mazhai21

mazhai21

மழை – 21

இருபெரும் கடினப் பாறைகள் கடல் ஆழத்தில் உரசினால்தான் ஆழிப்பேரலை வரும் என்று யார் சொன்னது? மென்மையான இதழ்கள் இரண்டு உரசிய நொடியே மனமென்னும் மகாசமுத்திரத்தில் உருவான ஆழிப்பேரலை ஒன்று பிரவாகமாய்ப் பொங்கி மொத்தமாய் அவர்களை மூழ்கடித்துச் சென்றது.

அதுவும் மனதைச் சுற்றி எஃகு கவசம் அணிந்து மதுவின் மீதான சலனத்தை ஒதுக்கியதாக நினைத்த அரசனிற்கு இப்போது அவனுள் ஆர்ப்பரித்து வந்த அவளுக்கே அவளுக்கான உணர்ச்சியானது அவளை மனதைவிட்டு வெளியேற்றாமல் அடியாழத்தில் புதைத்து வைத்ததை உணர்த்த, கவசத்தால் வெளியிலிருந்து வரும் தாக்குதலை தடுக்குமே அன்றி உள்ளிருந்து வருவதை தடுக்கத் தெரியாதே!

ஒற்றை இதழோற்றல் அவனின் மனதை வெட்டவெளிச்சமாக்கி வெளிக்கவசத்தை வெடித்துச் சிதறடித்திருந்தது.

நேர்மாறாக மதிக்கோ என்னதான் விரும்பியவன் என்றாலும் அவன் விருப்பம் இன்னும் தெரியாத நிலையில் தான் அவசரப்பட்டு செய்த காரியம் புரிய மனதில் சட்டென்று ஏறிய பாரத்துடனும் கலக்கத்துடனும் விலகினாள். அவளுக்கே ‘இது நாம் தானா?’ என்ற கேள்வி தோன்ற, அதற்கு பதில் கூற முடியாமல் விசுக்கென்று அவனின் மேல் இருந்து இறங்கியவள் அரசனின் முகம் பார்க்க முடியாமல் வெளியேறி தன் அறைக்குள் புகுந்து தாளிட்டாள்.

அரசனுக்கும் தன் மனமாற்றம் திடுக்கிட வைக்க அதை நம்ப இயலாமல் உள்ளங்கைக்குள் தலையைப் புதைத்து அமர்ந்திந்தான்.

நெடுநேரம் கடந்தும் அவனின் அசையாநிலை அப்படியே இருக்க விக்னேஷ்வரன் வந்துவிட்டதாக கூற வந்த அழகேசன் திறந்திருந்த கதவின் வழி அரசன் அமர்ந்திருக்கும் தோரணை கண்டு என்னவோ ஏதோ என்றெண்ணி, “அரசா என்னாச்சு?” என்று உலுக்க அவனும் அதையே தான் உள்ளுக்குள் கேட்டுக்கொண்டிருந்தான் என்று அவருக்கு தெரியாதே!

அதில் உணர்வு பெற்று அவரைக் கேள்வியாகப் பார்த்தான். உள்ளுக்குள் அவர் மகள் செய்த செயல் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

தலையை உலுக்கி பெருமூச்சை வெளியேற்றினான் அரசன். அத்தனையும் அமைதியாக ஆனால் குழப்பத்தோடு பார்த்திருந்தார் அழகேசன். என்னவென்று கேட்டவர் அவன் பதில் கூறாமல் இருக்கவும் மீண்டும் தான் வந்த காரியத்தை சொன்னார்.

அவனோ, “அவங்க வந்துட்டாங்களா? மேல வரச் சொல்லலாம்ல” என்றவாறே தேவையானவற்றை எடுத்துக் கீழே செல்ல மடிக்கணினி சகிதம் அமர்ந்திருந்தவர் அவனிடம் காமெராவைக் கேட்டார்.

அதை கணினியுடன் பொருந்திப் பார்க்க அனைத்தும் பக்காவாகப் பதிவாகியிருந்தது. இன்னொரு முறை அதனைப் பார்க்கத் திரணியின்றி அரசன் எதிரில் அமர்ந்திருக்க மற்ற அனைவரும் அதனைக் கண்ணுற்றனர்.

