், சுரபியின் கால்கள் வேகமாக செயல்பட்டிருந்தன. ரோட்டின் மத்தியில் இருந்த சிறிய தடுப்பு சுவறு வரை சென்ற மதிமாறன் ஒருகணம் அங்கேயே தேங்கி நின்றிருக்க, சுரபி ஓட்டமாக அக்குழந்தையை நோக்கி ஓடியிருந்தாள். இரண்டு எட்டில் குழந்தையை லாவகமாகத் தூக்கியவள், தொடும் தூரத்தில் லாரியைக் கடந்து, காருக்கும் லாரிக்குமான சிறிய இடைவெளியில் ஒரு நொடி நின்று, கார் கடந்ததும் குழந்தையுடன் கீழே விழுந்திருந்தாள்.

பத்தடி தள்ளி சென்று நின்ற காரும் லாரியும் ரோட்டின் ஓரத்தில் மெல்ல ஓதுக்கி நின்றது. ஓட்டுனர்களும், இன்னமும் நிறைய பேர் மெல்ல அவ்விடத்தை சூழத் துவங்கினர். ஓடிவந்து சுரபியின் அருகில் அமர்ந்த மதிமாறன்,”சுபி….சுபி”என அரற்றத்துவங்கினான். “என்மேல தப்பில்லை சார்.… குழந்தை நின்னது கண்ணுக்கே தெரியலை…”என்று லாரி டிரைவர் இன்னாரிடம் என்றில்லாமல் குத்துமதிப்பாக மொழிய, எதையும் கேட்கும் மனநிலையில் மதிமாறன் இல்லை.

இதற்குள் சிறிய கும்பல் கூடிவிட்டிருந்தது. யாரோ ஒருவர் தண்ணீர் பாட்டிலை நீட்ட, அதனை மயக்கமுற்றுக் கிடந்த சுரபியின் முகத்தில் சடசடவென அடித்தான். இந்த கலோபரம் குழந்தையின் பெற்றோரையும் உறவினர்களையும் அவ்விடம் நோக்கி இழுத்துவந்திருந்தது. புரியாத பாஷையில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள, அழுதுகொண்டே சுரபியின் அருகில் வந்த அந்தப் பெண், குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள். மீண்டும் புரியாத பாஷையில் குழந்தையை தேற்றத் துவங்கினாள்.

முகத்தில் தண்ணீர் பட்டதும் லேசாக நினைவு வரத்துவங்கியிருந்த சுரபி, நீண்ட இருமல்களை வெளியிட்டு மெல்ல ரோட்டில் எழுந்து அமர்ந்தாள்.

“சுரபி…ஆர் யூ ஆல்ரைட்? என்னைப் பாரு..ஆர் யூ ஆல்ரைட்?”என படபடப்புடன் வினவிய மதிமாறனை கண்களில் நீர் நிரம்ப ஏறிட்டாள். சட்டென பதில் சொல்ல முடியவில்லை. தலையை மட்டும் அசைத்து பதிலளித்தாள்.  ரோட்டின் மையத்தில் இருந்து ஓரமாக அழைத்து வந்திருந்தான் மதிமாறன். சீரான பெரிய பெரிய மூச்சுகள் விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். இதற்குள் வெகுவாக சுற்றியிருந்த கூட்டம் குறைந்திருந்தது.

படபடப்பு நிறைய குறைந்து சுரபியின் கண்கள் நிதானத்தை எட்டியிருந்தன. “குழந்தை?”என்று மெல்லிய குரலில் வினவ, மதிமாறன் அதுகாரும் ஓரமாக நின்றிருந்த அந்தப் பெண்ணும், அவளது கணவரும் குழந்தையுடன் அருகில் அழைத்தான். அழுதழுது ஓய்ந்து போயிருந்த குழந்தை தாயின் தோளில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது.

சுரபியைக் கண்டதும் அவளது காலில் விழச்சென்ற அந்த தாயைத் தடுத்த சுரபி, யாரும் எதிர்பாராத வகையில் அந்த காரியம் செய்தாள். தன்னிடம் மீதமுள்ள பலம் மொத்தத்தையும் திரட்டியவள், ஆத்திரம் பொங்க, அந்தப் பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அரைந்தாள். ஒரு நொடி மதிமாறன் உட்பட சுற்றியிருந்த அனைவருமே ஸ்தம்பித்துப் போக, அந்த தாயும் சுரபியும் மட்டும் கண்களை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.

