md4

மேகதூதம் 4

 

நினைவலைகள் எங்கெங்கோ கூட்டிச் செல்ல , வலியிலும் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்தனர்.

கனடாவின் குளிர் அஞ்சலியை வரவேற்றது. விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்ததும் அவளது பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்தது. கைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டு வெளியே வர,  அவளுடன் ஒரே கம்பெனியில் பனி செய்யும் ரம்யாவும், கூட ஒருவனும் அவளுக்காக காத்திருந்தனர்.

“ஹாய் அஞ்சலி .. எப்படி இருக்க?” ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ரம்யா.
அவளும் சிரித்த முகமாக, “ஹே ரம்மி. உன்கிட்ட வந்துட்டேன்ல இனிமே ஜாலியா இருப்பேன்” என கூறி வைத்தாள்.

பக்கத்தில் இருப்பவன் இவளைப் பார்த்து ஸ்நேகமாகப் புன்னகை செய்ய, அவனை அறிமுகப் படுத்தினாள் ரம்யா.
“அஞ்சலி இது ராஜ். என்னோட ..” லேசாக இழுக்க,
“என்ன டீ லவ்வா ?” செல்லமாக முறைக்க,
“ம்ம் ஆமா அஞ்சலி. வீட்ல பேசி சம்மதம் வாங்கிட்டோம். அடுத்த வெகேஷன் போறப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு பேசிருக்காங்க” வெட்கத்துடன் ரம்யா சொன்னாள்.

“ரம்மி .. உனக்கு வெட்கமெல்லாம் வருமா?” ராஜ் அவளைக் கிண்டல் செய்தான்.

அங்கே சிரிப்பலை எழுந்தது.

“ஹே அப்டி போடு. கங்கிராட்ஸ்” என மீண்டும் அனைத்துக் கொண்டாள் அஞ்சலி.

“சரி சரி வாங்க. பேசிக்கிட்டே போகலாம்” என ராஜ் அவளுக்கு பெட்டியைத் தள்ளிக் கொண்டு வர உதவினான்.

காரில் ஏறி அமர்ந்ததும் தங்களின் கதையை சுருக்கமாகச் சொன்னார்கள் இருவரும்.
“நான் உங்க கம்பெனி இல்லை. வேற தான். ஆனா எல்லாம் ஒரே காம்ப்ளெக்ஸ்ல இருக்கு. அதுல ஒரே ஒரு இந்தியன் ரெஸ்ட்டாரெண்ட் இருக்கு. அடிக்கடி அங்க சாப்பிட வருவேன். அப்போ தான் ரம்யாவை பார்த்தேன். அங்க தான் நாங்க பழக ஆரம்பிச்சோம்.” வண்டி ஓட்டிக்கொண்டு ராஜ் சொல்ல,

பின் சீட்டில் அமர்ந்திருந்த அஞ்சலி , “சோறு போட்டு வளத்திருக்கீங்க உங்க லவ்வ..அப்படித் தானே” என கிண்டல் செய்தாள்.

“ம்ம் அப்படியும் சொல்லலாம். அப்புறம் உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்.அதான் எப்படி சொல்றதுன்னு தெரில” ரம்யாவின் பீடிகை பலமாக இருந்தது.

“என்ன ரம்யா எதுவா இருந்தாலும் சொல்லு” சாதாரணமாக கேட்டாள் அஞ்சலி.

ரம்யா ராஜை பார்க்க, ராஜ் சற்று தயங்குவது போல இருந்தது.

“ஹே கம்மான். நமக்குள்ள என்ன … சொல்லு ரம்மி”மேலும் அஞ்சலி ஊக்கப்படுத்த,

“அது .. ராஜ் இப்போ என்கூட ஒரே வீட்ல தான் தங்கி இருக்காரு….” சற்று இடைவெளி விட்டவள்,
“ஆனா தனி தனி ரூம் தான். ஒண்ணா சமைச்சு சாப்பிடுவோம். மத்தபடி வேற எதுவும் இல்ல எங்களுக்குள்ள.. உனக்கு ஒன்னும் அப்ஜெக்க்ஷன் இல்லையே.. இதை உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கணும். ஆனா எப்படி சொல்றதுன்னு தெரியாம இருந்தேன். இப்போ கூட உனக்கு பிடிக்கலைன்னா…” பட படவென ரம்யா பேச,