தேவையானவற்றை மட்டும் தனியாக எடுத்த விக்னேஷ்வரன், “குட் ஜாப் அரசன். இப்போதைக்கு இது நம்ம கைல இருக்குறத சொல்ல வேணாம் ஓகே? இப்போ நாம என்ன பண்ண போறோம்ன்னு சொல்லிரறேன்” என்றவர் சிறிது யோசித்து

“முதல்ல லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல மரம் கடத்துறதாவும் இடத்தை ஆக்கிரமித்து தர மறுக்குறதாவும எப் ஐ ஆர் போட்டுட்டு கூடவே பாரெஸ்ட் ஆபீஸ்க்கும் தகவல் சொல்லிரலாம். சுதர்சனை அரெஸ்ட் பண்ண அவங்க போகட்டும். நாம கோர்ட்க்குல சீல் வைக்கணும்ன்னு கேஸ் போட்ரலாம் கூடவே சிவில் கோர்ட்க்கும் போய் பத்திரம் காமிச்சி கேஸ் போடணும். சோ சேலம் போறோம். வேற எதாவது மாற்றம் இருக்கா?” என்று திட்டத்தை விளக்கி வினவ

அரசனின் கண் அன்னிசையாய் மதியைத் தேடியது. காதல் என்றான பின் கண்ணிலேயே படவில்லையே. கூடவே அவள் இருந்தால் இதற்குள் ஆயிரம் சந்தேகம் கேட்டிருப்பாள் அல்லவா? அதைக்கொண்டும்தான் இந்த தேடல்.

அவள் இல்லையாதலால் அவளின் வேலையை இவன் எடுத்துக்கொண்டான். “எதுக்கு நீங்க அவங்க ஆக்கிரமித்து தர மறுக்குறதா சொல்றீங்க? நாம தான் கேட்கவே இல்லையே அவங்க கிட்ட” என்று புரியாமல் கேட்டான்.

“அட என்னப்பா? கேட்டா மட்டும் இந்தா வச்சிக்கோன்னு தந்துருவானா? தர மாட்டான்ல அதைத் தானே நான் முன்னாடியே சொல்லிருக்கேன். அது நமக்கு நம்ம இடம் வேணும்ன்னு தெளிவாத் தெரிவிக்கத்தான். இல்லன்னா சமரசம் பண்றேன் சமாதானம் பண்றேன்னு இழுத்தடிப்பான். வாங்க கிளம்பலாம்” என்றழைத்தார். 

அடுத்து என்ன? அழகேசனும் அரசனும் விக்னேஷ்வரனோடு வாசல் செல்ல தாத்தாவோ, “நீங்களே எல்லாத்தையும் பண்ணிட்டு வாங்க. நான் தேவை இல்லைத்தானே” என்றுவிட்டார். இவர்களும் அதனை ஒத்துக்கொண்டனர் வயசானவரை எதற்கு அலைக்கழிக்க வேண்டுமென்று.

விக்னேஷ்வரன் அவரின் காரில் கம்பீரமாக ஏறி அமர, அப்போது தான் அரசன் கவனித்தான் அவர் காக்கிச்சட்டையில் வந்திருப்பதை. அன்று வந்த காவலரும் இதே உடையில்தான் வந்திருந்தார். ஆனால் அவரை விட இவருக்கு மிகப்பொருத்தமாக இருப்பது போல் பிரமை. அந்த சட்டைக்கான மரியாதையும் நேர்மையும் கொடுப்போருக்குத்தான் சட்டையும் பதில் நேர்மை செய்யும் போலவே.

அழகேசன் காரோட்ட அரசன் முன்புறம் ஏறி அமர்ந்தான். அத்தோடு இரு கார்களும் அரண்மனையை விட்டு வெளியேறியது.

மாடி அறையிலோ மதி உள்ளத்து பாரத்தையெல்லாம் விழி வழி வெளியேற்றி அப்போதும் விசும்பலோடு எழுந்து முகம் கழுவி வர, கண்ணாடியைப் பார்த்தால் முகமெல்லாம் அழுதழுது இரத்தநிறம் கண்டிருந்தது.