“சுரபி…என்ன பண்ணற?”என்று கேட்டுக் கொண்டே ஓரடி அருகில் நகர்ந்துவந்த மதிமாறனை கண்களாலேயே நிறுத்தினாள். அடிவாங்கி கண்களில் ஒருவித குற்ற உணர்ச்சியுடன் நின்று கொண்டிருந்த அந்தப் பெண், கண் இமைக்காமல் சுரபியையே பார்த்துக் கொண்டிருந்தாள். “உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை..ம்ம்?எதுக்கு?”என்று அடிக்குரலில் உறுமுவது போல் சுரபி வினவ, அந்தப் பெண் பதில் கூறாமல் அழுதபடிக்கே நின்றிருந்தாள்.

“வதவதன்னு பத்து புள்ள பெத்துகறீங்களே தவிர, ஒன்னையாவது நல்லா வளர்தறீங்களா? எங்க போகுது? என்ன பண்ணுது? சாப்பிட்டுச்சா இல்லையான்னு கூட பார்க்காம, அக்கறையே இல்லாம இருக்கறதுக்கு எதுக்கு புள்ள பெத்துக்கற? பெத்ததோட கடமை முடிஞ்சு போயிரும்…இல்லையா? அப்பறம் அதுக அதுக தானாவே வளரும். திறமை இருந்தா பொழைக்கும்.. இல்லைன்னா இந்த மாதிரி கார்லையோ, பஸ்லையோ அடிபட்டு போய் சேர்ந்துருங்க..நீ ரெண்டு நாள் அழுதுட்டு அடுத்த குழந்தையை பெத்துக்க போயிடுவ….”என்று கொஞ்சமும் சீற்றம் தணியாமல் சுரபி வினவ, அங்கு நின்றிருந்த எவருமே வாயைத்திறக்கவில்லை.

படபடவென பொரிந்து தள்ளிய சுரபியின் கோபம் வெகுவாகத் தணிந்திருந்தது. இன்னமும் அந்தத் தாய் வைத்தகண் வாங்காமல் சுரபியையே பார்த்துக் கொண்டிருந்தாள். சுரபி பேசியது அவளுக்குப் புரிந்ததா என்ற சந்தேகம் அங்கிருந்த எவரும் ஏற்படவில்லை.

வார்த்தைகள் மட்டுமே மனிதர்களுள் வேறுபடும். பசி தூக்கம் அழுகை போன்ற உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானதே. அந்த ரீதியில் பார்த்தால், சுரபி பேசிய வார்த்தைகள் அந்த தாய் உணர்ந்தது போலவே இருந்தது.

மடமடவென கைப்பையில் துளாவியவள், பர்சில் இருந்து ஐநூறு ரூபாய் தாள்கள் இரண்டினை எடுத்து அந்தத் தாயிடம் நீட்டினாள். “குழந்தைக்கு ஏதாவது சாப்பட வாங்கிக் குடு…நீயும் எதாச்சும்…”என்ற சுரபிக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.”பிடி”என்று சுரபி நீட்டிய கையை சட்டென்று பற்றிக் கொண்ட அந்த பெண், சுரபியின் கைகளை அவளது கண்களின் அருகில் கொண்டு சென்று இறுக்கமாக பிடித்தபடிக்கே விக்கிவிக்கி அழுதாள். அருகில் நின்றிருந்த மதிமாறனுக்கோ மற்றவருக்கோ என்ன செய்வது என்று தெரியாத நிலையில், குழந்தையை தோளில் சுமந்தபடிக்கு அழும் அன்னையையும், பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

அழுது கொண்டிருந்த தாய் கொஞ்சம் சமாதானமாகி, குழந்தையுடன் அவ்விடம் விட்டு விடைபெற்றுச் செல்ல, அப்போது தான் மதிமாறன், சுரபியை ஊன்றி கவனித்தான். தலை கலைந்து போயிருக்க, கண்களில் ஒளிமின்ன நின்று கொண்டிருந்தவள், மதிமாறனின் கண்களுக்கு பேரழகியாகத் தெரிந்தாள். தலையில் இருந்து பாதம் வரை சுரபியை உள்வாங்கிய படி இருந்தவன் கண்கள் சுரபின் காலருகில் குத்திட்டு நின்றன.