“ஹே போதும் போதும். நான் என்ன 60 ல யா பொறந்தேன், இதெல்லாம் தப்பா நினைக்க. ஆனா எனக்கு மட்டும் தனி ரூம் வேணும். மத்தபடி எனக்கு ஒரு அப்ஜெக்க்ஷனும் இல்ல. இன்னொரு ரூம் இருக்கா இல்ல ..”அஞ்சலி சகஜமாக எடுத்துக் கொள்ள, அப்போது தான் நிம்மதியாக மூச்சு விட்டாள் ரம்யா.

“அது மூணு பெட்ரூம் வீடு தான். டோன்ட் ஒர்ரி… ரொம்ப தேங்க்ஸ் அஞ்சலி.” அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“தேங்க்ஸ் ஃபார் அண்டர்ஸ்டாங்டிங் அஞ்சலி” ராஜும் நன்றி சொல்ல,

“அட இதுக்கு போய் என்ன ரெண்டுபேரும் மாறி மாறி தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. விடுங்க.” அஞ்சலி நகைத்தாள்.

“ஆமா நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ க்ளோசா?” ராஜ் கேட்க,

“நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா வேலை பாக்க ஆரம்பிச்சோம். ரெண்டு வருஷம் வெளியூர்ல ஒரே வீட்ல இருந்தோம். அப்புறம் அவ டிரான்ஸ்பெர் வாங்கிட்டு வேற ப்ராஜெக்ட் போய்ட்டா. நான் வேற ப்ராஜெக்ட் போய்ட்டேன். இப்பயும் வேற வேற ப்ராஜெக்ட் தான், ஆனா ஒரே கம்பெனி. ரெண்டு பேரும் தான் அப்போ ஒண்ணா ஊர் சுத்துவோம். ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணோம்.” ரம்யா தங்களின் பழைய கதைகளை தோண்டி எடுத்துக் கூறிக் கொண்டிருக்க , அஞ்சலிக்கு மீண்டும் அந்த நாளின் நினைவுகள் வந்தது.
இவளோடு இருக்கும் போது தான் ரிஷியை சந்தித்ததும்.

ரம்யாவுக்கு அவளும் ரிஷியும் பழகியது தெரியும். ஆனால் அஞ்சலி அந்த ஊரிலிருந்து சென்ற பிறகு இருவரின் கதையும் என்ன ஆனது என்று அவளுக்கு தெரியாது.

அஞ்சலி அதைப் பற்றி பேசும் போதெல்லாம் பேச்சை மாற்றி விடுவாள். நாளடைவில் ரம்யாவுக்கும் வேலை இழுத்துக் கொண்டதால் அவளும் சரியாக பேசவில்லை. பிறகு அவளுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வந்துவிட அடிக்கடி பேசிக்கொள்வது கூட குறைந்தது. இப்போது தான் பழையபடி ஒன்றாக தங்கவுள்ளனர்.
அந்த நாளின் நினைவு ரம்யாவுக்கு ரிஷியும் இவளும் பழகியதை நினைவு படுத்த,

“ஹே அஞ்சலி, நானும் கேட்க மறந்துட்டேன். உங்க லவ் என்ன ஆச்சு, வீட்ல பேசிட்டீங்களா?” என ஆர்வமாகக் கேட்க,

அஞ்சலி இந்தக் கேள்வியை எதிர்பார்த்தே காத்திருந்ததால் , “அதுவா.. போய்கிட்டே இருக்கு…அப்பறம் சொல்றேன்” தற்காலிகமாகச் சொல்லி வைத்தாள்.

அந்த வீடு மிகவும் அழகாக இருந்தது. ஏற்கனவே அஞ்சலிக்காக அறையை தயார் செய்து வைத்திருந்தனர். அஞ்சலி குளித்து உடை மாற்றி வந்ததும், அந்தக் குளிருக்கு இதமாக, சூடான உணவு வகைகளைக் டேபிளில் வைத்திருந்தாள் ரம்யா.