இப்படியே கீழே போனால் அவ்வளவு தான் என்றெண்ணியவள் முணுமுணுவென்று ஒரு மாதிரியாக வலித்த மனதை சிறிது நேரம் அங்கும் இங்கும் அலைந்து, அவளது பொருட்களை கலைத்து போட்டு, திரும்ப ஒழுங்காக வைத்து பின் கண்ணாடியைப் பார்க்க முகம் சற்று தெளிந்திருந்தது.

ஆனால் இவள் கீழே வந்து பார்ப்பதற்குள் அழகேசன் மற்றும் அரசன் விக்னேஷ்வரனுடன் வெளியே சென்று அரைமணி நேரம் கடந்திருந்தது.

தாயிடம் சென்று அவர்கள் சென்றதை அறிந்தவள், “அம்மா… நாம இன்னைக்கே சென்னை போகலாமா? காலேஜ் லீவ் போட்டு மூணு நாள் ஆச்சும்மா” என்று மனதை மறைத்துக் கேட்டாள். அவளுக்கு இங்கிருந்து போக வேண்டும் போல் இருந்தது.

இத்தனை நாள் மறந்திருந்த காலேஜ் நினைவு வரவே தாயிடம் அவ்வாறு கேட்டாள். வேறு நேரமாக இருந்தால் கண்டுபிடித்திருப்பார் மகளின் மனதில் எதுவோ குடைவதை, ஆனால் இப்போதோ அவர் மனதே வெளியே சென்ற வீட்டு ஆண்களின் நலனை எண்ணி பதைபதைத்திருக்க, “போலாம்டி உங்கப்பா வரட்டும்” என்று மட்டும் கூறித் தன் தாயிடம் சென்றுவிட்டார்.

காவல் நிலையத்தில் புகார்ப் பதிவு செய்ய சுதர்சனனின் ஆதர்ச காவலர் மிகவும் தயங்கினார்தான். “சார் ரொம்ப பெரிய இடம் சார். கொஞ்சம் யோசிச்சி…” என்று அவர் இழுக்க,

“அதெல்லாம் எனக்கும் தெரியும். நீங்க யாருக்கிட்ட வேலைப் பாக்குறீங்க கவர்ன்மென்ட்கிட்டையா இல்ல அவருகிட்டையா?” என்ற விக்னேஷ்வரனின் ஒற்றைக் கேள்வியில் பதிவு செய்த கையோடு தொழிற்சாலையில் சோதனையிட சென்றனர்.

அங்கே அப்பொழுதுதான் காகிதகூழ் செய்ய இரண்டு மரக்கட்டைகளை தூள் தூளாக்கி இருந்தனர். மூன்றாவதை தூக்கவும் காவல்துறை, வனத்துறை மட்டுமின்றி எங்கும் தன் கண்களை வைத்திருக்கும் ஊடகத்துறையும் வந்து குவிந்தனர்.

இதுவரை இப்படி நடந்திராதலால் நேற்று வந்திறங்கிய நூற்றுக்கணக்கான மரத்தையும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்த தொழிலாளர்கள் விழிக்க கையும் களவுமாக பிடிப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது அத்தனை மரங்களும்.

கூடவே தொழிற்சாலை இடம் பிரச்சனைக்குரியது என்றும் எப்படியோ விஷயம் வெளியே கசிந்திருக்க அனைத்து தொலைக்காட்சி செய்தியிலும், ‘சுதர்சன் பேப்பர் ஆலையில் இருந்து தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியம் திடுக்கிடும் திருப்பம்’ என்று வண்ண வண்ண  வார்த்தைகளில் பிளாஷ் பாக் ஓட ஆரம்பித்தது.

சுதர்சனை கைது செய்ய ஏற்காடு காவலர்கள் சென்றால் அவர் வெளிநாடு சென்றிருப்பதாக அவரின் மகன் கூற நம்பமுடியவில்லை என்றாலும் வேறு வழியின்றி, “சீக்கிரம் இங்க வர சொல்லுங்க” என்ற வார்த்தையோடு கிளம்பினர்.

ஆனால் அதற்கு நேர்மாறாக ஏற்காட்டில் இருந்து கீழ்நோக்கி இறங்கிக்கொண்டிருந்த காரில் அமர்ந்திருந்த சுதர்சன் வெறிப் பிடிக்காத குறையாக கோபத்தில் குமிறிக்கொண்டிருந்தார்.

