mazhai1

மழை – 1
அந்த அதிகாலை வேளையில் இருள் பிரியாத வானம் இன்னும் கருமை நிறதோடு காட்சியளிக்க, சேர்வராயன் மலை உச்சியில் தமிழ் கடவுளாம் முருகன் இருக்கும் அந்த குட்டிக் குன்றுக்கோவில் மட்டும் விளக்கேற்றிப் பிரகாசமாக எரிந்துக் கொண்டிருந்தது.

அதன் அருகே கம்பீரமாக அமர்ந்து தியானம் செய்துக் கொண்டிருந்தான் ஒரு திடகாத்திரமான ஆடவன். மாதம் மாதம் முருகனின் உகந்த நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் அன்று இவன் விளக்கேற்றி வைத்து அங்கிருக்கும் காட்டுமலர்களைப் பறித்து முருகனிற்கு அர்ப்பணித்துவிடுவான்.

கார்த்திகை மாதம் மட்டும் நம் மாநில மலரான செங்காந்தள் பூக்கும் மாதமானதால் முருகனிற்கு அலங்காரம் செய்யும் பாக்கியத்தை அது பெற்றுவிடும். கார்த்திகை திங்களில் முகிழ்விடும் இம்மலர்க்கொடி காடு மலைகளில் படர்ந்து அழகிய பெண்ணின் விரல்கள் போலவும் நெருப்பு சுடர்கள் போலவும் காட்சியளிக்கும்.
அன்று கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வேறு. கேட்கவும் வேண்டுமா? செங்காந்தள் பூவை மாலையாக அணிந்து முருகன் புன்னகையோடு தன் ஒரே பக்தனை பார்த்துக்கொண்டிருந்தார்.

மலை உச்சியில் கோவில் இருப்பதால் பக்தர்களின் வருகை என்பது கனவே தான் அவருக்கு. அதுவும் காலை வேளையில் மட்டுமே அவன் மாதம் மாதம் வருவான். திருக்கார்த்திகை அன்று மட்டும் நாள் முழுவதும் அவருடன் மலையில் துணை இருப்பான்.

வானம் இப்பொது கருமையில் இருந்து செம்மை நிறத்திற்கு மாறும் முன் அதாவது கதிரவன் எழும் முன்பே கார்மேகம் அதனை மறைத்து தூறல் வீச தயாராகியது.
வெளியே வந்து அதனை பார்த்தவன், “வந்துடீங்களா? அது எப்படி தான் நான் மலைக்கு வந்தா உங்களுக்கு தெரியுதோ? நான் கூப்பிடாமலே வந்துற வேண்டியது” என்று மென்னகையோடு சலிக்க, அதுவும் ஆமாம் அப்படித்தான் என்றுவாறு சடசடவென்று பொழிய ஆரம்பித்தது.

இவனின் வாய்மொழியை வைத்து இவன் பைத்தியமோ என்ற ஐயத்தோடு உற்றுநோக்கினால், அவனின் உருவமும் தீட்சண்யமிக்க கண்களும் அவ்வாறு இருக்க வாய்ப்பேயில்லை என்று கட்டியம் கட்டிக் கூறியது.
இக்கால இளைஞர்கள் முடியை பேஷன் என்று வளர்த்து குடுமி போடுவது போல் இவனும் வளர்த்திருந்தான். ஆனால் அது குடுமி இல்லாததால் தோள் உரசி நனைந்துக்கொண்டிருந்தது.
தாடி பாதி முகத்தை மறைத்திருக்க மேல் சட்டையின்றி கச்சம் மட்டும் அணிந்து அந்த குளிரையும் மழையையும் எஃகின் தன்மையோடு சலனமின்றி தாங்கிக்கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வயதான பெரியவர் ஒருவர் “அரசா…” என்று நனைந்தவாறே சற்று வேகமாக வந்தார். “ஐயா வாங்க…” என்று அவரை வரவேற்று குன்றினுள் இருக்கும் முருகனை தரிசிக்க அழைத்து சென்றான். பின் இருவரும் சற்று ஒதுங்கி அமர்ந்தனர்.