“வாசனை இழுக்குது ரம்மி. இந்த பிளேன்ல ரெண்டு நாள் டிராவல் பண்ணா, எப்போடா நம்ம சாப்பாடை கண்ணுல பாப்போம்னு ஏங்க வைக்கறாங்க. காஞ்சு போன பிரட், பர்கர்ன்னு கொமட்டுது. ச்ச. இந்த ரசம் வாசனைக்கே சொத்தை எழுதி குடுக்கலாம்..ம்ம்ம்” என சாப்பிட அமர்ந்தாள்.

“நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு. நாளைக்கு லீவ் தான். ரிலாக்ஸ்சா பேசலாம். உங்க அம்மாக்கு போன் பண்ணிட்டியா?” ரம்யா கேட்க,

“ம்ம் பண்ணிட்டேன். இல்லனா கவலை பட்டுட்டே இருப்பாங்க. சாப்பாடு சூப்பரா இருக்கு டீ. நீ செஞ்சியா?” சாப்பிட்டுக் கொண்டே கேட்டாள் அஞ்சலி.

“இல்ல அஞ்சலி. நான் சொன்னேன்ல ஒரு ஹோட்டல், அங்க வாங்கினது தான். வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்கும். உன்ன கூப்பிட வரப்ப தான் வாங்கிட்டு வந்தோம். இப்போ ஹீட் பண்ணி வெச்சேன்.” ரம்யா கூறினாள்.

ராஜ் நண்பிகளுக்கு நேரம் கொடுத்து தன் அறைக்குள் புகுந்து கொண்டான். தோழிகள் இருவரும் ஆபீஸ் கதை மற்ற விஷயங்கள் என பேசிவிட்டு, விடியும் சமயம் அவரவர் அறைக்கு உறங்கச் சென்றனர்.

நல்ல சாப்பாடு , பிரயாண அலுப்பு என அஞ்சலியை வெகு நேரம் உறக்கம் பிடித்துக் கொண்டது. மதிய வேளை கண்விழித்தாள். எழுந்து வெளியே வர,

ரம்யா ஒண்டியாக அமர்ந்து தனது ஐபேட்டில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹாய் ரம்மி” என அவள் அருகில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி.

“ஹே அஞ்சலி, கொஞ்சம் ப்ரெஷ் அப் ஆயிட்டு வா. சாப்பிடலாம். இன்னிக்கு என்னோட சமையல்.” என அழைக்க,

“எங்க ராஜ்ஜ காணும்?” அஞ்சலி கேட்டாள்.

“அவன் ப்ரெண்ட்ஸ் கூட வெளிய போயிருக்கான். நைட் ஆகும் வாரத்துக்கு. நீ வா” என்று அழைக்க,

“ம்ம்ம் அப்போவே நீ நல்லா சமைப்ப. இப்போ இன்னும் தேறி இருப்ப. பத்து நிமிஷத்துல வரேன்” என்றவள் சொன்ன படி வந்து விட்டாள்.

அஞ்சலி ஏதோ பேசிக் கொண்டு சாப்பிட, திடீரென ரம்யா அவளிடம்,

“ரிஷி எப்படி இருக்காரு?” என கேட்க, அஞ்சலி தோழியின் கேள்வியில் இதயம் கனத்துப் போனாள். அவளது மௌனமே ஏதோ பிரச்சனை இருப்பதை ரம்யாவுக்கு உரைத்தது.

“என்ன டீ ஆச்சு? ஏன் பேசாம இருக்க? சொல்லு என்ன அச்சு?” அவளை பிடித்து உலுக்க,

“ரம்யா… ” என உடைந்து அழ ஆரம்பித்தாள் அஞ்சலி.

அஞ்சலியைக் கண்டு பதறிப் போனாள் ரம்யா. எழுந்து அவள் அருகில் வந்து அவளை அனைத்து முதுகை தடவிக் கொடுத்தாள்.

“ஹே ரிலாக்ஸ் அஞ்சலி. என்ன ஆச்சு? ஏன் இப்படி அழற?உனக்கும் ரிஷிக்கும் ஏதாவது சண்டையா?” என்ன நடந்ததென்று தெரிந்துகொள்ள கேள்விகளை அடுக்கினாள்.

