mazhai6

mazhai6

மழை – 6
அன்று காலை அனைவரும் கமழி தனியாக இருக்கும் குடிசை முன்
கூடியிருந்தனர். அவளின் தாய் உள்ளேச் சென்று அரசனைத் திருமணம்
செய்துக்கொள்ள சம்மதமா? என்று கேட்கப் போகும் முன், “அத்தை,
கொஞ்சம் நில்லுங்கள்” என்றக் குரல் கேட்டது. அக்குரலுக்குச்
சொந்தமானவன் கமழியின் தாய்மாமன் மகன் மலைமாறன்.

அவனின் தோற்றத்தைக் கண்டு திடுக்கிட்டனர். ஏனேனில் அவனும்
கமழியை காதலிப்பதாக உணர்த்திக்கொண்டிருந்தான். அனைவருக்கும்
தோன்றியது ஒன்று தான். ‘அரசனே இப்பொது தான் திருமணத்திற்கு
சம்மதம் தெரிவித்தான். அதற்கும் போட்டியா?’ என்று. ஆனால் அவர்கள்
திருமண விசியத்தில் மணமக்களின் விருப்பத்திற்கே அதிக முக்கியத்துவம்
தருபவர்கள். காலம் முழுதும் வாழப்போகிறவர்கள் அவர்களே என்ற
தாத்பரியத்தை நன்கறிந்தவர்கள்.

“யாரை திருமணம் செய்ய சம்மதம் என்று கமழியிடம் கேளுங்கள்” என்று
அவன் கம்பீரமாக உரைத்தான். நிலவரசன் அளவு இல்லையென்றாலும்
மலைமாறனும் முழுமையான கம்பீர ஆண்மகனே. பின் கமழியின் தாய்
குடிசையை திறந்து உள்ளே நுழைந்தார். மதி இதை எதிர்பார்க்காமல்
திகைக்க, அதை விட திகைப்பாக சிறிது நேரத்தில் வெளியே வந்த கமழியின்
தாய் அனைவரிடமும் மலைமாறனை அவள் திருமணம் செய்ய
சம்மதித்ததாகக் கூறினார்.

மதி சந்தோஷத்தில் உள்ளுக்குள் கும்மாளம் போட்டாள் என்றால் அங்கே
மனபாரம் அகன்று நின்ற அரசனை மலைமாறன் நன்றியோடு பார்த்தான்.
நடந்தது இது தான். சித்தர் அவன் வான்மதியுடன் ஊருக்குச் செல்ல
சம்மதித்ததும் மலைமாறனை சென்று பார்க்க சொன்னார் அவர். எதற்கு
சொல்கிறார் என்று அறிந்தவன், “ஐயா எப்படி அவனிடம் கட்டாயப்படுத்த?
அது தவறில்லையா?” என்று வருந்த, “இப்பொது நீ போய் உன்
சூழ்நிலையைக் கூறவில்லை என்றால் தான் தவறாகிவிடும் அரசா. அவன்

இப்போது மிகுந்த துன்பத்தில் உழன்றுக்கொண்டிருப்பான். ஏனென்றால்
அவன் கமழியை விரும்புகிறான்” என்று புன்னகையுடன் கூறினார்.
அதைக் கேட்ட மறுகணம் மலைமாறன் இருக்குமிடம் தேடிச்சென்றான்
அரசன். அங்கே அவனின் குடிசையை விட்டுச் சற்றுத்தள்ளி இருந்த
பாறையில் அமர்ந்து நிலவொளி பட்டு வெள்ளியில் செய்த சலங்கைப் போல
சலசலக்கும் காட்டின் மரங்களில் எதையோ தேடிக்கொண்டிருந்தான்
மலைமாறன்.