மூளையோ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், “நான் இருக்குற வரை எம்மண்ணுல உன்னை கால்பதிக்க விடமாட்டேன் உன்னால ஆனதை பார்த்துக்கோ” என்று வேட்டியை மடித்துக்கட்டிச் சவாலிட்ட சக்திவேலின் குரலை நினைவுபடுத்தியது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்,

தந்தையின் ஏற்காடு எஸ்டேட் அவருக்கு பின் சுதர்சனிடம் வர, அவருக்கோ பெரிதாக எதையாவது செய்து பெரும் புகழும் பெற வேண்டுமென்று தீரா தாகம். பத்தோடு பதினொன்றாக தானும் ஒரு எஸ்டேட்காரன் என்று இருப்பதை வெறுத்தவர் அதற்கான முயற்சியில் இறங்கினார்.

அப்போதெல்லாம் வடஇந்தியாவில் மட்டும்தான் காகித தொழிற்சாலை இருந்தது. காகிதத்தின் பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க அதனை வேறு மாநிலத்தில் இருந்து தென்னிந்தியாவில் இறக்குமதி செய்துக்கொண்டிருந்தனர். அதை கவனித்தவருக்கு சட்டென்று பொறி தட்ட அதற்கான வேளையில் இறங்க ஆரம்பித்தார்.

எங்கெங்கோ ஆலை திறப்பதை விட ஏற்காட்டிற்க்கு அருகில் இருக்கும் ஊர்களையே தேர்ந்தெடுத்தார் அதில் அவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது வாணிமாபுரமும் அதன் சுற்றுவட்டார வளமும்தான்.

அவர் ஏற்காட்டிற்கு அருகில் இடம் வாங்குவதே மூலபொருட்களின் தேவை அதிகமாகும் பட்சத்தில் எஸ்டேட்டிற்கு பின்புறம் உள்ள மரங்களை வைத்து சமாளிக்கத்தான். அப்படி இருக்க காகிதகூழ் செய்ய தேவையான மலைவேம்பு, சவுக்கு காடாக படர்ந்திருக்க அந்த இடங்களை வாங்க சக்திவேலைச் சந்தித்தார்.

ஆனால் அவரோ, என்ன எதற்கென்று கேட்டு ஆலை ஆரம்பிக்க என்றதும் நயமாகவே மறுத்தார். மறுக்க மறுக்க அதன் மேல் ஆசை அதிகமாவது தானே மனித குணம்.

அதற்கு அவரும் விதிவிலக்காக இல்லாமல் ஜமீன்தார் விவசாயம் செய்பவருக்கு குறைந்த விலைக்கு விற்ற இடத்தை விவசாயிகளிடம் சென்று அதிக பணம் தந்து கேட்க, அதில் ஒருவர் சக்திவேலிடம் விசுவாசமாய் சொல்லிவிட்டார்.

அதைக் கேள்விப்பட்டதில் இருந்து கடுங்கோபமும் எரிச்சலும் அடைந்த சக்திவேல் கொடுத்த நிலத்தை எல்லாம் விவசாயிகள் மனம் மாறி சுதர்சனிடம் விற்கும் முன் இவரே வாங்கிக்கொண்டார்.

இதனை தந்தையிடம் சொன்னால் கொடுத்ததை திரும்ப வாங்கியது பரம்பரைக்கே இழுக்கு என்று திட்டுவாரே என்றெண்ணி அதற்கும் சேர்த்து மனவுளைச்சலை அனுபவித்தார்.

இதற்கிடையில் சக்திவேல் செய்ததை எண்ணி கடுப்பின் உச்சிக்கு சென்ற சுதர்சன் அவரிடம் கேட்பதை விடுத்து மிரட்டலுக்கு போக, கேட்டே தராத ஜமீன் இளரத்தம் மிரட்டலுக்கு தந்து விடுமா என்ன?

அதனை தூசென தட்டிவிட்டு, “நான் இருக்குற வரை எம்மண்ணுல உன்னை கால்பதிக்க விடமாட்டேன் உன்னால ஆனதை பார்த்துக்கோ” என்று வேட்டியை மடித்துக்கட்டிச் சவாலிட்டு அரண்மனை திரும்பினார்.