“நான் ரிஷியை பாத்து நாலு வருஷம் ஆகுது ரம்யா. அவர் எங்க இருக்காருன்னு கூட எனக்கு தெரியாது. ” விம்மி அழுதபடியே கூற,

“வாட்..? என்னடி சொல்ற? அன்னிக்கு ரிஷியை பாத்துட்டு ஊருக்கு போறேன்னு சொன்னியே, அப்போ தான் கடைசியா பாத்தியா?” நினைவில் வைத்துக் கேட்டாள் ரம்யா.

“ம்ம்ம்” என கண்களில் கண்ணீருடன் தலையாட்டினாள்.

“என்ன நடந்துச்சு? முழுசா சொல்லு” ரம்யா அவளைக் கட்டாய படுத்த, அன்று நடந்ததைக் கூறினாள் அஞ்சலி.

ரம்யா , அஞ்சலி இருவருக்கும் ஒரே சமயத்தில் டிரான்ஸ்பர் கிடைக்க மறுநாள் அதிகாலை வண்டிக்கு ஊருக்குச் செல்ல ரம்யா டிக்கெட் புக் செய்தாள். அஞ்சலிக்கு மறுநாள் மாலை வண்டிக்கு டிக்கெட் கிடைத்தது. இருவரும் வெல்வேறு ஊருக்கு செல்கின்றனர்.

“என்ன அஞ்சலி ரொம்ப ஜாலியா இருக்கியா? அம்மா தம்பி கூட இருக்க போற..” தங்களின் உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கையில் ரம்யா கேட்க,

“அது ஒரு பக்கம் இருந்தாலும், ரிஷியை அடிக்கடி பாக்க முடியாதுல , அதுவும் கஷ்டமா இருக்கு ரம்மி” குரலில் சோகம் இழையோடியது அஞ்சலிக்கு.

“ம்ம்ம் வீட்ல பேசி அவர சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சொல்லு, அப்போ கூடவே இருக்கலாம்ல.” நக்கலாக சொன்னாள் ரம்யா.

“இல்ல ரம்யா. அது இப்போதைக்கு நடக்காது. அவரோட அப்பாக்கு உடம்பு சரியில்ல அப்புறம் அவங்க பிசினஸ் வேற இப்போ டல்லா இருக்காம். அதுனால அதையெல்லாம் சரி செஞ்சுட்டு அதுக்கப்புறம் அவங்க அம்மாவோட வந்து வீட்ல பேசறேன்னு சொல்லிருக்காரு” அஞ்சலி சொல்லி முடிக்க,

“ஹே சூப்பர். அப்பறம் எதுக்கு கவலை படற. அதான் வந்து பேசறேன்னு சொல்லிட்டாரே!” குதூகலமானாள் ரம்யா .

“அவங்க அப்பா நெறய கடன் வாங்கிருக்காராம். அதுக்காக இவர் தான் பிசினெஸ்க்கு புது க்லைன்ட் பாக்கணும் , அதுக்கு நெறய அலையனும் அதுக்கப்புறம் ஒரு லெவெல்க்கு கொண்டு வரணும். அதுக்கெல்லாம் எப்படியும் ஒரு ரெண்டு வருஷம் ஆகும். அது வரைக்கும் அவர எப்படி நான் பாக்காம இருக்கறது ரம்யா. அதுவுமில்லாம அவங்க அம்மா வேற ரொம்ப ஸ்ட்ரிக்ட்ன்னு சொல்லிருக்காரு. அவங்க இந்த விஷயத்தை எப்படி எடுத்துப்பாங்களோ.அத நெனச்சா தான் ரொம்ப கவலையா இருக்கு..” மிகவும் விருத்தப்பட,

“நீ ஏன் டி கவலை படற. அவங்க அம்மாவை சமாளிக்க வேண்டியது அவரோட பொறுப்பு. அவரு ரொம்ப புத்திசாலி மட்டுமில்ல, யார்கிட்ட எப்படி பேசணும்னு நல்லாவே தெரிஞ்சவரு. அவங்க அம்மாவை கன்வின்ஸ் பண்றதா அவருக்கு கஷ்டம். நீ கவலை படாம கெளம்பு” ரம்யா ஆறுதலாகப் பேசினாள்.