“சுபி…”என்று பதறியபடி அருகில் செல்ல, வலது காலில் இருந்து செங்குருதி நிற்காமல் வழிந்து, பச்சை நிற பேண்ட்டை செந்நிறமாக மாற்றியிருந்தது. இவ்வளவு நேரம் காலில் ரத்தம் வழிவதைக் கூட உணராமல் நின்றிருந்தவளுக்கு மதிமாறனின் பதற்றம் வியப்பை அளித்தது. வலது காலின் வலியை அப்போதே சுரபி முழுவதுமாக உணர்ந்தாள்.

கைக்கெட்டும் தூரத்தில் நின்றிருந்த மதிமாறனிடம், “எனக்கு ஒண்ணும் இல்லை மதி…. கல்லு குத்தியிரு….” என்று கூறவந்ததை முடிக்கும் முன்னர், கண்கள் இருட்டிக் கொண்டு வந்துவிட்டிருந்தது. விழுகப்போகிறோம் என்று சுரபிக்கு தெளிவாக புரிந்த போதும், கைகால்களை அசைக்கும் வலிமை சிறிதும் இருக்கவில்லை. நல்லவேளையாக சுற்றியிருந்தவர்கள் கைத்தாங்கலாக பற்றிக் கொண்டனர்.

“சார், மயங்கிட்டாங்க சார்… கால்ல ரத்தம் வேற நிக்காம போகுது சார்….ஹாஸ்பெட்டல் கூட்டிட்டுப் போறது பெட்டர் சார்…”

“ரோட்டில ஏதோ வண்டியோட கண்ணாடி உடைஞ்சிருக்கு சார்… அது மேலையே விழுந்திருக்காங்கன்னு நினைக்கறேன்…”

“ஆம்பிலன்ஸ் கூப்பிடுங்கப்பா…”

“ஆம்பிலன்ஸ் வர லேட்டாகும்பா….எவ்வளவு ரத்தம் போயிருக்கு பாரு…. பேசாம வழியில வர்ற ஆட்டோவோ வண்டியோ மடக்கு….”என்று ஆளாக்கு கட்டளைகள் கொடுத்துக் கொண்டிருக்க,மதிமாறன் கலங்கிய கண்களுடன் சுரபியின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஸ்தம்பித்து நின்றிருந்தான்.

“சார், என்னோட கார் இருக்கு… ஹெல்ப் லைன் ஹாஸ்பிடல் இங்கிருங்கு பத்து நிமிஷம் தான்…நீங்க மேடமை பிடிங்க….அங்க கூட்டிட்டுப் போயிடலாம்…”என்று, சற்று முன், லாரியுடன் சேர்ந்து ரோட்டில் ரேஸ் நடத்திய கார் ஆசாமி மொழிய, மதிமாறன் கொஞ்சம் சுதாரித்தான்.  சில நொடிகளிலேயே தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டவன், “காரை ரிவர்ஸ் கொண்டு வாங்க…”என்றான்.

“எதுத்த ரெஸ்ட்ரெண்ட் வாசல்ல என் பைக் இருக்கும்…இது சாவி….இந்த கார் பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு வாங்க”என்று கடையின் சிப்பந்தி ஒருவரிடம் மொழிந்தவன், நொடிப் பொழுது தாமதிக்காமல், சுரபியின் கைப்பை, கைப்பேசி என பத்திரப்படுத்திக் கொண்டு, தயாராக நின்றிருந்த காரில் சுரபியை ஏற்றி தானும் ஏறிக் கொண்டான். வண்டி அந்த  இருளை கிழித்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி சீறிப்பாய்ந்தது.

“ஹலோ …ஹலோ….சுபி…இவ்வளவு நேரம் ஃபோன் பண்ணவேயில்லை….ஹாஸ்டல் வந்துட்டியா? அந்த இன்ஸைப் போய் பார்த்துட்டு எப்ப வந்த…வந்ததும் எனக்கு ஃபோன் பண்ணாம என்ன பண்ண?”என்று அந்த கைப்பேசி அழைப்பை ஏற்று மதிமாறன் காதில் வைத்ததுமே படபடவென்று   மறுமுனையில் பெண் குரல் பொரியத் துவங்க, கைப்பேசியை காதருகில் இன்னமும் இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

“ஹலோ சுபி….கேட்குதா…சிக்னல் இருக்கா… சுபி…”

“ஹலோ… நான் மதிமாறன் பேசறேன்…” என்றதும் அதுவரையில் அருவி போல் கொட்டிக் கொண்டிருந்த மறுமுனை, சட்டென மந்திரம் போட்டது போல் நின்று போனது. திடீரென ஏற்பட்ட அமைதி இருவருக்குமே அச்சத்தைக் கொடுக்க, மதிமாறன் முதலில் சுதாரித்து பேசத் துவங்கினான்.