அவனருகே சென்று அரசன் அமர்ந்து, “இங்கே என்ன செய்கிறாய் மாறா?”
என்றதும் உணர்வு திரும்பினான். அவனின் கேள்விக்கு வலுகட்டாயமாக
வராத புன்னகையை வலியோடு வரவைத்தவன், “உன் திருமணத்தைக்
குறித்தே எண்ணிக்கொண்டிருந்தேன் அரசா” என்றான். ‘உண்மையும்
அதுதானே இவன் திருமணமாக இருந்தால் என்ன? கமழி திருமணமாக
இருந்தால் என்ன? எல்லாம் ஒன்று தான்’ என்பது அவன் எண்ணம்.
“நான் கூட கமழியுடன் உன் திருமணத்தை எண்ணிக் கனவு கண்டிருப்பாய்
என்று நினைத்து வந்தேன்” என்றான் அரசன் குறும்பாக.

அவனின் கூற்றில் திகைத்துப்போய் பார்த்தான் மாறன். யாருக்கும் அவனின்
காதல் தெரியாது அதனால் அரசனிற்குப் பிடித்திருந்தால் விலகிவிடுவோம்
என்று நினைத்திருக்க, அரசனே வந்து இப்படிப் பேசினால் அவன் என்ன
செய்வான்?

“அரசா! நீ…” என்று தயங்கவும், அவனிடம் அனைத்தையும் கூறிவிட்டான்
அரசன். அத்தோடு தான் நாளை கிளம்புவதாகவும். கமழி என்னும் அவனின்
காதல் தேவதையோடு வாழப்போவதை நினைத்து மகிழ்ச்சியும், அரசனைப்
பிரிவதை எண்ணித் துக்கமும் ஒருசேர எழுந்து அவனைத் திக்குமுக்காடச்
செய்தது. பின்னர் அவர்கள் வெகுநேரம் பேசி பின்னிரவில் தான் தங்கள்
இருப்பிடம் திரும்பினர்.

அதனை நினைத்துதான் தனக்காக அவன் செய்யத் துணிந்த தியாகத்தை
எண்ணி நெகிழ்ந்தான் அரசன். இதற்கிடையில் அனைவரும் கமழியின்

முடிவை குறித்து விவாதித்து திருமணம் எப்போது வைத்துக்கொள்வது என்று
முடிவெடுக்க, யாரின் கவனத்தையும் கவராமல் கமழி தனித்திருக்கும்
குடிசைக்குள் சென்றாள் மதி.
அவள் தலைக்குனிந்து அமர்ந்திருக்க, “ரொம்ப நன்றி கமழி… இந்த
உதவியை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்” என்றவாறு அவளிடம்
வந்தாள்.

“அக்கா… நன்றி எல்லாம் வேண்டாம் அக்கா. மனசுக்கு சரி என்று பட்டதைத்
தான் நான் செய்தேன். யாரும் பார்க்கும் முன் சென்றுவிடுங்கள்” என்று
புன்னகையோடு கூறினாள். மீண்டும் நன்றி சொல்லி மதி சென்றதும்
கமழியின் கண்கள் தானாக கலங்கியது.

நேற்று இரவு திடுமென்று வான்மதியைக் கண்டதும் அவள் பதறித்தான்
போனாள். ஆனால் அவள் கூறிய விடையங்கள் அவளின் மனதைக் கலங்கச்
செய்தது முதல் ஈர்ப்பு தோல்வியில் முடிந்ததால். ஆனால் காலையில்
அவளின் மாமாவின் குரல் வெளியே கேட்டதும் கலங்கிய மனது
அமைதியானது உண்மை. அதனால் தான் மலைமாறனைத் திருமணம் செய்ய
சம்மதம் கூறிவிட்டாள். ஆனால் இப்போது மனம் மீண்டும் குழம்பியது ‘தவறு
செய்கிறோமோ’ என. இனி இவளின் பூமனம் நோகாமல், குழப்பத்தைக்
கலைந்து, தெள்ளிய மனதோடு காதல்கொள்ள வைக்கும் பொறுப்பு
மாறனுடையது. அவன் அதை வெற்றிகரமாகச் செயல்படுத்துவான் என்று
நம்புவோமாக.