“நனைந்துட்டீங்களே…” என்றவாறு அவரின் மேல்துண்டை வாங்கி பிழிந்து கொடுக்க, “ஏன் நான் வரப்போகிறேன் என்று முன்னாடியே சொல்லிருந்தேன்ல? கொஞ்சம் மழையை தடுத்திருக்கலாமே” என்று அவனின் மனதறிந்தே கேட்டார்.
“ஐயா… தெரிந்தே கேட்குறீங்க. நான் எப்போதும் வர சொல்லுவேனே தவிர என்னைக்கும் தடுக்க மாட்டேன். என் பேச்சு கேட்குதுங்கறதால அதை அடிமையா நடத்த என் சக்தியை பயன்படுத்த மாட்டேன்” என்று மென்மையாய் சொன்னான்.

“ஹாஹா… உன்னை பத்தி தெரியாதா அரசா? நான் வேடிக்கையா தான் கேட்டேன்” என்று விட்டு அவர்கள் வேறு விஷயம் பேசத்தொடங்கினர்.

அது நமக்கு புரியாத விஷயம் என்பதால் நாம் இவர்கள் யார் என்று பார்ப்போம். உலகம் முழுக்க இருக்கும் அனைத்து மலைவாஸ்தலங்களும் தன் இயற்கை எழிலை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக்கொண்டிருக்க, அதற்கு சேர்வராயன் மலையும் விதிவிலக்கல்ல. நாம் பார்த்து ரசிக்கும் ஏழையின் ஊட்டி ஏற்காடு அமைந்திருக்கும் மலையே சேர்வராயன் மலை. அப்போது எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. வாகன நெரிச்சல், காடுகளை அழித்து வீடு மற்றும் ரிசார்ட் ஆக்கிரமிப்பு, மரம் வெட்டி சாய்த்தல், மலையை குடைந்து ரயில் அமைத்தல் என்று எவ்வளவு சேதப்படுத்தமுடியுமோ அவ்வளவு சேதப்படுத்தும் பகுதியின் நேர்எதிர் பகுதிதான் நாகரிக மனிதர்களால் சாமான்யமாக நுழைய முடியாத கொடிய காட்டு விலங்குகள் கொண்ட சேர்வராயன் மலைப்பகுதி.

அங்கே தான் இவர்கள் வசித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமா என்றால் இல்லை. இன்னும் மலையையே உலகமாக கொண்டு வாழ்ந்து வரும் சில நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட மலைவாசி மக்களும் உண்டு. கீழே இருக்கும் பள்ளத்தாக்கில் வெளியுலகின் கோரமான வெளிச்சத்தின் பிடியில் சிக்காமல் இருளானாலும் இயற்கையின் இன்பத்திலும், ஆரோக்கியத்தின் சொர்க்கத்திலும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் வாழும் அதிசய மனிதர்கள்.
அதிலும் அரசன் மனிதசக்திக்கு அப்பாற்பட்டவன் ஆனால் அதை தவறாக பயன்படுத்தாத உத்தமன் என்று இதுவரை புரிந்திருப்போம். மேலும் காட்டிலே வளர்ந்ததால் மூலிகை குறித்த ஆழ்ந்த அறிவும் உண்டு. மொத்தத்தில் அவன் பாதி மனிதன் பாதி சித்தன். மனிதசித்தன் என்று வைத்து கொள்வோமே. ஆனால் என்ன அவனின் சக்தி அவன் துளி கலப்படம் இல்லாத நல்லவனாக இருக்கும் வரைக்குமே துணை இருக்கும். அதை அவனும் அறிந்தே இருந்தான்.

மாலை வரையில் அங்கிருந்து பின் இருவரும் சேர்ந்து மீண்டும் விளக்கேற்றி தங்கள் இருப்பிடம் திரும்பிக் கொண்டிருக்கையில் பெரியவருக்கு அரசனை பிரிய போகும் நாள் நெருங்கி விட்டதை தனது சக்தியால் அறிய முடிகிறது. அவர் காலம் தாண்டி வாழ்ந்துக்கொண்டிருக்கும் சித்தர் தான் ஆனால் வெளியுலகிற்கு மனிதன் என்ற போர்வை கொண்டு தன்னை மறைத்துக்கொள்பவர்.