“நீங்க சுபியோட அக்காவா?”

“ஆமா, சுபி எங்க…அவகிட்ட ஃபோன் குடுங்க….”

“இதப்பாருங்க….நான் சொல்லறதை கொஞ்சம் பதட்டப்படாம கேளுங்க…”

“பதட்டப்படாம கேட்கறதா? சுபி எங்க….?” என்று அமுதா மறுமுனையில் வினவும் முன்னர் குரல் கம்மியிருந்தது. என்னவோ தவறு நடந்திருக்கிறது என்று உள்மனம் வெகுவாக எச்சரிக்கை செய்திருந்தது.

“சுரபிக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட்….”என்று மதிமாறன் பேசிக் கொண்டிருக்கும் போதே, “ஆக்ஸிடெண்டா…என்ன சொல்லறீங்க….எப்படி இருக்கா?”

“ஈஸி…ஈஸி..பயப்படற மாதிரி பெருசா ஒண்ணும் இல்லை…கால்ல நிறைய கண்ணாடி சில்லு ஏறியிருக்கு…வலது தொடையில இருந்து முட்டி, முழங்கால்னு நிறைய இடத்தில சின்ன சின்ன கண்ணாடி துகள் ஏறி, நெறைய ப்ளட் லாஸ் ஆகிடுச்சு…”

“நிறைய ப்ளெட் லாஸா…எப்படி ஆக்ஸிடெண்ட்…வண்டி இடிச்சா….”

“அது வந்து, ரோட்டில விழுந்ததுல, சிதறியிருந்த கண்ணாடி துண்டுகள் பட்டு ரத்தம் வந்திருக்கு….ஒரு துண்டு மட்டும் கொஞ்சம் ஆழமா முட்டிக்கு கீழ குத்தி, நரம்பு வரை போனதால…நிறைய ரத்தம்….அதாவது ரத்தம் இன்னும் க்ளாட் ஆகலை…”

“இன்னும்னா? எவ்வளவு நேரமா?”

“எட்டு, எட்டரை மணியில இருந்து…ஷாஸ்பிடல் வந்து கிட்டதட்ட ரெண்டு மணி நேரம் ஆச்சு…இன்னும் ஐ.சி.யூல தான் இருக்கா…”

“ஐ.சியூவா….எந்த ஹாஸ்பிடல் மதிமாறன்?”

“ஈ.சி.ஆர் ல ஹெல்ப்லைன் ஹாஸ்பிடல்…”

“நான் இப்பவே கிளம்பி வர்றேன்….சுபிய…அதுவரை…அதுவரை…நான் இங்க பெங்களூர்ல இருக்கேன்…இங்கிருந்து வர்ற வரை…சுபிய..”

“நான் பார்த்துக்கறேங்க….நீங்க கவலைப்படாதீங்க… பொறுமையா பதட்டப்படாம வாங்க…உங்க ஃபோனை தான் இவ்வளவு நேரம் எதிர்பார்த்துட்டு இருந்தேன்… சுரபி ஃபோன் லாக் ஆகியிருக்கு, என்னால யாருக்கும் ஃபோன் பண்ணி இன்ஃபார்ம் பண்ண முடியலை…அவ ஸ்கூலுக்கு தகவல் சொல்லி, ரெக்கார்ட்ஸ இருந்து ரிலேட்டிவ்ஸ் நம்பர் எடுத்து தர சொல்லியிருக்கேன்…நல்ல வேளை அதுக்குள்ள நீங்களே கால் பண்ணீட்டீங்க”

“ரொம்ப தேங்கஸ் மதிமாறன்….நீங்க பண்ண உதவி…..”

“ஈஸி…ஈஸி… எவ்ரிதிங் இஸ் டேக்கன் கேர் ஆஃப்….நீங்க பதட்டப்படாம வாங்க…நீங்க வர்ற வரைக்கும் நான் இங்க இருப்பேன்….”