வெளியே ஒரு மனதாக அடுத்த மாதம் திருமணம் வைத்துக்கொள்ளலாம்
என்று முடிவெடுத்திருந்தனர். அப்பொழுது சித்தர், “நான் உங்களிடம் ஒரு
முக்கிய முடிவு கூறப்போகிறேன். கோபம் மற்றும் வருத்தப்படாமல்
ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.
“அரசன் யார் என்று உங்க எல்லோருக்கும் தெரியும். ஒரு நாள் பிரிய வேண்டி
வரும் என்றும் தெரிந்திருக்கும் அல்லவா? அது இந்த நாள் என்று
எண்ணிக்கொள்ளுங்கள். அவனின் சொந்தம் இப்போது அவனை அழைத்து

செல்ல வந்திருக்கிறது” என்றவாறு மதியைப் பார்க்க, மற்றவர்க்கும்
புரிந்துவிட்டது.
அவனைப் பிரிய மனதின்றி அவனுடன் பேச சூழ்ந்துக்கொண்டனர். அங்கே
பிரிவுத்துயர் தாங்காமல் அரசன் மற்றும் மக்களுக்குக் கண்ணீர்
அடக்கமாட்டாமல் வெளிவந்தது. மதிக்கே அரசனை அழைத்துச்செல்ல
குற்றஉணர்ச்சியாய் போய்விட்டது. அவனை விட்டுச்செல்வோமா என்றால்
அதற்கும் மனம் பயங்கரமாக முரண்டு பிடித்தது. ‘அவன் இல்லாமல் இனி நீ
இருக்க மாட்டியோ?’ என்று ஒரு மனது கேள்வி கேட்க, ‘அப்படியெல்லாம்
இல்லை மாமாவின் கொலைக்கு நியாயம் செய்ய அவன் தானே
வரவேண்டும். அப்படித் தான ஐயாவும் சொன்னாங்க’ என்று இன்னொரு
மனது வாதாட, அமைதியாக இதனைக் காண மனமில்லாது தள்ளி
நின்றுக்கொண்டாள்.

ஒருவழியாக இருவரும் விடைபெற்றுக் கிளம்பினர். சித்தர் இருவரையும்
ஆசிர்வதித்தே அனுப்பினார். அரசன் கொடிய விலங்குகள் வந்தால்
தப்பித்துக்கொள்ள தேவையான ஆயுதம் மற்றும் மூலிகையை எடுத்து வந்து
புறப்பட்டான். ஆக அவர்களின் ஏற்காடு பயணம் ஆரம்பித்தது.
சிறிதுதூரம் சென்றதும் மதி அமைதியாக வரும் அரசனைப் பார்த்தாள். முதல்
நாள் பார்த்த சாந்தமான முகம் சிறிது வாடி, தீர்க்கமான கண்கள் சற்று
ஒளிக்குன்றி காணப்பட்டது. அதனை மாற்ற, “இன்னும் எவ்வளவு நேரம்
நடந்தால் ஏற்காடு வரும்” என்று அவனைப் பேச வைக்கும் முயற்சியில்
இறங்கினாள்.

ஆனால் அவனோ இவளை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தான். பின்
ஒன்றும் கூறாமல் தன் நடையை எட்டிப் போட, அவள் அவசரமாக ஓடிச்
சென்று அவனை மேலே செல்ல வழிவிடாமல் நின்றாள். அவன் அமைதியாக
இருக்கவும், “இப்படி ஒன்னும் அழுது வடிஞ்சி என்னைக் கூட்டிட்டு போக
வேண்டாம். எப்படி போகணும்ன்னு சொல்லுங்க நான் போயிக்குறேன்.
நீங்க வந்த வழியே திரும்பி போங்க” என்றாள்.