மறுநாள் காலையில் ரம்யாவை ஆட்டோவில் ஏற்றி வழியனுப்பினாள் அஞ்சலி. ரிஷியை பத்து மணிக்கு சந்திப்பதாக முடிவு செய்திருந்தாள். வீட்டிற்குள் வந்து தனது பொருட்களை சரி பார்த்துக் கொண்டிருக்க , ரிஷி அவளுக்குப் போன் செய்தான்.

கையில் போனை எடுத்தவள் ஆசையாக, “என்ன சார், ஒரு ரெண்டு மணி நேரம் பொறுக்க முடியாத, அதுக்குள்ள போன் பண்ணிட்டீங்க?” என சிரிக்க,
மறுமுனையில் ரிஷியோ அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை.

“உடனே கிளம்பி ஏர்போர்ட் வா. இன்னும் ஒரு மணி நேரத்துல எனக்கு பிளைட். சீக்கிரம் வா” என அவசரமாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

அவன் சொல்வது எதுவுமே புரியாமல் குழப்பத்தில் நின்றாள் அஞ்சலி. இதயம் ஏனோ வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. என்ன நடந்திருக்கும், நேற்று கூட இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே என யோசித்துக் கொண்டே அவசரமாக அறையைப் பூட்டிக் கொண்டு கிளம்பினாள்.

எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தி வேகமாகச் செல்லச் சொல்லி துரிதப்படுத்தி, அடுத்த இருப்பது நிமிடத்தில் ஏர்போர்ட்டில் இருந்தாள். அவனுக்கு போன் செய்ய ஒரு முறை முழுதாக அடித்து ஓய்ந்தது. அவன் எடுக்காமல் இருந்ததில் அவளின் படபடப்பு இன்னும் அதிகமாக, மீண்டும் ஒரு முறை அவனுக்கு அழைத்தாள்.

அவளுக்குப் பின்னால் வந்து நின்றான் ரிஷி.
“அஞ்சு”
அவன் குரல் கேட்டு உடனே திரும்பினாள் அஞ்சலி. கையில் பாஸ்போர்ட் டிக்கெட்டுடன் ஒரு சிறிய பெட்டியை தள்ளிக் கொண்டு நின்றான் ரிஷி. அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருப்பதை அஞ்சலி உணர்ந்தாள்.
“ரிஷி.. என்ன திடிர்னு கிளம்பி இருக்கீங்க” பொறுமையை வர வைத்துக் கொண்டு கேட்டாள்.

“அஞ்சு , நான் நெனச்ச மாதிரி எங்க அப்பா பிசினெஸ் மட்டும் டவுன் இல்ல, அவர் எல்லா பிஸினஸ்லயும் ஒரு ஷேர் ஹோல்டேரா என்னையும் சேர்த்திருக்காருன்னு சொன்னேன்ல, அதுல வர நஷ்டம் என்னையும் சேரும். அதே போல எங்க அப்பா சொல்லாம ஏகப்பட்ட கடன் வாங்கி அதை சமாளிக்க நினைச்சிருக்காரு. அதுவும் அதிக வட்டி வேற. பிசினெஸ் லாஸ் , ப்ளஸ் அப்பாவுக்கு எந்திரிக்க முடியாத அளவு உடம்பு சரியில்ல, அதுனால நேத்து லேந்து ஏகப்பட்ட போன் கால். கடனை திருப்பிக் கேட்டு எல்லாரும் இப்போ என்னை டார்கெட் பண்றாங்க.