“தேங்கஸ்….” என்று அமுதா கைப்பேசியை அணைத்தாள். சில நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவளுக்கு கையும் ஓடவில்லை…காலும் ஓடவில்லை…சுபிக்கு ஆக்ஸிடெண்டா….எப்படி இருக்களோ… ப்ளெட் லாஸ் ஆகியிருக்குன்னு சொன்னானே…ரத்தம் நிக்கவேயில்லையாமே…எதனால….ஏன் நிக்கவேயில்லை…ஒருவேளை ரத்தம் நிக்காமயே போயிடுமோ….நரம்புல ஆழமா வெட்டுப்பட்டிருக்குமோ….”என பலவாறாக சிந்தித்துக் கொண்டே அமர்ந்திருந்தவள், மடமடவென இரவு உடையை மாற்றிக் கொண்டாள். கைப்பையில் சில உடைகள், கைப்பேசி சார்ஜர், கிரெடிட் கார்ட், கொஞ்சம் பணம் என நினைவில் எழுந்தவற்றை நிரப்பிக் கொண்டு, டாக்ஸி வரவழைத்தாள்.

இரவு நேரம் ஆகையால், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் கனிசமாக குறைந்திருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில், உபர் டாக்ஸி, டொமெஸ்டிக் டர்மினல்ஸ் வாசலில் நிற்க, பணத்தை செலுத்திவிட்டு, டிக்கெட் கவுண்ட்டர் நோக்கி விரைந்தாள்.

“ஒன் டிக்கெட் டு சென்னை….விச் இஸ் த நெக்ஸ்ட் ஃப்ளைட்…இட்ஸ் எ மெடிகல் எமர்ஜென்ஸி…ப்ளீஸ் மேக் இட் ஃபாஸ்ட்”என்று சிவப்பு உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு அமர்ந்திருந்த பணிப்பெண்ணிடம் வினவ, “ஐ வில் செக் மேம்” என்று அவள் கணிணியில் சில நொடிகள் தட்டியபின், “தேர் இஸ் எ டெல்லி டு சென்னை வியா பெங்களூரு இண்டிகோ மேம்… இன் ஹாஃப் எ நவர்…ஷேல் ஐ புக்…?”

“எஸ்….ப்ளீஸ்” என கையுடன் டிக்கெட்டை பெற்றுக் கொண்டு உள்ளே விரைந்தாள். அடுத்த இரண்டு மணி  நேரம் கழித்து விமானம் மீனம்பாக்கத்தின் தரைத் தொட்டிருந்தது. விமான நிலைய டாக்ஸி ஸ்டாண்டிலேயே வண்டி பிடித்து முகவரியை மொழிந்தாள். மணி நள்ளிரவைத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது. போட்டிருந்த ஸ்வெட்டரை இன்னமும் உடலுடன் இறுக்கிக் கொண்டு வண்டியின் பின் அமர்ந்திருந்த அமுதாவிற்கு நொடிப் பொழுது நிலைகொள்ளவில்லை.

“எப்படி இருப்பாளோ…பலமான அடியாக இருக்குமோ? பயந்துவிடுவேன் என குறைத்து சொல்லுகிறானோ…சுரபியை இழந்து விடுவேனோ”என நெஞ்சம் முழுக்க கேள்விகள் நிறைந்திருந்தன. சென்னை வந்த உடனே மதிமாறனுக்கு கைப்பேசியில் அழைத்து இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக செய்தி கூறினாள்.

“பார்த்து வாங்க”என்று மட்டும் பதிலளித்தவனிடம் மேலும் துருவி கேள்வி கேட்க விருப்பமில்லாமல், அவன் செய்து கொண்டிருக்கும் உதவியே பெரிது என்று திருப்திபட்டுக் கொண்டாள்.

வண்டி, முப்பது நிமிடத்தில் ஹெல்ப்லைன் மருத்துவமனையின் வளாகத்தில் அரைவட்டமடித்து நின்றது. உரிய பணத்தை செலுத்திவிட்டு, மருத்துவமனையின் வரவேற்பு நோக்கி அமுதாவின் கால்கள் வேகமாக விரைந்தன. ரிசப்ஷனை நெருங்கும் முன்னர், “மிஸ்.அமுதா?”என பக்கவாட்டில் இருந்து எழுந்த ஆண்குரல் நடையின் வேகத்தை குறைத்திருந்தது.

 

error: Content is protected !!