“அப்படியா? நீயே சொல்லிட்ட அப்புறம் என்ன? இங்கே வா” என்றவன்,
அவள் அருகில் வந்ததும், “இப்பொது நாம் நின்றுக்கொண்டிருக்கும் இடத்தில்
இருந்து நேரே சிறிது தூரம் நடந்தால் பக்கத்து மலைத்தொடரின் அடிவாரம்
வரும். அதில் ஏறி… அதோ தெரியுதே” என்று ஒரு விரலை பக்கத்து மலை
உச்சியில் சுட்டிக்காமித்து, “அதற்கு எதிர்ப்புறம் தான் ஏற்காடு… பத்திரமா
போய் சேரு” என்று விட்டு திரும்பி நடக்கத் தொடங்கினான்.

வான்மதிக்கு அவன் ஏன் சற்றுமுன் மேலும் கீழும் பார்த்தான் என்று
இப்போது புரிந்தது. கல்லூரியில் என்சிசி மாணவி என்பதால் அவளிற்கு
இதில் ஏறி அந்தப் பக்கம் போக குறைந்தபட்சம் ஐந்து நாளாவது ஆகும்
என்று தெரிந்தது. இந்த லட்சணத்தில் இவன் ஏதோ ‘பக்கத்து தெரு வழியா
போங்கன்னு வீட்டு அட்ரெஸ் சொல்ற மாதிரி ஈசியா சொல்லிட்டு போறான்
பாரேன்’ என்று தான் பார்த்தாள்.

அவன் திரும்பி நடக்க தொடங்கியதும், “மாமா… மாமா நில்லுங்க” என்று
கத்தினாள். அவன் கேட்காமல் மேலே செல்ல, “டேய் அரசு மாமா…” என்று
காலை தரையில் உதைத்து அழைத்தாள்.

அதிர்ச்சியில் சட்டென்று அவன் திரும்ப, “என்ன என்ன முறைப்பு? ஹான்…
சும்மா சொன்னா அப்படியே விட்டுட்டுப் போயிடறதா? கொஞ்சமாச்சும்
மனட்சாட்சி இருக்கா உங்களுக்கு? இருங்க இருங்க நான் அப்படியே நேரா
போய் ஐயாக்கிட்ட சொல்லுறேன்” என்று அவனை நோக்கி வந்தாள்.
“போய் சொல்லிடுவியோ நீ?” என்று கேட்டவன் கீழே ஏற்கனவே
உடைந்திருந்த மரக்கிளையை எடுத்து அவளை அடிக்க வந்தான். “ஐயோ
எங்க அம்மா கூட என்னை கைல தான் அடிப்பாங்க மாமா. குச்சி எடுத்து
சின்னப் புள்ளைய அடிக்க வரக்கூடாது. அது தப்பு” என்று அலறி அடித்து
முன்னால் ஓடிக்கொண்டே கூற, அவளின் சிறுப்பிள்ளைத்தனத்தில்
அடக்கமாட்டாமல் வாய்விட்டு சிரித்தான் நிலவரசன்.

அன்றைய மாலை வரையில் கிடைத்த பழங்களை எல்லாம் சேகரித்து
உணவுண்டவாறே அடிவாரத்தில் இருந்து சற்று மலையேறி இருந்தனர்.

இடையிடையே ஓடையில் நீர் இருந்ததால் உணவு மற்றும் நீருக்குப்
பஞ்சமில்லாமல் இருந்தது.
மாலை ஆறு மணி போல் ஆனதும் மதியால் அதற்கு மேல் ஒரு அடிகூட
எடுத்து வைக்க முடியவில்லை. செருப்பில்லாத கால்களில் பாறை உராய்ந்து
எரிச்சல் கொடுத்தது. அவளது சோர்வை உணர்ந்தவன் போல், “இன்னும்
கொஞ்சம் தான். நாம் இரவு காட்டில் உலாவ முடியாது. அதனால் குகையில்
தங்கி காலையில் மீண்டும் மேலே செல்வோம்” என்றான்.