ஆனால் அவரின் உள்ளுணர்வு அவருக்கு எதை உணர்த்தியதோ அன்றைய இரவு பத்திரம் அனைத்தையும் தான் படுக்கும் படுக்கையை பின்புறம் கிழித்து உள்ளே திணித்தார். அதை செய்து முடித்த பின் புனிதா வரவும் வீட்டினரிடம் தான் செய்யும் செயல்களை மறைக்கும் குற்றஉணர்ச்சி வேறு தாக்கியது.

அவரின் மாற்றத்தை உணர்ந்து புனிதா என்னவென்று கேட்டாலும் பதில் சொல்லாதவர் புதுமனைவி ஏற்காடு செல்ல ஆசைப்பட்டு கேட்கவும் தானும் மனமாற்றத்துக்கு வேண்டி புறப்பட்டார்.

அன்றே சக்திவேலிற்கு முடிவு கட்ட நினைத்த சுதர்சன் அடுத்த நாளே நினைத்தபடி காரியத்தைச் சாதித்து மாட்டிக்கொள்ள கூடாதென்று ஏற்காடு சென்றுவிட்டார்.

பின் சக்திவேல் இடம் வாங்கி தன்னிடம் விற்றுவிட்டதாக போலி பத்திரம் தயாரித்து ஒரு மாதம் கழித்து வர, அவர் உள்ளுக்குள் பயந்ததைப் போல் யாருக்கும் தெரியவில்லை.

தென்னிந்திய அளவில் மிகப்பெரிய காகித தொழிற்சாலையை அரசு உதவியோடு ஆரம்பித்தவர் ஆரம்பத்தில் ஒரு மரத்தை வெட்டினால் பல மரத்தை நடும் விதிமுறையை சில வருடங்கள் கடைப்பிடித்தார்தான்.  

போகப் போக அவருக்கான பேரும் புகழும் செல்வாக்கும் சேர குறைந்த காலத்தில் இந்திய அளவில் முன்னணி நிறுவனமாக மாற்றி வெளிநாட்டு ஏற்றுமதியிலும் முன்னிலை வகித்தார். தேவைகள் அதிகப்பட காடுகள் அழிக்கப்பட்டன. மரம் நடுவதாக இயற்கை காப்பதாக வெளியே காட்டப்பட்டன. அவ்வாறு கட்டி காப்பாற்றி??? வந்த நிறுவனம் பேர் புகழ் அனைத்தையும் ஒரே நாளில் நிர்மூலமாக்க பார்த்தால் விடுவாரா சுதர்சன்?

டிரைவரின் போனில் இருந்து குடும்ப வக்கீலுக்கு அழைத்தவர், தானும் தன் நிறுவனமும் பாதிப்பின்றி வெளிவர என்ன செய்வது என்று ஆலோசித்தார்.

பின் வேறொரு நம்பருக்கு அழைத்து செய்ய வேண்டிய காரியத்தைக் கூறி எப்பாடுபட்டாவது அதனை செய்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். ஆனால் அதில் இருந்து தப்பிக்க முயற்சியின்றி சோம்பியிருக்க மாட்டான் என்பதை ஜமீன் வீட்டினர் மறந்து போனது யாரின் குற்றம்?

விளைவு காரில் சென்றுக்கொண்டிருந்த அழகேசனுக்கு கீதாவிடம் இருந்து போன் வந்தது. காரோட்டிக் கொண்டிருந்ததால் அதனை ஆன் செய்து அரசனிடம் கொடுத்துப் பேசச் சொல்ல இவன் பேசும் முன்பே அவர் அழுகையோடு திக்கித்திக்கி கூறிய, “என்னங்க… நம்ம… மதுவ காணோங்க” என்ற செய்தியானது அரசனின் செவி வழி இதயம் நுழைந்து சிறிது நேரம் முன்பே உணர்ந்திருந்த அவனின் காதல் மனதை கதறடித்தது.

மழை வரும்…

உன்னை எனக்குள் அடக்கிக்கொள்ள

இப்போது விளைகிறேன் நிலவே

தாமதத்திற்குத் தண்டிக்காமல்

மழையாக நீ வருவாயா?

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!