அப்பா வாங்கின மொத்த கடனுக்கும் இப்போ நான் தான் பொறுப்பு.அதை நான் சீக்கிரம் திருப்பித் தரணும், இல்லனா…. ” அங்கே சற்று தயங்க,

“இல்லனா…என்ன ரிஷி” அப்பாவியாக அவள் கேட்க,
“திருப்பி தந்து தான் ஆகணும். அதுக்கான நேரமும் எனக்கு கம்மி. எனக்கு மொதல்ல இதெல்லாம் முடிக்கணும். அதுக்கப்புறம் தான் மத்த எல்லாமே..” மொட்டையாக அவளிடம் கூற,

“எனக்குப் புரியுது ரிஷி. நீங்க தான் நேத்தே சொன்னீங்களே” என அஞ்சலி வாயத் திறக்க,

“இல்ல அஞ்சு . நேத்து நிலைமை வேற, இன்னிக்கு நிலைமை வேற. உனக்கு இப்போ எதையும் என்னால விளக்கமா சொல்ல முடியல. நான் இப்போ இந்தக் கடனெல்லாம் அடைக்கற முயற்சில தான் என் பிரென்ட் கிட்ட ஹெல்ப் கேட்ருக்கேன். அவன் இப்போ டெல்லில இருக்கான். அங்க போனா தான் அடுத்து என்ன செய்யப் போறேன்னு எனக்கே தெரியும். நான் எப்போ இதையெல்லாம் சமாளிச்சு வெளிய வருவேன்னு தெரியல. அதுனால…” அத்தனை நேரம் கொதித்தவன் கடைசியில் தயங்கினான்.

“நான் உங்களுக்காக காத்திருப்பேன் ரிஷி. எவ்ளோ நாள் ஆனாலும். உங்க பிரச்சனை எல்லாம் சமாளிச்சு நீங்க வாங்க.” லேசாக சிரிக்க முயன்று அவனுக்கு சமாதானம் சொல்வது போல தனக்கும் சொல்லிக் கொண்டாள்.

 

அவளின் பதில் அவனுக்கு அவள் மேல் இருக்கும் காதலை இன்னும் அதிகமாக்க.. ஆனாலும் , அவளுக்கு எதையோ சொல்லவந்து முடியாமல் இருப்பதைப் போல அவளுக்குத் தெரிந்தது.

“நான் திரும்பி வருவேனான்னு எனக்குத் தெரியல அஞ்சு. உன்ன நான் ஏமாத்திட்டு போறேன்னு நீ நெனச்சாலும் என்னால இப்போ எதுவும் செய்ய முடியாது. எல்லாம் நான் நெனைக்கற மாதிரி முடிஞ்சா நான் கண்டிப்பா உன்னைத் தேடி வருவேன். இல்லனா நீ உங்க அம்மா சொல்ற ஒருத்தர கல்யாணம் செஞ்சுக்கணும். சந்தோஷமா இருக்கணும். புரியுதா!” அவன் சொன்ன வார்த்தைகள் அவளது இதயத்தை நாராகக் கிழித்தது.

“ரிஷி…” கத்தினாள். கண்கள் குளமாயின.

அதை அவனால் காண முடியவில்லை. உள்ளம் முழுவதும் அவளே நிறைந்திருக்க அவனுக்கும் அவன் சொன்ன வார்த்தைகள் ஒப்பவில்லை தான். தன் இயலாமையால் தவித்தான். அவளை தோளோடு அனைத்துக் கொண்டான்.

அதே சமயம் அவனது பிளேனுக்கான அறிவிப்பு கேட்க,

“உனக்கு நான் ஃபால்ஸ் ஹோப் தர விரும்பல அஞ்சலி” என அவளை தள்ளி நிறுத்தியவன்,

அவள் கலங்கி நிற்பதை பார்த்து,
“என்னை மறந்துடறது உனக்கு பெட்டெர் அஞ்சு” என்றான்.

“நீங்க நிச்சயம் என்கிட்ட திரும்பி வருவீங்க. நான் கொஞ்சம் கூட நம்பிக்கை இழக்கல.” தேம்பித் தேம்பி அவன் முன் அழுதுகொண்டு நின்றாள் அஞ்சலி.

“என்னோட பலம் பலகீனம் ரெண்டுமே நீ தான்.” என திரும்பாமல் சென்றுவிட்டான்.

ரம்யாவிடம் நடந்ததை மீண்டும் ஒரு முறை கதறியபடியே கூறினாள்.

“அவருக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல ரம்யா” என அவளது மடியில் படுத்து குமுறினாள்.

அஞ்சலியின் இந்த நிலையைக் கண்டு என்ன சொல்வதென்று புரியாமல் குழம்பினாள் ரம்யா.