அவன் சொன்னபடி குகையும் வந்துவிட்டது. மதி அவசரமாக ஓய்வெடுக்க
வேண்டி உள்ளே செல்ல பார்க்க, கைக்கெட்டிய அவளது குதிரைவால்
முடியை பிடித்து இழுத்தவாறே, “ஏய் எங்க போற… கொஞ்சம் இங்க
உட்காரு” என்று குகையின் பக்கவாட்டில் அமர வைத்தான்.

“ஆஆ… அரசு மாமா ரொம்ப அராஜகம் பண்ணாத மாமா… சொன்னா கேட்க
மாட்டாங்களா? இப்படியா முடிய பிடிச்சி இழுப்பீங்க? வலிக்குதுல…” என்று
தலையை பாவமாய் தேய்த்துவிட்டவாறு அமர்ந்தாள்.
“உஷ்… நான் உள்ளே போயிட்டு வரவரைக்கும் இங்கேயே அமைதியா இரு”
என்று விட்டு உள்ளே சென்று சில நிமிடங்களில் வெளியே வந்தான்.
“ஹ்ம்ம்… பாதுகாப்பா தான் இருக்கு. உள்ளே போ. நான் மூலிகைய இங்கே
வைத்து குகை வாயிலை மரக்கட்டையால் மறைத்துவிட்டு வரேன்” என்றான்.
அவள் ‘ஒஹ் உள்ளே வேற எதாவது விலங்கு இருக்கோன்னு செக் பண்ண
போனானா? நல்ல வேளை எதுவும் இல்லை. நம்ம மாமாக்கு ரொம்ப அறிவு
தான் போ’ என்று அரசனை மனதிற்குள் பாராட்டினாள்.

உள்ளே இருட்டாக இருக்கும் என்று நினைத்து வந்தால் ஆங்காங்கே இருந்த
பாறையின் இடைவெளியில் இருந்து வெளிச்சம் வந்துக்கொண்டு தான்
இருந்தது. அதில் அவள் சுற்றிலும் பார்க்க அவளின் கருத்தைக் கவர்ந்தது
குகையினை இரண்டாக பிரித்து நீர் குட்டை போல் நடுவில் தேங்கியிருந்தது
தான். கூடவே சுவரில் சில புரியாத ஓவியங்களும், இவள் வரும் அதிர்வு
கேட்டு பொந்துக்குள் புகுந்த பெயர் தெரியாத பூச்சிகளும் இருந்தன.

இவ்வளவு நாள் காட்டில் வாழ்ந்ததால் பூச்சிக்கு பயப்படும் நிலைமை
எல்லாம் தாண்டியிருந்தாள் வான்மதி.

அரசன் வந்ததும் தீப்பந்தம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட, குகையில் சிறிது
சிறிதாக வெளிச்சம் குறைந்து முழுதாக இருளில் மூழ்குவதற்குள் தீப்பந்தம்
தன் வெளிச்சத்தை உமிழ்ந்தது.

பின் சேகரித்த பழங்களை இருவரும் உண்டு உறங்க தயாராகினர். கால்
வலியால் உறக்கம் வராமல் இருக்கவே சுவரில் இருந்த ஓவியங்களை குறித்து
அரசனிடம் கதை கேட்க ஆயித்தம் ஆனாள்.

“மாமா இதெல்லாம் என்னது?” என்று குச்சி குச்சியாய் மனிதர்கள்
விலங்குகள் வரைந்திருப்பதை சுட்டிக்காட்டிக் கேட்டாள். அதெல்லாம்
பழங்கால மனிதர்கள் மொழி உருவாவதற்கு முன்பு பேச பயன்படுத்திய
ஓவியங்கள். தாங்கள் கூற வருவதை ஓவியம் மூலம் மற்றவர்க்கு
உணர்த்தினர். சரி காலை இந்த நீரினுள் விட்டு கழுவு” என்றான்.
அவள் நீரினுள் விட்டதும் எரிச்சலுக்கு இதமாக இருந்தது. அவள் எடுக்க
மனமின்றி அப்படியே வைத்திருந்தாள். “இப்படியே வச்சிருந்தா பாதத்தோல்
ஊறி நாளை நடக்கும் போது கிழிஞ்சி ரத்தம் கொட்டும் பரவாயில்லையா?
என்று மிரட்டினான்.