பந்தபாசம் துறந்தவர் என்றாலும் அரசனின் தாய் பிரசவத்தில் இறக்க, முதன்முதலில் அவனை கையில் ஏந்துகையில் அவனின் சக்தியை கணித்து நிலத்துக்கே அரசனாய் இருக்கப்போவதை அறிந்து “நிலவரசன்… நிலவரசன்… நிலவரசன்” என்று மூன்று முறை காதருகில் கூறி பெயர் வைத்தவர் ஆகிற்றே.

ஆம். நம் கதாநாயகனின் பெயர் அரசன் அல்ல நிலவரசன், நிலத்துக்கே அரசனாய் விளங்கப் போகிறவன்.

அவர்கள் குடியிருப்பு பகுதியினுள் நுழைய, அங்கு இவனின் வீடேன்றிருந்த குடிசைக்குள் நுழைந்து மாற்றுடை அணிந்து வந்தான். அந்த அடர்ந்த கானகத்தில் கிடைக்கும் ஒரு வகைப் பஞ்சையே சேர்த்து வைத்து இவர்களுக்கான ஆடைகளை இவர்களே தைத்துக்கொள்வர்.

பின் இரவானதும் வெளியே பெரியளவில் தீ மூட்டி இரவு உணவை அனைவருக்கும் ஒன்றாகவே செய்து உண்பர். இவர்கள் விளைவிக்கும் திணை அரிசி, கிழங்கு மற்றும் கீரை உணவுகளே மூன்று நேர சாப்பாடு. ஆண்கள் ஏதேனும் விலங்குகளை வேட்டையாடினால் அன்று இவர்களுக்கு விருந்து. நம்மூர் ஞாயிறு அசைவம் போல். மேலும் அவர்கள் உண்ட பின் இரவில் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் வித்தியாசமின்றி கள் அருந்துவார்கள். அங்கு தென்னையோ பனையோ இல்லையென்பதால் தேனில் இருந்தே கள் எடுப்பார்கள். அது ஒரு ஆரோக்கியப் பானம் அவர்களைப் பொறுத்தவரையில் அவ்வளவே.

இதில் நிலவரசனிற்கு கள்ளை அருந்தப் பிடிக்காது. அதன் சுவையே இவனிற்கு குமட்டுவது போல் இருக்கும். ஆதலால் அவன் உண்டதும் இரவு மட்டும் கண்ணுக்கு தெரியும் மூலிகை தேடி காட்டிற்குள் சென்றுவிடுவான் அல்லது பறித்த மூலிகையை அவனின் ஐயா சொல்லிகொடுத்ததை வைத்து மேலும் பரிசோதித்து பார்க்க குடிசைக்குள் போய்விடுவான்.

இவ்வாறு அவன் வாழ்ந்துக்கொண்டிருக்க அடுத்த கார்த்திகை நட்சத்திரத்தன்று அவன் மலையைவிட்டு காலை பத்துமணி அளவில் இறங்கி வந்துக்கொண்டிருக்கையில் மரங்களின் சலசலப்பு ஓசை அருகில் கேட்க, கச்சத்தில் கட்டியிருந்த மிருகங்களை அடிக்கும் வளைவான ஆயுதத்தை எடுத்து, சத்தம் வந்த திசையை நோக்கி சத்தமின்றி ஒளிந்து சென்று பார்த்தான். அங்கே அவன் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைக்க போகும் யுவதி ஒருத்தி உடல் எங்கும் காயத்தோடு ஒரு மரத்தின் அடியில் இரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தாள்.
அதே நேரம் ஏற்காடு மலையில்.

போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் அங்கே பரபரப்பாக கீழே விழுந்த கல்லூரி மாணவியை தேடிகொண்டிருக்க, கீழே சென்ற போலீஸில் ஒருவர் மேலே வந்து, “சார், கண்ணுக்கெட்டிய தூரம் வரை இறங்கி பாத்தாச்சு சார். அந்த பொண்ணை காணோம். பள்ளத்தாக்குல விழுந்திருக்கும் போல சார். இப்போ என்ன பண்றது? என்று மேலதிகாரியிடம் கேட்க,
அந்த அதிகாரியோ “பச்… என்னய்யா? சரி விடு, மேல வரசொல்லு எல்லாரையும். அந்த பொண்ணு வீட்டுக்கு தகவல் தர சொல்லலாம்” என்று சொல்லி சென்றார். அவருக்கு இது எத்தனையாவது சம்பவமோ?
ஒரு பக்கம் இதெல்லாம் நடந்து கொண்டிருக்க, அருகில் சுற்றுலா வந்த கல்லூரி மாணவிகள் பயத்தில் அழுதுக்கொண்டும் மிரட்சியோடும் தங்களுடன் வந்த ஆசிரியர்களை நோக்கினர்.

ஒரு ஆசிரியர் அதிர்ச்சி மற்றும் பயத்தில் “எத்தனை தரம் சொல்லி கூட்டிட்டு வந்தோம். பாதுகாப்பா இருங்க இருங்கனு நீங்க என்ன சின்ன குழந்தைகளா? உங்களை கண்காணிக்க, செல்பி எடுக்க எவ்வளவோ இடம் இருக்க, அங்க தான் போய் எடுக்கணுமா? நாங்க இப்போ அவ பெற்றோருக்கும் கல்லூரிக்கும் என்னனு சொல்வோம்?”
என்று அழுது புலம்ப, “அவங்களுகென்ன உங்களை நம்பி தான அனுப்புனோம்னு நம்மளை கேள்வி கேட்பாங்க” என்று இன்னொரு ஆசிரியர் டென்ஷனில் எரிந்துவிழுந்தார்.

அதில் கீழே விழுந்த மாணவியின் தோழி ஒருத்தி அழுதுக்கொண்டே, “ மேம், நாங்க எவ்வளவோ சொன்னோம் மேம். மதி தான் கேட்காம அங்க போய் திரும்பி பார்த்தாள். அப்போ தெரியாம கால் தவறி…” என்றவள் அந்த காட்சி கண்முன் விரிய மேலும் அழுதுக்கொண்டிருந்தாள். யாருக்கும் இப்பொது என்ன செய்வதென்று புரியவில்லை.

இங்கே இப்படி இருக்க, இங்கிருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வாணிமாபுரத்தில் உள்ள ஜமின்தார் வீட்டின் அரண்மனையில் தங்கள் ஒரே மகள் மதிக்கு நடந்த சம்பவத்தை நினைத்து கதறிக் கொண்டிருந்தனர் அழகேசன் – கீதா தம்பதியினர். தன் மகள் வழிப் பேத்திக்கு விபத்தா? என்று ஜீரணிக்க முடியாமல் இடிந்துப் போய் அமர்ந்திருந்தார் தாத்தா ஜமின்தார் சிங்கமுகப்பாண்டியன்.
அழகேசன் ஏற்காடு செல்வதாக கூற, தானும் வருகிறேன் என்று கூறி அவரோடு கிளம்பினார் கீதா. அவர்களோடு கூட செல்ல முடியாமல் மனைவி மீனாம்பிகை உடல்நிலை தடுக்க, தங்கள் வம்சத்தின் கடைசி வாரிசையாவது விட்டு வைக்கும்படி கடவுளை வேண்டிய அந்த வயதான ஜமின்தார், பின் அறையில் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு நோயால் அடிக்கடி ஓய்வெடுக்கும் மனைவியைக் காணச் சென்றார்.

இவர்கள் அத்தனைப் பேரையும் ஆடிப்போகும்படி செய்த அந்த காரிகையோ நிலவரசனின் வைத்தியத்தில் அவனின் குடிசையிலேயே மருந்தின் வேகத்தில் துயில் கொண்டிருந்தாள். அவள் மதி என்கிற வான்மதி.

நிலத்துக்கும் வானத்துக்கும் பாலமே மழைதானாம்
ஆனால் உன்னை தொட எனக்கு எதற்கு பாலம்?
மழையாக நான் வரவா?