டக்கென்று வெளியே எடுத்து கற்பனையில் அவன் கூறியதை எண்ணி
மிரண்டு தான் போனாள். “எனக்கு கால் வலிக்குது” என்று
சிணுங்கிக்கொண்டு கூற, “இந்தா இந்த இந்த சாறை பாதத்தில் பூசிப் படு.
காலையில் எரிச்சல் போய்விடும்” என்று கூறி குழி போல் இருந்த கல்லில்
சாற்றைப் பிழிந்துக் கொடுத்து கண்மூடிப் படுத்துவிட்டான்.
அவளும் பாதத்தில் பூசி மீதி இருந்த சாற்றை, “இந்தாங்க நீங்களும் பூசுங்க”
என்று அரசனிடம் நீட்டினாள். ஆனால் அவன் அதனை பார்க்காமல்
கண்மூடியபடியே, “எனக்கு எங்கயும் வலிக்கலை. உனக்கு எங்கெல்லாம்
வலிக்குதோ அங்கெல்லாம் தேய்த்துக் கொள்” என்று கூறி மறுபுறம் திரும்பி
நொடியில் உறங்கிவிட்டான்.

பிறகென்ன அவனின் வைத்தியத்தின் மீது உள்ள அபார நம்பிக்கையில்
முகத்தை தவிர எல்லா இடத்திலும் நன்கு தேய்த்துப் படுத்துவிட்டாள்.
பின்னே உடம்பில் ஒவ்வொரு அணுவும் தேங்காயைக் கட்டிவைத்தது போல்
கனத்ததே!
மறுநாள் மீண்டும் இதே பயணத்தைத் துவங்க குகையை விட்டு
வெளியேறினார்கள். அன்று அவர்கள் மலையின் மத்திய பகுதியை
நெருங்கியிருந்தனர். வலி குறைந்திருந்தாலும் சோர்வாக
நடந்துக்கொண்டிருந்த வான்மதியின் நாசியை அப்பொழுது ஒரு சுகந்தமான
நறுமணம் தீண்டியது. இதற்கு முன் மலைக்காடுகளில் வீசிய காற்றே
மணமாயிருந்தாலும் இது வார்த்தையால் வடிக்க முடியாத அளவு மனதை
மயக்கும் வாசனையாக இருந்தது. அது அவளின் மனதிற்கு தேவையான
புத்துணர்ச்சியைத் தர, நடையை நிறுத்தி மூச்சை ஆழமாக இழுத்து விட்டாள்.

இவள் செய்யும் அலும்புகளைப் பார்த்துப் பார்த்து பழகியதாலோ என்னவோ
தலையை இடம் வலமாக ஆட்டி மேலே செல்ல, “மாமா… ஏன் இந்த இடம்
இவ்வளவு வாசமா இருக்கு? என்று வியந்து போய் கேட்டாள். இங்கே அகில்
மற்றும் சந்தன மரங்கள் அதிகமா இருக்கும். அதான் வாசனையா இருக்கு”
என்று கூறினான்.

“என்னது அகில், சந்தனமா? நான் பார்க்கணுமே. அது ரெண்டும் குறிஞ்சி
நில மரங்கள் தான? எங்க எங்க மாமா” என்று ஆர்ப்பரித்தாள்.
அவளிடம் பத்தடி தள்ளி இருந்த மரத்தைக் காட்டினான் அரசன். கொத்து
கொத்தாய் மாணிக்கமென மலர்ந்திருந்தது சந்தனப்பூக்கள். அதன் அருகில்
நெருங்கியவள், “மாமா இது சந்தனமரமா? அகில் மரமா?” என்று வினவ,
“இது சந்தனம். அகில் உன் பின்னால் இருக்குது பார்” என்றான். அதுவோ
வெண்குடையாய் மாறி காற்றிற்கு சாமரம் வீசிக்கொண்டிருந்தது.

‘இப்போ இந்த மரத்துகிட்ட இருந்து செல்பி எடுத்து இன்ஸ்டால போட்டா
லைக்ஸ் அல்லும்’ என்று அதாள பாலத்தில் விழுந்தும் அவள் அடங்காமல்

யோசிக்க, அவள் மனமோ, ‘அதுக்கு நீ உயிரோட இருக்கனும்’ என்று
காறித்துப்பியது.
கைக்கெட்டிய சில பூக்களைப் பறித்து முகர்ந்து பார்த்தாள். வாசம் கம்மியாக
தான் வீசியது. அதை அவனிடமும் கேட்க, “அகில், சந்தனத்திற்கெல்லாம்
வாசனை பூவை விட மரத்தில் தான் அதிகமா இருக்கும். அதுசரி என்ன
இங்கயே சுத்திட்டு இருக்க? ஏற்காடு போக வேண்டாமா? என்று கூறி
கையசைத்து மேலே செல் என்பதாக சமிஞ்சை செய்தான்.

“மாமா…” என்று இழுத்தவள், “இன்று இரவு இங்கேயே தங்கலாமா?
பக்கத்துல ஏதாவது குகை பாருங்க… ப்ளீஸ் ப்ளீஸ்” என்று பாவமாய்
கெஞ்சினாள். சூரியனைப் பார்த்தான். மாலை ஆறு மணி ஆக இன்னும்
இரண்டு மணி நேரம் இருந்தது. இன்னும் சிறிது தூரம் நடக்கலாம் என்று
தோன்றினாலும் அவளின் முகம் அதை சொல்ல விடாமல் தடுத்தது. மேலும்
இவனிற்கும் காட்டை விட்டு செல்ல மனமில்லாமல் இருக்க, அன்று
அங்கேயே அந்த நறுமண இடத்தில் தங்கினர்.

இவ்வாறு ஐந்தாம் நாள் மாலை வரவேண்டிய இடத்தை மதியின்
சேட்டையால் ஆறாம் நாள் மாலை வந்து சேர்ந்தனர். மேலே வந்ததும் கீழே
தாங்கள் வந்த வழியை மதி எட்டிப்பார்க்க, ‘இதுல விழுந்தா உயிரோட
வந்திருக்கோம்’ என்று அதன் ஆழம் அவளைத் தலைசுற்ற வைத்தது.
மீண்டும் கீழே விழுந்து விடாமல் இருக்க பொத்தென்று தரையில் மல்லாக்கப்
படுத்துவிட்டாள். கூடவே மனதெல்லாம் அலைந்து திரிந்து கடைசியில் தன்
தாயிடம் வந்து சேர்ந்தப் பரவசம். அதற்கு நேர்மாறாய் தார்சாலை வளைந்து
நெளிந்து கருநாகம் போல் கீழே செல்வதைப் பார்த்து, தன்னை தாயாய்
மடிதாங்கிய மலைமண்ணை விட்டுப் பிரிந்த துக்கத்தில் அடுத்த
மலைத்தொடரின் உச்சியில் முருகன் வீற்றிருக்கும் குகையின் பாறையை
வெறித்திருந்தான் நிலவரசன்.

இரு வேறு மனநிலையில் இருக்கும் இருவரின் மனமும் ஒன்றாய் பயணிக்கும்
நாள் எந்நாளோ?

மழை வரும்…
நிலவால் தன் ஒளிமூலம் உன்னைத் தீண்டத்தான் முடியும். எனக்கோ
அத்தீண்டல் போதாது. உன்னுள் கலந்து கரைந்து காணாமல் போய்விட
மழையாக நான் வரவா?

error: Content is protected !!